உள்ளடக்கத்துக்குச் செல்

லூக்கா நற்செய்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித லூக்கா

லூக்கா நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் மூன்றாவது நூலாகும்[1]. இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள மூன்றாவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் லூக்கா எழுதிய நற்செய்தி, Κατὰ Λουκᾶν εὐαγγέλιον(Kata Loukan Euangelion = The Gospel according to Luke), என்பதாகும்.

மற்ற நற்செய்தி நூல்களான மத்தேயு நற்செய்தி,மாற்கு நற்செய்தி என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று நற்செய்தி நூல்களும் இணைந்து ஒத்தமை நற்செய்தி நூல்கள் (Synoptic Gospels) [2] என்று அழைக்கப்படுவதும் உண்டு.

லூக்கா நற்செய்தி இயேசுவைப் பற்றித் தகவல் தருகின்ற நான்கு நற்செய்திகளிலும் அழகும் சிறப்பும் பொருந்தியது என அறிஞர் கூறுவர். ஏன், உலக இலக்கியத்திலேயே லூக்கா நற்செய்தி ஒரு சிறப்பிடம் பெறுகிறது. இந்நூலின் ஆசிரியர் பிற இன-கிறிஸ்தவர் என்றும், அவர் யூத சமய மரபுகள் பற்றி நன்கு புலமை பெற்றிருந்தார் எனவும் தெரிகிறது. இயேசுவை யூத சமயத்தில் வேரூன்றியவராக லூக்கா காட்டுகின்றார். அதே சமயத்தில், கிறிஸ்தவ நம்பிக்கையானது எருசலேமிலிருந்து, மத்திய தரைக் கடல் பகுதிகளைத் தாண்டிஉரோமை நகர் வரை பரவியதையும் அவர் உயிரோட்டமான விதத்தில் விவரிக்கின்றார்.

லூக்கா தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு இந்நூலைப் படைத்துள்ளார். இயேசுவைப் பற்றிப் பிற நூல்கள் இதற்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் முறையாகவும் முழுமையாகவும் வரலாற்று்ப் பின்னணியோடும் யாவற்றையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்நூலை இவர் எழுதுகிறார் (லூக் 1:1-4). பிற இனத்தவருக்கென்றே எழுதுவதால் எபிரேயச் சொல்லாட்சி இந்நூலில் தவிர்க்கப்படுகிறது.

நூலின் ஆசிரியர்

[தொகு]

இந்நற்செய்தியின் ஆசிரியர் கடவுள் பயமுள்ள ஒரு பிற இனத்தவராக இருந்திருக்க வேண்டும். அதாவது, அவர் யூத சமயத்தால் கவரப்பட்டார்; யூதரின் தொழுகைக் கூடங்களுக்கு அவர் சென்றிருப்பார்; யூத சமயத்தை முழுமையாகத் தழுவாவிட்டாலும் அம்மரபோடு அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும்.

கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே கிறிஸ்தவ மரபு, இந்நூலின் ஆசிரியர் லூக்கா எனவும், இவர் தூய பவுலின் உடன் பணியாளராக இருந்தார் எனவும் நிலைநாட்டியுள்ளது. கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் பவுல் அன்பார்ந்த மருத்துவர் லூக்கா...உங்களை வாழ்த்துகின்றார் எனக் குறிப்பிடுகிறார் (கொலோ 4:14). பவுல் பிலமோனுக்கு எழுதிய கடிதத்தில் லூக்காவைக் குறிப்பிடுகிறார் (வசனம் 24). அதுபோலவே, 2 திமொத்தேயு 4:11இலும் பவுல், என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.

லூக்கா நற்செய்தியும் புதிய ஏற்பாட்டு நூலான திருத்தூதர் பணிகளும் ஒரே ஆசிரியரின் எழுதுகோலிலிருந்து பிறந்தனவே என்பது அறிஞர்களின் ஒருமனதான முடிவு. திருத்தூதர் பணிகள் நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாம் நேரடியாகக் கண்டதும் பங்கேற்றதுமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். நாங்கள் பயணம் செய்தோம், நாங்கள் தங்கியிருந்தோம், நாங்கள் போதித்தோம்(காண்க திப 16:10-17; 20:5-15; 21:1-28:16; 27-28) திருத்தூதர் பணிகள் என்னும் கூற்றுகள் நூலின் ஆசிரியர் தூய பவுலோடு பயணம் செய்த உடன்பணியாளர் என்பதைக் காட்டுகின்றன.

வேறு சில அறிஞர்கள் மாற்றுக் கருத்துத் தெரிவிக்கின்றனர். நாங்கள் என நூலாசிரியர் கூறும்போது தன்னையும் கூடவே இணைத்துச் சொல்கிறார் எனப் பொருள்கொள்ள வேண்டிய தேவை இல்லை; ஏனென்றால், கடல் பயணத்தை விவரிக்கும்போது நூலாசிரியர் தன்னையும் பயணிகளோடு இணைத்துப் பேசுவது கிரேக்க-உரோமைய இலக்கிய மரபு. அம்மரபையே லூக்காவும் பின்பற்றியிருக்கிறார் என்பது இந்த அறிஞர் கூற்று.

எனினும், திருத்தூதர் பணிகள் நூலின் ஆசிரியர் லூக்கா என்றால், அந்த ஆசிரியரே மூன்றாம் நற்செய்தியின் ஆசிரியரும் ஆவார் என்றால், லூக்கா நற்செய்தி என வழங்கப்படும் நூலின் ஆசிரியரும் அவரே எனத் திருச்சபை மரபு கொள்கிறது.

நூல் எழுதப்பட்ட காலம், இடம்

[தொகு]

லூக்கா நற்செய்தி கி.பி. 85-90 அளவில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பெரும்பான்மை அறிஞரின் கருத்து. இந்தக் கருத்துக்கு அடிப்படையாக கி.பி. 70இல் எருசலேம் நகர் தீத்துவின் தலைமையில் உரோமைப் படையினரால் அழிக்கப்பட்ட செய்தியை லூக்கா வழங்கியிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. எருசலேம் அழிந்துபோகும் என இயேசு முன்னறிவிக்கிறார் (லூக் 19:41-44; 21:20-24). இந்த முன்னறிவிப்பு உண்மையிலே ஏற்கனவே நடந்து முடிந்த அழிவைப் பின்னோக்கிப் பார்ப்பதாக உள்ளது என்பது அறிஞர் கருத்து. மாற்கு நற்செய்தி நூலில் காணப்படும் எருசலேம் கோவில் பற்றிய தானியேல் மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியச் செய்தி எருசலேம் நகர அழிவைப் பற்றிய செய்தியாக மாற்றப்படுகிறது (லூக் 21:5,20; 13:35). எனவே இந்நூல் கி.பி. 70க்குப் பின்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

லூக்கா நற்செய்தி எந்த நகரில் எழுதப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கிரேக்க நாட்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்து. வேறு சிலர் அந்தியோக்கியா, அல்லது உரோமை நகரிலிருந்து எழுதப்பட்டிருக்கலாம் என்பர்.

நூலின் உள்ளடக்கம்: பகுப்பாய்வு

[தொகு]

லூக்கா நற்செய்தியின் உள்ளடக்கத்தைக் கீழ்வருமாறு பகுப்பாய்வு செய்து தொகுக்கலாம்:

1. பாயிரம்

இந்த நற்செய்தியின் தொடக்கத்தில் உள்ள பாயிரம் (அர்ப்பணம்) என்ற பகுதியில் லூக்கா ஏன் இந்த நூலை எழுதினார் என்பதை விளக்குகிறார்:

எனவே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை... ஒழுங்குபடுத்தி எழுத லூக்கா முன்வருகிறார். அவர் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் இயேசு பற்றிக் கிறித்தவ சமூகம் அறிவித்துவந்த மரபைக் குறிக்கும். நூல் தியோபில் என்பவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. கிரேக்க மொழியிலுள்ள இச்சொல் கடவுளின் அன்பர் எனப் பொருள்படும். இது லூக்காவை ஆதரித்த ஒரு புரவலராக இருக்கலாம் அல்லது பொதுவான பெயராக நின்று, கிறித்தவ நம்பிக்கை கொண்ட எவரையும் குறிக்கலாம். லூக்கா தம் நூலை எழுதுவதற்குப் பிற மூல ஆதாரங்களைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். அவற்றுள் நிச்சயமாக மாற்கு நற்செய்தியும், “Q” என்று அறியப்படும் ஊக ஏடும் உள்ளடங்கும். இங்கே குறிப்பிடப்படுகின்ற “Q” என்பது Quelle என்னும் செருமானியச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு ஆங்கிலத்தில் Source, அதாவது மூலம், ஆதாரம் என்று பொருள் [2]. நூல் எழுதப்பட்டதன் நோக்கமும் தரப்படுகிறது. அதாவது, தியோபில் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு லூக்கா நூலை எழுதினார்.

லூக்கா கூறுகின்ற முறையான வரலாறு மாற்கு நற்செய்தியில் தரப்படுகின்ற பொது உருவமைப்பைத் தழுவி அமைகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட தயாரிப்புக் காலத்துக்குப் பின் (லூக் 1:5-4:13), இயேசு கலிலேயாவில் பொதுப் பணி நிகழ்த்துகிறார் (4:14-9:50); பின் எருசலேம் நகரை நோக்கிப் பயணம் மேற்கொள்கிறார் (9:51-19:44); எருசலேமில் பணியில் ஈடுபடுகிறார் (19:45-21-38); எருசலேமில் பல துன்பங்கள் அனுபவித்து அங்கேயே சாவை எதிர்கொள்கிறார் (அதிகாரங்கள் 22-23); சாவிலிருந்து மீண்டும் உயிர்பெற்றெழுந்து, எருசலேமிலும் சுற்றுப்புறங்களிலும் சீடர்களுக்குத் தோன்றுகிறார் (அதிகாரம் 24).

இயேசுவின் வரலாறு எந்த நிலவியல் எல்லைகளுக்குள் நிகழ்ந்தது என மாற்கு உருவமைத்தாரோ, அதே போன்று லூக்காவும் உருவமைத்தார். அந்த வடிவமைப்பின் எல்லைக்குள் நின்று “Q” என்று அறியப்படும் ஊக ஏட்டிலிருந்தும் பிற மூலங்களிலிருந்தும் செய்திகளைத் தேர்ந்து தம் நூலில் இணைத்துள்ளார்.

2. நூலின் முதல் பகுதி: இயேசுவின் தயாரிப்புக் காலம்

லூக்கா நற்செய்தியில் குறிப்பிடப்படுகின்ற இயேசுவின் தயாரிப்புக் காலம் (1:5-4:13) குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளில் தொடங்குகிறது (அதி. 1-2). அதில், திருமுழுக்கு யோவானின் பெருமை சாற்றப்படுகிறது என்றாலும் அவரைவிடவும் இயேசு மேலானவர் என்ற உண்மையானது அவ்விருவரது பிறப்புப் பற்றிய முன்னறிவிப்பு நிகழ்வுகள் வழியாகவும், இயேசுவின் பிறப்பு மற்றும் யோவானின் பிறப்பு ஆகியவற்றின் வரலாறு கூறுவது வழியாகவும் தரப்படுகிறது.

லூக்கா நற்செய்திப்படி, மீட்பு வரலாறு எருசலேம் திருக்கோவிலில் தொடங்குகிறது (1:5). செக்கரியா, எலிசபெத்து, மரியா, சிமியோன், அன்னா ஆகியோர் யூத சமய மரபில் மிகுந்த இறைப்பற்றுடைய மனிதராக எண்பிக்கப்படுகின்றனர்.

வளர்ந்த திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் தோன்றி இயேசுவின் வருகையை ஆயத்தப்படுத்துகிறார்; அக்கால ஆட்சியாளர்களின் நெறிதவறிய வாழ்க்கையைக் கண்டித்ததால் சிறைத் தண்டனை பெறுகிறார் (3:1-20). இந்நிகழ்ச்சி இயேசு யோவானைச் சந்திக்கும் முன்பே நிகழ்வதாக லூக்கா கூறுவது கவனிக்கத்தக்கது. இதை எவ்வாறு விளக்குவது? லூக்காவின் இறையியல் பார்வையில், திருமுழுக்கு யோவான் மீட்பு வரலாற்றின் பழைய படிநிலையைச் சேர்ந்தவர், அதாவது இசுரயேலின் காலமாகிய பழைய ஏற்பாட்டுக் காலத்தவர் (காண்க 16:16). ஆனால் இயேசு ஒரு புதிய யுகத்தைத் தோற்றுவிக்கிறார். எனவேதான் இயேசுவுக்கு யோவானே திருமுழுக்கு அளித்தார் என்ற செய்தி லூக்கா நற்செய்தியில் வெளிப்படையாகத் தரப்படவில்லை.

லூக்கா, இயேசுவைக் கடவுளின் மகன் என இயேசு திருமுழுக்குப் பெற்ற வேளையில் காட்டுகிறார் (3:21-22). இயேசுவின் குலவழிப் பட்டியலைப் பின்னிருந்து முன்னேறும் வரிசையில் அமைத்துள்ளார். ஆபிரகாமுக்கும் அப்பால் சென்று முதல் மனிதராகிய ஆதாம் வரையிலும் லூக்கா இயேசுவின் மூதாதையரை வரிசைப்படுத்துகிறார். ஆதாமும் கடவுளின் மகன் என அழைக்கப்படுகிறார் (3:23-38). ஆனால் ஆதாம் அலகையின் சோதனையை முறியடிக்கவில்லை. மாறாக, இயேசு அலகையால் சோதிக்கப்பட்டபோது, உண்மையாகவே கடவுளின் மகன் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை நடைமுறையாக எண்பிக்கிறார் (4:1-13). இயேசு அலகையை முறியடிக்கிறார் எனக் காட்டுகிறார் லூக்கா.

3. இயேசுவின் கலிலேயப் பணி

இயேசுவின் வரலாற்றில் அடுத்த முக்கிய கட்டம் அவர் கலிலேயாவில் ஆற்றிய பணி (4:14-9:50). இப்பகுதியை வடிவமைப்பதில் லூக்காவில் சில தனிப் பண்புகள் உள்ளன. கலிலேயப் பணிக்கு முன் இயேசு நாசரேத்து தொழுகைக் கூடத்துக்குப் போன நிகழ்ச்சியை லூக்கா விவரிக்கிறார் (4:16-30). இந்த நிகழ்ச்சியில் லூக்காவுக்குப் பெருவிருப்பான பல கருப்பொருள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை: இயேசு திருநூல் கூற்றுகளை நிறைவுசெய்கிறார்; பண்டு புகழ்பெற்றிருந்த இறைவாக்கினராகிய எலியா மற்றும் எலிசா போன்று இயேவும் பிற இனத்தாருக்குப் பொருள்செறிந்த விதத்தில் வல்லமை மிகுந்த இறைவாக்கினாராக வருகிறார்; இயேசு தம் சொந்த ஊரில் இருந்த தொழுகைக் கூடத்திலேயே புறக்கணிக்கப்படுகிறார்.

இப்பகுதியில் இயேசு சமவெளியில் வழங்கிய பேருரை முக்கிய கூறாக உள்ளது (6:20-49). இன்னொரு சிறப்பு அம்சம் என்னவெனில், இயேசுவைப் பின்சென்றோரில் பெண்சீடரும் இருந்தனர் என்பதை லூக்கா மாற்குவைப்போல் அல்லாமல் நூலின் தொடக்கத்திலே கோடிட்டுக் காட்டுகிறார் (8:1-3).

4. இயேசு எருசலேமை நோக்கிப் பயணமாகிறார்

லூக்கா நற்செய்தியின் அமைப்பைப் பார்த்தால், இயேசு எருசலேமுக்குப் பயணமாகப் போவது பற்றிய கூற்றுத்தொடர் முதன்மைப்படுத்திக் காட்டப்படுகிறது (9:51-19:44). இத்தொடர் உண்மையிலேயே மிக நீண்டதுதான்: இது 10 அதிகாரங்களில் விவரிக்கப்படுகிறது. மாற்குவோ இயேசுவின் எருசலேம் பயணத்தை சுமார் 3 அதிகாரங்களுக்குள் அடக்கிவிட்டார். லூக்கா நற்செய்தியின் மூன்றில் ஒரு பகுதி இயேசுவின் எருசலேம் பயணம் பற்றியதுவே.

இயேசுவின் எருசலேம் பயணம் தொடர்வதை அவ்வப்போது லூக்கா வாசகர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே செல்கிறார். எடுத்துக்காட்டாக, 9:51; 13:22, 33; 17:11; 18:31 ஆகிய இடங்களைக் காண்க. பயணம் செல்லும் வேளையில் இயேசு தம் சீடருக்குப் போதனை வழங்கிக்கொண்டே செல்கிறார்; இயேசுவின் சீடராக மாறுவது எதில் அடங்கியிருக்கிறது ("சீடத்துவம்") [3] என விளக்கிச் சொல்கின்றார். இப்போதனைப் பகுதியில் லூக்கா “Q” ஊக ஏட்டிலிருந்தும் பிற மூலங்களிலிருந்தும் பலவற்றைச் சேர்த்துள்ளார். எருசலேமுக்குச் செல்லும் இயேசு வெளிக்கட்டாயத்தினால் அங்குப் போகவில்லை, மாறாக, தாமாகவே விரும்பிச் செல்கிறார்; தம்மைப் பின்செல்ல விரும்புவோரும் தம்மோடு இணைந்து பயணத்தில் சேர்ந்துகொள்ளக் கேட்கிறார் (காண்க 9:51-62).

பயணத்தைத் தொடர்கின்ற வேளையில் இயேசு எளிதில் மறக்கமுடியாத பல செறிவுமிக்க உவமைகளைக் கூறிச் செல்கிறார். நல்ல சமாரியர் உவமை (10:29-37), பெரிய விருந்து உவமை (14:7-24), காணாமற்போன மகன் உவமை (15:11-32), செல்வரும் இலாசரும் பற்றிய உவமை (16:19-31) ஆகியவை இப்பகுதியில் உள்ளத்தைக் கவரும் அழகிய கதைகள் ஆகும்.

மேலும், பயணத்தின்போது இயேசு மார்த்தாவையும் மரியாவையும் சந்திக்கிறார் (10:38-42); சக்கேயுவின் விருப்பத்திற்கிணங்க அவர் வீட்டில் விருந்துக்குச் செல்கிறார் (19:1-10). இது தவிர, இறைவேண்டுதல் பற்றி செறிவுமிக்க போதனை வழங்குகிறார் (11:1-13; 18:1-14).

5. எருசலேமில் இயேசுவின் பணி

நெடிய பயணத்துக்குப் பிறகு எருசலேம் வந்து சேர்கிறார் இயேசு (19:28-41). அந்தப் புகழ்மிகு நகரத்தில் இயேசு ஆற்றிய பணியாக லூக்கா குறிப்பிடுவது (19:45-21:38) மாற்கு நற்செய்தியைப் பெரிதும் ஒத்திருக்கிறது. எனினும், சில அழுத்தங்கள் வேறுபடுகின்றன. எருசலேம் திருக்கோவிலைத் தமது இல்லமாகக் காண்கிறார் இயேசு (19:46; காண்க 2:49). மேலும், இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்துவந்தார் என லூக்கா குறிப்பிடுகிறார்.

6. இயேசு துன்பங்கள் அனுபவித்து, இறக்கிறார்

இயேசுவின் பாடுகள் பற்றிய கூற்றுத்தொடரை மாற்கு வடித்துள்ளது போலவே லூக்காவும் செய்திருந்தாலும், சில வேறுபாடுகளும் உள்ளன (லூக் அதி. 22-23; ஒப்பிடுக மாற் அதி. 14-15). இயேசு வழங்கியதாக ஒரு பிரியாவிடை உரையை லூக்கா இணைக்கிறார் (22:14-38). இந்த உரையில் இயேசு யார் பெரியவர்? என்ற கேள்விக்குப் பதில் தருகிறார்: பணிவிடை புரிவதே மேன்மையையும் பெருமையையும் பெற்றுத்தரும் (22:24-30).

பொந்தியு பிலாத்தும் ஏரோது அந்திப்பாவும் இயேசு குற்றம் ஒன்றும் செய்யவில்லை என்று அறிவித்த பிறகும் (லூக் 23:1-16), இயேசு கொலைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு, குற்றமற்ற நிலையிலும் துன்புறுத்தப்பட்டு, வீரத் தியாகியாக மரணமடைகின்றார்.

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதும், இயேசு உரைத்த கடைசி மூன்று கூற்றுகள் அவர்தம் பணிக்காலம் முழுவதும் அவர் வலியுறுத்திவந்த போதனையிலிருந்து பிறழாமல் இருப்பதை லூக்கா கோடிட்டுக் காட்டுகிறார். அதாவது, இயேசு பகைவரை மன்னிக்கிறார் (23:34); ஒதுக்கப்பட்டோருக்கு உறுதுணையாக இருக்கிறார் (23:43); கடவுளை நம்புவதில் விடாது நிலைத்திருக்கிறார் (23:46).

7. இயேசு சீடர்களுக்குத் தோன்றுகிறார்

லூக்கா நற்செய்தியின் கடைசி அதிகாரம் இயேசுவின் கல்லறை வெறுமையாய் இருந்தது என்னும் கூற்றோடு தொடங்குகிறது (24:1-12). தொடர்ந்து இயேசு உயிரோடு தோற்றமளிக்கும் நிகழ்ச்சிகள் விவரிக்கப்படுகின்றன. முதலில் எம்மாவு வழியில் சீடருக்குத் தோன்றுகிறார் (24:13-35). பின்னர் எருசலேமில் கூடியிருந்த சீடர்களுக்குத் தோன்றுகிறார் (24:36-49). இந்த இரு நிகழ்ச்சிகளிலும் இயேசு திருநூலை விளக்கும்போதும், அப்பம் பிட்கும்போதும் சீடர் அவரை அடையாளம் காண்கின்றனர்.

இந்நற்செய்தி நூலின் இறுதிப் பகுதியில் இயேசுவின் விண்ணேற்றம் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. அதுபற்றிய விரிவான தொடர் கூற்று லூக்கா எழுதிய இரண்டாம் நூலாகிய திருத்தூதர் பணிகளில் விளக்கப்படுகிறது (காண் திப 1:6-12).

லூக்கா காட்டும் இயேசு யார்?

[தொகு]

உலக வரலாற்றில் முக்கிய இடம் பெறுபவராக இயேசுவைச் சித்தரிக்கிறார் லூக்கா (காண்க 3:1-2). இயேசு மீட்பு வரலாற்றின் மையமும் ஆவார். திருமுழுக்கு யோவான் காலம் வரையிலான இஸ்ரயேல் வரலாற்றுக்கும், பெந்தக்கோஸ்து நாளிலிருந்து தொடங்கும் திருச்சபை வரலாற்றுக்கும் நடுவே மீட்பு வரலாற்றின் மையத்தில் உள்ளார் இயேசு என லூக்கா காட்டுகிறார்.

இயேவுக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்களுள் லூக்கா அதிகமாகப் பயன்படுத்துவது இறைவாக்கினர் என்பதாகும். இயேசுவை இறைவாக்கினராகக் காட்டும் இடங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, லூக் 4:16-30; 7:16, 39; 13:33-34; 24:19, 25-27 ஆகியவற்றைக் கூறலாம். தமது பணிக்காலம் முழுவதும், ஏன், சிலுவையில் தொங்கி வேதனையுற்ற துயர வேளையில் கூட, இயேசு நல்லதொரு முன்மாதிரி வழங்குகிறார்; வீரத் தியாகியாக உயிர்விடுகிறார்.

லூக்கா பார்வையில், இயேசுவின் சீடர்கள் இயேசு காலத்துக்கும் திருச்சபைக் காலத்துக்கும் இடையே பாலம் போல உள்ளார்கள். இயேசுவின் பாடுகளின்போது அவரது சீடர்கள் சிறப்பான விதத்தில் நடந்துகொள்ளாவிட்டாலும் கூட, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர்கள் தூய ஆவியின் வல்லமையோடு துணிச்சலாக இயேசு பற்றிய நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்றலாயினர். இதை லூக்கா திருத்தூதர் பணிகள் நூலில் விவரிக்கிறார்.

இயேசுவையும் பவுலையும் ஒப்புமைப்படுத்தும் லூக்கா

[தொகு]

தமது இரண்டாம் நூலாகிய திருத்தூதர் பணிகளில் லூக்கா திருத்தூதர் பவுலின் வரலாற்றையும் திருப்பணியையும் விரிவாக எடுத்துரைக்கிறார். அங்கே லூக்கா பவுலை விவரிப்பதும், நற்செய்தியில் இயேசுவை விவரிப்பதும் இணையொத்த விதத்தில் இருப்பதை அறிஞர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது, இயேசு, பவுல் ஆகிய இருவருமே பிற இனத்தாரின் மீட்புக்குத் துணையாவர் என்றும், இருவருமே துன்பப்பட வேண்டியிருக்கும் என்றும் லூக்கா காட்டுகிறார் (காண் லூக் 2:29-35; திப 9:15-16). இயேசு, பவுல் இருவருமே எருசலேமுக்குப் போகத் துணிவோடு முனைந்து நின்றதையும் அங்கே அவர்கள் பெருவருத்தம் தருகின்ற துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் லூக்கா எடுத்துரைக்கிறார் (காண் லூக் 9:51; திப 19:21). இயேசுவும் பவுலும் தாம் துன்புற வேண்டியிருக்கும் என்பதை முன்னறிவிக்கின்றனர் (லூக் 9:22, 44-45; திப 20:22-24; 21:10-14).

இயேசு, பவுல் ஆகிய இருவரும் தங்கள் பணியைத் தொடங்குமுன் ஒரு விளக்க உரை ஆற்றுவதாகக் காட்டுகிறார் லூக்கா (காண் லூக் 4:16-30; தி 13:14-52). அபோலவே, இயேசுவும் பவுலும் பிரியாவிடையாக உரையாற்றுகின்றனர் (காண் லூக் 22:21-38; திப 20:18-35). இருவரும் அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள் (காண் லூக் 22:47-23:25; திப 21:27-26:32). சாவு அடுத்துவருகிறது என்று அறிந்த பிறகும் இயேசுவும் பவுலும் மனந் தளராது உறுதியாக இருக்கின்றனர் (காண் லூக் 22:39-46; திப 20:36-38).

இவ்விதத்தில் இயேசு பவுலுக்கு முன் உதாரணமானார். பவுலைப் போல இயேசுவைப் பின்செல்வோர் அனைவருக்குமே இயேசு முன் உதாரணமாக என்றுமே உள்ளார்.

இன்றைய உலகுக்கு லூக்கா வழங்கும் செய்தி

[தொகு]

இயேசு பற்றி எடுத்துரைக்கும் லூக்கா நற்செய்தி இன்றைய உலகுக்கு என்ன செய்தி வழங்குகிறது? இயேசுவின் காலத்தில் ஒடுக்கப்பட்டோராக யார்யார் கருதப்பட்டார்களோ அவர்கள் மட்டில் இயேசு தனிக் கரிசனையும் அன்பும் காட்டினார் என்பது லூக்கா நற்செய்தியில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. அன்று ஒடுக்கப்பட்டவர்கள் ஏழைகள், ஆதரவற்றோர், பெண்கள், வரிதண்டுவோர், பாவிகள் போன்றவர் ஆவர். இவர்களை எல்லாம் இயேசு அரவணைத்தார். கடவுளின் ஆட்சியில் அவர்களுக்கு இடம் உண்டு என்று நற்செய்தி கூறினார்.

தம் சீடர் எவ்வாறு இறைவேண்டல் செய்யவேண்டும் என இயேசு கற்பித்தார். கடவுளிடம் சீடர்கள் எதைக் கேட்க வேண்டும் என்றும் இயேசு படிப்பித்தார் (காண் லூக் 11;1-13; 18:1-14). இயேசு தம் வாழ்வின் முக்கிய கட்டங்களில் எல்லாம் இறைவேண்டலில் ஈடுபட்டார்.

மக்களோடு (குறிப்பாக, ஒடுக்கப்பட்டோரோடு) உணவருந்துவதும் விருந்துகளில் கலந்துகொள்வதும் இயேசுவுக்குப் பழக்கமான ஒன்று. இயேசுவின் பணிக்காலத்தின்போது அவர் பல முறை விருந்துகளில் கலந்துகொண்டதாக லூக்கா கூறுகிறார். இந்த பல விருந்துகளின் உச்சக் கட்டமாக அமைந்தது இயேசுவின் கடைசி இரா உணவு (லூக் 7:36-50; 9:10-17; 11:38-42; 14:7-24). இந்த விருந்துகள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் தம் சீடருக்குத் தோன்றி அவர்களோடு அருந்திய விருந்துக்கும் (லூக் 24:13-49), பின்னர் திருத்தூதர் திருப்பணிகள் நூலில் பலமுறை குறிப்பிடப்படுகின்ற அப்பம் பிட்குதலுக்கும் முன்னறிவுப்புப் போல அமைந்தன எனலாம்.

லூக்கா இயேசுவை இறைவாக்கினராகக் காட்டுவதோடு தலைசிறந்த போதகராகவும் விளக்குகிறார். இயேசுவின் சமவெளிப் பொழிவு (6:20-49) அவரது சீடர்களின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுகிறது. இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்யும்போது, தம்மைப் பின்செல்ல விரும்பும் சீடர் எவ்வாறு வாழவேண்டும் என்பது குறித்து வழங்குகின்ற விரிவான போதனைகள் (9:51-19:44) கிறித்தவ வாழ்க்கைக்கும் அறநெறிக்கும் இன்றியமையாத கூறுகளை விளக்கிச் சொல்கின்றன.

கடவுளின் ஆட்சியில் மனித மதிப்பீடுகள் தலைகீழாகப் புரட்டிவிடப்படும் என்ற கருத்து லூக்கா நற்செய்தியில் அழுத்தம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, எலிசபெத்தை சந்தித்த போது மரியா உரைத்த பாடலைக் கூறலாம் (1:46-55). அதில், மரியா இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுகிறார். அதேசமயம் கடவுள் வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் (1:52) என மரியா போற்றுகின்றார். அதுபோலவே, சமவெளிப் பொழிவில் ஐயோ! உங்களுக்குக் கேடு! என்று வரும் பகுதியில் (6:20-26) மனித மதிப்பீடுகள் புரட்டிப்போடப்படுவதைக் காண்கின்றோம்.

இறுதியாக, பிரியாவிடை உரையில் இயேசு உண்மையான தலைமை எதில் அடங்கியிருக்கிறது எனக் காண்பிக்கிறார். உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும் (காண் 22:24-27) என்று இயேசு வழங்கும் போதனை வெறும் சொல்லளவில் அல்ல, நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன் (22:27) என இயேசுவே உலகத்தோர்க்கு முன் உதாரணம் தந்துள்ளார்.

லூக்கா நற்செய்தியில் எருசலேம் உலக மீட்பின் திட்டத்திற்கு மையமாகத் திகழ்கிறது. இந்நூல் எருசலேமில் தொடங்கி எருசலேமில் முடிகிறது. இழந்துபோனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்தார் என்னும் கருத்து முதன்மைச் செய்தியாக விளங்குகிறது (லூக் 19:10). இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாவிகள், பெண்கள், ஏழைகள், சமாரியர் ஆகியோருக்கு இந்நூலில் சிறப்பிடம் வழங்கப்படுகிறது.

தூய ஆவியின் செயல்பாடு, இயேசுவின் இரக்கம், திருப்பணி, மனம் மாற்றம், பாவமன்னிப்பு, இவற்றால் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவை வலியுறுத்தப் பெறுகின்றன.

மேலும், லூக்கா நற்செய்தியில் இறைவேண்டல், சான்றுபகருதல், பொறுப்புடன் செல்வத்தைப் பயன்படுத்தல், அமைதி பெறுதல், சிலுவை சுமத்தல் ஆகியன இயேசுவைப் பின்செல்லும் சீடர்களின் சிறப்புத் தகுதிகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

லூக்கா நற்செய்தியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

லூக்கா நற்செய்தியின் உட்பிரிவுகள்

[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. அர்ப்பணம் 1:1-4 102
2. குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் 1:5 - 2:52 102 - 107
3. திருப்பணிக்குத் தயார் செய்தல் 3:1 - 4:13 107 - 110
4. கலிலேயப் பணி 4:14 - 9:50 110 - 126
5. எருசலேம் நோக்கிப் பயணம் 9:51 - 19:27 126 - 147
6. எருசலேம் பணி 19:28 - 21:38 147 - 153
7. இயேசு துன்புற்று இறந்து உயிர்த்தெழுதலும் விண்ணேற்றமடைதலும் 22:1 - 24:53 153 - 162

ஆதாரங்கள்

[தொகு]
  1. லூக்கா
  2. 2.0 2.1 ஒத்தமை நற்செய்திகள்
  3. சீடரின் பண்புகள்

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூக்கா_நற்செய்தி&oldid=2433073" இலிருந்து மீள்விக்கப்பட்டது