புதிய உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய உடன்படிக்கை (New Covenant) என்பது எபிரேய விவிலியத்தில் எரேமியா நூலில் காணப்படும் வசனங்களுக்கான விவிலிய விளக்கமாகும். இது பொதுவாக இறையரசு பற்றிய விவிலிய கருத்தும் இறுதித்தீர்வுடன் தொடர்புபட்ட மீட்பரின் காலம் அல்லது உலகில் விண்ணரசு பற்றிய ஓர் விடயமாகும்.

கிறித்தவம்[தொகு]

புதிய உடன்படிக்கை என்பது விவிலியத்தில் கூறப்படும் கடவுளின் உடன்படிக்கைகளுள் இறுதியானது ஆகும். இந்த உடன்படிக்கையின் வழியாக இயேசு கிறிஸ்து மனித குலத்தை தந்தையாம் கடவுளோடு மீண்டும் ஒப்புரவாக்கினார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கிறிஸ்தவர்கள் புதிய உடன்படிக்கையின் மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

கடவுளின் உடன்படிக்கை[தொகு]

யூத மற்றும் கிறிஸ்தவ சமயங்களின் அடிப்படை நம்பிக்கையாக விளங்குவது, கடவுள் மனித வரலாற்றில் உறவாடினார் என்பதாகும். மக்களை உடனிருந்து வழிநடத்தும் வகையில், கடவுள் அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார் என்று விவிலியம் நமக்கு எடுத்துரைக்கிறது.[1]

கடவுள் இஸ்ரேல் மக்களோடு சீனாய் மலையில் செய்து கொண்ட உடன்படிக்கை பழைய உடன்படிக்கை அல்லது ஏற்பாடு என்றும், கடவுள் கல்வாரி மலையில் உலக மக்கள் அனைவரோடும் செய்த உடன்படிக்கை புதிய உடன்படிக்கை அல்லது ஏற்பாடு என்றும் அழைக்கப்படுகிறது.

பழைய உடன்படிக்கை[தொகு]

பழைய ஏற்பாட்டில், கடவுள் செய்த பல உடன்படிக்கைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. முதலில் நோவாவின் காலத்தில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கின்போது, கடவுள் நோவாவுடன் உடன்படிக்கை செய்து கொண்டார்.[2] பின்பு, முதுபெருந்தந்தை ஆபிரகாமோடு கடவுள் உடன்படிக்கை செய்துகொண்டார்.[3] கடவுளாகிய ஆண்டவர் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கையின் புதுவடிவமாகவும் நிறைவாகவும், எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் அனைவரோடும் உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டார்.[4]

மோசே வழியாக கடவுள் நிறைவேற்றிய இந்த பழைய உடன்படிக்கை திருச்சட்டங்களை உள்ளடக்கியது.[5] ”இறையன்பை” வலியுறுத்தும் மூன்று கட்டளைகளும், ”பிறரன்பை” வலியுறுத்தும் ஏழு கட்டளைகளுமாக கடவுளின் பத்துக் கட்டளைகள் இந்த உடன்படிக்கையின் அம்சமாக விளங்கின. அவற்றின் விவரங்கள் இரண்டு கற்பலகைகளில் கடவுளாலேயே எழுதப்பட்டு மோசேயிடம் வழங்கப்பட்டன.[6] கடவுள் செய்த உடன்படிக்கையின் நினைவாக மக்கள் விலங்குகளை பலி செலுத்தினர். அவற்றின் இரத்தம், ”உடன்படிக்கையின் இரத்தம்” என்று அழைக்கப்பட்டது.[7] உடன்படிக்கையின் கற்பலகைகள் இரண்டும் மோசேயால் உடன்படிக்கைப் பேழைக்குள் வைக்கப்பட்டு,[8] இஸ்ரயேலின் குருத்துவ மரபினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ”உடன்படிக்கைப் பேழை” இஸ்ரயேலரிடையே கடவுளின் உடனிருப்பின் அடையாளமாக விளங்கியது.

புதிய உடன்படிக்கை[தொகு]

இறைவாக்கினர் எரேமியா கடவுளின் புதிய உடன்படிக்கையைக் குறித்து பின்வருமாறு முன்னறிவிக்கிறார்: "இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர். அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்."[9]

கடவுளின் புதிய உடன்படிக்கை இயேசு கிறிஸ்து வழியாக நிறைவேற்றப்பட்டது.[10] இயேசு தம் சீடர்களிடம், "”ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். ”நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்”." என்றார்.[11] இதுவே, புதிய உடன்படிக்கையின் திருச்சட்டம் ஆகும். சிலுவையில் பலியான இயேசு கிறிஸ்துவே இதன் ”பலிப்பொருள்” ஆவார். அவரது இரத்தத்தினாலேயே இந்த உடன்படிக்கை நிலைப்படுத்தப்பட்டுள்ளது.[12] புதிய உடன்படிக்கையின் நினைவுச் சின்னம் இயேசுவின் உடலும், இரத்தமும் அடங்கிய நற்கருணை ஆகும். இதுவே, கடவுளின் உடனிருப்பை அடையாளப்படுத்துகிறது. புதிய உடன்படிக்கையை அருட்சாதனங்கள் வழியாக நிறைவேற்றுவதே திருப்பலியாகும்.

நற்கருணை ஏற்படுத்தப்பட்டது பற்றி மத்தேயு நற்செய்தி பின்வருமாறு விவரிக்கிறது:

அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, "இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.[13]

ஆதாரங்கள்[தொகு]

  1. விடுதலைப் பயணம் 19:5 "நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைபிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள்."
  2. தொடக்க நூல் 9:10 "பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள்,கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்."
  3. தொடக்க நூல் 17:4 'ஆண்டவர் கூறியது: "உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்."
  4. இணைச் சட்டம் 5:2 'கடவுளாகிய ஆண்டவர் ஓரேபில் நம்மோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.'
  5. விடுதலைப் பயணம் 34:27 'ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ இவ்வார்த்தைகளை எழுதிக் கொள். இவ்வார்த்தைகளின்படி நான் உன்னோடும் இஸ்ரயேலோடும் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளேன்" என்றார்.'
  6. இணைச் சட்டம் 5:2 'நாற்பது பகலும் நாற்பது இரவும் கழிந்த பின், உடன்படிக்கைப் பலகைகளான இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார்.'
  7. விடுதலைப் பயணம் 24:8 'அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, "இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ" என்றார்.'
  8. 1 அரசர்கள் 8:9 'இரு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் பேழைக்குள் இல்லை; இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறியபொழுது அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட ஓரேபு மலையில் மோசே அதற்குள் வைத்தவை அவை.'
  9. எரேமியா 31:31-33
  10. எபிரேயர் 8:6 "இயேசுவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிட சிறப்புமிக்கது."
  11. யோவான் 13:34
  12. லூக்கா 22:20 உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை" என்றார்.'
  13. மத்தேயு 22:20

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_உடன்படிக்கை&oldid=2731696" இலிருந்து மீள்விக்கப்பட்டது