உள்ளடக்கத்துக்குச் செல்

கப்பர்நாகும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கப்பர்நாகும். அகழ்விடக் கண்டுபிடிப்புகளின் ஒரு பகுதி.

கப்பர்நாகும் (Capernaum - எபிரேய மொழியில் כְּפַר נַחוּם Kfar Nahum = "நாகும் நகர்") என்பது விவிலியத்தோடு தொடர்புடைய ஒரு பாலஸ்தீன ஊர் ஆகும்[1]. அங்கு மீன்பிடித் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஊர் கலிலேயக் கடல் என்று அழைக்கப்படுகின்ற கெனசரேத்து ஏரிக்கரையில் அமைந்தது. இங்கு சுமார் 1500 மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அகழ்வாய்வுப்படி, இங்கு ஒன்றன்மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட இரண்டு யூத தொழுகைக் கூடங்கள் இருந்தன. இந்த ஊரின் அருகில் உள்ள கிறித்தவக் கோவில் முன்னாள்களில் புனித பேதுருவின் வீடாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின் கப்பர்நாகும் கைநெகிழப்பட்டது. ஆனால் 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஆகழாய்வுகளின் பயனாக இன்று அதன் சீரும் சிறப்பும் வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளன.

கப்பர்நாகும் என்னும் பெயர் எழுந்த வரலாறு

[தொகு]

கஃபார் நாகும் (Kfar Nahum) என்னும் பெயருக்கு நாகும் நகர் என்பது பொருள். ஆயினும் நாகும் என்னும் ஆட்பெயரோடு அதற்குள்ள தொடர்பு பற்றிய தெளிவு இல்லை. ஃப்ளாவியுஸ் ஜோசேஃபஸ் என்னும் வரலாற்று ஆசிரியரின் படைப்புகளில் இவ்வூரின் பெயர் Kαφαρναούμ (Kapharnaum) என்று கிரேக்கத்தில் உள்ளது. புதிய ஏற்பாட்டின் கையெழுத்துப் படிகளில் இந்த ஊரின் பெயர் இரு வடிவங்களில் உள்ளது: Kαφαρναούμ (Kapharnaum); Kαπερναούμ (Kapernaum). அரபி மொழியில் இது தல்கும் (Talhum) என்னும் பெயர் கொண்டுள்ளது.

கப்பர்நாகும் அகழ்விடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உரோமையர் காலத்து ஒலிவ எண்ணெய் ஆலை/செக்கு.

புதிய ஏற்பாட்டில் கப்பர்நாகும்

[தொகு]

கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில், குறிப்பாக லூக்கா நற்செய்தியில் கப்பர்நாகும் என்னும் ஊர் இயேசுவின் சீடர்களாயிருந்த பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் மற்றும் வரிதண்டுபவரான மத்தேயு ஆகியோரின் சொந்த ஊர் என்று குறிக்கப்படுகிறது. இங்கே இயேசுவின் வீடும் இருந்திருக்கலாம் (காண்க: மத்தேயு 4:13).

லூக்கா நற்செய்திப்படி, இயேசு கப்பர்நாகுமில் இருந்த யூத தொழுகைக்கூடத்தில் ஓய்வுநாளன்று கற்பித்தார். தொடர்ந்து, இயேசு பேய்பிடித்த ஒரு மனிதருக்கு நலமளித்தார். அதன்பின், இயேசு பேதுருவின் வீட்டுக்குச் சென்று அங்கு பேதுருவின் மாமியார் காய்ச்சலால் அவதியுற்றதைக் கண்டு, அவரைக் குணப்படுத்தினார் (காண்க: லூக்கா 4:31-44).

கப்பர்நாகுமில் நடந்த இன்னொரு நிகழ்ச்சியில் உரோமைப் படைத்தலைவர் ஒருவர் இயேசுவை அணுகித் தம் வேலையாள் ஒருவர் முடக்குவாதத்தால் பீடிக்கப்பட்டதை எடுத்துக்க் கூறி, இயேசுவின் துணையை நாடுகின்றார். இயேசு அவரை நோக்கி, "நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்" என்று கூற, அந்நேரமே அவ்வேலையாள் குணமடைகின்றார். இந்நிகழ்ச்சி நற்செய்தி நூல்களில் மத்தேயு 8:5-13, லூக்கா 7:1-10, யோவான் 4:43-54 ஆகிய இடங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஒருநாள் இயேசு கப்பர்நாகுமில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தபோது முடக்குவாதமுற்ற ஒருவரை அவரிடம் கொண்டுவர சிலர் முயன்றார்கள். பெருங்கூட்டமாக மக்கள் கூடியிருந்ததால் அவர்கள் வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு இயேசுவின்முன் இறக்கவேண்டியதாயிற்று. இயேசு அம்மனிதருக்குக் குணமளித்து, "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறினார் (காண்க: மாற்கு 2:1-12, மத்தேயு 9:1-8, லூக்கா 5:17-26).

கப்பர்நாகும் ஊரில் இயேசு பல முறை மக்களுக்குக் கற்பித்து, பலரைக் குணமாக்கினார். இயேசுவின் பணி மையம் போல கப்பர்நாகும் விளங்கியது. கானா என்னும் ஊரில் திருமணத்தில் கலந்துகொண்ட பிறகு இயேசுவும் அவருடைய தாயும் சீடர்களும் கப்பர்நாகும் சென்று தங்கியிருந்தனர் (காண்க: யோவான் 2:12.

மற்றொரு முறை, கப்பர்நாகுமில் இயேசு மக்களுக்கு அதிசயமான விதத்தில் அப்பங்களைப் பலுகச் செய்து உணவளித்ததும் அவர்கள் மீண்டும் அவரைத் தேடிக் குவிந்தனர். அப்போது அவர், "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் உணவுக்காகவே உழையுங்கள்...வாழ்வுதரும் உணவு நானே" என்றார் (காண்க: யோவான் 6:27,35.

இயேசு முதன்முதலாகத் தம் சீடர்களாக அழைத்த சீமோன் பேதுரு மற்றும் அவர்தம் உடன்பிறப்பாகிய அந்திரேயா ஆகியோரின் வீடு கப்பர்நாகுமில் இருந்தது இயேசு அவ்வூரைத் தம் பணி மையமாகத் தெரிந்ததற்குக் காரணமாகலாம் என்று விவிலிய அறிஞர் கருதுகின்றனர்.

வரலாற்றில் கப்பர்நாகும்

[தொகு]

அகழ்வாய்வுப்படி, கப்பர்நாகும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருக்கலாம். கலிலேயக் கடலின் கிழக்கிலிருந்து மேற்காக அது அமைந்திருந்தது. யூத தொழுகைக்கூடம் அங்கிருந்தது. அதிலிருந்து 200 மீட்டர் தொலையில் கல்லறைத் தோட்டம் இருந்தது. ஒலிவ விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் அங்குப் பரவலாக நடந்தது என்பதற்கு அங்குக் கிடைத்துள்ள செக்குகள் சான்றாகின்றன. மீன்பிடித்தலும் சிறப்பாக நடைபெற்றது.

உரோமையர் கப்பர்நாகுமில் குடியேறித் தங்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, கி.பி. 66-70இல் யூத புரட்சி நிகழ்ந்தபோது கப்பர்நாகும் அழிவுக்கு உள்ளாகவில்லை.

கப்பர்நாகுமில் நடந்த அகழ்வாய்வுகளின் பலன்கள்

[தொகு]

பல நூற்றாண்டுகளாக மறந்துபோய்க் கிடந்த கப்பர்நாகும் 1838இல் எட்வர்ட் ராபின்சன் என்னும் அமெரிக்க தொல்பொருள் வல்லுநர் நிகழ்த்திய அகழ்வாய்வுகளின் பயனாக வெளியுலகிற்குத் தெரியவந்தது. அவரே கப்பர்நாகுமின் பண்டைய இடிபாடுகளைக் கண்டுபிடித்தார். 1866இல் பிரித்தானிய வல்லுநர் சார்லஸ் வில்லியம் வில்சன் என்பவர் கப்பர்நாகும் இடிபாடுகளிடையே யூத தொழுகைக்கூடத்தை அடையாளம் கண்டார். 1894ஆம் ஆண்டு புனித நாட்டுக் காவலராக (Custodian of the Holy Land) இருந்த பிரான்சிசு சபையைச் சார்ந்த ஜுசேப்பே பால்டி என்னும் துறவி பெதுவின் (Bedouins) என்னும் அராபிய பாலைவன இடம்பெயர்வோர் சிலரிடமிருந்து[2] பல தொல்பொருள்களை மீட்டெடுத்தார். அகழ்பொருள்களை உருக்குலைக்க எண்ணியவர்களிடமிருந்து அவற்றைப் பாதுகாக்க பிரான்சிசு சபைத் துறவியர் அகழ்நிலப் பகுதியைச் சுற்றி வேலி எழுப்பினார்கள்; அவுசுதிரேலியாவிலிருந்து கொணர்ந்த ஈச்சமரங்கள் மற்றும் யூகலிப்டசு மரங்களைச் சுற்றிலும் நட்டு ஒரு சிறிய பாலைவனச் சோலை உருவாக்கினார்கள்; சிறியதொரு துறைமுகமும் உருவானது. இவை தொடர்பான வேலைகளை பிரான்சிசு சபைத் துறவி விர்ஜீலியோ கோர்போ என்பவர் மேற்பார்வையிட்டார்.

கப்பர்நாகுமில் மிக முக்கியமான அகழ்வாய்வு 1905இல் தொடங்கியது. ஹைன்ரிக் கோல், கார்ல் வாட்சிங்கர் என்னும் இரு செருமானிய நாட்டவர் அந்த ஆய்வினை நடத்தினர். அவர்களைத் தொடர்ந்து வெண்டலைன் ஃபோன் ப்ரென்டன் (1905-1915), கவுதேன்சியோ ஒர்ஃபாலி (1921-1926) என்னும் இரு பிரான்சிசு சபைத் துறவியர் அகழ்வாய்வு நிகழ்த்தினர். இந்த ஆய்வுகளின் விளைவாக கப்பர்நாகுமில் இரு பொதுப்பயன்பாட்டுக் கட்டடங்களும் ஒரு யூத தொழுகைக்கூடமும் எண்கோண வடிவில் அமைந்த ஒரு கிறித்தவக் கோவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

1968இல் அகழ்நிலத்தின் மேற்குப்பகுதி தோண்டப்பட்டது. அங்கே கண்டுபிடிக்கப்பட்ட கட்டடம் புனித பேதுருவின் வீடு என விவிலிய அறிஞர் கருதுகின்றனர். அது கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது இந்த ஊகத்தை உறுதிப்படுத்துகிறது.

அக்காலத்தில் மக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். எரிமலைக் கல்லும் மண்ணும் கொண்டு அவர்கள் கட்டிய வீடுகளுக்கு முற்றம் இருந்தது. அம்முற்றத்தில் வட்டவடிவில் அடுப்பு அமைந்தது. தானியம் அரைப்பதற்கு அரைகல் இருந்தது. திறந்த முற்றத்தைச் சுற்றி சிறு அறைகள் இருந்தன. தாழ்ப்பக்கத்தில் காற்றுவழிகள் அமைக்கப்பட்டன. முற்றத்திலிருந்து கூரைக்கு இட்டுச்செல்லும் படிக்கட்டு இருந்தது. இந்த முறையில் வீடு அமைந்ததால் இயேசுவைத் தேடி வந்த மக்கள் கூரையைப் பிளந்து கட்டிலைக் கீழே இறக்கிய நிகழ்ச்சி (காண்க: மாற்கு 2:4 நடந்ததற்கான ஆதாரம் உளதென அறிஞர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கி.பி. 4ஆம் நூற்றாண்டளவில் வீடுகள் தரமான சாந்து மற்றும் பதனிட்ட களிமண் கொண்டு கட்டப்பட்டன. தற்போது அகழ்ந்தெடுக்கப்பட்ட யூத தொழுகைக்கூடம் இவ்வகையில் கட்டப்பட்டதே.

கப்பர்நாகுமில் புனித பேதுருவின் வீடு

[தொகு]
கப்பர்நாகுமில் புனித பேதுருவின் வீட்டின்மேல் கட்டப்பட்ட 20ஆம் நூற்றாண்டு கோவில்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் ஒரு வரிசை வீடுகள் ஒரு முற்றத்தைச் சூழ்ந்திருக்கின்றன. அப்பகுதி தொழுகைக்கூடத்திற்கும் கலிலேய ஏரிக்கரைக்கும் இடையே உள்ளது. பல காலகட்டங்களைச் சார்ந்த கட்டடங்கள் அங்கு இருந்துள்ளன. அவற்றுள் மூன்று நிலைகளை ஆய்வாளர் அடையாளம் கண்டுள்ளனர். அவை:

  • கி.மு. முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டு, கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை பயன்பாட்டில் இருந்த தனியார் வீடுகள்;
  • அவற்றுள் ஒரு வீடு மட்டும் 4ஆம் நூற்றாண்டில் தனிப்பட்ட விதத்தில் சீரமைக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டது;
  • அந்த வீட்டின் மேல் 5ஆம் நூற்றாண்டில் எண்கோண வடிவத்தில் கட்டியெழுப்பப்பட்ட கிறித்தவக் கோவில்[3].

பல வீடுகள் நடுவே ஒரு வீடு மட்டும் தனிக்கவனத்திற்கு உள்ளானது ஏன் என்று அறிஞர் ஆய்ந்துள்ளனர். அதன் தரை சீராக அமைந்துள்ளது; பல விளக்குகள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டன; எனவே கி.பி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த வீடு கிறித்தவர்கள் கூடிய ஒரு வீட்டுக் கோவிலாக (domestic church) இருந்திருக்க வேண்டும் என்று சில அறிஞர் கருதுகின்றனர்.

எனினும், கி.பி. 4ஆம் நூற்றாண்டில் மேற்கூறிய வீட்டுப்பகுதியைச் சுற்றி ஓர் அடைப்பு இடப்பட்டது. அதன் பக்கங்கள் 27-30 மீட்டர் நீளம் கொண்டிருந்தன. தரமான சுண்ணாம்புக் கலவையும் சாந்தும் கொண்டு கட்டப்பட்ட அந்த அடைப்புச் சுவர் 2.3 மீட்டர் உயரம்வரை அமைந்தது. தரையும் செப்பனிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. ஒரு நுழைவாயில் அமைக்கப்பட்டது. சுவர்களிலும் சாந்து பூசப்பட்டது. இக்கட்டடம் 5ஆம் நூற்றாண்டுவரை இருந்தது.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இக்கட்டடம் தகர்க்கப்பட்டு அது இருந்த இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது. எட்டுத் தூண்கள் தாங்கிநிற்கும் விதத்தில் எண்கோண வடிவத்தில் அது கட்டப்பட்டது. வெளிப்புறத்தில் எட்டு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டன. திருமுழுக்கு கொடுப்பதற்கான பகுதியும் அமைக்கப்பட்டது. உட்பகுதியிலிருந்த எண்கோண அமைப்பு புனித பேதுருவின் வீட்டிற்கு நேர் மேலே அமையுமாறு கோவில் கட்டப்பட்டது. கோவிலின் நுழைவாயிலின் தரைப்பகுதியில் கற்படிமப் பாணிகள் அமைக்கப்பட்டன. சிறுவட்டங்களும் சிலுவைகளும் கொண்ட பாணி அது. வெளிப்புற எண்கோணப் பகுதியின் தரையில் செடிகள், விலங்குகள் வடிவம் கொண்ட பாணி அமைக்கப்பட்டது. உட்புற எண்கோணப் பகுதியின் தரையில் பூக்கள், மீன்கள் வடிவங்களின் நடுவே பெரியதொரு வட்டத்தில் ஒரு மயில் ஆகியவை உள்ளன.

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இக்கோவிலைச் சந்தித்த இத்தாலியத் திருப்பயணி ஒருவர் கீழ்வருமாறு எழுதினார்: "கப்பர்நாகுமில் புனித பேதுருவின் வீட்டுக்குப் போனோம். அது இப்போது ஒரு பெரும் கோவிலாக உள்ளது".

கப்பர்நாகுமில் யூத தொழுகைக்கூடம்

[தொகு]
கப்பர்நாகுமில் கி.பி. 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த யூத தொழுகைக்கூடம்.

அகழ்வாய்வுகளின் பயனாகக் கப்பர்நாகுமில் கி.பி. 4-5ஆம் நூற்றாண்டைச் சார்ந்த யூத தொழுகைக்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகிலேயே மிகப் பழமையான தொழுகைக்கூடங்களுள் ஒன்றாகும். இது ஏறக்குறைய முற்றிலுமாக வெள்ளைக் கற்களால் ஆகியது. அதன் தொழுகையிடம் 24.40 மீட்டர் நீளமும் 18.65 மீட்டர் அகலமும் கொண்டது. வெளிப்பகுதியில் படிக்கட்டு இருப்பதால் அத்தொழுகைக்கூடத்திற்கு மேல்மாடி இருந்திருக்கலாம் என்றும் அங்கே பெண்கள் பகுதி இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. தொழுகைக்கூடத்தில் கிரேக்கம், அரமேயம் ஆகிய மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் கட்டடத்தை எழுப்ப பொருளுதவி செய்த புரவலர்கள் விவரத்தைத் தருகின்றன.

இக்கட்டடத்தின் கீழ் கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்த பழையதொரு தொழுகைக்கூடம் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன என்று சில அறிஞர் கருதுகின்றனர்.

கப்பர்நாகுமுக்கு அருகே கண்டெடுத்த பழங்கால மீன் படகு

[தொகு]
கலிலேயக் கடல் மீன்பிடிப் படகு - படிமம்.

1986இல் கலிலேய ஏரியில் நீர்மட்டம் வழக்கத்துக்கு மாறாகத் தாழ்ந்துபோயிற்று. அப்போது ஏரியின் வடமேற்குக் கரையின் அடிமட்டத்தில் முதல் நூற்றாண்டில் கட்டப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்று பெரும்பாலும் நன்கு பாதுகாக்கப்பட்ட முறையில் கண்டெடுக்கப்பட்டது. கிடைத்த படகின் நீளம் 8.27 மீட்டர், அகலம் 2.3 மீட்டர், உயரம் 1.3 மீட்டர். ஏரியில் நீர்மட்டம் உயர்வதற்கு முன்னால் படகைப் பாதுகாப்பாக மேலே கொண்டுவர 12 நாள்கள் இரவும் பகலும் வேலை செய்தனர்.

படகை மேலே கொண்டுவந்த பின் அதை வேதிப்பொருள் கலவையில் 7 ஆண்டுகள் வைத்தனர். தற்போது இப்படகு கலிலேயக் கடலின் மேற்குக் கரையில் அமைந்துள்ள கினோசார் என்னும் குடியிருப்பில் காட்சியகத்தில் உள்ளது [4]


திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் கப்பர்நாகுமுக்கு வருகை

[தொகு]

இசுரயேலுக்கு வருகைதந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் 2000ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கப்பர்நாகுமுச் சென்று, அங்குள்ள அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகளைப் பார்வையிட்டார் [5].

கப்பர்நாகுமில் புனித பேதுரு வீடு எனக் கருதப்படும் இடத்தையும் அதைச் சூழ்ந்துள்ள இடங்களையும் பாதுகாக்கும் வண்ணம் பெரும் கூரை அமைந்த ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டடுள்ளது. அதை 1990ஆம் ஆண்டு சூலை மாதம் 29ஆம் நாள் கர்தினால் லூர்துசாமி அர்ச்சித்தார் [6]


ஆதாரங்கள்

[தொகு]
  1. கப்பர்நாகும்
  2. பெதுவின் இடம்பெயர் மக்கள்
  3. புனித பேதுருவின் வீடு - எண்கோண வடிவக் கோவில்
  4. கலிலேயக் கடல் மீன்பிடிப் படகு.
  5. திருத்தந்தை கப்பர்நாகுமுக்கு வருகை
  6. "கப்பர்நாகுமில் கர்தினால் லூர்துசாமி - புனித பேதுரு நினைவு மண்டபம் அர்ச்சிப்பு". Archived from the original on 2011-05-14. பார்க்கப்பட்ட நாள் 2011-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பர்நாகும்&oldid=3547791" இலிருந்து மீள்விக்கப்பட்டது