பெத்தானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்தானியா நகரில் மரியா, மார்த்தா ஆகியோரின் வீட்டில் இயேசு. ஓவியர்: ஓட்டோ வான் வீன். ஆண்டு: 1597.

பெத்தானியா (Bethany) என்பது புதிய ஏற்பாட்டில் மரியா, மார்த்தா, இலாசர் ஆகியோரின் வீடும், "தொழுநோயாளர் சீமோன்" என்பவரின் வீடும் இருந்த நகரமாகக் குறிப்பிடப்படும் இடம் ஆகும்[1].

இயேசுவின் காலத்தில் பேச்சு மொழியாக வழங்கிய அரமேய மொழியில் இது בית עניא, (Beth anya = பெத் ஆனியா) என்று வரும். இதற்கு "துன்பத்தின் வீடு" என்பது பொருள். இயேசு எருசலேம் நகருக்குள் அரசர் போல நுழைந்த பிறகு இந்த ஊரில் தங்கியிருந்தார் என்றும், தமது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இவ்வூரிலிருந்து விண்ணகம் சென்றார் என்றும் புதிய ஏற்பாட்டுக் குறிப்புகள் உள்ளன.

பெத்தானியா எங்கு உள்ளது?[தொகு]

பாலஸ்தீன நாட்டில், மேற்குக் கரை என்னும் பகுதியில் உள்ள "அல்-எய்சரியா" (Al-Eizariya அல்லது al-Izzariya [அரபி: العيزريه]) என்னும் இன்றைய ஊரே முற்காலத்தில் பெத்தானியா என்று அழைக்கப்பட்ட இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. "அல்-எய்சரியா" என்பதற்கு "இலாசரின் இடம்" என்பது பொருள். இந்த இடத்தில் இலாசரின் கல்லறை உள்ளதாக நம்பப்படுகிறது.

பெத்தானியாவில் இலாசரின் கல்லறை என அடையாளம் காட்டப்படும் குகை.

பெத்தானியா எருசலேமிலிருந்து கிழக்காக ஒன்றரை மைல் (2 கி.மீ) தொலையில், ஒலிவ மலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. அங்கு அடையாளம் காட்டப்படுகின்ற மிகப் பழைய வீடு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது. அதுவே விவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் வருகின்ற மரியா, மார்த்தா, இலாசர் என்போரின் வீடு என்று கூறப்படுகிறது. இங்கே பெருந்திரளான மக்கள் திருப்பயணிகளாகச் செல்கின்றனர்.

அல்-எய்சரியாவில் உள்ள கல்லறை இலாசர் அடக்கம் செய்யப்பட்ட இடமாக கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்தே கருதப்பட்டு வந்துள்ளது. யூத வரலாற்றாசிரியர் செசரியா நகர் எவுசேபியுஸ் (கி.பி. சுமார் 330) என்பவரும் "போர்தோ நகர் திருப்பயணி" (கி.பி. சுமார் 333) என்பவரும் இத்தகவலைத் தருகின்றனர்.

ஸானேக்கியா (1899) என்பவர், பண்டைய பெத்தானியா ஒலிவ மலையின் உயரப் பகுதியில் தென்கிழக்காகவும், பெத்பகே என்னும் இடத்திற்கு அருகில், அல்-எய்சரியாவிலிருந்து சிறிது தொலையில் அமைந்திருந்தது என்றும் கருத்துத் தெரிவித்தார்.

பெத்தானியா என்னும் பெயரின் பொருள்[தொகு]

பெத்தானியா என்பதன் பொருள் யாது என்பது குறித்து அறிஞரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஜோசப் பார்பர் லைட்ஃபுட் என்பவர் பெத்தானியா "அத்திப்பழ வீடு" என்று பொருள்படும் என்றார். இதற்கு "அனியாவின் வீடு" அல்லது "அனனியாவின் வீடு" என்று பொருள் என்பது இன்னொரு விளக்கம் (இது பெத்தேலுக்கு அருகில் இருந்ததாக நெகேமியா 11:32 குறிப்பிடுகிறது).

பொதுவாக ஏற்கப்பட்ட விளக்கம் இது: பெத்தானியா என்பது "துயர இல்லம்" அல்லது "துன்பத்தின் வீடு" எனப் பொருள்படும். கி.பி. நான்காம் நூற்றாண்டில் புனித ஜெரோம் என்பவர் இந்த விளக்கம் தந்தார். இதை "ஏழையர் வீடு" அல்லது "ஏழைகளுக்கு உதவும் வீடு" எனவும் பொருள்படுவதாகக் கருதலாம். இந்த விளக்கத்தின்படி, பெத்தானியாவில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஓர் இல்லம் இருந்திருக்கலாம். "ஏழை" என்னும் சொல் வறியவர்களை மட்டுமன்றி, நோயுற்றோர், எருசலேமுக்கு வந்த திருப்பயணிகள் போன்றோரையும் குறித்திருக்கலாம்.

பெத்தானியாவில் ஏழைகளுக்கும் நோயுற்றோருக்கும் அளிக்கப்பட்ட ஆதரவு[தொகு]

ப்ரையன் கேப்பர் (Brian J. Capper) என்னும் அறிஞரும் பிறரும் பெத்தானியாவில் ஏழை எளியவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டதைக் கோடிட்டுக் காட்டுகின்றனர். இக்கருத்தின் அடிப்படை புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களிலேயே உள்ளது. மாற்கு நற்செய்தி, பெத்தானியாவில் சீமோன் என்னும் தொழுநோயாளர் இருந்ததைக் குறிப்பிடுகிறது (மாற்கு 14:3-10). இயேசு பெத்தானியாவில் இருந்தபோது, அவருடைய நண்பராகிய இலாசர் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததாக அறியவந்தார் (காண்க: யோவான் 11:1-12:11).

கும்ரான் அருகே அமைந்த குகைகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட "திருக்கோவில் சுருளேடு" என்னும் ஆதாரத்திலிருந்து பெறப்பட்ட தகவல்: நோயுற்றவர்களையும் தொழுநோயால் வாடியவர்களையும் கவனிப்பதற்காக எருசலேமின் கிழக்குப் பகுதியில் மூன்று இல்லங்கள் அமைய வேண்டும். தூய்மையற்ற எதுவும் எருசலேம் திருநகருக்கு மூவாயிரம் முழம் தூரம் வரை காணப்படல் ஆகாது என்று அந்த ஏட்டில் கூறப்படுகிறது. பெத்தானியா என்ற ஊர் எருசலேமிலிருந்து பதினைந்து ஸ்தாதியம் தொலைவில் இருந்ததாக யோவான் கூறுகிறார் (யோவான் 11:18). இது ஏறக்குறைய மூன்று கிலோமீட்டரைக் குறித்தது. எனவே, தூய்மையற்றவர்களாகக் கருதப்பட்ட தொழுநோயாளர்கள் போன்றோர் எருசலேமிலிருந்து சரியான தொலையில், பெத்தானியாவில் இருந்தார்கள் என்று தெரிகிறது. இது தவிர, நற்செய்தியில் வருகின்ற பெத்பகு (காண்க: மத்தேயு 21:1) எனனும் ஊர் ஒலிவ மலையின் உயர்பகுதியில் அமைந்ததால் அங்கிருந்து எருசலேம் கோவில் கண்ணுக்கு அழகாய்த் தோற்றமளித்தது. ஆனால் பெத்தானியா அம்மலையின் அடிவாரத்தில் இருந்ததால் அங்கிருந்து எருசலேம் கோவிலைப் பார்க்கவியலாது. இதுவும் தூய்மையற்றவர்களாகக் கருதப்பட்ட தொழுநோயாளர் போன்றோர் பெத்தானியாவில் இருந்திருக்கலாம் என்றும், அவர்கள் கோவிலின் பார்வைக்கு அப்பால் இருந்தனர் என்றும் கூறுவதற்கு அடிப்படையாக உள்ளது.

எனவே, கும்ரான் பகுதியில் குடியேறிய "எஸ்ஸேனியர்" என்னும் துறவியர் அல்லது அவர்களைப் போன்ற மரபுடைய யூத சமயத்தவர் பெத்தானியாவில் தொழுநோயாளர் உட்பட பிற நோயாளரையும் கவனிக்க மருத்துவ/நலவாழ்வு இல்லங்களை அமைத்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம். அக்காலத்தில் ஏரோது மன்னன் (கி.மு. 36 - கி.மு. 4) எஸ்ஸேனியருக்கு ஆதரவு அளித்ததையும் இவண் குறிப்பிடலாம்.

ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் ஆதரவான இல்லம் பெத்தானியாவில் இருந்த பின்னணியில் இயேசு, "ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள்" (மத்தேயு 26:11; மாற்கு 14:7) என்று கூறியிருப்பார் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

பெத்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட "எலும்புப் பாதுகாப்புப் பெட்டகங்களில்" காணப்படுகின்ற பெயர்களில் கலிலேயப் பெயர்கள் பல உள்ளன. இவர்கள் வடக்கிலிருந்த கலிலேயாவிலிருந்து வந்து எருசலேம் அருகே பெத்தானியாவில் தங்கியிருப்பார்கள். இதனால் கலிலேயர்களாகிய இயேசுவின் சீடர்களும் அங்குப் போய் தங்கியிருக்கலாம். நீண்ட பயணத்துக்குப் பின் எருசலேமில் நுழைவதற்கு முன் தங்கியிருக்க ஏழைமக்களுக்கு பெத்தானியாவில் வசதி செய்து கொடுக்கப்பட்டது எனலாம்.

இவ்வாறு பெத்தானியாவில் ஏழைமக்களுக்கும் நோயாளருக்கும் உதவிட இல்லங்கள் இருந்ததற்கான அடிப்படை உறுதியாகவே உள்ளது.

பெத்தானியா பற்றிய புதிய ஏற்பாட்டுக் குறிப்புகள்[தொகு]

புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் பெத்தானியாவோடு தொடர்புடைய ஐந்து நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் பெத்தானியா என்னும் பெயர் பதினொரு முறை வருகிறது.

  • பெத்தானியாவில் வாழ்ந்த இலாசர் என்பவர் இறந்துபோக, இயேசு அவருக்கு மீண்டும் உயிர்கொடுத்த நிகழ்ச்சி: யோவான் 11:1-46
  • இயேசு ஆடம்பரமாக எருசலேமுக்குள் நுழைந்தபோது அருகிலிருந்த பெத்தானியாவிலிருந்து அங்கு புறப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி: மாற்கு 11:1; லூக்கா 19:29
  • அந்நிகழ்ச்சியை அடுத்துவந்த வாரத்தில் இயேசு பெத்தானியாவில் தங்கியிருந்த நிகழ்ச்சி: மத்தேயு 21:17; மாற்கு 11:11-12
  • பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் என்பவரின் வீட்டில் இயேசு உணவருந்தியபோது மரியா இயேசுவை நறுமணத் தைலத்தால் பூசிய நிகழ்ச்சி: மத்தேயு 26:6-13; மாற்கு 14:3-9; யோவான் 12:1-8
  • இயேசு பெத்தானியாவிலிருந்து விண்ணகம் சென்ற நிகழ்ச்சி: லூக்கா 24:50

மேற்கூறிய நிகழ்ச்சிகள் தவிர, இன்னொரு தடவை இயேசு மரியா, மார்த்தா ஆகியோரின் இல்லத்திற்குச் சென்றார் என்று லூக்கா 10:38-42 குறிப்பிடுகிறது. ஆனால் அங்கு "பெத்தானியா" என்னும் சொல் இல்லை.

யோவான் 11:1-46[தொகு]

மாற்கு 11:1-2; லூக்கா 19:28-29[தொகு]

மத்தேயு 21:17; மாற்கு 11:11-12[தொகு]

மத்தேயு 26:6-13[தொகு]

இயேசு பெத்தானியாவுக்குச் சென்றபோது தொழுநோயாளர் சீமோன் என்பவரின் வீட்டில் உணவு அருந்திய வேளையில் ஒரு பெண் அவரது காலடியை நறுமணத் தைலத்தால் பூசினார். இந்நிகழ்ச்சி மாற்கு 14:3-9 பகுதியிலும், யோவான் 12:1-8 பகுதியிலும் மேலதிகமாகக் காணப்படுகின்றது.

லூக்கா 24:50-53[தொகு]

யோர்தானுக்கு அப்பாலுள்ள பெத்தானியா (யோவான் 1:28)[தொகு]

பெத்தானியா என்னும் பெயர் கொண்ட இன்னொரு ஊரும் யோவான் நற்செய்தியில் உள்ளது. அது யோர்தான் ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்திருந்தது என்று யோவான் 1:28இல் உள்ளது. இந்த ஊர் எங்குள்ளது என்று தெளிவாகத் தெரியவில்லை.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தானியா&oldid=2098317" இலிருந்து மீள்விக்கப்பட்டது