2 தெசலோனிக்கர் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


2 தெசலோனிக்கர் அல்லது தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (Second Letter [Epistle] to the Thessalonians)என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினான்காவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் ஒன்பதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Thessalonikeis B (Επιστολή Προς Θεσσαλονικείς B) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula II ad Thessalonicenses எனவும் உள்ளது.[1]

ஆசிரியர்[தொகு]

2 தெசலோனிக்கர் என்னும் திருமுகத்தைப் புனித பவுல் [2] எழுதினாரா, வேறொருவர் எழுதினாரா என்பது பற்றிக் கருத்து வேறுபாடு உள்ளது. பவுல் இதனை எழுதவில்லை என்பதற்குச் சான்றுகள் உள்ளது போலவே, அவரே எழுதினார் என்பதற்கும் சான்றுகள் உள்ளன [3]. எனினும் அகச் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது, பவுல் இதனை நேரடியாக எழுதியிருக்க முடியாது என்று சொல்லத் தோன்றுகிறது. பவுலின் உள்ளக் கிடக்கையை அறிந்து கொண்டு, அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர் கருத்துக்களில் ஊன்றி நின்று, திருமுகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் இரண்டாம் வருகைபற்றிப் பவுல் என்ன கூறியிருப்பார் என்பதை அவருடைய சீடர் ஒருவர் பவுல் பெயரல் திருமுகமாக எழுதியுள்ளார் எனக் கருத இடமிருக்கிறது. இவ்வாறு எழுதுவது அந்தக் காலத்தில் முறையாகக் கருதப்பட்டது.

எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்[தொகு]

தெசலோனிக்கருக்கு எழுதிய முதலாம் திருமுகம் பல ஐயப்பாடுகளை உருவாக்கிற்று. அவை குறிப்பாக இயேசு கிறிஸ்து மீண்டும் வருதலைப் பற்றியனவாக இருந்தன. முதல் திருமுகத்தில் ஆறுமுறை கிறிஸ்துவின் வருகை பற்றிப் பேசப்பட்டிருந்தது. அது விரைவில் நிகழும் என அத்திருமுகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் இறுதி வருகை ஏற்கனவே நிகழ்ந்துவிட்டதென்று சிலர் நினைத்தனர்; வேறு சிலர் அது நெருங்கி வந்துவிட்டது எனக் கருதிச் சோம்பித் திரிந்தனர். இக்கருத்துக்களை மாற்றிட இரண்டாம் திருமுகம் தெசலோனிக்கருக்கு எழுதப்பட்டது.

இது எழுதப்பட்ட காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம். கி.பி. 52ஆம் ஆண்டுக்கும் 100ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.

உள்ளடக்கம்[தொகு]

இறுதி வருகை ஏற்கனவே நிகழ்ந்து விட்டதென்ற அவர்கள் எண்ணத்தை மாற்ற, ஆண்டவரின் இறுதி வருகை நிகழுமுன் கிளர்ச்சி ஏற்படும் என்றும், நெறிகெட்ட மனிதன் தோன்றுவான் என்றும், அவன் கிறிஸ்துவுக்கு எதிராய் இருப்பான் என்றும் திருமுக ஆசிரியர் கூறுகிறார்.

இவ்வருகையை முன்னிட்டுத் தெசலோனிக்காவில் பலர் வேலை செய்யாமல் சோம்பித் திரிந்தனர்; அவர்கள் நிலையாய் இருந்து, தாங்கள் கற்றுக்கொண்ட உண்மைகளின்படி வாழப் பணிக்கிறார் ஆசிரியர்; வேலை செய்யாது சோம்பித்திரிவோர் உழைத்து உண்ணுமாறு கட்டளை இடுகின்றார்.


தூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்
பெயர்
கிரேக்கம்
இலத்தீன்
சுருக்கக் குறியீடு
தமிழில் ஆங்கிலத்தில்
உரோமையர் Προς Ρωμαίους Epistula ad Romanos உரோ Rom
1 கொரிந்தியர் Προς Κορινθίους Α Epistula I ad Corinthios 1 கொரி 1 Cor
2 கொரிந்தியர் Προς Κορινθίους Β Epistula II ad Corinthios 2 கொரி 2 Cor
கலாத்தியர் Προς Γαλάτας Epistula ad Galatas கலா Gal
எபேசியர் Προς Εφεσίους Epistula ad Ephesios எபே Eph
பிலிப்பியர் Προς Φιλιππησίους Epistula ad Philippenses பிலி Phil
கொலோசையர் Προς Κολασσαείς Epistula ad Colossenses கொலோ Col
1 தெசலோனிக்கர் Προς Θεσσαλονικείς Α Epistula I ad Thessalonicenses 1 தெச 1 Thess
2 தெசலோனிக்கர் Προς Θεσσαλονικείς Β Epistula II ad Thessalonicenses 2 தெச 2 Thess
1 திமொத்தேயு Προς Τιμόθεον Α Epistula I ad Timotheum 1 திமொ 1 Tim
2 திமொத்தேயு Προς Τιμόθεον Β Epistula II ad Timotheum 2 திமொ 2 Tim
தீத்து Προς Τίτον Epistula ad Titum தீத் Tit
பிலமோன் Προς Φιλήμονα Epistula ad Philemonem பில Philem

ஒரு பகுதி[தொகு]

1 தெசலோனிக்கர் 5:14-28


அன்பர்களே! எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட முறைமையின்படி ஒழுகாமல்
சோம்பித்திரியும் எல்லா சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் விலகி நில்லுங்கள் என,
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.
எங்களைப்போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும்.
ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை.
எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை.
மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.
எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல,
மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம்.
'உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம்.
உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து,
பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.
இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து,
தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.
சகோதர சகோதரிகளே! நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம்.
இத்திருமுகத்தில் நாங்கள் எழுதியவற்றிற்குக் கீழ்ப்படியாதோரைக் குறித்துவைத்துக்கொண்டு,
அவர்களோடு பழகாதிருங்கள். அப்பொழுதாவது அவர்களுக்கு வெட்கம் வரும்.
ஆனாலும், அவர்களைப் பகைவர்களாகக் கருதாது,
சகோதரர் சகோதரிகளாக எண்ணி, அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.
அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக!
ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக!
இவ்வாழ்த்தைப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன்.
நான் எழுதும் திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்.
இதுவே நான் எழுதும் முறை.
நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

உட்பிரிவுகள்[தொகு]

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்து) 1:1-2 388
2. புகழாரம் 1:3-12 388
3. கிறிஸ்துவின் வருகை குறித்து அறிவுரை 2:1-17 388 - 389
4. கிறிஸ்தவ வாழ்வுக்குப் பரிந்துரை 3:1-15 389 - 390
5. முடிவுரை (இறுதி வாழ்த்து) 3:16-18 390

மேற்கோள்கள்[தொகு]

  1. 2 தெசலோனிக்கர் மடல்
  2. திருத்தூதர் பவுல்
  3. கத்தோலிக்க கலைக்களஞ்சியம் - 1,2 தெசலோனிக்கர் மடல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=2_தெசலோனிக்கர்_(நூல்)&oldid=2764623" இலிருந்து மீள்விக்கப்பட்டது