மதுரை
மதுரை | |
---|---|
ஆள்கூறுகள்: 9°55′31″N 78°07′11″E / 9.925200°N 78.119800°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
பகுதி | பாண்டிய நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | மதுரை மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
• சட்டமன்ற உறுப்பினர் | பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி) பி. மூர்த்தி (மதுரை கிழக்கு) ஜி. தளபதி (மதுரை வடக்கு) எம். பூமிநாதன் (மதுரை தெற்கு) செல்லூர் கே. ராஜூ (மதுரை மேற்கு) |
• மாநகர முதல்வர் | காலியிடம் |
• மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மாநகராட்சி[1] | 147.97 km2 (57.13 sq mi) |
• மாநகரம் | 317.45 km2 (122.57 sq mi) |
ஏற்றம் | 158 m (518 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகராட்சி[1] | 10,17,865 |
• தரவரிசை | 3 |
• அடர்த்தி | 6,425/km2 (16,640/sq mi) |
• பெருநகர் | 14,65,625 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 625 xxx |
தொலைபேசி குறியீடு | 0452 |
வாகனப் பதிவு | TN-58 (தெற்கு), TN-59 (வடக்கு) and TN-64(மத்தி) |
சென்னையிலிருந்து தொலைவு | 461 கி.மீ (287 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 131 கி.மீ (86 மைல்) |
சேலத்திலிருந்து தொலைவு | 235 கி.மீ (146 மைல்) |
கோவையிலிருந்து தொலைவு | 212 கி.மீ (132 மைல்) |
நெல்லையிலிருந்து தொலைவு | 163 கி.மீ (101 மைல்) |
இணையதளம் | madurai corporation |
மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இது மதுரை மாவட்டத்தின் தலைநகர் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில், இதுவும் ஒன்று. இது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், அடுத்த, நகர்புற பரப்பளவு அடிப்படையில், மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். மக்கள்தொகை அடிப்படையில், இந்நகரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும்.[2][3] பதினைந்து லட்சம் மேல் மக்கட்தொகை கொண்ட மாநகரம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியத் துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று.[4] பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.[5]
மௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (பொ.ஊ.மு. 370 – பொ.ஊ.மு. 283), கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ் (பொ.ஊ.மு. 350 – பொ.ஊ.மு. 290) ஆகியோரின் குறிப்புக்களில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம், பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.
நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. நகரில், ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரைத் திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து இலட்சம் பேராற் கண்டுகளிக்கப்படும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல், நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள், பெயர் பெற்ற நிகழ்வுகளாகும்.
மதுரை, தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன.[6] தகவல் தொழில்நுட்பத் துறையில், இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு, உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மதுரை மருத்துவக்கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி,[7] மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற அரசு கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன.[8] நகர நிர்வாகம், 1971-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. இது சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநகராட்சி ஆகும். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையும் இங்கு உள்ளது. இது இந்தியாவில், மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றாகும். மதுரையில், பன்னாட்டுச் சேவைகளை வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவின் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தெரிவு செய்யப்பட்டது.[9]
மதுரை 147.99 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின்படி, மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர்.[10]
பெயர்க் காரணம்
[தொகு]- இந்நகரம் முந்தைய காலத்தில் மலைகள் மிகுந்த பகுதியாக இருந்ததால் இவ்வூருக்கு மலைதுரை என்ற பெயரலே அழைக்கபெற்றதாகவும் பின்னாளில் அப்பெயர் காலத்தால் மருவி மலைதுரை ம+(லை)+துரை மதுரையாக மாறியதாக கூறப்படுகிறது.
- முன்னொரு காலத்தில் மலைதுரையை ஆண்ட மலைத்துவசபாண்டியனின் திருப்பெயராலே மலைத்துவசத்துறை என்ற பெயரே மதுரையாக மாறியது என்றும் கூறப்படுகிறது.
- இவ்வூரை மதுரை, மலை நகரம், மதுராநகர், தென் மதுராபுரி, கூடல், முக்கூடல் நகரம், பாண்டிய மாநகர், மல்லிகை மாநகர், மல்லிநகரம், வைகை நகரம், நான்மாடக்கூடல், திரு ஆலவாய், சுந்தரேசபுரி, மீனாட்சி நகரம், போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது.
- மருதத் துறை மதுரை; மருத மரங்கள் மிகுதியான பகுதியாக இருந்ததால் இவ்வூருக்கு மருதத்துறை என்பது மருவி மதுரை என ஆனது என ஒரு கருத்தும், (வைகை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி).[11][12][13] இந்துக் கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால்(இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது.[14]
- முந்தைய 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற் புராணத்தில், மதுரையின் பல்வேறு பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.[14][15] கூடல் என்ற பெயர் மதுரையில் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களையும், நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரையைச் சூழ்ந்துள்ள நான்கு கோயில் கோபுரங்களையும் குறிக்கிறது.[14] சிவனடியார்கள், மதுரையைத் திரு ஆலவாய் எனக் குறிப்பிடுகின்றனர்.[14][16]
- தமிழகக் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின்படி, பொ.ஊ.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்ப் பிராமி கல்வெட்டு ஒன்று மதிரை எனக் குறிக்கிறது. இதற்கு மதிலால் சூழப்பட்ட நகரம் என்பது பொருள்.[17]
- சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில் – இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்லை ஊர்கள். சீறா நாகம் – நாகமலை கறவா பசு – பசுமலை பிளிறா யானை – யானைமலை முட்டா காளை – திருப்பாலை ஓடா மான் – சிலைமான் வாடா மலை – அழகர்மலை காயா பாறை – வாடிப்பட்டி பாடா குயில் – கீழக்குயில்குடி
வரலாறு
[தொகு]பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து மதுரையில் மக்கள் வசித்து வருவதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் பொ.ஊ.மு. 570-ஆம் ஆண்டில் தம்பபன்னி இராச்சியத்தைத் தோற்றுவித்த விசயன் மதுராபுரியைச் சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்ததாக இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுகிறது[18]. இங்கே மதுராபுரி எனக் குறிப்பிடப்படுவது பண்டைய மதுரையையே. பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணியான மெகசுதனிசு தனது குறிப்புகளில் "மதுரா" எனக் குறிப்பிடப்படுவதிலிருந்து, அவர் மதுரைக்கு வந்து இருக்கலாம் என அறியப்படுகிறது.[19][14] இருப்பினும் சில அறிஞர்கள் "மதுரா" எனக் குறிப்பிடுவது மௌரியப் பேரரசில் புகழ் பெற்ற வடஇந்திய நகரமான மதுரா என்கின்றனர்.[20] மேலும் சாணக்கியர் எழுதிய [21] அர்த்தசாத்திரத்திலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.[14] தமிழின் பழமையான இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மதுரை குறித்து கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் "கூடல்" என்றும் சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு முதலிய நூல்களில் "மதுரை" என்றும் மதுரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது[22] மதுரையைத் தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்று சிறுபாணாற்றுப்படையில், நல்லூர் நத்தத்தனாரும் மதுரையைப் பற்றி குறிப்பிடுகின்றார்.[23] ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் எனப் பல்வேறு அடைமொழிகளால் தான் எழுதிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் மதுரையைச் சிறப்பிக்கிறார். இவை தவிர கிரேக்க, உரோமானிய வாரலாற்றிலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. உரோமானிய வரலாற்றாய்வாளர்களான இளைய பிளினி (பொ.ஊ. 61 – c. பொ.ஊ. 112), தாலமி (c. பொ.ஊ. 90 – c. பொ.ஊ. 168), கிரேக்க புவியுலாளரான இசுட்ராபோ (பொ.ஊ.மு. 64/63 – c. பொ.ஊ. 24),[24] மதுரை பற்றி குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக செங்கடல் செலவில் மதுரை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. [15]
சங்க காலத்தில் பாண்டியர் ஆளுகையின் கீழ் மதுரை இருந்தது சங்க இலக்கியங்கள் மூலம் அறிய வருகிறது. சங்க காலத்துக்குப் பின், களப்பிரர் ஆளுகையின் கீழ் வந்த மதுரை பொ.ஊ. 590 பாண்டியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.[25][26] ஆனால், 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பாண்டியர்கள் சோழர்களிடம் தோல்வியுற்றனர். இதனால் சோழர்களின் ஆளுகையின் கீழ் வந்த [27] மதுரையானது, 13-ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் பாண்டியப் பேரரசு உருவாக்கப்படும் வரை சோழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.[27] முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (பொ.ஊ. 1268 – பொ.ஊ. 1308) மறைவுக்குப் பின் மதுரை தில்லி சுல்த்தானகத்தின் கீழ் வந்தது.[27] பின் தில்லி சுல்தானகத்திலிருந்து பிரிந்து மதுரை சுல்தானகம் தனி இராச்சியமாக இயங்கியது. பின் பொ.ஊ. 1378-இல் விஜயநகரப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.[28] பொ.ஊ. 1559-இல் விசய நகரப் பேரரசிடமிருந்து நாயக்கர்கள் தன்னாட்சி பெற்றனர். [28] பின் 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பொ.ஊ. 1736-இல் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வரும்வரை மதுரையானது சந்தா சாகிப் (பொ.ஊ. 1740 – 1754), ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் (பொ.ஊ. 1725 – 1764) ஆகியோரால் மீண்டும் மீண்டும் பலமுறை கைப்பற்றப்பட்டது.[14]
பின் 1801-இல், மதுரை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. [29][30] அவர்கள் ஆட்சியின் தொடக்க கால கட்டங்களில் ஆங்கில அரசு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதுடன் திருவிழாக்களிலும் பங்கு பெற்றது.[31] 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நகரானது அரசியல், தொழிற்றுறை நகராக வளர்ந்ததுடன் அப்போதைய மதுரை மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கியது. [31] 1837-ஆம் ஆண்டில், கோவிலைச் சுற்றி இருந்த கோட்டையானது அகற்றபட்டு, [32] அகழி நிலத்தப்பட்டது. கிடைத்த இடிபாடுகள் மற்றும் பொருட்களைக் கொண்டு, புதிய தெருக்களான வெளி, மாரட், பெருமாள் மேசுதிரி வீதிகள் அமைக்கப்பட்டன.[33] பொ.ஊ. 1836-இல் மதுரை நகராட்சியாகத் மாற்றப்பட்டது.[34] நகராட்சியாக மாற்றப்பட்ட போது, ஆங்கில அரசானது மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துதலிலும் வரி வசூலிப்பதிலும் சில சிக்கல்களைச் சந்தித்தது.[35] எனவே, பொ.ஊ. 1880 மற்றும் 1885 மதுரை நகரமும், மாவட்டமும் மறுஅளவீடு செய்யப்பட்டது பின்னர் நிர்வாக வசதிக்காக 5 நகராட்சிகள், 6 தாலுகாக்கள் மற்றும் இரண்டு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.[35] நகரில் காவல் நிலையங்கள் எழுப்பப்பட்டு மதுரையைத் தலைமையிடமாக மாவட்டக் காவல் துறை ஆணையர் பதவியும் ஏற்படுத்தப்பட்டது.[35]
1921 செப்டெம்பர் 26-ஆம் நாள், மதுரையில் அரையாடை அணிந்து வேலை செய்து கொண்டிருந்த விவாசாயிகளைக் கண்டு, இந்திய தேசியத் தலைவரான காந்தி முதன்முறையாக அரையாடையை அணிந்தார்.[36] 1939-இல் மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை மேற்கொண்ட தனது நண்பர் வைத்தியநாதையரைக் காப்பாற்றும் பொருட்டு அப்போதைய சென்னை மாகாண பிரதமர் இராசகோபாலாச்சாரி தலைமையிலான அரசு ஆலய நுழைவு உறுதிப்படுத்தலும் பாதுகாப்பும் சட்டத்தை இயற்றி நாடார்களும் தலித்துகளும் ஆலயம் நுழைவதற்கான தடையை நீக்கியது.[37][38]
நகரமைப்பு
[தொகு]பண்டைய மதுரை நகரத்தின் புவியியல் மற்றும் வழிபாட்டு மையமாக விளங்கிய மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி மதுரை நகரமானது கட்டப்பட்டுள்ளது.[39] நகரமானது பொது மையத்தைக் கொண்ட நான்கு நாற்கர வடிவமுடைய தெருக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[39] இந்த அமைப்பானது மதுரையை ஆண்ட நாயக்கர்களின் முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (பொ.ஊ. 1159–64) சதுர மண்டல முறையில் கட்டப்பட்டதாகும். இந்த தெருக்கள் அவற்றில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் தமிழ் மாதங்களின் பெயர்களால் ஆடி, சித்திரை, ஆவணி - மூல, மாசி வீதிகள் என தற்போதும் அழைக்கப்படுகின்றன.[39] கோயில் பிரகாரத்திலும் அதனைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களிலும் திருவிழாக்களானது கொண்டாடப்படுவதுடன், தேரோட்டமும் நடைபெறுகிறது.[40] நகர மையமும், அதனைச் சூழ்ந்துள்ள தெருக்களும் தாமரை மலர் மற்றும் அதன் இதழ் போன்ற தோற்றம் கொண்டதாக பழைய இலக்கியங்கள் கூறுகின்றன.[15] நகரத்தின் அச்சானது காந்த ஊசிகளின் அச்சுடன் பொருந்தும் வண்ணம் அமைந்து, கோவிலின் நான்கு வாசல்களும் அதன் முனைகள் போல் உள்ளன.[41] இந்த அமைப்பில் உயர்சாதியினர் கோவிலுக்கு அருகிலுள்ள தெருக்களிலும், ஏழை மற்றும் பிற்பட்ட படிநிலை மக்கள் தொலைவிலுள்ள தெருக்களிலும் குடியிருந்தனர்.[41] பின் 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வருகை, தொழில் துறை வளர்ச்சி மற்றும் நகரமயாமாதல் காரணமாக மதுரை நகரின் அமைப்பில் மாறுதல்கள் (கோட்டைச் சுவர் அகற்றப்பட்டு புதிய தெருக்கள் உருவாதல்) ஏற்பட்டு தற்போது அனைத்து படிநிலை மக்களும் ஒன்றிணைந்து வாழுகின்றனர்.[41] மதுரையின் கிழக்கு குடவரை கோவில் குன்னத்துார்(திருக்குன்றத்துார்) அமைந்துள்ளது. மாறவர்ம சுந்தரபாண்டியன் மற்றும் பலர் சிவலிங்க திருமேனியை மலையை குடைந்து உருவாக்கி உள்ளனர். இது பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
புவியியல் மற்றும் பருவநிலை
[தொகு]தட்பவெப்பநிலை வரைபடம் மதுரை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
20
30
20
|
13.5
32
21
|
18
35
23
|
55
37
25
|
70
38
26
|
40
38
26
|
49.5
36
25
|
104
35
25
|
119
34
24
|
188
32
24
|
145
30
23
|
51
29
21
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
இவ்வூரின் அமைவிடம்9°56′N 78°07′E / 9.93°N 78.12°E ஆகும்.[42][43] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் உயரத்தில் வளமான வைகை ஆற்றின் சமவெளியில் அமைந்துள்ளது. வைகை ஆறு நகரின் வடமேற்கு-தென்கிழக்காக ஒடி நகரை ஏறக்குறைய இரு சமபகுதிகளாகப் பிரிக்கிறது.[44] நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிறுமலை மற்றும் நாகமலைக் குன்றுகளும், வடகிழக்கே யானைமலைக் குன்றும் அமைந்துள்ளன.[45] மதுரையைச் சூழ்ந்துள்ள நிலங்களில் பெரியாறு அணை பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது.[45] மதுரை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகள் தென்னிந்தியச் சமவெளிகள் போன்று சிறு சிறு குன்றுகள் காணப்படுகின்றன.[46] மணலின் தன்மையைப் பொருத்த வரையில் மதுரையின் மையப்பகுதி களிமண்ணும், புறநகர்பகுதிகள் செம்மண் மற்றும் கரிசல் மண்ணும் கொண்டுள்ளன.[47] நெல் அதிகம் பயிரிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து பயறு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு ஆகியவை பயிரிடப்படுகின்றன.[47]
ஆண்டின் எட்டு மாதங்களுக்கு மதுரையில் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை நிலவுகிறது.[48] அருகிலுள்ள திண்டுக்கல் மற்றும் மதுரையில் பிப்ரவரி மற்றும் மார்ச்சு மாதங்களில் குளிர் காற்று வீசுகிறது.[48] மார்ச்சிலிருந்து சூலை வரை அதிக வெப்பமான மாதங்களாகும்.[48] ஆகசுட்டிலிருந்து அக்டோபர் வரை மிதமான வானிலையும், நவம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை இடி மற்றும் கனமழையுடன் மிதமான குளிரும் காணப்படுகிறது.[48] மதுரையில் மூடுபனியானது குளிர்காலங்களில் மிக மிகக் குறைவாகவே ஏற்படுகிறது.[48] கடல் மற்றும் மலையிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழையால் சம விளைவுகளே ஏற்படுகிறது. இருப்பினும் அக்டோபரிலிருந்து திசம்பர் வரை வீசும் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது.[48] மதுரை மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு 85.76 செ. மீ.[49]
கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 °செ, குறைந்தபட்ச வெப்பநிலை 26.3 °செ, இருப்பினும் சாதாரணமாக வெப்பநிலையானது 42 °செ வரை உயரும்.[50] நகரமயமாதல், வாகனப் பெருக்கம் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக மதுரையின் வளிமண்டல வெப்பநிலை உயர்ந்துள்ளது, இந்திய வானியலாய்வுத் துறையிடம் உள்ள 62 ஆண்டுகால தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.[50] 2001–2010 வரையான பத்தாண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலையான 42 °செ 2004 மற்றும் 2010 என இருமுறை பதிவாகியுள்ளது.[50]
தட்பவெப்ப நிலைத் தகவல், மதுரை, இந்தியா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30.6 (87.1) |
33.2 (91.8) |
35.8 (96.4) |
37.3 (99.1) |
37.7 (99.9) |
36.8 (98.2) |
36.0 (96.8) |
35.7 (96.3) |
34.8 (94.6) |
32.7 (90.9) |
30.6 (87.1) |
29.7 (85.5) |
34.24 (93.64) |
தாழ் சராசரி °C (°F) | 20.1 (68.2) |
21.1 (70) |
23.0 (73.4) |
25.4 (77.7) |
26.1 (79) |
26.1 (79) |
25.6 (78.1) |
25.3 (77.5) |
24.3 (75.7) |
23.6 (74.5) |
22.6 (72.7) |
21.1 (70) |
23.69 (74.65) |
பொழிவு mm (inches) | 7.4 (0.291) |
11.8 (0.465) |
14.1 (0.555) |
37.1 (1.461) |
72.6 (2.858) |
32 (1.26) |
83.2 (3.276) |
80.3 (3.161) |
146.9 (5.783) |
159.4 (6.276) |
140.3 (5.524) |
53 (2.09) |
838 (32.99) |
சராசரி பொழிவு நாட்கள் | 0.9 | 1.1 | 1.1 | 2.4 | 4.4 | 2.0 | 3.6 | 4.1 | 7.8 | 8.1 | 6.3 | 3.4 | 45.1 |
ஆதாரம்: இந்திய வானியலாய்வுத் துறை 1971–2000 வரையான சராசரி தகவல்[51] |
மக்கள் வகைப்பாடு
[தொகு]ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1951 | 3,61,781 | — |
1961 | 4,24,810 | +17.4% |
1971 | 5,49,114 | +29.3% |
1981 | 8,20,891 | +49.5% |
1991 | 9,40,989 | +14.6% |
2001 | 9,28,869 | −1.3% |
2011 | 10,17,865 | +9.6% |
Source: |
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மதுரையின் மொத்த மக்கள் தொகை 10,17,865 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929 ஐ விட மிக அதிகம் ஆகும். [56] இதில் 1,00,324 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். இவர்களில் ஆண்கள் 51,485 மற்றும் பெண்கள் 48,389. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை முறையே 6.27% மற்றும் 0.31% ஆகும். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 81.95% உள்ளது.[57] 1,224 விவசாயிகள், 2,178 முதன்மை வேளாண் தொழிலாளர்கள், 11,282 குடிசைத் தொழிலகங்கள், 3,48,849 பிற தொழிலாளர்கள், 27,782 குறு தொழிலாளர்கள், 388 குறு விவசாயிகள், 616 குறு வேளாண் தொழிலாளர்கள், 1,611 சிறு குடிசைத்தொழிலாளர்கள் மற்றும் 25,167 பிற குறு தொழிலாளர்கள் என மொத்தம் 3,91,315 தொழிலாளர்கள் உள்ளனர். [57] மதுரை மாநகரரானது 14,62,420 மக்களுடன் தமிழக அளவில் மூன்றாவது பெரிய மற்றும் இந்திய அளவில் 44-ஆவது பெரிய மாநகரம் ஆகும் (Metropolitan City).[58][59]
2011-ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 8,73,601 (85.83%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 86,886 (8.54%), கிறிஸ்தவர்கள் 52,737 (5.18%), மதம் குறிப்பிடாதோர் 3,002 (0.29%), சமணர்கள் 1,324, சீக்கியர்கள் 164, புத்த மதத்தினர் 74, மற்றவர்கள் 77 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்.[60] தமிழ் மொழி அதிக அளவில் பேசப்படும் மொழியாகும்.[14][61][62] சௌராட்டிரம் கி. பி. 16-ஆம் நூற்றாண்டில் மதுரைக்கு இடம் பெயர்ந்த சௌராட்டிரர்களால் பேசப்படுகிறது.[63] ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள், ரோமன் கத்தோலிக்க மதுரை டையோசிசுடனும்,[64] புரட்டஸ்தாந்த கிறித்தவர்கள் தென்னிந்திய திருச்சபையின் மதுரை – இராமநாதபுரம் திருமண்டலத்தில் இணைந்துள்ளனர். [65]
2001-இல் குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 32.6 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 15.05% விட மிக அதிகம்.[66][67]
(படத்திலிருந்து) 1971–1981-இல் 50% வரை மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகரிப்பிற்கு 1974-ஆல் மதுரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 13 பஞ்சாயத்துகள் மதுரையுடன் இணைக்கப்பட்டதே காரணமாகும்.[68] 1981 மற்றும் 2001-இல் மக்கள் தொகை வீதம் குறைவிற்கு மதுரை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 1984-இல் திண்டுக்கல் மற்றும் 1997-இல் தேனி மாவட்டம் உருவாக்கபட்டதே காரணமாகும்.[68] கூட்டாக ஆண்டு வளர்ச்சி வீதம் 1971–1981-இல் 4.10 சதவீதமும், 1991–2004-இல் 1.27 சதவீதமும் குறைந்துள்ளது.[68]
ஆட்சி மற்றும் அரசியல்
[தொகு]மாநகராட்சி | ||
---|---|---|
மேயர் | திருமதி.இந்திராணி[69] | |
ஆணையாளர் | [70]சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஐ.ஏ.எஸ் | |
துணை மேயர் | நாகராஜன்[71] | |
சட்டமன்ற உறுப்பினர்கள் | ||
மதுரை மத்தி | பழனிவேல் தியாகராஜன் | |
மதுரை கிழக்கு | பி. மூர்த்தி | |
மதுரை வடக்கு | ஜி. தளபதி | |
மதுரை தெற்கு | எம். பூமிநாதன் | |
மதுரை மேற்கு | செல்லூர் ராசு | |
நாடாளுமன்ற உறுப்பினர் | ||
மதுரை மக்களவைத் தொகுதி | சு. வெங்கடேசன்[72] |
நகரமைப்புச் சட்டம் 1865-இன்படி, மதுரை 1866-ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் நகராட்சியாக ஆக்கப்பட்டது.[34] பின் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டு நகராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1891 மற்றும் 1896 தவிர). அப்போது இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசிய காங்கிரசே வெற்றி பெற்று வந்தது.[73] மதுரை மாநகராட்சி சட்டம், 1971-இன்படி,[74] மே 1, 1971 முதல் மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது.[75] மதுரை தமிழகத்தின் 2011 முன்பு வரை இரண்டாவது பழைய பெரிய மாநகராட்சியாகும்.தற்போது மதுரை தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய நகரமாக உள்ளது. [75] மாநகராட்சியானது நிர்வாகத்திற்காக 6 துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: பொது, பொறியியல், வருவாய், பொதுசுகாதாரம், நகரத் திட்டமிடல் மற்றும் கணினிப் பிரிவு.[76] இந்தத் துறைகள் அனைத்தும் மதுரை மாநகராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவரே மாநகராட்சியின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் தலைவராக உள்ளார்.[76] இது தவிர சட்டமியற்றும் அதிகாரம் மாநகராட்சி உறுப்பினர்கள் வசம் உள்ளது. மாநகராட்சியின் 100 வார்டுகளிலிருந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உறுப்பினர் என 100 உறுப்பினர்கள் மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகர் மன்றத்தின் தலைவராக மேயர் செயல்படுகிறார். இவருக்கு உதவியாக துணைமேயரும் உள்ளார். இது தவிர மாநகராட்சி நிர்வாக வசதிக்காக மண்டலங்களாப் பிரிக்கப்பட்டுள்ளது.[77] மதுரை மாநகராட்சி அலுவலகம் தல்லாகுளம் அருகே செயல்பட்டு வருகின்றது. மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளது.[78]
மதுரை நகரானது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[79] இது தவிர மதுரை மக்களைவைத் தொகுதியும் உள்ளது. இவற்றிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.[79][80]
சட்டம் ஒழுங்கு தமிழக காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரை நகரமானது தனி காவல் துறை மாவட்டமாக உள்ளது.[81] மதுரை மாநகர் காவல் துறையில், தல்லாகுளம், அண்ணா நகர், திலகர் திடல், டவுண்[81] என நான்கு பிரிவுகளுடன் மொத்தம் 27 காவல் நிலையங்களும் உள்ளன.[82] மாநகர் காவல் துறைத் தலைவராக காவல் துறை ஆணையாளர் உள்ளார். புறநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கானது மதுரை மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.[83]
இது தவிர சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளையும் உள்ளது. இது மாநிலத் தலைநகருக்கு வெளியில் இருக்கும் வெகு சில உயர்நீதி மன்றங்களுள் ஒன்று. இது சூலை 2004 முதல் செயல்பட்டு வருகிறது.[84]
போக்குவரத்து
[தொகு]சாலைப் போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-கன்னியாகுமரி), தேசிய நெடுஞ்சாலை 49 (கொச்சி-தனுஷ்கோடி), தேசிய நெடுஞ்சாலை 45B (திருவண்ணாமலை-திருச்சிராப்பள்ளி-தூத்துக்குடி ), தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா) திருமங்கலம் – கொல்லம், தேசிய நெடுஞ்சாலை 38 தூத்துக்குடி - மதுரை - திருச்சி - விழுப்புரம் - திருவண்ணாமலை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் மதுரை வழிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும்.[85] இது தவிர மாநில நெடுஞ்சாலைகளான மா. நெ – 33, மா. நெ – 72, மா. நெ – 72ஏ, மா. நெ – 73 மற்றும் மா. நெ – 73ஏ ஆகியவையும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வண்ணம் உள்ளன.[86] தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை வட்டங்களுள் மதுரையும் ஒன்றாகும்.[86] இது தவிர மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) இயங்கி வருகிறது. இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[87] மதுரையில் மூன்று முக்கியப் பேருந்து முனையங்கள் உள்ளன. அவை மாட்டுத்தாவணி ஒருகிணைந்த பேருந்து முனையம்(MIBT), ஆரப்பாளையம் ஆகிய இரண்டும் புறநகர் பேருந்து முனையங்களாகவும், பெரியார் பேருந்து நிலையம் நகர் பேருந்து நிலையமாகவும் உள்ளது.[88] அரசால் இயக்கப்படும் நகர் பேருந்துகள் தவிர 236 பதிவு பெற்ற தனியார் சிற்றுந்துகளும், 12,754 பதிவு பெற்ற தானிகளும் உள்ளன.[89]
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் : ( சென்னை, திருச்சி, முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், வடலூர், விருத்தசாலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி, நீடாமங்கலம், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, திருமயம், சிங்கம்புணரி, பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, தொண்டி, சிவகங்கை, காளையார்கோவில், இடையாங்குடி, நத்தம், மணப்பாறை, விராலிமலை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி, எட்டையபுரம், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, கீழக்கரை, சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பாபநாசம் என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம், புனலூர், கொட்டாரக்கரை, மூணார், கோட்டயம், எர்னாகுளம், பாலக்காடு, திருச்சூர், குருவாயூர், மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர் போன்ற முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, மைசூர், மடிக்கேரி, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து உள்ளன.)
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் :(கோயமுத்தூர், மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, திருப்பூர், அவிநாசி, அன்னூர், பல்லடம், தாராபுரம், ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், எடப்பாடி, சங்ககிரி, திருச்செங்கோடு, சேலம், ஓமலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல், கொடுமுடி, கரூர், ஆண்டிபட்டி, வருசநாடு, தேனி, போடி, உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர், குமுளி, கோம்பை, தேவாரம், பெரியகுளம், வத்தலகுண்டு, கொடைக்கானல், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி போன்ற இடங்களுக்கு பேருந்து உள்ளன.)
தொடருந்து
[தொகு]மதுரை சந்திப்பு தென் தமிழகத்தின் முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. இதனைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னக இரயில்வேயின் மதுரை இரயில்வே கோட்டம் செயல்படுகிறது. [90] இது சென்னையை அடுத்து அதிக வருமானம் தரக் கூடிய கோட்டமாக உள்ளது. மதுரையிலிருந்து நாட்டின் மற்ற முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, பட்னா, கொல்கத்தா, ஐதராபாத், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம், திருவண்ணாமலை, திருப்பதி, வேலூர், கன்னியாகுமரி போன்றவற்றை இணைக்கும் வண்ணம் நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன.[91] மதுரையானது நாட்டின் பிற பகுதிகளுடன் தொடருந்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[91] மதுரையில் மாநில அரசினால் அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் சேவை திட்டமிடல் கட்டத்தில் உள்ளது. [92]
விமானம்
[தொகு]மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும். இது நகரின் மையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[93] இங்கிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமானச் சேவையும் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இலங்கை, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இயக்கப்படுகிறது.[94] விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஸ்பைஸ் ஜெட் ஆகியவற்றால் விமான சேவைகள் விளங்கப்படுகிறது.[95] மதுரை விமான நிலையம் 5.2 இலட்சம் பயணிகளை ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2014 காலகட்டத்தில் கையாண்டுள்ளது.[96][97][98]
கல்வி
[தொகு]மதுரை பல நூற்றாண்டுகளாக தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இசை, நடனம் மற்றம் பல கலைகளைக் கற்பிக்கும் மையமாக விளங்கியது.[99] மதுரையை மையமாகக் கொண்டு மூன்று தமிழ்ச் சங்கங்கள் இயங்கி வந்துள்ளன.[100] சங்க இலக்கியங்கள் பல இங்கு தான் அரங்கேற்றப்பட்டன எனவும் நம்பப்படுகிறது.[24][99][101]
மதுரைத் தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் செயல்படுகிறது. சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் பழந்தமிழர்களின் மேன்மையை படம் பிடித்து காட்டுகிறது.
மதுரையின் பழமையான கல்லூரி, 1881-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்கன் கல்லூரி ஆகும்.[102] நகரின் முதல் பெண்கள் கல்லூரியாக 1948-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டோக் பெருமாட்டி கல்லூரி உள்ளது.[103] இவை தவிர, தியாகராசர் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1949), மதுரைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1889),[104] பாத்திமா கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1953), [105] தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1962), நாட்டின் பழமையான மேலாண்மைப்பள்ளிகளுள் ஒன்று மற்றும் சௌராஷ்டிரா கல்லூரி,சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, வக்பு வாரியக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1964), சரசுவதி நாராயணன் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1966) ஆகியவை நகரின் பழமையான கல்வி நிலையங்களில் குறிப்பிடத்தக்கவை.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் (ஆரம்ப காலங்களில் மதுரைப் பல்கலைக்கழகம்) 1966-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, ஒரு மாநிலப் பல்கலைக் கழகமாகும். இதனுடன் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள 109-இற்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.[106] நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 47 (தன்னாட்சி, அரசு உதவி, சுயநிதி, உறுப்பு கல்லூரி மற்றும் மாலை நேரக் கல்லூரிகள் உட்பட) பல்கலைக்கழகத்தால் ஏற்பு பெறப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.[107] இது தவிர ஏழு பல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் 5 தொழிற்பயிற்சிப் பள்ளிகள்(ஐடிஐ) மதுரையில் உள்ளன. இவற்றுள் அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி, தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை குறிப்பிடத்தக்கன.[7] மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் என இரு மருத்துவக் கல்வி நிலையங்களும், 11 துணை மருத்துவக் கல்வி நிலையங்களும் மதுரையில் உள்ளன.[7] அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற ஏழு பொறியியல் கல்வி நிலையங்கள் மதுரையில் உள்ளன. இதில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி பழமையானதாகும்.[7]
இது தவிர மதுரையைச் சுற்றிலும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. 1979-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மதுரை சட்டக்கல்லூரி, தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளுள் ஒன்றாகும். இது தமிழ்நாடு அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[7][108] இவை தவிர மதுரை நகரில் மூன்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், இரு இசைக் கல்லூரிகள், மூன்று மேலாண்மைக் கல்லூரிகள் மற்றும் 30-இற்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.[7] 1965-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது) தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வேளாண்மைக் கல்லூரி ஆகும். இதனுடன் மனையியல் கல்லூரி ஒன்றும் உள்ளது.[109] மதுரை நகரில் சுமார் 369 ஆரம்ப, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.[110]
வழிபாட்டிடங்கள்
[தொகு]மதுரையில் பல கோவில்கள் இருப்பதால், இது கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் மீனாட்சியம்மன் கோவில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவிலாகும். இது வைகையாற்றின் தெற்கில் அமைந்துள்ளது. கோவில் கட்டிடமானது 45-50 மீ. உயரம் கொண்ட பல்வேறு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இதில் தெற்கு கோபுரம் 51.9 மீ. (170 அடி) உயரத்துடன் மிக உயரமானதாகும். கருப்ப கிரகத்தின் மேல் இரண்டு தங்க விமானங்களும் அமைந்துள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றி குறிப்பிடப்படுவது இதன் பழமைக்குச் சான்றாகும். கோவிலின் தற்போதைய அமைப்பானது பொ.ஊ. 1623-இலிருந்து 1655-இற்குள் கட்டப்பட்டதாகும்.[39][111] தினசரி 15,000 பேர்களும், வெள்ளிக்கிழமைகளில் 25,000 பேர் வரையும் கோவிலைப் பார்வையிடுகின்றனர். சுமார் 33,000 சிற்பங்கள் வரை கோவிலில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.[112] புதிய உலக அதிசயங்களுக்கான முதல் முப்பது பரிந்துரைகளில் இக்கோவிலும் இடம் பெற்றிருந்தது.[113]
நகரினுள் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் சிவாலயங்களில் காணப்படுவது போன்று நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.[114][115] மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் சோலைமலை அடிவாரத்தில் அழகர் கோவில் அமைந்துள்ளது.[116] சோலை மலையின் மேல் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழமுதிர்சோலை அமைந்துள்ளது.[116]
காசிமார் பெரிய பள்ளிவாசல் நகரின் பழமையான முசுலிம் வழிபாட்டுத் தலம் ஆகும்.[117] இப்பள்ளிவாசல் 13-ஆம் நூற்றாண்டில் குலசேகரப் பாண்டியனிடமிருந்து தானமாகப் பெற்ற நிலத்தில், ஓமனில் இருந்து வந்த காசி சையது தாசுத்தீன் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.[118][99][117] சையது தாசுதீனின் வழித்தோன்றல்களே மதுரை நகரின் காசிகளாக தமிழக அரசால் நியமிக்கப்படுகின்றனர்.[119] மதுரை அசரத்தின் தர்காவான மதுரை மக்பரா இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது.[117]
முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம், மதுரையிலிருந்து எட்டு கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை அடுத்து திருப்பரங்குன்றம் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது.[116][120] மேலும் மலைக் குன்றின் மீது அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசாவின் தர்காவும் அமைந்துள்ளது.[121]
கோரிப்பாளையம் தர்காவானது கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது. கோர் என்ற பாரசீக வார்த்தைக்கு கல்லறை என்பது பொருள். [121] இங்கு அசரத்து சுல்தான் அலாவுத்தீன் பாதுசா, அசரத்து சுல்தான் சம்சுத்தீன் பாதுசா மற்றும் அசரத்து சுல்தான் அபிபுத்தீன் பாதுசா ஆகியோரின் கல்லறைகள் உள்ளது.
புனித மரியன்னை தேவாலயமானது கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது.[122]
கலாச்சாரம், சுற்றுலா மற்றும் கொண்டாட்டங்கள்
[தொகு]மதுரை நகரமானது இரவிலும் செயல்பாட்டில் இருப்பதால் "தூங்கா நகரம்" என பரவலாக அறியப்படுகிறது.[123] மதுரை அதிக அளவு சுற்றுலா பயணிகளைக் கவரும் நகரங்களுள் ஒன்று. 2010-ஆம் ஆண்டில் மட்டும் 91,00,000 சுற்றுலா பயணிகள் மதுரை நகருக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் 5,24,000 வெளிநாட்டினரும் அடக்கம்.[124] மருத்துவச் சுற்றுலாப் பயணிகளும் தற்போது மதுரைக்கு பெருமளவு வருகின்றனர்.[125] இந்தோ சரசானிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் சுற்றுலாப் பயணிகளைப் பெருதும் கவர்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தேசிய நினைவுச் சின்னம் ஆகும். இங்கு தமிழக தொல்லியல் துறையால் திருமலை நாயக்கர் மற்றும் மகாலின் வரலாற்றைக் கூறும் ஒலி - ஒளிக் காட்சிகளும் மாலையில் காட்டப்படுகின்றன.[116] இராணி மங்கம்மாளின் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தற்போது காந்தி அருங்காட்சியமாகச் செயல்படுகிறது. இது நாட்டிலுள்ள ஐந்து காந்தி நினைவு அருங்காட்சியகங்களுள் ஒன்று. இங்கு நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[126] இவ்வருங்காட்சியத்தை பார்வையிட்டதே தனது நிறவெறிக்கெதிரான அமைதி வழிப் போராட்டத்துக்கு தூண்டுதலாக இருந்தது என மார்டின் லூதர் கிங் குறிப்பிட்டுள்ளார்.[127] தல்லாகுளத்தில் அமைந்துள்ள சூழலியல் பூங்கா விளக்கு மற்றும் ஒளியிழைக் கம்பிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்கள் மற்றும் நீர்ச் சுனைகளைக் கொண்டுள்ளது(மாலை நேரத்தில் மட்டும் அனுமதி).[128] தமுக்கம் மைதானம் மற்றும் காந்தி அருங்காட்சியகத்துக்கு இடையே அமைந்துள்ள இராசாசி பூங்காவை விடுமுறை நாட்களில் 5000 பேர் வரையும் வேலை நாட்களில் 2000 – 3000 பேர் வரையும் பார்வையிடுகின்றனர். [129] இது தவிர மதுரை – திண்டுக்கல் சாலையில் பரவை அருகே அதிசயம் பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது. இது தவிர செயற்கை இழை மைதானம், நீச்சல் குளம் கொண்ட எம். ஜி. ஆர். ரேசு கோர்சு மைதானமும் உள்ளது.[130] இங்கு பல்வேறு தேசிய விளையாட்டுப் போட்டிகளும், பன்னாட்டு கபாடி போட்டிகளும் நடைபெறுகின்றன.[131][132] "ஜில் ஜில் ஜிகர்தண்டா" என்று உள்ளூர் கடைக்காரர்களால் அழைக்கப்படும் சீனப் பாசி கலந்த ஒரு வகைக் குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது.
மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகும் முழுவதிலுமிருந்து பல இலட்சம் சுற்றுலா பயணிகளைக் கவர்கிறது. இதை ஒட்டி திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.[133] செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆவணிமூல விழாவில் சிவனின் அறுபத்து நான்கு திருவிளாயாடல்களும் நடத்தப்படுகின்றன. அது தை மாதம் முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் தெப்பத்திருவிழாவில் அலங்கரிக்கப்பட கடவுள் சிலைகள் தெப்பதில் வைத்து விடப்படுகின்றன.{{sfn|Tourism in Madurai} அதுபோல் பொங்கல் திருநாளை ஒட்டி மதுரை சுற்று வட்டார கிராமங்களில் ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) நடைபெறுகிறது. இவை தவிர கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, தெற்குவாசல் புனித மேரி தேவாலயத்தில் கொண்டாடப்படும் கிறித்துமசு விழா போன்றவை நகரின் பிற முக்கியத் திருவிழாக்கள்.[121][134][135] இது தவிர மதுரையை மையமாகக் கொண்டு பல திரைப்படப் படப்பிடிப்புகளும் நடைபெறுகின்றன.
ஊடகம் மற்றும் பிற சேவைகள்
[தொகு]நகரில் பல்வேறு வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு நிறுவனமான அனைத்திந்திய வானொலி, [136] தனியார் நிறுவனங்களான ரேடியோ சிட்டி ,சூரியன் எப். எம்,[137] ரேடியோ மிர்ச்சி, [138] ஹலோ எப். எம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. தினமலர், [139] தினகரன்,[140] தமிழ் முரசு, தினத்தந்தி, [141] தினமணி,[142] ஆகிய காலை நாளிதழ்களும், மாலை மலர், [143] தமிழ் முரசு போன்ற மாலை நாளிதழ்களும், தி இந்து, [144] தி நியூ இந்தியன் எக்சுபிரசு,[142] டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா[145] ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் மதுரையில் பதிப்புகளைக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான நிறுவனங்கள் தொலைக்காட்சி இணைப்பை வழங்குகின்றன. [146]
மதுரை நகரின் மின்சேவையானது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரையானது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மதுரை வட்டாரத்தின் தலைமையிடமாக உள்ளது. [147] மதுரை நகர் மற்றும் புற நகர் பகுதிகள் மதுரை மாநகர மின்பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ளது. இது மேலும் ஆறு துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [147] மதுரை நகரில் குடிநீரானது மதுரை மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படுகிறது. 2010–2011 காலகட்டத்தில் 87,091 இணைப்புகளுக்கு 950.6 இலட்சம் இலிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. [148]
மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் சுமார் 400 மெட்ரிக் இடன்கள் அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. மழைநீரைச் சேகரிப்பதற்காக சாலையின் ஓரங்களில் மழைநீர் சேகரிப்பு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.[149] மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முதல் முதலில் 1924-ஆம் ஆண்டு பிரிட்டிசு ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்டன. பின் 1959 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் விரிவாக்கப்பட்டன. 2011-ஆம் ஆண்டின் ஜவகர்லால் நேரு தேசிய ஊரக புதுப்பிப்பு திட்டம் மூலம் நகரின் 90 விழுக்காடு பகுதிகள் பாதாள சாக்கடை திட்டத்தில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.[149]
மதுரை நகரானது, பி.எஸ்.என்.எல் -இன் மதுரை தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம் (GSM) மற்றும் சிடிஎம்ஏ இணைப்புகளும் மதுரை நகரில் கிடைக்கின்றன். இது தவிர அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் கிடைக்கப் பெறுகிறது.[150] பாரத்து சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் அழைப்பாளர் தெரிவு வகை இணைப்பான நெட்ஒன் இணைப்பும் உள்ளது.[151]
மதுரை நகரில் 2007, டிசம்பர் 17-இல் இருந்து கடவுச் சீட்டு அலுவலகம் இயங்கி வருகிறது.[152] மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகியவை இதன் ஆளுகையின் கீழ் உள்ளன.[152] நகரில் தென் மாவட்டங்களில் பெரிய மருத்துவமனையான அரசு இராசாசி மருத்துவமனையும் உள்ளது.[153]
பிரச்சினைகள்
[தொகு]ஒவ்வொருநாளும் பெருகிவரும் இருசக்கர வாகனங்கள், மகிழுந்துகள் போன்றவற்றின் காரணமாக நகருக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்கள், முறைப்படுத்தப்படாத போக்குவரத்து விதிகள், வைகை ஆற்றில் கலந்துவிடப்படும் பல்வேறு விதமான மாசுபட்ட திட மற்றும் திரவக் கழிவுகள், சாலைகளின் ஓரங்களில் தீயநாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகள் மற்றும் சாக்கடைகள் எனப் பல சவால்களை மதுரை நகரம் எதிர்கொண்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
[தொகு]மதுரை நகர் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சினையாக வைகை ஆறு மாசுபடுவதைக் குறிப்பிடலாம். மதுரை நகரின் முக்கிய சாக்கடைகள், சிறு தொழிற்சாலைகளின் கழிவுநீர் போன்றவை வைகை ஆற்றில் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இது தவிர வைகையின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் குப்பைகளை அதிக அளவில் வைகை ஆற்றுக்குள் கொட்டுவதாலும் ஆறு மாசடைகிறது. இவற்றைப் பற்றி உள்ளூர் நாளிதழ்கள் சுட்டிக்காட்டுவதும், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுப்பதும் மதுரையில் வழமையாக நடக்கும் நிகழ்வுகள்.
வைகையாற்றில் கழிவுகள்
[தொகு]மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர், ஆற்றின் கரையோரம் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் முதலியன வைகை ஆற்றில நேரடியாக கலந்து விடப்படுகின்றன. இவை தவிர இறைச்சிக் கடை கழிவுகள் முதலிய திடக்கழிவுகளும் ஆற்றுக்குள் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு மிக அருகில் பந்தல்குடி கண்மாய் நீர் வைகையாற்றில் கலக்கும் இடம் தற்போது சாக்கடை கலக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே வருடத்தின் பெருவாரியான நாட்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடமும் மாசடைந்து காணப்படுகிறது.
போக்குவரத்து பிரச்சினைகள்
[தொகு]நீண்ட காலத்திற்கு முன்பு வடிவைக்கப்பட்ட நகரின் சில பிரதான சாலைகள் வளர்ந்து வரும் வாகனப் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், காமராஜர் சாலை போன்ற இடங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனை மனதில் வைத்து வழிமொழியப்பட்ட பறக்கும் சாலைகள் திட்டம் இன்னும் திட்ட அளவிலேயே இருக்கின்றது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மதுரை நகருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை.
சென்னையை அடுத்து கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு மெட்ரோ ரயில் போக்குவரத்து மதுரை நகருக்கு கிடைக்குமாயின் தற்போதைய போக்குவரத்துப் பிரச்சினை பெரும்பகுதி குறைக்கப்படும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chapter 3, Metro cities of India (PDF) (Report). Central Pollution Control Board, Govt of India. Archived from the original (PDF) on 23 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2017.
- ↑ "Smart city challenge, Madurai". Government of India. Archived from the original on 22 December 2015. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
- ↑ "Population totals of Madurai – 2011". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
- ↑ "இந்தியா தொன்மையானவை - மீனாட்சி கோவில், மதுரை". இந்திய அரசின் இணையதளம்.
- ↑ "இறையனார் களவியல் உரை கூறும் [[முச்சங்கம்]] பற்றிய விவரங்கள்". தமிழ் இணைய பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); URL–wikilink conflict (help) - ↑ "மதுரை நகரின் பொருளாதாரத்தை உயர்த்தும் தொழிலகங்கள் (ஆங்கிலத்தில்)". இந்து பத்திரிகை (ஆங்கிலம்). Archived from the original on 2007-10-26. பார்க்கப்பட்ட நாள் 2012-09-15.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 List of Colleges in Madurai.
- ↑ "மதுரை மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்". மதுரை நிர்வாக அதிகாரபூர்வ இணையத்தளம். Archived from the original on 2012-05-11. பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மாசில்லா மதுரை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2014.
- ↑ "ஒரு இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய நகரங்கள்" (PDF). பொது பதிவாளர் & மக்கள்தொகை ஆய்வாளர், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2011.
- ↑ திருமருத முன்றுறை - பரிபாடல் 7-83
- ↑ வையைத் திருமருத முன்றுறை - பரிபாடல் 22-45
- ↑ வையை மருதோங்கு முன்றுறை – சிலப்பதிகாரம் 14-72
- ↑ 14.0 14.1 14.2 14.3 14.4 14.5 14.6 14.7 Harman 1992, ப. 30–36.
- ↑ 15.0 15.1 15.2 Reynolds & Bardwell 1987, ப. 12–25.
- ↑ Prentiss 1999, ப. 43.
- ↑ மகாதேவன்.
- ↑ "மகாவம்சம்". பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2023.
- ↑ Zvelebil 1992, ப. 27.
- ↑ Quintanilla 2007, ப. 2.
- ↑ Agarwal 2008, ப. 17.
- ↑ (பரிபாடல் திரட்டு 1-3, 6 மதுரை).
- ↑ "மதுரையைக் குறிப்பிடும் சங்க இலக்கிய வரிகள்". பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 24.0 24.1 Bandopadhyay 2010, ப. 93–96.
- ↑ Dalal 1997, ப. 128.
- ↑ Kersenboom Story 1987, ப. 16.
- ↑ 27.0 27.1 27.2 Salma Ahmed 2011, ப. 26.
- ↑ 28.0 28.1 V. 1995, ப. 115.
- ↑ Markovits 2004, ப. 253.
- ↑ B.S., S. & C. 2011, ப. 582.
- ↑ 31.0 31.1 King 2005, ப. 73–75.
- ↑ Reynolds & Bardwell 1987, ப. 18.
- ↑ Narasaiah 2009, ப. 85.
- ↑ 34.0 34.1 Madurai Corporation – citizen charter.
- ↑ 35.0 35.1 35.2 Imperial gazetteer of India: Provincial series, Volume 18 1908, ப. 229–230.
- ↑ Gandhi Memorial Museum, Madurai.
- ↑ Press Information Bureau archives, Government of India.
- ↑ The Hindu 26 February 2011.
- ↑ 39.0 39.1 39.2 39.3 King 2005, ப. 72.
- ↑ Selby & Peterson 2008, ப. 149.
- ↑ 41.0 41.1 41.2 King 2005, ப. 73.
- ↑ Maps, Weather, and Airports for Madurai, India.
- ↑ "மதுரை". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ Madurai Corporation – General information.
- ↑ 45.0 45.1 Imperial Gazetter of India, Volume 16 1908, ப. 404.
- ↑ Pletcher 2011, ப. 192.
- ↑ 47.0 47.1 Department of Agriculture.
- ↑ 48.0 48.1 48.2 48.3 48.4 48.5 Annesley 1841, ப. 68.
- ↑ Water year – District ground water brochure, Madurai district.
- ↑ 50.0 50.1 50.2 The Hindu 21 April 2010.
- ↑ Climatology of Madurai 2011.
- ↑ Singh, Dube & Singh 1988, ப. 407.
- ↑ Students' Britannica India, ப. 319.
- ↑ Primary Census Abstract – Census 2001.
- ↑ Madurai 2011 census data.
- ↑ National Sex Ratio 2011.
- ↑ 57.0 57.1 Madurai 2011 census.
- ↑ Madurai UA 2011 census data.
- ↑ Largest metropolitan areas.
- ↑ Madurai City Census 2011 data
- ↑ Deccan Chronicle 25 March 2011.
- ↑ Primary Census data – religion.
- ↑ Thurston 1913, ப. 123.
- ↑ Catholic Diocese of Madurai.
- ↑ Madurai Ramnad Diocese.
- ↑ Stanley 2004, ப. 631.
- ↑ City Development Plan of Madurai 2004, ப. 31.
- ↑ 68.0 68.1 68.2 City Development Plan of Madurai 2004, ப. 43.
- ↑ The Hindu 22 October 2011.
- ↑ New Commissioner for Corporation.
- ↑ The Hindu 19 May 2014.
- ↑ MP of Madurai 2014.
- ↑ Lal 1972, ப. 151.
- ↑ Palanithurai 2007, ப. 80.
- ↑ 75.0 75.1 Civic affairs 1970, ப. 80.
- ↑ 76.0 76.1 Commissionerate of Municipal Administration.
- ↑ Economic and political weekly, Volume 30 1995, ப. 2396.
- ↑ The Hindu 9 December 2008.
- ↑ 79.0 79.1 Map showing the new assembly constituencies.
- ↑ List of Parliamentary and Assembly Constituencies.
- ↑ 81.0 81.1 Madurai City Police district.
- ↑ Madurai – List of Police Stations.
- ↑ Madurai District Police.
- ↑ Madras High Court.
- ↑ மதுரை வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள்.
- ↑ 86.0 86.1 நெடுஞ்சாலைகள் துறையின் நெடுஞ்சாலைகள் வட்டம், தமிழ்நாடு.
- ↑ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) 2011.
- ↑ மதுரை பேருந்து நிலையம்.
- ↑ வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் – தமிழ்நாட்டில் பதிவு பெற்ற வணிகரீதியான வண்டிகள்.
- ↑ Southern Railway Madurai division.
- ↑ 91.0 91.1 Train Running Information.
- ↑ ibnlive 6 June 2011.
- ↑ மதுரை விமானநிலையம்.
- ↑ இந்து பத்திரிக்கை (ஆங்கிலம்) 29 ஆகத்து 2012.
- ↑ இந்திய விமான நிலையங்கள் பொறுப்பகம் – மதுரை விமான நிலையம்.
- ↑ விமான போக்குவரத்து புள்ளிவிவரங்கள்.
- ↑ பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்து.
- ↑ பன்னாட்டு வான்வழிச் சரக்குப் போக்குவரத்து.
- ↑ 99.0 99.1 99.2 National Geographic 2008, ப. 155.
- ↑ Soundara Rajan 2001, ப. 51.
- ↑ Ramaswamy 2007, ப. 271.
- ↑ The Times of India 1 September 2011.
- ↑ The Lady Doak College.
- ↑ The Madura College.
- ↑ Fatima College.
- ↑ Madurai Kamarajar University.
- ↑ List of Colleges affiliated to Madurai Kamarajar University.
- ↑ The Tamil Nadu Dr. Ambedkar Law University – Affiliated Government law colleges.
- ↑ Agricultural College and Research Institute, Madurai.
- ↑ Schools in Madurai.
- ↑ Brockman 2011, ப. 326–327.
- ↑ Abram et al. 2011, ப. 996–1002.
- ↑ Meenakshi Temple, India.
- ↑ Ayyar 1991, ப. 490.
- ↑ Tourist places in Madurai.
- ↑ 116.0 116.1 116.2 116.3 Tourism in Madurai.
- ↑ 117.0 117.1 117.2 Shokoohy 2003, ப. 52.
- ↑ Maqbara.
- ↑ The Times of India 27 April 2014.
- ↑ The Times of India 28 November 2012.
- ↑ 121.0 121.1 121.2 Shokoohy 2003, ப. 57.
- ↑ Catholic hierarchy.
- ↑ The Hindu 3 September 2013.
- ↑ The Hindu 5 November 2007.
- ↑ The Hindu 6 November 2013.
- ↑ Tha Indian 5 March 2009.
- ↑ The Hindu 1 July 2006.
- ↑ The Times of India 11 June 2012.
- ↑ The Hindu 15 May 2005.
- ↑ The Hindu 29 May 2004.
- ↑ The Hindu 1 March 2010.
- ↑ The Times of India 22 June 2012.
- ↑ Welcome to Madurai – Festivals.
- ↑ Shokoohy 2003, ப. 54.
- ↑ Shokoohy 2003, ப. 34.
- ↑ All India Radio Stations.
- ↑ Suriyan FM Madurai.
- ↑ Radio Mirchi Madurai.
- ↑ Dinamalar e-paper Madurai.
- ↑ Dinakaran Madurai.
- ↑ Dinathanthi e-paper Madurai.
- ↑ 142.0 142.1 The Indian Express Group.
- ↑ Malaimalar Madurai.
- ↑ The Hindu Madurai.
- ↑ The Times of India.
- ↑ The Hindu 24 September 2007.
- ↑ 147.0 147.1 Important Address of TNEB.
- ↑ Water Supply Details.
- ↑ 149.0 149.1 Jawaharlal Nehru National Urban Renewal Mission.
- ↑ List of cities where BSNL broadband service is available (As on 1 January 2007).
- ↑ List of cities where Calling Line Identification (CLI) Based Internet Service is available.
- ↑ 152.0 152.1 Regional passport office.
- ↑ The Hindu 23 August 2007.
உசாத்துணைகள்
[தொகு]- "இறைத்தூதர் முகம்மதின் வம்சம்". Maqbara.com. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
- மகாதேவன், ஐராவதம். "அகம் மற்றும் புறம் : இந்திய வரி வடிவங்களின் முகவரி (ஆங்கிலம்)" (PDF). தி இந்து. p. 4. பார்க்கப்பட்ட நாள் 23 March 2014.
{{cite web}}
: CS1 maint: ref duplicates default (link) - "மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் 2011 - மதுரை". பொது பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், இந்திய அரசு. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 Jan 2014.
- "மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் 2011". பொது பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், இந்திய அரசு. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 Jan 2014.
- "இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் 36 நகரங்கள் (ஆங்கிலம்)". ரீடிப்பு. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
- "வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை". வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை. Archived from the original on 30 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012.
- "அஇஅதிமுக சென்னை ஒற்றைத் தட இரயில் பாதை திட்டத்தை உயிர்பித்தது (ஆங்கிலம்) – தென்னிந்தியா – சென்னை – ஐபிஎன் லைவ்". ஐபிஎன் லைவ். 6 June 2011 இம் மூலத்தில் இருந்து 9 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120709120204/http://ibnlive.in.com/news/aiadmk-revives-chennai-monorail-project/156597-60-120.html. பார்த்த நாள்: 29 June 2012.
- "விமானப் போக்குவரத்து புள்ளிவிவரங்கள்" (PDF). இந்திய விமான நிலைய பொறுப்புக் கழகம். 2012. Archived from the original (PDF) on 18 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
- "இந்திய விமான நிலைய பொறுப்புக் கழகம் – மதுரை விமான நிலையம்". இந்திய விமான நிலைய பொறுப்புக் கழகம். 2012. Archived from the original on 6 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)