உள்ளடக்கத்துக்குச் செல்

மீட்பு (கிறித்தவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிஸ்தவ சமயத்தைப் பொறுத்தவரை, மீட்பு என்னும் சொல் பாவத்தில் இருந்து விடுதலை பெறுவதைக் குறிக்கிறது. உலக மக்களைப் பாவங்களில் இருந்து விடுவிக்கவே, மகனாகிய கடவுள் இவ்வுலகில் மனிதராகத் தோன்றினார்[1] என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. மீட்பின் பரிசாக கிடைப்பது நிலைவாழ்வு ஆகும். கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம், கடவுளின் மீட்புத் திட்டத்தைப் பற்றிய செய்திகளையே கொண்டிருக்கிறது.

உலகத்தில் பாவம்[தொகு]

விவிலியத்தின் முதல் புத்தகமான தொடக்க நூல், உலகில் பாவம் நுழைந்த விதத்தை கதை வடிவில் உருவகமாக விவரிக்கிறது. தொடக்கத்தில் கடவுள் தமது உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்து, உலகில் உள்ள அனைத்தின் மீதும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.[2] இவ்வுலகில் கடவுளுக்குரிய பராமரிப்பு பணிகளை செய்ய, மானிடருக்கு அனைத்து விதத்திலும் கடவுள் சுதந்திரம் அளித்திருந்தார். மானிடரின் சுதந்திரத்தை சோதித்துப் பார்க்கும் விதத்தில், ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ண கடவுள் தடை விதித்தார்.[3] மனிதர் கடவுளைப் போன்று மாற விரும்பி,[4] கடவுளின் கட்டளையைப் புறக்கணித்து பாவம் செய்தனர்.[5]

இக்கதை பின்வரும் கருத்தை உணர்த்துகிறது:

"கடவுளால் அவரது பணி செய்யப் படைக்கப்பட்ட மானிடர், உலகப் பொருட்களால் மயங்கி கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்தனர். அதன் விளைவாக, மானிடருக்கு மீட்பு தேவைப்பட்டது. எனவே உலக மீட்பருக்காக ஏங்குமாறு, மானிடரின் உள்ளங்கள் அகத்தூண்டுதல் பெற்றன."

இக்கதையை உண்மைச் சம்பவமாகக் கருதிய தொடக்கக்கால கிறிஸ்தவ அறிஞர்கள், பாம்பின் வடிவத்தில் வந்தது அலகையே என்றும், அலகையின் பேச்சை நம்பியே மானிடர் ஏமாந்ததாகவும் விளக்கம் அளித்தனர். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்று கூறியதை,[6] மீட்பருக்கான வாக்குறுதியாகவும் ஏற்றுக்கொண்டனர். இதில் பாம்பு அலகையையும், பெண் புதிய ஏவாளாகிய மரியாவையும், அலகையின் தலையைக் காயப்படுத்தும் பெண்ணின் வித்து இயேசு கிறிஸ்துவையும் குறித்து நிற்கின்றன.

மீட்புத் திட்டம்[தொகு]

உலகின் பல்வேறு பகுதிகளிலும், கடவுளின் மீட்பைப் பற்றிய எதிர்பார்ப்புகள் தோன்றின. "கடவுள் மனிதராகப் பிறக்க வேண்டும், மானிடருக்கு ஒழுக்கத்தை போதித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும், மானிடரின் பாவங்களுக்கு பரிகாரமாக தனது உயிரையே பலியாக கையளிக்க வேண்டும்" என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

கடவுள் தமது மீட்புத் திட்டத்தை இஸ்ரயேலரின் குலமுதுவராகிய ஆபிரகாம் வழியாக செயல்படுத்த விரும்பினார். அவரது வழிமரபிலேயே உலக மீட்பர் தோன்றுவார் என்பதை ஆபிரகாமுக்கு தமது தேவதூதர் வழியாக முன்னறிவித்தார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை அழைத்து, "உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.[7] அதன் பிறகு இஸ்ரயேலில் தோன்றிய இறைவாக்கினர் பலரும், மீட்பரைப் பற்றி முன்னறிவித்து கடவுளின் வருகைக்காக உலகைத் தயார் செய்தனர்.[8]

மீட்பராம் கடவுள்[தொகு]

இஸ்ரயேலர் அனைவரும் கடவுளைத் தங்கள் மீட்பராக கருதும் வழக்கம் கொண்டிருந்தனர். எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து கடவுளின் ஆற்றலால் மீட்கப்பட்டு, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டில் குடியமர்த்தப்பட்ட இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் மீட்பளிப்பவராகவே தெரிந்தார். பழைய ஏற்பாட்டில் அவர்களின் சில சிந்தனைகள் பின்வருமாறு:

"ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; கடவுள்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம்; எனக்கு மீட்பளிக்கும் வல்லமை; என் அரண்; என் தஞ்சம்; என் மீட்பர்; கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே."[9]
"ஆண்டவரே என் ஒளி: அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்: யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?"[10] "நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே."[11]
"இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே."[12] "இசுரவேலின் தூயவரே உன் மீட்பர்; உலக முழுமைக்கும் கடவுள் என அவர் அழைக்கப்படுகின்றார்."[13]
"அவர்களின் மீட்பர் வலிமைமிக்கவர்; படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர். அவரே அவர்கள் வழக்கை நடத்துவார்; நாட்டுக்கு அமைதியைக் கொணர்வார்."[14]

இயேசுவே மீட்பர்[தொகு]

கிறிஸ்தவர்களின் கருத்துப்படி, இயேசுவே உலகின் மீட்பர் ஆவார்.[15] இயேசு என்னும் பெயருக்கே மீட்பர் என்பதுதான் பொருள்.[16] புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து வழியாக கிடைத்த மீட்பைப் பற்றிய கருத்துகள் பரவலாக காணப்படுகின்றன.

இயேசு இந்த உலகிற்கு வந்தன் நோக்கத்தை தன் வாய்மொழியாகவே அறிவித்ததை நற்செய்தி நூல்கள் பின்வருமாறு எடுத்துரைக்கின்றன:

"இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்."[17]
"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."[18]
"நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்."[19]

ஆதாமின் வழியாக உலகில் நுழைந்த பாவம், இயேசுவின் வழியாகவே நீக்கப்பட்டது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இதை புனித பவுல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்."[20]
"உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்." [21]

நிலை வாழ்வு[தொகு]

நிலை வாழ்வு என்பது, மீட்பு அடைந்தோருக்கு கடவுள் வழங்கும் பரிசாகும்.[22] இவ்வுலகில் கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கைக்காக எதையும் இழக்கத் துணியும் ஒருவர் கண்டிப்பாக நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்வர்.[23] இறைத் தந்தையின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் நிலை வாழ்வைப் பெறுவர்.[24] இயேசுவின் வார்த்தைகளுக்கு பணிந்து, கடவுளிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்.[25]

உலக இன்பங்களுக்காக நிலைவாழ்வை இழந்துவிடக்கூடாது என்பதை, "உங்கள் கையோ காலோ உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கையுடனோ இரு காலுடனோ என்றும் அணையாத நெருப்பில் தள்ளப்படுவதை விடக் கை ஊனமுற்றோராய் அல்லது கால் ஊனமுற்றோராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். இரு கண் உடையவராய் எரிநரகில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது"[26] என்று இயேசு கூறுகிறார்.

"தந்தையாம் கடவுள் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலை வாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்"[27] என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார்.

ஆதாரங்கள்[தொகு]

 1. 1 திமொத்தேயு 1:15 "பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்."
 2. தொடக்க நூல் 1:26 'அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.'
 3. தொடக்க நூல் 2:16-17 'ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், "தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்" என்று கட்டளையிட்டுச் சொன்னார்.'
 4. தொடக்க நூல் 3:5 'பாம்பு பெண்ணிடம், "நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள்" என்றது.'
 5. தொடக்க நூல் 3:6 'பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள்.'
 6. தொடக்க நூல் 3:15
 7. தொடக்க நூல் 22:18
 8. 1 பேதுரு 1:10 "உங்களுக்கென்றிருந்த அருளைப் பற்றிதான் இறைவாக்கினர் இறைவாக்குரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர்."
 9. 2 சாமுவேல் 22:2-3
 10. திருப்பாடல்கள் 27:1
 11. திருப்பாடல்கள் 37:39
 12. எசாயா 12:2
 13. எசாயா 54:5
 14. எரேமியா 50:34
 15. லூக்கா 2:11 "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்."
 16. மத்தேயு 1:21 "மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"
 17. லூக்கா 19:10
 18. யோவான் 3:17
 19. யோவான் 12:47
 20. உரோமையர் 5:10,18-19
 21. 1 கொரிந்தியர் 1:21,30
 22. மத்தேயு 25:46 "பாவிகள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்."
 23. மத்தேயு 19:29 "என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்."
 24. யோவான் 3:36 "மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர்; நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார்."
 25. யோவான் 5:24 "என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்."
 26. மத்தேயு 18:9
 27. தீத்து 3:6-7

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீட்பு_(கிறித்தவம்)&oldid=4041015" இலிருந்து மீள்விக்கப்பட்டது