இயேசுவோடு தொடர்புடைய புதிய ஏற்பாட்டு இடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்பதிகையால் தரையில் அமைக்கப்பட்ட நிலப்படம். யோர்தான் நாட்டு அகழ்விடமான மாபதா நகரில் பிசான்சியக் கலையில் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இங்கே இயேசு திருமுழுக்குப் பெற்ற இடமாக “பெத்தாபரா” (Βέθαβαρά) (பெத்தானியா) என்பது யோர்தான் நதிக்கரையில் காட்டப்பட்டுள்ளது

இயேசுவோடு தொடர்புடைய புதிய ஏற்பாட்டு இடங்கள் (New Testament places associated with Jesus) என்னும் தலைப்பின் கீழ் இயேசு பாலத்தீனத்தில் பிறந்து, வளர்ந்து, போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இடங்கள் உட்பட, அவருடைய வாழ்க்கையோடு தொடர்புடைய எகிப்து போன்ற இடங்களும் புதிய ஏற்பாட்டு ஆதாரங்கள் அடிப்படையில் தரப்படுகின்றன.

இயேசு பணி செய்த பிரதேசங்கள்[தொகு]

இயேசுவின் பணிக்காலத்தில் அவர் சென்ற இடங்களாகப் புதிய ஏற்பாட்டில் குறிக்கப்படுகின்ற நகரங்களும் ஊர்களும் பெரும்பாலும் பாலத்தீனப் பிரதேசங்களான கலிலேயா, யூதேயா, பெரேயா, சமாரியா போன்றவற்றில் அமைந்தவை ஆகும்.[1]

இயேசுவின் வாழ்வோடு தொடர்புடைய புதிய ஏற்பாட்டு இடமாக அறிஞர் குறிப்பிடுவனவற்றுள் “கடலோர செசரியா” (Caesarea Maritima) என்னும் இடமும் உள்ளடங்கும். அந்நகரம் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்படாவிட்டாலும், அங்கு 1961இல் கண்டெடுக்கப்பட்ட உரோமை ஆட்சிக்காலத்தைச் சார்ந்த ஒரு கல்லில் ”பொந்தியு பிலாத்து” என்னும் குறிப்பு உள்ளது. இந்த பிலாத்துவின் ஆணைப்படிதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.[2][3]

நிலப் பகுதிக் குறிப்புகள்[தொகு]

இயேசுவின் பணியை விவரிக்கின்ற நற்செய்தி நூல்களில் அப்பணி நடந்த இடங்கள் பொதுவாக நிலப் பிரிவு அடிப்படையில் தரப்படுகின்றன. அவர் திருமுழுக்குப் பெற்றதும் கலிலேயாவில் தம் பணியைத் தொடங்கினார். திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்ட வரையிலும் இயேசு தொடர்ந்து கலிலேயாவிலும் அதன் பின் அதைச் சூழ்ந்த இடங்களிலும் பணிசெய்தார். [1][4]இயேசுவின் கலிலேயப் பணியின் முடிவு ஏறக்குறைய மத்தேயு 17ஆம் அதிகாரத்திலும், மாற்கு 9ஆம் அதிகாரத்திலும் நிகழ்கிறது.

திருமுழுக்கு யோவான் இறந்த பின், இயேசுவைத் திருத்தூதர் பேதுரு மெசியா என்று அறிக்கையிட்டு அவரை “வாழும் கடவுளின் மகன்” என்று எடுத்துரைத்த நிகழ்ச்சி குறிக்கப்படுகிறது (மத்தேயு 16). தொடர்ந்து இயேசு எருசலேம் நோக்கிச் செல்கிறார். வழியில் பெரேயா மற்றும் யூதேயா பிரதேசங்களையும் கடக்கிறார்.[5][6]இந்தப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியாக இயேசு எருசலேம் நகரில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைதல் குறிக்கப்படுகிறது (மத்தேயு 21, மாற்கு 11).

இயேசுவின் பணிக்காலத்தின் இறுதிக்கட்டம் எருசலேமில் அவர் இரா உணவு உட்கொண்டு, மறுநாள் துன்பங்கள் பட்டு, சிலுவையில் அறையுண்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதை உள்ளடக்கியது.[7]

இயேசுவின் பணிக்காலத்தைப் பணியிடங்களோடு தொடர்பு படுத்தல்[தொகு]

கி.பி. முதல் நூற்றாண்டில் பாலத்தீனம். இயேசுவின் பணிக்காலத்தின் போது இருந்த பாலத்தீனப் பிரதேசங்கள்: கலிலேயா, பெரேயா, யூதேயா

புதிய ஏற்பாட்டுத் தகவல்படி, இயேசுவின் பணி நிகழ்ந்த முக்கிய பிரதேசங்கள் கலிலேயா, யூதேயா, அவற்றைச் சூழ்ந்த பெரேயா, சமாரியா ஆகியவையாம். [1][4]

1) கலிலேயாவில் நிகழ்ந்த பணி[தொகு]

இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு யோவான் கைகளால் திருமுழுக்குப் பெறுகிறார். அங்கிருந்து கலிலேயாவுக்குத் திரும்புகிறார். அங்கு கப்பர்நாகும் ஊரின் தொழுகைக்கூடத்திற்குச் சென்று போதிக்கிறார்.[8][9]

இயேசு கலிலேயக் கடலோரமாகச் சென்றபோது அங்கே மீன்பிடித்துக்கொண்டிருந்த சிலரை அவர் தம் சீடராகும்படி அழைக்கின்றார். அவர்களும் தங்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்கின்றார்கள். அவர்கள் பெயர்கள்: சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான். தொடர்ந்து அவர் கலிலேயாவில் பணிசெய்யும் போது அவர் மலைப்பொழிவை நிகழ்த்துகின்றார். இந்தப் பேருரை இயேசுவின் போதனைகளின் முக்கியமான அறவுரைப் பகுதியாகக் கருதப்படுகிறது.[10][11]

திருமுழுக்கு யோவான் கொல்லப்பட்ட நிகழ்ச்சியோடு இயேசுவின் கலிலேயப் பணி நிறைவுக்கு வருகிறது.[12][13]

2) இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்தல்[தொகு]

திருமுழுக்கு யோவானின் சாவுக்குப் பின், ஏறக்குறைய நற்செய்திகளின் நடுப் பகுதியில் (மத்தேயு 17, மாற்கு 9) இரு முக்கிய நிகழ்வுகள் குறிக்கப்படுகின்றன. ஒன்று, திருத்தூதர் பேதுரு இயேசுவை மெசியா என்றும் “வாழும் கடவுளின் மகன்” என்றும் அறிக்கையிட்டது. மற்றது, இயேசு தம் சீடர்களின் முன்னிலையில் தோற்றம் மாறியது. இந்த இரு நிகழ்ச்சிகளின் வழியாக இயேசு தம்மைச் சீடர்களுக்கு வெளிப்படுத்தி, தாம் யார் என்பதை எடுத்துக் கூறியதாக நற்செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.[5][6]

மேற்கூறிய நிகழ்வுகளுக்குப் பின் இயேசு பெரேயா மற்றும் யூதேயா வழியாக எருசலேம் நோக்கிச் சென்ற பயணம் விவரிக்கப்படுகிறது. அப்பயணத்தின்போதும் இயேசு பல போதனைகளை வழங்குகிறார். பல புதுமைகளை நிகழ்த்துகிறார்.[5][6][14][15]

இவ்வாறு பெரேயா வழியாக எருசலேம் நோக்கிச் செல்கின்ற இயேசு, தாம் திருமுழுக்குப் பெற்ற இடத்திற்குத் திரும்பி வருகிறார்.[16][17][18]

3) எருசலேம் நகரில் இயேசுவின் இறுதி வாரம்[தொகு]

இயேசுவின் பணிக்காலத்தின் இறுதிக் கட்டம், அவர் எருசலேம் நகரில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைவதோடு தொடங்குகிறது. இதை மத்தேயு 21ஆம் அதிகாரத்திலும், மாற்கு 11ஆம் அதிகாரத்திலும் காணலாம். அதற்குச் சற்று முன்பே அவர் பெத்தானியா ஊரில் இறந்துவிட்ட லாசருக்கு மீண்டும் உயிரளித்த நிகழ்ச்சி நடந்தது (யோவான் 11).

இயேசுவின் வாழ்க்கையில் இறுதி வார நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நற்செய்தி நூல்களில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இயேசு இறுதி இராவுணவு உண்கிறார்; கைது செய்யப்படுகிறார்; பிலாத்துவின் முன்னிலையிலும் யூத சமய அதிகாரிகள் முன்னிலையிலும் விசாரிக்கப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்டு, சிலுவை மரணத்திற்குத் தீர்ப்பிடப்படுகிறார். சிலுவையில் அறையப்பட்டு உயிர்விடுகிறார். கல்லறையில் அடக்கப்படுகிறார்.[7]

கல்லறையிலிருந்து இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியும், அவர் தம்முடைய சீடர்கள் முன் தோன்றியதும், விண்ணகம் ஏகியதும் யூதேயா பிரதேசத்தில் நிகழ்கின்றன.

இயேசுவின் பணியோடு தொடர்புடைய தனித்தனி இடங்கள்[தொகு]

அ) கலிலேயா பிரதேசம்[தொகு]

கலிலேயா, தெக்காப்பொலி, சமாரியா ஆகிய பிரதேசங்களைக் காட்டும் நிலப்படம்

1) அயினோன்[தொகு]

இயேசு திருமுழுக்குப் பெற்ற இடமாக “அயினோன்” குறிக்கப்படுகிறது (யோவான் 3:23). “யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது” என்கிறது யோவான் நற்செய்தி. அங்குதான் இயேசு திருமுழுக்கு யோவான் கைகளால் திருமுழுக்குப் பெற்றார்.[19][20]

2) பெத்சய்தா[தொகு]

”பெத்சய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்” என்று மாற்கு 8:22-26 பகுதி எடுத்துரைக்கிறது.[21]

3) கானா[தொகு]

யோவான் நற்செய்தி 2:1-11 பகுதியில் “கானாவில் திருமணம்” விவரிக்கப்படுகிறது. இங்கேதான் இயேசு முதல் புதுமை (”அரும் அடையாளம்”) நிகழ்த்தியதாக யோவான் குறிப்பிடுகிறார்.[22][23]

4) கப்பர்நாகும்[தொகு]

இயேசு திருமுழுக்குப் பெற்றபின் கப்பர்நாகும் ஊரிலுள்ள தொழுகைக் கூடம் சென்று போதித்தது அவருடைய பணிக் காலத்தின் தொடக்கமாக அமைகிறது (காண்க: மாற்கு 1:21-28).[8] நற்செய்தி நூல்களில் கப்பர்நாகும் ஊர் 17 தடவை குறிக்கப்படுகிறது. அங்கு இயேசு புரிந்த புதுமைகளாகவும் போதனைகளாகவும் குறிக்கப்படுபவை: இயேசு ”மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கியது (மத்தேயு 4:12-17), இயேசு தீய ஆவி பிடித்த ஒரு மனிதருக்கு விடுதலை அளித்தது (மாற்கு 1:21-28), இயேசு சீமோன் பேதுருவின் மாமியாருக்குக் குணமளித்தது (மாற்கு 1:29-31), நூற்றுவர் தலைவரின் பணியாளருக்கு இயேசு குணம் நல்கியது (லூக்கா 7), இயேசு “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இருக்காது” (யோவான் 6:35) என்று போதனை வழங்கியது போன்றவை.[24]

5) கொராசின்[தொகு]

இயேசுவின் போதனையை ஏற்று மனம் திருந்தாத நகரங்களுள் ஒன்றாக “கொராசின்” குறிப்பிடப்படுகிறது (காண்க: மத்தேயு 11:23; லூக்கா 10:13-15).

6) கெனசரேத்து[தொகு]

கலிலேயக் கடல் என்றும் கெனசரேத்து ஏரி என்றும் அழைக்கப்பட்ட நீர்த்தேக்கத்திற்கு வடமேற்காக அமைந்திருந்த ஊர் கெனசரேத்து ஆகும். அந்த ஊர் இன்று அழிந்துபோயிற்று. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியரான பிளாவியசு யோசேபஸ் என்பவர் கூற்றுப்படி, கெனசரேத்து மிகவும் வளமான நிலப்பகுதியாக இருந்தது.[25] இந்நகர் கப்பர்நாகும் நகருக்கும் மகதலா நகருக்கும் இடையே சம தூரத்தில் இருந்திருக்கலாம்.[26]இயேசு கெனசரேத்து பகுதியில் மக்களுக்குக் குணமளித்த நிகழ்ச்சி மத்தேயு 14:34-36, மாற்கு 6:53-36 பகுதிகளில் குறிப்பிடப்படுகிறது.

7) இயேசு தோற்றம் மாறிய மலை[தொகு]

இம்மலை எந்த இடத்தில் இருந்தது என்பதைத் தெளிவாக அடையாளம் காணமுடியவில்லை. இது “தாபோர்” மலையாக இருந்திருக்கலாம் என்று பல அறிஞர் கருதுகின்றனர்.[27]

8) நயீன்[தொகு]

நயீன் ஊரைச் சேர்ந்த ஒரு கைம்பெண்ணின் ஒரே மகன் இறந்துபோனார். இறந்தவருக்கு உயிரளித்தார் இயேசு. இந்நிகழ்ச்சி லூக்கா 7:11-17 பகுதியில் உள்ளது.[28]இறந்தோருக்கு இயேசு உயிர்கொடுத்த நிகழ்ச்சிகள் நற்செய்திகளில் மூன்று இடங்களில் வருகின்றன. அவற்றுள் முதல் நிகழ்ச்சி இது.

9) நாசரேத்து[தொகு]

இயேசுவின் பெற்றோரான யோசேப்பும் மரியாவும், குழந்தை இயேசுவை ஏரோது கொல்லத் தேடியதை அறிந்து அவரைப் பாதுகாக்கும் வண்ணம் எகிப்துக்கு ஓடிப்போனார்கள். சில ஆண்டுகளுக்குப் பின்னர் கலிலேயாப் பகுதிக்குத் திரும்பிவந்து அங்கே நாசரேத்து என்ற ஊரில் குடியேறினார்கள் (மத்தேயு 2:16-23). இயேசு தம் இளமைப் பருவத்தை நாசரேத்து என்னும் ஊரில் கழித்தார். அங்கு வாழ்ந்த போதுதான் இயேசு எருசலேம் கோவிலுக்கு விழாக் கொண்டாடப் போன இடத்தில் தம் பெற்றோரான யோசேப்பையும் மரியாவையும் விட்டு கோவிலிலேயே தங்கிவிட்டார். மகனைக் காணாத பெற்றோர் பின்னர் கோவிலில் அவரைக் கண்டுபிடித்தார்கள். இந்நிகழ்ச்சியை லூக்கா 2:41-52 விவரிக்கிறது.[29]

10) கலிலேயக் கடல்[தொகு]

கலிலேயக் கடல் அல்லது கெனசரேத்து ஏரி என்னும் பெரிய நீர்த்தேக்கம் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பணிக்காலத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை பலமுறை குறிக்கப்படுகிறது. இயேசு தம் முதல் சீடர்களை அழைத்தது இந்த ஏரிக் கரையில்தான். இந்நிகழ்ச்சி மாற்கு 1:16-20; மத்தேயு 4:18-22, லூக்கா 5:1-11 ஆகிய பகுதிகளில் குறிக்கப்பட்டுள்ளது.[30][31] இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பின் தம் சீடர்களுக்கு இந்த ஏரிக்கரையில் தோன்றிய நிகழ்ச்சியை யோவான் பதிவுசெய்துள்ளார் (யோவான் 21:1-14).[32][33]

ஆ) தெக்காப்பொலி, பெரேயா பிரதேசங்கள்[தொகு]

1) பெத்தாபாரா[தொகு]

யோவான் நற்செய்தியில் (1:28) திருமுழுக்கு யோவான் “யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில்” திருமுழுக்குக் கொடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது. [19]இந்த பெத்தானியாவும் எருசலேம் நகருக்குக் கிழக்கே இருந்த பெத்தானியா ஊரும் (காண்க: யோவான் 11:1-54) வெவ்வேறு இடங்கள் ஆகும். யோவான் திருமுழுக்கு அளித்த இடம் பெத்தாபாரா என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரேயா பகுதியில் இருந்தது.[20]

2) தெக்காப்பொலி[தொகு]

தெக்காப்பொலி என்றால் கிரேக்கத்தில் “பத்து நகரங்கள்” என்று பொருள். பண்டைக் கால உரோமைப் பேரரசின் கிழக்கு எல்லையில் அமைந்த இந்நகரங்கள் இன்றைய யோர்தான், சிரியா நாடுகளில் இருந்தவை. தெக்காப்பொலி பகுதியில் கிரேக்க கலாச்சாரம் பரவியிருந்தது. அப்பகுதி மக்களை யூதர் பிற இனத்தாராகக் கருதினார்கள். இங்கு இயேசு காது கேளாத, திக்கிப் பேசிய ஒருவருக்கு குணமளித்தார் (மாற்கு 7:3137).[34]

3) கதரேனர் (கெரசேனர்) பகுதி[தொகு]

கதரேனர் அல்லது கெரசேனர் பகுதியில் இயேசு பேய்பிடித்த ஒரு மனிதருக்கு நலமளித்த செய்தி நற்செய்தியில் உள்ளது (மாற்கு 5:1-20; மத் 8:28-34; லூக் 8:26-39).[35]

இ) சமாரியா[தொகு]

1) கடலோர செசரியா[தொகு]

இது ஒரு துறைமுக நகராக இருந்தது. இங்கு 1961இல் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. அதாவது “பொந்தியு பிலாத்து” என்ற உரோமை ஆளுநரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பிலாத்து என்பவர் தான் இயேசுவுக்கு மரண தண்டனை அளித்து, அவரைச் சிலுவையில் அறையச் செய்தவர். இவருடைய பெயர் விவிலியத்துக்குப் புறம்பே அகழ்வாய்வு வழியாகக் கிடைப்பது இதுவே முதல் தடவை.[2][3][36]

2) சிக்கார்[தொகு]

யோவான் நற்செய்தி 4:4-26 பகுதியில் சிக்கார் என்ற ஊரில் இயேசு ஒரு சமாரியப் பெண்ணைக் கிணற்றங்கரை அருகே சந்தித்து உரையாடிய நிகழ்ச்சி உள்ளது. அப்பெண்ணுக்கு இயேசு அறிவுரை கூறினார்.[37]இயேசு அப்பெண்ணிடம், “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது” என்று கூறினார்.[38]

ஈ) யூதேயா[தொகு]

1) பெத்தானியா[தொகு]

பெத்தானியாவில் மரியா, மார்த்தா என்று இரு சகோதரிகள் வாழ்ந்துவந்தனர். அவர்களுடைய சகோதரர் இலாசர் என்பவர் இறந்துபோனார். இதனால் உள்ளம் கலங்கிய இயேசு இலாசரின் கல்லறை அருகே கண்ணீர் வடித்தார். பின்னர் அவர் இலாசருக்கு உயிர் கொடுத்தார். இயேசு “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்று அறிவுரை வழங்கினார்.[39]யோர்தான் ஆற்றுக்கு அருகே இருந்த பெத்தானியா வேறோர் இடம் ஆகும்.[20]

2) பெத்சதா குளம்[தொகு]

யோவான் நற்செய்தி 5:1-18 பகுதியில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் முடக்கு வாதத்தால் அவதியுற்றிருந்த ஒரு மனிதருக்கு இயேசு நலமளிக்கும் நிகழ்ச்சி தரப்படுகிறது. அம்மனிதரை இயேசு பெத்சதா குளத்தின் அருகே குணப்படுத்தினார். ஐந்து மண்டபங்கள் கொண்ட அக்குளத்தில் சரியான நேரத்தில் இறங்கினால் எவ்வித நோயிலுமிருந்தும் நலம் பெறலாம் என்று மக்கள் நம்பி்யிருந்தனர். [40]

3) பெத்லகேம்[தொகு]

லூக்கா நற்செய்தியில் இயேசு கன்னி மரியாவிடமிருந்து பெத்லகேம் ஊரில் பிறந்தார் என்னும் செய்தி உள்ளது (லூக்கா 2:1-7).[41][42]

4) பெத்பகு[தொகு]

இயேசு எருசலேமில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைவதற்கு முன்னால் தாம் ஏறிச்செல்வதற்காக ஒரு கழுதைக் குட்டியைக் கொண்டுவருமாறு பெத்பகு என்னும் ஊரிலிருந்து சீடர்களை அனுப்பினார். இச்செய்தி மத்தேயு 21:1, மாற்கு 11:1, லூக்கா 19:29 ஆகிய நற்செய்திப் பகுதிகளில் குறிக்கப்பட்டுள்ளது. லூக்கா, பெத்பகு ஊர் பெத்தானியாவுக்கு அருகே இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.[43][44]பண்டைய வரலாற்றாசிரியரான செசரியா நகர் யூசேபியு, பெத்பகு என்ற இடம் ஒலிவ மலையில் அமைந்தது என்று குறிப்பிடுகிறார்.[44]

5) கல்வாரி (கொல்கொதா)[தொகு]

கொல்கொதா (Golgotha) என்பது பழங்கால எருசலேம் நகரின் மதில்சுவர்களுக்கு வெளியே இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது ”கல்வாரி” (Calvary) அல்லது ”கபாலஸ்தலம்” என்றும் புதிய ஏற்பாட்டில் அழைக்கப்படுகிறது. கொல்கொதா என்பது "குல்கல்தா" (Gûlgaltâ) என்னும் எபிரேயச் சொல்லின் ஒலியாக்கம் ஆகும். இச்சொல்லின் விளக்கமாக புதிய ஏற்பாட்டில் மண்டை ஓட்டு இடம் என்னும் தொடர் தரப்படுகிறது. இதே பொருள் தரும் கிரேக்கத் தொடர் Kraniou Topos (Κρανίου Τόπος) என்றும் இலத்தீன் தொடர் Calvariae Locus என்றும் அமையும். இலத்தீன் தொடரிலிருந்து Calvary என்னும் ஆங்கிலச் சொல்லும், கல்வாரி என்னும் தமிழ் ஒலிபெயர்ப்பும் பெறப்பட்டன. இந்த இடம் பற்றிய குறிப்பு மத்தேயு: 27:32=33, மாற்கு 15:21-22, லூக்கா 23:32-33, யோவான் 19:17 ஆகிய நற்செய்திப் பகுதிகளில் உள்ளன.[45]

6) எம்மாவு[தொகு]

எம்மாவு என்னும் நகரம் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறித்துவின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு பழங்கால நகரம் ஆகும். இது எருசலேம் நகரிலிருந்து ஏறத்தாழ 7 மைல் (11 கிலோ மீட்டர்)தொலையில் உள்ளது. எம்மாவு என்னும் சொல்லின் பொருள் மித வெப்ப நீரூற்று என்பதாகும். லூக்கா 24:13-35 பகுதியில் இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பின்பு, எருசலேமிலிருந்து எம்மாவுக்குச் சென்றுகொண்டிருந்த இரு சீடர்களுக்குத் தோன்றிய செய்தி விவரிக்கப்பட்டுள்ளது. இயேசு அச்சீடர்களைச் சந்தித்தபோது அவர்கள் அவரை ஒரு வழிப்போக்கர் என்றுதான் நினைத்தார்கள். மாலை வேளையில் இயேசு அவர்களோடு உணவு உண்ண அமர்ந்து, அப்பத்தைப் பிட்டு அவர்களோடு பகிர்ந்துகொண்ட வேளையில் தான் அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்.[46][47]

7) கபதா (கல்தளம்)[தொகு]

இயேசுவின் வாழ்க்கையோடு தொடர்புடைய இந்த இடம் புதிய ஏற்பாட்டில் ஒரே முறை மட்டுமே குறிக்கப்படுகிறது. அப்பகுதி யோவான் 19:13. அதில், “பிலாத்து இயேசுவை வெளியே கூட்டிவந்தான். ‘கல்தளம்’ என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் ‘கபதா’ என்பது பெயர்” என்று கூறப்பட்டுள்ளது.[48][49]இந்த இடம் பெரிய கல்கள் பதிக்கப்பட்ட ஒரு மேடை போன்ற அமைப்பாக இருந்திருக்க வேண்டும். அதில் அமர்ந்து கொண்டு பிலாத்து இயேசுவை விசாரித்தார். இது எருசலேம் நகரில் பொதுமக்கள் கூடிய வளாகத்திற்குச் சற்று வெளியே இருந்தது என்று அகழ்வியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.[48][50]

8) கெத்சமனி[தொகு]

இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு உண்டபின்னர், தம் சீடர்களுடன் கெத்சமனி என்னும் ஒலிவத் தோட்டப்பகுதிக்குப் போய் அங்கே இறைவேண்டல் செய்தார் என்னும் செய்தி மாற்கு 14:32-42, மத்தேயு 26:3646, லூக் 22:39-46 போன்ற நற்செய்திப் பகுதிகளில் உள்ளது. இங்கேதான் இயேசு கடுந்துயரமும் மனக்கலக்கமும் அடையலானார். மேலும் கெத்சமனியில் தான் இயேசு யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.[51]

9) எரிகோ[தொகு]

இயேசு எரிகோ நகருக்கு அருகே பர்த்திமேயு என்ற பெயர்கொண்ட ஒருவருக்குக் கண்பார்வை அளித்த நிகழ்ச்சி மாற்கு 10:46-52 பகுதியிலும், மத்தேயு 20:29-34, லூக்கா 18:35-43 ஆகிய பகுதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவின் கைகளால் நலம்பெற்ற இருவர்கள் மட்டுமே நற்செய்தி நூல்களில் பெயர் சொல்லிக் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்களுள் ஒருவர் பர்த்திமேயு. மற்றவர் இலாசர்.[52]

10) ஒலிவ மலை[தொகு]

ஒலிவ மலை என்னும் இடம் நற்செய்தி நூல்களில் பலமுறை குறிக்கப்படுகிறது. இயேசு ஒலிவ மலையினின்று இறங்கி வந்த பின் எருசலேமில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்தார் என்று மத் 21:1-11, மாற்கு 11:1-2, லூக்கா 19:28-30, யோவான் 12:12-13 பகுதிகளில் உள்ளது.[53]மேலும், திருத்தூதர் பணிகள் நூலில் இயேசு உயிர்த்தெழுந்தபின் தம் சீடர்களுக்கு நாற்பது நாள்கள் காட்சியளித்த பின் ஒலிவ மலையருகிலிருந்து விண்ணேகினார் என்பது குறிக்கப்படுகிறது (திருத்தூதர் பணிகள் 1:9-12)

11) எருசலேம் கோவில்[தொகு]

எருசலேம் கோவில் நற்செய்தி நூல்களில் பல முறை குறிப்பிடப்படுகிறது. இயேசுவின் பெற்றோர் அவரை எருசலேம் கோவிலில் அர்ப்பணித்தார்கள் (லூக்கா 2:22-38). இயேசு எருசலேம் கோவிலுக்குப் பாஸ்கா விழாக் கொண்டாடச் சென்றபோது பெற்றோரை விட்டுப் பிரிந்து கோவிலிலே தங்கிவிட்டார் (லூக்கா 2:41-52). இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைந்தார் (மத்தேயு 21:1-11; மாற்கு 11:1-11; லூக்கா 19:28-44). அங்கே மக்கள் பொருட்களை வாங்குவதும் விற்பதுமாக இருந்தனர். இயேசு சினமுற்று, கோவிலில் விற்பனை செய்துகொண்டிருந்தவர்களை விரட்டியடித்தார் (மத்தேயு 21:12-17; மாற்கு 11:15-19; லூக்கா 19:45-48). இயேசு எருசலேமில் இருந்தபோது “ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்துவந்தார்” (லூக்கா 19:47-48).[54]

உ) பிற பிரதேசங்கள்[தொகு]

1) பிலிப்புச் செசரியா[தொகு]

இயேசு தாம் துன்புற்று, கொலைசெய்யப்படப் போவதாக முதன்முறை முன்னறிவித்தது இந்த நகருக்கு அருகே தான் என்று மாற்கு 8:27 கூறுகிறது.[55]இதைக் கேட்ட திருத்தூதர் பேதுரு, இயேசுவுக்கு அவ்வாறு நிகழலாகாது என்றதும் இயேசு “என் கண்முன் நில்லாதே சாத்தானே” என்று கடிந்துகொண்டதை மத்தேயு குறிப்பிடுகிறார் (மத்தேயு 16:23). மேலும், பிலிப்புச் செசரியா பகுதியில் இருந்தபோது இயேசு தம் சீடர்களிடம் “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்றும், “நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்றும் கேட்டபோது, பேதுரு இயேசுவை நோக்கி “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று தம் நம்பிக்கையை அறிக்கையிட்டார் என்ற செய்தியை மத்தேயு 16:13-20 குறிப்பிடுகிறது.[56][57]

2) எகிப்து[தொகு]

இயேசுவின் வாழ்க்கையில் எகிப்து பற்றிய குறிப்பு அவருடைய இளமைப் பருவம் சார்ந்தது. இயேசுவின் பெற்றோரான யோசேப்பும் மரியாவும் ஏரோதுக்கு அஞ்சி குழந்தை இயேசுவைத் தூக்கிக் கொண்டு எகிப்துக்கு ஓடிபோனார்கள். அதன்பின் குழந்தையைக் கொல்லத் தேடிய ஏரோது இறந்துவிட்டார் என்று அறிந்து மீண்டும் கலிலேயாவுக்குத் திரும்பி நாசரேத்து ஊரில் குடியேறினார்கள். இதை மத்தேயு நற்செய்தி பதிவு செய்துள்ளது (மத்தேயு 2:15-23).[58][59][60]

3) தமஸ்கு சாலை[தொகு]

திருத்தூதர் பணிகள் நூலின் அதிகாரங்கள் 9, 22, 26 ஆகிய பகுதிகளில் புனித பவுல், கிறித்தவர்களைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் தமஸ்கு நகரை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், உயிர்பெற்றெழுந்த இயேசு அவருக்குத் தோன்றி, அவரை மனம் மாற்றியதோடு, புவுலும் இயேசுவின் எதிரி என்ற நிலையிலிருந்து மாறி, இயேசுவின் சீடராக, திருத்தூதராக மாறி, இயேசு பற்றிய நற்செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு போதிக்கத் தொடங்கினார் என்ற செய்தி விரிவாகத் தரப்படுகிறது. தமஸ்கு நகரைப் பற்றிய குறிப்புகள் திருத்தூதர் பவுல் எழுதிய திருமுகங்களிலும் காணக்கிடக்கின்றன.[61][62]

அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள்[தொகு]

அகுஸ்துஸ் சீசர் காலத்து ”தெனாரியம்” என்ற நாணயம். இதில் CAESAR AVGVSTVS என்ற பொறிப்பு உள்ளது. பிற்பக்கத்தில் DIVVSIVLIV(S) ("Divus Iulius") என்றுள்ளது. இதை மக்கள் பொதுவாக “கடவுளின் மகன்” என்று பொருள் கொண்டார்கள்.[63][64]

இயேசுவே தம் கைப்பட எழுதியதாக எந்தவொரு ஆவணமும் இதுவரை கிடைத்ததில்லை.[65]அதுபோலவே, இயேசுவோடு நேரடித் தொடர்புடைய அகழ்வாய்வுப் பொருள்களும் கிடைக்கவில்லை.

21ஆம் நூற்றாண்டில் நடக்கின்ற ஆய்வுகளின்படி, இயேசுவின் காலத்தில் பாலத்தீனத்தில் நிலவிய சமூக-பொருளாதார-கலாச்சாரப் பின்னணியை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு அகழ்வாய்வுத் துறை உறுதுணையாக உள்ளது என்ற கருத்து பரவலாக ஏற்கப்படுகிறது.[66][67][68][69][70][71]

1) பொந்தியு பிலாத்து பெயர் பொறிக்கப்பட்ட கல் கண்டுபிடிக்கப்பட்டது[தொகு]

இயேசு வாழ்ந்த காலத்தில் கலிலேயா, யூதேயா ஆகிய பாலத்தீனப் பகுதிகளில் நிலவிய சமூக-பொருளாதார-கலாச்சாரப் பின்னணியைப் பற்றிய தகவல்கள் தருகின்ற அகழ்வாய்வுத் தடயங்கள் பல கிடைத்துள்ளன என்றும், அவை இயேசுவின் வாழ்க்கை பற்றிய தெளிவுகளை வழங்கக் கூடும் என்றும் ஆய்வாளர் ஜேம்ஸ் சார்ல்ஸ்வொர்த் (James Charlesworth) என்பவர் கூறுகிறார். [69]ஜானத்தன் ரீட் (Jonathan Reed) என்னும் மற்றோர் அறிஞர் கூற்றுப்படி, அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகளின் துணையோடு இயேசு வாழ்ந்த காலத்து “சமூக-உலகு” (social world) பற்றி நாம் தெளிவு பெற முடியும்.[72]

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக ஜானத்தன் ரீட் இத்தாலிய அகழ்வாய்வு அறிஞர்களால் 1961இல் கண்டெடுக்கப்பட்ட பிலாத்து கல்வெட்டு (Pilate Stone) என்ற அரிய ஆதாரத்தைக் காட்டுகின்றார். இயேசுவுக்கு மரண தண்டனை விதித்த உரோமை ஆளுநர் பெயர்தான் பொந்தியு பிலாத்து. இதுவரையிலும் பிலாத்து பற்றிய குறிப்பு நற்செய்தி நூல்களில் மட்டுமே காணக்கிடைத்தது. ஆனால் இந்த அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பின் வழியாக, உண்மையிலேயே வரலாற்றில் பிலாத்து என்றொரு மனிதர் இருந்தார் என்றும், அவர் உரோமைப் பேரரசின் கீழ் யூதேயாவின் ஆளுநராகச் செயல்பட்டார் என்றும் தெளிவாகத் தெரியவருகிறது. மேலும், இக்கல்வெட்டு இயேசு வாழ்ந்த முதல்நூற்றாண்டைச் சேர்ந்தது.[72][73][74]

2) அகழ்வாய்வில் கிடைத்த நாணயங்கள் தரும் தகவல்கள்[தொகு]

அகழ்வாய்வு அறிஞர் ஜானத்தன் ரீட் கருத்துப்படி, முதலாம் நூற்றாண்டு காலத்தில் புழக்கத்தில் இருந்த உரோமைப் பேரரசின் நாணயங்களும் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு, இயேசு பற்றிய விளக்கங்களுக்கு ஆதாரமாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக, அகுஸ்துஸ் சீசர் காலத்தில் (கி.மு. 27 - கி.பி. 14) பொறிக்கப்பட்ட நாணயத்தில் (கி.மு. 19-18), மன்னரது வாகைசூடிய தலை ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அப்பக்கத்தில் இலத்தீனில் “சீசர் அகுஸ்துஸ்” என்னும் பெயர் உள்ளது. மறு பக்கத்தில் ஏழு கதிர்களைக் கொண்ட ஒரு வால்நட்சத்திரம் காட்டப்படுகிறது. அதன் வால் மேல் நோக்கி உள்ளது. அதன் இரு புறமும் தொடர் எழுத்தாக இலத்தீனில் “தெய்வம் போன்ற மகன்” என்றுள்ளது. இதைப் பொதுமக்கள் “கடவுளின் மகன்” என்று புரிந்துகொண்டார்கள். இக்குழப்பத்தை வேண்டுமென்றே உரோமை அரசவை தீர்த்துவைக்காமல் விட்டுவிட்டது.[63][64]

பின்னர், உரோமைப் பேரரசர் திபேரியு (Tiberius) மக்களால் “தெய்வ அகுஸ்துசின் மகன்” என்று அழைக்கப்படலானார்.[63]

மாற்கு நற்செய்தி 12:13-17 பகுதியில், சீசருக்கு வரி செலுத்துவது சரியா என்ற கேள்விக்கு இயேசு அளிக்கின்ற புகழ்பெற்ற பதில் உள்ளது: “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்”. இப்பதிலைப் புரிந்துகொள்வதற்கு உரோமைப் பேரரசின்போது பொறிக்கப்பட்ட நாணயங்களில் சீசரின் உருவம் செதுக்கப்பட்டிருப்பது துணையாகிறது. அதாவது வரிகொடுக்கப் பயன்படும் நாணயத்தில் சீசருடைய உருவம் உள்ளது. அந்த சீசர் தன்னையோ கடவுளின் மகன் என்று சொல்லிக்கொள்கின்றார். அப்படியானால் அந்தக் “கடவுளின் மகன்” பொறிக்கப்பட்ட நாணயத்தை அவருக்கு வரியாகக் கொடுங்கள். ஆனால் நீங்கள் கடவுளுக்கு உரியவர்கள் ஆதலால் உங்களையே கடவுளுக்குக் காணிக்கையாக்குங்கள் என்று இயேசு கூறியதாகப் பொருள்கொள்வது முறையாகிறது.[66]

3) அகழ்வாய்வில் கிடைத்த கப்பர்நாகும் ஊர்[தொகு]

டேவிட் கவுலர் (David Gowler) என்னும் அறிஞர் கருத்துப்படி, இயேசுவையும் அவருடைய போதனைகளையும் ஆழமாகப் புரிந்துகொள்ள அகழ்வாய்வு, விவிலிய பாட ஆராய்ச்சி, வரலாற்றுப் பின்னணி போன்ற பல்வேறு ஆய்வுத்துறைகளின் இணைந்த ஆய்வு மிகப் பயனுள்ளது.[70] எடுத்துக்காட்டாக, இயேசு பணிபுரிந்த ஒரு முக்கிய ஊர் கப்பர்நாகும் என்பது. அந்த ஊரின் பெயர் பலமுறை நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டாலும் அந்த ஊரின் சமூக-பொருளாதார நிலைமை பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. [75] ஆனால், அண்மையில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின் பயனாக நமக்குத் தெரியவருவது என்னவென்றால், கப்பர்நாகும் ஒரு பெரிய, செல்வம் படைத்த நகர் அல்ல, மாறாக ஒரு சிறிய கிராமம். அங்கே ஏழைமக்கள் தான் பெரும்பாலும் வாழ்ந்துவந்தார்கள். அங்கு மக்கள் கூடுவதற்கு ஒரு பொது வளாகம் கூட இல்லை.[70][76]

இக்கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகின்ற ஒரு கருத்து உளது. அதாவது இயேசு கப்பர்நாகும் பகுதியில் போதித்தபோது, செல்வம் உடையவர்கள் தங்கள் செல்வத்தை ஏழைகளோடு பகிர்ந்திடக் கேட்டார். அப்போதனை கப்பர்நாகும் ஊரின் நிலைமைக்குப் பெரிதும் பொருந்திப் போகிறது. [70]

மேலும், முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூதேயாப் பகுதியில் வாழ்ந்த யூத பெரிய குருக்கள் மிகுந்த செல்வம் கொண்டிருந்தார்கள். இது யூதேயாப் பகுதியில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த தடயங்களிலிருந்து தெரியவருகிறது.[68][77]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Christianity: an introduction by Alister E. McGrath 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-0901-7 pages 16-22
  2. 2.0 2.1 Historical Dictionary of Jesus by Daniel J. Harrington 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810876671 page 32
  3. 3.0 3.1 Archaeology and the Galilean Jesus: a re-examination of the evidence by Jonathan L. Reed 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1563383942 page 18
  4. 4.0 4.1 The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 117-130
  5. 5.0 5.1 5.2 The Christology of Mark's Gospel by Jack Dean Kingsbury 1983 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8006-2337-1 pages 91-95
  6. 6.0 6.1 6.2 The Cambridge companion to the Gospels by Stephen C. Barton பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-00261-3 pages 132-133
  7. 7.0 7.1 Matthew by David L. Turner 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8010-2684-9 page 613
  8. 8.0 8.1 Jesus in the Synagogue of Capernaum: The Pericope and its Programmatic Character for the Gospel of Mark by John Chijioke Iwe 1991 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788876528460 page 7
  9. The Gospel according to Matthew by Leon Morris பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85111-338-9 page 71
  10. The Sermon on the mount: a theological investigation by Carl G. Vaught 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-918954-76-3 pages xi-xiv
  11. The Synoptics: Matthew, Mark, Luke by Ján Majerník, Joseph Ponessa, Laurie Watson Manhardt, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-931018-31-6, pages 63–68
  12. Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 pages 97-110
  13. The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 165-180
  14. Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 pages 121-135
  15. The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 189-207
  16. Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 page 137
  17. The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 211-229
  18. Mercer dictionary of the Bible by Watson E. Mills, Roger Aubrey Bullard 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86554-373-9 page 929
  19. 19.0 19.1 Big Picture of the Bible - New Testament by Lorna Daniels Nichols 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57921-928-4 page 12
  20. 20.0 20.1 20.2 John by Gerard Stephen Sloyan 1987 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8042-3125-7 page 11
  21. The Miracles of Jesus by Craig Blomberg, David Wenham 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1592442854 page 419
  22. H. Van der Loos, 1965 The Miracles of Jesus, E.J. Brill Press, Netherlands page 599
  23. Dmitri Royster 1999 The miracles of Christ பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0881411930 page 71
  24. The Miracles of Jesus by Craig Blomberg, David Wenham 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1592442854 page 440
  25. The Physical Geography, Geology, and Meteorology of the Holyand by Henry Baker Tristram 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1593334826 page 11
  26. Lamar Williamson 1983 Mark பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0804231214 pages 129-130
  27. B. Meistermann, "Transfiguration", The Catholic Encyclopedia, XV, New York: Robert Appleton Company
  28. Luke by Fred Craddock 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0664234356 page 98
  29. The Bible Knowledge Commentary: New Testament edition by John F. Walvoord, Roy B. Zuck 1983 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0882078127 page 210
  30. The Gospel according to Matthew by Leon Morris 1992 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0851113389 pages 83
  31. Luke by Fred B. Craddock 1991 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0804231230 page 69
  32. J.W. Wenham, The Elements of New Testament Greek, Cambridge University Press, 1965, p. 75.
  33. Boyce W. Blackwelder, Light from the Greek New Testament, Baker Book House, 1976, p. 120, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0801006627
  34. Lamar Williamson 1983 Mark பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0804231214 pages 138-140
  35. The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 page 168
  36. Studying the historical Jesus: evaluations of the state of current research by Bruce Chilton, Craig A. Evans 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004111425 page 465
  37. The Gospel of John by Joseph Ponessa, Laurie Watson Manhardt 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1931018251 page 39
  38. The Gospel According to St. John: An Introduction With Commentary and Notes by C. K. Barrett 1955 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0664221807 page 12
  39. Francis J. Moloney, Daniel J. Harrington, 1998 The Gospel of John Liturgical Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0814658067 page 325
  40. The Miracles of Jesus by Craig Blomberg, David Wenham 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1592442854 page 462
  41. Mills, Watson E.; Bullard, Roger Aubrey (1998). Mercer dictionary of the Bible. Macon, GA: Mercer University Press. p. 556. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86554-373-7
  42. Marsh, Clive; Moyise, Steve (2006). Jesus and the Gospels. New York: Clark International. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-567-04073-2.
  43. The Holy Land: An Oxford Archaeological Guide from Earliest Times to 1700 by Jerome Murphy-O'Connor 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0199236666 page 150
  44. 44.0 44.1 Archaeological Encyclopedia of the Holy Land by Avraham Negev 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0826485715 page 80
  45. Encountering John: The Gospel in Historical, Literary, and Theological Perspective by Andreas J. Köstenberger 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0801026032 page 181
  46. Luke by Fred Craddock 1991 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8042-3123-0 page 284
  47. Exploring the Gospel of Luke: an expository commentary by John Phillips 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8254-3377-0 pages 297-230
  48. 48.0 48.1 Historical Dictionary of Jesus by Daniel J. Harrington 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810876671 page 62
  49. Jesus and archaeology edited by James H. Charlesworth 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 080284880X pages 34 and 573
  50. Jesus and archaeology edited by James H. Charlesworth 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 080284880X pages 34
  51. Bible Exposition Commentary, Vol. 1: New Testament by Warren W. Wiersbe 1992 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1564760308 pages 268-269
  52. Mary Ann Tolbert, Sowing the Gospel: Mark's World in Literary-Historical Perspective 1996, Fortress Press. p189
  53. The people's New Testament commentary by M. Eugene Boring, Fred B. Craddock 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-664-22754-6 pages 256-258
  54. The Bible knowledge background commentary by Craig A. Evans 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7814-4228-1 page 49
  55. The Gospel according to Mark: meaning and message by George Martin 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0829419705 pages 200-202
  56. The Gospel of Mark, Volume 2 by John R. Donahue, Daniel J. Harrington 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8146-5965-9 page 336
  57. The Collegeville Bible Commentary: New Testament by Robert J. Karris 1992 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8146-2211-9 pages 885-886
  58. Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 pages 30-37
  59. Who's Who in the New Testament by Ronald Brownrigg, Canon Brownrigg 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-26036-1 pages 96-100
  60. The Birth of Jesus According to the Gospels by Joseph F. Kelly 2008 ISBN pages 41-49
  61. Bromiley, Geoffrey William (1979). International Standard Bible Encyclopedia: A-D பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-3781-6 page 689
  62. Barnett, Paul (2002) Jesus, the Rise of Early Christianity InterVarsity Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8308-2699-8 page 21
  63. 63.0 63.1 63.2 Early Christian literature by Helen Rhee 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-35488-9 pages 159-161
  64. 64.0 64.1 Experiencing Rome: culture, identity and power in the Roman Empire by Janet Huskinson 1999 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-21284-7 page 81
  65. Christology: A Biblical, Historical, and Systematic Study of Jesus by Gerald O'Collins 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-955787-X pages 1-3 "As regards the 'things which Jesus did', let me note that he left no letters or other personal documents."—page 2
  66. 66.0 66.1 Jonathan L. Reed, "Archaeological contributions to the study of Jesus and the Gospels" in The Historical Jesus in Context edited by Amy-Jill Levine et al. Princeton Univ Press 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-00992-6 pages 40-47
  67. Archaeology and the Galilean Jesus: a re-examination of the evidence by Jonathan L. Reed 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56338-394-2 pages xi-xii
  68. 68.0 68.1 Craig A. Evans (Mar 26, 2012). The Archaeological Evidence For Jesus. The Huffington Post. http://www.huffingtonpost.com/craig-a-evans/archaeological-evidence-for-jesus_b_1370995.html. 
  69. 69.0 69.1 "Jesus Research and Archaeology: A New Perspective" by James H. Charlesworth in Jesus and archaeology edited by James H. Charlesworth 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-4880-X pages 11-15
  70. 70.0 70.1 70.2 70.3 What are they saying about the historical Jesus? by David B. Gowler 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8091-4445-X page 102
  71. Craig A. Evans (Mar 16, 2012). Jesus and His World: The Archaeological Evidence. Westminster John Knox Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-664-23413-5. http://books.google.com/?id=_DGjygAACAAJ&dq=Jesus+and+His+World. [தொடர்பிழந்த இணைப்பு]
  72. 72.0 72.1 Archaeology and the Galilean Jesus: a re-examination of the evidence by Jonathan L. Reed 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56338-394-2 page 18
  73. Historical Dictionary of Jesus by Daniel J. Harrington 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8108-7667-1 page 32
  74. Studying the historical Jesus: evaluations of the state of current research by Bruce Chilton, Craig A. Evans 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-11142-5 page 465
  75. "Jesus and Capernaum: Archeological and Gospel Stratigraohy" in Archaeology and the Galilean Jesus: a re-examination of the evidence' by Jonathan L. Reed 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56338-394-2 page 139-156
  76. Jesus and archaeology edited by James H. Charlesworth 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-4880-X page 127
  77. Who Was Jesus? by Paul Copan and Craig A. Evans 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-664-22462-8 page 187