இசுலாத்தின் புனித நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுலாமிய புனித நூல்கள் என்பவை, முசுலிம்களின் நம்பிக்கையின் படி, இறைவனால் பல்வேறு காலகட்டங்களில் இறைத்தூதர்களுக்கு வஹியின் மூலம் இறக்கப்பட்ட இறைவனின் சொற்களாகும். இவ்வேதங்களில், மனித வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் கூறப்பட்டுள்ளன. குர்ஆன், அல்லாஹ்வால் அருளப்பட்ட இறுதி வேதமாகவும், முன்னர் அனுப்பப்பட்ட வேதங்களை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.[1] குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறுதி வேதமாக இருப்பினும், முன்னர் அனுப்பப்பட்ட வேதங்களை நம்புவதும் ஈமானில் ஒரு பகுதியாகும். குர்ஆனுக்கு முன் பல வேதங்கள் அருளப்பட்டு இருப்பினும், முக்கியமானவை மூன்றாகும்.தவ்ராத் (மூசா நபிக்கு அருளப்பட்டது), சபூர் (தாவூது நபிக்கு அருளப்பட்டது), இன்சீல் (விவிலியம்) (ஈசா நபிக்கு அருளப்பட்டது), மற்றும் இறுதியாக திருக்குரான்.

முந்தைய வேதங்கள்[தொகு]

குர்ஆனில், அதற்கு முன்பு அருளப்பட்ட மூன்று வேதங்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றது.

  • தவ்ராத் (தோரா) (at-Taurāt): தவ்ராத் வேதம் மூசா நபிக்கு அருளப்பட்டதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.[2] மூசா மற்றும் அவரது சகோதரர் ஹாருன் (ஆரோன்) இருவரும் தவ்ராத் வேதத்தை பனூ இசுராயில் (இசுராயிலின் குழந்தைகள்) மக்களுக்கு போதித்து வந்தனர். யூதர்கள் தமது இறைத்தூதர்களின் அறிவுரைகளைப் பின்பற்றாமல் தம் மனம் போன போக்கில் தவ்ராத்தை திரித்ததாக குர்ஆன் குறிப்பிடுகிறது.[3]
  • சபூர் (az-Zabur): குர்ஆன், சபூர் வேதம் தாவூது நபிக்கு அருளப்பட்டதாக குறிக்கின்றது. இது விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் திருப்பாடல்கள் (நூல்) ஆக திரித்த வடிவில் உள்ளது என இசுலாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.[4]
  • இன்சீல் (al-Injeel): இன்சீல் வேதம் ஈசா நபிக்கு அருளப்பட்டதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. இன்சீல் என்பது விவிலியத்தின் புதிய ஏற்பாடு முழுவதையும் குறிப்பதாக கருதுகின்றனர். ஆனால், இன்சீல் என்பது அல்லாஹ்வால் ஈசா நபிக்கு (இயேசு) அருளப்பட்ட நற்செய்தியை மட்டுமே குறிப்பிடுகின்றது.[5] அது மட்டுமன்றி இசுலாமிய நம்பிக்கைகளின் படி, இன்சீல் வேதமானது குர்ஆனைப் போன்று உலக மக்கள் அனைவருக்கும் அருளப்படாமல் இசுராயிலின் மக்களுக்கு மட்டுமே அருளப்பட்டதாகும். தற்போதைய விவிலியத் திருமுறை நூல்கள், இயேசு மற்றும் சீடர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை மட்டுமே கூறுகின்றது. அது அல்லாஹ்வால் ஈசா நபிக்கு அருளப்பட்ட ஒற்றை நூலான இன்சீலில் இருந்து முற்றிலும் வேறானது என இசுலாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[6]

உசாத்துணைகள்[தொகு]

  1. கான்சைசு என்சைக்ளோபீடியா ஆபு இசுலாம் (ஆங்கிலம்), சைரில் கிளாசு, ஓலி புக்சு
  2. திருக்குர்ஆன் 53:36
  3. திருக்குர்ஆன் 5:44
  4. என்சைக்ளோபீடியா ஆபு இசுலாம், (ஆங்கிலம்) சாம்சு
  5. அப்துல்லா யூசுபு அலி, ஓலி குர்ஆன்: இடெக்சுடு, இடிரான்சிலேச்ன் அண்டு கமண்டெரி, (ஆங்கிலம்) அப்பெனடிக்சு: ஆன் தி இன்சில்
  6. என்சைக்ளோபீடியா ஆபு இசுலாம், (ஆங்கிலம்) இன்சில்