இசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இசுலாம் (இஸ்லாம் இந்த ஒலிக்கோப்பு பற்றி الإسلام, அரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஒரிறைக் கொள்கையை கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்டதாக கூறப்படும் செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிர்க்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இசுலாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக் கடமைகளாகும்.

ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இந்த மார்க்கத்தை மெக்கா நகரில் பரப்பத்தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.

உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள்[1]. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இசுலாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும்[2].

சொல்-வேர்[தொகு]

இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிப்படுவது என்பதாகும்.

நம்பிக்கைகள்[தொகு]

குரான்-இசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டத்தின் அடிப்படை

இசுலாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விடயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளது[3]. இது ஈமான் என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது.

கடவுள்[தொகு]

கடவுள் ஒருவனே. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இசுலாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்க்கைச் சொல்.இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும். [4].

வானவர்கள்[தொகு]

வானவர்கள் எனப்படுபவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட, இறைவனின் சேவகர்கள் என நம்பிக்கை வைத்தல் ஒரு இசுலாமிய கடமையாகும். இவர்களை இறைவன் ஒளியினால் படைத்ததாக நபிமொழி கூருகின்றது[5]. இறைவனை தொழுதவன்னம் இருப்பது, இறைதூதர்களுக்கு இறைவனின் செய்தியை கொண்டு செல்வது, ஒவ்வொரு மனிதனின் பாவ புன்னிய கணக்கை குறித்துக்கொள்வது, அவர்களின் உயிரை எடுப்பது ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. ஜிப்ராயீல் வானவ கூட்டத்தின் தலைவராக குறிப்பிடப்படுகின்றார்[6].

வேதங்கள்[தொகு]

முகம்மது நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் வேதங்கள் கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இசுலாமிய கடமையாகும். தவ்ராத், சபூர், இஞ்சில் ஆகியவை முறையே மூசா, தாவூத், ஈசா ஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது[7][8][9][10]. மேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டதாகவும்[11], அதனாலேயே இறுதியானதாகவும், திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு குரான் வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறைதூதர்கள்[தொகு]

இறைதூதர்கள் எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதர்கள் என்பது இசுலாமிய நம்பிக்கையாகும். உலகின் முதல் மனிதன் ஆதாம் முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேரு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றது[12]. உலக மக்கள் இறைவனை மறந்து, அநீதியின் பக்கம் செல்லும்போது அவர்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் இறைவனின் செய்தியை அவர்களுக்கு அறிவித்தல் ஆகியவை இவர்களில் கடமையாக சொல்லப்படுகின்றது. முகம்மது நபி இவர்களில் இறுதியானவராக குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றார்[13].

இறுதித் தீர்ப்பு நாள்[தொகு]

ஒருநாள் இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு, முதல் மனிதன் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை மீள்வுயிர்விக்கப்படுவர். அன்று அவர்கள் செய்த பாவ மற்றும் புன்னியங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவது ஒரு கடமையாகும். கியாமத் எனப்படும் இந்த நாளில் அவர் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சொர்க்கமோ, நரகமோ தரப்படும் என குரான் குறிப்பிடுகின்றது.

விதி[தொகு]

விதி எனப்படுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என நம்புவது இசுலாமின் ஒரு கடமை. விதியை பற்றி சிந்திப்பதையோ அல்லது அதைப் பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் தடுக்கின்றது[14].

கடமைகள்[தொகு]

இறை வணக்கம் செய்யும் கெய்ரோவாசிகள். ழான் லியோன் யேர்மி 1865ல் வரைந்தது.

இசுலாம் தன்னைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கடமைகளாக ஐந்தை குறிப்பிடுகின்றது. இவை இசுலாத்தின் ஐந்து தூண்கள் என அழைக்கப்படுகின்றன.

உறுதிமொழி[தொகு]

இறைவன் (அல்லாஹ்) ஒருவனே. அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது அவனது தூதர்.” என்பதில் முழுநம்பிக்கை கொண்டு, வாயால் உறுதிமொழி கொடுப்பது முதல் கட்டாய கடமை. இது கலிமா சகாதா என அழைக்கப் படுகின்றது. ஒரு மாற்று மதத்தவர், இசுலாமிற்கு மாற இதனை உச்சரித்தால் போதுமானதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.

இறை வணக்கம்[தொகு]

பருவவயதடைந்த, புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு இசுலாமியரும் தினமும் ஐந்து முறை இறை வணக்கம் செய்ய வேண்டியது இரண்டாவது கட்டாய கடமையாகும். பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை வணக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. மெக்காவில் உள்ள புனித காபாவை நோக்கி வணங்கப்படும் இந்த முறையில் அரபு மொழியில் உள்ள குரானின் வசனங்கள் ஓதப்படுகின்றன.

நோன்பு[தொகு]

ஒவ்வொரு வருடமும் இசுலாமிய நாட்காட்டியின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உனவு மற்றும் நீர் ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள் , பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்குநேர பெண்கள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

பொருள் தானம்[தொகு]

ஸக்காத் எனப்படும் கட்டாய பொருள் தானம் இசுலாமின் நான்காவது கட்டாய கடமையாகும். இதன்படி, ஒவ்வொரு இசுலாமியரும் ஆண்டுக்கு ஒருமுறை தனக்குச் சொந்தமான தங்க, வெள்ளி நகைகள் மற்றும் வியாபார பொருள்கள் ஆகிய செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை (100க்கு 2.5%) ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். மொத்த சொத்து 87.5 கிராம் தங்கத்திற்கும் அல்லது 612.5 கிராம் வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் ஒருவனுக்கு இந்த கட்டாய தானம் கடமை ஆகாது.

புனித பயணம்[தொகு]

புனித பயண நேரத்தில் காபா

வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு இசுலாமியரும், தனது வாழ்நாளில் ஒருமுறை சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள காபாவை தரிசிப்பது இசுலாமின் ஐந்தாவது கடமையாகும். இந்த பயணம் இசுலாமிய நாட்காட்டியின் துல்கச் மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. மற்ற நான்கு கட்டாய கடமைகளில் இருந்து இதற்கு சற்று தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் மற்றும் நோய்வாயப்பட்ட மக்களுக்கு இந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இசுலாமியப் பிரிவுகள்[தொகு]

இசுலாமியர்கள் பொதுவாக சுன்னி மற்றும் சியா என்ற இரண்டு பெரும் பிரிவினராக உள்ளார்கள். இதை தவிர சூபிசம் போன்ற சில பிரிவுகளும் உள்ளன.

சுன்னி இசுலாம்[தொகு]

சுன்னி, சியா பரவல்

சன்னி இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் மிகப்பெரியது ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 75 முதல் 90 சதவிகிதத்தை கொண்டுள்ளது. சுன்னி என்ற சொல் சுன்னத் என்பதன் சுருக்கம் ஆகும். இதற்கு 'முகம்மதை பின்பற்றுதல்' என்பது பொருளாகும். இராக், ஈரான், மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சுன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இதன் சட்ட பிரிவுகள் மொத்தம் நான்கு உள்ளன. இவை மத்கபு என அழைக்கப்படுகின்றன. (ஹ)கனபி, சாபி, மாலிக்கி மற்றும் ஹன்பலி ஆகிய நான்கில் ஏதேனும் ஒன்றை பின்பற்ற சுன்னி முசுலிம்களுக்கு உரிமை உண்டு. இவற்றோடு சேர்த்து சலபி மற்றும் வஃகாபிசம் ஆகியவையும் அதிக பரப்பில் பின்பற்றப் படுகின்றன.

சியா இசுலாம்[தொகு]

சியா இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் இரண்டாவது மிகப்பெரிய பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 10 முதல் 20 சதவிகிதத்தை கொண்டுள்ளது. இராக், ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பிரிவு, மற்ற இசுலாமிய நாடுகளிலும் கணிசமான அளவில் உள்ளது. சியா இசுலாம் தன்னகத்தே அனேக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 'பன்னிருவர் பிரிவு' முதன்மையாக உள்ளது. இதை தவிர இசுமாலி, செய்யதி போன்ற பிரிவுகளும் கணிசமான அளவில் உள்ளன. பன்னிருவர் பிரிவின் அனேக நடைமுறைகள் சுன்னி இசுலாம் முறையுடன் ஒத்துப்போகின்றன.

சூபிசம்[தொகு]

சூபிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். அன்றைய இசுலாமிய ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறைக்கு எதிரான இயக்கமாக இது தொடங்கப்பட்டது. உலக வாழ்வை துறத்தல், தவம், இசை ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்பது இவர்களின் வாதம். இவ்வாறான முயற்சிகளால் இறைவனை அடைந்தவர்கள் சூபிகள் என அழைக்கப் பட்டனர். தனியே தங்களுக்கான சட்ட முறைகளை கொண்டிராத இவர்கள், சுன்னி மற்றும் சியா இசுலாமிய முறைகளையே பின்பற்றுகின்றனர். தர்கா வழிபாடு என்பது இவர்களின் பிரதான வழிபாட்டு முறையாகும்.

பிற பிரிவுகள்[தொகு]

  • இபாதி - இசுலாத்தின் ஆரம்பகாலங்களில் தோன்றிய காரிசியாக்கள் எனப்படும் அடிப்படைவாத குழுவின் ஒரு பிரிவே இபாதி ஆகும். இவர்கள் இன்றளவும் ஓமன் நாட்டில் பெரும்பான்மையினராக உள்ளனர்.
  • குரானிசம் - நபிமொழி நூல்களின் வழிமுறைகளை தவிர்த்து, குரானின் கோட்பாடுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ்பவர்கள் இவர்கள்.
  • யசானிசம் - 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக் அதி இப்னு முசாபிர் என்பவரால் முன்னெடுக்கபட்ட வழிமுறை இது. குர்தியர்களின் தொன்ம நம்பிக்கைகள் மற்றும் சூபிசத்தின் கூருகள் ஆகியவற்றின் கலவையாக இது உள்ளது.
  • இசுலாம் தேசம் - இது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். அமெரிக்காவின் நிறவெரி மற்றும் கிறித்தவத்துக்கு எதிராக இது 20ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.

இசுலாமிய பரவல்[தொகு]

முசுலிம் மக்கள் பரவல் சதவிகிதம் (Pew Research Center, 2009).

2010ல் 232 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு, மொத்தம் 1.57 பில்லியன் மக்கள் இசுலாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூருகின்றது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 23% ஆகும். இதில் 75 முதல் 90 சதவீதம் வரை சுன்னி முசுலிம்களும்[1], 10 முதல் 20 சதம் வரை சியா முசுலிம்களும் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூருகின்றது[1]. ஏரேக்குறைய 50 நாடுகளில் இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது.

கண்டங்கள் விரிசையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகமான அளவில் இசுலாம் பரவி உள்ளது. மொத்த இசுலாமிய மக்கள்தொகையில் 68%தை ஆசிய கண்டம் கொண்டுள்ளது. 638 மில்லியனுக்கும் அதிகமான இசுலாமியர்கள் இந்தோனேசியா, பாகிசுத்தான், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். ஆப்பிரிக்காவை பொருத்த அளவில் எகிப்து மற்றும் நைசீரியா ஆகியவை அதிக இசுலாமிய மக்கள்தொகையை கொண்டுள்ளன.

ஐரோப்பாவை பொருத்த அளவில் அநேக நாடுகளில், கிறித்தவத்துக்கு அடுத்த நிலையில் இசுலாம் உள்ளது. துருக்கி, அதிகக் கூடிய இசுலாமிய மக்கள் தொகையை கொண்ட ஐரோப்பிய நாடாகும். அமெரிக்காவில் இசுலாமியர்களின் மக்கள் தொகை 7 மில்லியன் ஆகும்.

வரிசை எண் கொடி நாடு இசுலாமிய மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில்
இசுலாமியர்களினன் பரவல் (%)[15]
1 Flag of Indonesia.svg இந்தோனேசியா 204847000 88.1%
2 Flag of Pakistan.svg பாகிசுத்தான் 178097000 96.4%
3 Flag of India.svg இந்தியா 177286000 14.6%
4 Flag of Bangladesh.svg வங்காள தேசம் 148607000 90.4%
5 Flag of Egypt.svg எகிப்து 80024000 94.7%
6 Flag of Nigeria.svg நைசீரியா 75728000 47.9%
7 Flag of Iran.svg ஈரான் 74819000 99.7%
8 Flag of Turkey.svg துருக்கி 74660000 98.6%
9 Flag of Algeria.svg அல்சீரியா 34780000 98.2%
10 Flag of Morocco.svg மொராக்கோ 32381000 99.9%
இறை வணக்கத்தில் ஈடுபடும் முசுலிம்கள். இடம்: டெல்லி ஃசும்மா பள்ளிவாசல்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாம்&oldid=1640385" இருந்து மீள்விக்கப்பட்டது