1 பேதுரு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை உடையில் தூய பேதுரு. ஓவியர்: பீட்டர் பவுல் ரூபன்சு (1577-1640).


1 பேதுரு அல்லது பேதுரு எழுதிய முதல் திருமுகம் (First Letter [Epistle] of Peter) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இருபத்தோராவது நூலாக அமைந்துள்ளது [1]. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Petrou A (Επιστολή Πέτρου αʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I Petri எனவும் உள்ளது.

பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் இராயப்பர் எழுதிய முதல் நிருபம் என்றிருந்தது.

இத்திருமுகம் சின்ன ஆசியாவிலுள்ள கிறிஸ்தவ சபைகளுக்கு எழுதப்பட்டது என முதல் வசனத்திலிருந்து அறிகிறோம். அங்கு யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் இருந்திருக்க வேண்டும். வாசகர்களுள் பெரும்பாலோர் ஏழைகளாக இருந்திருக்க வேண்டும். அவர்களிடையே அடிமைகளும் இருந்திருக்க வேண்டும்.

1 பேதுரு திருமுகத்தின் ஆசிரியர்[தொகு]

திருச்சபைத் தந்தையர் காலத்திலிருந்தே இத்திருமுகம் திருத்தூதரான பேதுருவால் எழுதப்பட்டது என ஏற்கப்பட்டு வந்தது[2]. ஆசிரியரும் தம்மைப் பற்றி "இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனான பேதுரு" (1 பேது 1:2) என எழுதுகிறார். எனினும் இதனைப் பேதுருவே நேரடியாக எழுதியிருப்பாரா என்னும் கேள்வி எழுகிறது.

இத்திருமுகம் உயர்ந்த கிரேக்க நடையில் அமைந்துள்ளது; பவுலின் கருத்துகள் பல இதில் பிரதிபலிக்கின்றன. மேலும் திருமுகம் குறிப்பிடுவது போன்ற பெரிய துன்புறுத்தல் பேதுரு வாழ்ந்தபோது இல்லை. இத்திருமுகம் அனுப்பப்பட்ட இடங்களில் (1 பேது 1:1) சிலவற்றிலாவது பேதுரு இறக்குமுன்னே (கி.பி. 64) திருச்சபை தோன்றியிருந்ததா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, மாறிவிட்ட ஒரு காலகட்டத்தில் பேதுரு என்ன சொல்லியிருப்பார் என்பதை, அவருடைய சீடர் ஒருவர் அவர் பெயரில் திருமுகமாக எழுதியிருக்கலாம் என அறிஞர் பலர் கருதுகின்றனர். இவ்வாறு இத்திருமுகம் கி.பி. 70-90 ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம்.

1 பேதுரு திருமுகம் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்[தொகு]

இத்திருமுகம் எழுத ஏதாவது குறிப்பிட்ட சூழ்நிலை இருந்ததா எனத் தெரியவில்லை. எனினும், துன்புறுத்தப்பட்ட காலத்திலும் சோதனைக் காலத்திலும் கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தவும், தளர்ந்துபோன நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் இத்திருமுகத்தை எழுதியுள்ளார் எனலாம் (1 பேது 4:12-13).

1 பேதுரு திருமுகத்தின் உள்ளடக்கம்[தொகு]

இத்திருமுகத்தில் அடங்கியுள்ள முக்கிய கருத்துகள்:

  • கிறிஸ்தவ வாழ்வின் கடமைகள், உண்மையான வாழ்வு, சகோதர அன்பு ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன (1 பேது 1:1-2:10).
  • கிறிஸ்தவர்கள் பிற இனத்தாருக்கும் அரசு அதிகாரிகளுக்கும், அடிமைகள் தலைவர்களுக்கும், கணவர் மனைவியருக்கும், மனைவியர் கணவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை ஆசிரியர் நினைவூட்டுகிறார் (1 பேது 2:11-4:6).
  • கிறிஸ்துவின் இறுதி வருகை பற்றிப் பேசி, விழிப்புணர்வு தேவை என வலியுறுத்துகிறார் (1 பேது 4:7-5:11).

1 பேதுரு திருமுகத்திலிருந்து சில பகுதிகள்[தொகு]

1 பேதுரு 2:9-10, 16-17

"நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்;
அவரது உரிமைச் சொத்தான மக்கள்.
எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின்
மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி.
முன்பு நீங்கள் ஒரு மக்களினமாய் இருக்கவில்லை;
இப்பொழுது கடவுளுடைய மக்களாக இருக்கிறீர்கள்.
முன்பு இரக்கம் பெறாதவர்களாய் இருந்தீர்கள்;
இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள்."


"நீங்கள் விடுதலை பெற்றுள்ளீர்கள்; விடுதலை என்னும் போர்வையில் தீமை செய்யாதீர்கள்;
கடவுளுக்கே அடிமைகளாய் இருங்கள்.
எல்லாருக்கும் மதிப்புக் கொடுங்கள்; சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்துங்கள்;
கடவுளுக்கு அஞ்சுங்கள்; அரசருக்கு மதிப்புக் கொடுங்கள்."

1 பேதுரு 3:8-9, 15-17

"நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள்.
பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள்.
தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்;
பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்;
மாறாக, ஆசி கூறுங்கள்.
ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்...
உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள்.
நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால்
விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்.
ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள்.
உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாயிருக்கட்டும்.
அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள்
உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள்.
ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட,
கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்."

1 பேதுரு திருமுகத்தின் உட்பிரிவுகள்[தொகு]

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்து) 1:1-2 442
2. கிறிஸ்தவ அழைப்பும் பொறுப்பும் 1:3-2:10 442-444
3. குடும்பத்திலும் சமூகத்திலும் கிறிஸ்தவ நடத்தை 2:11-4:11 444 - 447
4. துன்புறுத்தப்படுவோருக்கு அறிவுரை 4:12 - 5:11 447 - 448
5. முடிவுரை (இறுதி வாழ்த்து) 5:12-14 448

ஆதாரங்கள்[தொகு]

  1. பேதுரு எழுதிய முதல் திருமுகம்
  2. கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - பேதுரு திருமுகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=1_பேதுரு_(நூல்)&oldid=2761579" இலிருந்து மீள்விக்கப்பட்டது