உள்ளடக்கத்துக்குச் செல்

யோவான் நற்செய்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யோவான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பி 52 என்றழைக்கப்படும் விவிலியப் பப்பைரசு ஏடு. சுமார் கி.பி. 125. மிகப் பழமையான ஆதாரம். "தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது" (யோவான் 1:1). காப்பிடம்: ரைலாண்ட்சு நூலகம், ஐக்கிய இராச்சியம்

யோவான் நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் நான்காவது நூலாகும்[1]. இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்காவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் யோவான் எழுதிய நற்செய்தி, Κατά Ιωαννην εὐαγγέλιον (Kata Iōannēn Euangelion = The Gospel according to John) என்பதாகும்.

மற்ற நற்செய்தி நூல்களான மத்தேயு நற்செய்தி,மாற்கு நற்செய்தி லூக்கா நற்செய்தி ஆகிய மூன்றிலிருந்தும் (Synoptic Gospels) [2] இந்நற்செய்தி நூல் நடையிலும் அமைப்பிலும் வேறுபடுகிறது.

யோவான் நற்செய்திக்கு நான்காம் நற்செய்தி என்னும் பெயரும் உண்டு [3]

இந்நூலின் ஆசிரியர்

[தொகு]

நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் செபதேயுவின் மகனாகிய யோவான் என்பது மிகத் தொன்மையான கிறித்தவ மரபு. இதனை எழுதியதாக நற்செய்தியே கூறும் அன்புச்சீடர் (21:24) [4] இவராகத்தான் இருக்கவேண்டும். ஆனால் யோவானே அனைத்தையும் எழுதியிருக்கவேண்டும் என்று கூற முடியாது. யோவான் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்த செய்திகள் அவரது சமூகத்தில் தனிவடிவம் பெற்று, பின்னர் எழுத்து வடிவம் ஏற்றது. காலப்போக்கில் கிறித்தவச் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்பச் சில மாற்றங்கள் பெற்று, முன்னுரை, பிற்சேர்க்கை ஆகியவற்றுடன் இணைக்கப் பெற்று இன்றைய வடிவம் பெற்றிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், ஓரு யூத-கிறிஸ்தவர் இந்நூலை எழுதியிருக்கவேண்டும். ஏற்கனவே உருவாகியிருந்த ஒரு சிறப்பு மரபுக்கு இவர் எழுத்துவடிவம் கொடுத்திருக்க வேண்டும். இந்தச் சிறப்பு மரபுக்கு யோவான் தனிமுறை மரபுக்குழு அல்லது யோவான் குழு (Johannine School) என அறிஞர் பெயரளித்துள்ளனர். இந்த யோவான் குழுவுக்கும் செபதேயுவின் மகன் யோவானுக்கும் அல்லது அன்புச் சீடருக்கும் இடையே வரலாற்றுத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும்.

இயேசுவின் அன்புச் சீடரான யோவான் முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்து பின் இயேசுவின் சீடராகிறார் (1:35:39). இயேசுவோடு மிகுந்த நெருக்கம் கொண்டிருந்த மூன்று திருத்தூதருள் இவரும் ஒருவர் (மார் 5:37; 9:2; 13:3; 14:33). இறுதி இரா உணவின்போது இயேசுவின் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த இவர் (13:22-26) மற்றத் திருத்தூதரெல்லாம் ஓடிவிட்ட நேரத்திலும் இயேசுவின் சிலுவையடியில் நின்றார். இவரிடமே இயேசு தம் அன்பு அன்னையை ஒப்படைத்தார் (19:25-27).

நூல் எழுந்த பின்னணி

[தொகு]

நற்செய்தியாளர் எந்த சமூகத்துக்கு இந்நூலை எழுதினாரோ அச்சமூகத்துக்கும் யூத சமய மரபு அமைப்புக்கும் இடையே மோதல் இருந்துவந்தது. நிலைமை எந்த அளவுக்கு மோசமாகிவிட்டிருந்தது என்றால், யோவானின் கிறித்தவ சமூகம் யூத தொழுகைக் கூடத்திலிருந்தே வலுக்கட்டாயமாக வெளியே தள்ளப்படலாயிற்று. இந்தப் பின்னணியில்தான் நான்காம் நற்செய்தி எழுதப்பட்டது. யூத சமய மரபு அமைப்புக்கும் யோவானின் கிறித்தவ சமூகத்துக்குமிடையே நிகழ்ந்த மோதல் பற்றிக் காண்க, யோவா 9:22; 12:42; 16:2. அக்கிறித்தவ சமூகம் யூத-கிறித்தவரை உள்ளடக்கியிருந்தது. இயேசு யார் என்ற கேள்விக்கு இக்கிறித்தவ சமூகம் அளித்த பதில் யூத சமய மரபிலிருந்து வந்தோருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. எனவே இரு சமூகங்களுக்கும் இடையே இழுபறிநிலை ஏற்பட்டிருந்தது.

யூத கிறித்தவர்களை மரபுவழி யூத சமய மக்கள் தம்மவராக ஏற்க மறுத்தனர். அவர்களை யூத சமய மரபின் எல்லைக்கு அப்பாற்பட்டவராகக் கருதினர். நான்காம் நற்செய்தியில் வருகின்ற இயேசுவின் எதிரிகள் ஒரேயடியாக யூதர்கள் எனவே அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கும் யோவானின் சமூகத்தின் உட்பட்ட யூத மரபுசார் எதிர்ப்பாரளருக்கும் இடையே தொடர்பு எடுத்துக்காட்டப்பட்டது.

யோவானின் சமூகம் எங்கே வாழ்ந்தது என்பதற்கு அறிஞர் மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதி என்று பதில் தருகின்றனர். அப்பகுதியில் சிரியா, பாலசுத்தீனம் அல்லது யோர்தானின் அப்பாற்பகுதி (Transjordan) ஆகிய ஒன்றில் அச்சமூகம் வாழ்ந்திருக்கக் கூடும். நற்செய்திக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது கி.பி. 90-100ஆக இருக்கலாம். மத்தேயு நற்செய்தியில் யூத-கிறித்தவர்கள் யூத சமய மரபினரோடு இழுபறியில் வாழ்ந்தனர் என்ற செய்தி முன்னூகமாக இருப்பதுபோலவே, யோவானின் சமூகத்திய யூத-கிறித்தவர்களுக்கும் பிற யூத சமய மரபினருக்குமிடையே உறவுகள் கசப்படையத் தொடங்கியிருந்தன.

இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கம்

[தொகு]

இயேசுவே இறைமகனாகிய மெசியா என்று நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன (20:31) என்று ஆசிரியரே நூலின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். கிறித்தவ நம்பிக்கையை ஆழப்படுத்திக் கிறித்தவ வாழ்வை வலுப்படுத்துவது நற்செய்தியின் முக்கிய நோக்கமாய் இருந்தது.

இந்நோக்கம் நூலின் தொடக்கத்திலேயே தெளிவாக்கப்படுகிறது. அதாவது, கடவுளின் மகனாகிய இயேசு தந்தையை வெளிப்படுத்துகிறார். கடவுளை அறியவேண்டுமா? கடவுளின் விருப்பம் யாதெனத் தெரியவேண்டுமா? இயேசுவுக்குச் செவிமடுங்கள்; அவர் கடவுள் பற்றிச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துவதை உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். - இதுவே யோவான் நற்செய்தி வாசகர்களிடம் கேட்பது.

மேலும் கிறிஸ்துவுக்கு முந்திய பழையன கழிந்து, கிறிஸ்து வழியாகப் புதியன புகுந்துவிட்டன என்று காட்டுவதும், கிறிஸ்துவை நேரடியாகக் கண்டிராத இரண்டாம் தலைமுறையினருக்கு அவரைப் பற்றிய நம்பத்தக்க சான்று அளிப்பதும் (20:29), முதல் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய சில தவறான கொள்கைகளைத் திருத்துவதும் நூலாசிரியரின் நோக்கங்களாய் இருந்தன. அக்காலத்தில் தோன்றிய தப்பறைக் கொள்கைகளுள் திருமுழுக்கு யோவானே மெசியா, மற்றும் இயேசு மனிதர்போலத் தோற்றமளித்தாரே தவிர. உண்மையிலே மனிதர் அல்ல போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மேலே கூறப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் ஏறத்தாழ கி.பி. 90ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் இந்நற்செய்தி எழுதப்பட்டது. இது எபேசு நகரில் எழுதப்பட்டது என்பது கிறித்தவ மரபு.

யோவான் நற்செய்தியின் உள்ளடக்கம்

[தொகு]

மனிதரான வாக்கே இயேசு எனத் தொடக்கத்திலேயே எடுத்துரக்கிறார் நூலாசிரியர். அவரது இயல்பை ஒளி, வாழ்வு, வழி, உண்மை, உணவு போன்ற உருவகங்களால் விளக்கி, இயேசு யார் என்பதை எல்லாக் கால, இட, சமய, பண்பாட்டு மக்களுக்கும் எளிதில் புரிய வைக்கிறார்.

அழைத்தல், கோவில், வழிபாடு, திருமுழுக்கு, நற்கருணை ஆகிய கிறித்தவக் கருத்துகளின் ஆழ்ந்த பொருளை விரித்துரைக்கிறார். அரும் அடையாளங்களாலும் அவற்றைத் தொடரும் உரைகளாலும் இயேசுவை வெளிப்படுத்தி, அவர் பெற்ற ஏற்பையும் எதிர்ப்பையும் எடுத்துக்காட்டுகிறார்.

மகனுக்கும் தந்தைக்கும், தந்தைக்கும் சீடருக்கும் உள்ள நெருங்கிய உறவு பற்றிச் சிறப்பாகப் பேசுகிறார். இயேசு துன்பங்கள் பட்டபோது அவரை நொறுக்கப்பட்ட துன்புறும் ஊழியனாக அல்ல, மாறாக அனைத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்தும் வெற்றி வீரராகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

இவ்வாறு இயேசுவின் உரைகள், அவருடைய செயல்கள். அவரைப் பற்றிய செய்திகள், அவருடைய ஆளுமை, அவரது பணித்தளம் ஆகிய் அனைத்துமே இந்நற்செய்தியில் ஒத்தமை நற்செய்திகளிலிருந்து வேறுபட்டு இருக்கின்றன.

யோவான் நற்செய்தியின் சிறப்புக் கூறுகள்

[தொகு]

நான்காம் நற்செய்தியாகிய யோவான் நற்செய்தி முந்தைய மூன்று நற்செய்தி நூல்களாகிய ஒத்தமை நற்செய்திகளிலிருந்து மாறுபட்டது. யோவான் இயேசுவின் பொதுப் பணிகாலத்தை மூன்று ஆண்டுக் கால வரையறைக்குள் எடுத்துரைக்கிறார். ஆனால், ஒத்தமை நற்செய்திகளோ இயேசு ஓர் ஆண்டுக் காலமே பொதுப்பணி செய்ததாகக் காட்டுவதுபோலத் தெரிகிறது. யோவான் காட்டும் இயேசு பல தடவை எருசலேமுக்குப் பயணமாகச் செல்கிறார். ஆனால் ஒத்தமை நற்செய்திகளோ, இயேசு ஒரே முறை எருசலேம் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியில் மற்ற மூன்று நற்செய்திகளிலும் வராத கதாபாத்திரங்கள் வருகின்றனர். எடுத்துக்காட்டாக, நிக்கதேம், சமாரியப் பெண், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவர், இலாசர், மற்றும் இயேசுவின் அன்புச் சீடர் ஆகியோரைக் கூறலாம்.

ஒத்தமை நற்செய்திகளில் வரும் இயேசு கடவுளின் ஆட்சியைத் தம் போதனையின் மையப் பொருளாக அளிக்கிறார். ஆனால், யோவான் நற்செய்தியிலோ, கடவுள் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்துவதை இயேசு மையப்படுத்துகிறார்; இயேசுவே கடவுளை வெளிப்படுத்துபவராகக் காட்டப்படுகிறார். ஒத்தமை நற்செய்திகள் முன்வைக்கின்ற கிறித்தவ கருத்துப்போக்கும் யோவான் சித்தரிக்கின்ற கிறித்தவ சிந்தனைப் போக்கும் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.

நூலின் ஆதாரங்கள்

[தொகு]

யோவான் குழுவினரிடையே உருவாகிப் புழக்கத்தில் இருந்த மரபுகளை நூலாசிரியர் பயன்படுத்தினார். அம்மூல ஆதாரங்களிலிருந்து யோவான் 1:1-18 பாயிரப் பகுதியை உருவாக்கினார் (யோவா 1:1-18) அது ஒரு முன்னுரைப் பாடலாக உள்ளது. இயேசுவைக் கடவுளின் வாக்கு எனப் பாடும் பாடல் அது. அதுபோல, இயேசு புரிந்த அரும் அடையாளங்களாக (signs) யோவான் ஏழு வியப்புறு செய்திகளாகிய புதுமைகளைப் பதிவுசெய்துள்ளார். இவையும் ஒரு சமயத்தில் ஒரு தனித்தொகுப்பாக இருந்திருக்க வேண்டும்.

அதுபோலவே, அதிகாரங்கள் 13-17இல் காணப்படுகின்ற பிரியாவிடை உரைகளில் காணப்படும் சில கருத்துத் தொடர்கள் ஏற்கனவே இருந்த உரைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். அதிகாரங்கள் 18-19 இயேசுவின் பாடுகளைப் பற்றிய கூற்றுத்தொடர்களைக் கொண்டிருக்கின்றன. இப்பகுதிக்கும் ஒத்தமை நற்செய்திகள் தருகின்ற பாடுகள் பகுதிக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. யோவான் சில வரலாற்றுத் தகவல்களையும் தருகிறார். நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் ஒத்தமை நற்செய்திகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாரா, அவற்றைப் பயன்படுத்தினாரா என்பது பற்றி உறுதியாக ஒன்றும் கூற இயலவில்லை என்பர் விவிலிய அறிஞர்.

யோவான் நற்செய்தி நூலின் பகுதிகளும் விளக்கமும்

[தொகு]

யோவான் நற்செய்தி நூலை இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிப்பர். அதிகாரங்கள் 1-12 அடங்கிய பகுதி அரும் அடையாளப் பகுதி (Book of Signs) எனவும், அதிகாரங்கள் 13-20 (21) அடங்கிய பகுதி புகழ்மாட்சிப் பகுதி (Book of Glory) எனவும் அழைக்கப்படுவதுமுண்டு.

1. அரும் அடையாளப் பகுதி

[தொகு]

முதல் பகுதியில் முதல் அதிகாரம் அரங்குத் தொடக்க நிகழ்ச்சி அல்லது பாயிரம் போல் உள்ளது. அதில் இயேசு யார் என்பது அவரது வெவ்வேறு சிறப்புப் பெயர்களின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, பாயிரப் பாடலில் இயேசு கடவுளின் வாக்கு எனவும் கடவுளின் ஞானம் எனவும் போற்றப்பெறுகிறார் (1:1-18). மேலும் அதே பாயிரத்தில் இயேசு மெசியா (அருள் பொழிவு பெற்றவர்) எனவும் எலியா எனவும், இறைவாக்கினர் எனவும் அழைக்கப்படுகிறார் (1:19-34); கடவுளின் ஆட்டுக்குட்டி எனவும் கடவுளின் மகன் எனவும் குறிப்பிடப்படுகிறார் (1:35-42); ரபி (போதகர்) எனவும் இறைமகன் எனவும் இஸ்ரயேலின் அரசர் எனவும் அடையாளம் காட்டப்படுகிறார் (1:43-51). யோவான் நற்செய்தி இயேசுவை மானிட மகன் என அழைக்கும்போது அப்பெயரைக் கடவுளுக்கும் மனிதருக்கும் இடைநிலையாளராக இருப்பவர் இயேசு என்னும் உயரிய பொருளில் பயன்படுத்துகிறது.

  • ஏழு அரும் அடையாளங்களும் உரையாடல்களும்

இயேசுவின் பொதுப்பணி பற்றி யோவான் தொகுத்துள்ள கூற்றுத்தொடரில் இயேசு புரிந்த ஏழு அரும் அடையாளங்கள் விவரிக்கப்படுகின்றன. இந்த அரும் அடையாளங்கள் யோவான் நூலின் முதல் பகுதி ஒரு தொடர்உரைப் பாணியில் படிப்படியாக மொட்டவிழ உதவுகின்றன. ஊடே இயேசுவின் ஒரு சில உருவக வடிவான செயல்கள் தரப்படுகின்றன (எ.டு. கோவிலைத் தூய்மைப்படுத்துதல், யோவா 2:13-25). கேள்வி-பதில் பாணியில் இயேசு வழங்கிய நெடுமொழிகள் உள்ளன (எ.டு. இயேசுவும் நிக்கதேமும், யோவா 3:1-21); இயேசுவும் இன்னொருவரும் நிகழ்த்தும் உரையாடல்கள் அடங்கியுள்ளன (எ.டு. சமாரியப் பெண் ஒருவரும் இயேசுவும், யோவா 4:1-42).

இயேசு புரிந்த ஏழு அரும் அடையாளங்கள் இவை:
1) கானாவில் திருமணம் (2:1-11);
2) அரச அலுவலர் மகன் குணமாதல (4:46-54);
3) உடல் நலமற்றவர் ஓய்வுநாளில் நலமடைதல் (5:1-9);
4) ஐயாயிரம் பேருக்கு அப்பம் பகிர்ந்தளித்தல் (6:1-15);
5) இயேசு கடலைக் கடந்து செல்லுதல் (6:16-21);
6) பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல் (9:1-12);
7) இறந்த இலாசர் உயிர்பெறுதல் (11:1-44).

இந்தக் கடைசி அரும் அடையாளம் அனைத்தையும் விட உயர்சிறப்பான ஓர் அடையாளத்துக்கு முன்குறியாக, முன்னறிவிப்பாக மாறிற்று. அந்தத் தனியுயர் அடையாளம்தான் இயேசுவின் உயிர்த்தெழுதல்.

2. புகழ்மாட்சிப் பகுதி

[தொகு]

யோவான் நற்செய்தியின் இரண்டாம் பெரும் பகுதி அதிகாரங்கள் 13-20(21)ஐ உள்ளடக்கும். இப்பகுதியைப் புகழ்மாட்சிப் பகுதி என்பர். அதாவது, யோவான் பார்வையில் இயேசுவின் பாடுகளும், சாவும், உயிர்ப்பும், விண்ணேற்றமும் இயேசு மாட்சிமை பெற்ற நிகழ்வைச் சேர்ந்தவையாகும்; அதையே இயேசு எனது நேரம் என்று குறிப்பிட்டார் (காண்க 2:4; 7:6,30; 13:1 போன்ற இடங்கள்). ஆகவே, இயேசுவின் நேரம் தோல்வியின் காலம் அல்ல, மாறாக மாட்சியுடன் வெற்றிவாகை சூடும் காலம்.

யோவான் பயன்படுத்தும் மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும் (3:14-15; காண்க 8:28; 12:32) என்னும் சொற்றொடர் அவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதையும் மாட்சிமையோடு உயர்நிலையில் ஏற்றிவைக்கப்பட்டதையும் குறிக்கும் விதத்தில் யோவான் அழகுற வடிக்கிறார்.

  • பணிவிடை புரியும் இயேசு

இயேசு தம் சீடர்களுக்குப் பிரியாவிடை உரைகள் வழங்குவதற்கு முன் அவர்களுடைய காலடிகளைக் கழுவுகிறார் (13:1-17:27). இந்தக் குறியீடான செயல்வழியாக இயேசு இரு ஆழமான உண்மைகளை எடுத்துரைக்கிறார். ஒன்று, இயேசு மனித மீட்புக்காக இறப்பது கடவுளின் கொடை (13:8). இரண்டு, பிறருக்குப் பணிசெய்வதன் வழியாகவே நாம் உயர்வடைவோம் (13:15).

  • இயேசுவின் பிரியாவிடை உரைகள்

இயேசு வழங்கிய வெவ்வேறு பிரியாவிடை உரைகள் இயேசு ஏற்கனவே தொடங்கிவிட்டிருந்த திருச்சபை என்னும் இயக்கம் அவரது மண்ணக வாழ்வுக்குப் பின் எவ்வாறு தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதை விவரிப்பனவாக அமைந்துள்ளன. கடவுள் மீது நம்பிக்கை வைத்தல், அக்கடவுளை வெளிப்படுத்துபவர் என்ற விதத்தில் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தல், இயேசு தந்தையையும் மனிதராகிய நம்மையும் அன்புசெய்ததுபோல நாமும் ஒருவரை ஒருவர் அன்புசெய்தல், துணையாளராகிய தூய ஆவியிடமிருந்து வரும் ஆறுதலும் வழிகாட்டுதலும் ஆகிய இவையே திருச்சபை என்னும் இயக்கம் நிலைபெற்று முன்னேறிட வழிகளாகும் (காண்க யோவா 14:15-17,25-26; 15:26-27; 16:7-11,12-15).

பிரியாவிடை உரைகளின் உச்சக் கட்டமாய் அமைவது இயேசுவின் மாபெரும் வேண்டல் (17:1-26) ஆகும். இந்தச் சிறப்புமிகு இறைவேண்டலில் இயேசு கடவுளின் மகனாக நிற்கின்றார். தந்தையிடம் தம்மை மாட்சிப்படுத்தக் கேட்கிறார் (17:5); தம் சீடர்கள் ஒன்றாய் இருக்கவேண்டும் என வேண்டுகிறார் (17:11); சீடர்களின் வார்த்தை வழியாகத் தம்மிடம் நம்பிக்கை கொள்வோரையும் அவர் மறக்கவில்லை: அவர்களும் இயேசு தந்தையோடு ஒன்றித்திருப்பதுபோல தமக்குள் ஒன்றாய் இருக்கும்படி இயேசு வேண்டிக்கொள்கின்றார் (17:20-22)


  • இயேசு துன்பங்கள் அனுபவித்தல்

இயேசுவு அனுபவித்த துன்பங்கள் (பாடுகள்) பற்றி யோவான் அதிகாரங்கள் 18-19இல் பேசுகிறார். இப்பகுதியின் பொது அமைப்பு ஒத்தமை நற்செய்திகளில் இருப்பதுபோலவே உள்ளது: இயேசு கைதுசெய்யப்படுகிறார்; தலைமைக் குருமுன் கொண்டுவரப்படுகிறார்; பேதுரு மறுதலிக்கிறார்; பிலாத்து இயேசுவை விசாரிக்கிறார்; இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது; இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்; இயேசுவின் சாவு; இயேசு அடக்கம் செய்யப்படுகிறார்.

ஆனால், இயேசுவின் துன்பங்களின் வரலாற்றை எடுத்துக் கூறுவதில் யோவான் பயன்படுத்தும் சொல்வழக்கும் பார்வைக் கோணமும் ஒத்தமை நற்செய்திகளில் காணப்படும் பாடுகளின் வரலாற்றிலிருந்து மிகப் பெரும் அளவில் மாறுபடுகின்றன. யோவான் இந்த வரலாற்றை எடுத்துக் கூறுவதில் ஒத்தமை நற்செய்திகளிலிருந்து கடன் பெறவில்லை எனவே தெரிகிறது.

இப்பகுதியில் உள்ள இரண்டு பெரிய கூற்றுத்தொடர்களைப் பார்ப்போம். ஒன்று பிலாத்துமுன் இயேசு விசாரணைக்கு வருதல் (18:28-19:16).; மற்றது இயேசு சிலுவையில் அறையப்படுதல் (19:17-42).

இந்த இரு கூற்றுத்தொடர்களையும் அலசிப் பார்த்தால் அவை பல்கூட்டுத்தொகுதியான அமைப்பு கொண்டவை எனவும் அவற்றின் உச்சக்கட்டமாக வெளிப்படுபவை இயேசு இன்னார் என்பதை உரத்தகுரலில் பறைசாற்றுவனவாக அமைக்கப்பட்டுள்ளன எனவும் நாம் அறிந்துணரலாம். முதல் தொடரின் உச்சக்கட்டம் போர்வீரர்கள் இயேசுவை அணுகி, யூதரின் அரசே வாழ்க! என்று கூறியதில் வெளிப்படுகிறது. அவர்கள் இயேசுவை ஏளனம் செய்து நகையாடினாலும், அதே நேரத்தில் இயேசு பற்றிய ஆழ்ந்த உண்மையையும் பறைசாற்றினர். மற்ற கூற்றுத்தொடரின் உச்சக் கட்டம் இயேசு சிலுவையில் தொங்கும்போது அன்புச் சீடரைச் காட்டித் தம் தாயிடம், அம்மா, இவரே உம் மகன் எனவும், தம் தாயைக் காட்டி அன்புச் சீடரிடம், இவரே உம் தாய்! எனவும் கூறிய உருக்கமிகு காட்சியாகும்.

  • உயிர்த்தெழுந்த இயேசு சீடருக்குத் தோன்றுதல்

உயிர்த்தெழுந்த இயேசு நான்கு தடவை சீடருக்குத் தோன்றியதாக யோவான் கூறுகிறார் (20:1-29). இயேசுவின் தோற்றக் காட்சிகளை அலசிப்பார்த்தால் ஓர் உண்மை தெளிவாகும். அதாவது, அவை ஒவ்வொன்றிலும் முதல் கட்டத்தில் இயேசுவைக் காண்போர் உள்ளத்தில் குழப்பமும் ஐயமும் எழுகின்றன. பின் படிப்படியாகத் தெளிவு பிறக்கிறது. காட்சியின் இறுதியில் நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! என அவர்கள் அறிக்கையிடுகின்றனர்.

  • பிற்சேர்க்கை

யோவான் அதிகாரம் 21 ஒரு பிற்சேர்க்கையாக அமைந்துள்ளது. அதில் இயேசு கலிலேயாவில் தோன்றியது குறிப்பிடப்படுகிறது. பேதுருவும் அன்புச் சீடரும் எவ்வித எதிர்காலத்தைச் சந்திப்பர் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவின் ஆடுகளை மேய்த்து, பேணி வளர்க்கும் பொறுப்பு சீடரிடம் கொடுக்கப்படுகிறது. அன்புச் சீடருக்கும் நற்செய்தியை வடித்த நூலாசிரியருக்கும் என்ன தொடர்பு என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

யோவான் நற்செய்தியின் இறையியல்

[தொகு]

யோவான் நற்செய்தியின் இலக்கிய நடையும் பாணியும் தனித்தன்மை கொண்டவை. இயேசுவின் வாழ்வையும் பணியையும் விவரிப்பதில் அது வடிவமைக்கும் கால-இட பொது அமைப்பும் கட்டுமானமும் தனிப்பண்புடையதே. இதை மேலே விளக்கப்பட்டது. இனி, யோவான் காட்டும் இறையியல் சுருக்கமாகத் தரப்படுகிறது.

  • தந்தையும் மகனும்

யோவான் காட்டும் இயேசு கடவுளைத் தம் தந்தையாக நமக்கு வெளிப்படுத்துகிறார். இயேசு காலங்களுக்கெல்லாம் முன்னே இருக்கின்ற கடவுளின் வாக்கு (1:1-2); விண்ணுலகிலிருந்து வருபவர்; மாட்சிமை மிகுந்த மானிட மகன் (1:51); என் ஆண்டவர்...என் கடவுள் (20:28); கடவுளுக்கு இணையானவர். வெளியுலகத்தின் கண்களுக்குப் பழிப்புக்கிடமான அவரின் சிலுவைச் சாவு உண்மையிலேயே மகத்தான ஒரு வெற்றிக் கொண்டாட்டம், ஏனென்றால் இயேசு மகிமை பெற்று, உயர்த்தப் பெற்று தம் வானகத் தந்தையிடம் ஏகினார்.

  • சீடர்கள்

மத்தேயு, மாற்கு, லூக்கா போலவே, யோவான் நற்செய்தியிலும் இயேசுவின் சீடர்கள் தொடக்கத்தில் மிகுந்த உற்சாகத்தோடு இயேசுவைப் பின்தொடர்கின்றனர்; ஆனால் பலவேளைகளில் இயேசுவை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. யோவான் நற்செய்தி சீடரின் புரிந்துகொள்ளாத் தன்மையை ஒரு தனிப்பட்ட இலக்கிய உபாயமாகவே பயன்படுத்தி, இயேசு அந்த வேளைகளில் தாம் யார் என்பதை விளக்கிக் கூறவும், தம்மைப் பின்செல்வதற்குச் சீடர் என்ன செய்யவேண்டும் என்பதை எடுத்துரைக்கவும் பொருத்தமான தருணங்களாக, உத்திகளாக எடுத்து முன்வைக்கிறது.

  • திருச்சபை வளர்வது எப்படி?

யோவான் நற்செய்தியில் வரும் இயேசுவின் பிரியாவிடை உரைகள் (யோவா அதி. 13-17) சீடர்களுக்கும், இன்று இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புவோர் அனைவருக்கும் அரிய கருவூலமாக உள்ளன. ஏனென்றால், அந்த உரைகளின் வழியாக நாம் இயேசு தொடங்கிய திருச்சபை என்னும் இயக்கம் அந்த இயேசுவின் மண்ணக வாழ்க்கைக்குப் பின்னரும் தொடர்ந்து முன்னேறுவதற்கான வழிவகைகள் யாவை எனத் தெரிந்துகொள்கிறோம். இந்த வழிவகைகளை யோவான் நற்செய்தி நம்பிக்கை, அன்பு, தூய ஆவி என அழகுற எடுத்துக் கூறுகிறது.

  • யோவான் நற்செய்தியில் வரும் மரியாவும் அன்புச் சீடரும்

இயேசுவின் சீடர் இருவர் யோவான் நற்செய்தியில் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் இயேசுவின் தாய் மரியாவும் இயேசு அன்புசெய்த சீடருமாவர். இயேசு சிலுவையில் தொங்கும்போது மரியாவும் அன்புச் சீடரும் சிலுவையின்கீழ் நிற்கின்றனர். அவ்வமயம் இயேசு அவர்கள் இருவரையும் ஒருவர் ஒருவர் பொறுப்பில் ஒப்படைக்கின்றார். இதுவே யோவான் நற்செய்தியின் உச்சக்கட்டமாக அமைகிறது எனக் கூறலாம். இயேசுவில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் ஒருவர் ஒருவருக்குப் பொறுப்புள்ளவர்களாக, அன்பும் கரிசனையும் காட்டுபவர்களாக வேண்டும் என்றும், இத்தகைய அக்கறைமிகு செயல்பாங்கு கிறித்தவ சமூகத்தில் இன்றும் என்றும் மிளிர வேண்டும் என்பதே இயேசுவின் இறுதி விருப்பமாக யோவான் நற்செய்தியில் வெளிப்படுகிறது.

  • யோவான் காட்டும் நிறைவாழ்வு

சாவை வெல்லுகின்ற நிறை வாழ்வு என்ற கருத்தை யோவான் நற்செய்தி பிற நற்செய்திகளைவிட அதிகமாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிறை வாழ்வு சாவுக்குப் பின் வரும் ஒன்றல்ல, அது ஏற்கனவே தொடங்கிவிட்டது; இயேசுவிலும் இயேசுவின் வழியாகவும் அது நமக்கு ஏற்கனவே வழங்கப்படுகிறது என்பதை யோவான் அழுத்திக் கூறுகின்றார்:

என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (யோவா 5:24).

எதிர்காலத்தில் வாழ்வின் நிறைவு மலரும் என்பதை யோவான் நற்செய்தியில் காண்கிறோம் (5:25). என்றாலும், நிறைவாழ்வு இம்மையிலேயே எதார்த்தமாகிறது என்பது அங்கு வலியுறுத்தப்படுகிறது. கிறித்தவ வாழ்வின் இயக்காற்றலை விவிரிக்கும் அழகிய ஒரு பகுதி இயேசுவே உண்மையான திராட்சைச் செடி என்பதாகும் (யோவா 15:1-10). இயேசு,

நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவழிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது (யோவா 15:5)

என்று கூறுகிறார். இயேசுவோடு தங்கியிருத்தல், அவரோடு இணைந்திருத்தல், அவரில் உறைதல், நிலைத்திருத்தல் போன்ற உருவகங்கள் யோவான் நற்செய்தியில் அடிக்கடி காணக்கிடக்கின்றன.

  • "அன்பில் நிலைத்திருங்கள்"

இயேசுவால் தொடங்கப்பட்ட திருச்சபை என்னும் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றால் சீடர்கள் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அன்பில் நிலைத்திருக்க வேண்டும் (யோவா 15:10). இக்கட்டளைகள் மரபுவழி வரும் பத்துக் கட்டளைகளைவிட அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை எனலாம். ஏனென்றால், இவை இயேசுவை நம்புவதையும் இயேசுவின் அன்பில் நிலைத்திருப்பதையும் உள்ளடக்குவனவாகும். யோவான் நற்செய்தியில் நம்பிக்கை என்பது இயேசுவை உறுதியாகப் பற்றிக்கொள்வதைக் குறிக்கும்; இயேசு தந்தையாம் கடவுளை அறுதியான விதத்தில் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார் என ஏற்று அவருக்கு நம்மை முழுநிறைவாகக் கையளித்தலையும் உள்ளடக்கும்.

கடவுளாகிய தந்தைக்கும் அவரது மகனாம் இயேசுவுக்கும் இடையே உள்ள அன்பு எத்துணை மாண்புடையதோ, அதே அன்பைப் பின்பற்றி இயேசுவின் ஒருவர் ஒருவர் மட்டில் அன்புடையவராய் வாழ்வது அன்புக் கட்டளையின் உள்ளடக்கம் ஆகும் என யோவான் நற்செய்தி காட்டுகிறது.

இயேசு தொடங்கிய பணியை அவருடைய சீடர்கள் துணையாளராகிய தூய ஆவியின் ஆறுதலோடும் வழிநடத்தலோடும் தொடர்ந்து செய்ய அழைக்கப்படுகிறார்கள். இயேசு தந்தையோடு தனிப்பட்ட விதத்தில் ஒன்றுபட்டிருக்கிறார். இந்த ஒன்றிப்பில் இயேசுவின் சீடருக்கும் பங்குண்டு. ஏனென்றால் அதே இயேசுவின் பணியிலும் வாழ்விலும் அவர்கள் பங்கேற்கின்றார்கள்.

இவ்வாறு, யோவான் நற்செய்தி கிறித்தவ வாழ்வுக்கும் திருச்சபையின் பணிக்கும் அடித்தளமாக உள்ள இறையியல் கருத்துக்களை அழகுற வழங்குகின்றது.

யோவான் நற்செய்தியின் உட்பிரிவுகள்

[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரைப் பாடல்: வாக்கு மனிதராதல் 1:1-18 165
2. முதல் பாஸ்கா விழா 1:19 - 4:54 166 - 173
3. யூதர்களின் திருவிழா 5:1-47 173 - 175
4. இரண்டாம் பாஸ்கா விழா 6:1-71 175 - 178
5. கூடார விழா 7:1 -10:21 178 - 187
6. கோவில் அர்ப்பண விழா 10:22 - 11:54 187 - 190
7. இறுதிப் பாஸ்கா விழா 11:55 - 20:31 190 - 209
8. பிற்சேர்க்கை 21:1-25 209 - 211

ஆதாரங்கள்

[தொகு]
  1. யோவான்
  2. ஒத்தமை நற்செய்திகள்
  3. நான்காம் நற்செய்தி
  4. அன்புச்சீடர்

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோவான்_நற்செய்தி&oldid=4040969" இலிருந்து மீள்விக்கப்பட்டது