உள்ளடக்கத்துக்குச் செல்

1 யோவான் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"கடவுள் அன்பாய் இருக்கிறார்" (1 யோவா 4:16). பார்வை இழந்தோருக்கான ஆங்கில அரிச்சுவடி. ஆக்கியவர்: வில்லியம் மூன். ஆண்டு: 1877. வெளியீட்டு இடம்: இலண்டன்


1 யோவான் அல்லது யோவான் எழுதிய முதல் திருமுகம் (First Letter [Epistle] of John) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இருபத்து மூன்றாவது நூலாக அமைந்துள்ளது [1]. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Ioannou A (Επιστολή Ἰωάννου αʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I Joannis எனவும் உள்ளது.

பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் அருளப்பர் எழுதிய முதல் நிருபம் என்றிருந்தது. யோவான் என்னும் பெயரே ஆங்கிலத்தில் John என்று வழங்கப்படலாயிற்று.

இத்திருமுகம் பொதுத் திருமுகங்களில் ஒன்றாக இருப்பினும் வழக்கமான வாழ்த்து, வாசகர் பற்றிய குறிப்பு எதுவும் இதில் இல்லை. எனினும் இதன் வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினராக அல்லது சபையினராக இருந்திருக்க வேண்டும். அங்கு முதியோர் இளையோர் அனைவரும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை நம்பிக்கையில் முதியோராகவும் இளையோராகவும் கூடக் கருதலாம்.

1 யோவான் திருமுகத்தின் ஆசிரியர்

[தொகு]

யோவான் நற்செய்திக்கும் இத்திருமுகத்திற்கும் இடையே மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது. மொழி நடை, கலைச் சொற்கள், கருத்துக்கள் ஆகியவற்றில் இந்த ஒற்றுமை குறிப்பாகக் காணப்படுகிறது. இரண்டிற்கும் இடையே உள்ள ஒரு சில வேறுபாடுகள் எளிதில் விளக்கக்கூடியவையாய் இருக்கின்றன. எனவே இரண்டும் யோவான் சமூகத்திலிருந்தே தோன்றியிருக்க வேண்டும். திருத்தூதர் யோவானே நேரடியாக இதனை எழுதினாரா என்பது பற்றி அறுதியிட்டுக் கூறமுடியாது. இத்திருமுகம் யோவான் நற்செய்திக்கு முன்னுரையாக எழுதப்பட்டது என்பர் ஒரு சிலர். இது யோவான் நற்செய்தியில் வரும் சில கருத்துக்களுக்கு விளக்கமாக எழுதப்பட்டது என்பர் வேறு சிலர்.

1 யோவான் திருமுகம் எழுதப்பட்ட நோக்கம்

[தொகு]

அக்காலத்தில் எழுந்த சில தவறான கருத்துக்களை, குறிப்பாக இயேசுவைப் பற்றிய தவறான கருத்துக்களைக் களைவது இத்திருமுகத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்றாகத் தெரிகிறது. கிறிஸ்தவச் சமூகத்தின் ஆன்மீகம் மற்றும் சமூகம் பற்றிய விழிப்புணர்வை ஆழப்படுத்துவதும் (1 யோவா 3:17) திருமுகத்தின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். இச்சமூகத்தின் உறுப்பினர்கள் (1 யோவா 2:19) இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள் (1 யோவா 2:22). அத்துடன் அவர் உண்மையில் மனிதராகவும் இருந்தார் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை (1 யோவா 4:2). மீட்புக்கும் நல்லொழுக்கம், அன்பு போன்றவற்றுக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர்கள் கூறி வந்தார்கள். திருமுக ஆசிரியர் இப்படிப்பட்டத் தவறுகளைக் களைய முற்படுகிறார்[2].

1 யோவான் திருமுகத்தின் உள்ளடக்கம்

[தொகு]

இத்திருமுகத்தில் அடங்கியுள்ள முக்கிய கருத்துகள்:

  • இயேசு உண்மையில் மனிதராகவும் இருந்தார் என்று கூறி, அதை அவர்கள் நம்ப வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
  • கடவுளிடம் அன்புகூர்பவர்கள் சகோதர சகோதரிகளிடமும் அன்புகூர வேண்டும் என அறுதியிட்டுக் கூறுகிறார் ஆசிரியர்.
  • அன்பு பற்றி மிகுதியாகப் பேசுவதால் இதை "அன்புக் கடிதம்" எனலாம்.

1 யோவான் திருமுகத்திலிருந்து சில பகுதிகள்

[தொகு]

1 யோவான் 1:5-7

"நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே:
கடவுள் ஒளியாய் இருக்கிறார்;
அவரிடம் இருள் என்பதே இல்லை.
நாம் இருளில் நடந்து கொண்டு,
அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்;
உண்மைக்கேற்ப வாழாதவராவோம்.
மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால்,
ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம்.
மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம்
எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்."

1 யோவான் 4:16-21

"கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம்.
கடவுள் அன்பாய் இருக்கிறார்.
அன்பில் நிலைத்திருகிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார்.
கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.
கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம்.
எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம்.
இவ்வாறு நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது.
அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும்.
ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது;
அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.
அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்.
கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு
தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர்.
தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர்,
கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது.
கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.
இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை."

1 யோவான் திருமுகத்தின் உட்பிரிவுகள்

[தொகு]
பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்வு அளிக்கும் வாக்கு) 1:1-4 455
2. ஒளியும் இருளும் 1:5 - 2:29 455 - 457
3. கடவுளின் பிள்ளைகளும்

அலகையின் பிள்ளைகளும்

3:1-24 457 - 458
4. அன்பும் நம்பிக்கையும் 4:7 - 5:12 458 - 460
5. முடிவுரை 5:13-21 460

ஆதாரங்கள்

[தொகு]
  1. யோவான் எழுதிய முதல் திருமுகம்
  2. கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - யோவான் திருமுகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=1_யோவான்_(நூல்)&oldid=1479504" இலிருந்து மீள்விக்கப்பட்டது