உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரான்

ஆள்கூறுகள்: 32°N 53°E / 32°N 53°E / 32; 53
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரான் இசுலாமியக் குடியரசு
جمهوری اسلامی ایران (பாரசீக மொழி)
சொம்குரி-யே இசுலாமி-யே ஈரான்
கொடி of ஈரான்
கொடி
சின்னம் of ஈரான்
சின்னம்
குறிக்கோள்: اَللَّٰهُ أَكْبَرُ
அல்லாகு அக்பர் (தக்பிர்)
"[எல்லாவற்றையும் விட] இறைவன் மிகப் பெரியவன்"
(சட்டப்படி)
استقلال، آزادی، جمهوری اسلامی
எசுதெக்லல், ஆசாதி, சொம்குரி-யே இசுலாமி
"விடுதலை, சுதந்திரம், இசுலாமியக் குடியரசு"
(நடைமுறைப்படி)[1]
நாட்டுப்பண்: سرود ملی جمهوری اسلامی ایران
சொருத்-இ மெல்லி-யே சொம்குரி-யே இசுலாமி-யே ஈரான்
"ஈரான் இசுலாமியக் குடியரசின் தேசிய கீதம்"
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
தெகுரான்
35°41′N 51°25′E / 35.683°N 51.417°E / 35.683; 51.417
ஆட்சி மொழி(கள்)பாரசீகம்
மக்கள்ஈரானியர்
அரசாங்கம்ஒற்றையதிகார அதிபர்சார்பு, சமயச் சார்புடைய இசுலாமியக் குடியரசு
• அதியுயர் தலைவர்
அலி கொமெய்னி
• அதிபர்
மசூத் பெசசுகியான்
• துணை அதிபர்
மொகம்மது ரெசா ஆரிப்
சட்டமன்றம்இசுலாமியக் கலந்தாய்வு அவை
உருவாக்கம்
• மீடியா இராச்சியம்
அண். பொ. ஊ. மு. 678
பொ. ஊ. மு. 550
• சபாவித்து ஈரான்
1501
1736
• அரசியலமைப்புப் புரட்சி
12 திசம்பர் 1905
• பகலவி ஈரான்
15 திசம்பர் 1925
11 பெப்பிரவரி 1979
• தற்போதைய அரசியலமைப்பு
3 திசம்பர் 1979
பரப்பு
• மொத்தம்
1,648,195 km2 (636,372 sq mi) (17ஆவது)
• நீர் (%)
1.63 (2015ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி)[2]
மக்கள் தொகை
• 2024 மதிப்பிடு
Neutral increase 8,98,19,750[3] (17ஆவது)
• அடர்த்தி
55/km2 (142.4/sq mi) (132ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2024 மதிப்பீடு
• மொத்தம்
Increase $1.855 டிரில்லியன்[4] (19ஆவது)
• தலைவிகிதம்
Increase $21,220[4] (78ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2024 மதிப்பீடு
• மொத்தம்
Increase $464.181 பில்லியன்[4] (34ஆவது)
• தலைவிகிதம்
Increase $5,310[4] (113ஆவது)
ஜினி (2022)positive decrease 34.8[5]
மத்திமம்
மமேசு (2022)Increase 0.780[6]
உயர் · 78ஆவது
நாணயம்ஈரானிய ரியால் (ريال) (IRR)
நேர வலயம்ஒ.அ.நே+3:30 (ஈரானிய சீர் நேரம்)
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIR
இணையக் குறி

ஈரான்,[a][b] என்பது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப் பூர்வமாக ஈரான் இசுலாமியக் குடியரசு என்று அறியப்படுகிறது.[c] இது பாரசீகம் என்றும் அறியப்படுகிறது.[d] இதன் வடமேற்கே துருக்கியும், மேற்கே ஈராக்கும், அசர்பைஜான், ஆர்மீனியா, காசுப்பியன் கடல், மற்றும் துருக்மெனிஸ்தான் ஆகியவை வடக்கேயும், கிழக்கே ஆப்கானித்தானும், தென் கிழக்கே பாக்கித்தானும், தெற்கே ஓமான் குடா மற்றும் பாரசீக வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையான கிட்டத்தட்ட 9 கோடி மக்களில் பெரும்பாலானோர் பாரசீக இனத்தவர்களாக உள்ளனர். இந்நாட்டின் மொத்த பரப்பளவு 1,648,195 km2 (636,372 sq mi) ஆகும். மொத்த பரப்பளவு மற்றும் மக்கள் தொகையில் உலக அளவில் ஈரான் 17ஆவது இடத்தைப் பெறுகிறது. முழுவதும் ஆசியாவில் இருக்கும் நாடுகளில் இது ஆறாவது பெரிய நாடாக உள்ளது. உலகில் மிகுந்த மலைப் பாங்கான நாடுகளில் இதுவும் ஒன்றாகும். அதிகாரப் பூர்வமாக ஓர் இசுலாமியக் குடியரசான இது முசுலிம்களை பெரும்பான்மையான மக்கள் தொகையாகக் கொண்டுள்ளது. இந்நாடு ஐந்து பகுதிகளாகவும், 31 மாகாணங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தெகுரான் இந்நாட்டின் தேசியத் தலை நகரம், பெரிய நகரம் மற்றும் வணிக மையமாக அமைந்துள்ளது.

ஒரு நாகரிகத் தொட்டிலாக ஈரான் தொடக்க காலக் கற்காலத்தின் பிந்தைய பகுதியில் இருந்து மக்களால் குடியமரப்பட்டுள்ளது. ஈரானின் பெரும்பாலான பகுதிகள் முதன் முதலாக ஓர் அரசியல் அமைப்பாக சியாக்சரசின் கீழ் மீடியாப் பேரரசாக பொ. ஊ. மு. ஏழாம் நூற்றாண்டில் ஒன்றிணைக்கப்பட்டது. பொ. ஊ. மு. ஆறாம் நூற்றாண்டில் இது அதன் அதிக பட்ச பரப்பளவை அடைந்தது. அப்போது சைரசு அகாமனிசியப் பேரரசை அமைத்தார். பண்டைய வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரரசுகளில் இதுவும் ஒன்றாகும். பொ. ஊ. மு. நான்காம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாந்தர் இப்பேரரசை வென்றார். பொ. ஊ. மு. மூன்றாம் நூற்றாண்டில் ஈரானியக் கிளர்ச்சியானது பார்த்தியப் பேரரசை நிறுவியது. நாட்டை விடுதலை செய்தது. இதற்குப் பிறகு பொ. ஊ. மூன்றாம் நூற்றாண்டில் சாசானியப் பேரரசு ஆட்சிக்கு வந்தது. எழுத்து முறை, விவசாயம், நகரமயமாக்கல், சமயம் மற்றும் மைய அரசாங்கம் ஆகியவற்றில் தொடக்க கால முன்னேற்றங்கள் சிலவற்றை பண்டைய ஈரான் கண்டுள்ளது. பொ. ஊ. ஏழாம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இப்பகுதியை வென்றனர். ஈரான் இசுலாமிய மயமாக்கப்படுவதற்கு இது வழி வகுத்தது. இசுலாமியப் பொற்காலத்தின் போது ஈரானிய நாகரிகத்தின் முக்கியக் காரணிகளாக செழித்து வளர்ந்த இலக்கியம், தத்துவம், கணிதம், மருத்துவம், வானியல் மற்றும் கலை ஆகியவை நிகழ்ந்தன. ஒரு தொடர்ச்சியான ஈரானிய முசுலிம் அரச மரபுகள் அரேபிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தன. பாரசீக மொழிக்குப் புத்துயிர் கொடுத்தன. 11ஆம் நூற்றாண்டிலிருந்து 14ஆம் நூற்றாண்டு வரையிலான செல்யூக் மற்றும் மங்கோலியப் படையெடுப்புகள் வரை நாட்டை ஆண்டன.

16ஆம் நூற்றாண்டில் ஈரானைப் பூர்வீகமாக உடைய சபாவியர் ஓர் ஒன்றிணைந்த ஈரானிய அரசை மீண்டும் நிறுவினர். தங்களது அதிகாரப்பூர்வ சமயமாக பன்னிருவர், சியா இசுலாமைக் கொண்டு வந்தனர். 18ஆம் நூற்றாண்டில் அப்சரியப் பேரரசின் ஆட்சியின் போது ஈரான் உலகிலேயே ஒரு முன்னணி சக்தியாகத் திகழ்ந்தது. எனினும், 19ஆம் நூற்றாண்டு வாக்கில் உருசியப் பேரரசுடனான சண்டைகளின் வழியாக இது குறிப்பிடத்தக்க அளவிலான நிலப்பரப்புகளை இழந்தது. தொடக்க 20ஆம் நூற்றாண்டானது பாரசீக அரசியலமைப்புப் புரட்சியைக் கண்டது. பகலவி அரசமரபு நிறுவப்பட்டது. எண்ணெய்த் தொழில் துறையை தேசியமயமாக்கும் மொகம்மது மொசத்தேக்கின் முயற்சியானது 1953ஆம் ஆண்டு ஆங்கிலேய-அமெரிக்க ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழி வகுத்தது. ஈரானியப் புரட்சிக்குப் பிறகு 1979ஆம் ஆண்டு முடியரசானது பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டது. ரூகொல்லா கொமெய்னியால் ஈரான் இசுலாமியக் குடியரசு நிறுவப்பட்டது. அவர் நாட்டின் முதல் அதியுயர் தலைவர் ஆனார். 1980இல் ஈராக் ஈரான் மீது படையெடுத்தது. இது எட்டு ஆண்டுகள் நீடித்த ஈரான் - ஈராக் போரைத் தொடங்கி வைத்தது. இப்போர் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி நடு நிலையில் முடிவடைந்தது.

ஈரான் அதிகாரப்பூர்வமாக ஓர் ஒரு முக இசுலாமியக் குடியரசாக தலைவர் ஆளும் அரசு முறைமையைக் கொண்டு நிர்வகிக்கப்படுகிறது. இறுதி அதிகாரமானது அதியுயர் தலைவரிடமே உள்ளது. தாங்களாக முடிவெடுக்கும் உரிமையைப் பிறருக்கு அளிக்காத அரசாங்க முறையாக இது உள்ளது. மனித உரிமைகள் மற்றும் குடிசார் சுதந்திரங்களை குறிப்பிடத்தக்க அளவுக்கு மீறியதற்காக இந்த அரசாங்கமானது பரவலான விமர்சனங்களை ஈர்த்துள்ளது. ஈரான் ஒரு முதன்மையான பிராந்திய சக்தியாகும். இதற்கு இது பெருமளவிலான புதை படிவ எரிமங்களைக் கையிருப்பாகக் கொண்டுள்ளதே காரணம் ஆகும். இதில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளம், உலகின் மூன்றாவது மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய்க் வளங்கள், புவிசார் அரசியல் ரீதியாக இதன் முக்கியமான அமைவிடம், இராணுவச் செயலாற்றல், பண்பாட்டு மேலாதிக்கம், பிராந்தியச் செல்வாக்கு மற்றும் உலகளாவிய சியா இசுலாமின் கவனக் குவியமாக இதன் பங்கு உள்ளிட்டவை அடங்கும். ஈரானியப் பொருளாதாரமானது உலகின் 19ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாகக் கொள்வனவு ஆற்றல் சமநிலையின் அடிப்படையில் உள்ளது. ஐக்கிய நாடுகள் அவை, இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஓப்பெக், பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு, கூட்டுசேரா இயக்கம், சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் ஆகியவற்றில் செயல்பாட்டில் உள்ள மற்றும் உறுப்பினராக ஈரான் உள்ளது ஈரான் 28 அஸ் கோ உலக பாரம்பரிய களங்களுக்கு தாய்வான் உள்ளது இது உலகிலேயே பத்தாவது அதிக எண்ணிக்கையாகும் கருத்து கேட்டதா கலாச்சார பாரம்பரியம் அல்லது மனித பொக்கிஷங்கள் என்பதன் அடிப்படையில் ஐந்தாவது தரநிலையை இது பெறுகிறது.

பெயர்க் காரணம்

[தொகு]
Inscription of Ardeshir Babakan (ruling 224–242) in Naqsh-e Rostam
நக்ஸ்-இ ரோஸ்டமில் முதலாம் அர்தசிரின் (பொ. ஊ. 224–242) கல்லால் செய்யப்பட்ட புடைப்புச் சிற்பம். இதன் பொறிப்புகள் "மசுதாவை வணங்குபவரின் உருவம் இது, பிரபு அர்தசிர், ஈரானின் மன்னன்."

ஈரான் (பொருள்: "ஆரியர்களின் நிலம்") என்ற சொல் நடுக் கால பாரசீக மொழிச் சொல்லான எரான் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல் முதன் முதலில் ஒரு 3ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் நக்ஸ்-இ ரோஸ்டம் என்ற இடத்தில் குறிப்பிடப்பட்டது. இதனுடன் கூடிய பார்த்தியக் கல்வெட்டானது ஆரியன் என்ற சொல்லைப் பயன்படுத்தியது. இது ஈரானியர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[8] எரான் மற்றும் ஆரியன் ஆகியவை பூர்வீக மக்களைக் குறிக்கப் பயன்படுத்தும் பெயர்ச் சொற்களின் மறைமுகமாகக் குறிப்பிடப்படும் பன்மை வடிவங்கள் ஆகும். இவை எர்- (நடுக் கால பாரசீகம்) மற்றும் ஆர்ய்- (பார்த்தியம்) ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது. இச்சொற்களும் ஆதி ஈரானிய மொழி சொல்லான *ஆர்யா- (பொருள்: 'ஆரியன்', அதாவது ஈரானியர்கள் சார்ந்த) என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.[8][9] ஆதி இந்தோ ஐரோப்பிய மொழிச் சொல்லான *ஆர்-யோ என்பதிலிருந்து பெறப்பட்ட சொல்லாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் '(திறமையாக) அனைவரையும் கூட்டுபவன்' என்பதாகும்.[10] ஈரானியக் கதைகளின் படி இப்பெயர் ஈராஜ் என்ற ஒரு புராண மன்னனின் பெயரில் இருந்து பெறப்படுகிறது.[11]

ஈரான் மேற்குலகத்தால் பெர்சியா என்று குறிப்பிடப்பட்டது. கிரேக்க வரலாற்றாளர்கள் அனைத்து ஈரானையும் பெர்சிசு என்று அழைத்ததே இதற்குக் காரணம் ஆகும். பெர்சிசு என்ற சொல்லின் பொருள் 'பெர்சியர்களின் நிலம்' என்பதாகும்.[12][13][14][15] பெர்சியா என்பது தென்மேற்கு ஈரானில் உள்ள பாருசு மாகாணம் ஆகும். இது நாட்டின் நான்காவது மிகப் பெரிய மாகாணமாக உள்ளது. இது பார்சு என்றும் அறியப்படுகிறது.[16][17] பெர்சிய ஃபார்சு (فارس) என்ற சொல்லானது முந்தைய வடிவமான பார்சு (پارس) என்பதில் இருந்து பெறப்பட்டது. அதுவும் பண்டைய பாரசீக மொழிச் சொல்லான பார்சா (பண்டைய பாரசீகம்: 𐎱𐎠𐎼𐎿) என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. ஃபார்சு மாகாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக[18][19] பெர்சியா என்ற பெயரானது இந்தப் பகுதியில் இருந்து கிரேக்க மொழி வழியாக பொ. ஊ. மு. 550ஆம் ஆண்டு வாக்கில் உருவாகியது.[20] மேற்குலகத்தினர் ஒட்டு மொத்த நாட்டையும் பெர்சியா[21][22] என்றே 1935ஆம் ஆண்டு வரை அழைத்து வந்தனர். அந்நேரத்தில் ரேசா ஷா பகலவி சர்வதேச சமூகத்திடம் நாட்டின் பூர்வீக மற்றும் உண்மையான பெயரான ஈரானைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்;[23] ஈரானியர்கள் தங்களது நாட்டை ஈரான் என்று குறைந்தது பொ. ஊ. மு. 1,000ஆவது ஆண்டில் இருந்தாவது அழைத்து வருகின்றனர்.[16] தற்போது ஈரான் மற்றும் பெர்சியா ஆகிய இரு பெயர்களுமே கலாச்சார ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், ஈரான் என்ற பெயரானது அரசின் அதிகாரப்பூர்வப் பயன்பாட்டில் கட்டாயமாக்கப்பட்டு தொடர்கிறது.[24][25][26][27][28]

ஈரானின் பெர்சிய உச்சரிப்பு fa ஆகும். ஈரானின் பொதுநலவாய ஆங்கில உச்சரிப்புகள் ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியில் /ɪˈrɑːn/ மற்றும் /ɪˈræn/ என்று பட்டியலிடப்பட்டுள்ளன.[29] அதே நேரத்தில், அமெரிக்க ஆங்கில அகராதிகள் /ɪˈrɑːn, -ˈræn, ˈræn/[30] அல்லது /ɪˈræn, ɪˈrɑːn, ˈræn/ என்று குறிப்பிடுகின்றன. கேம்பிரிச்சு அகராதியானது பிரித்தானிய உச்சரிப்பாக /ɪˈrɑːn/ என்ற சொல்லையும், அமெரிக்க உச்சரிப்பாக /ɪˈræn/ என்ற சொல்லையும் பட்டியலிடுகிறது. வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் உச்சரிப்பானது /ɪˈrɑːn/ என்று குறிப்பிடுகிறது.[31]

வரலாறு

[தொகு]

வரலாற்றுக்கு முந்தைய காலம்

[தொகு]
பொ. ஊ. மு. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோகா சன்பில் என்பது ஓர் உலகப் பாரம்பரியக் களமாகும். இவன் சிகுரத் (படிகளையுடைய செவ்வக வடிவக் கோபுரம்) எனப்படும் ஒரு கட்டட வடிவம் ஆகும். நன்றாக எஞ்சியுள்ள படிகளையுடைய பிரமிடு போன்ற நினைவுச் சின்னம் இதுவாகும்.

தொல்லியல் பொருட்கள் ஈரானில் மனிதர்களின் நடமாட்டமானது தொடக்க காலக் கற்காலத்தின் பிந்தைய பகுதியில் இருந்தது என்பதை உறுதி செய்கிறது.[32] சக்ரோசு பகுதியில் நியாண்டர்தால் மனிதன் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொ. ஊ. மு. 10 முதல் 7வது ஆயிரமாண்டு வரை சக்ரோசு பகுதியைச் சுற்றி விவசாயச் சமூகங்களானவை செழித்திருந்தன.[33][34][35] இதில் சோகா கோலன்,[36][37] சோகா போனுத்[38][39] மற்றும் சோகா மிஷ்[40][41] ஆகியவையும் அடங்கும். குழுவான மக்கள் குக்கிராமங்களை ஆக்கிரமித்திருந்த நிகழ்வானது சூசா பகுதியில் பொ. ஊ. மு. 4395 முதல் 3490 வரை காணப்பட்டது.[42] இந்நாடு முழுவதும் பல வரலாற்றுக்கு முந்தைய களங்கள் உள்ளன. சக்ரி சுக்தே மற்றும் தொப்பே அசன்லு போன்றவையும் இதில் அடங்கும். இவை அனைத்தும் பண்டைய பண்பாடுகள் மற்றும் நாகரிகங்கள் இங்கு இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.[43][44][45] பொ. ஊ. மு. 34 முதல் 20ஆம் நூற்றாண்டு வரை வடமேற்கு ஈரானானது குரா-ஆராக்சசு பண்பாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இப்பண்பாடானது அண்டைப் பகுதியான காக்கேசியா மற்றும் அனத்தோலியாவுக்குள்ளும் விரிவடைந்திருந்தது.

வெண்கலக் காலம் முதல் இப்பகுதியானது ஈரானிய நாகரிகத்தின் தாயகமாக உள்ளது.[46][47] இதில் ஈலாம், சிரோப்து மற்றும் சயந்தேருது போன்ற நாகரிகங்கள் அடங்கும். இதில் மிக முக்கியமானதான ஈலாம் ஈரானியப் பீடபூமியானது ஓர் அரசாக மீடியாப் பேரரசால் பொ. ஊ. மு. 7ஆம் நூற்றாண்டில் ஒன்றிணைக்கப்படும் வரை தொடர்ந்து இருந்தது. சுமேரியாவில் எழுத்து முறை கண்டறியப்பட்டது மற்றும் ஈலாமில் எழுத்து முறை கண்டறியப்பட்டது ஆகியவை ஒரே காலத்தில் நடைபெற்றன. ஈலாமின் சித்திர எழுத்துக்கள் பொ. ஊ. மு. 3ஆம் ஆயிரமாண்டில் உருவாகத் தொடங்கின.[48] செப்புக் காலத்தின் போது அண்மைக் கிழக்கின் தொடக்க கால நகரமயமாக்கலின் ஒரு பகுதியாக ஈலாம் இருந்தது. வெண்கலக் காலத்தைச் சேர்ந்த பல்வேறு வகைப்பட்ட பொருட்கள், இரும்புக் காலத்தைச் சேர்ந்த பெரும் கட்டடங்கள் ஆகியவை பிரான்சாகர் மற்றும் பிற பகுதிகளில் கடந்த 8,000 ஆண்டுகளாக மனித நாகரிகத்திற்கு ஏற்ற சூழ்நிலைகள் இருந்தன என்பதைக் காட்டுகின்றன.[49][50]

பண்டைய ஈரானும், ஒன்றிணைக்கப்படுதலும்

[தொகு]
Inscription of Ardeshir Babakan (ruling 224–242) in Naqsh-e Rostam
தெயோசிசுவால் பொ. ஊ. மு. 678இல் ஈரானின் முதல் தலைநகரமாக எகபடனா (அமாதான்) தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் மீடியா இராச்சியத்தை நிறுவியவர் ஆவார்.

பொ. ஊ. மு. 2வது ஆயிரமாண்டின் போது பண்டைய ஈரானிய மக்கள் யுரேசியப் புல்வெளியில் இருந்து வருகை புரிந்தனர்.[51][52][53] பெரிய ஈரானுக்குள் ஈரானியர்கள் சிதறிப் பரவிய போது இந்நாடானது மீடியா, பாரசீக மற்றும் பார்த்தியப் பழங்குடியினங்களால் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது.[54] பொ. ஊ. மு. 10 முதல் 7ஆம் நூற்றாண்டு வரை ஈரானிய மக்கள் ஈரானுக்கு முந்தைய இராச்சியங்களுடன் இணைந்து மெசொப்பொத்தேமியாவை அடிப்படையாகக் கொண்ட அசிரியப் பேரரசின் கீழ் வந்தனர்.[55] மீடியர்கள் மற்றும் பாரசீகர்கள் பாபிலோனியாவின் ஆட்சியாளரான நெபுலேசருடன் ஒரு கூட்டணிக்குள் நுழைந்து அசிரியர்களைத் தாக்கினர். அசிரியப் பேரரசானது உள்நாட்டுப் போரால் பொ. ஊ. மு. 616 மற்றும் 605க்கு இடையில் பாழானது. மூன்று நூற்றாண்டு கால அசிரிய ஆட்சியிலிருந்து மக்களை விடுவித்தது.[56] சக்ரோசு பகுதியில் அசிரியர்கள் தலையிட்ட நிகழ்வானது பொ. ஊ. மு. 728இல் தெயோசிசுவால் மீடியப் பழங்குடியினங்கள் ஒன்றிணைக்கப்படுவதற்குக் காரணமானது. இது மீடியா இராச்சியத்தின் அடித்தளம் ஆகும். இவர்களது தலைநகராக எகபடனா இருந்தது. ஈரானை ஓர் அரசு மற்றும் நாடாக முதல் முறையாக பொ. ஊ. மு. 728இல் ஒன்றிணைப்பதற்கு இது காரணமானது.[57] பொ. ஊ. மு. 612 வாக்கில் மீடியர்கள் பாபிலோனியர்களுடன் இணைந்து அசிரிய அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர்.[58] இது அரராத்து இராச்சியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.[59][60]

அகாமனிசியப் பேரரசின் (550–பொ. ஊ. மு. 330) விழாக் காலத் தலைநகரான பெர்சப்பொலிஸ். இது ஓர் உலகப் பாரம்பரியக் களமாகும்.
முதலாம் டேரியஸ் மற்றும் முதலாம் செர்கஸ் ஆகியோரின் காலம் வாக்கில் அகாமனிசியப் பேரரசானது அதன் உச்ச பட்ச பரப்பளவின் போது.

பொ. ஊ. மு. 550இல் சைரசு கடைசி மீடிய மன்னனான அசுதியகேசுவைத் தோற்கடித்தார். அகாமனிசியப் பேரரசை நிறுவினார். சைரசு மற்றும் அவருக்குப் பின் வந்த மன்னர்களுக்குக் கீழான படையெடுப்புகளானவை இப்பேரரசை விரிவாக்கியது. இதில் லிடியா, பாபிலோன், பண்டைய எகிப்து, கிழக்கு ஐரோப்பாவின் பகுதிகள், மற்றும் சிந்து மற்றும் ஆமூ தாரியா ஆறுளுக்கு மேற்கே இருந்த நிலப்பரப்புகள் உள்ளிட்டவையும் வெல்லப்பட்டன. பொ. ஊ. மு. 539இல் பாரசீகப் படைகள் ஓபிசு என்ற இடத்தில் பாபிலோனியர்களைத் தோற்கடித்தன. புது பாபிலோனியப் பேரரசால் நான்கு நூற்றாண்டுகளுக்கு நீடித்ததிருந்த மெசொப்பொத்தேமியா மீதான ஆதிக்கத்தை இது முடிவுக்குக் கொண்டு வந்தது.[61] பொ. ஊ. மு. 518இல் பெர்சப்பொலிஸானது முதலாம் டேரியஸால் கட்டப்பட்டது. அகாமனிசியப் பேரரசின் விழாக்காலத் தலைநகரம் இதுவாகும். அந்நேரத்தில் உலகிலேயே மிகப்பெரிய பேரரசாக அகாமனிசியப் பேரரசு திகழ்ந்தது. அந்நேரத்தில் உலகின் மொத்த மக்கள் தொகையில் 40%க்கும் மேற்பட்டோரை இது ஆட்சி செய்தது.[62][63] மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், பன்முகக் கலாச்சாரம், சாலை அமைப்பு, தபால் அமைப்பு, அதிகாரப்பூர்வ மொழிகளைப் பயன்படுத்துதல், பொதுப்பணித் துறை மற்றும் பெரிய, கைதேர்ந்த இராணுவம் ஆகியவற்றையுடைய ஒரு வெற்றிகரமான மாதிரியாக இப்பேரரசு இருந்தது. பிந்தைய பேரரசுகள் இதே போன்ற அரசை அமைப்பதற்கு இது அகத் தூண்டுதலாக அமைந்தது.[64] பொ. ஊ. மு. 334இல் பேரரசர் அலெக்சாந்தர் கடைசி அகாமனிசிய மன்னனான மூன்றாம் தாராவைத் தோற்கடித்தார். பெர்சப்பொலிஸை எரித்துத் தரைமட்டமாக்கினார். பொ. ஊ. மு. 323இல் அலெக்சாந்தரின் இறப்பிற்குப் பிறகு ஈரானானது செலூக்கியப் பேரரசின் கீழ் விழுந்தது. பல்வேறு எலனிய அரசுகளாகப் பிரிக்கப்பட்டது.

பொ. ஊ. மு. 250-247 வரை ஈரானானது செலூக்கிய ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது. அந்நேரத்தில் வடகிழக்கில் பார்த்தியாவின் பூர்வீக மக்களான பார்த்தியர்கள் பார்த்தியாவுக்கு விடுதலை அளித்தனர். செலூக்கியர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பார்த்தியப் பேரரசை நிறுவினர். பார்த்தியர்கள் முதன்மையான சக்தியாக உருவாயினர். உரோமானியர்கள் மற்றும் பார்த்தியர்களுக்கு இடையிலான புவியியல் ரீதியான மிக முக்கியமான பகைமையானது தொடங்கியது. உரோமானிய-பார்த்தியப் போர்களில் இது முடிவடைந்தது. அதன் உச்சத்தில் பார்த்தியப் பேரரசானது வடக்கே தற்போதைய துருக்கியின் புறாத்து ஆற்றிலிருந்து, ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் வரை பரவியிருந்தது. உரோமைப் பேரரசு மற்றும் சீனாவுக்கு இடையிலான பட்டுப் பாதை எனும் வணிகப் பாதையில் இது அமைந்திருந்தது. இது ஒரு வணிக மையமாக உருவானது. பார்த்தியர்கள் மேற்கு நோக்கி விரிவடைந்த போது அவர்கள் ஆர்மீனியா மற்றும் உரோமைக் குடியரசுடன் சண்டையிட்டனர்.[65]

ஐந்து நூற்றாண்டு பார்த்திய ஆட்சிக்குப் பிறகு நடைபெற்ற உள்நாட்டுப் போரானது படையெடுப்புகளை விட அரசின் நிலைத்தன்மைக்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்கியது என நிரூபிக்கப்பட்டது. நான்காம் அர்தபனுசை பாரசீக ஆட்சியாளரான முதலாம் அர்தசிர் கொன்ற போது பார்த்திய சக்தியானது நீர்த்துப் போனது. பொ. ஊ. 224இல் முதலாம் அர்தசிர் சாசானியப் பேரரசை நிறுவினார். சாசானியர்களும், அவர்களது பரம எதிரிகளான உரோமானிய-பைசாந்தியர்களும் நான்கு நூற்றாண்டுகளுக்கு உலகின் ஆதிக்கமிக்க சக்திகளாகத் திகழ்ந்தனர். பண்டைய காலத்தின் பிந்தைய பகுதியானது ஈரானின் மிகுந்த செல்வாக்கு மிக்க காலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[66] இதன் தாக்கமானது பண்டைய உரோம்,[67][68] ஆப்பிரிக்கா,[69] சீனா மற்றும் இந்தியாவை[70] அடைந்தது. ஐரோப்பா மற்றும் ஆசியாவின் நடுக்காலக் கலையில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியது.[71][72] நுட்பமான நிர்வாகத்தைக் கொண்டிருந்த சாசானிய ஆட்சியானது ஓர் உச்ச நிலையாகக் கருதப்படுகிறது. சரதுசத்தை முறைமைக்கு ஏற்ற மற்றும் ஒன்றிணைக்கும் சக்தியாக இது மீண்டும் உருவாக்கியது.[73]

நடுக்கால ஈரானும், ஈரானிய இடைக்காலமும்

[தொகு]
கொர்ரமாபாத் என்ற இடத்தில் உள்ள பலக்கோல் அப்லக் கோட்டை. இது பொ. ஊ. 240-270இல் சாசானியப் பேரரசின் ஆட்சியின் போது கட்டப்பட்டது.

தொடக்க கால முசுலிம் படையெடுப்புகளைத் தொடர்ந்து, இசுலாமியப் பண்பாடு மீதான சாசானியக் கலை, கட்டடக் கலை, இசை, இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் தாக்கமானது, ஈரானியப் பண்பாடு, அனுபவ அறிவு மற்றும் யோசனைகளை முசுலிம் உலகத்தில் பரப்பியது. பைசாந்திய-சாசானியப் போர்கள், சாசானியப் பேரரசுக்குள்ளான சண்டைகள் ஆகியவை 7ஆம் நூற்றாண்டில் அரேபியப் படையெடுப்புக்கு அனுமதியளித்தன.[74][75] இப்பேரரசானது ராசிதீன் கலீபகத்தால் தோற்கடிக்கப்பட்டது. இதற்குப் பிறகு உமையா கலீபகம், பிறகு அப்பாசியக் கலீபகம் ஆகியவை ஆட்சிக்கு வந்தன. இதைத் தொடர்ந்து இசுலாமிய மயமாக்கமானது நடைபெற்றது. ஈரானின் சரதுசப் பெரும்பான்மையினரை இலக்காக்கியது. இதில் சமய ரீதியாகத் துன்புறுத்தப்பட்டது,[76][77][78] நூலகங்கள்[79] மற்றும் நெருப்புக் கோயில்களின் அழிப்பு,[80] ஒரு வரி அபராதம்[81][82] மற்றும் மொழி நகர்வு[83][84] ஆகியவையும் அடங்கும்.

பொ. ஊ. 821 முதல் 1090 வரையிலான ஈரானிய இடைக் காலமானது அரேபிய ஆட்சியை முடித்து வைத்தது. பாரசீக மொழி மற்றும் இசுலாமிய வடிவத்தில் தேசியப் புத்துணர்ச்சி ஆகியவற்றுக்கு இது புத்துயிர் கொடுத்தது.

பொ. ஊ. 750இல் அப்பாசியர்கள் உமயதுகளைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தனர்.[85] அரேபிய மற்றும் பாரசீக முசுலிம்கள் இணைந்து ஓர் எதிர்ப்பு இராணுவத்தை உருவாக்கினர். இவர்கள் பாரசீகரான அபு முசுலிமால் ஒன்றிணைக்கப்பட்டனர்.[86][87] அதிகாரத்திற்கான தங்களது போராட்டத்தில் சமூகமானது பன்முகத் தன்மை கொண்டதாக மாறியது. பாரசீகர்களும், துருக்கியர்களும் அரேபியர்களை இடம் மாற்றினர். அதிகாரிகளின் ஒரு படி நிலை அமைப்பானது உருவானது. முதலில் பாரசீகர்களைக் கொண்டிருந்த, பின்னர் துருக்கியர்களைக் கொண்டிருந்த ஒரு நிர்வாகமானது உருவானது. இது அப்பாசியப் பெருமை மற்றும் அதிகாரத்தைக் குறைத்தது. இதனால் நன்மையே விளைந்தது.[88] இரண்டு நூற்றாண்டு அரேபிய ஆட்சிக்குப் பிறகு ஈரானியப் பீடபூமியில் ஈரானிய முசுலிம் அரசமரபுகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அப்பாசியக் கலீபகத்தின் விளிம்பில் இருந்து தோன்றின.[89] அரேபியர்களின் அப்பாசிய ஆட்சி மற்றும் "சன்னி புத்துயிர்ப்பு" ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியாக ஈரானின் இடைக்காலம் குறிப்பிடப்படுகிறது. இதனுடன் 11ஆம் நூற்றாண்டில் செல்யூக்கியரின் வளர்ச்சியும் அடங்கும். ஈரான் மீதான அரேபிய ஆட்சியை இடைக் காலமானது முடித்து வைத்தது. ஈரானிய தேசியப் புத்துணர்ச்சியை மீண்டும் கொண்டு வந்தது. இசுலாமிய வடிவத்திலான பண்பாட்டைக் கொண்டு வந்தது. பாரசீக மொழியையும் மீட்டெடுத்தது. இக்காலத்தின் மிக முக்கியமான இலக்கியமாக பிர்தௌசியின் சா நாமா கருதப்படுகிறது. இது ஈரானின் தேசிய இதிகாசமாகக் கருதப்படுகிறது.[90][91][92][93]

மலர்ச்சியுற்ற இலக்கியம், தத்துவம், கணிதம், மருத்துவம், வானியல் மற்றும் கலை ஆகியவை இசுலாமியப் பொற்காலத்தின் முக்கியமான காரணிகள் ஆயின.[94][95] இந்த பொற்காலமானது 10 மற்றும் 11ஆம் நூற்றாண்டுகளில் உச்சத்தை அடைந்தது. அறிவியல் செயல்பாடுகளுக்கு முதன்மையான அரங்காக அந்நேரத்தில் ஈரான் திகழ்ந்தது.[96] 10ஆம் நூற்றாண்டானது நடு ஆசியாவிலிருந்து ஈரானுக்குப் பெருமளவிலான துருக்கியப் பழங்குடியினங்கள் இடம் பெயர்ந்ததைக் கண்டது. துருக்கியப் பழங்குடியினத்தவர் முதன் முதலில் அப்பாசிய இராணுவத்தில் மம்லூக்குகளாக (அடிமை-போர் வீரர்கள்) முதன் முதலில் பயன்படுத்தப்பட்டனர்.[97] குறிப்பிடத்தக்க அளவுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர். ஈரானின் பகுதிகள் செல்யூக் மற்றும் குவாரசமியப் பேரரசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.[98][99] ஈரானியப் பண்பாட்டை துருக்கிய ஆட்சியாளர்கள் பின்பற்றி, புரவலர்களாகத் திகழ்ந்தது என்பது ஒரு தனித்துவமான துருக்கிய-பாரசீகப் பாரம்பரியத்தின் வளர்ச்சியாகும்.

1219 மற்றும் 1221க்கு இடையில் குவாரசமியப் பேரரசின் கீழ் மங்கோலியத் தாக்குதலால் ஈரான் பாதிப்படைந்தது. இசுதீவன் வார்து என்ற வரலாற்றாளரின் கூற்றுப் படி, "மங்கோலிய வன்முறையானது... ஈரானியப் பீடபூமியின் மொத்த மக்கள் தொகையில் முக்கால் பங்கினர் வரை கொன்றது, சாத்தியமான வகையில் 1 முதல் 1.50 கோடி மக்கள் கொல்லப்பட்டனர்.... ஈரானின் மக்கள் தொகையானது மங்கோலியருக்கு முந்தைய...அதன் நிலைகளை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மீண்டும் அடையவில்லை." பிறர் இது முசுலிம் வரலாற்றாளர்களின் ஒரு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு என்கின்றனர்.[100][101][102] 1256இல் மங்கோலியப் பேரரசு சிதறுண்டது. அதைத் தொடர்ந்து குலாகு கான் ஈரானில் ஈல்கானரசு பேரரசை நிறுவினார். 1357இல் தலைநகரமான தப்ரீசு தங்க நாடோடிக் கூட்டத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. மையப்படுத்தப்பட்ட அதிகாரமானது வீழ்ச்சியடைந்தது. பகைமையுடைய அரசமரபுகள் உருவாவதற்கு வழி வகுத்தது. 1370இல் மற்றொரு மங்கோலியரான தைமூர் ஈரானின் கட்டுப்பாட்டைப் பெற்றார். தைமூரியப் பேரரசை நிறுவினார். 1387இல் இசுபகான் நகரத்தில் இருந்து அனைவரையும் மொத்தமாகப் படு கொலை செய்ய தைமூர் ஆணையிட்டார். இவ்வாறாக 70,000 பேரை இவர் கொன்றார்.[103]

நவீன காலத் தொடக்கம்

[தொகு]

சபாவியர்

[தொகு]
இடது: சபாவியப் பேரரசை நிறுவிய முதலாம் இசுமாயில். வலது: இசுபகானிலுள்ள ஷா மசூதி. இது பேரரசர் அப்பாஸால் கட்டப்பட்டது. பாரசீகக் கட்டடக்கலையின் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக இது திகழ்கிறது. இது ஓர் உலகப் பாரம்பரியக் களமாகும்.

1501இல் முதலாம் இசுமாயில் சபாவியப் பேரரசை நிறுவினார். தப்ரீசுவைத் தனது தலைநகராகத் தேர்ந்தெடுத்தார்.[104] அசர்பைசானில் இருந்து தொடங்கிய இவர் தன்னுடைய அதிகாரத்தை ஈரானிய நிலப்பரப்புகள் மீது விரிவாக்கினார். பெரிய ஈரான் பகுதி மீது ஈரானிய மேலாட்சியை நிறுவினார்.[105] உதுமானியர்கள் மற்றும் முகலாயர்களுடன் இணைந்து சபாவியர்கள் "வெடிமருந்துப் பேரரசுகளை" உருவாக்கியவர்களாகக் கருதப்படுகின்றனர். இப்பேரரசுகள் 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை செழித்திருந்தன. ஈரான் முதன்மையாக சன்னி இசுலாமியர்களைக் கொண்டிருந்தது. ஆனால், இசுமாயில் கட்டாயப்படுத்தி சியாவுக்கு இவர்களை மதம் மாற்றினார். இசுலாமின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இது கருதப்படுகிறது.[106][107][108][109][110] உலகில் சியா இசுலாமை அதிகாரப்பூர் மதப்பிரிவாகக் கொண்ட ஒரே ஒரு நாடு இன்றும் ஈரான் தான்.[111][112]

சபாவியர் மற்றும் மேற்கு உலகுக்கு இடையிலான உறவு முறைகளானவை பாரசீக வளைகுடாவில் போர்த்துக்கீசியர் வந்ததுடன் தொடங்கியது. 16ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியது. 18ஆம் நூற்றாண்டு வரை கூட்டணிகள் மற்றும் போராக இது மாறி மாறி அமைந்தது. சபாவிய சகாப்தமானது காக்கேசிய மக்கள் இணைக்கப்பட்டது மற்றும் ஈரானிய இதயப் பகுதிகளில் அவர்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டதைக் கண்டது. 1588இல் பேரரசர் அப்பாஸ் ஒரு சிக்கலான காலகட்டத்தில் அரியணைக்கு வந்தார். ஈரான் கில்மன் அமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பில் ஆயிரக்கணக்கான சிர்காசிய, ஜார்ஜிய மற்றும் ஆர்மீனிய அடிமைப் போர் வீரர்கள் நிர்வாகம் மற்றும் இராணுவத்தில் இணைந்தனர். கிறித்தவ ஈரானிய-ஆர்மீனியச் சமூகமானது இன்று ஈரானில் உள்ள மிகப்பெரிய சிறுபான்மையினச் சமூகமாக உள்ளது.[113]

பொதுப்பணி நிர்வாகம், அரண்மனை மற்றும் இராணுவத்தில் கிசில்பாசு பிரிவினரின் அதிகாரத்தை அப்பாஸ் ஒழித்தார். தலை நகரத்தை காசுவினிலிருந்து இசுபகானுக்கு இவர் இடம் மாற்றினார். சபாவிய கட்டடக்கலையின் கவனக் குவியமாக இசுபகானை ஆக்கினார். இவரது ஆட்சியின் கீழ் உதுமானியர்களிடம் இருந்து ஈரானுக்கு தப்ரீசு திருப்பிக் கொடுக்கப்பட்டது. அரசவையில் நடந்த ஆர்வத்தைத் தூண்டும் நிகழ்வுகளைத் தொடர்ந்து தன்னுடைய மகன்கள் மீது அப்பாஸ் சந்தேகமடைந்தார். அவர்களைக் கொன்றார் அல்லது கண்பார்வையற்றவராக ஆக்கினார். 1600களின் பிந்தைய காலம் மற்றும் 1700களின் தொடக்க காலத்தில் ஒரு படிப்படியான வீழ்ச்சியைத் தொடர்ந்து சபாவிய ஆட்சியானது பாஷ்தூன் கிளர்ச்சியாளர்களால் முடித்து வைக்கப்பட்டது. அவர்கள் இசுபகானை முற்றுகையிட்டனர். சொல்தான் உசைனை 1722இல் தோற்கடித்தனர். இது படிப்படியாக வீழ்ச்சி அடைந்ததற்கு உட்சண்டைகள், உதுமானியர்களுடனான போர்கள் மற்றும் அயல்நாட்டுத் தலையீடு ஆகியவை காரணமாகும். கிழக்கு மற்றும் மேற்குக்கு இடையில் ஒரு பொருளாதார வலுவூட்டல் பகுதியாக ஈரானை மீண்டும் உருவாக்கியது, அதிகாரத்தைப் பிரித்துக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்ட திறமையான அதிகாரத்துவம், இவர்களது கட்டடக்கலை புதுமைகள் மற்றும் சிறந்த கலைகளுக்கு இவர்களது புரவலத் தன்மை ஆகியவை சபாவியர்களின் மரபு ஆகும். பன்னிருவர் சியா இசுலாமியப் பிரிவை அரசின் மதமாக இவர்கள் நிறுவினர். இன்றும் இது ஈரானின் அரசின் மதமாகத் தொடர்கிறது. சியா இசுலாமை மத்திய கிழக்கு, நடு ஆசியா, காக்கேசியா, அனத்தோலியா, பாரசீக வளைகுடா, மற்றும் மெசொப்பொத்தேமியா முழுவதும் இவர்கள் பரப்பினர்.[114]

அப்சரியரும், சாந்துகளும்

[தொகு]
கரீம் கானின் அர்க் கோட்டை எனப்படும் கட்டடம். கரீம் கான் சாந்தின் (1751–1779) வாழும் இடமாக இது பயன்படுத்தப்பட்டது. இவரே சாந்த் அரசமரபை சீராசில் நிறுவியவர் ஆவார்.

1729இல் நாதிர் ஷா அப்சர் பஷ்தூன் படையெடுப்பாளர்களை விரட்டி அடித்தார். அப்சரியப் பேரரசை நிறுவினார். உதுமானிய மற்றும் உருசிய அரசுகளுக்கு இடையே பிரிக்கப்பட்ட காக்கேசிய நிலப்பரப்புகளை மீண்டும் கைப்பற்றினார். சாசானியப் பேரரசின் காலத்தில் இருந்து இவரது காலத்திலேயே ஈரானானது அதன் உச்சபட்ச விரிவை அடைந்தது. காக்கேசியா, மேற்கு மற்றும் நடு ஆசியா மீதான தனது மேலாட்சியை இவர் மீண்டும் நிறுவினார். விவாதத்திற்குரியாக இருந்தாலும் உலகில் அந்நேரத்தில் இருந்த மிகவும் சக்தி வாய்ந்த பேரரசாக இது திகழ்ந்தது.[115] 1730களின் வாக்கில் நாதிர் இந்தியா மீது படையெடுத்தார். தில்லியைச் சூறையாடினர். கர்னால் போரில் முகலாயர்களை இவரது இராணுவமானது தோற்கடித்தது. அவர்களது தலைநகரத்தைக் கைப்பற்றியது. வரலாற்றாளர்கள் நாதிர் ஷாவை "ஈரானின் நெப்போலியன்" மற்றும் "இரண்டாம் அலெக்சாந்தர்" என்று குறிப்பிடுகின்றனர்.[116][117] கிளர்ச்சியில் ஈடுபட்ட லெசுகின்களுக்கு எதிரான வடக்கு காக்கேசியப் படையெடுப்புகளைத் தொடர்ந்து நாதிர் ஷாவின் நிலப்பரப்பு விரிவாக்கம் மற்றும் இராணுவ வெற்றிகள் குறைய ஆரம்பித்தன. உடல் நலக்குறைவு மற்றும் தன்னுடைய படையெடுப்புகளுக்கு செலவழிக்க அதிகப்படியான வரிகளை அச்சுறுத்தி வசூலிக்கும் எண்ணம் ஆகியவற்றின் விளைவாக இவர் குரூரமானவராக மாறினார். நாதிர் ஷா கிளர்ச்சிகளை நொறுக்கினார். தன்னுடைய கதாநாயகன் தைமூரைப் பின்பற்றும் விதமாக தன்னிடம் தோற்றவர்களின் மண்டையோடுகளை கோபுரமாகக் குவித்தார்.[118][119] 1747இல் இவரது அரசியல் கொலைக்குப் பிறகு நாதிரின் பேரரசில் பெரும்பாலானவை சாந்துகள், துரானியர், ஜார்ஜியர்கள் மற்றும் காக்கேசிய கானரசுகளுக்கு இடையே பிரித்துக் கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், அப்சரிய ஆட்சியானது குராசனில் இருந்த ஒரு சிறிய உள்ளூர் அரசாக மட்டுமே இருந்தது. இவரது இறப்பானது உள்நாட்டுப் போரைப் பற்ற வைத்தது. இதற்குப் பிறகு கரீம் கான் சாந்து 1750இல் அதிகாரத்தைப் பெற்றார்.[120]

பிந்தைய அரசமரபுகளுடன் ஒப்பிடும் போது சாந்துகளின் புவிசார் அரசியல் விரிவு குறைவாகவே இருந்தது. காக்கேசியாவில் இருந்த பல ஈரானிய நிலப்பரப்புகள் சுயாட்சி பெற்றன. காக்கேசியக் கானரசுகள் மூலம் ஆட்சி செய்தன. எனினும், சாந்து இராச்சியத்திற்கு அவை குடிமக்களாகவும், திறை செலுத்தியவர்களாகவும் தொடர்ந்தனர். இந்த அரசானது பெரும்பாலான ஈரான் மற்றும் நவீன ஈராக்கின் பகுதிகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. தற்கால ஆர்மீனியா, அசர்பைஜான் மற்றும் சியார்சியாவின் நிலங்கள் கானரசுகளால் கட்டுப்படுத்தப்பட்டது. சட்டப்பூர்வமாக இவை சாந்து ஆட்சிக்கு உட்பட்டவையாகும். ஆனால், உண்மையில் அவை சுயாட்சி உடையவையாக இருந்தன.[121] இதன் மிக முக்கியமான ஆட்சியாளரான கரீம் கானின் ஆட்சியானது செழிப்பு மற்றும் அமைதியால் குறிக்கப்படுகிறது. இவர் தன்னுடைய தலை நகரத்தை சீராசில் வைத்திருந்தார். அந்நகரத்தில் கலைகள் மற்றும் கட்டடக் கலையானது செழித்து வளர்ந்தது. 1779இல் கானின் இறப்பைத் தொடர்ந்து சாந்து அரசமரபுக்குள் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் காரணமாக ஈரான் வீழ்ச்சி அடைந்தது. இதன் கடைசி ஆட்சியாளரான லோத்பு அலி கான் 1794இல் அகா மொகம்மது கான் கஜரால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

கஜர்கள்

[தொகு]
தெகுரானில் உள்ள கோலேஸ்தான் அரண்மனை. 1789 முதல் 1925 வரை கஜர் மன்னர்களின் இருப்பிடமாக இது இருந்தது. இது ஓர் உலகப் பாரம்பரியக் களமாகும்.

கஜர்கள் 1794இல் கட்டுப்பாட்டைப் பெற்றனர். கஜர் பேரரசை நிறுவினர். 1795இல் ஜார்ஜியர்களின் கீழ்ப்படியாமை மற்றும் அவர்களது உருசியக் கூட்டணி ஆகியவற்றைத் தொடர்ந்து கீர்த்சனிசி யுத்தத்தில் கஜர்கள் திபிலீசியைக் கைப்பற்றினர். காக்கேசியாவிலிருந்து உருசியர்களைத் துரத்தி அடித்தனர். ஈரானிய முதன்மை நிலையை மீண்டும் நிறுவினர். 1796இல் அகா மொகம்மது கான் கஜர் மஸ்சாத்தை எளிதாகக் கைப்பற்றினார். அப்சரிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். இவருக்கு மன்னனாக மகுடம் சூட்டப்பட்டது. தன்னுடைய தலைநகராக தெகுரானை இவர் தேர்ந்தெடுத்தார். இன்றும் தெகுரான் தான் ஈரானின் தலைநகரமாகத் தொடருகிறது. ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் ஒன்றிணைந்த ஈரான் மீண்டும் திரும்பி வருவதை இவரது ஆட்சியானது கண்டது. இவர் குரூரமானவராகவும், பேராசை பிடித்தவராகவும் இருந்தார். அதே நேரத்தில் நடைமுறை ரீதியிலான, கணக்கிடக் கூடிய மற்றும் சூட்சுமமான இராணுவ மற்றும் அரசியல் தலைவராகவும் கூட இவர் பார்க்கப்படுகிறார்.[122][123]

1804-1813 மற்றும் 1826-1828 உருசிய-ஈரானியப் போர்கள் காக்கேசியாவில் ஈரானுக்கு நிலப்பரப்பு இழப்புகளில் முடிந்தது. தென்காக்கேசியா மற்றும் தாகெஸ்தான் ஆகிய பகுதிகளை ஈரான் இழந்தது.[124] இப்பகுதியில் ஈரானுடன் இணைந்திருந்த நிலப்பரப்புகளை உருசியர்கள் கைப்பற்றினர். குலிஸ்தான் மற்றும் துருக்மென்சாய் ஆகிய ஒப்பந்தங்கள் இதை உறுதி செய்தன.[125][126][127][128] உருசியா மற்றும் பிரிட்டன் ஆகியவற்றுக்கு இடையில் நடந்த அரசியல் விளையாட்டான பெரும் விளையாட்டின் போராட்டங்களில் பலவீனமடைந்து வந்த ஈரானானது ஒரு பாதிக்கப்பட்ட நாடானது.[129] குறிப்பாக துருக்மென்சாய் ஒப்பந்தத்திற்குப் பிறகு ஈரானில் ஆதிக்கம் மிகுந்த சக்தியாக உருசியா உருவானது.[130] 1837 மற்றும் 1856இல் ஹெறாத்தில் நடந்த முற்றுகைகள் போன்ற 'பெரும் விளையாட்டு' யுத்தங்களில் கஜர்கள் ஒரு பங்கை அதே நேரத்தில் ஆற்றினர். ஈரான் சுருங்கிய போது பல தென்காக்கேசிய மற்றும் வடக்கு காக்கேசிய முசுலிம்கள் ஈரானை நோக்கி இடம்பெயர்ந்தனர்.[131] குறிப்பாக சேர்க்காசிய இனப்படுகொலை வரை மற்றும் அதைத் தொடர்ந்த தசாப்தங்களுக்குப் பிறகு இது நடைபெற்றது. அதே நேரத்தில், ஈரானின் ஆர்மீனியர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட உருசிய நிலப்பரப்புகளில் குடியமர வைக்கப்பட்டனர்.[132][133] இது மக்கள்தொகை இடமாற்றத்துக்குக் காரணமானது. 1870-1872ஆம் ஆண்டின் பாரசீகப் பஞ்சத்தின் விளைவாக சுமார் 15 இலட்சம் மக்கள், அதாவது மக்கள் தொகையில் 20% - 25% பேர் இறந்தனர்.[134]

அரசியலமைப்புப் புரட்சியும், பகலவிகளும்

[தொகு]
பாரசீக அரசியலமைப்புப் புரட்சியின் போது 1906இல் முதல் ஈரானிய தேசியப் பாராளுமன்றமானது நிறுவப்பட்டது.

1872 மற்றும் 1905க்கு இடையில் கஜர் முடியரசர்களால் அயல் நாட்டவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் போராட்டக்காரர்கள் எதிர்த்தனர். 1905இல் பாரசீக அரசியலமைப்புப் புரட்சிக்கு இது வழி வகுத்தது. 1906இல் முதல் ஈரானிய அரசியலமைப்பு மற்றும் தேசியப் பாராளுமன்றம் ஆகியவை நிறுவப்பட்டன. அரசியலமைப்பானது கிறித்தவர்கள், யூதர்கள் மற்றும் சரதுசத்தைச் சேர்ந்தவர்களை அங்கீகரித்தது. 1909இல் இதைத் தொடர்ந்து தெகுரானின் வெற்றி (அரசியலமைப்புவாதிகள் தெகுரானுக்குள் நுழைந்த நிகழ்வு) வந்தது. அப்போது மொகம்மது அலி பதவி விலகக் கட்டாயப்படுத்தப்பட்டார். சிறிய சர்வாதிகாரம் என அழைக்கப்பட்ட காலத்தை இந்நிகழ்வானது முடிவுக்குக் கொண்டு வந்தது. இசுலாமிய உலகில் முதன்முதலில் ஏற்பட்ட இவ்வகையான புரட்சி இதுவாகும்.

பழைய ஆணையானது புதிய அமைப்புகளால் இடமாற்றம் செய்யப்பட்டது. 1907இல் ஆங்கிலேய-உருசிய உடன்படிக்கையானது ஈரானைச் செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்தது. உருசியர்கள் வடக்கு ஈரான் மற்றும் தப்ரீசுவை ஆக்கிரமித்தனர். பல ஆண்டுகளுக்கு இராணுவத்தை அங்கு பேணி வந்தனர். இது மக்களின் எழுச்சிகளை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. இதற்குப் பிறகு கஜர் முடியரசு மற்றும் அயல்நாட்டுப் படையெடுப்பாளர்களுக்கு எதிராக மிர்சா குச்சிக் கானின் காட்டு இயக்கம் எனும் கிளர்ச்சியானது நடைபெற்றது.

முதலாம் உலகப் போரில் ஈரான் நடு நிலை வகித்த போதும் உதுமானிய, உருசிய மற்றும் பிரித்தானியப் பேரரசுகள் மேற்கு ஈரானை ஆக்கிரமித்தன. பாரசீகப் படையெடுப்புகளில் சண்டையிட்டன. 1921இல் பின் வாங்கின. சண்டை, உதுமானியர்களால் நடத்தப்பட்ட கிறித்தவர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் அல்லது போரால் தூண்டப்பட்ட 1917-1919ஆம் ஆண்டின் பஞ்சம் ஆகியவற்றின் காரணமாகக் குறைந்தது 20 இலட்சம் மக்கள் இறந்தனர். ஈரானிய அசிரியர் மற்றும் ஈரானிய ஆர்மீனியக் கிறித்தவர்கள், மேலும் அவர்களைப் பாதுகாக்க முயன்ற முசுலிம்களும் கூட படையெடுத்து வந்த உதுமானியத் துருப்புகளால் நடத்தப்பட்ட படுகொலைகளின் பாதிப்பாளர்களாக ஆயினர்.[135][136][137][138]

அகா மொகம்மது கான் தவிர பிறரின் கஜர் ஆட்சியானது திறமையுடையதாக இல்லை.[139] முதலாம் உலகப் போரின் போது மற்றும் அதைத் தொடர்ந்த ஆக்கிரமிப்பைத் தடுக்க இயலாத இவர்களின் நிலையானது பிரித்தானியர்களால் நடத்தப்பட்ட 1921ஆம் ஆண்டின் பாரசீக ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழி வகுத்தது. 1925இல் இராணுவ அதிகாரியான ரேசா பகலவி அதிகாரத்தைப் பெற்றார். பிரதம மந்திரி, முடியரசரானார். பகலவி வம்சத்தை நிறுவினார். 1941இல் இரண்டாம் உலகப் போரின் போது அனைத்து செருமானியர்களையும் வெளியேற்றுமாறு ஈரானிடம் பிரித்தானியர் முறையிட்டனர். பகலவி மறுத்தார். எனவே பிரித்தானிய மற்றும் சோவியத் படையினர் ஒரு வெற்றிகரமான திடீர்ப் படையெடுப்பைத் தொடங்கினர்.[140] சோவியத் ஒன்றியத்துக்குப் பொருள் வழங்கும் வழியை இது உறுதி செய்தது. செருமானிய செல்வாக்கைக் கட்டுப்படுத்தியது. பகலவி உடனடியாகச் சரணடைந்தார். நாட்டை விட்டு வெளியேறினார். அவருக்குப் பிறகு அவரது மகன் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி ஆட்சிக்கு வந்தார்.[141][142][143]

சோவியத் ஒன்றியத்துக்கான பிரித்தானிய மற்றும் அமெரிக்க உதவிக்கு ஒரு முதன்மையான வழியாக ஈரான் உருவானது. ஈரான் வழியாக 1.20 இலட்சம் போலந்து அகதிகளும், ஆயுதமேந்திய காவல் படைகளும் தப்பித்தன.[144] 1943ஆம் ஆண்டின் தெகுரான் மாநாட்டில் ஈரானின் சுதந்திரம் மற்றும் எல்லைகளுக்கு உறுதியளிக்கத் தெகுரான் அறிவிப்பை நேச நாடுகள் வெளியிட்டன. எனினும், சோவியத்துகள் கைப்பாவை அரசுகளை வடமேற்கு ஈரானில் நிறுவினர். அவை அசர்பைஜானின் மக்கள் அரசாங்கம் மற்றும் மகாபத் குடியரசு ஆகியவையாகும். இது 1946ஆம் ஆண்டின் ஈரான் பிரச்சனைக்கு வழி வகுத்தது. பனிப் போரின் முதல் பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும். சோவியத் ஒன்றியத்துக்கு எண்ணெய்ச் சலுகைகள் உறுதியளிக்கப்பட்ட பிறகு இது முடிந்தது. சோவியத் ஒன்றியமானது 1946இல் பின் வாங்கியது. கைப்பாவை அரசுகள் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டன. சலுகைகள் இரத்து செய்யப்பட்டன.[145][146]

1951–1978: மொசாத்தெக், பகலவி மற்றும் கொமெய்னி

[தொகு]

1951இல் மொகம்மது மொசாத்தெக் ஈரானின் பிரதம மந்திரியாக சனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் எண்ணெய்த் துறையை தேசியமயமாக்கியதற்குப் பிறகு மொசத்தெக் மிகவும் பிரபலமானார். எண்ணெய்த் துறையானது முன்னர் அயல் நாட்டவர்களால் கட்டுப்படுத்தப்பட்டது. இவர் முடியாட்சியைப் பலவீனமாக்கப் பணியாற்றினார். 1953ஆம் ஆண்டின் ஈரானிய ஆட்சிக் கவிழ்ப்பில் இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு ஓர் ஆங்கிலேய-அமெரிக்க இரகசிய நடவடிக்கையாகும்.[147] மொசத்தெக்கின் நிர்வாகமானது நீக்கப்படுவதற்கு முன்னர் சமூக பாதுகாப்பு, நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் அதிக வரிகள் போன்ற சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. இதில் நில வாடகை மீதான வரியின் அறிமுகமும் அடங்கும். இவர் சிறைப்படுத்தப்பட்டார். பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இவரது இறப்பு வரை இவ்வாறான நிலை தொடர்ந்தது. பொது மக்களின் கோபத்தால் ஏற்படும் ஓர் அரசியல் பிரச்சனையைத் தடுப்பதற்காக இவர் அவரது வீட்டிலேயே புதைக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டு இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் தனது பங்காக போராட்டக்காரர்களுக்குப் பணம் வழங்கியது மற்றும் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியதும் உள்ளிட்டவற்றை ஐக்கிய அமெரிக்க அரசாங்கமானது ஒப்புக் கொண்டது.[148] ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு பகலவி ஈரானை மேற்குலக நாடுகளுக்கு ஆதரவாக இருக்கச் செய்தார். ஒரு சர்வாதிகார ஆட்சியாளராக தன்னுடைய அதிகாரத்தை நிலை நாட்ட ஐக்கிய அமெரிக்காவுடன் ஒரு நெருக்கமான உறவு முறையில் இவர் தொடர்ந்தார். பனிப் போரின் போது அமெரிக்க ஆதரவையும் இவர் அதிகமாகச் சார்ந்திருந்தார்.

மாட்சி மிக்க அயதோல்லா ரூகொல்லா கொமெய்னி 1963ஆம் ஆண்டு முதன் முதலாக அரசியல் முக்கியத்துவம் பெற்றார். மொகம்மது ரேசா பகலவி மற்றும் அவரது வெள்ளைப் புரட்சிக்கு எதிரான எதிர்ப்புக்கு இவர் தலைமை தாங்கினார். மொகம்மது ரேசா "ஈரானில் இசுலாமை அழிக்க முற்படுவதாக" தான் அறிவித்ததற்குப் பிறகு கொமெய்னி கைது செய்யப்பட்டார்.[149] பெரிய கலகங்கள் தொடர்ந்தன. காவலர்களால் 15,000 மக்கள் கொல்லப்பட்டனர்.[150] எட்டு மாத வீட்டுக் காவலுக்குப் பிறகு கொமெய்னி விடுதலை செய்யப்பட்டார். அவர் தன்னுடைய போராட்டத்தைத் தொடர்ந்தார். இசுரேலுடனான ஈரானின் ஒத்துழைப்பு மற்றும் இசுரேலுக்குச் சார்பான ஒப்பந்தங்கள் அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்க நபர்களுக்குத் தூதரக ரீதியான பாதுகாப்பை விரிவாக்கியது ஆகியவற்றை இவர் கண்டித்தார். நவம்பர் 1964இல் கொமெய்னி மீண்டும் கைது செய்யப்பட்டார். நாடு கடத்தப்பட்டார். இவ்வாறாக 15 ஆண்டுகள் கடந்தன.

மொகம்மது ரேசா பகலவி சர்வாதிகாரியாகவும், சுல்தானைப் போலவும் நடந்து கொண்டார். ஐக்கிய அமெரிக்காவுடனான ஒரு தசாப்த சர்ச்சைக்குரிய நெருக்கமான உறவுகளுக்குள் ஈரான் நுழைந்தது.[151] ஈரானை நவீனமயமாக்கியதாகவும், ஈரானைத் தொடர்ந்து மதச் சார்பற்ற அரசாக வைத்திருந்ததாகவும்[152] மொகம்மது ரேசா குறிப்பிட்ட அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்காக சவக் எனப்படும் இவரது இரகசிய காவல் துறையினர் நியாயமற்ற கைதுகள் மற்றும் சித்திரவதையைச் செய்தனர்.[153] 1973ஆம் ஆண்டின் எண்ணெய் நெருக்கடி காரணமாக பொருளாதாரத்தில் அயல்நாட்டுப் பணங்கள் வெள்ளம் போல் கொண்டு வரப்பட்டன. இது பணவீக்கத்துக்குக் காரணமானது. 1974 வாக்கில் ஈரான் இரட்டை இலக்கப் பணவீக்கத்தைக் கண்டது. பெரிய நவீன மயமாக்கும் திட்டங்கள் இருந்த போதும் ஊழலானது பரவலாக இருந்தது. ஒரு பொருளியல் பின்னடைவானது வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்தது. 1970களின் தொடக்க கால ஆண்டுகளின் விரைவான வளர்ச்சி ஆண்டுகளின் போது நகரங்களுக்குக் கட்டடக்கலை வேலைகளுக்காக இடம் பெயர்ந்திருந்த இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. 1970களின் பிற்பகுதியில் பகலவியின் தேர்ந்தெடுக்கப்படாத அரசுக்கு எதிராக அவர்கள் போராடினர்.[154]

ஈரானியப் புரட்சி

[தொகு]
மாட்சி மிக்க அயதோல்லா ரூகொல்லா கொமெய்னி 1 பெப்ரவரி 1979 அன்று திரும்பி வருதல்.

பகலவி மற்றும் கொமெய்னிக்கு இடையில் சித்தாந்தம் மற்றும் அரசியல் பிரச்சனைகள் நீடித்திருந்த போது அக்டோபர் 1977இல் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. இது குடிமக்களின் எதிர்ப்பாக வளர்ந்தது. சமயச் சார்பின்மை மற்றும் இசுலாமியம் உள்ளிட்டவை இதில் அடங்கியுள்ளன.[155] 1978 ஆகத்து மாதத்தில் ரெக்சு திரையரங்குத் தீ விபத்தில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். செப்டம்பர் மாதத்தில் துப்பாக்கிச் சூடான கருப்பு வெள்ளி என்ற நிகழ்வு நடைபெற்றது. இது புரட்சி இயக்கத்தை ஊக்குவித்தது. நாடு முழுவதுமான வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நாட்டை முடக்கின.[156][157][158] ஓர் ஆண்டு வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு சனவரி 1979இல் பகலவி ஐக்கிய அமெரிக்காவுக்குத் தப்பினார்.[159] பெப்ரவரி மாதத்தில் கொமெய்னி ஈரானுக்குத் திரும்பி வந்து ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவினார்.[160] தலை நகரமான தெகுரானில் கொமெய்னி இறங்கிய போது அவரை வரவேற்பதற்காக தசம இலட்சக்கணக்கான மக்கள் கூடினர்.[161]

மார்ச்சு 1979 பொது வாக்கெடுப்பைத் தொடர்ந்து அரசாங்கமானது ஓர் அரசியலமைப்பை உருவாக்கத் தொடங்கியது. இந்தப் பொது வாக்கெடுப்பில் 98% வாக்காளர்கள் ஓர் இசுலாமியக் குடியரசாக ஈரானை மாற்ற ஒப்புதல் அளித்தனர். அயதோல்லா கொமெய்னி ஈரானின் அதியுயர் தலைவராக திசம்பர் 1979 அன்று பதவியேற்றுக் கொண்டார். தன்னுடைய சர்வதேசச் செல்வாக்கு காரணமாக 1979 ஆம் ஆண்டு டைம் பத்திரிகையானது அந்த ஆண்டின் முதன்மையான மனிதனாக இவரைக் குறிப்பிட்டது. "பிரபலமான மேற்குலகப் பண்பாட்டில் சியா இசுலாமின் முகமாக" இவர் உள்ளதாகக் குறிப்பிட்டது.[162] பகலவிக்கு விசுவாசமுடைய அதிகாரிகளை ஒழித்துக் கட்ட கொமெய்னி ஆணையிட்டதைத் தொடர்ந்து பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.[163] 1980இல் பண்பாட்டுப் புரட்சி தொடங்கியது. அனைத்து பல்கலைக்கழகங்களும் 1980இல் மூடப்பட்டன. 1983ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டன.[164][165][166]

நவம்பர் 1979இல் பகலவியை நாடு கடத்த ஐக்கிய அமெரிக்கா மறுத்ததற்குப் பிறகு ஈரானிய மாணவர்கள் ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தைக் கைப்பற்றினர். 53 அமெரிக்கர்களைக் கைதிகளாகப் பிடித்தனர்[167]. அவர்களது விடுவிக்கப் பேச்சுவார்த்தை நடத்த ஜிம்மி கார்ட்டர் நிர்வாகமானது முயற்சித்தது. அவர்களை விடுவிக்கவும் முயன்றது. அதிபராகக் கார்ட்டர் தனது கடைசி நாளில் அல்சியர்சு ஒப்பந்தத்தின் கீழ் கடைசிப் பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஏப்ரல் 1980இல் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் தூதரக உறவுகளை முறித்துக் கொண்டன. அன்றிலிருந்து அதிகாரப்பூர்வ தூதரக உறவுகளானது இரு நாடுகளுக்கும் இடையில் கிடையாது.[168] ஈரான்-ஐக்கிய அமெரிக்க உறவுகளில் ஒரு திருப்பு முனையாக அமைந்த நிகழ்வாக இப்பிரச்சினை உள்ளது.

ஈரான்–ஈராக் போர் (1980–1988)

[தொகு]
ஈரானிய விமானப் படையின் எச்-3 தாக்குதலானது வரலாற்றின் மிக வெற்றிகரமான வான் ஊடுருவல்களில் ஒன்றாகும்.[169]

செப்டம்பர் 1980இல் ஈராக் கூசித்தான் மீது படையெடுத்தது. ஈரான்-ஈராக் போரின் தொடக்கமாக இது அமைந்தது. புரட்சிக்குப் பிந்தைய ஈரானின் குழப்பத்தைத் தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்த ஈராக் நம்பிக்கை கொண்டிருந்த அதே நேரத்தில் ஈராக்கின் இராணுவமானது மூன்று மாதங்களுக்கு மட்டுமே முன்னேறிச் சென்றது. திசம்பர் 1980 வாக்கில் சதாம் உசேனின் படைகளானவை நிறுத்தப்பட்டன. 1982இன் நடுப் பகுதி வாக்கில் ஈரானியப் படைகள் உத்வேகம் பெற்றன. ஈராக்கியர்களை ஈராக்குக்குள் வெற்றிகரமாக உந்தித் தள்ளின. சூன் 1982 வாக்கில் அனைத்து இழந்த நிலப்பரப்புகளையும் ஈரான் மீண்டும் பெற்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தீர்மானம் 514ஐ ஈரான் நிராகரித்தது. படையெடுப்பைத் தொடங்கியது. பசுரா போன்ற ஈராக்கின் நகரங்களைக் கைப்பற்றியது. ஈராக்கில் ஈரானின் தாக்குதல்களானவை ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தன. இதில் ஈராக்கும் பதில் தாக்குதல்களை நடத்தியது.

1988 வரை போரானது தொடர்ந்தது. அப்போது ஈராக்குக்குள் இருந்த ஈரானியப் படைகள் ஈராக் தோற்கடித்தது. எல்லைகளைத் தாண்டி ஈரானியத் துருப்புகளை உந்தித் தள்ளியது. ஐக்கிய நாடுகள் அவையால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சண்டை நிறுத்த ஒப்பந்தத்துக்கு கொமெய்னி ஒப்புக் கொண்டார். இரு நாடுகளும் போருக்கு முந்தைய தங்களது எல்லைகளுக்குள் திரும்பி வந்தன. 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய மரபு வழிப் போர் இதுவாகும். வியட்நாம் போருக்குப் பிறகு 20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது மிகப் பெரிய போர் இதுவாகும். மொத்த ஈரானிய இழப்புகளானவை 1.23 முதல் 1.60 பேர் வரை கொல்லப்பட்டது, 66,000 பேர் தொலைந்து போனது மற்றும் 11,000 - 16,000 குடிமக்கள் கொல்லப்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.[170][171] சதாம் உசேனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஈரான் ஈராக்கின் அரசியலை வடிவமைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடைப்பட்ட உறவுகளானவை மிகவும் நன்முறையில் உள்ளன.[172][173][174] குறிப்பிடத்தக்க இராணுவ உதவியானது ஈரானால் ஈராக்குக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஈரான் ஒரு பெரும் அளவுக்கு செல்வாக்கைக் கொண்டிருக்கவும், ஈராக்கில் காலூன்றவும் இது வழி வகுத்துள்ளது. ஈராக் மிகுந்த நிலைத் தன்மையுடைய மற்றும் முன்னேறிய ஈரானைத் தனது எரியாற்றல் தேவைகளுக்காக மிகவும் சார்ந்துள்ளது.[175][176]

1990களிலிருந்து

[தொகு]
ரூகொல்லா கொமெய்னியின் கல்லறையானது அதிபர் அக்பர் ரப்சஞ்சனி மற்றும் பிற முக்கிய நபர்களின் சமாதிகளையும் கூடக் கொண்டுள்ளது.

1989இல் அக்பர் ரப்சஞ்சனி பொருளாதாரத்தை மீண்டும் முன்னேற்றுவதற்காக வணிகத்திற்கு ஆதரவான கொள்கை மீது கவனக் குவியம் கொண்டார். புரட்சியின் சித்தாந்தத்தையும் மீறாதவாறு பார்த்துக் கொண்டார். உள் நாட்டளவில் கட்டற்ற சந்தை முறைக்கு இவர் ஆதரவளித்தார். அரசு தொழில் துறைகள் தனியார் மயமாக்கப்படுவதையும், சர்வதேச அளவில் ஒரு மிதமான நிலையைக் கொண்டிருக்கவும் விரும்பினார்.

1997இல் ரப்சஞ்சனிக்குப் பிறகு மிதவாத சீர்திருத்தவாதியான முகமது கத்தாமி பதவிக்கு வந்தார். அவரது அரசாங்கமானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஆதரவளித்தது. ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பயனுள்ள தூதரக உறவுகளுக்கு முன்னுரிமை கொடுத்தது. ஒரு கட்டற்ற சந்தை மற்றும் அயல்நாட்டு முதலீட்டுக்கு ஆதரவளித்த ஒரு பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வந்தார்.

2005ஆம் ஆண்டு அதிபர் தேர்தலானது பழமைவாதப் புகழாளரும், தேசியவாத வேட்பாளருமான மகுமூத் அகமதிநெச்சாத்தை அதிகாரத்துக்குக் கொண்டு வந்தது. இவர் தன் பிடிவாதமான பார்வைகள், அணு ஆயுதமயமாக்கம், மற்றும் இசுரேல், சவூதி அரேபியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிற அரசுகளுக்கு எதிரான பகைமை ஆகியவற்றுக்காக அறியப்பட்டார். தன் அதிபர் பதவி குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க நாடாளுமன்றத்தால் அழைப்பாணையிடப்பட்ட முதல் அதிபர் இவர் ஆவார்.[177]

தெகுரானில் ஈரான் 2012ஆம் ஆண்டின் அணி சேரா இயக்க மாநாட்டை நடத்தியது. 120 நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

2013இல் மையவாதியும், சீர்திருத்தவாதியுமான அசன் ரூகானி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்நாட்டுக் கொள்கையில் இவர் தனி நபர் சுதந்திரம், தகவல்களுக்கான சுதந்திரமான அனுமதி, மற்றும் மேம்பட்ட பெண்ணுரிமை ஆகியவற்றை ஊக்குவித்தார். சமரச மடல்களின் பரிமாற்றம் மூலம் ஈரானின் தூதரக உறவுகளை இவர் மேம்படுத்தினார்.[178] இணைந்த அகல் விரிவான திட்டச் செயலானது 2015இல் வியன்னாவில் ஈரான், பி5+1 (ஐ. நா. பாதுகாப்பு அவை + செருமனி) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையே எட்டப்பட்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதற்கான கட்டுப்பாடுகளை ஈரான் ஏற்றுக் கொண்டால் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்பதை மையமாகக் கொண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.[179] எனினும், 2018இல் டிரம்ப் நிர்வாகத்தின் கீழான ஐக்கிய அமெரிக்காவானது இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது. புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஈரானுக்குப் பொருளாதார உதவிகள் கிடைப்பதை இது சட்டப்படி செல்லுபடியாகததாக்கியது, ஒப்பந்தத்தை இடர்ப்பாட்டு நிலைக்கு உள்ளாக்கியது, மற்றும் ஈரானை அணு ஆயுத உருவாக்கத்தின் தொடக்க நிலைக்குக் கொண்டு வந்தது.[180] 2020இல் இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் தளபதியும், ஈரானிலேயே மிக சக்தி வாய்ந்த 2வது நபராகிய காசிம் சுலைமானி[181] ஐக்கிய அமெரிக்காவால் அரசியல் கொலை செய்யப்பட்டார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தை அதிகரித்தது.[182] ஈராக்கிலிருந்த ஐக்கிய அமெரிக்க இராணுவ விமான தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கர்கள் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தொலைதூர ஏவுகணைத் தாக்குதல் இதுவாகும்;[183] 110 பேருக்கு இத்தாக்குதலால் புறவழி மூளைக் காயங்கள் ஏற்பட்டன.[184][185][186]

பிடிவாதக் கொள்கையுடைய இப்ராகிம் ரையீசி 2021இல் அதிபராக மீண்டும் போட்டியிட்டார். அசன் ரூகானிக்குப் பிறகு பதவிக்கு வந்தார். ரையீசியின் பதவிக் காலத்தின் போது, ஈரான் யுரேனியம் செறிவூட்டுவதைத் தீவிரப்படுத்தியது, சர்வதேச ஆய்வுகளைக் கட்டுப்படுத்தியது, சாங்காய் ஒத்துழைப்பு மாநாடு மற்றும் பிரிக்சு ஆகிய அமைப்புகளில் இணைந்தது, உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்புக்கு ஆதரவளித்தது, மற்றும் சவூதி அரேபியாவுடனான தூதரக உறவுகளை மீண்டும் கொண்டு வந்தது. ஏப்பிரல் 2024இல், ஓர் ஈரானியத் துணைத் தூதரகம் மீதான இசுரேலின் விமானத் தாக்குதலானது இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் தளபதி ஒருவரைக் கொன்றது.[187][188] ஆளில்லாத வானூர்திகள், சீர்வேக மற்றும் தொலைதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது; இதில் 9 இசுரேலைத் தாக்கின.[189][190][191] சில ஈரானிய ஆளில்லாத வானூர்திகளை அழிக்க இசுரேலுக்கு மேற்குலக மற்றும் சோர்தானிய இராணுவங்கள் உதவி புரிந்தன.[192][193] வரலாற்றின் மிகப் பெரிய ஆளில்லாத வானூர்தித் தாக்குதல்,[194] ஈரானிய வரலாற்றின் மிகப் பெரிய ஏவுகணைத் தாக்குதல்,[195] இசுரேல் மீதான ஈரானின் முதல் நேரடித் தாக்குதல்[196][197] மற்றும் 1991ஆம் ஆண்டிலிருந்து இசுரேல் ஒரு நாட்டால் நேரடியாகத் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.[198] காசா முனை மீதான இசுரேலின் படையெடுப்புக்கு நடுவிலான அதிகபட்ச பதற்றங்களுக்கு மத்தியில் இது நடைபெற்றது.

மே 2024இல், ஒரு உலங்கூர்தி விபத்தில் அதிபர் ரையீசி கொல்லப்பட்டார். அரசியலமைப்பின் படி சூனில் ஈரான் ஒரு அதிபர் தேர்தலை நடத்தியது. சீர்திருத்த அரசியல்வாதியும், முன்னாள் மருத்துவத் துறை அமைச்சருமான மசூத் பெசஸ்கியான் அதிகாரத்திற்கு வந்தார்.[199][200]

புவியியல்

[தொகு]
ஆசியாவில் உள்ள மிக உயரமான எரிமலையான தமவந்த் எரிமலை. பாரசீகப் பழங்கதைகளில் இம்மலை ஒரு தனித்துவமான இடத்தைக் கொண்டுள்ளது.
மாசாந்தரான் மாகாணத்தில் உள்ள பில்பந்த் பகுதியில் உள்ள காட்டு மலைகள்.

ஈரான் 16,48,195 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. முழுவதுமாக ஆசியாவில் உள்ள நாடுகளில் இது ஆறாவது மிகப் பெரிய நாடாகும். மேற்கு ஆசியாவில் இது இரண்டாவது மிகப் பெரிய நாடாகும்.[201] 24° மற்றும் 40° வடக்கு அட்சரேகைக்கு இடையிலும், 44° மற்றும் 64° கிழக்கு தீர்க்க ரேகைக்கு இடையிலும் இது அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடமேற்கே ஆர்மீனியாவும் (35 கிலோமீட்டர்), அசர்பைசானுடன் இணைக்கப்படாத அதன் பகுதியான நக்சிவானும் (179 கிலோமீட்டர்),[202] மற்றும் அசர்பைசான் குடியரசு (616 கிலோமீட்டர்) ஆகியவையும் எல்லைகளைக் கொண்டுள்ளன. இந்நாட்டுக்கு வடக்கே காசுப்பியன் கடலும், வடகிழக்கே துருக்மெனிஸ்தானும் (992 கிலோமீட்டர்), கிழக்கே ஆப்கானித்தான் (936 கிலோமீட்டர்) மற்றும் பாக்கித்தானும் (909 கிலோமீட்டர்) அமைந்துள்ளன. இந்நாட்டுக்குத் தெற்கே பாரசீக வளைகுடாவும், ஓமான் குடாவும் அமைந்துள்ளன. மேற்கே ஈராக்கு (1458 கிலோமீட்டர்) மற்றும் துருக்கி (499 கிலோமீட்டர்) ஆகியவை அமைந்துள்ளன.

நிலநடுக்கஞ்சார்ந்த செயல்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் ஈரான் அமைந்துள்ளது.[203] சராசரியாக ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ரிக்டர் அளவுகோலில் ஏழு என்ற அளவுடைய நிலநடுக்கமானது இந்நாட்டில் நிகழ்கிறது.[204] பெரும்பாலான நிலநடுக்கங்களானவை ஆழமில்லாத பகுதியில் நடைபெறுகின்றன. இவை மிகவும் அழிவு ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட பாம் நிலநடுக்கம் ஆகும்.

ஈரான் ஈரானியப் பீடபூமியைத் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகின் மிகப் மலைப்பாங்கான நாடுகளில் இதுவும் ஒன்றாகும். வடிநிலங்கள் அல்லது பீடபூமிகளைப் பிரிக்கும் கூர்மையான மலைத்தொடர்கள் இதன் நிலப்பகுதி மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நாட்டின் மிகுந்த மக்கள் தொகையுடைய மேற்குப் பகுதியானது மிகுந்த மலைப்பாங்கானதாகவும் உள்ளது. இங்கு காக்கசஸ், சக்ரோசு மற்றும் அல்போர்சு போன்ற மலைத் தொடர்கள் காணப்படுகின்றன. அல்போர்சு மலைத் தொடரானது தமவந்த் மலையைக் கொண்டுள்ளது. இதுவே ஈரானின் அதிக உயரமான புள்ளியாகும். இதன் உயரம் 5,610 மீட்டர் ஆகும். ஆசியாவில் உள்ள மிக உயரமான எரிமலை இதுவாகும். ஈரானின் மலைகளானவை இதன் அரசியல் மற்றும் பொருளாதாரம் மீது நூற்றாண்டுகளாகத் தாக்கம் செலுத்தி வருகின்றன.

வடக்குப் பகுதியானது அடர்த்தியும், செழிப்பும் மிக்க கடல் மட்டத்தில் உள்ள காசுப்பியன் ஐர்கானியக் காடுகளால் மூடப்பட்டுள்ளது. இக்காடுகள் காசுப்பியன் கடலின் தெற்குக் கரையோரப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளன. நாட்டின் கிழக்குப் பகுதியானது பெரும்பாலும் காவிர் பாலைவனம் போன்ற பாலைவன வடிநிலங்களைப் பெரும்பாலும் கொண்டுள்ளது. காவிர் இந்த நாட்டின் மிகப் பெரிய பாலைவனம் ஆகும். மேலும், கிழக்குப் பகுதியில் லூத் பாலைவனம், உப்பு ஏரிகள் போன்றவை அமைந்துள்ளன. லூத் பாலைவனமானது பூமியின் மேற்பரப்பிலேயே பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான இடமாக உள்ளது. 2005ஆம் ஆண்டு இங்கு 70.7°C வெப்பம் பதிவிடப்பட்டது.[205][206][207][208] காசுப்பியன் கடலின் கரையோரம் மற்றும் பாரசீக வளைகுடாவின் வடக்கு முடிவு ஆகியவற்றுக்குப் பக்கவாட்டில் நாட்டின் ஒரே பெரும் சமவெளிகளின் காணப்படுகின்றன. பாரசீக வளைகுடாவின் வடக்கு முடிவில் இந்நாடானது அர்வந்த் ஆற்றின் வாய்ப் பகுதியில் எல்லைகளைக் கொண்டுள்ளது. பாரசீக வளைகுடா, ஓர்முசு நீரிணை மற்றும் ஓமான் குடா ஆகியவற்றின் எஞ்சிய கடற்கரையின் பக்கவாட்டில் சிறிய, தொடர்ச்சியற்ற சமவெளிகள் காணப்படுகின்றன.[209][210][211]

தீவுகள்

[தொகு]
பாரசீக வளைகுடாவின் ஹோர்முஸ் தீவில் உள்ள ஒரு கடலோரத் தங்கும் வளாகமான மசாரா குடியிருப்பு.

ஈரானின் தீவுகளானவை முதன்மையாகப் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ளன. ஈரான் உருமியா ஏரியில் 102 தீவுகளையும், அராசு ஆற்றில் 427 தீவுகளையும், அன்சாலி கடற்கழியில் பல தீவுகளையும், காசுப்பியன் கடலில் அசுராத் தீவையும், ஓமான் கடலில் செய்தன் தீவையும் மற்றும் பிற உள் நிலத் தீவுகளையும் கொண்டுள்ளது. பாக்கித்தானுக்கு அருகில் ஓமான் குடாவின் தொலை தூர முடிவில் ஒரு மக்களற்ற தீவை ஈரான் கொண்டுள்ளது. ஒரு சில தீவுகள் சுற்றுலாப் பயணிகளால் அடையக் கூடியவையாக உள்ளன. பெரும்பாலானவை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன அல்லது காட்டு விலங்குகளைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கான நுழைவானது தடை செய்யப்பட்டுள்ளது அல்லது நுழைய அனுமதி பெற வேண்டியுள்ளது.[212][213][214]

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் குடாவுக்கு இடையில் உள்ள ஓர்முசு நீரிணையில் உள்ள பமுசா மற்றும், பெரிய மற்றும் சிறிய துன்புகள் ஆகிய தீவுகளின் கட்டுப்பாட்டை ஈரான் 1971ஆம் ஆண்டு பெற்றது. இத்தீவுகள் சிறியவையாகவும், மிகக் குறைவான இயற்கை வளங்கள் அல்லது மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும் இவற்றின் உத்தி ரீதியிலான அமைவிடத்திற்காக இவை மிகவும் மதிப்புடையவையாக உள்ளன.[215][216][217][218][219] இத்தீவுகளின் இறையாண்மையை ஐக்கிய அரபு அமீரகம் கோருகிறது.[220][221][222] எனினும், ஈரானிடமிருந்து தொடர்ச்சியாக ஒரு கடுமையான எதிர் வினையை இதற்காகப் பெற்று வருகிறது.[223][224][225] இத்தீவுகளின் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பின்புலம் இதற்கு அடிப்படையாக உள்ளது.[226] இத்தீவுகள் மீதான முழுமையான கட்டுப்பாட்டை ஈரான் கொண்டுள்ளது.[227]

ஒரு கட்டற்ற வணிக வலயமான கீஷ் தீவானது நுகர்வோரின் சொர்க்கம் என்று புகழப்படுகிறது. இங்கு வணிக வளாகங்கள், கடைகள், சுற்றுலா பயணிகளுக்கான ஈர்ப்புகள் மற்றும் சொகுசுத் தங்கும் விடுதிகள் ஆகியவை உள்ளன. ஈரானில் உள்ள மிகப் பெரிய தீவு கெசிம் ஆகும். இது 2016ஆம் ஆண்டு முதல் ஒரு யுனெஸ்கோ உலகளாவியப் புவியியல் பூங்காவாக உள்ளது.[228][229][230] இதன் உப்புக் குகையான நமக்தன் உலகிலேயே மிகப் பெரிய உப்புக் குகையாகும். உலகில் உள்ள மிக நீளமான குகைகளில் இதுவும் ஒன்றாகும்.[231][232][233][234]

காலநிலை

[தொகு]
கோப்பென் காலநிலை வகைப்பாடு.

ஈரானின் காலநிலையானது வேறுபட்டதாக உள்ளது. வறண்டது மற்றும் பகுதியளவு வறண்டது முதல் அயன அயல் மண்டலம் வரையிலான காலநிலையானது காசுப்பியன் கடற்கரை மற்றும் வடக்கு காடுகளின் பக்கவாட்டில் காணப்படுகிறது.[235] இந்நாட்டின் வடக்கு விளிம்பில் வெப்ப நிலையானது அரிதாகவே உறை நிலைக்குக் கீழே செல்கிறது. இப்பகுதியானது தொடர்ந்து ஈரப்பதமுடையதாக உள்ளது. கோடை கால வெப்ப நிலைகள் அரிதாகவே 29°Cக்கும் அதிகமாகின்றன.[236] ஆண்டு மழைப் பொழிவு சமவெளியின் கிழக்குப் பகுதியில் 68 சென்டி மீட்டராகவும், மேற்குப் பகுதியில் 170 சென்டி மீட்டருக்கும் அதிகமானதாகவும் உள்ளது. ஈரானுக்கான ஐ. நா. குடியிருப்போர் ஒருங்கிணைப்பானது "ஈரானில் தற்போது தண்ணீர்ப் பற்றாக்குறையானது மிகக் கடுமையான மனிதப் பாதுகாப்புச் சவாலைக் கொடுப்பதாகக்" கூறுகிறது.[237]

மேற்கே சக்ரோசு வடி நிலத்தில் உள்ள குடியிருப்புகள் குறைவான வெப்பநிலைகளைப் பெறுகின்றன. உறைய வைக்கும் சராசரி தினசரி வெப்பநிலைகளுடனான கடுமையான குளிர்காலங்கள் மற்றும் கடுமையான பனிப்பொழிவை இவை பெறுகின்றன. கிழக்கு மற்றும் மைய வடிநிலங்களானவை வறண்டவையாகும். இங்கு 20 சென்டி மீட்டருக்கும் குறைவான மழையே பொழிகிறது. ஆங்காங்கே பாலைவனங்களும் காணப்படுகின்றன.[238] சராசரி கோடைக்கால வெப்ப நிலையானது அரிதாகவே 38°Cஐ விட அதிகமாகிறது. பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் குடாவின் தெற்குக் கடற்கரை சமவெளிகள் மிதமான குளிர் காலங்களைக் கொண்டுள்ளன. மிகவும் ஈரப்பதமான மற்றும் வெப்பமான கோடை காலங்களைக் கொண்டுள்ளன. ஆண்டு மழைப் பொழிவானது இங்கு 13.5 முதல் 35.5 சென்டி மீட்டர் வரையிலானதாக உள்ளது.[239]

உயிரினப் பல்வகைமை

[தொகு]
ஈரானியப் பீடபூமியை வாழ்விடமாகக் கொண்டுள்ள பாரசீகச் சிறுத்தை.

இந்நாட்டின் பத்தில் ஒரு பங்குக்கும் மேலான நிலப்பரப்பானது காடுகளால் மூடப்பட்டுள்ளது.[240] தேசியப் பயன்பாட்டுக்காக 12 கோடி ஹெக்டேர்கள் அளவுள்ள காடுகளும், நிலப்பரப்புகளும் அரசாங்கத்தினுடையதாக உள்ளன.[241][242] ஈரானின் காடுகளானவை ஐந்து தாவரப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன: நாட்டின் வடக்குப் பகுதியில் பச்சைப் பட்டையை அமைக்கும் ஐர்கானிய பகுதி; ஈரானின் மையப் பகுதியில் முதன்மையாகச் சிதறிக் காணப்படும் துரான் பகுதி; மேற்கே முதன்மையாக ஓக் மரக் காடுகளைக் கொண்டுள்ள சக்ரோசு பகுதி; தெற்குக் கடற்கரைப் பட்டையில் சிதறிக் காணப்படும் பாரசீக வளைகுடா பகுதி; அழகான மற்றும் தனித்துவமான உயிரினங்களைக் கொண்டுள்ள அரசுபரனி பகுதி. இந்நாட்டில் 8,200க்கும் மேற்பட்ட தாவர வகைகள் வளருகின்றன. ஐரோப்பாவைப் போல் நான்கு மடங்கு இயற்கைத் தாவரங்கள் இந்நிலைத்தை மூடியுள்ளன.[243] உயிரினப் பல்வகைமை மற்றும் காட்டுயிர்களைப் பாதுகாக்க 200க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இந்நாட்டில் உள்ளன. 30க்கும் மேற்பட்ட தேசியப் பூங்காக்கள் உள்ளன.

ஈரானின் வாழ்ந்து வரும் உயிரினங்களானவை 34 வௌவால் இனங்கள், இந்தியச் சாம்பல் கீரி, சிறிய இந்தியக் கீரி, பொன்னிறக் குள்ளநரி, இந்திய ஓநாய், நரிகள், வரிக் கழுதைப்புலி, சிறுத்தை, ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை, பழுப்புக் கரடி மற்றும் ஆசியக் கறுப்புக் கரடி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. குளம்பி இனங்களானவை காட்டுப்பன்றி, உரியல் காட்டுச் செம்மறியாடுகள், ஆர்மீனியக் காட்டுச் செம்மறியாடுகள், சிவப்பு மான், மற்றும் கழுத்து தடித்த மறிமான் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.[244][245] இதில் மிகவும் புகழ் பெற்ற விலங்கானது மிக அருகிய இனமான வேங்கைப்புலி ஆகும். இது ஈரானில் மட்டுமே எஞ்சியுள்ளது. ஈரான் அதன் அனைத்து ஆசியச் சிங்கங்களையும், அற்று விட்ட காசுப்பியன் புலிகளையும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இழந்து விட்டது.[246] குளம்பிகளான வீட்டு விலங்குகளானவை செம்மறியாடு, ஆடு, மாடு, குதிரை, எருமை (கால்நடை), கழுதை (விலங்கு) மற்றும் ஒட்டகத்தால் பிரதிநித்துவப்படுத்தப்படுகின்றன. வீசனம், கௌதாரி, பெரிய நாரை, கழுகுகள் மற்றும் வல்லூறுகள் ஆகியவை இந்நாட்டை வாழ்விடமாகக் கொண்ட பறவையினங்கள் ஆகும்.[247][248]

அரசாங்கமும், அரசியலும்

[தொகு]

அதியுயர் தலைவர்

[தொகு]

புரட்சியின் தலைவர் அல்லது அதியுயர் தலைமைத்துவ அதிகாரமுடையவர் என அழைக்கப்படும் அதியுயர் தலைவர் அல்லது "ரபர்" எனப்படுவர் நாட்டுத் தலைவர் ஆவார். இவர் கொள்கை மேற்பார்வைக்கான பொறுப்பைக் கொண்டுள்ளார். ரபருடன் ஒப்பிடும் போது அதிபர் வரம்புக்குட்பட்ட அதிகாரத்தையே கொண்டுள்ளார். ரபரின் ஒப்புதலுடனேயே முக்கியமான அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அயல் நாட்டுக் கொள்கையில் இறுதி முடிவை ரபரே எடுக்கிறார்.[249] பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் அயல்நாட்டு விவகாரங்கள், மேலும் பிற உயர் அமைச்சர் பதவித் துறைகளுக்கான வேட்பாளர்களை அதிபரிடமிருந்து பெற்றதற்குப் பிறகு அமைச்சர்களை நியமிப்பதில் ரபர் நேரடியாகப் பங்கேற்கிறார்.

பிராந்தியக் கொள்கையானது ரபரால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. அயல்நாட்டு விவகாரத்துறை அமைச்சரின் செயலானது மரபுச் சீர்முறை மற்றும் விழாத் தருணங்களுடன் முடித்துக் கொள்ளப்படுகிறது. அரபு நாடுகளுக்கான தூதர்கள் எடுத்துக்காட்டாக குத்ஸ் படைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். குத்ஸ் படைகள் ரபருக்கு நேரடியாக எடுத்துரைக்கின்றன.[250] சட்டத் திருத்தங்களை ரபரால் ஆணையிட முடியும்.[251] இமாம் கொமெய்னியின் ஆணைகளைச் செயல்படுத்தம் செதாத் எனும் அமைப்பானது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் 2013ஆம் ஆண்டு ஐஅ$95 பில்லியன் (6,79,402 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் கணக்குகளானவை நாடாளுமன்றத்துக்கும் கூடத் தெரியாமல் இரகசியமாக உள்ளன.[252][253]

இராணுவப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் இவர் திகழ்கிறார். இராணுவ உதவிகள் மற்றும் பாதுகாப்புச் செயல்பாடுகளை இவர் கட்டுப்படுத்துகிறார். போரையோ அல்லது அமைதியையோ கொண்டு வரும் ஒற்றை அதிகாரத்தை இவர் கொண்டுள்ளார். நீதித்துறை, அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி இணையங்களின் தலைவர்கள், காவல்துறை மற்றும் இராணுவத்தின் தளபதிகள், பாதுகாவலர்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் ரபரால் நியமிக்கப்படுகின்றனர்.

ரபரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பானது வல்லுநர் மன்றத்திடம் உள்ளது. தகுதிகள் மற்றும் பொது மக்கள் மத்தியிலான மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ரபரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் இதற்கு உள்ளது.[254] இன்று வரை வல்லுநர் மன்றமானது ரபரின் எந்த ஒரு முடிவுக்கும் சவால் விடுக்கவில்லை மற்றும் இவரைப் பதவி நீக்கம் செய்ய முயற்சி செய்யவில்லை. நீதித்துறை அமைப்பின் முன்னாள் தலைவரான சதேக் லரிசனி ரபரால் நியமிக்கப்பட்டவர் ஆவார். இவர் ரபர் மீது மேற்பார்வை செய்வது என்பது வல்லுநர் மன்றத்திற்கு சட்டப்படி முறையற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.[255] வல்லுநர் மன்றமானது எந்தவொரு உண்மையான அதிகாரமும் இன்றிப் பெயரளவு மன்றமாக மாறிவிட்டது என பலர் நம்புகின்றனர்.[256][257][258]

இந்த நாட்டின் அரசியல் அமைப்பானது அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[259] எக்கனாமிஸ்ட் பத்திரிகையின் சனநாயகப் பட்டியலில் ஈரான் 2022ஆம் ஆண்டு 154வது இடத்தைப் பிடித்தது.[260] சமூகவாதியும், அரசியல் அறிவியலாளருமான சுவான் சோசு லின்சு 2000ஆம் ஆண்டு "முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஈரானிய அரசானது அரசுக்கு அடிபணியும் சித்தாந்த வளைவு மற்றும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அதிகார மையங்களைக் கொண்ட வரம்புபடுத்தப்பட்ட சர்வாதிகாரத்தை இணைத்துச் செயல்படுவதாக" குறிப்பிட்டுள்ளார்.[261]

அதிபர்

[தொகு]
லூயி பாசுடர் வீதியில் உள்ள அதிபரின் நிர்வாக அரண்மனைக்குச் செல்லும் வாயில். இது அமைச்சரவை சந்திக்கும் இடமாகவும், அதிபரின் அலுவலகமாகவும் உள்ளது.

அதிபரே அரசின் தலைவராக உள்ளார். இரண்டாவது உயர் நிலையில் உள்ள அதிகார மையமாக உள்ளார். அதியுயர் தலைவருக்குப் பிறகு இவருக்கு அதிக அதிகாரம் உள்ளது. நான்காண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தலின் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்தலுக்கு முன்னர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பாதுகாவலர்கள் மன்றத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். பாதுகாப்பு மன்ற உறுப்பினர்கள் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[262] அதியுயர் தலைவருக்கு அதிபரை நீக்கும் அதிகாரம் உள்ளது.[263] அதிபர் மீண்டும் ஒரு முறை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட முடியும்.[264] இராணுவத்தின் துணை தலைமைத் தளபதியாகவும், அதியுயர் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவராகவும், நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு அவசர நிலையைப் பிரகடனப்படுத்த அதிகாரம் உள்ளவராகவும் அதிபர் திகழ்கிறார்.

அரசியலமைப்பு அமல்படுத்தப்படுவதற்கு அதிபர் பொறுப்பாக உள்ளார். ரபரால் அறிவுறுத்தப்படும் ஆணைகள் மற்றும் பொதுக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கான செயல் அதிகாரங்களை பயன்படுத்துபவராகவும் அதிபர் உள்ளார். ரபர் நேரடியாகத் தொடர்புடைய விவகாரங்களைத் தவிர்த்து இவ்வாறு செயல்படுகிறார். ரபருடன் தொடர்புடைய விவகாரங்களில் இறுதி முடிவை ரபரே எடுக்கிறார்.[265] ஒப்பந்தங்கள் மற்றும் பிற பன்னாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது மற்றும் வரவு செலவுடத் திட்ட அறிக்கை, மற்றும் அரசு வேலை வாய்ப்பு விவகாரங்கள் போன்ற விவகாரங்களைச் செயல்படுத்துவதற்காக அதிபர் செயல்படுகிறார். இது அனைத்துமே ரபரால் அங்கீகரிக்கப்பட்ட படி செயல்படுத்தப்படுகின்றன.[266][267]

ரபர் மற்றும் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் பெறப்பட்ட அமைச்சர்களை அதிபர் நியமிக்கிறார். ரபரால் எந்த ஓர் அமைச்சரையும் நீக்கவோ அல்லது மீண்டும் அமைச்சராக்கவோ முடியும்.[268][269][270] மன்றத்தின் அமைச்சர்களை மேற்பார்வையிடுவது, அரசாங்க முடிவுகளை ஒருங்கிணைப்பது, நாடாளுமன்றத்துக்கு முன்னாள் வைக்கப்படும் அரசாங்கக் கொள்கைகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றை அதிபர் செய்கிறார்.[271] அதிபருக்குக் கீழ் எட்டு துணை அதிபர்கள், மேலும் 22 அமைச்சர்கள் சேவையாற்றுகின்றனர். இவர்கள் அனைவருமே அதிபரால் நியமிக்கப்படுகின்றனர்.[272]

பாதுகாவலர்கள் மன்றம்

[தொகு]

அதிபராக மற்றும் நாடாளுமன்றத்துக்காகப் போட்டியிடுபவர்கள் 12 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாவலர்கள் மன்றம் (இதன் உறுப்பினர்கள் அனைவரும் அதியுயர் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்) அல்லது அதியுயர் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். தங்களது கூட்டணியை உறுதிப்படுத்த போட்டியிடுவதற்கு முன்னர் இவ்வாறு ஒப்புதல் பெறப்பட வேண்டும்.[273] அதியுயர் தலைவர் இந்த விண்ணப்பங்களை அரிதாகவே ஆராய்கிறார். ஆனால் ஆராயும் அதிகாரம் அவருக்கு உள்ளது. இவ்வாறான நிலையில் பாதுகாவலர் மன்றத்தின் மேற்கொண்ட ஒப்புதலானது தேவையில்லை. பாதுகாவலர் மன்றத்தின் முடிவுகளை மீள்விக்க அதியுயர் தலைவரால் முடியும்.[274]

அரசியலமைப்பானது மன்றத்திற்கு மூன்று அதிகாரங்களைக் கொடுக்கிறது. நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் மீதான இரத்து அதிகாரம்,[275][276] தேர்தல்களை மேற்பார்வையிடுவது[277] மற்றும் உள்ளூர், நாடாளுமன்ற, அதிபர் அல்லது நிபுணர்களின் அவைத் தேர்தல்கள் ஆகியவற்றில் போட்டியிட விரும்பும் மனுதாரர்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது அவர்களைத் தகுதி நீக்கம் செய்வது போன்ற அதிகாரங்களைப் பாதுகாவலர் மன்றமானது கொண்டுள்ளது.[278] மன்றத்தால் இரு வழிகளில் ஒரு சட்டத்தை இரத்து செய்ய முடியும். சட்டங்கள் இசுலாமியச் சட்ட முறைமைக்கு எதிராக இருந்தால் அல்லது அரசியலமைப்புக்கு எதிராக இருந்தால் இரத்து செய்ய முடியும்.[279]

அதியுயர் தேசியப் பாதுகாப்பு மன்றம்

[தொகு]

அதியுயர் தேசியப் பாதுகாப்பு மன்றமானது பன்னாட்டுக் கொள்கை முடிவுகளை எடுக்கும் செயல் முறையில் முதன்மையான அதிகாரத்தைக் கொண்டுள்ளது.[280][281][282] தேசிய விவகாரங்களைப் பாதுகாப்பது மற்றும் ஆதரவு அளிப்பது, புரட்சி, நிலப்பரப்பு ஒருமைப்பாடு மற்றும் தேசிய இறையாண்மை ஆகியவற்றுக்கான 1989ஆம் ஆண்டின் ஈரானிய அரசியலமைப்புப் பொது வாக்கெடுப்பின் போது இந்த மன்றமானது உருவாக்கப்பட்டது.[283] அரசியலமைப்பின் 176வது பிரிவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குத் தலைவராக அதிபர் உள்ளார்.[284][285]

அதியுயர் மன்றத்தின் செயலாளரை அதியுயர் தலைவர் தேர்ந்தெடுக்கிறார். அதியுயர் தலைவரால் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு மன்றத்தின் முடிவுகளானவை அமல்படுத்தப்படும். இந்த மன்றமானது அணு ஆயுதக் கொள்கையை உருவாக்குகிறது. அதியுயர் தலைவரால் உறுதிப்படுத்தப்பட்டால் இக்கொள்கை அமல்படுத்தப்படும்.[286][287]

நாடாளுமன்றம்

[தொகு]
ஈரானிய நாடாளுமன்றமானது 290 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

நாடாளுமன்றம் அல்லது "மசிலேசு" என்று அறியப்படும் சட்டவாக்க அவையானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் 290 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஓரவை முறைமை ஆகும்.[288] இது சட்டங்களை இயற்றுகிறது, பன்னாட்டு ஒப்பந்தங்களை அமல்படுத்துகிறது, தேசிய வரவு செலவுத் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவையைச் சேர்ந்த சட்டங்களுக்கு பாதுகாவலர் மன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.[289][290] பாதுகாவலர் மன்றத்தால் நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை நீக்க முடியும். இதற்கு முன்னர் மன்றம் நீக்கியும் உள்ளது.[291][292] பாதுகாவலர் மன்றம் இல்லாமல் நாடாளுமன்றத்திற்கு சட்ட முறைமை நிலை கிடையாது. சட்டங்களை இரத்து செய்யும் முழுமையான அதிகாரத்தைப் பாதுகாவலர் மன்றமானது கொண்டுள்ளது.[293]

நீதித்துறை மன்றமானது நாடாளுமன்றம் மற்றும் பாதுகாப்பு மன்றத்துக்கு இடையிலான பிரச்சனைகளுக்கு நீதி வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அதியுயர் தலைவருக்கு ஓர் ஆலோசனை அமைப்பாக இது சேவையாற்றுகிறது. ஈரானில் மிக சக்தி வாய்ந்த அரசாங்க அமைப்புகளில் ஒன்றாக இது இதை ஆக்குகிறது.[294][295]

ஈரானின் நாடாளுமன்றமானது 207 தொகுதிகளைக் கொண்டுள்ளது. சமயச் சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 இடங்களும் இதில் அடங்கும். எஞ்சிய 202 தொகுதிகள் நிலப்பரப்பு சார்ந்தவை ஆகும். ஒவ்வொரு தொகுதியும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஈரானின் மண்டலங்களை உள்ளடக்கியுள்ளன.

சட்டம்

[தொகு]

ஈரான் இசுலாமியச் சட்ட முறைமையின் ஒரு வடிவத்தை அதன் சட்ட அமைப்பாகப் பயன்படுத்துகிறது. இதில் ஐரோப்பியப் குடிமையியல் சட்டத்தின் காரணிகளும் அடங்கியுள்ளன. அதியுயர் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் தலைமை அரசு வழக்கறிஞரை நியமிக்கிறார். பல்வேறு வகையான நீதிமன்றங்கள் உள்ளன. பொது மற்றும் குற்ற வழக்குகளை விசாரிக்கும் பொது நீதிமன்றங்கள், தேசிய பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் போன்ற குறிப்பிட்ட குற்றங்களை விசாரிக்கும் புரட்சி நீதிமன்றங்கள் ஆகியவை இதில் அடங்கும். புரட்சி நீதிமன்றங்களின் முடிவுகளானவை இறுதியானவையாகும். அவற்றை மேல் முறையீடு செய்ய முடியாது.

தலைமை நீதிபதியே நீதி அமைப்பின் தலைவர் ஆவார். நீதி அமைப்பின் நிர்வாகம் மற்றும் மேற்பார்வையிடுதலுக்கு இவர் பொறுப்பேற்றுள்ளார். ஈரானிய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இவர் ஆவார். நீதித்துறை அமைச்சராக சேவையாற்றுவதற்கான மனுதாரர்களை உச்சநீதிமன்ற நீதிபதி முன் மொழிகிறார். அதிபர் அதில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதியால் இரு ஐந்தாண்டு காலங்களுக்குச் சேவையாற்ற முடியும்.[296]

சிறப்பு மதகுரு நீதிமன்றமானது மதகுருக்களால் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களை விசாரிக்கிறது. எனினும் இது சாதாரண மக்கள் தொடர்பான வழக்குகளையும் விசாரித்துள்ளது. பொதுவான நீதி அமைப்பிலிருந்து சுதந்திரமாக சிறப்பு மதகுரு நீதிமன்றத்தின் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. இந்நீதிமன்றங்கள் ரபருக்கு மட்டுமே பதில் சொல்ல வேண்டும். நீதிமன்றங்களின் முடிவுகளே இறுதியானவையாகும். இவற்றை மேல்முறையீடு செய்ய முடியாது.[297] நிபுணர்களின் மன்றமானது ஆண்டுக்கு ஒரு வாரம் சந்திக்கிறது. இதில் 86 "ஒழுக்கமிக்க மற்றும் கற்றறிந்த" மதகுருமார்கள் எட்டாண்டு காலங்களுக்கு வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]

ஈரான் 31 மாகாணங்களாகப் (பாரசீகம்: استان, ஒசுதான்) பிரிக்கப்பட்டுள்ளது. ஓர் உள்ளூர் மையத்தில் இருந்து இவை ஒவ்வொன்றும் நிர்வகிக்கப்படுகின்றன. இம்மையங்கள் பொதுவாக மிகப் பெரிய உள்ளூர் நகரமாக உள்ளன. இவை அம்மாகாணத்தின் தலைநகரம் (பாரசீகம்: مرکز, மருகசு) என்று அழைக்கப்படுகின்றன. மாகாண அதிகாரமானது ஆளுநர் (பாரசீகம்: استاندار, ஒசுதாந்தர்) என்பவரால் தலைமை தாங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலுடன் உள் துறை அமைச்சரால் இந்த ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.[298]

ஈரானின் மாகாணங்களின் வரைபடம்

அயல் நாட்டு உறவுகள்

[தொகு]
ஈரானுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ள நாடுகளின் வரைபடம்

165 நாடுகளுடன் ஈரான் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது. ஆனால், ஐக்கிய அமெரிக்கா மற்றும் இசுரேலுடன் இது தூதரக உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. 1979ஆம் ஆண்டு ஈரான் ஒரு நாடக இசுரேலின் அங்கீகாரத்தை ரத்து செய்தது.[299]

வேறுபட்ட அரசியல் மற்றும் சித்தாந்தங்கள் காரணமாக சவூதி அரேபியாவுடன் ஈரான் பகைமையான உறவைக் கொண்டுள்ளது. சிரியா, லிபியா, மற்றும் தென்காக்கேசியா போன்ற நவீன சார்பாண்மைச் சண்டைகளில் ஈரானும், துருக்கியும் ஈடுபட்டுள்ளன.[300][301][302] எனினும், குறுதியப் பிரிவினைவாதம் மற்றும் கத்தார் தூதரகப் பிரச்சனை போன்ற பொதுவான ஆர்வங்களையும் இரு நாடுகளும் கொண்டுள்ளன.[303][304] தஜிகிஸ்தானுடன் ஈரான் ஒரு நெருக்கமான மற்றும் வலிமையான உறவைக் கொண்டுள்ளது.[305][306][307][308] ஈராக்கு, லெபனான் மற்றும் சிரியாவுடன் ஈரான் ஆழமான பொருளாதார உறவுகள் மற்றும் கூட்டணியைக் கொண்டுள்ளது. சிரியா பொதுவாக ஈரானின் "நெருங்கிய கூட்டாளி" என்று குறிப்பிடப்படுகிறது.[309][310][311]

அயல் நாட்டு விவகார அமைச்சகத்தின் கட்டடம். இது அதன் முகப்புப் பகுதியில் அகாமனிசியக் கட்டடக் கலையை விரிவாகப் பயன்படுத்தியுள்ளது. தெகுரானின் தேசியத் தோட்டம் எனும் இடம்.

உருசியா ஈரானின் ஒரு முதன்மையான வணிகக் கூட்டாளியாக உள்ளது. குறிப்பாக ஈரானின் மிகையான எண்ணெய் வள வணிகத்தில் கூட்டாளியாக உள்ளது.[312][313] இரு நாடுகளும் ஒரு நெருக்கமான பொருளாதார மற்றும் இராணுவக் கூட்டணியைக் கொண்டுள்ளன. மேற்குலக நாடுகளால் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகியுள்ளன.[314][315][316][317] வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்புக்கு இணையான உருசியாவை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒப்பந்த அமைப்பான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பில் இணைவதற்காக அழைக்கப்பட்ட மேற்கு ஆசியாவில் உள்ள ஒரே ஒரு நாடு ஈரான் ஆகும்.[318]

பொருளாதார ரீதியாக ஈரான் மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவு முறைகளானவை வலிமையாக உள்ளன. இரு நாடுகளும் ஒரு நட்பான, பொருளாதார மற்றும் உத்தி ரீதியிலான உறவு முறையை மேம்படுத்தியுள்ளன. 2021இல் ஈரானும், சீனாவும் ஒரு 25 ஆண்டு கால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை இது வலிமைப்படுத்தும். "அரசியல், உத்தி ரீதியிலான மற்றும் பொருளாதார" காரணிகளை இது உள்ளடக்கியிருக்கும்.[319] ஈரான்-சீன உறவுகளானவை குறைந்தது பொ. ஊ. மு. 200ஆம் ஆண்டு முதலே இருந்து வந்துள்ளன. அதற்கு முன்னரும் உறவு முறைகள் இருந்திருக்க வாய்ப்பிருந்துள்ளது.[320][321] வட மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளுடனும் ஒரு நல்ல உறவு முறையைக் கொண்டுள்ள உலகிலுள்ள சில நாடுகளில் ஈரானும் ஒன்றாகும்.[322]

ஈரான் தசமக் கணக்கிலான பன்னாட்டு அமைப்புகளின் ஓர் உறுப்பினராக உள்ளது. இதில் ஜி-15, ஜி-24, ஜி-77, பன்னாட்டு அணுசக்தி முகமையகம், பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி, பன்னாட்டு முன்னேற்ற அமைப்பு, கூட்டுசேரா இயக்கம், இசுலாமிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நிதி கூட்டுத்தாபனம், பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, அனைத்துலக நாணய நிதியம், பன்னாட்டு கடல்சார் அமைப்பு, பன்னாட்டுக் காவலகம், இசுலாமிய ஒத்துழைப்புக் கூட்டமைப்பு, ஓப்பெக், உலக சுகாதார அமைப்பு, மற்றும் ஐக்கிய நாடுகள் அவை ஆகியவை அடங்கும். தற்போது ஈரான் உலக வணிக அமைப்பில் பார்வையாளர் நிலையைக் கொண்டுள்ளது.

இராணுவம்

[தொகு]
நடுத்தர தூரம் பாவம் பாயும் ஏவுகணையான செச்சில். ஈரான் உலகின் 6வது நிலையிலுள்ள ஏவுகணை சக்தியாகும். அதிமீயொலி ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உடைய உலகின் 5வது நாடு ஈரான் ஆகும்.

ஈரானின் இராணுவமானது ஓர் ஒன்றிணைக்கப்பட்ட அமைப்பின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. ஈரான் இசுலாமியக் குடியரசின் ஆயுதம் ஏந்திய படைகளானவை ஈரான் இசுலாமியக் குடியரசின் இராணுவத்தை உள்ளடக்கியுள்ளது. இதில் தரைப்படை, வான் பாதுகாப்புப் படை, விமானப்படை மற்றும் கப்பற்படை ஆகியவை அடங்கியுள்ளன; இசுலாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைகளானவை தரைப்படை, விண்வெளிப் படை கப்பற்படை, குத்ஸ் படைகள், மற்றும் பசிச் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன; சென்டர்மே என்ற பெயரில் பிரான்சு மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளில் உள்ள துணை இராணுவப் படையின் செயலை ஒத்தவாறு ஈரானின் பராசா எனும் சட்ட அமல்படுத்தும் துறை எனும் காவல் துறையும் செயல்படுகிறது. ஈரான் இசுலாமியக் குடியரசின் விமானப்படை நாட்டின் இறையாண்மையை ஒரு பாரம்பரிய வழியில் பாதுகாக்கும் அதே நேரத்தில் இசுலாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைகள் குடியரசின் ஒருமைப்பாட்டை அயல்நாட்டுத் தலையீடு, ஆட்சிக் கவிழ்ப்புங்கள் மற்றும் உள்நாட்டு ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, பாதுகாப்பை உறுதி செய்வதற்குக் கடமைப்பட்டுள்ளன.[323] 1925 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்களும் ஈரான் இசுலாமியக் குடியரசின் விமானப்படை அல்லது இசுலாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைகளில் சுமார் 14 மாதங்களுக்குக் கட்டாயம் சேவையாற்ற வேண்டும் என்று உள்ளது.[324][325]

ஈரான் 6.10 இலட்சத்துக்கும் மேற்பட்ட செயல்பாட்டிலுள்ள துருப்புகளையும், சுமார் 3.50 இலட்சம் சேமக் கையிருப்பு இராணுவத்தினரையும், மொத்தமாக 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களையும் கொண்டுள்ளது. உலகில் மிக அதிகமான சதவீதங்களில் இராணுவப் பயிற்சியுடன் கூடிய குடிமக்களையுடைய நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.[326][327][328][329] இசுலாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைகளுக்குள் உள்ள பசிச் எனப்படும் ஒரு துணை இராணுவத் தன்னார்வப் படைத்துறை சாராப் படையானது 2 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அழைத்தால் இதில் 6 இலட்சம் பேர் உடனடியாகச் சேர்வதற்குத் தயாராக உள்ளனர். 3 இலட்சம் சேமக் கையிருப்பு வீரர்கள் உள்ளனர். தேவைப்படும் போது 10 இலட்சம் பேரை இதில் ஒருங்கிணைக்க முடியும்.[330][331][332][333] பராசா எனும் ஈரானியச் சீருடைக் காவல்துறையானது 2.60 இலட்சத்துக்கும் மேற்பட்ட செயல்பாட்டிலுள்ள காவலர்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலான புள்ளியியல் அமைப்புகள் தங்களது மதிப்பீட்டு அறிக்கைகளில் பசிச் மற்றும் பராசாவைச் சேர்ப்பதில்லை.

பசிச் மற்றும் பராசாவைத் தவிர்த்துப் பார்க்கும் போது ஈரான் ஒரு முதன்மையான இராணுவ சக்தியாக அடையாளப்படுத்தப்படுகிறது. இதன் ஆயுதமேந்திய படைகளின் அளவு மற்றும் ஆற்றல் காரணமாக இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. ஈரான் உலகின் 14வது வலிமையான இராணுவத்தைக் கொண்டுள்ளது.[334] ஒட்டு மொத்த இராணுவ வலிமையில் உலகளவில் 13ஆம் இடத்தை இது பெறுகிறது. செயல்பாட்டிலுள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் 7வது இடத்தில் உள்ளது.[335] இதன் தரைப்படை மற்றும் கவசமுடை ய வாகனப் படையின் அளவில் இது 9வது இடத்தைப் பெறுகிறது. மேற்கு ஆசியாவில் உள்ள மிகப் பெரிய இராணுவமானது ஈரானின் ஆயுதம் ஏந்திய படைகளாகும். மத்திய கிழக்கில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான இராணுவத்துடன் தொடர்புடைய விமானப் படையை இது கொண்டுள்ளது.[336][337][338] இராணுவத்திற்கு நிதி ஒதுக்குவதில் உலகின் முதல் 15 நாடுகளுக்குள் ஈரான் உள்ளது.[339] 2021இல் இதன் இராணுவச் செலவீனங்களானவை நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக ஐஅ$24.6 பில்லியன் (1,75,929.4 கோடி) ஆக அதிகரித்தன. இது ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% ஆகும்.[340] இசுலாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைகளுக்கான நிதி ஒதுக்கீடானது 2021ஆம் ஆண்டில் ஈரானின் மொத்த இராணுவ நிதி ஒதுக்கீட்டில் 34% ஆக இருந்தது.[341]

ஈரானியப் புரட்சிக்குப் பிறகு அயல்நாட்டு வாணிகத் தடையாணைகளைச் சமாளிப்பதற்காக ஈரான் ஓர் உள்நாட்டு இராணுவத் தொழில் துறையை உருவாக்கியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பீரங்கி வண்டிகள், வீரர்களை ஏற்றிச் செல்லும் கவச வாகனங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகனை எதிர்ப்புக் கப்பல்கள், கதிரலைக் கும்பா அமைப்புகள், உலங்கு வானூர்திகள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் சண்டை வானூர்திகள் ஆகியவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன் இந்தத் தொழில் துறைக்கு உள்ளது.[342] குறிப்பாக, எறிகணைகள் போன்ற முன்னேறிய ஆயுதங்களை உருவாக்குவதில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.[343][n 1] இதன் தொடர்ச்சியாக மத்திய கிழக்கில் ஈரான் மிகப் பெரிய மற்றும் மிகப் பல் வகையான தொலைதூர ஏவுகணைகளை உடைய படைக்கலத்தைக் கொண்டுள்ளது. அதிமீயொலி ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உடைய உலகின் 5வது நாடு ஈரான் ஆகும்.[344][345] உலகின் 6வது மிகப் பெரிய ஏவுகணை சக்தி ஈரான் ஆகும்.[346] ஒரு பல்வேறு வகைப்பட்ட ஆளில்லா வானூர்திகளை வடிவமைத்து ஈரான் உற்பத்தி செய்கிறது. ஆளில்லா வானூர்திப் போர் முறை மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு உலகளாவிய தலைமை நாடு மற்றும் வல்லரசாக ஈரான் கருதப்படுகிறது.[347][348][349] இணையப் போர் ஆற்றல்களையுடைய உலகின் ஐந்து நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். "பன்னாட்டு இணைய அரங்கில் மிகுந்த செயல்பாட்டில் உள்ள நாடுகளில் ஒன்றாக" ஈரான் அடையாளப்படுத்தப்படுகிறது.[350][351][352] 2000களில் இருந்து ஈரான் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் ஒரு முக்கியமான நாடாக இருந்து வந்துள்ளது.[353]

உக்ரைன் மீதான படையெடுப்பின் போது ஈரானிய ஆளில்லா வானூர்திகளை உருசியா விலைக்கு வாங்கியதைத் தொடர்ந்து[354][355][356] நவம்பர் 2023இல் ஈரான் இசுலாமியக் குடியரசின் விமானப் படையானது உருசிய சுகோய் எஸ்யு-35 சண்டை வானூர்திகள், மில் மி-28 தாக்குதல் உலங்கு வானூர்திகள், வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கு ஒப்பந்தங்களை இறுதி செய்தது.[357][358] உருசியா மற்றும் சீனாவுடன் கூட்டுப் போர் ஒத்திகைகளில் ஈரானியக் கப்பற்படை இணைந்துள்ளது.[359]

அணு ஆயுதத் திட்டம்

[தொகு]

ஈரானின் அணு ஆயுதத் திட்டமானது 1950களில் இருந்து நடைபெற்று வருகிறது.[360] புரட்சிக்குப் பின் ஈரான் இதை மீண்டும் தொடங்கியது. செறிவூட்டும் திறன் உள்ளிட்ட இதன் விரிவான அணு ஆயுத எரி சக்திச் சுழற்சியானது செறிவான பன்னாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளின் ஓர் இலக்காகிப் போனது.[361] ஈரான் குடிசார் அணு சக்தித் தொழில் நுட்பத்தை ஓர் அணு ஆயுதத் திட்டமாக மாற்றலாம் என்ற கவலையைப் பல நாடுகள் வெளிப்படுத்தியுள்ளன.[362] 2015இல் ஈரான் மற்றும் பி5+1 ஆகிய நாடுகள் இணைந்த அகல் விரிவான திட்டச் செயலுக்கு ஒப்புக் கொண்டன. செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்திக்குக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக பொருளாதாரத் தடைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.[363]

எனினும், 2018இல் ஐக்கிய அமெரிக்கா டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தது. ஈரான் மற்றும் பி5+1இன் பிற உறுப்பினர்களிடம் இருந்து இது எதிர்ப்பைப் பெற்றது.[364][365][366] ஓர் ஆண்டு கழித்து இயைந்து நடக்கும் தன்னுடைய நிலையை ஈரான் குறைக்கத் தொடங்கியது.[367] 2020 வாக்கில் ஓப்பந்தத்தால் போடப்பட்ட எந்த ஒரு வரம்பையும் இனி மேல் கடைபிடிக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்தது.[368][369] இதற்குப் பிறகு நடந்த செறிவூட்டல்களானவை ஆயுதத்தைத் தயாரிக்கும் தொடக்க நிலைக்கு ஈரானைக் கொண்டு வந்தது.[370][371][372] நவம்பர் 2023 நிலவரப்படி ஈரான் யுரேனியத்தை 60% அணுக்கரு பிளப்பு அளவுக்குச் செறிவூட்டியுள்ளது. இது அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான அளவுக்கு மிக நெருக்கமானதாகும்.[373][374][375][376] சில வல்லுநர்கள் ஏற்கனவே ஈரானை ஓர் அணு ஆயுத சக்தி என்று கருதத் தொடங்கி விட்டனர்.[377][378][379]

பிராந்தியச் செல்வாக்கு

[தொகு]
ஈரானும், அதன் செல்வாக்குப் பகுதிகளும்

ஈரானின் குறிப்பிடத்தக்க செல்வாக்கு மற்றும் வேறூன்றிய நிலையானது சில நேரங்களில் "ஒரு புதிய பாரசீகப் பேரரசின் தொடக்கம்" என்று குறிப்பிடப்படுகிறது.[380][381][382][383] சில வல்லுநர்கள் ஈரானின் செல்வாக்கை நாட்டின் பெருமைமிகு தேசிய மரபு, பேரரசு மற்றும் வரலாற்றுடன் தொடர்புபடுத்துகின்றனர்.[384][385][386]

புரட்சிக்குப் பிறகு ஈரான் தன்னுடைய செல்வாக்கைக் குறுக்காகவும், எல்லை தாண்டியும் அதிகரித்துள்ளது.[387][388][389][390] அரசு மற்றும் அரசு அல்லாத இயக்கங்களுடன் ஒரு பரவலான இணைய அமைப்பின் மூலம் இது இராணுவப் படைகளை உருவாக்கியுள்ளது. 1982இல் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுடன் இது தொடங்கியது.[391][392] இசுலாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைகளானவை அதன் குத்ஸ் படைகளின் வழியாக ஈரானியச் செல்வாக்கிற்கு முக்கியமாக அமைந்துள்ளன.[393][394][395] லெபனான் (1980களிலிருந்து),[396] ஈராக்கு (2003லிருந்து),[397] மற்றும் யெமன் (2014லிருந்து)[398] ஆகியவற்றின் நிலையற்ற தன்மையானது வலிமையான கூட்டணிகள் மற்றும் வேறூன்றிய நிலையை அதன் எல்லைகளைத் தாண்டி உருவாக்க ஈரானுக்கு அனுமதி அளித்துள்ளது. லெபனானின் சமூக சேவைகள், கல்வி, பொருளாதாரம், மற்றும் அரசியல் ஆகியவற்றில் ஈரான் ஒரு முக்கியமான செல்வாக்கைக் கொண்டுள்ளது.[399][400] ஈரானுக்கு நடு நிலக் கடலுக்கான வழியை லெபனான் கொடுத்துள்ளது.[401][402] 2006 இசுரேல்-ஹிஸ்புல்லா போரின் போது ஏற்பட்ட அடையாள வெற்றி போன்ற இசுரேலுக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் உத்தி ரீதியிலான வெற்றிகளானவை லெவண்ட் பகுதியில் ஈரானின் செல்வாக்கை அதிகரித்துள்ளன. முசுலிம் உலகம் முழுவதும் ஈரானின் ஈர்ப்புத் திறனை வலுப்படுத்தியுள்ளன.[403][404]

2003ஆம் ஆண்டு ஈராக் மீதான ஐக்கிய அமெரிக்கப் படையெடுப்பு மற்றும் 2010களின் நடுவில் இசுலாமிய அரசின் வருகை ஆகியவற்றிலிருந்து ஈரான் ஈராக்கில் இராணுவக் குழுக்களுக்கு நிதியுதவி அளித்து, பயிற்சி அளித்து வந்துள்ளது.[405][406][407] 1980களின் ஈரான்-ஈராக் போர் மற்றும் சதாம் உசேனின் வீழ்ச்சி ஆகியவற்றிலிருந்து ஈரான் ஈராக்கின் அரசியலை வடிவமைத்துள்ளது.[408][409][410] 2014இல் இசுலாமிய அரசுக்கு எதிராக ஈராக்கின் போராட்டத்தைத் தொடர்ந்து கதம் அல்-அன்பியா போன்ற இசுலாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைகளுடன் தொடர்புடைய நிறுவனங்களானவை சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஈராக்கில் கட்டமைக்கத் தொடங்கின. கோவிட்-19க்கு முன்னர் சுமார் ஐஅ$9 பில்லியன் (64,364.4 கோடி) மதிப்புள்ள பொருளாதார வழித் தடத்தை உருவாக்கின.[411] இது ஐஅ$20 பில்லியன் (1,43,032 கோடி) ஆக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[412][413]

பொ. ஊ. மு. 500ஆம் ஆண்டில் அகாமனிசியப் பேரரசு

ஏமன் உள்நாட்டுப் போரின் போது ஔதிக்களுக்கு ஈரான் இராணுவ உதவி அளித்தது.[414][415][416] ஔதிக்கள் என்பவர்கள் 2004ஆம் ஆண்டு முதல் ஏமனின் சன்னி அரசாங்கத்துடன் சண்டையிடும் ஒரு சைதி சியா இயக்கத்தவர் ஆவார்.[417][418] சமீபத்திய ஆண்டுகளில் இவர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு சக்தியைப் பெற்றுள்ளனர்.[419][420][421] லிவா பதேமியான் மற்றும் லிவா சைனேபியான் போன்ற இராணுவக் குழுக்கள் மூலமாக ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானில் ஈரான் குறிப்பிடத்தக்க அளவுக்குச் செல்வாக்கைக் கொண்டுள்ளது.[422][423][424]

ஈரான் சிரியாவில் அதிபர் பசார் அல்-ஆசாத்துக்கு ஆதரவளித்தது.[425][426] இரு நாடுகளும் நீண்ட காலக் கூட்டாளிகளாகும்.[427][428] ஆசாத்தின் அரசாங்கத்திற்கு ஈரான் குறிப்பிடத்தக்க அளவுக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவியை வழங்கியுள்ளது.[429][430] எனவே சிரியாவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேறூன்றிய நிலையைக் கொண்டுள்ளது.[431][432] வடக்கு ஆப்பிரிக்காவில் அல்சீரியா மற்றும் தூனிசியா போன்ற நாடுகளில் இசுரேலுக்கு எதிரான போர் முனைகளுக்கு ஈரான் நீண்ட காலமாக ஆதரவளித்து வந்துள்ளது. ஈரான் அமாசுக்கும் ஆதரவளித்து வருகிறது. பாலத்தீன விடுதலை இயக்கத்தின் புகழைக் குறைக்க வேண்டும் என்பதும் இதற்கு ஒரு காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது.[433][434][435][436][437] ஐக்கிய அமெரிக்க உளவுத் துறையின் படி இந்த அரசு மற்றும் அரசு அல்லாத குழுக்கள் மேல் ஈரான் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.[438]

மனித உரிமைகளும், தணிக்கையும்

[தொகு]
எவின் சிறைச் சாலைக்கு செல்லும் வாயில். 1972ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது. வைஸ் செய்தி நிறுவனமானது இச்சிறைச் சாலையை "யாருமே அடைக்கப்பட விரும்பாத மரபு வழிக் கதைகளில் குறிப்பிடப்படும் அச்சுறுத்தலான இடம்" என்று குறிப்பிடுகிறது.[439]

மனித உரிமைகளை மீறியதற்காக ஈரானிய அரசாங்கமானது பல்வேறு பன்னாட்டு அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களால் கண்டனம் பெற்றுள்ளது.[440] அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அரசாங்கமானது அடிக்கடி சித்திரவதை செய்து கைது செய்கிறது. ஈரானில் மரண தண்டனை சட்டப்படி முறையான ஒரு தண்டனையாகும். பிபிசி செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, "சீனாவைத் தவிர, மற்ற எந்த ஒரு நாட்டைக் காட்டிலும் அதிகமான மரண தண்டனைகளை ஈரான் நிறைவேற்றுகிறது".[441] ஐ. நா. சிறப்புச் செய்தி தொடர்பாளரான சவைத் ரெகுமான் ஈரானில் பல சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.[442] 2022இல் ஐ. நா. வல்லுநர்களின் ஒரு குழுவானது சமயச் சிறுபான்மையினருக்குச் செய்யப்படும் "அமைப்பு ரீதியிலான சித்திரவதையை" நிறுத்துமாறு ஈரானிடம் வலியுறுத்தியது. பகாய் சமயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கைது செய்யப்படுதல், பல்கலைக்கழகங்களுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்படுதல் அல்லது அவர்களது வீடுகள் அழிக்கப்படுதல் நடைபெறுவதாகக் குறிப்பிட்டனர்.[443][444]

ஈரானில் தணிக்கையானது உலகிலேயே மிகவும் மட்டு மீறிய தணிக்கைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.[445][446][447] ஈரான் கடுமையான இணையத் தணிக்கையைக் கொண்டுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணைய தளங்களை அரசாங்கமானது தொடர்ந்து தடை செய்து வந்துள்ளது.[448][449][450] சனவரி 2021இலிருந்து ஈரானிய அதிகார அமைப்புகள் சமூக ஊடகங்களான இன்ஸ்ட்டாகிராம், வாட்சப், முகநூல், டெலிகிராம், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்றவற்றைத் தடை செய்துள்ளன.[451]

2006 தேர்தல் முடிவுகளானவை பரவலாக விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டன. இது போராட்டங்களுக்குக் காரணமானது.[452][453][454][455] 2017-2018 ஈரானியப் போராட்டங்களானனவை பொருளாதார மற்றும் அரசியல் நிலைக்கு எதிர் வினையாக நாடு முழுவதும் நடத்தப்பட்டன.[456] ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.[457] 2019-2020 ஈரானியப் போராட்டங்கள் அகுவாசுவில் 15 நவம்பர் அன்று தொடங்கின. எரிபொருள் விலைகளை 300% வரை உயர்த்துவதாக அரசாங்கம் அறிவித்ததற்குப் பிறகு நாடு முழுவதும் இவை பரவின.[458] ஒரு வார கால முழுவதுமான இணையத் தடையானது எந்த ஒரு நாட்டிலும் நடத்தப்பட்ட மிகக் கடுமையான இணையத் தடைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும், போராட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் குருதி தோய்ந்த ஒடுக்கு முறையாகவும் இது கருதப்படுகிறது.[459] பன்னாட்டு மன்னிப்பு அவை உள்ளிட்ட பல பன்னாட்டுப் பார்வையாளர்களின் கூற்றுப் படி, பத்தாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் ஒரு சில நாட்களுக்குள்ளாகவே நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.[460]

உக்ரைன் பன்னாட்டு ஏர்லைன்சு பறப்பு 752 என்பது தெகுரானில் இருந்து கீவுக்குப் பரப்பதற்காக கால அட்டவணையிடப்பட்டிருந்த பன்னாட்டுப் பயணிகள் போக்குவரத்து விமானமாகும். இது உக்ரைன் பன்னாட்டு விமான நிறுவனத்தால் இயக்கப்பட்டது. 8 சனவரி 2020 அன்று போயிங் 737-800 விமானமானது இவ்வழியில் பறந்து கொண்டிருந்தது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இசுலாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த அனைத்து 176 பயணிகளும் கொல்லப்பட்டனர். இது போராட்டங்களுக்கு வழி வகுத்தது. பன்னாட்டு விசாரணையானது அரசாங்கம் சுட்டு வீழ்த்தியதை ஒப்புக் கொள்வதற்கு வழி வகுத்தது. இதை ஒரு "மனிதத் தவறு" என்று ஈரான் குறிப்பிட்டது.[461][462] பொதுவாக "அறநெறிக் காவலர்கள்" என்று அறியப்படும் வழிகாட்டி ரோந்துக் காவலர்களால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மகாசா ஆமினி என்ற பெயருடைய ஒரு பெண் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இறந்ததற்குப் பிறகு 16 செப்தெம்பர் 2022 அன்று அரசாங்கத்துக்கு எதிரான மற்றொரு போராட்டமானது தொடங்கியது.[463][464][465][466]

பொருளாதாரம்

[தொகு]

2024இல் ஈரான் உலகின் 19வது பெரிய பொருளாதாரத்தைக் (கொள்வனவு ஆற்றல் சமநிலையின் படி) கொண்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடல், எண்ணெய் மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் அரசாங்க உடைமையாக உள்ளது, கிராம வேளாண்மை மற்றும் சிறு அளவிலான தனி நபர் வணிகம் மற்றும் சேவை முயற்சிகள் ஆகியவற்றின் ஒரு கலவையாக இதன் பொருளாதாரம் உள்ளது.[467] மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப் பெரிய சதவீதத்தைச் சேவைகள் கொண்டுள்ளன. இதற்குப் பிறகு தொழில்துறை (சுரங்கம் மற்றும் தொழிற்சாலை உற்பத்தி) மற்றும் வேளாண்மை பங்களிக்கின்றன.[468] இதன் பொருளாதாரத்தின் சிறப்பியல்பாக ஐட்ரோகார்பன் துறை உள்ளது. இது தவிர தொழிற்சாலை உற்பத்தி மற்றும் நிதி சேவைகளும் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கின்றன.[469] உலகின் 10% எண்ணெய் வளம் மற்றும் 15% எரிவாயு வளத்துடன் ஈரான் உலகின் எரி சக்தி வல்லரசாக உள்ளது. தெகுரான் பங்குச் சந்தையில் 40க்கும் மேற்பட்ட தொழிற்துறைகள் நேரடியாகப் பங்கெடுத்துள்ளன.

ஈரானின் பொருளாதார மையமாகத் தெகுரான் உள்ளது.[470] ஈரானின் அரசுத் துறைப் பணியாளர்களில் 30% பேரும், அதன் பெரிய தொழில் துறை நிறுவனங்களில் 45%மும் இங்கு அமைந்துள்ளன. இந்த நிறுவனங்களின் பணியாளர்களில் பாதிப் பேர் அரசாங்கத்திற்காகப் பணி புரிகின்றனர்.[471] பணத்தை உருவாக்குதல் மற்றும் பேணுதல் ஆகியவற்றுக்கு ஈரான் மைய வங்கியானது பொறுப்பேற்றுள்ளது. இந்நாட்டின் பணமாக ஈரானிய ரியால் உள்ளது. இசுலாமியப் பணியாளர் மன்றங்களைத் தவிர்த்து பிற தொழிற்சங்கங்களை அரசாங்கம் அங்கீகரிப்பதில்லை. பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் ஒப்புதலை இந்த மன்றமானது பெற வேண்டியுள்ளது.[472] 2022ஆம் ஆண்டு இங்கு வேலைவாய்ப்பின்மையானது 9%ஆக இருந்தது.[473]

தெகுரான் பங்குச் சந்தையின் சந்தை மதிப்பானது 2023ஆம் ஆண்டு ஐஅ$1.5 டிரில்லியன் (107.3 டிரில்லியன்)ஆக இருந்தது.[474]

நிதிப் பற்றாக்குறையானது ஒரு நீண்ட காலப் பிரச்சனையாக உள்ளது. அரசாங்கம் பெருமளவிலான மானியங்களை வழங்குவது இதற்கு முதன்மையான காரணம் ஆகும். உணவுப் பொருட்கள் மற்றும் குறிப்பாக பெட்ரோல் போன்றவை இந்த மானியங்களில் அடங்கியுள்ளன. 2022ஆம் ஆண்டு எரி சக்திக்காக வழங்கப்பட்ட மானியங்கள் மட்டுமே மொத்தமாக ஐஅ$100 பில்லியன் (7,15,160 கோடி)ஆக இருந்தன.[475][476] 2010இல் மானியங்களைப் படிப்படியாகக் குறைத்து அவற்றுக்கு மாற்றாக சமூக உதவியை இலக்குடன் வழங்குவது என்பது பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டமாக இருந்தது. கட்டற்ற சந்தைமுறை விலைகளை நோக்கிச் செல்லுதல், உற்பத்தியை அதிகப்படுத்துதல் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை நோக்கியதாக இந்த முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பதே இலக்காகும்.[477] சீர்திருத்தங்களை நிர்வாகமானது தொடர்ந்து செய்து வருகிறது. எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தை பல்வேறு துறைகளையும் சார்ந்ததாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதை அறிகுறிகள் காட்டுகின்றன. உயிரித் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம் மற்றும் மருந்துத் தொழில் துறையை ஈரான் உருவாக்கியுள்ளது.[478] அரசாங்கமானது தொழில் துறையை தனியார் மயமாக்கி வருகிறது.

வாகன உற்பத்தி, போக்குவரத்து, கட்டடப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவு மற்றும் வேளாண்மைப் பொருட்கள், இராணுவத் தளவாடங்கள், மருந்துப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ணெய் வேதிப் பொருட்கள் ஆகியவற்றில் மத்திய கிழக்கில் முன்னணி உற்பத்தித் தொழில் துறைகளை ஈரான் கொண்டுள்ளது.[479] சர்க்கரை பாதாமிகள், சேலாப்பழங்கள், வெள்ளரிகள் மற்றும் செர்கின் வகை வெள்ளறிகள், பேரீச்சைகள், அத்திப் பழங்கள், பசுங்கொட்டைகள், குயின்சு பழங்கள், வாதுமைக் கொட்டைகள், பசலிப்பழங்கள் மற்றும் தர்ப்பூசணிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் உலகின் முதல் ஐந்து உற்பத்தியாளர்களில் ஒன்றாக ஈரான் திகழ்கிறது.[480] ஈரானுக்கு எதிரான பன்னாட்டு பொருளாதாரத் தடைகள் இதன் பொருளாதாரத்தை மோசமாக்கியுள்ளன.[481] ஆய்வாளர்கள் இந்நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று கூறினாலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பதற்கான பாரிசு ஒப்பந்தத்தைச் செயல்படுத்தாத உலகில் உள்ள மூன்று நாடுகளில் ஈரானும் ஒன்றாகும்.[482]

சுற்றுலா

[தொகு]
கிசு தீவுக்கு ஆண்டு தோறும் சுமார் 1.20 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.[483]

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னர் சுற்றுலாத் துறையானது வேகமாக வளர்ந்து வந்தது. 2019இல் கிட்டத்தட்ட 90 இலட்சம் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் என்ற நிலையை அடைந்தது. உலகின் மூன்றாவது மிக வேகமாக வளரும் சுற்றுலா இடமாக ஈரான் திகழ்ந்தது.[484][485] 2022இல் பொருளாதாரத்தில் சுற்றுலாவின் பங்கானது 5%ஆக விரிவடைந்தது.[486] 2023இல் ஈரானில் சுற்றுலாத் துறையானது 43% வளர்ச்சியை அடைந்தது. 60 இலட்சம் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது.[487] 2023இல் 60 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா தேவையில்லை என அரசாங்கம் அறிவித்தது.[488]

98% வருகையானது ஓய்வுக்காகவும், 2%ஆனது வணிகத்திற்காகவுமானதாக உள்ளது. ஒரு சுற்றுலாப் பயண இலக்காக இந்நாட்டின் ஈர்க்கும் இயல்பை இது காட்டுகிறது.[489] தலைநகருடன் மிகப் பிரபலமான சுற்றுலா இடங்களாக இசுபகான், சீராசு மற்றும் மஸ்சாத் ஆகியவை உள்ளன.[490] மருத்துவச் சுற்றுலாவுக்கான விரும்பப்படும் இடமாக ஈரான் உருவாகி வருகிறது.[491][492] 2023ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் பிற மேற்காசிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் எண்ணிக்கையானது 31% வளர்ச்சி அடைந்தது. பகுரைன், குவைத்து, ஈராக்கு, மற்றும் சவூதி அரேபியாவை விட இந்த வளர்ச்சி அதிகமாகும்.[493] ஈரானின் உள்நாட்டு சுற்றுலாத் துறையானது உலகின் மிகப் பெரிய சுற்றுலாத் துறைகளில் ஒன்றாக உள்ளது. 2021இல் ஈரானியச் சுற்றுலாப் பயணிகள் ஐஅ$33 பில்லியன் (2,36,002.8 கோடி)ஐச் செலவழித்தனர்.[494][495][496] 2026ஆம் ஆண்டு வாக்கில் சுற்றுலாத் துறையில் ஐஅ$32 பில்லியன் (2,28,851.2 கோடி) முதலீடு செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது.[497]

வேளாண்மையும், மீன் வளர்ப்பும்

[தொகு]
வடக்கு ஈரானின் பந்த்பேயில் உள்ள நெல் வயல்

ஈரானின் மொத்த நிலப்பரப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளது. ஒட்டு மொத்த நிலப்பரப்பில் வெறும் 12% மட்டுமே அறுவடை செய்யப்படுகிறது. ஆனால் அறுவடை செய்யப்படும் பகுதியில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான அளவே நீர்ப்பாசனம் பெறுகிறது. எஞ்சிய பகுதிகள் உலர் நில வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வேளாண் பொருட்களில் சுமார் 92% நீரைச் சார்ந்துள்ளன.[498] நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளானவை மிகச் செழிப்பான மணலைக் கொண்டுள்ளன. ஈரானின் உணவுப் பாதுகாப்பு குறியீடானது 96%ஆக உள்ளது.[499][500] ஒட்டு மொத்த நிலப்பரப்பில் 3%ஆனது மேய்ச்சலுக்கும், தீவன உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான மேய்ச்சலானது மலைப் பகுதிகளில் உள்ள பெரும்பாலும் பகுதியளவு உலர்ந்த நிலப் பகுதிகள் மற்றும் நடு ஈரானின் பெரிய பாலைவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றில் நடைபெறுகிறது. 1990களின் போது முற்போக்கான அரசாங்க முயற்சிகள் மற்றும் மானியங்களானவை வேளாண்மை உற்பத்தியை அதிகரித்தன. உணவு உற்பத்தியில் இந்நாடு தன்னிறைவான நிலை நிறுத்தலை மீண்டும் அடையும் இலக்கை நோக்கி ஈரானுக்கு உதவின.

காசுப்பியன் கடல், பாரசீக வளைகுடா, ஓமான் குடா மற்றும் பல ஆற்று வடிநிலங்களுக்கான வழியானது மிகச் சிறந்த மீன் பண்ணைகளை அமைக்கும் வாய்ப்பை ஈரானுக்குக் கொடுத்துள்ளது. 1952இல் வணிக ரீதியான மீன் வளர்ப்பின் கட்டுப்பாட்டை அரசாங்கம் பெற்றது. தெற்கு நீர்ப்பரப்புகளில் இருந்து ஆண்டு தோறும் 7 இலட்சம் டன் மீன்களை உற்பத்தி செய்ய இந்நாட்டிற்க்கு மீன் வளர்ப்பு உட்கட்டமைப்பு விரிவாக்கமானது உதவி புரிந்தது. புரட்சிக்குப் பிறகு உள்நாட்டு நீர்நிலைகளில் இருந்து உற்பத்தி செய்வதன் மீது அதிகப்படியான கவனம் செலுத்தப்படுகிறது. 1976 மற்றும் 2004க்கு இடையில் உள்நாட்டு நீர் நிலைகளில் இருந்து அரசு மற்றும் தனியார் துறைகளால் உற்பத்தி செய்யப்படும் ஒன்றிணைந்த அளவானது 1,100 டன்களில் இருந்து 1,10,175 டன்களாக அதிகரித்தது.[501] உலகின் மிகப் பெரிய மீன் முட்டை உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக ஈரான் திகழ்கிறது. ஆண்டு தோறும் 300 டன்களுக்கும் மேற்பட்ட மீன் முட்டைகளை இது ஏற்றுமதி செய்கிறது.[502][503]

தொழில்துறையும், சேவைத் துறையும்

[தொகு]
உலகின் 16வது மிகப் பெரிய சீருந்து உற்பத்தியாளர் ஈரான் ஆகும். மத்திய கிழக்கு, நடு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய சீருந்து தயாரிக்கும் நிறுவனமாக இக்கோ உள்ளது.[504]

ஐக்கிய இராச்சியம், இத்தாலி மற்றும் உருசியாவை முந்தியதாக உலக அளவில் சீருந்து உற்பத்தியில் 16வது இடத்தை ஈரான் பெறுகிறது.[505][506] 2023ஆம் ஆண்டு இது 11,88,000 சீருந்துகளை உற்பத்தி செய்தது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இது 12% வளர்ச்சியாகும். வெனிசுலா, உருசியா மற்றும் பெலாரசு போன்ற நாடுகளுக்கு பல்வேறு சீருந்துகளை ஈரான் ஏற்றுமதி செய்துள்ளது. 2008 முதல் 2009ஆம் ஆண்டு வரை தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி வீதத்தில் ஈரான் 69வது இடத்தில் இருந்து 28வது இடத்தை அடைந்தது.[507] அணைகள், பாலங்கள், சாலைகள், கட்டடங்கள், இருப்புப் பாதைகள், மின் உற்பத்தி மற்றும் எரிவாயு, எண்ணெய் மற்றும் எண்ணெய்த் வேதியியல் தொழில் துறைகளின் கட்டுமானத்தில் வேறுபட்ட களங்களில் பல அயல்நாட்டு ஒப்பந்தங்கள் ஈரானிய ஒப்பந்ததாரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டின் நிலவரப் படி சுமார் 66 ஈரானியத் தொழில்துறை நிறுவனங்கள் 27 நாடுகளில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.[508] 2001-2011 காலகட்டத்தில் ஐஅ$20 பில்லியன் (1,43,032 கோடி)க்கும் மேல் மதிப்புள்ள தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவைகளை ஈரான் ஏற்றுமதி செய்துள்ளது. உள்ளூர் மூலப்பொருட்கள் கிடைத்தல், செழிப்பான கனிம வளங்கள், அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் ஆகியவை அனைத்தும் ஈரானுக்கு ஒப்பந்தங்களை வெல்வதில் முக்கியமான பங்கை ஆற்றியுள்ளன.[509]

45% பெரிய தொழில்துறை நிறுவனங்கள் தெகுரானில் அமைந்துள்ளன. இந்நிறுவனங்களின் பணியாளர்களில் கிட்டத் தட்ட பாதிப் பேர் அரசாங்கத்திற்காக பணி புரிகின்றனர்.[510] ஈரானிய சில்லறை வணிகமானது பெரும்பாலும் கூட்டுறவு அமைப்புகளின் கைகளில் உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நிதி பெறுகின்றன. சந்தைகளில் உள்ள சுதந்திரமான சில்லறை வணிகர்களாக இவர்கள் உள்ளனர். பெரும்பாலான உணவு விற்பனையானது தெருச் சந்தைகளில் நடைபெறுகிறது. இங்கு தலைமைப் புள்ளியியல் அமைப்பானது விலைகளை நிர்ணயம் செய்கிறது.[511] ஈரானின் முதன்மையான ஏற்றுமதிகள் ஈராக்கு, ஆப்கானித்தான், துருக்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், உருசியா, உக்ரைன், பெலருஸ், பாக்கித்தான், சவூதி அரேபியா, குவைத்து, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமான், சிரியா, ஜெர்மனி, எசுப்பானியா, நெதர்லாந்து, பிரான்சு, கனடா, வெனிசுவேலா, யப்பான், தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றன.[512][513] இந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில்துறைக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது மிகச் செயல்பாட்டில் உள்ள தொழில்துறையாக ஈரானின் வாகனத் தொழில் துறை திகழ்கிறது. இக்கோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஈரான் கோத்ரோ என்ற நிறுவனமானது மத்திய கிழக்கின் மிகப் பெரிய சீருந்துத் தயாரிப்பாளராக உள்ளது. ஐ.டி.எம்.சி.ஓ. (ஈரான் இழுவை ஊர்தி தயாரிப்பு நிறுவனம்) என்ற நிறுவனமானது மிகப் பெரிய இழுவை ஊர்தித் தயாரிப்பாளராக உள்ளது. உலகின் 12வது மிகப் பெரிய வாகனத் தயாரிப்பாளராக ஈரான் உள்ளது. கட்டடத் துறையானது ஈரானில் உள்ள மிக முக்கியமான தொழில் துறைகளில் ஒன்றாக உள்ளது. மொத்த தனி நபர் முதலீட்டில் 20% - 50% வரை இது பெற்றுள்ளது.

உலகின் மிக முக்கியமான கனிமப் பொருட்கள் உற்பத்தியாளர்களில் ஈரானும் ஒன்றாகும். கனிமங்களை அதிகமாகக் கொண்ட முதன்மையான 15 நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.[514][515] அணைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை வடிவமைத்து, கட்டமைத்து, இயக்குவதில் ஈரான் தன்னிறைவு அடைந்துள்ளது. எரி வாயு மற்றும் நீராவியால் இயக்கப்படும் விசையாழிப் பொறிகளை உற்பத்தி செய்யும் உலகின் ஆறு நாடுகளில் ஈரானும் ஒன்றாகும்.[516]

போக்குவரத்து

[தொகு]
ஈரான் அரசின் விமான நிறுவனமாக ஈரான் ஏர் உள்ளது. உள் நாட்டு அளவில் இது குமா என்று அழைக்கப்படுகிறது. ஒரு பழங்கதையைச் சேர்ந்த ஈரானியப் பறவையின் பெயர் இதுவாகும். விமான நிறுவனத்தின் சின்னமாகவும் இப்பறவை உள்ளது.

ஈரான் 1,73,000 கிலோ மீட்டர்கள் நீளச் சாலைகளைக் கொண்டுள்ளது. இதில் 73% தார்ச் சாலைகளாகும்.[517] 2008இல் ஒவ்வொரு 1,000 குடியிருப்பவர்களுக்கும் கிட்டத்தட்ட 100 சீருந்துகள் இருந்தன.[518] மத்திய கிழக்கில் மிகப் பெரிய சுரங்க இருப்பூர்தி அமைப்பாகத் தெகுரான் சுரங்க இருப்பூர்தி அமைப்பு திகழ்கிறது.[519][520] தினமும் 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளை இது ஏற்றிச் செல்கிறது. 2018இல் 82 கோடிப் பயணங்களை இந்த தொடருந்துகள் மேற்கொண்டுள்ளன.[521][522] ஈரான் 11,106 கிலோ மீட்டர் நீள இருப்புப் பாதைகளைக் கொண்டுள்ளது.[523] ஈரானுக்குள் நுழைவதற்கான முதன்மையான துறைமுகமாக ஓர்முசு நீரிணையில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகம் திகழ்கிறது. இழுவை ஊர்திகள் மற்றும் சரக்குத் தொடருந்துகள் மூலம் நாடு முழுவதும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. தெகுரான்-பந்தர் அப்பாஸ் இருப்புப் பாதையானது தெகுரான் மற்றும் மஸ்சாத் வழியாக நடு ஆசியாவின் இருப்புப் பாதை அமைப்புடன் இணைந்துள்ளது. பிற முதன்மையான துறைமுகங்களானவை காசுப்பியன் கடலின் பந்தர் இ-அன்சாலி மற்றும் பந்தர் இ-தோர்க்கோமென் மற்றும் பாரசீக வளைகுடாவிலுள்ள குர்ரம் சகர் மற்றும் பந்தர்-இ இமாம் கொமெய்னி ஆகியவை ஆகும்.

தசமக் கணக்கிலான நகரங்கள் விமான நிலையங்களைக் கொண்டுள்ளன. இவை பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களைக் கையாளுகின்றன. ஈரானின் தேசிய விமான நிறுவனமான ஈரான் ஏர் உள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்களை இது இயக்குகிறது. பேருந்துகளைப் பயன்படுத்தும் பெருமளவிலான போக்குவரத்து அமைப்புகளை அனைத்து பெரு நகரங்களும் கொண்டுள்ளன. நகரங்களுக்கு இடையில் பேருந்து சேவைகளைத் தனியார் நிறுவனங்கள் கொடுக்கின்றன. போக்குவரத்துத் துறையில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பணியாற்றுகின்றனர். இத்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9%க்குப் பங்களிக்கிறது.[524]

எரிசக்தி

[தொகு]
தெற்கு பார்சு எரிவாயு-நீர்ம வயலானது உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் ஆகும். உலகின் எரிவாயு வளங்களில் 8%ஐ இவ்வயல் கொண்டுள்ளது.[525]

ஈரான் ஓர் எரிசக்தி வல்லரசு ஆகும். இதில் முக்கியமான பங்கைப் பெட்ரோலியம் ஆற்றுகிறது.[526][527] 2023ஆம் ஆண்டு நிலவரப் படி உலகின் பாறை எண்ணெயில் 4%ஐ (ஒரு நாளைக்கு 36 இலட்சம் பீப்பாய்கள் (5.70 இலட்சம் சதுர மீட்டர்)) ஈரான் உற்பத்தி செய்கிறது.[528] ஏற்றுமதி வருவாயில் இது ஐஅ$36 பில்லியன் (2,57,457.6 கோடி)ஐக்[529] கொடுக்கிறது. அயல்நாட்டுப் பணத்துக்கான முதன்மையான ஆதாரமாக இந்த ஏற்றுமதி திகழ்கிறது.[530] எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களானவை ஐஅ$1.2 டிரில்லியன் (85.8 டிரில்லியன்) பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[531] ஈரான் உலகின் எண்ணெய்க் கையிருப்பில் 10%யும், எரிவாயுக் கையிருப்பில் 15%யும் கொண்டுள்ளது. எண்ணெய்க் கையிருப்பில் உலக அளவில் ஈரான் 3ஆம் இடத்தைப் பெறுகிறது.[532] ஓப்பெக் அமைப்பின் 2வது மிகப் பெரிய ஏற்றுமதியாளர் ஈரான் ஆகும். இது 2வது மிகப் பெரிய எரிவாயு வளங்களையும்,[533] 3வது மிகப் பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தியையும் கொண்டுள்ளது. 5,000 கோடி பீப்பாய்கள் கையிருப்பைக் கொண்ட ஒரு தெற்கு எண்ணெய் வயலை ஈரான் கண்டறிந்தது.[534][535][536][537] ஏப்ரல் 2024இல் தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனமானது (என்.ஐ.ஓ.சி.) 10 மிகப் பெரிய சேல் எண்ணெய் இருப்புகளைக் கண்டறிந்தது. இதில் மொத்தமாக 2,600 கோடி பீப்பாய்கள் எண்ணெய்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[538][539][540] 2025இல் எண்ணெய்த் துறையில் ஐஅ$500 பில்லியன் (35,75,800 கோடி)ஐ முதலீடு செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது.[541]

ஈரான் அதன் தொழில்துறை சாதனங்களில் 60 - 70%ஐ அதாவது விசையாழிப் பொறிகள், விசைக் குழாய்கள், கிரியாவூக்கிகள், சுத்திகரிப்பு ஆலைகள், எண்ணெய் ஊர்திகள், துளை பொறிகள், கடலுக்குள் சிறிது தொலைவிலுள்ள நிலையங்கள், கோபுரங்கள், குழாய்கள் மற்றும் இட ஆய்வுக்கான கருவிகள் உள்ளிட்டவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கிறது.[542] புதிய நீர் மின் நிலையங்களின் சேர்ப்பு, பொதுவான நிலக்கரி மற்றும் எண்ணெயால் எரியூட்டப்படும் நிலையங்களின் சீரமைப்பு ஆகியவை நிறுவப்பட்ட மின் உற்பத்தியின் அளவை 33 ஜிகா வாட்களாக அதிகரித்துள்ளது. இதில் 75% இயற்கை எரிவாயுவையும், 18% எண்ணெயையும், மற்றும் 7% நீர் மின் சக்தியையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. 2004இல் ஈரான் அதன் முதல் காற்று மின் உற்பத்தி மற்றும் புவி வெப்ப நிலையங்களை அமைத்தது. 2009ஆம் ஆண்டு இதன் முதல் சூரிய சக்தி வெப்ப நிலையமானது கட்டமைக்கப்படத் தொடங்கியது. வாயுக்களை நீர்மமாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய உலகின் மூன்றாவது நாடு ஈரான் ஆகும்.[543]

மக்கள் தொகை மாற்றங்கள் மற்றும் அதிகப்படியான தொழில்மயமாக்கம் ஆகியவை மின்சாரத் தேவையை ஆண்டுக்கு 8% அதிகமாகக் காரணமாகின்றன. 2010ஆம் ஆண்டுக்குள் 53 கிகா வாட் நிறுவப்பட்ட மின்சாரத்தைக் கொடுக்கும் அரசாங்கத்தின் இலக்கானது புதிய எரிவாயுவால் உருவாக்கப்படும் மின்சக்தி நிலையங்கள் மற்றும், நீர் மின் சக்தி மற்றும் அணு மின் சக்தி உற்பத்தி ஆகியவற்றை அதிகரிப்பதன் மூலம் அடையப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் முதல் அணு சக்தி மின்னுற்பத்தி நிலையமானது 2011ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.[544][545]

அறிவியலும், தொழில்நுட்பமும்

[தொகு]
நசீருத்தீன் அத்-தூசீ ஒரு பல்துறை அறிஞர், கட்டடக் கலைஞர், தத்துவவாதி, மருத்துவர், அறிவியலாளர் மற்றும் இறையியலாளர் ஆவார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஈரான் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. பன்னாட்டுப் பொருளாதாரத் தடைகளையும் மீறி இவ்வாறு வளர்ந்துள்ளது. உயிரி மருந்து அறிவியலில் ஈரானின் உயிரி வேதியியல் மற்றும் உயிரி இயற்பியல் நிலையமானது உயிரியலில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தில் இருக்கையைக் கொண்டுள்ளது.[546] 2006இல் தெகுரானிலுள்ள ரோயன் ஆய்வு மையத்தில் ஈரானிய அறிவியலாளர்கள் வெற்றிகரமாக ஒரு செம்மறி ஆட்டைப் படியெடுப்புச் செய்தனர்.[547] குருத்தணு ஆய்வில் உலகின் முதல் 10 நாடுகளுக்குள் ஈரான் வருகிறது.[548] நானோ தொழில்நுட்பத்தில் உலகில் உள்ள நாடுகளில் 15வது இடத்தை ஈரான் பெறுகிறது.[549][550][551] ஈரானுக்கு வெளியே வாழும் ஈரானிய அறிவியலாளர்கள் முதன்மையான அறிவியல் பங்களிப்புகளைச் செய்துள்ளனர். 1960இல் அலி சவான் முதல் எரிவாயு ஒளிக் கதிரை மற்றொருவருடன் இணைந்து உருவாக்கினார். பஷ்ஷி செட் கோட்பாடானது லோத்பி ஏ. சதே என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[552]

இதய நோய் நிபுணர் தொபி முசிவந்த் முதல் செயற்கை இதய விசைக் குழாயை உருவாக்கி மேம்படுத்தினார். செயற்கை இதயத்துக்கு இதுவே முன்னோடியாகும். நீரிழிவு நோய் ஆராய்ச்சியை மேம்படுத்தி எச். பி. ஏ. 1. சி.யானது (சர்க்கரையுடன் இணைக்கப்பட்ட இரத்த சிவப்பணு) சாமுவேல் ரபரால் கண்டுபிடிக்கப்பட்டது. சரக் கோட்பாடு குறித்து பல ஆய்வுக் கட்டுரைகள் ஈரானில் பதிக்கப்பட்டுள்ளன.[553] 2014இல் ஈரானியக் கணிதவியலாளர் மரியாம் மீர்சாக்கானி முதல் பெண் மற்றும் முதல் ஈரானியராக கணிதவியலில் கொடுக்கப்படும் மிக உயர்ந்த பதக்கமான பீல்ட்ஸ் பதக்கத்தைப் பெற்றார்.[554]

1996லிருந்து 2004 வரை ஈரான் அதன் ஆய்வுக் கட்டுரைகளின் வெளியீட்டை கிட்டத்தட்ட 10 மடங்காக அதிகரித்தது. வெளியீட்டு வளர்ச்சி வீதத்தில் முதலிடத்தைப் பிடித்தது. இதற்குப் பிறகு சீனாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. 2012இல் எஸ்சிஐமகோ நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி 2018ஆம் ஆண்டு வாக்கில் ஆய்வுக் கட்டுரை வெளியீட்டில் இதே நிலை நீடித்தால் ஈரான் நான்காம் இடத்தைப் பிடிக்கும் என்று குறிப்பிட்டது.[555] மனிதனைப் போன்ற ஈரானிய எந்திரமான சொரேனா 2 தெகுரான் பல்கலைக்கழகத்தில் பெறியியலாளர்களால் வடிவமைக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது. அதன் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்குப் பிறகு ஐஇஇஇ ஐந்து முதன்மையான முக்கிய எந்திரங்களில் சொரேனாவின் பெயரையும் இட்டது.[556]

2024இல் உலகளாவிய புதுப் பொருள் தயாரிக்கும் பட்டியலில் ஈரான் 64வது இடத்தைப் பிடித்தது.[557]

ஈரானிய விண்வெளி அமைப்பு

[தொகு]
சபீர் செயற்கைக் கோள் செலுத்தும் வாகனத்தின் வரலாற்றுச் சிறப்புடைய செலுத்துதல்

ஈரானிய விண்வெளி அமைப்பானது 2004ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் செயற்கைக் கோள்களைச் செலுத்தி நிலை நிறுத்தும் திறனுடைய நாடாக 2009ஆம் ஆண்டு ஈரான் உருவானது.[558] விண்வெளியை அமைதியான பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தும் ஐ. நா. குழுவின் தொடக்க உறுப்பினராக ஈரான் திகழ்கிறது. 2009ஆம் ஆண்டு புரட்சியின் 30ஆம் ஆண்டின் போது புவி சுற்று வட்டப்பாதையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோளான ஒமிதை ஈரான் நிலை நிறுத்தியது.[559] ஒரு முறை பயன்படுத்தக் கூடிய முதல் செயற்கைக்கோள் செலுத்தும் வாகனமான சபீரின் மூலம் இதை நிலை நிறுத்தியது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோள் செலுத்தும் எந்திரத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு செயற்கைக் கோளைத் தயாரித்து அதைப் பரவெளிக்கு அனுப்பும் திறனைக் கொண்ட 9வது நாடாக ஈரான் உருவானது.[560] சபீர் செயற்கைக் கோள் செலுத்தும் வாகனத்தின் முன்னேறிய வடிவமாக 2016ஆம் ஆண்டு சிமோர்க் என்ற வாகனம் செலுத்தப்பப்பட்டது.[561]

சனவரி 2024இல் ஈரான் சொராயா செயற்கைக் கோளை அதற்கு முன்னர் இருந்திராத அளவாக 750 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தியது.[562][563] இந்நாட்டிற்கு விண்வெளிக்குச் செலுத்தும் ஒரு புதிய மைல் கல்லாக இது அமைந்தது.[564][565] இது கயேம் 100 விண்ணூர்தியால் ஏவப்பட்டது.[566][567] மகுதா, கயான் மற்றும் கதேப்[568] என்ற மூன்று உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோள்களையும் ஈரான் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. சிமோர்க் வாகனத்தை இதற்காகப் பயன்படுத்தியது.[569][570] ஈரானின் வரலாற்றில் முதல் முறையாக விண்வெளிக்கு மூன்று செயற்கைக் கோள்கள் ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.[571][572] முன்னேறிய செயற்கைக் கோள் துணை அமைப்புகள், விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட புவியிடங்காட்டித் தொழில்நுட்பம் மற்றும் குறுகிய பட்டைத் தகவல் தொடர்பு ஆகியவற்றைச் சோதிப்பதற்காக இந்த மூன்று செயற்கைக் கோள்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன.[573]

பெப்பிரவரி 2024இல் ஈரான் தனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட படமெடுடுக்கும் செயற்கைக் கோளான பார்சு 1ஐ உருசியாவில் இருந்து புவியின் சுற்று வட்டப்பாதைக்கு ஏவியது.[574][575] ஆகத்து 2022இல் இருந்து இரண்டாவது முறையாக இவ்வாறு ஏவியது. முதல் முறையாக கசக்கஸ்தானில் இருந்து உருசியா மற்றுமொரு ஈரானியத் தொலையுணர் செயற்கைக் கோளான கயாமை புவியின் சுற்று வட்டப் பாதைக்கு ஏவியது. இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான அறிவியல் ஒத்துழைப்பை இது பிரதிபலித்தது.[576][577]

தொலைத்தொடர்பு

[தொகு]

ஈரானின் தொலைத் தொடர்பு தொழில் துறையானது கிட்டத்தட்ட முழுவதுமாக அரசுடமையாக உள்ளது. இது ஈரான் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி 7 கோடி ஈரானியர்கள் அதிவேக கைபேசி இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். தொலைத் தொடர்பில் 20%க்கும் மேற்பட்ட வளர்ச்சி வீதம் மற்றும் உயர்தர மேம்பாடுடைய முதல் ஐந்து நாடுகளில் ஈரானும் ஒன்றாகும்.[578] கிராமப்புறப் பகுதிகளுக்கு தொலைத்தொடர்புச் சேவைகளை அளித்ததற்காக ஈரான் யுனெஸ்கோ சிறப்புச் சான்றிதழைப் பெற்றுள்ளது.

உலகளவில் ஈரான் கைபேசி இணைய வேகத்தில் 75வது இடத்தையும், நிலையான இணைய வேகத்தில் 153வது இடத்தையும் பிடித்துள்ளது.[579]

மக்கள் தொகை

[தொகு]

1956இல் சுமார் 1.9 கோடியிலிருந்து பெப்பிரவரி 2023இல் சுமார் 8.50 கோடியாக ஈரானின் மக்கள் தொகையானது வேகமாக அதிகரித்தது.[580] எனினும், ஈரானின் கருவள வீதமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு நேரத்தில் ஒரு பெண் சராசரியாக 6.50 குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலை மாறி, இரு தசாப்தங்களுக்குப் பிறகு 1.70 குழந்தைகளை மட்டும் பெறும் நிலைக்கு உள்ளாகியுள்ளது.[581][582][583] 2018இல் 1.39% மக்கள் தொகை வளர்ச்சி வீதத்திற்கு இது வழி வகுத்துள்ளது.[584] இதன் இளம் மக்கள் தொகை காரணமாக ஆய்வுகளானவை மக்கள் தொகை வளர்ச்சியானது தொடர்ந்து மெதுவாகி 2050ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 10.50 கோடியாக நிலைப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.[585][586][587]

ஈரான் மிகப்பெரிய அகதிகளின் எண்ணிக்கைகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. இவர்கள் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் உள்ளனர்.[588] இவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானித்தான் மற்றும் ஈராக்கில் இருந்து வந்தவர்கள் ஆவர்.[589] ஈரானிய அரசியலமைப்பின் படி சமூகப் பாதுகாப்பு, ஓய்வு காலப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பின்மை, முதுமை, மாற்றுத்திறன், விபத்துகள், இயற்கைச் சீற்றங்கள், உடல் நலம் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கவனிப்புச் சேவைகளுக்கான வாய்ப்பை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது.[590] வரி வருவாய்கள் மற்றும் பொது மக்களின் பங்களிப்பில் இருந்து பெறப்படும் வருமானம் ஆகியவற்றால் இதற்கு நிதி பெறப்படுகிறது.[591]

இந்நாடானது உலகில் மிக அதிக நகர்ப்புற வளர்ச்சி வீதங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது. 1950 முதல் 2002 வரை மக்கள் தொகையில் நகர்ப்புறப் பங்களிப்பானது 27%இலிருந்து 60%ஆக அதிகரித்தது.[592] ஈரானின் மக்கள் தொகையானது அதன் மேற்குப் பாதியில், குறிப்பாக, வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கில் குவிந்துள்ளது.[593]

சுமார் 94 இலட்சம் மக்கள் தொகையுடன் தெகுரானானது ஈரானின் தலைநகரமாகவும், மிகப் பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகையுடைய நகரமாக மஸ்சாத் உள்ளது. இதன் மக்கள் தொகை சுமார் 34 இலட்சம் ஆகும். இது இரசாவி கொராசான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இசுபகான் நகரமானது சுமார் 22 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இது ஈரானின் மூன்றாவது மிக அதிக மக்கள் தொகையுடைய நகரமாகும். இது இசுபகான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். சபாவியப் பேரரசின் மூன்றாவது தலைநகரமாகவும் கூட இது திகழ்ந்தது.


இனக் குழுக்கள்

[தொகு]

இனக் குழுவின் ஆக்கக் கூறுகளானவை தொடர்ந்து ஒரு விவாதத்துக்குரிய பொருளாக உள்ளது. பொதுவாக மிகப் பெரிய மற்றும் இரண்டாவது மிகப் பெரிய இனக்குழுக்கள் குறித்து இவ்வாறு உள்ளது. பாரசீகர்கள் மற்றும் அசர்பைசானியர்கள் ஆகியோர் முதல் மற்றும் இரண்டாவது மிகப் பெரிய இனக்குழுக்கள் ஆவர். இனத்தை அடிப்படையாகக் கொண்ட ஈரானிய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது இல்லாதன் காரணமாக இவ்வாறு உள்ளது. த வேர்ல்டு ஃபக்ட்புக்கானது ஈரானின் மக்கள் தொகையில் சுமார் 79% பேர் ஒரு வேறுபட்ட இந்தோ-ஐரோப்பிய இன மொழிக் குழு என மதிப்பிட்டுள்ளது.[594] இதில் பாரசீகர்கள் (மசந்தரானியர் மற்றும் கிலக்குகள்) மக்கள் தொகையில் 61% சதவீதமாகவும், குர்து மக்கள் 10% ஆகவும், லுர்கள் 6%ஆகவும், மற்றும் பலூச்சியர்கள் 2% ஆக உள்ளனர். பிற இன மொழிக் குழுக்களின் மக்கள் எஞ்சியுள்ள 21%மாக உள்ளனர். இதில் அசர்பைசானியர்கள் 16%ஆகவும், அராபியர் 2%ஆகவும், துருக்மெனியர் மற்றும் பிற துருக்கியப் பழங்குடியினங்கள் 2% ஆகவும் மற்றும் பிறர் (ஆர்மீனியர்கள், தலிசு, சியார்சியர்கள், சிர்காசியர்கள் போன்றோர்) 1%ஆகவும் உள்ளனர்.

காங்கிரசு நூலகமானது சற்றே வேறுபட்ட மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது: 65% பாரசீகர்கள் (மசந்தரானியர், கிலக்குகள் மற்றும் தலிசு உள்ளிட்டோர்), 16% அசர்பைசானியர், 7% குர்துகள், 6% லுர்கள், 2% பலூச், 1% துருக்கியப் பழங்குடியினக் குழுக்கள் (கசுகை மற்றும் துருக்மெனியர் உள்ளிட்டோர்), மற்றும் ஈரானியர் அல்லாத, துருக்கியர் அல்லாத குழுக்கள் (ஆர்மீனியர்கள், சியார்சியர்கள், அசிரியர்கள், சிர்காசியர்கள் மற்றும் அராபியர்கள் உள்ளிட்டோர்) 3%க்கும் குறைவாக உள்ளனர்.[595][596]

மொழிகள்

[தொகு]
"நான் மன்னன் சைரசு, ஓர் அகாமனிசியன்" என்ற வரிகள் பழைய பாரசீக மொழி, ஈலமிய மொழி மற்றும் அக்காதிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இடம்: பசர்கதே, உலகப் பாரம்பரியக் களம்.

பெரும்பாலான மக்கள் பாரசீக மொழியைப் பேசுகின்றனர். இதுவே அந்நாட்டின் ஆட்சி மற்றும் தேசிய மொழியாக உள்ளது.[597] பிறர் பிற ஈரானிய மொழிகளைப் பேசுகின்றனர். ஈரானிய மொழிகள் பெரிய இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்குள் வருகின்றன. பிற இனங்களைச் சேர்ந்த மொழிகளும் பேசப்படுகின்றன. வடக்கு ஈரானில் கிலான் மற்றும் மாசாந்தரான் ஆகிய இடங்களில் கிலாக்கி மற்றும் மசந்தரானி ஆகிய மொழிகள் பரவலாகப் பேசப்படுகின்றன. கிலானின் பகுதிகளில் தலிசு மொழியானது பேசப்படுகிறது. குறுதித்தான் மாகாணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் குறுதி மொழியின் வேறுபட்ட வகைகள் செறிந்துள்ளன. கூசித்தானில் பாரசீகத்தின் பல பேச்சு வழக்கு மொழிகள் பேசப்படுகின்றன. தெற்கு ஈரான் லுரி மற்றும் லரி மொழிகளையும் கூட கொண்டுள்ளது.

இந்நாட்டில் மிக அதிகமாகப் பேசப்படும் சிறுபான்மையின மொழியாக அசர்பைசானி உள்ளது.[598] பல்வேறு பகுதிகளில் குறிப்பாக அசர்பைசானில் பிற துருக்கிய மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகள் காணப்படுகின்றன. குறிப்பிடத்தக்க சிறுபான்மையின மொழிகளில் ஆர்மீனியம், சியார்சியம், புதிய அரமேயம் மற்றும் அரபு மொழி ஆகியவை உள்ளடங்கியுள்ளன. கூசித்தானின் அராபியர்கள் மற்றும் ஈரானிய அராபியர்களின் பரவலான குழுவால் கூசி அரபி பேசப்படுகிறது. பெரிய சிர்காசிய சிறுபான்மையினரால் சிர்காசிய மொழியும் கூட ஒரு காலத்தில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், சிர்காசியர் பிறருடன் இணைந்ததன் காரணமாக இம்மொழியைக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சிர்காசியர்கள் தற்போது பேசுவது இல்லை.[599][600][601][602]

பேசப்படும் மொழிகளின் சதவீதங்களானவை தொடர்ந்து விவதத்திற்குரிய பொருளாக உள்ளது. மிகக் குறிப்பாக ஈரானின் மிகப் பெரிய மற்றும் இரண்டாவது மிகப் பெரிய இனங்கள் குறித்து இவ்வாறு உள்ளது. பாரசீகர்கள் மற்றும் அசர்பைசானியர்கள் ஈரானின் மிகப் பெரிய மற்றும் இரண்டாவது மிகப் பெரிய இனங்கள் ஆவர். நடுவண் ஒற்றுமை முகமையின் த வேர்ல்டு ஃபக்ட்புக்கில் கொடுக்கப்பட்ட சதவீதங்கள் 53% பாரசீகம், 16% அசர்பைசானி, 10% குர்தி, 7% மசந்தரானி மற்றும் கிலாக்கி, 7% லுரி, 2% துருக்மென், 2% பலூச்சி, 2% அரபி மற்றும் எஞ்சிய 2% ஆர்மீனியம், சியார்சியம், புது அரமேயம் மற்றும் சிர்காசியம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.[603]

சமயம்

[தொகு]
சமயம் (2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு)[604]
குறிப்பு: பிற குழுக்கள் சேர்க்கப்படவில்லை
சமயம் சதவீதம் எண்
முசுலிம் 99.4% 74,682,938
கிறித்தவம் 0.2% 117,704
சரதுசம் 0.03% 25,271
யூதம் 0.01% 8,756
பிற 0.07% 49,101
குறிப்பிடாதோர் 0.4% 265,899

சியா இசுலாமின் பன்னிருவர் பிரிவானது இந்நாட்டின் அரசின் சமயமாக உள்ளது. 90 - 95% ஈரானியர்கள் இப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.[605][606][607][608] 5 - 10% மக்கள் இசுலாமின் சன்னி மற்றும் சூபிப் பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.[609] 96% ஈரானியர்கள் இசுலாமிய நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். ஆனால், 16% பேர் சமயம் சாராதவர்களாக தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.[610][page needed]

ஒரு குர்திய உள்நாட்டு சமயமான யர்சானியத்தைப் பெருமளவிலான மக்கள் பின்பற்றுகின்றனர். இச்சமயம் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையிலான பின்பற்றாளர்களைக் கொண்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.[611][612][613][614][615] பகாய் சமயமானது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. அரசின் ஒடுக்கு முறைக்கு இச்சமயம் ஆளாகியுள்ளது.[616] புரட்சிக்குப் பின் பகாய் சமயம் ஒடுக்கப்படுவது அதிகரித்துள்ளது.[617][618] சமயமின்மையானது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.

கிறிஸ்தவம், யூதம், சரதுசம் மற்றும் இசுலாமின் சன்னிப் பிரிவு ஆகியவை அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இச்சமயத்தவருக்கான ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ளன.[619] இசுரேலைத் தவிர்த்த மத்திய கிழக்கு மற்றும் முசுலிம் உலகத்தில் மிகப் பெரிய யூத சமூகத்திற்கு ஈரான் இருப்பிடமாக உள்ளது.[620][621] 2.50 - 3.70 இலட்சம் வரையிலான கிறித்தவர்கள் ஈரானில் வாழ்கின்றனர். ஈரானின் மிகப் பெரிய அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினச் சமயமாக கிறித்தவம் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்மீனியப் பின்புலத்தைக் கொண்டவர்கள். மேலும், ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான அசிரியச் சிறுபான்மையினரும் இங்கு உள்ளனர்.[622][623][624][625] ஈரானிய அரசாங்கமானது ஆர்மீனியத் தேவாலயங்களை மீண்டும் கட்டமைக்க மற்றும் புனரமைக்க ஆதரவளித்து வருகிறது. ஈரானின் ஆர்மீனிய மடாலயக் குழுவிற்கு ஈரானிய அரசாங்கம் ஆதரவளித்து வருகிறது. 2019இல் இசுபகானில் உள்ள வாங்கு தேவாலயத்தை ஓர் உலகப் பாரம்பரியக் களமாக அரசாங்கம் பதிவு செய்தது. தற்போது, ஈரானில் உள்ள மூன்று ஆர்மீனியத் தேவாலயங்கள் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.[626][627]

கல்வி

[தொகு]
தெகுரான் பல்கலைக்கழகம். இதுவே மிகப் பழமையான ஈரானியப் பல்கலைக்கழகம் (1851) ஆகும். உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது

கல்வியானது அதிக அளவில் மையப்படுத்தபட்டதாக உள்ளது. கே-12 ஆனது கல்வி அமைச்சகத்தால் மேற்பார்வையிடப்படுகிறது. உயர் கல்வியானது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் மேற்பார்வையிடப்படுகிறது. 2016ஆம் ஆண்டுக் கணக்குப் படி, 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரின் கல்வியானது 86%ஆக உள்ளது. பெண்களை விட (81%) ஆண்கள் (90%) குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிக கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். கல்விக்கு அரசாங்கம் ஒதுக்கும் செலவீனமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4%ஆக உள்ளது.[628]

உயர் கல்விக்குள் நுழைவதற்கான தேவையாக ஓர் உயர் நிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் ஈரானியப் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுதல் ஆகியவை உள்ளன. பல்கலைக்கழகத்திற்கு முந்தைய 1 - 2 ஆண்டுப் படிப்பை பல மாணவர்கள் படிக்கின்றனர்.[629] ஈரானின் உயர் கல்வியானது பல்வேறு நிலைகளில் உள்ள சான்றிதழ்களால் அங்கீகரிக்கப்படுகிறது. இதில் இரண்டு ஆண்டுகளுக்கான துணைப் பட்டம், நான்கு ஆண்டுகளுக்கான இளநிலைப் பட்டம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான ஒரு முதுகலைப் பட்டம் ஆகியவை அடங்கும். இதற்குப் பிறகு மற்றொரு தேர்வானது ஒரு தேர்வரை முனைவர் பட்டம் படிக்க அனுமதி அளிக்கிறது.[630]

சுகாதாரம்

[தொகு]
இராசாவி மருத்துவமனை. இதன் தரமான மருத்துவ சேவைகளுக்காக இது ஏசிஐ சான்றிதழ் பெற்றுள்ளது.[631]

சுகாதாரப் பராமரிப்பானது பொது-அரசாங்க அமைப்பு, தனியார் துறை மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளால் வழங்கப்படுகிறது.[632]

உலகில் உடல் உறுப்பு வணிகம் சட்டப்பூர்வமாக உள்ள ஒரே நாடு ஈரான் ஆகும்.[633] ஒரு விரிவான ஆரம்ப சுகாதார இணையத்தின் நிறுவுதல் வழியாக பொது சுகாதாரத் தடுப்புச் சேவைகளை விரிவாக்க ஈரானால் முடிந்துள்ளது. இதன் விளைவாக குழந்தை மற்றும் தாய் இறப்பு வீதங்களானவை குறிப்பிடத்தக்க அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளன. ஆயுள் காலமானது அதிகரித்துள்ளது. ஈரானின் சுகாதார அறிவுத் தரமானது உலகளவில் 17வதாகவும், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் முதலாமானதாகவும் உள்ளது. மருத்துவ அறிவியல் உற்பத்திப் பட்டியலின் படி ஈரான் உலகில் 16வது இடத்தைப் பெற்றுள்ளது.[634] மருத்துவச் சுற்றுலாவுக்கான விரும்பப்படும் இடமாக ஈரான் வேகமாக வளர்ந்து வருகிறது.[491]

இப்பகுதியில் உள்ள பிற இளம் சனநாயக நாடுகளின் பொதுவான பிரச்சினையை இந்நாடும் எதிர் கொண்டுள்ளது. பல்வேறு சேவைகளுக்கான ஏற்கனவே உள்ள பெரும் தேவையின் வளர்ச்சியுடன் இது போட்டியிடுகிறது. மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பானது பொது உடல்நலவியல் கட்டமைப்பு மற்றும் சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.[635] ஈரானியர்களில் சுமார் 90% பேர் உடனலக் காப்பீட்டைக் கொண்டுள்ளனர்.[636]

பண்பாடு

[தொகு]

கலை

[தொகு]
கோலெஸ்தான் அரண்மனையில் உள்ள கமல்-அல்-மோல்க்கின் கண்ணாடி மண்டபமானது ஈரானின் நவீன கலையின் ஒரு தொடக்கப் புள்ளியாக அடிக்கடி கருதப்படுகிறது[637]

வரலாற்றில் மிகச் செழிப்பான கலைப் பாரம்பரியங்களில் ஒன்றை ஈரான் கொண்டுள்ளது. கட்டடக்கலை, ஓவியக் கலை, இலக்கியம், இசை, உலோக வேலைப்பாடு, கல் வேலைப்பாடு, நெசவுத் தொழில்நுட்பம், வனப்பெழுத்து மற்றும் சிற்பம் உள்ளிட்ட பல ஊடகங்களில் இந்நாடு வலிமையுடையதாக உள்ளது. வெவ்வேறு நேரங்களில் அண்டை நாகரிகங்களிலிருந்து வந்த தாக்கமும் முக்கியமானதாக இருந்துள்ளது. இசுலாமியக் கலையின் பரந்த பாணிகளின் ஒரு பங்காக பிந்தைய நாட்களில் பாரசீகக் கலையானது முதன்மையான தாக்கங்களைக் கொடுத்தும், பெற்றும் வந்துள்ளது.

பொ. ஊ. மு. 550-பொ. ஊ. மு. 330ஐச் சேர்ந்த அகாமனிசியப் பேரரசில் இருந்து பின்னர் ஆட்சிக்கு வந்த அரச மரபுகளின் அரசவையானது பாரசீகக் கலை பாணிக்குத் தலைமை தாங்கியது. தற்போது எஞ்சியுள்ள மிகவும் ஈர்க்கக் கூடிய வேலைப்பாடுகளில் பலவற்றை விட்டுச் சென்ற அரசவையால் ஆதரவு பெற்ற கலையாக பாரசீகக் கலை உள்ளது. ஈரானில் உருவாக்கப்பட்ட அடர்த்தியான அலங்காரம், கவனமாக உருவாக்கப்பட்ட வடிவியற் கணித வடிவங்கள் ஆகியவற்றின் இசுலாமியப் பாணியானது எழிலார்ந்த மற்றும் ஒத்திசைந்த பாணியாக மாறியது. முகில்-பட்டை மற்றும் அடிக்கடி ஒரு சிறு அளவில் விலங்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போன்ற சீன உருப்படிவங்களையுடைய நிலையங்களிலிருந்து பெறப்பட்ட உருப்படிவங்களை இது ஒன்றிணைத்தது. 16ஆம் நூற்றாண்டின் சபாவியப் பேரரசின் காலத்தின் போது இந்த பாணியானது பல்வேறு வகையான ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டது. மன்னர்களின் அரசவைக் கலைஞர்களால் பரவச் செய்யப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓவியர்களாக இருந்தனர்.[638]

சாசானியக் காலத்தின் போது ஈரானியக் கலையானது ஒரு மறுமலர்ச்சியைக் கண்டது.[639] நடுக் காலங்களின் போது ஐரோப்பிய மற்றும் ஆசிய நடுக் காலக் கலையின் உருவாக்கத்தில் ஒரு முக்கியமான பங்கை சாசானியக் கலையானது ஆற்றியது.[640][641][642][643] சபாவிய சகாப்தமானது ஈரானியக் கலையின் பொற்காலம் என்று அறியப்படுகிறது.[644] சபாவியக் கலையானது குறிப்பிடத்தக்க தாக்கங்களை உதுமானியர், முகலாயர் மற்றும் தக்காணத்தவர் ஆகியோர் மீது ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டிருந்தது. 11ஆம்-17ஆம் நூற்றாண்டு ஐரோப்பா மீது தன் நவ நாகரிக மற்றும் தோட்டக் கட்டடக் கலை மூலமாக தாக்கம் கொண்டதாக இது அமைந்திருந்தது.

ஈரானிய சம காலக் கலையானது அதன் பூர்வீகத்தை கஜர் பேரரசின் அரசவையில் இருந்த ஒரு முக்கியமான மெய்மையியல் ஓவியரான கமல்-உல்-மோல்க்கிடமிருந்து பெறுகிறது. ஓவியத்தின் இயல்பு நிலை மீது இவர் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். புகைப் படங்களுடன் போட்டியிடும் ஓர் இயல்பான பாணியை இவர் பின்பற்றி வந்தார். 1928இல் மிக உயர்ந்த தரமான கலையின் ஒரு புதிய ஈரானியப் பள்ளியானது இவரால் நிறுவப்பட்டது. ஓவியத்தின் "காபி கடை" பாணி என்று அழைக்கப்படும் பாணியானது இதற்குப் பிறகு வந்தது. இரண்டாம் உலகப் போரின் போது புதிய மேற்குலகத் தாக்கங்களின் வருகையால் ஈரானின் அவந்த்-கார்டே நவீனவியலாளர்கள் உருவாயினர். சம காலக் கலைக் காட்சியானது 1940களின் பிந்தைய பகுதியில் உருவாகியது. தெகுரானின் முதல் நவீன கலைக் காட்சிக் கூடமான அபதனா 1949இல் மகுமூது சவதிபூர், உசேன் கசேமி மற்றும் உசாங் அசுதானி ஆகியோரால் திறக்கப்பட்டது.[645] 1950களின் வாக்கில் புதிய இயக்கங்களானவை அதிகாரப்பூர்வ ஊக்குவிப்புகளைப் பெற்றன. மார்கோசு கிரிகோரியன் போன்ற கலைஞர்களின் வளர்ச்சிக்கு இது வழி வகுத்தது.[646]

கட்டடக்கலை

[தொகு]
இசுபகானில் உள்ள சகேல் சோதோன் அரண்மனை. சபாவியப் பேரரசின் காலத்தின் போது இது கட்டப்பட்டது. ஈரானிய மண்டப வடிவமான ஒரு தலரின் எடுத்துக்காட்டை இது கொண்டுள்ளது. இது ஓர் உலகப் பாரம்பரியக் களமாகும்.

ஈரானில் கட்டடக் கலையின் வரலாறானது குறைந்தது பொ. ஊ. மு. 5,000ஆவது ஆண்டில் இருந்து தொடங்குகிறது. தற்போதைய துருக்கி மற்றும் ஈராக்கு முதல் உசுபெக்கிசுத்தான் மற்றும் தஜிகிஸ்தான் வரையிலும், காக்கேசியா முதல் சான்சிபார் வரையிலும் உள்ள பகுதியில் இதன் இயல்பான எடுத்துக்காட்டுகள் பரவியுள்ளன. தங்களது கட்டடக் கலையில் கணிதம், வடிவவியல் மற்றும் வானியலின் தொடக்க காலப் பயன்பாட்டை ஈரானியர்கள் பயன்படுத்தினர். கட்டமைப்பு மற்றும் அழகியல் சார்ந்த வேறுபாட்டு முறையுடைய ஒரு பாரம்பரியத்தை இது விளைவித்துள்ளது.[647] வழிகாட்டும் உருப்படிவமானது இதன் விண்வெளி சார்ந்த குறியீடாக உள்ளது.[648]

திடீர்ப் புதுமைகளின்றி, படையெடுப்புகள் மற்றும் பண்பாட்டு அதிர்ச்சிகளால் உட்குலைவு நிலை வந்த போதிலும் முசுலிம் உலகத்தின் பிற பகுதிகளில் இருந்து ஓர் அடையாளப்படுத்தக் கூடிய பாணியைத் தனித்துவமாக இது உருவாக்கியுள்ளது. இதன் நற்பண்புகளாக "வடிவம் மற்றும் அளவுக்கான ஒரு குறிப்பிடத்தக்க உணர்வு; கட்டமைப்புப் புதுமைகள், குறிப்பாக கவிகை மற்றும் குவி மாடக் கட்டமைப்பில் எந்த பிற கட்டடக் கலையாலும் சவால் விட இயலாத ஒரு சுதந்திரமான மற்றும் வெற்றிகரமான அலங்காரத்திற்கான ஒரு தனிச் சிறப்பை இது கொண்டுள்ளது".[சான்று தேவை] இதன் வரலாற்றுச் சிறப்புடைய வாயில்கள், அரண்மனைகள் மற்றும் மசூதிகளுடன், தெகுரான் போன்ற நகரங்களின் அதி வேக வளர்ச்சியானது கட்டடக் கலையின் ஓர் அலையைக் கொண்டு வந்துள்ளது. பண்டைய காலத்தைச் சேர்ந்த மிக அதிக தொல்லியல் சிதிலங்கள் மற்றும் ஈர்ப்பிடங்களையுடைய நாடுகள் சார்ந்த ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் பட்டியலில் ஈரான் 7வது இடத்தைப் பெறுகிறது.[649]

உலகப் பாரம்பரியக் களங்கள்

[தொகு]

ஈரானின் செழிப்பான பண்பாடு மற்றும் வரலாறானது அதன் 27 உலகப் பாரம்பரியக் களங்களால் பிரதிபலிக்கப்படுகிறது. உலகப் பாரம்பரியக் களங்களின் எண்ணிக்கையில் மத்திய கிழக்கில் 1வது இடத்தையும், உலகில் 10வது இடத்தையும் ஈரான் பெறுகிறது. இதில் பெர்சப்பொலிஸ், நக்சு-இ சகான் சதுக்கம், சோகா சன்பில், பசர்கதே, கோலெஸ்தான் அரண்மனை, அர்க்-இ பாம், பெஹிஸ்ட்டன் கல்வெட்டு, சகர்-இ சுக்தே, சூசா, தக்த்-இ சுலைமான், ஐர்கானியக் காடுகள், யாசுது நகரம் மற்றும் மேற்கொண்டவை அடங்கியுள்ளன. ஈரான் 24 உணர்ந்தறிய இயலாத பண்பாட்டுப் பாரம்பரியங்கள் அல்லது மனிதப் பொக்கிசங்களைக் கொண்டுள்ளது. உலகளவில் இதில் 5வது இடத்தைப் பெறுகிறது.[650][651]

நெய்தல்

[தொகு]
பசிரிக் கம்பளம், ஆண்டு பொ. ஊ. மு. 400

ஈரானின் கம்பளம் நெய்தலானது வெண்கலக் காலத்தில் அதன் பூர்வீகத்தைக் கொண்டுள்ளது. ஈரானியக் கலையின் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தோற்றங்களில் ஒன்று இதுவாகும். பாரசீகப் பண்பாடு மற்றும் ஈரானியக் கலையின் ஒரு முக்கிய இன்றியமையாத பகுதியாகக் கம்பளம் நெய்தல் உள்ளது. பாரசீக முரட்டுக் கம்பளங்கள் மற்றும் கம்பளங்கள் கிராமம் மற்றும் பட்டணப் பணியிடங்களில் நாடோடி பழங்குடியினங்களாலும், தேசிய மதிப்பு வாய்ந்த அரசவைத் தயாரிப்பிடங்களிலும் ஒன்றின் பக்கவாட்டில் ஒன்றாக நெய்யப்பட்டன. இவ்வாறாக, பாரம்பரியத்தின் சம காலக் கோடுகளை இவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஈரான், பாரசீகப் பண்பாடு, மற்றும் அதன் பல்வேறு மக்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கின்றன. "பாரசீகக் கம்பளம்" என்ற சொல்லானது மிக அடிக்கடி அடுக்காக-செய்யப்பட்ட துணிகளைக் குறிப்பிட்டாலும், சமதளமாக நெய்யப்பட்ட கம்பளங்கள் மற்றும் முரட்டுக் கம்பளங்களான கிலிம், சோவுமக் போன்றவை, மற்றும் சுசனி போன்ற வேலைப்பாடுகளையுடைய நீர்ம உறிஞ்சுத் தாள் ஆகியவை பாரசீகக் கம்பளம் நெய்தலின் பல்வேறு பாரம்பரியங்களின் ஒரு பகுதியாகும்.

உலகில் கையால் நெய்யப்பட்ட கம்பளங்களில் நான்கில் மூன்று பங்கை ஈரான் உற்பத்தி செய்கிறது. ஏற்றுமதிச் சந்தைகளில் 30%ஐக் கொண்டுள்ளது.[652][653] 2010இல் பாருசு மாகாணம் மற்றும் கசனில் உள்ள கம்பளம் நெய்தலின் பாரம்பரியத் திறன்களானவை யுனெஸ்கோவின் உணர்ந்தறிய இயலாத பண்பாட்டுப் பாரம்பரியப் பட்டியலில் பொறிக்கப்பட்டன.[654][655][656] "முரட்டுக் கம்பளப் பட்டை" நாடுகளால் உற்பத்தி செய்யப்படும் கிழக்கத்திய முரட்டுக் கம்பளங்களுக்குள் தன் பல வகை வடிவங்களின் வேறுபாடு மற்றும் நுணுக்கத்திற்காகப் பாரசீகக் கம்பளங்கள் தனித்து நிற்கின்றன.[657]

தப்ரீசு, கெர்மான், ரவர், நிசாபூர், மஸ்சாத், கசன், இசுபகான், நைன் மற்றும் கொம் போன்ற பட்டனங்கள் மற்றும் மாகாண மையங்களில் கம்பளங்கள் நெய்யப்பட்டன. அவற்றின் குறிப்பிடத்தக்க நெய்தல் நுட்பங்கள் மற்றும் உயர் தர மூலப்பொருட்கள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களின் பயன்பாடுகளை இவை இயற்பண்புகளாகக் கொண்டுள்ளன. கையால் நெய்யப்பட்ட பாரசீக முரட்டுக் கம்பளங்களும், கம்பளங்களும் உயர் கலை மதிப்பு மற்றும் பெருமையை உடைய பொருட்களாகப் பண்டைக் கிரேக்க மொழி எழுத்தாளர்கள் இவற்றைக் குறிப்பிட்டதிலிருந்து மதிக்கப்படுகின்றன.

இலக்கியம்

[தொகு]
சீராசில் உள்ள ஹாஃபீசு மற்றும் சாடி ஆகிய கவிஞர்களின் கல்லறைகள்

ஈரானின் மிகப் பழைய இலக்கிய பாரம்பரியமானது அவெத்தா மொழியினுடையது ஆகும். அவெத்தாவின் பண்டைய ஈரானிய வழிபாட்டு மொழி இதுவாகும். சரதுச மற்றும் பண்டைய ஈரானிய சமயத்தின் பழங்கதை மற்றும் சமய நூல்களை இது கொண்டுள்ளது.[658][659] ஆசிய மைனர், நடு ஆசியா மற்றும் தெற்காசியாவில் இருந்த பாரசீக மயமாக்கப்பட்ட சமூகங்களின் வழியாகப் பாரசீக மொழியானது பயன்படுத்தப்பட்டு, முன்னேற்றப்பட்டது. உதுமானிய மற்றும் முகலாய இலக்கியங்கள் போன்றவற்றில் விரிவான தாக்கங்களை இது விட்டுச் சென்றுள்ளது. ஈரான் பல பிரபலமான நடுக் காலக் கவிஞர்களைக் கொண்டுள்ளது. மௌலானா, பிர்தௌசி, ஹாஃபீசு, சாடி, ஓமர் கய்யாம், மற்றும் நிசாமி காஞ்சவி ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.[660]

மனித இனத்தின் மிகச் சிறந்த இலக்கியங்களில் ஒன்றாக ஈரானிய இலக்கியம் குறிப்பிடப்படுகிறது.[661] யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா உலக இலக்கியத்தின் நான்கு முதன்மையான தொகுதிகளில் ஒன்று ஈரானிய இலக்கியம் என்று குறிப்பிடுகிறார்.[662] நடு பாரசீக மற்றும் பழைய பாரசீக மொழிகளின் எஞ்சியுள்ள நூல்களில் பாரசீக இலக்கியமானது அதன் வேர்களைக் கொண்டுள்ளது. பழைய பாரசீக மொழியானது பொ. ஊ. மு. 522ஆம் ஆண்டு வரை அதன் காலத்தைக் கொண்டுள்ளது. இதுவே பெஹிஸ்ட்டன் கல்வெட்டு எனப்படும் தொடக்க கால அகாமனிசியப் பேரரசின் எஞ்சியுள்ள கல்வெட்டின் காலமாகும். எனினும், எஞ்சியுள்ள பாரசீக இலக்கியத்தில் பெரும்பாலானவை அண். பொ. ஊ. 650இல் ஏற்பட்ட முசுலிம் படையெடுப்பைத் தொடர்ந்த காலங்களில் இருந்து வருகின்றன. அப்பாசியக் கலீபகம் ஆட்சிக்கு (பொ. ஊ. 750) வந்ததற்குப் பிறகு இசுலாமியக் கலீபகத்தின் எழுத்தர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் ஈரானியர்கள் உருவாயினர். அதிகரித்து வந்த நிலையாக அதன் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களாகவும் ஆயினர். அரசியல் காரணங்களுக்காகக் குராசான் மற்றும் திரான்சாக்சியானாவில் புதிய பாரசீக மொழி இலக்கியமானது வளர்ச்சியடைந்து செழித்தது. தகிரிகள் மற்றும் சாமனியப் பேரரசு போன்றவை இசுலாமுக்குப் பிந்தைய ஈரானின் தொடக்க கால ஈரானிய அரசமரபுகளாக குராசானில் தங்களது மையத்தைக் கொண்டிருந்தால் இவ்வாறு செழித்தது.[663]

தத்துவம்

[தொகு]
அறிஞர்களின் ஓய்வுக் கூடம் என்பது வியன்னாவில் உள்ள ஐ. நா. அலுவலகத்துக்கு ஈரானால் வழங்கப்பட்ட ஒரு நினைவுச் சின்னம் ஆகும். இது ஈரானிய நடுக் கால அறிஞர்களின் சிலைகளைக் கொண்டுள்ளது.

ஈரானியத் தத்துவமானது பழைய ஈரானிய மொழித் தத்துவப் பாரம்பரியங்கள் மற்றும் எண்ணங்களில் அதன் தொடக்கத்தைக் கொண்டுள்ளது. பண்டைய இந்தோ-ஈரானிய வேர்களில் அதன் பூர்வீகத்தைக் கொண்டுள்ளது. சரத்துஸ்தரின் போதனைகளால் இது தாக்கம் கொண்டுள்ளது. ஈரானிய வரலாறு முழுவதும் அரபு மற்றும் மங்கோலியப் படையெடுப்புகள் போன்ற வழக்கத்துக்கு மாறான அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாக எண்ணங்களின் பள்ளிகளின் ஒரு பரந்த தொகுதிகள் தத்துவக் கேள்விகள் மீதான ஒரு பரவலான பார்வைகளைக் காட்டியுள்ளன. பழைய ஈரானிய மற்றும் முதன்மையாக சரதுசம் சார்ந்த பாரம்பரியங்களில் இருந்து இசுலாமுக்கு முற்காலத்தின் பிந்தைய சகாப்தத்தில் தோன்றிய பள்ளிகளான மானி சமயம் மற்றும் மசுதாக்கியம் போன்றவை மற்றும் மேலும் இசுலாமுக்குப் பிந்தைய பள்ளிகளிலும் இது விரிவடைந்துள்ளது.

சைரஸ் உருளையானது சரத்துஸ்தரால் வெளிப்படுத்தப்பட்ட கேள்விகள் மற்றும் எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது. அகாமனிசியச் சகாப்தத்தின் சரதுசப் பள்ளிகளில் இது வளர்ச்சியடைந்தது.[664] பண்டைய ஈரானியத் தத்துவம், பண்டைய கிரேக்க மெய்யியல் மற்றும் இசுலாமிய மெய்யியலின் வளர்ச்சி ஆகியவற்றுடனான வேறுபட்ட உறவாடல்களை இசுலாமுக்குப் பிந்தைய ஈரானியத் தத்துவமானது இயல்புகளாகக் கொண்டுள்ளது. ஒளிர்வுப் பள்ளி மற்றும் மனித அனுபவத்தைத் தாண்டிய தத்துவம் ஆகியவை ஈரானில் அச்சகாப்தத்தின் இரண்டு முக்கியமான தத்துவப் பாரம்பரியங்களாகக் கருதப்படுகின்றன. சம கால ஈரானியத் தத்துவமானது அதன் சிந்தனை இன்ப நாட்டத்தின் ஒடுக்கு முறையால் அதனளவில் வரம்புக்குட்பட்டதாகவே உள்ளது.[665]

தொன் மரபியலும், மரபு சார் கதைகளும்

[தொகு]
மஸ்சாத்தில் உள்ள ஈரானியத் தொன் மரபியல் கதாநாயகனான ரோசுதமின் சிலை. தன் மகன் சோரப்புடன் உள்ளார்.

ஈரானியத் தொன் மரபியலானது அசாதாரணமான நபர்களின் பண்டைக் கால ஈரானிய மரபு சார் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இவை நல்லதும் கெட்டதும் (அகுரா மஸ்தா மற்றும் அகிரிமான்), கடவுள்களின் செயல்கள், கதாநாயகர்கள் மற்றும் உயிரினங்களின் சாகசங்கள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன. 10ஆம் நூற்றாண்டுப் பாரசீகக் கவிஞரான பிர்தௌசி சா நாமா ("மன்னர்களின் நூல்") என்று அறியப்படும் ஈரானின் தேசிய இதிகாசத்தின் நூலாசிரியர் ஆவார். சா நாமா நூலானது ஈரானின் மன்னர்கள் மற்றும் கதாநாயகர்களின் வரலாற்றின் ஒரு நடுக் காலப் பாரசீகத் தொகுப்பான சவதய்நமக் என்ற நூலைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டது.[666] மேலும், சரதுசப் பாரம்பரியத்தின் கதைகள் மற்றும் நபர்கள், அவெத்தா குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை, தென்கர்து, வெந்திதத், மற்றும் புந்தகிசன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நவீன அறிஞர்கள் தொன் மரபியலை ஆய்வு செய்து ஈரான் மட்டுமல்லாது பெரிய ஈரான் என்ற பகுதியின் சமய மற்றும் அரசியல் அமைப்புகளின் மீது வெளிச்சத்தைக் காட்ட முற்படுகின்றனர். பெரிய ஈரான் பகுதி என்பது மேற்கு ஆசியா, நடு ஆசியா, தெற்கு ஆசியா, மற்றும் தென்காக்கேசியாவை உள்ளடக்கிய பகுதியாகும். இப்பகுதிகளில் ஈரானின் பண்பாடானது குறிப்பிடத்தக்க அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிய மரபு சார் கதைகள் மற்றும் பண்பாட்டில் கதை கூறலானது ஒரு குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது.[667] பாரம்பரிய ஈரானில் அரசவைகள் மற்றும் பொதுத் திரையரங்குகளில் தங்களது பார்வையாளர்களுக்காக இசைப் பாடகர்கள் பாடினர்.[668] பார்த்தியர்கள் ஓர் இசைப் பாடகரைக் கோசான் என்றும், சாசானியர்கள் குனியகர் என்றும் குறிப்பிட்டனர்.[669] சபாவியப் பேரரசின் காலத்தில் இருந்து கதை கூறுபவர்கள் மற்றும் கவிதை வாசிப்பவர்கள் காபி கடைகளில் தோன்ற ஆரம்பித்தனர்.[670][671] ஈரானியப் புரட்சிக்குப் பிறகு 1985ஆம் ஆண்டு பண்பாட்டுப் பாரம்பரியம், சுற்றுலா மற்றும் கைவினைப் பொருட்களின் அமைச்சகமானது நிறுவப்பட்டது.[672] இது தற்போது கடுமையாக மையப்படுத்தப்பட்ட அமைப்பாக உள்ளது. அனைத்து வகையான பண்பாட்டுச் செயல்பாடுகளையும் மேற்பார்வையிடுகிறது. மானுடவியல் மற்றும் மரபு சார் கதைகள் மீதான அறிவியல் பூர்வ சந்திப்பை 1990ஆம் ஆண்டு இது நடத்தியது.[673]

அருங்காட்சியகங்கள்

[தொகு]
தெகுரானிலுள்ள ஈரானின் தேசிய அருங்காட்சியகம்

தெகுரானிலுள்ள ஈரானின் தேசிய அருங்காட்சியகமானது இந்நாட்டின் மிக முக்கிய பண்பாட்டு அமைப்பாக உள்ளது.[674] ஈரானில் உள்ள முதல் மற்றும் மிகப் பெரிய அருங்காட்சியகமாக இந்த அமைப்பானது பண்டைக் கால ஈரானின் அருங்காட்சியகம் மற்றும் இசுலாமிய சகாப்தத்தின் அருங்காட்சியகம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பாதுகாப்பு செய்தால், ஈரானின் தொல்லியல் சேகரிப்புகளை பார்வைக்கு வைத்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகியவற்றில் உலகின் மிக முக்கியமான அருங்காட்சியமாகத் தேசிய அருங்காட்சியகம் திகழ்கிறது.[675] பொருட்களின் அளவு, பல் வகைமை மற்றும் அதன் நினைவுச் சின்னங்களின் தரம் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் உலக அளவில் மிக மதிப்பு வாய்ந்த சில அருங்காட்சியகங்களில் ஒன்றாக இது இடத்தைப் பெறுகிறது.[676]

கோலேஸ்தான் அரண்மனை (உலகப் பாரம்பரியக் களம்), தேசிய ஆபரணங்களின் கருவூலம், ரெசா அப்பாசி அருங்காட்சியகம், சம காலக் கலையின் தெகுரான் அருங்காட்சியகம், சதாபாத் வளாகம், கம்பள அருங்காட்சியகம், அப்கினே அருங்காட்சியகம், பாருசு அருங்காட்சியகம், அசர்பைசான் அருங்காட்சியகம், கெக்மதனே அருங்காட்சியகம், சூசா அருங்காட்சியகம் போன்ற பல பிற பிரபலமான அருங்காட்சியங்கள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. 2019ஆம் ஆண்டு அருங்காட்சியகங்களுக்கு 2.50 கோடி பேர் வருகை புரிந்தனர்.[677][678]

இசையும், நடனமும்

[தொகு]
கர்ணா என்பது பண்டைக் கால ஈரானிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது பொ. ஊ. மு. 6ஆம் நூற்றாண்டுக்குக் காலமிடப்படுகிறது. இது பெர்சப்பொலிஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
செசுமே அலி என்ற இடத்தைச் சேர்ந்த சுட்ட களிமண்ணின் ஒரு துண்டின் மீது நடனமாடுபவர்களின் படம். ஆண்டு பொ. ஊ. மு. 5,000.

வெளிப்படையாகத் தெரிந்த வகையிலே ஈரான் தொடக்க கால சிக்கலான இசைக் கருவிகளின் பிறப்பிடமாகும். இவை பொ. ஊ. மு. 3ஆம் ஆயிரமாண்டு காலமிடப்படுகின்றன.[679] மதக்து மற்றும் குலே பரா ஆகிய இடங்களில் கூரிய விளிம்புகளையுடைய யாழ் வகைகளின் பயன்பாடானது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குலே பராவில் ஈலாமிய இசைக் கருவிகளின் மிகப் பெரிய தொகுப்பானது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. செனபோனின் சைரோபீடியாவானது அகாமனிசியப் பேரரசின் அரசவையில் பாடும் பெண்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறது. பார்த்தியப் பேரரசின் கீழ் கோசான் (இசைப் பாடகருக்கான பார்த்தியச் சொல்) ஒரு முக்கியமான பங்கை ஆற்றினர்.[680][681]

சாசானிய இசையின் வரலாறானது முந்தைய காலப் பகுதிகளின் இசை வரலாற்றை விட நல்ல முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இது அவெத்தா நூல்களில் மிக அதிகமாகக் காணப்படுகிறது.[682] இரண்டாம் கோசுரோவின் காலத்தின் போது சாசானிய அரசவையானது முக்கியமானை இசைக் கலைஞர்களைக் கொண்டிருந்தது. இவர்களின் பெயர்கள் ஆசாத், பம்சாத், பர்பாத், நகிசா, ராம்தின் மற்றும் சர்காசு ஆகியவையாகும். ஈரானியப் பாரம்பரிய இசைக் கருவிகளானவை சங் (யாழ்), கனுன், சந்தூர், ரூத் (ஔத், பர்பத்), தார். தோதார், செதார், தன்பூர் மற்றும் கமாஞ்சே போன்ற நரம்பு இசைக் கருவிகளையும், சோர்னா (சுர்னா, கர்ணா), மற்றும் நே போன்ற காற்று இசைக் கருவிகளையும், தோம்பக், குஸ், தப் (தயேரே) மற்றும் நகரே போன்ற தாள இசைக் கருவிகளையும் உள்ளடக்கியதாகும்.

ஈரானின் முதல் இசை வரைவு இசைக் குழுவான தெகுரான் இசை வரைவு இசைக் குழுவானது 1933ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1940களின் பிற்பகுதியில் ரூகொல்லா கலேகி நாட்டின் முதல் தேசிய இசைச் சங்கத்தை நிறுவினார். 1949இல் தேசிய இசைப் பள்ளியை நிறுவினார்.[683] ஈரானிய பெருவிருப்ப நடைப்பாணி இசையானது அதன் பூர்வீகங்களை கஜர் சகாப்தத்தின் போது கொண்டுள்ளது.[684] 1950களில் இருந்து இது குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு இசைக் கருவிகள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்துதல், அத்துடன் மின் கிதார் மற்றும் பிற இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளையும் சேர்த்துப் பயன்படுத்துதல் ஆகியவற்றால் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் ராக் இசையானது 1960களில் தோன்றியது. கிப் காப் இசையானது 2000களில் தோன்றியது.[685][686]

இசை, நாடகம், மேடை நாடகம் அல்லது சமயச் சடங்குகளின் வடிவங்களில் ஈரான் அறியப்பட்ட நடனத்தைக் குறைந்தது பொ. ஊ. மு. 6ஆம் ஆயிரமாண்டில் இருந்தாவது கொண்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் களங்களில் நடனமாடுபவர்களின் உருவங்களையுடைய கலைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[687] இடம், பண்பாடு மற்றும் உள்ளூர் மக்களின் மொழியைப் பொறுத்து நடனங்களின் வகைகள் வேறுபடுகின்றன. நவ நாகரிக, மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட, பண்பட்ட அரசவை நடனங்கள் முதல் ஆற்றல் மிக்க நாட்டுப்புற நடனங்கள் வரை இவை வேறுபடலாம்.[688] ஒவ்வொரு குழு, பகுதி, வரலாற்று காலப் பகுதி ஆகியவை அதனுடன் தொடர்புடைய குறிப்பிட்ட நடன பாணிகளைக் கொண்டுள்ளன. வரலாற்று கால ஈரானின் தொடக்க கால, ஆய்வு செய்யப்பட்ட நடனமானது ஒரு வழிபாடு நடனத்தையாடும் மித்ரா ஆகும். பண்டைக் காலப் பாரம்பரிய நடனமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசால் ஆய்வு செய்யப்பட்டது. ஈரான் அயல்நாட்டுச் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. பாரம்பரிய நடன மரபுகள் மெதுவாக மறைவதற்கு இது காரணமானது.

கஜர் காலமானது பாரசீக நடனம் மீது ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்காலத்தின் போது நடனத்தின் ஒரு வகை பாணியானது "பாரம்பரிய பாரசீக நடனம்" என்று அழைக்கப்பட்டது. முடி சூட்டு விழா, திருமண விழாக்கள், மற்றும் நவுரூஸ் கொண்டாட்டங்கள் போன்றவற்றின் போது பொழுது போக்குத் தேவைகளுக்காக அரசவையில் கலை நயமிக்க நடனங்களை நடனமாடுபவர்கள் ஆடினர். 20ஆம் நூற்றாண்டில் இசையானது இசைக் குழுக்களால் நடத்தப்பட்டது. நடன அசைவுகள் மற்றும் நடனமாடுபவர்களின் ஆடைகள் ஆகியவை மேற்குலகப் பண்பாட்டுக்கு நெருக்கமான ஒரு நவீன கால மாற்றத்தைப் பெற்றன.

புது நடைப் பாணியும், உடைகளும்

[தொகு]

ஈரானில் நெசவுத் தொழில்நுட்பம் தொடங்கிய ஆண்டின் சரியான காலம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால், நாகரிகத்தின் வளர்ச்சியுடன் இது ஒத்ததாகத் தோன்றியிருக்கும் என்று கருதப்படுகிறது. விலங்குகளின் தோல் மற்றும் ரோமத்தை ஆடையாக முதன் முதலில் உடுத்தியவராக பல வரலாற்றாளர்கள் கெயுமர்சை பிர்தௌசி மற்றும் பல வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர். பிறர் ஊசாங்கைக் குறிப்பிடுகின்றனர்.[689] ஈரானில் துணி நெய்தலைத் தொடங்கி வைத்த ஒருவராக தகுமுரசுவைப் பிர்தௌசி கருதுகிறார். பண்டைய ஈரானின் ஆடையானது ஒரு முன்னேறிய வடிவத்தைப் பெற்றது. நெசவு மூலப் பொருள் மற்றும் ஆடையின் நிறம் ஆகியவை மிக முக்கியமானவையாக உருவாயின. சமூக நிலை, புகழ், ஒரு பகுதியின் வானிலை மற்றும் பருவம் ஆகியவற்றைப் பொறுத்து பாரசீக ஆடைகளானவை அகாமனிசியக் காலத்தின் போது பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தன. இந்த ஆடைகள் பயன்பாடுடன் சேர்த்து ஒரு அழகியல் சார்ந்த பங்கைக் கொண்டிருந்தன.[689]

திரைத்துறை, இயங்கு படம் மற்றும் திரையரங்கு

[தொகு]
சகிரி சுக்தேவைச் சேர்ந்த பொ. ஊ. மு. 3ஆம் ஆயிரமாண்டைச் சேர்ந்த ஒரு கோப்பையின் மறு உருவாக்கம். சாத்தியமான வகையிலே உலகின் மிகப் பழமையான இயங்கு படமாக இது கருதப்படுகிறது. இது தற்போது ஈரானின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[690]

பொ. ஊ. மு. 3ஆம் ஆயிரமாண்டைச் சேர்ந்த மணல் கோப்பையானது தென்கிழக்கு ஈரானில் உள்ள எரிந்த நகரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பழமையான இயங்கு படத்திற்கான எடுத்துக்காட்டாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[691] எனினும், காட்சிப் பிரதிநிதித்துவங்களின் ஈரானிய எடுத்துக்காட்டுகளின் தொடக்க காலச் சான்றுகள் பெர்சப்பொலிஸின் புடைப்புச் சிற்பங்களுக்குத் தங்களது தொடக்கத்தைக் கொண்டுள்ளன. அகமானிசியப் பேரரசின் சடங்கு முறை மையமாக பெர்சப்பொலிஸ் இருந்தது.[692]

முதல் ஈரானியத் திரைப்பட உருவாக்குநர் அநேகமாக மிர்சா எப்ராகிமாக (அக்காசு பாசி) இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கஜர் பேரரசின் மொசாபரேதினின் அரசவைப் புகைப்படக் கலைஞராக இவர் இருந்தார். கஜர் ஆட்சியாளர் ஐரோப்பாவிற்கு வருகை புரிந்த போது மிர்சா எப்ராகிம் ஒரு நிழற்படக் கருவியைப் பெற்று, படம் பிடித்தார். 1904இல் தெகுரானில் மிர்சா எப்ராகிம் (சகப் பாசி) முதல் பொதுத் திரை அரங்கைத் திறந்தார்.[693] முதல் ஈரானியத் திரைப்படமான அபி மற்றும் ரபி ஒரு நகைச்சுவை பேசாத திரைப்படமாகும். இதை ஓவனசு ஓகானியன் 1930இல் இயக்கினார். முதல் பேசும் படமான லோர் கேர்ள் அர்தேசிர் ஈரானி மற்றும் அப்துல் உசைன் செபந்தா ஆகியோரால் 1930ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. ஈரானின் இயங்குபட தொழில் துறையானது 1950களின் போது தொடங்கியது. இதைத் தொடர்ந்து 1965இல் குழந்தைகள் மற்றும் இளம் வயதுடையோரின் சிந்தனை இன்ப நாட்டத்தின் முன்னேற்றத்துக்கான அமைப்பு எனும் செல்வாக்குமிக்க அமைப்பு நிறுவப்பட்டது.[694][695] 1969இல் மசூத் கிமியாய் மற்றும் தரியூசு மெகர்சுயி ஆகியோரால் இயக்கப்பட்ட முறையே கெய்சர் மற்றும் த கவ் ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுடன் திரைத்துறையில் மாறுபட்ட திரைப்படங்கள் தங்களது நிலையை நிறுவத் தொடங்கின. பக்ரம் பெய்சாயின் டவுன்போர் மற்றும் நாசர் தக்வாயின் திராங்குயிலிட்டி இன் த பிரசன்ஸ் ஆப் அதர்ஸ் ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. ஒரு திரைப்பட விழாவை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் 1954இல் கோல்ரிசான் திரைப்பட விழாவுடன் தொடங்கின. 1969இல் செபாசு விழாவில் இது முடிவடைந்தது. 1973இல் தெகுரான் உலகத் திரைப்பட விழா அமைக்கப்படுவதிலும் கூட இது முடிவடைந்தது.[696]

அசுகர் பர்கதி இரண்டு முறை அகாதமி விருதுகளை வென்றவரும், 21ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கியமான இயக்குநரும் ஆவார்[697]

பண்பாட்டுப் புரட்சியைத் தொடர்ந்து ஈரானியத் திரைத் துறையில் ஒரு புதிய காலம் தொடங்கியது. கோசுரோவ் சினாயின் லாங் லிவ்! திரைப்படத்தில் இருந்து இது தொடங்கியது. அப்பாஸ் கியரோஸ்தமி மற்றும் சாபர் பனாகி போன்ற பிற இயக்குனர்களால் இது தொடரப்பட்டது. கியரோஸ்தமி ஒரு புகழ் பெற்ற இயக்குநர் ஆவார். உலகத் திரைப்பட வரைபடத்தில் ஈரானை உறுதியாகப் பதித்தார். 1997இல் டேஸ்ட் ஆப் செர்ரி திரைப்படத்திற்காக இவர் கேன்சு திரைப்பட விழாவில் மிகச் சிறந்த இயக்குநருக்குக் கொடுக்கப்படும் பால்மே டி'ஓர் விருதை வென்றார்.[698] கேன்சு, வெனிசு மற்றும் பெர்லின் போன்ற புகழ் பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ஈரானியத் திரைப்படங்களின் திரையிடலானது அவற்றின் மீது கவனத்தை ஈர்த்தது.[699] 2006இல் பெர்லினில் ஆறு திரைப்படங்கள் ஈரானியத் திரைத்துறையின் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன. ஈரானின் திரைத் துறையில் இது ஒரு தனிச் சிறப்புக்குரிய நிகழ்வு என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.[700][701] அசுகர் பர்காதி என்ற ஈரானிய இயக்குனர் ஒரு கோல்டன் குளோப் விருது மற்றும் இரண்டு அகாதமி விருதுகளைப் பெற்றுள்ளார். 2012 மற்றும் 2017இல் சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்படத்திற்காக ஈரானை முறையே எ செபரேஷன் மற்றும் த சேல்ஸ்மென் ஆகிய திரைப்படங்களின் மூலம் பிரநிதித்துவப்படுத்தினார்.[702][703][704] 2020இல் அசுகான் ரகோசரின் "த லாஸ்ட் பிக்சன்" அகாதமி விருது வழங்கும் விழாவில் சிறந்த இயங்கு படம் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டியிடும் பிரிவில் ஈரானிய இயங்கு படத் திரைப்படங்களின் முதல் பிரதிநிதியாக உருவாகியது.[705][706][707][708]

மிகப் பழைய ஈரானியத் திரையரங்கின் தொடக்கமானது பண்டைய கால இதிகாச விழாத் திரையரங்குகளான சுக்-இ சியாவு ("சியாவாவின் துக்கம்"), மேலும் எரோடோட்டசு மற்றும் செனபோனால் குறிப்பிடப்பட்ட ஈரானிய இதிகாசக் கதைகளின் நடனங்கள் மற்றும் திரையரங்கு விவரிப்புகளுக்கு அதன் பூர்வீகத்தைக் கொண்டுள்ளன. ஈரானியப் பாரம்பரியத் திரையரங்கு நாடக வகைகளாக பக்கல்-பசி ("மளிகைக் கடைக்காரர் நாடகம்", உடல் சார்ந்த சிரிப்பூட்டும் செயல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வகை நகைச்சுவை), ருகோவ்சி (அல்லது தக்சத்-கோவ்சி, பலகைகளால் மூடப்பட்ட அரசவை நீர்மத் தேக்கத்தில் நடத்தப்படும் நகைச்சுவை), சியா-பசி (மையமான நகைச்சுவை நடிகர் கருப்பு முகத்துடன் தோன்றுவார்), சயே-பசி (நிழற் பொம்மலாட்டம்), செய்மே-சப்-பசி (பொம்மலாட்டம்), மற்றும் அருசக்-பசி (பொம்மைகளை நூல்களாலோ அல்லது கைகளாலோ இயக்குதல்), மற்றும் தசியே (சமய துன்பியல் நாடகங்கள்).[709]

ரௌதாகி மண்டபமானது தெகுரான் இசை வரைவு இசைக்குழு, தெகுரான் இசை நாடக இசைக்குழு மற்றும் ஈரானிய தேசிய பாலட் நடன நிறுவனம் ஆகியவற்றுக்கு இருப்பிடமாக உள்ளது. புரட்சிக்குப் பிறகு இது அதிகாரப்பூர்வமாக வகுதத் மண்டபம் என்று பெயர் மாற்றப்பட்டது.

ஊடகம்

[தொகு]
ஐ. ஆர். ஐ. பி. என்பது ஈரானிய அரசால் கட்டுப்படுத்தப்படும் ஊடக நிறுவனமாகும்

ஈரானின் மிகப் பெரிய ஊடக நிறுவனமானது அரசால் நடத்தப்படும் ஐ. ஆர். ஐ. பி. ஆகும். பண்பாட்டுக் கொள்கைக்குப் பொறுப்புடையதாக பண்பாடு மற்றும் இசுலாமிய வழிகாட்டி அமைச்சகமானது உள்ளது. இக்கொள்கையில் தொடர்புகள் மற்றும் தகவல் சார்ந்த செயல்பாடுகளும் அடங்கும்.[710] ஈரானில் பதிப்பிக்கப்படும் பெரும்பாலான பத்திரிக்கைகள் பாரசீக மொழியில் உள்ளன. இம்மொழியே நாட்டின் அதிகாரப்பூர்வ மற்றும் தேசிய மொழியாக உள்ளது. இந்நாட்டில் மிகப் பரவலாக விற்பனை செய்யப்படும் பருவ இதழ்கள் தெகுரானை அடிப்படையாகக் கொண்டவையாகும். இவற்றில் எதேமத், எத்தேலாத், கய்கான், கம்சகிரி, ரெசாலத், மற்றும் சார்க் ஆகியவை அடங்கும்.[495] தெகுரான் டைம்ஸ், ஈரான் டெய்லி மற்றும் பைனான்சியல் டிரிபியூன் ஆகியவை ஈரானை அடிப்படையாகக் கொண்ட புகழ் பெற்ற ஆங்கில மொழிப் பத்திரிக்கைகளில் சிலவாகும்.

இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அடிப்படையிலான நாடுகளில் ஈரான் 17வது இடத்தைப் பெறுகிறது. ஈரானில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் தேடு பொறியாக கூகிள் தேடலும், மிகப் பிரபலமான சமூக வலைத்தளமாக இன்ஸ்ட்டாகிராமும் உள்ளன.[711] 2009ஆம் ஆண்டில் இருந்து தடை செய்யப்பட்ட முகநூல் போன்ற பல உலக அளவிலான முதன்மையான இணையங்களுக்கான நேரடி அனுமதியானது ஈரானில் தடை செய்யப்பட்டுள்ளது. ஈரானின் இணைய வணிகத்தில் சுமார் 90% ஈரானிய இணையக் கடையான டிஜிகலாவில் நடைபெறுகிறது. இந்த இணையத்தை ஒரு நாளைக்கு 7.50 இலட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். மத்திய கிழக்கில் மிக அதிகமாகப் பார்க்கப்படும் இணையமாக இது உள்ளது.[712]

உணவு

[தொகு]
ஈரானின் தேசிய உணவுகளில் ஒன்றான செலோவ் கெபாப் (சோறு மற்றும் கெபாப்)

ஈரானிய முதன்மையான உணவுகளில் கெபாப், பிலாப், குழம்பு (கோரேஷ்), சூப் மற்றும் ஆஷ், மற்றும் ஆம்லெட் ஆகிய வகைகள் உள்ளடங்கியுள்ளன. மதிய உணவும், இரவு உணவும் எளிமையான இன் தயிர் அல்லது மஸ்த்-ஓ-கியார், காய்கறிகள், சீராசி சாலட், மற்றும் தோர்ஷி போன்ற பக்கவாட்டு உணவுகளுடன் பொதுவாக உண்ணப்படுகின்றன. போரானி, மிர்சா காசேமி, அல்லது காசுக் இ பதேம்ஜான் போன்ற உணவுகளையும் கொண்டிருக்கலாம். ஈரானியப் பண்பாட்டில் டீயானது பரவலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.[713][714] உலகின் ஏழாவது முதன்மையான டீ உற்பத்தி செய்யும் நாடு ஈரான் ஆகும்.[715] ஈரானின் மிகப் பிரபலமான இனிப்பு வகைகளில் பலூடேவும் ஒன்றாகும்.[716] பசுதானி சொன்னட்டி ("பாரம்பரிய ஐஸ்க்ரீம்") என்று அறியப்படும் குங்குமப்பூ நிற பிரபலமான ஐஸ்கிரீமும் கூட உள்ளது.[717] கேரட் சாறுடன் சில நேரங்களில் இது உட்கொள்ளப்படுகிறது.[718] ஈரான் அதன் மீன் முட்டைகளுக்காகவும் கூட பிரபலமாக உள்ளது.[719]

பொதுவான ஈரானிய முதன்மையான உணவுகளானவை இறைச்சி, காய்கறிகள் மற்றும் கொட்டைகளுடனான சோற்றின் இணைவுகளாக உள்ளன. மூலிகைகளும் அடிக்கடிப் பயன்படுத்தப்படுகின்றன. இவை கொத்துப்பேரிகள், மாதுளைகள், குயின்சுகள், உலர்த்திய பிளம் பழங்கள், சர்க்கரைப் பாதாமிகள் மற்றும் உலர் திராட்சைகள் போன்ற பழங்களுடன் சேர்த்து உண்ணப்படுகின்றன. குங்குமப்பூ, ஏலம் மற்றும் உலர்த்தப்பட்ட எலுமிச்சை போன்றவை ஈரானிய நறுமணப் பொருட்களின் இயல்புகளாக உள்ளன. பிற ஆதாரங்களாக இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் வோக்கோசு ஆகியவை கலக்கப்பட்டு பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

விளையாட்டுகள்

[தொகு]
மத்திய கிழக்கில் உள்ள மிகப் பெரிய பனிச் சறுக்கு இடமாக திசின் உள்ளது
தெகுரானிலுள்ள ஆசாதி மைதானம் மேற்கு ஆசியாவின் மிகப் பெரிய கால்பந்து மைதானம் ஆகும்

செண்டாட்டம் தோன்றிய அநேகமான இடமாக ஈரான் குறிப்பிடப்படுகிறது.[720][721][722] இது உள்ளூர் அளவில் சோகன் என்று அறியப்பட்டது. இவ்விளையாட்டின் தொடக்கக் காலப் பதிவுகள் பண்டைக் கால மீடியாப் பேரரசில் உள்ளன.[723] இயல்பான மல்யுத்தமானது பாரம்பரியமாக தேசிய விளையாட்டாகக் கருதப்படுகிறது. பல முறை உலக வெற்றியாளர்களாக ஈரானிய மல்யுத்த வீரர்கள் இருந்துள்ளனர். ஈரானின் பாரம்பரிய மல்யுத்தமானது கொதி இ பகுலேவனி ("கதாநாயக மல்யுத்தம்") ஆகும். இது யுனெஸ்கோவின் உணர்ந்தறிய இயலாத பண்பாட்டுப் பாரம்பரியப் பட்டியலில் பதிவிடப்பட்டுள்ளது.[724] ஈரானின் தேசிய ஒலிம்பிக் சங்கமானது 1947ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மல்யுத்த வீரர்களும், பளு தூக்குபவர்களும் நாட்டின் மிக உயர்ந்த சாதனைகளை ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்துள்ளனர். 1974இல் மேற்காசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய முதல் நாடாக ஈரான் உருவானது.[725][726][727]

மலைப் பாங்கான நாடாக ஈரான் பனிச் சறுக்கு, பனிக் கால் பலகை விளையாட்டு, நடைப் பிரயாணம், பாறை ஏறுதல்[728] மற்றும் மலையேற்றம் ஆகியவற்றுக்கான ஓர் இடமாக உள்ளது.[729][730] பனிச்சறுக்கு இடங்களுக்கு இது இருப்பிடமாக உள்ளது. இதில் மிகப் பிரபலமானவையாக தோச்சல், திசின் மற்றும் செம்சக் ஆகியவை உள்ளன.[731] திசின் இதில் மிகப் பெரியதாகும். சர்வதேசப் போட்டிகளை நிர்வகிக்க எப். ஐ. எஸ்.ஸிடமிருந்து இது அதிகாரம் பெற்றுள்ளது.[732]

ஈரானில் மிகப் பிரபலமான விளையாட்டாகக் கால்பந்து உள்ளது. இந்நாட்டின் ஆண்கள் தேசியக் கால்பந்து அணியானது ஆசியக் கோப்பையை மூன்று முறை வென்றுள்ளது. ஆசியாவில் ஆண்கள் கால்பந்து அணியானது 2ஆம் இடத்தையும், ஏப்ரல் 2024 நிலவரப்படி பிபா உலகத் தரவரிசையில் 20வது இடத்தையும் பெற்றுள்ளது. [733]தெகுரானிலுள்ள ஆசாதி மைதானமானது மேற்கு ஆசியாவில் உள்ள மிகப் பெரிய கால்பந்து மைதானமாகும். உலகின் முதல் 20 மைதானங்களில் பட்டியலில் இது உள்ளது.[734] கைப்பந்து இரண்டாவது மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது.[735][736] 2011 மற்றும் 2013ஆம் ஆண்டுக்கான ஆசிய ஆண்கள் கைப்பந்துக் கோப்பைகளை ஈரான் வென்றுள்ளது. ஆண்கள் தேசியக் கைப்பந்து அணியானது ஆசியாவிலேயே 2வது மிக வலிமையானதாக உள்ளது. சனவரி 2024இல் நிலவரப்படி கைப்பந்து உலகத் தரவரிசையில் 15வது இடத்தைப் பெற்றுள்ளது. கூடைப்பந்தாட்டமும் கூட பிரபலமானதாக உள்ளது. 2007லிலிருந்து ஆண்கள் தேசியக் கூடைப்பந்தாட்ட அணியானது மூன்று முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.[737]

கடைப்பிடிப்புகள்

[தொகு]
ஈரானியப் புத்தாண்டான நவுரூஸின் ஒரு பழக்க வழக்கமான அப்த்-சீன்[738]

ஈரானின் அதிகாரப்பூர்வ புத்தாண்டு நவுரூஸில் இருந்து தொடங்குகிறது. சம இரவு நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் ஒரு பண்டைக் கால ஈரானியப் பாரம்பரியம் இதுவாகும். இது பாரசீகப் புத்தாண்டு என்று குறிப்பிடப்படுகிறது.[739] 2009இல் வாய் வழி மற்றும் உணர்ந்தறிய இயலாதா மனிதத்தின் பாரம்பரிய தலை சிறந்த படைப்புகளின் யுனெஸ்கோ பட்டியலில் இது பதிவிடப்பட்டது.[740][741][742][743] முந்தைய ஆண்டின் கடைசி புதன் கிழமை மாலையில் நவுரூஸுக்கு முந்திய விழாவாக சகர்சன்பே சூரி என்ற பண்டைக் கால விழாவானது அடாரை ("நெருப்பு") பெரு நெருப்பு மீது தாவுதல் மற்றும் வாணவெடிகளைக் கொளுத்துதல் போன்ற சடங்குகளைச் செய்வதன் மூலம் கொண்டாடுகிறது.[744][745]

மற்றொரு பண்டைக் காலப் பாரம்பரியமான யல்தா பண்டைக் கால பெண் கடவுள் மித்ராவை நினைவுபடுத்துகிறது.[746] குளிர்காலக் கதிர்த்திருப்பத்தின் மாலையில் ஆண்டின் மிக நீண்ட இரவை (பொதுவாக 20 அல்லது 21 திசம்பர்)[747][748] இது குறிப்பிடுகிறது. இந்நிகழ்வின் போது குடும்பங்கள் கவிதை வாசிக்கவும், பழங்களை உண்ணவும் ஒன்று கூடுகின்றன.[749][750] மாசாந்தரான் மற்றும் மர்கசியின் சில பகுதிகளில்[751][752][753][754] கோடைக் காலத்தின் நடுவில் ஒரு விழாவாக திர்கான்[755] கொண்டாடப்படுகிறது. இது நீரைக் கொண்டாடும் ஒரு விழாவாக திர் 13 (2 அல்லது 3 சூலை) அன்று கடைபிடிக்கப்படுகிறது.[756][757]

ரம்சான், எயித் இ பெத்ர், மற்றும் ருஸ் இ அசுரா போன்ற இசுலாமிய ஆண்டு நிகழ்வுகள் இந்நாட்டின் மக்களால் கடைபிடிக்கப்படுகின்றன. நோவெல்,[758] எல்லே யே ருசே மற்றும் எயித் இ பக் போன்ற கிறித்தவப் பாரம்பரியங்களும் கிறித்தவ சமூகங்களால் கடைபிடிக்கப்படுகின்றன. அனுகா[759] மற்றும் எயித் இ பதிர் (பெசா)[760][761] போன்ற யூதப் பாரம்பரியங்களும் யூத சமூகங்களால் கடைபிடிக்கப்படுகின்றன. சதே[762] மற்றும் மெக்ரான் போன்ற சரதுசப் பாரம்பரியங்களும் சரதுச சமூகங்களால் கடைபிடிக்கப்படுகின்றன.

பொது விடுமுறைகள்

[தொகு]

26 பொது விடுமுறை நாட்களுடன் உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையிலான பொது விடுமுறை நாட்களைக் கொண்ட ஒரு நாடாக ஈரான் திகழ்கிறது.[763][764] உலகிலேயே மிக அதிக சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்களையுடைய நாடுகளில் முதலாமிடத்தை ஈரான் பெறுகிறது. இவ்வாறாக 52 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.[765][766] ஈரானின் அதிகாரப்பூர்வ நாட்காட்டி சூரிய ஹிஜ்ரி நாட்காட்டியாகும். வடக்கு அரைக் கோளத்தின் சம இரவு நாளிலிலிருந்து இது தொடங்குகிறது.[767] சூரிய ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒவ்வொரு 12 மாதங்களும் ஓர் இராசியுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டின் நீளமும் சூரியனை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[767] மாறாக சந்திர ஹிஜ்ரி நாட்காட்டியானது இசுலாமிய நிகழ்வுகளைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கிரெகொரியின் நாட்காட்டியானது சர்வதேச நிகழ்வுகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது.

நவுரூசு பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் (பர்வர்தின் 1-4; 21-24 மார்ச்சு), சிசுதேபெதார் (பர்வர்தின் 13; 2 ஏப்பிரல்), மற்றும் இசுலாமியக் குடியரசு நாளின் அரசியல் கொண்டாட்டங்கள் (பர்வர்தின் 12; 1 ஏப்பிரல்), ரூகொல்லா கொமெய்னியின் இறப்பு (கோர்தத் 14; 4 சூன்), கோர்தத் 15 நிகழ்வு (கோர்தத் 15; 5 சூன்), ஈரானியப் புரட்சியின் ஆண்டு விழா (பக்மன் 22; 10 பெப்பிரவரி), மற்றும் எண்ணெய்த் தொழிற்துறை தேசியமயமாக்கப்பட்ட நாள் (எசுபந்த் 29; 19 மார்ச்சு) ஆகியவற்றை உள்ளடக்கிய சட்டப்பூர்வ பொது விடுமுறைகள் ஈரானிய சூரிய நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டுள்ளன.[768]

தசுவா (முகர்ரம் 9), அசுரா (முகர்ரம் 10), அர்பயீன் (சபர் 20), முகம்மதுவின் இறப்பு (சபர் 28), அலி அல்-ரிதாவின் இறப்பு (சபர் 29 அல்லது 30), முகம்மதுவின் பிறந்த நாள் (ரபி-அல்-அவ்வல் 17), பாத்திமாவின் இறப்பு (சுமாதா-அல்-தானி 3), அலியின் பிறந்த நாள் (ரஜப் 13), முகம்மதுவுக்குக் கிடைத்த முதல் வெளிப்பாடு (ரஜப் 27), முகம்மது அல் மகுதியின் பிறந்த நாள் (சபன் 15), அலியின் இறப்பு (ரமதான் 21), எயித்-அல்-பித்ர் (சவ்வல் 1-2), சாபர் அல்-சாதிக்கின் இறப்பு (சவ்வல் 25), எயித் அல்-குர்பான் (சுல்ஹிஜ்ஜா 10) மற்றும் எயித் அல்-காதிர் (சுல்ஹிஜ்ஜா 18) ஆகியவற்றை உள்ளடக்கியவையாக சந்திர இசுலாமிய பொது விடுமுறைகள் உள்ளன.[768]

விளக்கக் குறிப்புகள்

[தொகு]
  1. English: /ɪˈrɑːn/ (கேட்க)ih-RAHN or /ɪˈræn/ ih-RAN or /ˈræn/ eye-RAN[7]
  2. பாரசீக மொழி: ایران‎, romanized: Irân fa
  3. பாரசீக மொழி: جمهوری اسلامی ایران‎, romanized: Jomhuri-ye Eslâmi-ye Irân fa
  4. English: /ˈpɜːrʒə/ (கேட்க) PUR-zhə[7]

மேற்கோள்கள்

[தொகு]

அடிக் குறிப்புகள்

[தொகு]