சிலுவைப் போர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதலாவது சிலுவைப் போரின்போது இடம்பெற்ற அண்டியோக் முற்றுகை. மத்தியகாலச் சிற்றோவியம் ஒன்றிலிருந்து.

சிலுவைப் போர்கள் (ஆங்கிலம்:Crusades;) என்பது சமயம் சார்ந்த, நடுக் காலத்தின் மையப்பகுதியிலிருந்து அதன் முடிவுவரை கத்தோலிக்க ஐரோப்பா முஸ்லிம்கள், அஞ்ஞானிகள், திரிபுக் கொள்கையாளர்கள் மற்றும் திருச்சபையின் முழு உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக நடத்திய பல தொடர்ச்சியான போர்களைக் குறிக்கும். இப்போர்கள் மைய கிழக்கு (Near East) நாடுகள், வடக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஐரோப்பா ஆகிய இடங்களில் நடந்தன. இவை தொடக்கத்தில் இசுலாமியர்களால் கிறித்தவர்களிடமிருந்து கைபற்றப்பட்ட எருசலேமையும், அதில் உள்ள திருநாட்டையும், அங்கிருந்த திருத்தளங்களையும் மீட்கும் நோக்கோடு நடைபெற்றாலும், இவை தவிர வேறு பல சமய, பொருளாதார, அரசியல் நோக்கங்களுக்காகவும் நடந்தது.

கிறித்துவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்குப் புனித இடமான பாலஸ்தீனத்தின் மீதான உரிமைப்போராட்டம் காரணமாக கி.பி1096 லிருந்து கி.பி1249 வரை நடைபெற்ற பலபோர்கள் சிலுவைப் போர்கள் என்று வழங்கப்படுகின்றன.[1]

இப்போர்களுக்குச் சென்ற கிறித்துவர்கள் சிவப்புத் துணியினால் ஆன சிலுவை அடையாளங்களை அணிந்திருந்தனர்.[1] இப்போர்களின் சின்னமாக கிறித்தவ சிலுவை இருந்ததால், இவை சிலுவைப் போர்கள் என அழைக்கப்படுகின்றன. திருத்தந்தை இரண்டாம் அர்பனின் அறிவிப்பால் எருசலேமையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மீட்க ஐரோப்பியர்களால் 200 ஆண்டுகாலம் நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த சிலுவைப்போர்கள், 1095இல் தான் துவங்கின என்றாலும், இதற்கு முன் பல ஆண்டுகளாக ஐரோப்பிய எல்லைகள் குறித்து நடந்த சிக்கல்களே இதன் மூலகாரணமாகப் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக அரேபிய-பைசாண்டிய போர்கள், பைசாண்டிய-செல்யூக் போர்கள் மற்றும் பைசாந்தியப் பேரரசு அனத்தோலியாவை இசுலாமிய செல்யூக் துருக்கியருடன் 1071இல் நடந்த போரில் இழந்ததும் பெரும் காரணிகளாக பார்க்கப்படுகின்றது. பைசாந்தியப் பேரரசர் முதலாம் அலெக்ஸோசின் வேண்டுகோளுக்கினங்கி திருத்தந்தை இரண்டாம் அர்பன் இப்போர்களை துவக்கி பைசாந்திய பேரரசுக்கு உதவ, ஐரோப்பிய அரசுகளுக்கு அறிவுறித்தினார். பெரும் சமயப்பிளவால் பிரிந்த கிறித்தவத்தை ஒன்றிணைக்க இரண்டாம் அர்பன் செய்த முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.[2] இப்போரில் ஈடுபடுபவர்களுக்கு நிறைவுப்பலகளை அளிப்பதாக திருத்தந்தை கட்டளையிட்டார். மேற்கு ஐரோப்பா முழுவதிலிருந்தும் பல கிறித்தவர்கள் இப்போர்களில் பங்கு கொண்டனர்.[3] நில மானிய முறைமையின் அடிப்படையில் இப்போர்களின் படைகள் பிரிந்திருந்ததால், இவை ஒரே கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது இப்போரின் தோல்விக்கு காரணியாகும்.

வெற்றி பெற்ற சலாதீனை வர்ணிக்கும் 20ம் நூற்றாண்டு காலச் சித்திரம்
1396இல் நிக்கோபோலில் நடந்த போரில் தோற்ற கிறித்தவர்கள் கொல்லப்படல்

சிலுவைப் போர்கள் நீண்டகால அரசியல், பொருளியல், சமூகத் தாக்கங்களைக் கொண்டிருந்தன. இவற்றுட் சில அண்மைக்காலம் வரை நீடித்தன. கிறிஸ்தவ அரசுகள், அரசியல் சக்திகள் மத்தியில் இருந்த உள் முரண்பாடுகளினால், சில சிலுவைப் போர்களின் தொடக்க இலக்குத் மாறியது. நான்காவது சிலுவைப் போர் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். இது, கிறிஸ்தவ கொன்ஸ்டண்டினோப்பிள் அழிவதற்கும், பைசண்டியப் பேரரசின் வீழ்சிக்கும் காரணமாகியது. ஆறாம் சிலுவைப் போர் முதல் எல்லா சிலுவைப் போர்களும் திருத்தந்தையின் அதிகாரபூர்வ அனுமதி இல்லாமல் நடைபெற்றது. ஏழாம், எட்டாம், ஒன்பதாம் சிலுவைப் போர்களில், மாம்லுக், ஹாப்சிட் வெற்றிகள் கிடைத்தன. ஒன்பதாம் சிலுவைப் போரே இறுதிச் சிலுவைப்போர் ஆகும். இது மையக்கிழக்கில் முடிவடைந்தது.

போர்களின் சூழல்[தொகு]

பைசாந்திய பேரரசும், உரூமி சுல்தானியமும் முதல் சிலுவைப் போருக்கு முன்பு

கி.பி 636 முதலே இசுலாமிய படைகள் யார்முக் போரின் மூலம் கிழக்கு பைசாந்தியத்தையும், உமையா கலீபகம்[4], அப்பாசியக் கலீபகம்[5] மற்றும் பாத்திம கலீபகம்.[6] மூலம் பாலசுதீனத்தையும்[4] கைப்பற்றின. உறவும் கிறித்தவ அரசுகள் அரேபிய அரசோடும் வர்த்தகமும் அரசியல் உறவும் 1072இல் பாலஸ்தீனம் செல்யூக் பேரரசால் கைப்பற்றப்படும் வரை சுமூகமாகவே இருந்தது.[7] எடுத்துக்காட்டாக பாத்திம கலீபா அல்-அகிம் பி-அமர் அல்லா திருக்கல்லறைத் தேவாலயத்தினை இடித்தாலும், அவருக்கு அடுத்து ஆட்சி செய்தவர், அதனை மீண்டும் கட்ட அனுமதியளித்தார்.[8]

இசுலாமிய ஆட்சியாளர்கள் கிறித்தவர்கள் புனித நாட்டுக்கு திருப்பயணம் மேற்கொல்வதை தடை செய்யவில்லை. இசுலாமிய கோட்பாட்டின் படி புத்தகத்தின் மக்களை சகித்துக்கொள்ள அவர்கள் விரும்பினர்.[9] ஆனாலும் செல்யூக் பேரரசால் புனித நாட்டு திருப்பயண பாதை தடைசெய்யப்பட்டதால் கிறித்தவர்களிடையே முதன் முதலில் மனக்கசப்பு எழுந்தது.[10] பைசாந்தியப்பேரரசு உள்நாட்டுப்போர்களால் சிக்கியிருந்தபோது 1071இல் செல்யூக் துரிக்கியர்களால் அனத்தோலியா கைப்பற்றப்பட்டது.[11]

செல்யூக் பேரரசு அதன் உச்சத்தில், கி.பி 1092.

மேற்கில் ஆயர்களை நியமிப்பதில் திருத்தந்தைக்கும் அரசர்களுக்கும் ஏற்ப்பட்ட சிக்கலும், 1054இல் நடந்த பெரும் சமயப்பிளவும் ஒற்றுமையின்மைக்கு வழிகோலியது.[12] இச்சிக்கல்கள் முதலாம் சிலுவைப்போர்கள் நடந்த போது மின்னனியில் நிகழ்ந்துகொண்டே இருந்தன.

1074இல் பேரரசர் ஏழாம் மிக்கேல் திருத்தந்தை ஏழாம் கிரகோரியிடம் தனக்கு போரில் உதவ வேண்டினார். கிரகோரி இக்கோரிக்கையினை பரிசோதித்தாலும், இது திட்டமிடுதலிலேயே நின்றுவிட்டது.[13] 1091இல் மீண்டும் பேரரசர் முதலாம் அசெக்சியொஸ் அப்போதைய திருத்தந்தை இரண்டாம் அர்பனிடம் துருக்கியர்களுக்கு எதிரான போரில் உதவி வேண்டினார்.[14] இவ்வேண்டுகோளுக்கினங்கி திருத்தந்தை இரண்டாம் அர்பன் இப்போர்களை துவக்க கிறித்தவ அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பெயரும் பயன்பாடும்[தொகு]

சிலுவைப் போர்களின் பங்கேற்ற எவரும் அதனை அப்பெயரில் அழைக்கவில்லை. தங்களை புனித பேதுருவின் ஊழியர்கள் (fideles Sancti Petri) அல்லது கிறிஸ்துவின் போர் வீரர்கள் (milites Christi) என்றே அழைத்தனர். திருப்பயணிகளாகவே இவர்கள் தங்களை தாங்களே கருதினர். 1638இல் வெளியான L'Histoire des Croisades என்னும் புத்தகத்திலேயே முதன்முதலில் சிலுவைப் போர்கள் என்னும் பதம் பயன்படுத்தப்பட்டது.[15] 1750க்குள் இப்பதம் பல வகைகளில் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் செருமாணியம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றது. 1757இல் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இப்பதம் இருந்ததாக வில்லியம் சென்சுடோன் குறிக்கின்றார்.[16] மற்ற திருப்பயணிகள் போலவே சிலுவைப் போர் வீரர்களும் புனித திருநாட்டை அடைந்ததும் செய்வதற்காக வேண்டுதல்களை பயணத்துக்கு முன் உறுதிமொழி எடுத்தனர். இத்தகையோர் தங்களின் மேலாடையில் சிலுவையினை சேர்க்க அனுமதிக்கப்பட்டனர். இச்சிலுவையினாலேயே இப்போர் சிலுவைப் போர்கள் என வழங்கலாயிற்று.[17]

நான்காவது சிலுவைப் போருக்குப்பின்னர், முறைப்படி அங்கீகரிக்கவும் எதிர்க்கவும் படாத சிறுவர்கள் படையும் இப்போரில் ஈடுபட்டது.[18] கிளேர்மான்ட் திருச்சபை மாநாட்டின் நிறைவிற்குப் பின் கிறித்தவர்கள் அனைவரும் தங்களின் ஆடையில் சிலுவையை அடையாளமாக அணியத் தொடங்கினர். இசுலாமியர் இதற்குப் பதிலாக, தங்களின் கொடிகளில் பிறையை வரைந்துவைத்துக் கொண்டனர். பிரிக்கும் சிலுவைக்கும் இடையே நடைப்பெற்ற எட்டு சிலுவைப் போர்களில் நான்கு போர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆதலால், இந்த போர்கள், சிலுவைக்கும் பிறைக்கும் நடந்த போர் என்று அழைக்கப்படுகிறது.[19][நம்பகமற்றது ]

முதல் சிலுவைப் போர்[தொகு]

முதல் சிலுவைப் போருக்குப் பலர் தலைமை தாங்கி நடத்தியுள்ளனர். இவர்களில் முதன்மையானவர் பீட்டர் (Peter the Hermit) என்கிற பாதிரியார் ஆவார். இவர் தலைமையில் முதல் சிலுவைப் போர் நடைபெற்றது. கி.பி. 1096 இல் மத்திய ஐரோப்பாவிலிருந்து பல பிரிவுகளை கொண்ட படைகளாகப் புறப்பட்டு எருசலேமை நோக்கி முன்னேறத் திரண்ட சிலுவைப் படையினருக்கு, இவர் பெரும் உந்து சக்தியாக இருந்தார். இவரது தலைமையிலான சிலுவைப் படைகள், ஐரோப்பாவிலிருந்து 3000 மைல்களுக்கு அப்பால் உள்ள கிருத்துவர்களின் புனித பூமியான எருசலத்தை நோக்கி திரண்டு குவிந்திருந்தன. அன்றைய கலீபாவாக இருந்து ஆட்சிசெய்த அல் முஸ்தசிர் பிலாஹ் என்பவர், பாலஸ்தீனத்தை நோக்கிச் செல்லும் எல்லாவித பாதைகளையும் தனது படைகளைக் கொண்டு தடுத்தார். இச்சூழ்நிலையில், பீட்டர் தலைமையிலான சிலுவைப் படைகள், எந்த இடத்தை நோக்கி வந்தாலும் எருசலேமை நெருங்க விடாதவாறு அவர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆட்பட்டனர்.

குழந்தைகளின் சிலுவைப் போர்கள்[தொகு]

கி. பி. 1212 இல் நிக்கோலஸ் (ஜெர்மனி), ஸ்டீபன் (பிரான்ஸ்) ஆகியோர் தலைமையில் சிறுவர்களின் சிலுவைப் போர் நடைபெற்றது. இச்சிலுவைப் போரின்போது, அச்சிறுவர்களைக் கடவுள் பாதுகாத்து வழி நடத்துவார் என்றும் அவர்களின் வீரதீரச் செயல்களை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பார் என்றும் உளப்பூர்வமாக நம்பினர். போதுமான ஆயுதங்கள் இல்லாமல் சிறுவர்களே இப்போரை முன்னின்று நிகழ்த்தியதன் விளைவாக, இத்தாலியை விட்டு யாரும் முன்செல்ல இயலாமல் போனது.[20]

சிலுவைப்போர் தோல்விக்கான காரணங்கள்[தொகு]

பெரும்பாலும் வெகு தொலைவில், தனிமையான, மருத்துவ வசதிகளற்ற பகுதிகளில் போர்கள் நிகழ்ந்து வந்தன. இதன் காரணமாக, மக்கள் போதிய ஆர்வத்தையும் போர்புரிவதற்கான திறனையும் இழந்தவர்களாகக் காணப்பட்டனர். இவர்களின் தலையாயக் குறிக்கோளாக விளங்கும் எருசலேமை மீட்கும் முயற்சிகள் அனைத்தும் எதிரிப் படையினரால் முறியடிக்கப்பட்டன. இவர்களது திட்டமிடலில் குறைபாடுகள் மிகுந்திருந்தன. போரை வழிநடத்தும் தலைவர்களிடையே ஒற்றுமையின்மையும் ஒழுக்கமின்மையும் நிலவிவந்தன. போப்பாண்டவர், பேரரசின் ஆட்சியாளர் ஆகியோருக்கிடையே இருந்துவந்த தீராத மோதல்கள் முக்கியக் காரணங்களாக அமைந்தன. மேலும், பைசாண்டியரின் திறமைக் குன்றிய அரசும் இப்போர் தோல்வியடைய காரணமாகும்.

சிலுவைப் போரின் விளைவுகள்[தொகு]

எருசலேமை மீட்பதில் போர் வீரர்கள் தவறிவிட்டனர். எனினும், சிலுவைப் போர்களினால் ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் கிருத்துவ அரசாங்கம் உருவானது. பைசாண்டியரின் பெருமைகள் மற்றும் அதிகாரங்கள் குறையத் தொடங்கின. இழந்துபோனவற்றைத் திரும்பப்பெற திறனற்றவர்களாக இவர்கள் விளங்கினர். பால்டிக் கடற்கரையினர் மற்றும் ஜெர்மானியர் ஆகியோரை, சிலுவைப் போர்கள் வெகுவாக ஈர்த்து, அவர்களைக் கிருத்துவ மதத்தை விரைந்து பின்பற்ற வைத்தது. நிலமானியத் திட்டம் வீழ்ச்சியடைவதற்கு சிலுவைப் போர்களே முக்கியக் காரணிகளாகும். இராணுவச் சட்டங்களையும் இப்போர்கள் வெகுவாகப் பாதிப்படையச் செய்தன. அதேவேளையில், போப்பாண்டவரின் பெருமையும், அதிகாரமும், செல்வாக்கும் வளர்ச்சியுற்றது. தொலைதூரப் பயணங்களைக் கடந்து சிலுவைப் போர்கள் நடைபெற்றதன் விளைவாக, நிலவழிக் கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகமாயின. இதன் காரணமாக, போர்ச்சுக்கல், ஸ்பெயின் முதலான நாடுகளுக்குப் புதிய வணிக வழித்தடங்கள் கண்டறியப்பட்டன. கடல் வழிகள் கண்டுபிடிப்பிற்கான திசைக் காட்டும் கருவிகளின் பயன்பாட்டால் கப்பல் கட்டும் தொழில் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக, சிலுவைப் போர்களின் பதினாறாம் நூற்றாண்டுக் காலக் கட்டத்தை மறுமலர்ச்சியின் தொடக்கக் காலமாகக் குறிப்பிடுகின்றனர்.[21]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 http://www.tamilvu.org/library/kulandaikal/lku04/html/lku04061.htm
 2. Nelson Byzantine Perspective of the First Crusade p. 40
 3. Asbridge Crusades p. 1
 4. 4.0 4.1 Wickham Inheritance of Rome p. 280
 5. Lock Routledge Companion p. 4
 6. Hindley Crusades p. 14
 7. Hindley Crusades p. 15
 8. Pringle "Architecture in Latin East" Oxford History of the Crusades p. 157
 9. Findley 2005, ப. 73
 10. Madden New Concise History of the Crusades p. 8
 11. Asbridge, First Crusade p. 97
 12. Mayer Crusades pp. 2–3
 13. Lock Routledge Companion pp. 306–308
 14. Mayer Crusades pp. 6–7
 15. Lock Routledge Companion p. 258
 16. Hindley Crusades pp. 2–3
 17. American Heritage Dictionary of the English Language, Fourth Edition, Houghton Mifflin Company, 2009
 18. http://www.historylearningsite.co.uk/childrens_crusade.htm
 19. சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு தொகுதி 1. பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை - 6.. 2017. பக். ப. 175. 
 20. சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு தொகுதி 1. பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை - 6.. 2017. பக். ப. 175. 
 21. சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு தொகுதி 1. பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை - 6.. 2017. பக். ப. 175. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலுவைப்_போர்கள்&oldid=2320495" இருந்து மீள்விக்கப்பட்டது