உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு நாள்
அதிகாரப்பூர்வ பெயர்தமிழ்நாடு நாள்
பிற பெயர்(கள்)தமிழ்நாடு நாள்
கடைபிடிப்போர்தமிழ்நாடு, இந்தியா
வகைதமிழ்நாடு மாநிலம் உருவான நாள்
முக்கியத்துவம்மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 இன் படி இந்தியாவில் தமிழ்நாடு என்ற மாநிலம் உருவான நாள்
தொடக்கம்01 நவம்பர் 2019
நாள்01 நவம்பர்
நிகழ்வுஆண்டுதோறும்

தமிழ்நாடு நாள் (Tamilnadu Day) என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. கலவரங்களும் ஏற்பட்டன. இதனால் இந்திய ஒன்றிய அரசு வேறு வழியின்றி 1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. இதன்படி, சென்னை மாநிலத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் நிறுவப்பட்டன. சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது. சென்னை மாநிலத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு 25 அக்டோபர் 2019 அன்று வெளியிட்டது.[1][2] இந்நிலையில் 2021 இல் புதியதாக பொறுபேற்ற மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, சூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்தது.

பின்னணி

[தொகு]

மொழிவழியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களில் மாநிலம் உருவான நாளை அந்தந்த மாநிலங்கள் அரசு விழாவாகவும், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் அரசு விடுமுறை நாளாகவும் அறிவித்து கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் அப்படியான விழாவானது அரசு சார்பில் கொண்டாடப்படாமலும், மாநிலத்தின் பழைய பெயரான சென்னை மாநிலம் என்ற பெயரும் தொடர்ந்து வந்தது.

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயரிடக் கோரி தனி நபராக சங்கரலிங்கனார் எனும் முதியவர் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு இறந்தார். சென்னை மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்து முதல்வராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்றபிறகு 18 சூலை 1968-இல் சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு எனப்பெயர் மாற்ற சென்னை மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு 1969 சனவரி 14 தைப் பொங்கலன்று தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாடு அமைந்த நாளை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இதை பல தமிழ் அமைப்புகள் நவம்பர் முதல் நாளன்று விழாவாக கொண்டாடி வந்தன. குறிப்பாக நா. அருணாச்சலம் அவர்களால் உருவாக்கப்பட்ட சான்றோர் பேரவை அமைப்பால் தமிழ்நாடு மாநிலம் அமைந்த பெருவிழா என்ற பெயராலும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியால் தமிழகப் பெருவிழா என்ற பெயராலும் இந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களின்போது இந்த விழாவை தமிழ்நாடு அரசு நடத்தவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இந்த நெடுநாள் கோரிக்கையானது தமிழ்நாட்டு அரசால் ஏற்கப்பட்டு 25 அக்டோபர் 2012 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூ 10 இலட்சம் ஒதுக்கப்பட்டு 2019 நவம்பர் முதல் நாளில் அரசு விழா கொண்டாடப்பட்டது.[3] இந்த தமிழ்நாட்டு நாளுக்கு மு. க. ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.[4] இந்நிலையில் 2021 இல் புதியதாக பொறுபேற்ற மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, சூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

சர்ச்சைகள்

[தொகு]

நவம்பர் முதல் நாளை மாற்றி சூலை 18 அன்று தமிழ்நாடு நாள் என அறிவித்ததற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அறிவிப்புக்கு எதிராக பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும், நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,[5] எடப்பாடி க. பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், சீமான்,[6] ச. இராமதாசு,[7] உள்ளிட்ட அரசியல்வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தாங்கள் வழக்கம்போல நவம்பர் முதல் நாளன்று தமிழ்நாடு விழாவைக் கொண்டாடப்போவதாக பல தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் இதன் எதிர்ப்பாளர்கள் ஒரு மாநிலம் அல்லது தாயகம் உருவான நாளைதான் (நவம்பர் முதல்நாள்) கொண்டாடுவார்கள். அந்த மாநிலத்துக்கு இன்ன பெயர் சூட்டவேண்டும் என்று பரிந்துரைத்த நாளை கொண்டாடுவது குழப்பத்தை ஏற்படுத்தும்.[8] முதலமைச்சரின் பரிந்துரைப்படி பார்த்தாலும் சனவரி 14 அன்றுதான் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றமும் நடைமுறைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு". Archived from the original on 2019-10-26. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
  2. நவ்.1 தமிழ்நாடு தினம்;அரசாணை வெளியீடு
  3. தமிழ்நாடு நம்நாடு! தன்னுரிமை பெற்ற தமிழ்நாடு அமைந்திட உயர்த்திப் பிடிப்போம் தமிழ்நாட்டுக் கொடியை!, ஆசிரியவுரை, வே. ஆனைமுத்து, சிந்தனையாளன் (இதழ்), 2020 நவம்பர், பக்கம். 3-6
  4. "'நவ.1- தமிழ்நாடு நாள்': தமிழகத்தை மேலும் உயர்த்த உறுதியேற்போம்: முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
  5. "திருச்சி: தலைமை ஆசிரியர் தலைமையில் 108 தேங்காய்களை உடைத்து வகுப்பறைக்கு சென்ற மாணவர்கள்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
  6. Maran, Mathivanan (2021-10-31). "ஜூலை 18-ல் தமிழ்நாடு நாள்- திமுக அரசின் அறிவிப்பு தான்தோன்றித்தனமானது: சீமான் கண்டனம்". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
  7. "பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல; நவ.1தான் தமிழ்நாடு நாள்: ராமதாஸ்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
  8. "தமிழ்நாடு நாள்: நவம்பர் முதல் நாளா? ஜூலை 18ம் தேதியா- சர்ச்சையின் பின்னணி என்ன?". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
  9. "முதல்வர் வாதப்படி பார்த்தால் ஜனவரி 14ம் தேதிதான் தமிழ்நாடு நாள்: ஓ.பன்னீர்செல்வம்". News18 Tamil (in tm). 2021-10-31. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_நாள்&oldid=3882791" இலிருந்து மீள்விக்கப்பட்டது