பெத்பகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்பகு ஊரில் உள்ள கத்தோலிக்க கோவில்

பெத்பகு (Bethphage [அரமேய மொழியில் בית פגי, = "அத்திக் காய் வீடு"]) என்பது இசுரயேல் நாட்டில் அமைந்துள்ள ஓர் ஊர். இது விவிலியத்தில் குறிப்பிடப்படுகின்ற கிறித்தவம் தொடர்பான ஊர்களுள் ஒன்று ஆகும்.

புதிய ஏற்பாட்டில் வரும் குறிப்புகள்[தொகு]

புதிய ஏற்பாட்டில் பெத்பகு ஊர் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த ஊர் வந்து சேர்ந்த வேளையில்தான் இயேசு தம் சீடர்களுள் இருவரை அழைத்து, தாம் எருசலேம் நகருக்குப் பவனியாகச் செல்ல, தம்மை ஏற்றிக் கொண்டுபோவதற்கென ஒரு கழுதையையும் அதன் குட்டியையும் அவிழ்த்துக் கொண்டுவரும்படி சொல்லி அனுப்பினார்.[1][2]

இது பற்றிய குறிப்பு மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளில் உள்ளது:

  • மத்தேயு 20:1-2 - "இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, 'நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்று உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்...' என்றார்".
  • மாற்கு 11:1-2 - "இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, 'உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்: அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்...' என்றார்".
  • லூக்கா 19:28-30 - "இவற்றைச் சொன்னபின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவம் என வழங்கப்ப்டும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்த போது இரு சீடர்களை அனுப்பினார். அப்போது அவர் அவர்களிடம், 'எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக் குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்...' என்றார்".

இருப்பிடம்[தொகு]

பெத்பகு கோவிலின் உள்தோற்றம் - இயேசு எருசலேமுக்குப் பவனியாகச் செல்கிறார்

பெத்பகு என்னும் ஊர் எங்கிருக்கிறது என்பதைப் பண்டைக்கால எழுத்தாளரான யூசேபியஸ் (Eusebius of Caesarea) என்பவர் குறிப்பிடுகிறார். அவர் கருத்துப்படி, பெத்பகு அமைந்திருந்த இடம் இயேசு இரத்த வேர்வை வியர்த்த "ஒலிவ மலை" ஆகும்.[1]

எருசலேமிலிருந்து எரிகோ நகருக்குச் செல்கின்ற சாலையில் பெத்பகு ஊர் இருந்திருக்கலாம். எருசலேமிலிருந்து ஓர் ஓய்வுநாள் பயணத் தொலையில் அது இருந்தது என்று கொண்டால் அது ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தூரம் எனலாம்.

இன்று பெத்பகு என்று அடையாளம் காட்டப்படுகின்ற இடத்தில் பிரான்சிஸ்கு சபையினரால் நிர்வகிக்கப்படுகின்ற ஒரு கோவில் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Archaeological Encyclopedia of the Holy Land by Avraham Negev 2005 ISBN 0826485715 page 80
  2. The Holy Land: An Oxford Archaeological Guide from Earliest Times to 1700 by Jerome Murphy-O'Connor 2008 ISBN 0199236666 page 150
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்பகு&oldid=2697936" இருந்து மீள்விக்கப்பட்டது