பெத்தேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெத்தேல் என்பது விவிலியத்தோடு தொடர்புடைய ஒரு பண்டைக்கால ஊர் ஆகும். பண்டைய உகரித் மொழியில் அது "பெத்-எல்" (bt il) எனப்பட்டது. அதன் பொருள் கடவுளின் (எல்) இல்லம் (பெத்) என்பதாகும்.[1]

எபிரேய மொழியில் "பெத்தேல்" בֵּית אֵל என்றும், கிரேக்கத்தில் Βαιθηλ என்றும், இலத்தீனில் Bethel என்றும் வடிவம் பெறும்.

பெத்தேல் அமைந்துள்ள இடம்[தொகு]

பழைய ஏற்பாட்டில் பெத்தேல் என்னும் ஊர் பெஞ்சமின் குலத்தாரும் எப்ராயிம் குலத்தாரும் வதிந்த இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பண்டைய கிறித்தவ எழுத்தாளர்களாகிய யூசேபியஸ் மற்றும் ஜெரோம் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் "பெத்தேல்" என்னும் பெயருடைய சிற்றூர் ஒன்று எருசலேம் நகருக்கு வடக்கே 12 மைல் (உரோமையர் கணிப்புப்படி) தொலையில், நியாப்பொலிசு நகருக்குச் சென்ற சாலையின் கிழக்கு ஓரமாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.[2]

எட்வர்ட் இராபின்சன் என்னும் அகழ்வாளர் இன்றைய பாலத்தீனத்தில் உள்ள "பெய்த்தின்" (Beitn) என்னும் ஊரே பண்டைக்கால "பெத்தேல்" என்று கூறுகிறார்.[3] பண்டைய ஏடுகள் தரும் குறிப்புகள் தவிர, "பெத்தேல்" என்னும் பெயருக்கும் "பெய்த்தின்" என்னும் பெயருக்கும் இடையே உள்ள ஒற்றுமையின் அடிப்படையிலும்.அவர் இம்முடிவுக்கு வருகிறார். "எல்" என்னும்.எபிரேயச் சொல்.அரபியில் "இன்" என்று மாறுவதை வழக்கமே என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.[2]

1968இல் பாலத்தீனத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றிய இசுரயேல் நாடு, "பெய்த்தின்" ஊருக்கு அருகே ஒரு குடியிருப்பை உருவாக்கி, அதற்கு "பெய்த்தேல்" (Beit El) என்று பெயரிட்டது.

விவிலியக் குறிப்புகள்[தொகு]

விவிலியத்தில் யோசுவா நூலில் (12:16) தெற்கு அரசாகிய யூதாவில் அமைந்த "பெத்தேல்" பற்றிய குறிப்பு உள்ளது. அது சிமியோன் குலத்தவர் வாழ்ந்த "பெத்துல்" அல்லது "பெத்துவேல்" என்னும் ஊராக இருக்கலாம்.என்று கருதப்படுகிறது.

பெத்தேல் ஊரில் கனவு காண்கின்றார் யாக்கோபு. ஓவியர்: ஹோசே தெ ரிபேரா.

"பெத்தேல்" என்னும் ஊர் விவிலிய நூலாகிய தொடக்க நூலில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் குறிப்பு தொடக்க நூலின் 12ஆம் அதிகாரத்தில் உள்ளது.

ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார்.

மற்றொரு சிறப்பான குறிப்பு தொடக்க நூலின் 28ஆம் அதிகாரத்தில் உள்ளது. அதில் யாக்கோபு பெத்தேல் ஊரில் கண்ட கனவு விவரிக்கப்படுகிறது (28:10-23):


10 யாக்கோபு பெயேர்செபாவிலிருந்து புறப்பட்டு, காரானை நோக்கிச் சென்றான்.


11 அவன் ஓரிடத்திற்கு வந்தபோது கதிரவன் மறைந்துவிட்டான். எனவே அங்கே இரவைக் கழிப்பதற்காக அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு, அங்கேயே படுத்துறங்கினான்.
12 அப்போது அவன் கண்ட கனவு இதுவே: நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி மேலே வானத்தைத் தொட்டுக் கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.
13 ஆண்டவர் அதற்கு மேல் நின்றுகொண்டு, "உன் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் நானே. நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் வழிமரபிற்கும் தந்தருள்வேன்.
14 உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் பரவிச் செல்வாய். உன்னிலும் உன் வழிமரபிலும் மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசி பெறுவன.
15 நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்" என்றார்.
16 யாக்கோபு தூக்கம் தெளிந்து, "உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்" என்று
17 அச்சமடைந்து, "இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியது! இதுவே இறைவனின் இல்லம், விண்ணுலகின் வாயில்" என்றார்.
18 பிறகு யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, நினைவுத் தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெய் வார்த்து,
19 'லூசு' என்று வழங்கிய அந்த நகருக்குப் 'பெத்தேல்' என்று பெயரிட்டார்.
20 மேலும் அவர் நேர்ந்து கொண்டது: 'கடவுள் என்னோடிருந்து நான் போகிற இந்த வழியில் எனக்குப் பாதுகாப்பளித்து உண்ண உணவும், உடுக்க உடையும் தந்து,
21 என் தந்தையின் வீட்டிற்கு நான் நலமுடன் திரும்பச் செய்வாராயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார்.
22 மேலும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கடவுளின் இல்லம் ஆகும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்.'

இன்னொரு விவிலியக் குறிப்பு தொடக்க நூலின் 35ஆம் அதிகாரத்தில் உள்ளது (35:6-8):


6 இவ்வாறு யாக்கோபும் அவரோடிருந்த எல்லா மக்களும் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற பெத்தேலுக்கு வந்து சேர்ந்தனர்.


7 யாக்கோபு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பித் தம் சகோதரனிடமிருந்து தப்பி ஓடினபொழுது, கடவுள் தம்மை அங்கே அவருக்கு வெளிப்படுத்தியதால், அந்த இடத்திற்கு ஏல்-பெத்தேல் என்று பெயரிட்டார்.

"லூசு" என்னும் பழைய கனானேயப் பெயர் "பெத்தேல்" என்று மாற்றம் பெற்றதுபோல, அங்கேயே யாக்கோபுவின் பெயரைக் கடவுள் "இஸ்ரயேல்" என்று மாற்றினார்.

பெத்தேல் வழிபாட்டு இடமாக மாறுதல்[தொகு]

தாவீது மற்றும் சாலமோன் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வடக்கு நாடாகிய இஸ்ரயேலும் தெற்கு நாடாகிய யூதாவும் ஒரே நாட்டின் பகுதிகளாக இருந்தன. அதன் பிறகு நாடு பிளவுண்டது. 1 அரசர்கள் என்னும் விவிலிய நூல் கீழ்வரும் வரலாற்றைத் தருகிறது (1 அரசர்கள் 12:25-33):


25 எரொபவாம், எப்ராயிம் மலைநாட்டில் செக்கேமைக் கட்டி எழுப்பி, அங்குக் குடியிருந்தான். பின்பு அங்கிருந்து வெளியேறிப் பெனுவேலைக் கட்டி எழுப்பினான்.


26 அப்பொழுது எரொபவாம் "இப்போதுள்ள நிலை நீடித்தால் அரசு தாவீதின் வீட்டுக்கே திரும்பிச் சென்று விடும்.
27 ஏனெனில், இம்மக்கள் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்தில் பலிசெலுத்த இனிமேலும் போவார்களானால் அவர்களது உள்ளம் யூதாவின் அரசன் ரெகபெயாம் என்ற தங்கள் தலைவனை நாடும்; என்னைக் கொலை செய்து விட்டு யூதாவின் அரசன் ரெகபெயாம் பக்கம் சேர்ந்து கொள்வார்கள்" என்று தன் இதயத்தில் சொல்லிக் கொண்டான்.
28 இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, "நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்!" என்றான்.
29 இவற்றுள் ஒன்றைப் பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்தான்.
30 இச்செயல் பாவத்துக்குக் காரணமாயிற்று. ஏனெனில் மக்கள் கன்றுக் குட்டியை வணங்கத் தாண் வரையிலும் செல்லத் தொடங்கினர்.
31 மேலும் அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள் கட்டி லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான்.


32 அதுவுமின்றி, யூதாவின் விழாவுக்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரொபவாம் ஒரு விழாவை ஏற்படுத்திப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான். அவ்வாறே பெத்தேலிலும் தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளுக்குப் பலியிட்டான். மேலும் தான் அமைத்திருந்த தொழுகை மேடுகளின் குருக்களைப் பெத்தேலில் பணி செய்யும்படி அமர்த்தினான்.
33 தான் நினைக்கும்படி குறித்த எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அவன் பெத்தேலில் கட்டியிருந்த பலிபீடத்திற்குச் சென்றான். இஸ்ரயேல் மக்களுக்கென்று தான் ஏற்படுத்திய விழாவின்போது பலிபீடத்தின்மேல் பலி செலுத்தித் தூபம் காட்டினான்.

அசீரியர்களின் ஆட்சிக்காலத்தில் பெத்தேல்[தொகு]

அசீரியர்கள் கிமு 721இல் இசுரயேல் மீது படையெடுத்துவந்தனர். அப்போது பெத்தேல் அழிவிலிருந்து தப்பியது. ஆனால் யூதா நாட்டு அரசராகிய யோசியா (கிமு சுமார் 640-609) படையெடுத்தபோது பெத்தேலில் இருந்த வழிபாட்டு இடத்தைத் தரைமட்டமாக்கினார் (2 அரசர்கள் 23:15).[4]

பிற்காலத்தில் பெத்தேல்[தொகு]

மக்கபேயர் காலத்தில் (கிமு 2ஆம் நூற்றாண்டு) பெத்தேல் நகரில் மக்கள் மீண்டும் குடியேறினர். காப்புச் சுவர்களும் கட்டப்பட்டன.[2]

உரோமைப் பேரரசன் வெஸ்பாசியான் பெத்தேலைக் கைப்பற்றினார் என்று பண்டை கிறித்தவ எழுத்தாளர் யோசேபுஸ் கூறுகிறார். யோசேபுஸ் மற்றும் ஜெரோம் ஆகியோர் தருகின்ற குறிப்புகளுக்குப் பிறகு பெத்தேல் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், இன்று பாலத்தீனத்தில் உள்ள "பெய்த்தின்" என்னும் இடத்தில் விரிவாக்கம் நடந்ததையும், நடுக்காலத்தில் கிறித்தவக் கோவில் இருந்ததையும் அறிய முடிகிறது என்று அகழ்வாளர் எட்வர்ட் இராபின்சன் கூறுகிறார்.[2]

ஆமோஸ் நூலில் பெத்தேல்[தொகு]

பெத்தேல் பற்றிய குறிப்புகள் ஆமோஸ் நூலிலும் உள்ளன:

ஆனால் பெத்தேலைத் தேடாதீர்கள்...பெத்தேல் பாழாக்கப்படும் (5:5).
அமட்சியா ஆமோசைப் பார்த்து, '...பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே' என்றார் (7:10-13

ஆதாரங்கள்[தொகு]

  1. Bleeker and Widegren, 1988, p. 257.
  2. 2.0 2.1 2.2 2.3 Robinson and Smith, 1856, pp. 449–450.
  3. Edward Robinson, Biblical Researches in Palestine, 1838-52.
  4. "Bethel". Encyclopædia Britannica from Encyclopædia Britannica 2007 Ultimate Reference Suite (2007).

நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தேல்&oldid=2741347" இருந்து மீள்விக்கப்பட்டது