புதிய ஏற்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புதிய ஏற்பாடு அல்லது கிரேக்க விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதியாகும் [1]. முதல் பகுதி பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்று பொருள்படும். கடவுள் பண்டை நாட்களில் தமக்கென ஒரு மக்களினத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்குத் தாம் கடவுளாக இருப்பதாகவும், அவர்கள் தமக்கு நெருக்கமான மக்களாக வாழ்ந்து, தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்றும் அவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார் என்று யூத மக்களும் கிறித்தவ மக்களும் நம்புகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தைக் கிறித்தவர்கள் பழைய உடன்படிக்கை என்று அழைக்கின்றனர். ஏனென்றால் கடவுளின் மகனே இவ்வுலகில் இயேசு என்னும் மனிதராகப் பிறந்து, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு இறந்தார் என்றும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இயேசுவின் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாகக் கடவுள் மனித குலம் முழுவதோடும் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்துகொண்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை.

எனவே, யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், கிறித்துவின் காலத்திற்கு முற்பட்டதுமான புனித நூல் தொகுப்பைக் கிறித்தவர் பழைய ஏற்பாடு என்பர். கிறித்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்தொகுப்பு புதிய ஏற்பாடு என்று வழங்கப்படுகிறது.

பழைய ஏற்பாட்டைப் போலவே புதிய ஏற்பாடும் பல நூல்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். இது பல எழுத்தாளர்களாலும் குழுமங்களாலும் கி.பி. 45க்குப் பின்னும் கி.பி. 140க்கு முன்னும் எழுதப்பட்டு சிறுக சிறுக சில நூற்றாண்டுகளாக ஒன்று சேர்க்கப்பட்டு, கிறித்தவ திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன [2].

புதிய ஏற்பாட்டின் மூல பாடம் (செப்துவசிந்தா) [3] என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது. தொடக்க காலத்திலிருந்தே விவிலியம் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டது.

பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கிறித்தவத்தின் அடிப்படையாகும். புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்புடன் ஆரம்பித்து, அவருடைய போதனைகளையும் அவர் புரிந்த அதிசய செயல்களையும் எடுத்துரைப்பதோடு, அவருடைய சாவு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றையும் விளக்குகிறது. தமது போதனையை எல்லா மக்களுக்கும் அறிவிக்க இயேசு தம் சீடர்களை திருத்தூதர்களை அனுப்பினார்.

பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அடங்கிய திருவிவிலியம் என்னும் நூல் தொகுதி கிறித்தவ இறையியல் படிப்பின் ஆதாரமாகத் திகழ்கிறது. வெவ்வேறு கிறித்தவ சபைகளின் வழிபாட்டில் புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டுப் பகுதிகள் வாசிக்கப்பட்டு விளக்கப்படுகின்றன. விவிலியத்தின் தாக்கம் சமயம், தத்துவம், மற்றும் அரசியல், இசை, ஓவியக் கலை, இலக்கியம், நாடகம் போன்ற பல துறைகளில் வெளிப்படுகின்றது.

புதிய ஏற்பாட்டு நூல்கள்[தொகு]

வில்லியம் டைன்டேலே (William Tyndale) எபிரேயம் கிரேக்க மொழிகளில் இருந்த புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

புதிய ஏற்பாட்டில் 27 தனிப்பட்ட சிறிய நூல்கள் காணப்படுகின்றன. இச்சிறு நூல்கள் அனைத்திலும் இயேசு மையகர்த்தாவாக இருக்கிறார். கிறித்தவத்தின் எல்லா உட்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வரலாற்றைக் கூறும் நான்கு நற்செய்தி நூல்களும், இயேசுவின் சீடர்களான பேதுரு, பவுல் ஆகியோர் கிறித்தவ நற்செய்தியைப் பரப்பிய வரலாற்றை எடுத்துரைக்கிற திருத்தூதர் பணிகள் என்னும் ஒரு நூலும், படிப்பினை வழங்கும் இருபத்தொரு மடல்களும், மற்றும் ஒரு வெளிப்பாட்டு நூலும் அடங்கியுள்ளன. கி.பி. 50களில், எபிரேய மற்றும் கிரேக்க கலாச்சாரம் நிலவிய பகுதிகளில் பேச்சு மொழியாயிருந்த கொயினே கிரேக்கத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்பட்டன. திருவிவிலியத்தில் திருமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நூல்களும் கி.பி. 150க்குள் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

நற்செய்திகள்[தொகு]

ஒவ்வொரு நற்செய்தி நூலும் இயேசுவின் இவ்வுலக வாழ்க்கையை கூறுகின்றது. அவற்றில் இயேசுவின் போதனைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சபையால் ஏற்கப்பட்டுள்ள நான்கு நற்செய்தி நூல்கள் யாரால், எப்போது எழுதப்பட்டன என்பது பற்றித் துல்லியமாக அறிய இயலவில்லை. ஆயினும், கிறித்தவ மரபுப்படி,

  • மத்தேயு நற்செய்தியை அப்போஸ்தலரான (திருத்தூதர்) மத்தேயு எழுதினார்.
  • மாற்கு நற்செய்தியை அப்போஸ்தலரான பேதுருவின் சீடர் என்று கருதப்படும் மாற்கு எழுதினார்.
  • லூக்கா நற்செய்தியை சவுல் என்று அழைக்கப்பட்டு கிறிஸ்துவை ஏற்ற பின்னர் பவுல் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட இறையடியாரின் சீடரான லூக்கா எழுதினார்.
  • யோவான் நற்செய்தியை இயேசுவின் அன்புச் சீடர் எனக் கருதப்படும் அப்போஸ்தலரான யோவான் எழுதினார்.

இவற்றில் முதல் மூன்று நூல்களும் தமக்குள் உள்ளடக்கம், நடை போன்றவற்றில் மிகவும் ஒத்தவையாகும். எனவே அவை ஒத்தமை நற்செய்திகள் (Synoptic Gospels) என அழைக்கப்படுகின்றன. நான்காவது நூல் அவற்றிலிருந்து வேறுபட்ட பாணியில் உள்ளது.

திருத்தூதர் பணிகள்[தொகு]

திருத்தூதர் பணிகள் என்னும் பெயரால் வழங்கும் நூல் இயேசுவின் மரணத்துக்கு பின்னரான தொடக்க காலக் கிறித்தவரின் வாழ்வைச் சித்தரிக்கிறது. பேதுரு, பவுல் ஆகிய திருத்தூதர்கள் அறிவித்த படிப்பினையையும், பவுல் மேற்கொண்ட பயணங்களையும் இந்நூல் விரிவாகத் தருகிறது. இந்நூல் லூக்கா நற்செய்தியை எழுதியவராலேயே எழுதப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். பவுல் கூறியவற்றை லூக்கா எழுதினார் என்பது மரபு.

புனித பவுல் எழுதிய திருமுகங்கள்[தொகு]

பொதுத் திருமுகங்கள்[தொகு]

வெளிப்படுத்தல்[தொகு]

யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. புதிய ஏற்பாடு - கத்தோலிக்க கலைக்களஞ்சியம்
  2. திரெந்து பொதுச் சங்கம்
  3. செப்துவசிந்தா
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_ஏற்பாடு&oldid=1738266" இருந்து மீள்விக்கப்பட்டது