தீத்து (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழைய பப்பைரசு விவிலியச் சுவடி. எண்: 32. பாடம்: தீத்து 1:11-15; 2:3-8. அலக்சாந்திரிய கிரேக்க எழுத்து வடிவம். காலம்: கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. காப்பிடம்: மான்செஸ்டர், இங்கிலாந்து.


தீத்து அல்லது தீத்துக்கு எழுதிய திருமுகம் (Letter [Epistle] to Titus) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினேழாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் பன்னிரண்டாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Titon (Επιστολή Προς Τίτον) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Titum எனவும் உள்ளது [1].

ஆசிரியர்[தொகு]

திமொத்தேயுவுக்கு எழுதப்பட்ட இரண்டு திருமுகங்களும், தீத்துவுக்கு எழுதப்பட்ட திருமுகமும் ஆயர் பணித் திருமுகங்கள் என வழங்கப்பெறுகின்றன. ஆயர்களான திமொத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் ஆயர் பணி பற்றி எழுதப்பட்டுள்ளதால் இவை இவ்வாறு பெயர் பெறுகின்றன.

இவற்றைப் பவுலே நேரடியாக[2] எழுதினாரா என்பது பற்றி ஐயப்பாடு உள்ளது. இத்திருமுகங்களில் காணப்படும் சொற்கள், மொழி நடை, திருச்சபை அமைப்புமுறை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இவற்றைப் பவுலே எழுதியிருப்பார் எனக் கூறுவது கடினமாய் இருக்கிறது. பவுலின் சிந்தனையில் வளர்ந்த அவருடைய சீடர்கள் திருமுகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் அவர் என்ன கூறியிருப்பார் என்பதை உணர்ந்து, அவர் பெயரால் இத்திருமுகங்களை எழுதியிருப்பார்கள் எனக் கருத இடமிருக்கிறது. இவ்வாறு எழுதுவது அக்காலத்தில் முறையானதாகக் கருதப்பட்டது. முதல் நூற்றாண்டின் இறுதியிலோ இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இவை எழுதப்பட்டிருக்கலாம்.

ஆயர்பணித் திருமுகங்களில் மூன்றாவதாக வருவது தீத்துக்கு எழுதிய இந்தத் திருமுகம். விவிலிய வரிசையில் மூன்றாவதாக வந்தாலும் இதுவே முதலில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இந்நூல்களைத் தொகுத்தவர்கள் அவை எழுதப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு அல்ல, அவற்றின் அளவை அடிப்படையாகக் கொண்டே வரிசைப்படுத்தினார்கள். தீத்து என்பவர் பிற இனத்துக் கிறிஸ்தவர். அவர் பவுலுடன் அந்தியோக்கியாவிலிருந்து எருசலேம் சென்றார் (காண்க: கலா 2:1; திப 15:2); பவுலின் மூன்றாம் பயணத்தின்போது உடன் சென்றார் (காண்க: 2 கொரி 1:13; 7:6; 13:4).

அவர் கிரேத்துத் தீவின் ஆயராக விளங்கும்போது இத்திருமுகம் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. அங்கே மூப்பர்கள், ஆயர்களை நியமிக்கும் பொறுப்பு இவரிடம் இருந்தது.

உள்ளடக்கம்[தொகு]

கிரேத்துத் தீவில் திருச்சபை வளர்ச்சி குன்றிய சூழ்நிலையில் தீத்து சரியான உதவியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனப் பணிக்கிறார் இத்திருமுக ஆசிரியர் (காண்க: தீத் 1:15-16). கிரேத்துச் சபையிலுள்ள முதியவர், இளைஞர், அடிமைகள் ஆகியோருக்கு எப்படிப் போதிப்பது எடுத்துக் காட்டுகிறார்; இறுதியாகக் கிறிஸ்தவ நல்லொழுக்கத்துடன் அமைதியுடனும் அன்புடனும் இருத்தல், பகைமை, வாக்குவாதம், பிளவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தல் ஆகியவை குறித்துப் பேசுகிறார்; கிரேத்து மக்கள் தங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ள கிறிஸ்துவின் மீட்பளிக்கும் பலியே முன்மாதிரி என்கிறார்.


தூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்
பெயர்
கிரேக்கம்
இலத்தீன்
சுருக்கக் குறியீடு
தமிழில் ஆங்கிலத்தில்
உரோமையர் Προς Ρωμαίους Epistula ad Romanos உரோ Rom
1 கொரிந்தியர் Προς Κορινθίους Α Epistula I ad Corinthios 1 கொரி 1 Cor
2 கொரிந்தியர் Προς Κορινθίους Β Epistula II ad Corinthios 2 கொரி 2 Cor
கலாத்தியர் Προς Γαλάτας Epistula ad Galatas கலா Gal
எபேசியர் Προς Εφεσίους Epistula ad Ephesios எபே Eph
பிலிப்பியர் Προς Φιλιππησίους Epistula ad Philippenses பிலி Phil
கொலோசையர் Προς Κολασσαείς Epistula ad Colossenses கொலோ Col
1 தெசலோனிக்கர் Προς Θεσσαλονικείς Α Epistula I ad Thessalonicenses 1 தெச 1 Thess
2 தெசலோனிக்கர் Προς Θεσσαλονικείς Β Epistula II ad Thessalonicenses 2 தெச 2 Thess
1 திமொத்தேயு Προς Τιμόθεον Α Epistula I ad Timotheum 1 திமொ 1 Tim
2 திமொத்தேயு Προς Τιμόθεον Β Epistula II ad Timotheum 2 திமொ 2 Tim
தீத்து Προς Τίτον Epistula ad Titum தீத் Tit
பிலமோன் Προς Φιλήμονα Epistula ad Philemonem பில Philem

சில பகுதிகள்[தொகு]

தீத்து 1:7-9

"சபைக் கண்காணிப்பாளர்கள் கடவுள் பணியில் பொறுப்பாளர்களாய் இருப்பதால்,
அவர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும்.
அகந்தை, முன் கோபம், குடிவெறி, வன்முறை,
இழிவான ஊதியத்தின்மேல் ஆசை ஆகியவை இவர்களிடம் இருக்கக்கூடாது.
மாறாக, அவர்கள் விருந்தோம்பல், நன்மையில் நாட்டம்,
கட்டுப்பாடு, நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும்.
அவர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட உண்மைச் செய்தியைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
அப்பொழுது அவர்கள் நலந்தரும் போதனையை அறிவுறுத்தவும்
எதிர்த்துப் பேசுவோரின் தவற்றை எடுத்துக் காட்டவும் வல்லவர்களாய் இருப்பார்கள்."

தீத்து 3:4-11

"நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது,
நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல,
மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு,
புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.
அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார்.
நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி,
நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.
இக்கூற்று உண்மையானது.
கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்கள் நற்செயல்களைச் செய்யக் கருத்தாய் இருக்கும்படி
நீ வலியுறுத்தவேண்டும் என்பதே என் விருப்பம்.
இந் நற்செயல்களைச் செய்வதே முறையானது; இவை மக்களுக்குப் பயன்படும்.
மடத்தனமான விவாதங்கள், மூதாதையர் பட்டியல்கள் பற்றிய ஆய்வுகள்,
போட்டி மனப்பான்மை, திருச்சட்டத்தைப் பற்றிய சண்டைகள் ஆகியவற்றை விலக்கு.
இவை பனயனற்றவை, வீணானவை.
சபையில் பிளவு ஏற்படக் காரணமாயிருப்போருக்கு ஒருமுறை,
தேவையானால் இன்னொரு முறை அறிவு புகட்டிவிட்டுப் பின் விட்டுவிடு.
இப்படிப்பட்டவர் நெறிதவறியோர் என்பதும்
தங்களுக்கே தண்டனைத் தீர்ப்பளித்துக்கொண்ட பாவிகள் என்பதும் உனக்குத் தெரிந்ததே."

உட்பிரிவுகள்[தொகு]

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்து) 1:1-4 406
2. கிரேத்துவில் தீத்துவின் பணி 1:5-16 406 - 407
3. திருச்சபையில் பல்வேறு குழுக்களின் கடமைகள் 2:1-15 407
4. அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் 3:1-11 407 - 408
5. முடிவுரை 3:12-15 408

மேற்கோள்கள்[தொகு]

  1. தீத்து திருமுகம்
  2. திருத்தூதர் பவுல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீத்து_(நூல்)&oldid=2764625" இலிருந்து மீள்விக்கப்பட்டது