உள்ளடக்கத்துக்குச் செல்

3 யோவான் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூய யோவான். ஓவியர்: எல் கிரேக்கோ (1541-1514). காப்பிடம்: மாட்ரிட், எசுப்பானியா.


3 யோவான் அல்லது யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம் (Third Letter [Epistle] of John) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இருபத்து ஐந்தாவது நூலாக அமைந்துள்ளது [1]. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Ioannou γ (Επιστολή Ἰωάννου γʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula III Joannis எனவும் உள்ளது.

பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் அருளப்பர் எழுதிய மூன்றாம் நிருபம் என்றிருந்தது. யோவான் என்னும் பெயரே ஆங்கிலத்தில் John என்று வழங்கப்படலாயிற்று.

யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம் 15 வசனங்களை மட்டுமே கொண்ட ஒரு மிகச் சிறிய திருமுகம். இத்திருமுகம் காயு என்னும் தனி நபருக்கு எழுதப்பட்டுள்ளது. இறையியல் கருத்துக்கள் இத்திருமுகத்தில் இல்லை. எனினும் தொடக்க காலத் திருச்சபை வாழ்வைப் புரிந்துகொள்ள இது பெரிதும் உதவுகிறது.[2].

3 யோவான் திருமுகத்தின் ஆசிரியர்

[தொகு]

இத்திருமுகம் மூப்பர் ஒருவரால் எழுதப்பட்டது. மூப்பரின் பெயர் கொடுக்கப்படவில்லை.

3 யோவான் திருமுகத்தின் சூழல், நோக்கம், உள்ளடக்கம்

[தொகு]

இத்திருமுகத்தின் பெறுநர் காயு, கிறிஸ்தவ மறைப் பணியாளர்களை வரவேற்று விருந்தோம்பி வந்தார். அவர் தெமேத்திரியு என்பவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார் ஆசிரியர்.

தியோத்திரபு என்பவர் இந்த மூப்பர் அனுப்பும் கடிதத்தையோ அவர் அனுப்பும் ஆள்களையோ ஏற்றுக்கொள்வதில்லை. அவர் கொள்கையளவில் மூப்பரிடமிருந்து மாறுபட்டவராக அல்லது மூப்பரின் தலைமையை ஏற்றுக்கொள்ளாதவராக இருந்திருக்க வேண்டும்.

இத்திருமுகம் தொடக்க காலக் கிறிஸ்தவ நிலையை ஓரளவு சுட்டிக்காட்டுகிறது. தொடக்க காலத் திருச்சபையின் அதிகார அமைப்பையும் சபைகளின் தனித்தன்மையையும் இத்திருமுகம் எடுத்துக் காட்டுகிறது. சில மூப்பர்கள் பிற சபைகள் மீதும் அதிகாரம் கொண்டு விளங்கினாலும், நாள் செல்லச் செல்ல ஒரு சபையின் மூப்பர் இன்னொரு சபையின் மீது செலுத்தும் அதிகாரம் வரவேற்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது. தியோத்திரபுவின் சிக்கலைத் தாமே நேரில் வந்து தீர்க்கப்போவதாகக் கூறுகிறார் ஆசிரியர்.

3 யோவான் திருமுகத்திலிருந்து ஒரு பகுதி

[தொகு]

3 யோவான் 4-8, 11

"அன்பார்ந்த காயுவுக்கு மூப்பனாகிய நான் எழுதுவது:
உம்மிடம் நான் உண்மையாக அன்பு செலுத்துகிறேன்.
அன்புக்குரியவரே, நீர் ஆன்ம நலத்தோடிருப்பது போல்
உடல் நலத்தோடு இருக்கவும் அனைத்தும் இனிதே நிகழவும் வேண்டுகிறேன்.
நீர் உண்மையைப் பற்றிநின்று அதற்கேற்ப வாழ்ந்து வருகிறீர்
என்று சகோதரர்கள் உம்மைக் குறித்துச் சான்று கூறியபோது நான் பெருமகிழ்ச்சியடைந்தேன்;
என் பிள்ளைகள் உண்மைக்கேற்ப வாழ்ந்து வருகிறார்களெனக் கேள்விப்படுவதைவிட
மேலான பெரு மகிழ்ச்சி எனக்கு இல்லை.
அன்பார்ந்தவரே, நீர் சகோதரர்களுக்கு,
அதுவும் அறிமுகமில்லாச் சகோதரர்களுக்குச் செய்தவற்றையெல்லாம் பார்க்கும்போது
நீர் நம்பிக்கைக்குரியவர் என்பது தெளிவாகிறது.
அவர்கள் திருச்சபையின் முன்னிலையில் உமது அன்பைக் குறித்துச் சான்று பகர்ந்தார்கள்.
எனவே நீர் அவர்களைக் கடவுளுக்கு உகந்தமுறையில் வழியனுப்பிவைத்தால் நல்லது.
ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவுக்காகப் பயணம் மேற்கொண்டவர்கள்.
பிற மக்களிடமிருந்து அவர்கள் வழியில் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை.
இத்தகையோருக்கு உதவுவது நமது கடமை.
இவ்வாறு, உண்மைக்காக உழைக்கும் அவர்களின் உடன் உழைப்பாளர் ஆகிறோம்...
அன்பார்ந்தவரே, தீமையைப் பின்பற்ற வேண்டாம்; நன்மையையே பின்பற்றும்.
நன்மை செய்வோர் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
தீமை செய்வோர் கடவுளைக் கண்டதில்லை."

3 யோவான் திருமுகத்தின் உட்பிரிவுகள்

[தொகு]
பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்து) வச 1-4 464
2. காயுவுக்குப் பாராட்டும் பரிந்துரையும் வச 5-8 464
3. தியோத்திரபு கண்டிக்கப்படல் வச 9-10 464
4. திமேத்திரியுவுக்கு நற்சான்று வச 11 - 12 464
5. முடிவுரை

ஆதாரங்கள்

[தொகு]
  1. யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்
  2. கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - யோவான் திருமுகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=3_யோவான்_(நூல்)&oldid=1479510" இலிருந்து மீள்விக்கப்பட்டது