கன்னியாகுமரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கன்னியாகுமரி
மாவட்டம்
Vivekananda Rock & Valluvar Statue at Sunrise.JPG
கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை
Kanyakumari in Tamil Nadu (India).svg
கன்னியாகுமரி மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் TamilNadu Logo.svg தமிழ்நாடு
தலைநகரம் நாகர்கோவில்
பகுதி தென் மாவட்டம்
ஆட்சியர்
திரு. மா.அரவிந்த்,
இ. ஆ. ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு.D.N.ஹரி கிரண் பிரசாத் ,
இ. கா. ப
மாநகராட்சிகள் 1
நகராட்சிகள் 4
வருவாய் கோட்டங்கள் 2
வருவாய் வட்டங்கள் 6
பேரூராட்சிகள் 51
ஊராட்சி ஒன்றியங்கள் 9
ஊராட்சிகள் 95
வருவாய் கிராமங்கள் 188
சட்டமன்றத் தொகுதிகள் 6
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 1672 ச.கி.மீ
மக்கள் தொகை
18,70,374 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இசீநே
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
629xxx
தொலைபேசிக்
குறியீடு

04652 - நாகர்கோவில்
04651 - மார்த்தாண்டம்
வாகனப் பதிவு
TN-74 & TN-75
பாலின விகிதம்
ஆண்-1000/பெண்-1014 /
கல்வியறிவு
91.75%
சராசரி கோடை
வெப்பநிலை

31 °C (88 °F)
சராசரி குளிர்கால
வெப்பநிலை

22 °C (72 °F)
இணையதளம் kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district, மலையாளம்: കന്യാകുമാരി ജില്ല) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1,672 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன.

மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை , கொல்லங்கோடு என 4 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும்.

தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது.

இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.

2004 திசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற்பகுதிகளைக் கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் அழிவிற்கு உள்ளாக்கியது. 2017 நவம்பர் 29,30 டிசம்பர் 01 ஆகிய நாட்களில் வீசிய ஓக்கி புயல் மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

வரலாறு[தொகு]

கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும்

பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாகக் கூறுகிறது.

கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம்

சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை ஆய் அரசும், வேணாட்டு அரசும் ஆண்டதர்க்கான ஆதாரங்கள் தொல்காப்பியத்தில் உள்ளது. தற்போதைய குமரி மாவட்ட நிலப்பரப்பில் தலைநகரத்தை கொண்டு, களக்காடு முதல் கொல்லம் வரை உள்ள நிலப்பரப்பை 9- ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரை ஆட்சி நடத்தியவர்கள் வேணாட்டு அரசர்கள்.

வேணாடு[தொகு]

வேணாடு பண்டைச் சேர நாட்டில் அமைந்திருந்த 18 நாடுகளில் ஒன்றாகும்.

பாண்டியநாட்டின் தென்பகுதியில் ஆய்நாடு, வேணாடு ஆகிய சிற்றரசுகள் தன்னாட்சி பெற்று இயங்கி வந்தன. ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது. சங்க காலம் முதல் கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரை ஆய் நாட்டின் மேற்கிலும் வடக்கிலும் ஆய்நாடு நீங்கலான உட்பகுதிகளை உள்ளடக்கிய கொல்லத்திற்கு அப்பால் வரை அரச குடியினரின் வலிமையான ஆட்சி நிலவிய நாடாக வேணாடு விளங்கியது. கி.பி 9ம் நூற்றாண்டில் சேர பேரரசர் சேரமான் பெருமாள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும் சேரப் பேரரசின் மைய அரசு வலுவிழந்த நிலையில், பிற்காலச் சோழர்களின் தொடர் படையெடுப்பை எதிர்கொள்ளவியலா நிலையிலும், வாரிசில்லா நிலையிலும் ஆய்நாடு வேணாட்டுடன் இணைந்தது. இப்படியாக வேணாடு, தற்போதைய இந்தியாவில் தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. தொடக்கத்தில் திருவிதாங்கோடும் பின்பு கல்குளமும் வேணாட்டின் தலைநகராக இருந்தன.

வேணாட்டு அரசர்கள்[தொகு]

வேணாட்டை திருவடி என்ற பட்டபெயருடன் கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 1758 வரை 42 அரசர்கள் தன்னாட்சியோடு ஆண்டுள்ளனர். இந்த வேணாட்டு அரசர்கள் சேரநாட்டின் வழிவந்தவர்கள். இவர்கள் திற்பாப்பூர் பரம்பரையினராகும்.

கி.பி. 1758ல் வேணாட்டு கடைசி மன்னன் இராமவர்மன் மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசைக் கைப்பற்றியது. வேணாட்டு நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் மார்த்தாண்ட வர்மனால் திருவிதாங்கூர் அரசாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு, இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வந்த வேணாட்டை 1947 வரை அவர்களே ஆண்டு வந்தனர்.

பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் குமரித்தந்தை மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.

இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை

மாவட்ட நிர்வாகம்[தொகு]

வருவாய் நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் நாகர்கோயில் மற்றும் பத்மநாபபுரம் எனும் இரண்டு வருவாய் கோட்டங்களும், அகத்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் எனும் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்நான்கு வட்டங்கள் 18 வருவாய் உள்வட்டங்களும், 188 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[1]

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்[தொகு]

கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி மன்றங்களையும், 51 பேரூராட்சிகளையும்[2], 9 ஊராட்சி ஒன்றியங்களையும்[3], 95 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[4]

மக்கள் தொகையியல்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1901 3,59,248 —    
1911 4,22,260 0.01%
1921 4,94,125 0.01%
1931 5,81,851 0.01%
1941 6,76,975 0.01%
1951 8,26,380 0.01%
1961 9,96,915 0.01%
1971 12,22,549 0.01%
1981 14,23,399 0.01%
1991 16,00,349 0.01%
2001 16,76,034 0.00%
2011 18,70,374 0.01%
சான்று:[5]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் தொகை 18,70,374 ஆகும். அதில் ஆண்கள் 926,345; பெண்கள் 944,029 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 11.60% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1,111 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுகு, 1019 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 91.75% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 93.65% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 89.90% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 1,82,350 ஆக உள்ளனர்.[6]

சமயம்[தொகு]
Circle frame.svg

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமயம் (2011) (2011)[7]

  இந்து (48.6%)
  மற்றவை (0.3%)

இம்மாவட்டத்தில் இந்துக்கள் 9,09,872 (48.65%); கிறித்தவர்கள் 8,76,299 (46.85%); இசுலாமியர்கள் 78,590 (4.20%); மற்றவர்கள் 0.30% ஆக உள்ளனர்.

அரசியல்[தொகு]

நாடாளுமன்றத் தொகுதிகள்[தொகு]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

புவியியல்[தொகு]

இம்மாவட்டம், முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகளையும், வாய்க்கால்களையும் பெற்றிருந்ததன் மூலம் திருவிதாங்கூரின் களஞ்சியம் என அறியப்பட்டது. ரப்பர் மற்றும் நறுமணப்பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல், வாழை, தென்னை ஆகியன கடற்கரையை ஒட்டிய சமபூமிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றன. இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன. இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும், 32.5% அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது.

மாவட்டத்தின் கடற்கரைகள் பல பாறை மயமாகவும் மற்றவிடங்கள் வெள்ளை மணற்பகுதியாகவும் காணப்படுகின்றன. கிழக்கு கடற்கரைகளில் பவளப்பாறையின் அம்சங்கள் (பெரும்பாலும் அழிந்திருந்தாலும்) பல காணப்படுகின்றன. பல வகையான வண்ண சங்கு வகைகளும் காணப்படுகின்றன. மேலும் சில கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் தாது வளம் நிறைந்ததாக இருக்கிறது.

தட்பவெப்ப நிலை[தொகு]

கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, 24 மழை நாட்களில் 549 மி.மீ மழையும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே மார்ச் முதல் மே மாதம் வரையிலான வேனிற் காலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் அக்டோபர் மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், பெப்ரவரி மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.

கோடைகாலங்களில் கூட வெப்பம் அதிகமாக இருக்காது. தமிழகத்திலேயே அதிக மழை பெறும் ஒரே மாவட்டம்..ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு அடுத்தப்படியாக அதிக மலைகளை கொண்ட ஒரே மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும்.

ஆறுகள்[தொகு]

இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறு ஆகியன.

குழித்துறை தாமிரபரணி ஆறு[தொகு]

இந்நதி குழித்துறையாறு என பரவலாக அறியப்படுகிறது. இதற்கு இரண்டு துணை ஆறுகள் உள்ளன. அவை கோதையாறு மற்றும் பறளியாறு ஆகியன. இவைகள் முறையே பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைக்கட்டுகளிலிருந்து வருகின்றன. மேலும் கோதையாறு ஆற்றுக்கும் இரண்டு துணை ஆறுகள் உள்ளன. இவை சிற்றாறு - 1, மற்றும் சிற்றாறு - 2ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்தத் தாமிரபரணி கன்னியாகுமரிக்கு 56 கி.மீ மேற்காக அமைந்திருக்கும் தேங்காய்ப்பட்டணம் என்னும் சிற்றூரில் அரபிக் கடலில் கலக்கிறது.

பறளியாறு[தொகு]

மாத்தூர் தொட்டிப் பாலத்திலிருந்து பார்க்கப்பட்ட பறளியாறு.

பறளியாறு மகேந்திர கிரி மலையில் உற்பத்தியாகிப் பாய்கிறது. இவ்வாற்றின் மீது மாத்தூர் அருகே தொட்டிப்பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மேலும் பெருஞ்சாணி அணையும், இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

வள்ளியாறு[தொகு]

இவ்வாறும் இதன் ஒரு துணை ஆறாகிய தூவலாறும், வேளிமலை மலையில் உற்பத்தியாகி, பி.பி.கால்வாய், மற்றும் அதன் பிரிவுக் கால்வாய்களிலிருந்தும் வரும் ஓடைகளின் நீரையும் வாங்கிக்கொண்டு, கடியப்பட்டணம் அரபிக்கடலில் கலக்கிறது.

பழையாறு[தொகு]

இவ்வாறு நாகர்கோவிலுக்கு 18 கி.மீ வடமேற்காக அமைந்திருக்கும் சுருளகோடு என்னும் சிற்றூரில் தொடங்குகிறது. இது தோவாளை, அனந்தன் நகர், மற்றும் என்.பி. கால்வாய்களின் ஓடைகளின் நீர்களை வாங்கும் ஒரு ஓடையாறாகவே இருக்கிறது. இந்த ஆறு 44 கட்டை தூரம் ஓடி மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கின்றது. இந்த ஆற்றின் மூலம் 16550 ஏக்கர் ஆயக்கட் நிலம் விவசாய பயனடைகின்றது.

அணைகள்[தொகு]

பேச்சுப்பாறை அணை[தொகு]

இவ் அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897–1906 காலகட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு மிஞ்சின் அவர்களால் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் மூலம் திருநாள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது.

பெருஞ்சாணி அணை[தொகு]

1958இல் கட்டி முடிக்கப்பட்ட இவ்வணையின் கொள்ளவு 77 அடியாகும்.

முக்கடல் அணை[தொகு]

முக்கடல் அணை வேம்பாறு குறுக்கே கட்டப்படுள்ளது. நாகர்கோவில் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்குகிறது.

சிற்றாறு அணை[தொகு]

சிற்றாறு 1 மற்றும் சிற்றாறு 2 அணைகள் சிற்றாறின் குறுக்கே 1970-ல் கட்டி முடிக்கப் பட்டது.[8]

மாம்பழத்துறையாறு அணை[தொகு]

இது வில்லுக்குறியிலிருந்து சுமார் 3 கட்டைத் (கிலோமீட்டர்) தொலைவில் ஆனைக்கிடங்கு என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே கடந்த 2010-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.80 அடி உயரமுள்ள இவ்வணையின் மூலம் 25 குளங்களும் 905.76 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிப் பெறுகின்றது.

தாவரங்களும், விலங்குகளும்[தொகு]

கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறை பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளியும் பூக்களையும் உடைய மரங்கள், பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை பார்க்க முடியும்.

இம்மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம் பன்றி, காட்டுப் பன்றி,பல்லி வகைகள், பல இன கொக்கு, நாரை, நீர்க்கோழி, மலைப்பாம்பு, பல வகைப் பாம்புகள் உட்பட பல வகைப்பட்ட ஊர்வன ஆகியவை அடங்கும்.மேலும் மகேந்திர கிரி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல்) முயல்கள், மான்கள், சிறுத்தை ஆகியவற்றை காண முடியும். அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும். கீரிப்பாறை சார்ந்த பகுதிகள் யானைகள், காட்டு எருமை, கரடி போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. தேரூர் பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும்.

மருத்துவ வரலாறு[தொகு]

இம்மாவட்டம் பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் கொண்டுள்ளது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.

மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமான அகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அகத்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால், அகஸ்தீஸ்வரமுடையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது. மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்மக்கலையிலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணி, வர்மக்கலை ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறை|குரு-சிஷ்ய முறையில்]] கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.

பண்பாடு[தொகு]

இம்மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் முதன்மை மொழி தமிழ் ஆகும். மலையாளம் பேசுகின்ற சிறுபான்மையோரும் உள்ளனர். இந்த மாவட்டத்தில் பேசப்பட்டு வரும் வட்டாரத் தமிழ் சிறிது மலையாளம் கலந்து தனித்தன்மை கொண்டுள்ளது

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்துக்கள் 9,09,872 (48.65%); கிறித்தவர்கள் 8,76,299 (46.85%); இசுலாமியர்கள் 78,590 (4.20%); மற்றவர்கள் 0.30% ஆக உள்ளனர்.[6]

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான அய்யாவழியின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது. மேலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், குறிப்பாக தற்போது குமரி மாவட்டமாக உள்ள தென் திருவிதாங்கூரில் கிறிஸ்தவ மறை பரப்பாளர்கள் ஆங்கில கல்வியின் முன்னோடிகளாக திகழ்ந்தனர். இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் சாதி முறை பெருமளவில் வலுவிழந்து காணப்படுகிறது.[சான்று தேவை]

இம்மாவட்டத்தில் 1980 களில் இங்கு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது. மண்டைக்காடு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வெடித்த மண்டைக்காடு கலவரம், பல்வேறு விதங்களில் பரவிய வதந்திகளின் காரணமாக தெரிகிறது. மண்டைக்காடு கலவரத்தில் ராஜாக்கமங்கலம, ஈத்தாமொழி, பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கலவரத்தை அடக்கும் விதத்தில் நடந்த இந்தத் துப்பக்கிசூட்டில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

பொதுத்துறை நிர்வாகங்கள்[தொகு]

காவல்துறை[தொகு]

குமரிமாவட்ட காவல்துறை, காவல்துறை கண்காணிப்பாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்குகிறது. இவரின் கீழ் இரண்டு கூடுதல்-காவல்துறை கண்காணிப்பாளர்கள் இயங்குகின்றனர். மாவட்டத்தின் பெரிய காவல்துறையாக நாகர்கோவில் மாநகர காவல்துறை உள்ளது.குமரிமாவட்ட காவல்துறை நிர்வாகம், நான்கு துணைப்பிரிவுகளாக இயங்குகிறது[9].

தீயணைப்புத்துறை[தொகு]

குமரிமாவட்டதில் கீழ்க்கண்ட ஏழு தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.[10]

பொருளாதாரம்[தொகு]

தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம்[தொகு]

முக்கிய பயிர்வகைகள்[தொகு]

 1. அரிசி – 400 ச.கி.மீ
 2. தென்னை – 210 ச.கி.மீ
 3. ரப்பர் – 194.78 ச.கி.மீ
 4. மரவள்ளிக்கிழங்கு – 123.50 ச.கி.மீ
 5. வாழை – 50 ச.கி.மீ
 6. பருப்பு – 30 ச.கி.மீ
 7. முந்திரி – 20 ச.கி.மீ
 8. பனை – 16.31 ச.கி.மீ
 9. மாம்பழம் – 17.70 ச.கி.மீ
 10. புளி – 13.33 ச.கி.மீ
 11. கமுகு-பாக்கு – 9.80 ச.கி.மீ
 12. பலா – 7.65 ச.கி.மீ
 13. கிராம்பு – 5.18 ச.கி.மீ

கைவினைப் பொருட்களும் குடிசைத் தொழில்களும்[தொகு]

குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரப்பர்[தொகு]

ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

பழங்கள்[தொகு]

நேந்திரம் பழம்,செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி,கற்பகவல்லி உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.

மீன் பிடிப்பு[தொகு]

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.

ஆழ்கடல் மீன்பிடித்தலில் இந்தியாவிலேயே சிறந்தவர்கள் கன்னியாகுமரி மீனவர்கள். 30 க்கும் மேற்பட்ட நாட்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து இந்தியாவின் அந்நியசெலவாணியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்!

உயிரை பணயமாக வைத்தே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது!

சுனாமி , ஓகி புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் கன்னியாகுமரி மீனவர்களோடு போரிட்டு பலரது உயிரை சூறையாடியுள்ளன!


போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

கன்னியாகுமரி நகரத்திலிருந்து தோன்றும் இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைகள் (NH) சாலைகள் உள்ளன. ஒன்று தேசிய நெடுஞ்சாலை 44, இது கன்னியாகுமரியை, ஜம்மு-காஷ்மீரின், ஸ்ரீநகருடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 44 வட இந்தியாவை, தென்னிந்தியாவுடன் இணைக்கிறது. இந்த சாலை மதுரை, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், ஜான்சி, டெல்லி மற்றும் ஜலந்தர் வழியாக செல்கிறது. இது 3745 கிலோ மீட்டர் தொலைவைக் கொண்டுள்ளது. மற்றொன்று கன்னியாகுமரியை, மகாராஷ்டிராவின், பன்வேலுடன் (மும்பையிலிருந்து 38 கி.மீ) இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66 ஆகும். தேசிய நெடுஞ்சாலை 66 தோராயமாக வடக்கு-தெற்கு நோக்கி மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இணையாக செல்கிறது. இது திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, உடுப்பி, மார்கோவா மற்றும் ரத்னகிரி வழியாக செல்கிறது. மாவட்ட தலைநகரான நாகர்கோயில், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (S.E.T.C) ஆனது, சென்னை, உதகமண்டலம், கோயம்புத்தூர், வேலூர், திருச்சிராப்பள்ளி, கொடைக்கானல், திருப்பூர், ஈரோடு, வேளாங்கண்ணி, மற்றும் திருவண்ணாமலை ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்துகளை இயக்குகிறது. இது பெங்களூரு, பாண்டிச்சேரி மற்றும் திருப்பதி ஆகிய நகரங்களுக்கும் நேரடி பேருந்துகளையும் இயக்குகிறது. மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு சில பேருந்து சேவைகள் கன்னியாகுமரி, குளச்சல், மார்த்தாண்டம், குலசேகரம், களியக்காவிளை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (T.N.S.T.C) ஆனது, சென்னை, திருப்பூர், பெரியகுளம், கொடைக்கானல், இராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தஞ்சாவூர், பழனி, சேலம், கோயம்புத்தூர், காரைக்குடி, குமுளி, போடிநாயக்கனூர், ஈரோடு மற்றும் சிவகாசி ஆகிய நகரங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது. இந்த பேருந்துகளில் பெரும்பாலானவை நாகர்கோவிலிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது, சில பேருந்துகள் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், குளச்சல், குலசேகரம் மற்றும் களியக்காவிளை ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி, மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு அடிக்கடி பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.

தொடருந்து[தொகு]

கன்னியாகுமரியில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது, அங்கு பல தொடருந்துகள் தொடங்கி பயணத்தை முடிக்கின்றன. கன்னியாகுமரியிலிருந்து தொடங்கும் விவேக் விரைவு தொடருந்து, இந்தியாவின் மிக நீண்ட தூரம் செல்லும் தொடருந்து ஆகும். இது கன்னியாகுமரியை, அசாமில் உள்ள திப்ருகாருடன் இணைக்கிறது. நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம் இம்மாவட்டத்தின் முதன்மை தொடருந்து நிலையமாகும், இது பொதுவாக கோட்டார் தொடருந்து நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. கோட்டார் மாநில போக்குவரத்து பேருந்துகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் மற்றொரு தொடருந்து நிலையமும் உள்ளது. இது நாகர்கோவில் நகரத் தொடருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது. மும்பை, சென்னை, பெங்களூரு, குருவாயூர், கோயம்புத்தூர், திருச்சி, மங்களூரு, தாம்பரம் போன்றவற்றுக்கு தினசரி தொடருந்துகளை, மாவட்ட தலைநகரான நாகர்கோவில் இருந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு நன்கு தொடருந்து இணைப்பு உள்ளது. மற்றும் புது தில்லி, கொல்கத்தா, குஜராத், ஹைதராபாத், பாண்டிச்சேரி, பிலாஸ்பூர், ராமேஸ்வரம், வடகிழக்கு இந்தியா, ஜம்மு-காஷ்மீர் போன்ற நகரங்களுக்கு வாராந்திர தொடருந்துகள் இயக்கப்படுகிறது.

வானூர்தி[தொகு]

கன்னியாகுமரியிலிருந்து 76 கி.மீ தொலைவில் உள்ள திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள சர்வதேச வானூர்தி நிலையமாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவாமித்தோப்பு அருகே ஒரு விமான நிலையத்தை நிர்மாணிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது, இந்த முயற்சி மாவட்டத்திற்கு பல சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

கல்வி[தொகு]

கல்வியறிவு விகிதத்தில் (91.75 %) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.

பள்ளிகள்[தொகு]

 1. மழலையர் பள்ளிகள் - 83
 2. தொடக்கப் பள்ளிகள் - 413
 3. நடுநிலைப் பள்ளிகள் - 147
 4. உயர் நிலைப் பள்ளிகள் - 121
 5. மேல் நிலைப் பள்ளிகள் - 120
 6. மொத்தம் 884

கல்லூரிகள்[தொகு]

 1. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் - 12
 2. சுயநிதிக் கல்லூரிகள் - 4
 3. கல்வியியல் கல்லூரிகள் -8
 4. தொழில் கல்லூரிகள் - 20
 5. கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி
 6. அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி
 7. பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி

சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்[தொகு]

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

 1. மகாராஜன் வேதமாணிக்கம்
 2. அய்யா வைகுண்டர்
 3. அதங்கோட்டாசான்
 4. மார்ஷல் நேசமணி
 5. ஏ.கே. செல்லையா
 6. என். எஸ். கிருஷ்ணன்
 7. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
 8. குமரி முத்து
 9. ப. ஜீவானந்தம்
 10. சதாவதானி செய்கு தம்பி பாவலர்
 11. பி. தாணுலிங்க நாடார்
 12. தொல்காப்பியர்
 13. தோவாளை சுந்தரம்பிள்ளை
 14. தமிழிசை சௌந்தரராஜன்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நிர்வாகம்
 2. Local Bodies of Kanyakumari District
 3. "கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2016-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. Rural Bodies of Kanyakumari District
 5. Decadal Variation In Population Since 1901
 6. 6.0 6.1 Kanniyakumari District : Census 2011 data
 7. "Population by religion community – 2011". Census of India, 2011. The Registrar General & Census Commissioner, India. 25 August 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 9. "Kanniyakumari District Extract of Rule 4(1)(b) of the Right to Information Act 2005" (PDF). 2015-07-26 அன்று பார்க்கப்பட்டது.
 10. "List of Fire Stations (Southern Region)". 2015-05-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-07-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]