அந்தியோக்கியா
அந்தியோக்கியா (Antioch) என்னும் பழங்கால நகர் இன்றைய துருக்கி நாட்டின் தென் கிழக்குப் பகுதியில், சிரியாவின் வடகிழக்கு எல்லையிலிருந்து 12 மைல் தொலையில் அமைந்த நகரம் ஆகும்[1]. இந்நகருக்கு மேற்குப்பக்கத்தில் ஒரோண்டெஸ் (Orontes) என்னும் பேராறு ஓடுவதால் அதற்கு "ஒரோண்டெஸ் கரையில் அமைந்த அந்தியோக்கியா" (Antioch on the Orontes) என்னும் பெயரும் உண்டு.
பிற மொழிகளில் இந்நகரத்தின் பெயர்: கிரேக்கம்: Ἀντιόχεια ἡ ἐπὶ Δάφνῃ, Ἀντιόχεια ἡ ἐπὶ Ὀρόντου அல்லது Ἀντιόχεια ἡ Μεγάλη; இலத்தீன்: Antiochia ad Orontem; அரபி: انطاکیه (Antakya).
பழைய நகரான அந்தியோக்கியா புது நகரான "அந்தாக்கியா" (Antakya) அருகே இன்றைய துருக்கி நாட்டில் அமைந்துள்ளது.
அந்தியோக்கியா உருவான வரலாறு
[தொகு]கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகா அலெக்சாண்டரின் தளபதிகளுள் ஒருவராகிய முதலாம் செலூக்கஸ் நிக்கட்டோர் என்பவர் அந்தியோக்கியாவை நிறுவினார். இந்நகரம் மிகுந்த வளர்ச்சியடைந்து, மேற்கு ஆசியாவில் அலெக்சாந்திரியா நகரையே விஞ்சும் அளவுக்கு விரிவுற்றது. இந்நகரத்தில்தான் கிறித்தவ சமயம் முதலில் யூதர் நடுவிலும் பின்னர் யூதரல்லாத பிற இனத்தவரிடையேயும் கி.பி. முதல் நூற்றாண்டில் முனைப்பாகப் பரவத்தொடங்கியது.
அந்தியோக்கியா பண்டைய சிரிய நாட்டை ஒருங்கிணைத்த நான்கு பெருநகர்களுள் ஒன்றாகும் (பிற நகர்கள்: செலூக்கியா, அப்பமேயா, இலவோதிக்கேயா). அந்நகர மக்கள் "அந்தியோக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். அதன் உச்ச வளர்ச்சியின்போது அங்கே ஐந்து இலட்சம் மக்கள் வாழ்ந்தார்களாம். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டதாலும், மம்லுக் இராணுவம் 1268இல் பேரளவிலான மக்களைக் கொன்றுகுவித்ததாலும் அந்தியோக்கியா நடுக்காலத்தில் சீரழியத் தொடங்கியது. மங்கோலியர் படையெடுப்பால் வர்த்தக வழிகள் அந்தியோக்கியாவின் ஊடே செல்ல தடை எழுந்ததும் இதற்கு ஒரு காரணமாகும்.
உரோமை ஆட்சியின் கீழ் அந்தியோக்கியா
[தொகு]கி.மு. 83இல் அந்தியோக்கியா அர்மீனிய ஆட்சியின் கீழ் வந்தது. ஆனால், கி.மு. 65இல் அந்தியோக்கிய மக்கள் உரோமையரை அணுகினர். உரோமை ஆட்சியின் போது அந்தியோக்கியா "சுதந்திர நகர்" என்னும் நிலையில் தொடர்ந்தது. உரோமைப் பேரரசர்கள் அந்தியோக்கியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை எகிப்திய அலெக்சாந்திரியாவை விடவும் மேலாக வளர்த்தெடுத்தனர். ஜூலியஸ் சீசர் கி.மு. 47இல் அந்தியோக்கியாவுக்குச் சென்று அது தொடர்ந்து "சுதந்திர நகர்" என்னும் நிலையில் நீடிக்கும் என்று உறுதியளித்தார். சில்ப்பியுஸ் குன்றத்தில் ஜூப்பிட்டர் கடவுளுக்கு மாபெரும் கோவில் கட்டப்பட்டது. உரோமைப் பாணியில் அமைந்த பொதுவெளி (forum) உருவாக்கப்பட்டது. திபேரியுஸ் மன்னரின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூண்கள் வரிசை அமைந்த வழி சில்ப்பியுஸ் குன்றத்துக்கு இட்டுச்சென்றது. அக்ரிப்பா, திரயான், அந்தோனியுஸ் பீயுஸ், ஹேட்ரியன் போன்ற உரோமை மன்னர்கள் அந்தியோக்கியாவை அழகுபடுத்தியதோடு அங்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கட்டடங்களையும் உருவாக்கினர். அந்தியோக்கியாவில் கோம்மொதுஸ் மன்னன் ஒலிம்பிக் விளையாட்டுகள் நிகழ்த்தினார். கி.பி. 256இல் பாரசீகப் படைகள் அந்தியோக்கியாவைத் தாக்கி மக்கள் பலரைக் கொன்றன.
கிறித்தவ வரலாற்றில் அந்தியோக்கியா
[தொகு]கிறித்தவ சமயம் யூத நாட்டுக்கு வெளியே பரவத் தொடங்கிய காலத்தில் அந்தியோக்கியா மைய இடமாக அமைந்தது. அந்நகரில் யூத மக்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்கியிருந்த "கெரட்டேயோன்" (Kerateion) என்னும் பகுதி நகரின் தெற்குப்பகுதியில் இருந்தது. யூத மக்களிடையே கிறித்தவ சமயத்தைப் பரப்பும் வண்ணம் பல மறைபரப்பாளர் சென்றனர். இயேசுவின் சீடரான புனித பேதுரு அங்கு போதித்தார். அதன் அடிப்படையில் இன்று அந்தியோக்கிய முதுவர் சபை தனக்கு முதன்மையிடம் உண்டு என்னும் கோரிக்கையை எழுப்புகிறது.
அந்தியோக்கியாவில் கிறித்தவ சமயத்தைப் பரப்பிய இரு பெரும் மறைபரப்பாளர்கள் பர்னபா, பவுல் (பிறப்பு: கி.பி. சுமார் 5; இறப்பு: கி.பி. சுமார் 67) ஆவர். பவுல் இந்நகரத்தில் கி.பி. 47இலிருந்து 55 வரை மறைபரப்பினார்[2]. இந்த மறைபரப்பாளர் கிறித்தவத்தை போதித்தபோது மக்கள் கூடி வந்து நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்திய குகைப் பகுதி இன்றும் உள்ளது.
இவ்வாறு அந்தியோக்கியா கிறித்தவத்தின் தொடக்க காலத்தில் முதன்மை வாய்ந்த இடமாக மாறிற்று. கிறித்தவத்தின் பிற மூன்று நகர மையங்கள் இவை: எருசலேம், அலெக்சாந்திரியா, உரோமை.
புதிய ஏற்பாட்டில் உள்ள திருத்தூதர் பணிகள் என்னும் நூல் அந்தியோக்கியாவில் கிறித்தவம் பரவியதை விவரிக்கிறது[3]. அந்தியோக்கியா பற்றிய 16 குறிப்புகள் அந்நூலில் உள்ளன (காண்க: 6:5; 11:19,20,22,26,27; 13:1,13; 14:19,21,26; 15:22,23,30,35; 18:12). மேலும் கலாத்தியர் திருமுகத்திலும் 2 திமொத்தேயு திருமுகத்திலும் அந்தியோக்கியா பற்றிய குறிப்புகள் உண்டு.
சிறப்பாக, அந்தியோக்கியாவில்தான் முதன்முறையாக, இயேசுவைப் பின்பற்றிய மக்கள் "கிறித்தவர்கள்" என்னும் பெயரால் அழைக்கப்படத் தொடங்கினர். அது பற்றிய குறிப்பு இதோ:
“ | பர்னபா சவுலைத் தேடி தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந் திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள் (திருத்தூதர் பணிகள் 11:25-26). | ” |
கி.பி. 2ஆம் நூற்றாண்டளவில் அந்தியோக்கியாவில் நிலவிய கிறித்தவ சமூகம் மிகவும் வளர்ச்சியடைந்து அமைப்புப் பெற்ற குழுவாக விளங்கியது. கி.பி. சுமார் 35இலிருந்து 108 வரை வாழ்ந்த புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் (Ignatius of Antioch) கி.பி. 69இலிருந்தே அந்நகரின் ஆயராகச் சிறப்பாகப் பணியாற்றினார். அவர் கிறித்தவ சமயக் கொள்கைகளை விளக்குகின்ற பல நூல்களை ஆக்கினார்[4].
கி.பி. 4ஆம் நூற்றாண்டளவில் அந்தியோக்கிய திருச்சபை உரோமை மற்றும் அலெக்சாந்திரியா ஆகிய நகர்களில் அமைந்த சபைகளைப் போல முதன்மை வாய்ந்ததாக விளங்கியது. அங்கு கலையழகு வாய்ந்த கிறித்தவப் பெருங்கோவில் ஒன்று கி.பி. 327-341இல் கட்டப்பட்டது. உரோமைப் பேரரசர் காண்ஸ்டண்டைன் தொடங்கிய கோவில் கட்டடத்தை அவர்தம் மகன் காண்ஸ்தான்சியஸ் நிறைவுசெய்தார். அப்பெருங்கோவிலுக்குக் குவிமாடம் இருந்தது; கற்பதிகை முறையில் உருவாக்கிய பல கலைப்படைப்புகளும் அக்கோவிலில் இருந்தன.
கான்ஸ்டாண்டிநோப்புள் நகரம் வளர்ந்து, எருசலேம் முது ஆயர் மையமாக மாறியபோது அந்தியோக்கியாவின் முதன்மை மங்கலாயிற்று. மேலும் கிறித்தவத்துக்குப் புறம்பான கொள்கைகள் அந்தியோக்கிய சபையில் நுழைந்ததும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. ஆயினும் கி.பி. 4-5 நூற்றாண்டுகளில் அந்தியோக்கியா கிறித்தவ விவிலிய ஆய்வுக்குப் பெரும் உந்துதல் அளித்தது.
உரோமைப் பேரரசன் ஜூலியன் கி.பி. 362இல் அந்தியோக்கியாவுக்கு வருகை தந்த சமயத்தில் ஒரு புலம்பல் விழா நடந்துகொண்டிருந்தது. அதை ஜூலியன் விரும்பவில்லை. அதுபோலவே கிறித்தவர்களும் ஜுலியன் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டதாக உணர்ந்தார்கள். யூதர்களின் சமயச் சடங்குகள் மற்றும் புராதன சமயத்தின் சடங்குகள் ஆகியவற்றை ஆதரித்த ஜூலியன் அந்தியோக்கியாவில் இருந்த கிறித்தவப் பெருங்கோவிலை மூடியது கிறித்தவர் நடுவே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இது தவிர, ஜூலியனின் இராணுவத்தினர் புராதன சமயத்தைச் சார்ந்த கோவிலில் பலிகொடுக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்டு, மதுவருந்தி நகரத் தெருக்களில் தொந்தரவு கொடுத்தனர்; அதே நேரத்தில் நகர மக்கள் பசியால் வாடினர். எனவே மக்கள் ஜூலியனை வெறுத்தனர். அவரது தாடி பற்றிக் கேலிச் சித்திரங்களும் வெளியாயின.
526இல் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தின்போது அந்தியோக்கியாவும் அதன் துறைமுக நகரான செலூக்கியாவும் பெரும் அழிவைச் சந்தித்தன. முதலாம் ஜஸ்டீனியன் மன்னன் அந்தியோக்கியாவுக்குக் "கடவுளின் நகர்" என்று பொருள்படும் "தியோப்பொலிஸ்" (Theopolis) என்னும் பெயரைக் கொடுத்தார். அவர் காலத்தில் பல கட்டடங்கள் சீரமைக்கப்பட்டன. கி.பி. 531இலிருந்து 579 வரை ஆட்சிசெய்த முதலாம் கொஸ்ரோ (Khosrau I) அந்தியோக்கியாவைத் தாக்கியதோடு அங்கு வாழ்ந்த சுமார் 3 இலட்சம் மக்களைக் கொன்றார். அந்தியோக்கியாவின் புகழும் மங்கத் தொடங்கியது.
அந்தியோக்கியாவில் கிறித்தவ இறையியல் வளர்ச்சி
[தொகு]கிறித்தவ இறையிலுக்கு அந்தியோக்கியா அளித்த பங்கு சிறப்பானது. விவிலியத்தை வாசித்து விளக்குவதற்கு அந்தியோக்கிய அறிஞர்கள் "சொல் பொருள் விளக்கம்" (literal interpretation) என்னும் முறையைக் கடைப்பிடித்தனர். அதே சமயம் அலெக்சாந்திரிய அறிஞர்கள் "உருவக விளக்கம்" (allegorical interpretation) என்னும் முறையைக் கையாண்டனர். அந்தியோக்கிய இறையியலாருள் தர்சு நகர் தியொதோர் (இறப்பு: கி.மி. சுமார் 390) என்பவரும் மொப்சுவேத்சிய தியொதோர் (கி.பி. சுமார் 350-428)என்பவரும் குறிப்பிடத்தக்கோர் ஆவர். அந்தியோக்கியாவில் புனித சீமோன் என்பவருக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. அவர் தவ வாழ்க்கை மேற்கொண்டார்; அந்தியோக்கியாவிலிருந்து 60 கி.மீ. தொலையில் ஒரு தூண் உச்சியில் 40 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து தவம் செய்தார். அவரது இறப்புக்குப் பின் அவர்தம் உடல் அந்தியோக்கியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, பேரரசர் லியோ ஏற்பாடு செய்த ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
அரபு ஆட்சிக் காலத்தில் அந்தியோக்கியா
[தொகு]கி.பி. 637இல் அந்தியோக்கியாவின் அருகே நிகழ்ந்த இருப்புப் பாலச் சண்டையில் (Battle of Iron Bridge) ராசிதீன் கலீபாக்கள் அந்தியோக்கியாவைக் கைப்பற்றினார்கள். அப்போது பிசான்சியப் பேரரசை ஹெராக்லியஸ் என்பவர் ஆண்டுவந்தார். அந்தியோக்கியா அரபியில் "அந்தாக்கிய்யா" (أنطاكيّة (Antākiyyah) என்று பெயர்மாற்றம் பெற்றது. அந்நகரம் சுமார் 350 ஆண்டுகளாக ஓயாது போர்நிகழும் தளமாக மாறியதால் சீரழியத் தொடங்கியது. துருக்கியர் அந்தியோக்கியாவை 1084இல் கைப்பற்றினார்கள்.
சிலுவைப் போர்க் காலத்தில் அந்தியோக்கியா
[தொகு]1098இல் சிலுவைப் போர் வீரர்கள் அந்தியோக்கியாவை முற்றிகையிட்டுக் கைப்பற்றினார்கள். 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் படையெடுத்ததால் அந்தியோக்கியாவின் வணிக முக்கியத்துவம் குறைந்தது. 1268இல் எகிப்திய மல்முக் சுல்தான் பைபார்ஸ் என்பவர் அந்தியோக்கியாவை முற்றுகையிட்டார். அந்நகரைக் கைப்பற்றி அங்கிருந்த கிறித்தவர்களைக் கொன்றார். நகரின் காப்புச் சுவர்களையும் தகர்த்தெறிந்தார். கிறித்தவ மரபுவழிச் சபை, ஜாக்கபைட் சபை ஆகியவற்றின் தலைமையிடம் அந்தியோக்கியாவிலிருந்து தமஸ்கு நகருக்கு மாற்றப்பட்டன. 1335இல் அந்தியோக்கியாவில் இன்னும் கணிசமான மக்கள் வாழ்ந்துவந்தனர். ஆனால் 1432இல் மக்கள்வாழ் வீடுகள் சுமார் 300 மட்டுமே எஞ்சின. அவையும் பெரும்பாலும் துருக்கியர் வீடுகளாக இருந்தன.
அகழாய்வுக் கண்டுபிடிப்புகள்
[தொகு]பண்டைக்கால உரோமையர் அந்தியோக்கியாவை எழில் மிகுந்த நகரமாகக் கட்டியெழுப்பியிருந்தார்கள். அவர்கள் எழுப்பிய கட்டடங்களுள் மிகச் சிலவே அழிபாடுகளுடன் எஞ்சியுள்ளன. நகரத்தைக் காப்பதற்காக எழுப்பப்பட்ட மதில்சுவர் எஞ்சியது. நகருக்குக் குடிநீர் கொண்டுசெல்ல அமைக்கப்பட்ட நீர்வழிகளும் (aqueducts) இன்று காணப்படுகின்றன. புனித பேதுரு கோவில் நீடித்துள்ளது. பழங்காலக் கிறித்தவர்கள் நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்துவதற்காகக் கூடிய குகைப்பகுதியில் இக்கோவில் எழுந்ததால் புனித பேதுரு குகைக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய உரோமை நகரான அந்தியோக்கியா பெருமளவும் ஒரோண்டெஸ் பேராற்றுப் படுகையின் கீழ் புதைந்து கிடக்கிறது; சில பகுதிகள் புதிய குடியேற்றங்கள் எழுவதன் காரணமாக அழிக்கப்பட்டுள்ளன.
1932-1939 ஆண்டுகளில் லூவர் காட்சியகம், பால்ட்டிமோர் கலைக் காட்சியகம், வூஸ்ட்டர் கலைக் காட்சியகம், ப்ரின்ஸ்டன் பல்கலைக் கழகம், ஃபாக் கலைக் காட்சியகம் போன்ற நிறுவனங்கள் கூட்டாக இணைந்து அகழ்வாய்வுகள் நிகழ்த்தின. காண்ஸ்டண்டைன் கட்டிய எண்கோண வடிவப் பெருங்கோவில், அரச அரண்மனை போன்ற இடங்கள் அகழ்வாய்வில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனாலும், பிற பொருள்கள் கிடைத்தன. அவற்றுள் கீழ்வருவன முக்கியமானவை: அந்தியோக்கியா, டாஃப்னீ, செலூக்கியா ஆகிய பண்டைய நகரங்களில் இருந்த விடுமுறை வீடுகளையும் பொதுக் குளிப்பகங்களையும் அணிசெய்த அழகிய கற்பதிகை ஓவியங்கள் (mosaics) கிடைத்துள்ளன. அந்தியோக்கியாவின் காவல் தெய்வமாகக் கருதப்பட்ட "டைக்கீ" (Tyche) என்னும் பெண் தெய்வத்தின் சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டன. அழகிய "டைக்கீ" சிலையொன்று வத்திக்கான் நகரக் கலையகத்தில் காக்கப்பட்டு வருகிறது. அச்சிலையின் வலது கையில் கோதுமைக் கதிர் உள்ளது; தலையில் நகரக் காப்புச் சுவர்கள் பதியப்பெற்ற மகுடம் விளங்குகிறது; சிலையின் காலடியில் ஒரோண்டஸ் பேராறு நீச்சலடிக்கின்ற ஓர் இளைஞன் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தியோக்கு நகரம் உருவான காலத்தில் அது எப்போதும் நற்பேறு பெற்றுச் செழிப்போடு விளங்க வேண்டும் என்பதற்காக ஓர் இளம் கன்னிப்பெண் பலியாக்கப்பட்டார் என்றும் அதன் அடையாளமே "டைக்கீ" தெய்வச் சிலை என்றும் சில அறிஞர் கருதுகின்றனர்.