உள்ளடக்கத்துக்குச் செல்

ஆமோஸ் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆமோஸ் இறைவாக்கினர். ஓவியர்: ஃபொர்லீ நகர் மெலோத்சோ (1438-1494). காப்பிடம்: லொரேட்டோ நகர் பசிலிக்கா கோவில், இத்தாலியா.

ஆமோஸ் (Amos) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

நூல் பெயர்[தொகு]

ஆமோஸ் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் עמוס (Amos,ʻāmōʷs) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் இந்நூல் Αμώς (Amós) என்றும் இலத்தீனில் Amos என்றும் உள்ளது. இப்பெயரின் பொருள் "சுமை சுமப்பவர்" என்பதாகும்.

ஆசிரியர் மற்றும் பின்னணி[தொகு]

இறைவாக்கு உரைக்கும்படி கடவுளிடமிருந்து அழைப்பு பெறுவதற்கு முன்னர், ஆமோஸ் ஆட்டு மந்தைக்கு உரிமையாளராகவும், காட்டு அத்திமரத் தோட்டம் பயிரிடுபவராகவும் இருந்தார். "நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை" (7:14) என்று அவரே தம்மை அடையாளம் காட்டுகிறார். அவர் உண்மையிலேயே இறைவாக்கினர்தாம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று எனலாம்.

விவிலியத்தில் இடம்பெறும் இறைவாக்குகளுள், ஆமோஸ் உரைத்த தூதுரையே முதலில் எழுத்து வடிவம் பெற்றதாகும். ஆமோஸ் தென்னாடான யூதாவில் பிறந்தவராயினும் வடநாடான இசுரயேலுக்குச் சென்று கி.மு. 8ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இறைவாக்கு உரைத்தார்.

யூதா நாட்டில் எருசலேமுக்குத் தெற்கே அமைந்திருந்த தெக்கோவா என்னுமிடத்தில் அவரது இறைவாக்குப் பணி கி.மு. 750ஆம் ஆண்டில் தொடங்கியது. தென்னாட்டவராயினும் அவரது இறைவாக்கு வடநாட்டவருக்கு, குறிப்பாக சமாரியா, பெத்தேல் பகுதிகளுக்கு அளிக்கப்பட்டது.

ஆமோஸ் வாழ்ந்த காலத்தில் வேறு சில இறைவாக்கினரும் செயல்பட்டனர். அவர்களுள் எசாயா, மீக்கா, ஓசேயா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆமோஸ் இறைவாக்குரைத்த நாள்களில் இரண்டாம் எரோபவாம் மன்னனின் ஆட்சியின்கீழ் இசுரயேல் நாடு சீரும் சிறப்புமாய் இருந்தது. ஆனால் வளமும் வாழ்வும் செல்வருக்கும் வலியோருக்கும் மட்டுமே; ஏழை எளியவர்கள் நசுக்கப்பட்டுத் தாழ்வுற்றுக் கிடந்தனர்.

வலியோரை வாழ்த்தி எளியோரை வாட்டும் அநீதியும் பொய்ம்மையும் நிறைந்த சமுதாயத்தைக் கண்டு சீறுகிறார் ஆமோஸ். இனம் இனத்தையும் மனிதர் மனிதரையும் கசக்கிப் பிழியும் கொடுமையைக் கடுமையாய்க் கண்டிக்கிறார். நீதியையும் நேர்மையையும் வளர்த்துக் கொண்டாலன்றி, எந்த இனமும் கடவுளின் கடும் தண்டனைக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார்.

நூல் வழங்கும் செய்தி[தொகு]

சமூகத்தில் நிலவிய அநீதியை ஆமோஸ் படம்பிடித்துக் காட்டுகிறார்: செல்வர்கள் "நேர்மையாளரை வெள்ளிக்காசுக்கும் வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள். ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்; ஒடுக்கப்பட்டோரின் நெறியைக் கெடுக்கின்றார்கள்" (2:6-7). இத்தகைய அநீதிகளை இழைப்போர் கடவுளின் தண்டனைக்குத் தப்ப மாட்டார்கள் என்று ஆமோஸ் இறைவாக்கு உரைத்தார்.

செல்வரும் ஆட்சியாளரும் இச்செய்தியைக் கேட்க விரும்பவுமில்லை, அதை ஏற்கவுமில்லை. தென்னாட்டைச் சார்ந்த ஓர் அன்னியன் வடநாட்டுக்கு வந்து நம்மைக் கண்டிப்பதா என்றுகூட அவர்கள் நினைத்திருக்கலாம். நாடு செல்வத்தில் கொழித்திருக்கும் வேளையில் அழிவு பற்றிய செய்தியை அறிவித்த இறைவாக்கினரை அதிகார வர்க்கத்தினர் ஏற்க விரும்பவில்லை. பெத்தேலின் குருவாயிருந்த அமட்சியா என்பவர் ஆமோசிடம், "காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு" (7:10,12) என்று சொல்லியனுப்பியதைப் பார்க்கும்போது ஆமோஸ் சமய மற்றும் அரசியல் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளானது தெரிகிறது.

எல்லா மக்களுக்கும் தலைவராய் இருக்கும் கடவுள் அளித்த நெறியை மீறியதால் இசுரயேலரின் அண்டை நாட்டவரான தமஸ்கு நகரத்தவர், பெலிஸ்தியர், தீர் நகரத்தவர், ஏதோமியர், அம்மோனியர், மோவாபியர் ஆகியோருக்கு எதிராக ஆமோஸ் இறைவாக்கு உரைத்தார். தாம் தேர்ந்துகொண்ட மக்களுக்கு அளித்த திருச்சட்டத்தைத் தென்னாடும் (யூதா நாடு) வடநாடும் (இசுரயேல் நாடு) மீறியதால் அவர்களும் கடவுளின் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள் என்று ஆமோஸ் இறைவாக்கு உரைத்தார்.

செல்வம் கொழித்த வணிகர்கள், திருச்சட்டத்தை வெறும் வெளிச்சடங்காக மாற்றிவிட்டவர்கள் ஆகியோரை ஆமோஸ் கண்டித்தார். மக்கள் மனம் மாறி நன்னெறியைக் கடைப்பிடித்தால் கடவுளின் ஆசியைப் பெறுவர் என்று ஆமோஸ் உரைத்தார்:

"'இதோ! நாள்கள் வரப்போகின்றன; அப்போது, அறுவடை செய்வோரை உழுவோரும், கனி பிழிவோரை விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்; மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்; குன்றுகள் தோறும் அது வழிந்தோடும்,' என்கிறார் ஆண்டவர். 'என் மக்களாகிய இசுரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டுவருவேன்; அவர்கள் பாழடைந்த நகர்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்; திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் கனிரசத்தை அருந்துவார்கள். பழத்தோட்டங்களை அமைத்து அவற்றின் கனிகளை உண்பார்கள். அவர்களைத் தங்கள் நாட்டில் மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்; நான் அவர்களுக்கு அளித்திருக்கும் நாட்டிலிருந்து இனி ஒருபோதும் அவர்கள் பிடுங்கப்படமாட்டார்கள்,' என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்" (ஆமோஸ் 9:13-15).

இலக்கிய நயம்[தொகு]

ஆமோஸ் இறைவாக்கினரின் பேச்சு நேரடியாக மக்களின் உள்ளத்தைத் தொடும் விதத்தில் அமைந்தது. ஒளிவுமறைவின்றி அவர் கடவுளின் செய்தியை மக்களுக்கு அறிவித்தார். எளிய நடையும் நேர்முகப் பேச்சும் அங்கே உள்ளன.

கால்நடை பேணலும் வேளாண்மைத் தொழிலும் அவரது பின்னணியானதால் அவருடைய நூலில் பயிரிடுதல் சார்ந்த உருவகங்கள் மிகுந்துள்ளன. எடுத்துக்காட்டாக 7:1 காண்க: "தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: 'அரசனுக்கென முதல் புல்லறுப்புச் செய்தானபின், இரண்டாம் பருவத்தில் புற்கள் துளிர்க்கத் தொடங்கும் வேளையில், அவர் வெட்டுக்கிளிக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். நாட்டிலிருந்த புல்லையெல்லாம் அவை தின்று தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் நான் 'இறைவனாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்; யாக்கோபு எப்படி நிலைநிற்கப் போகிறான்? அவன் மிகச் சிறியவன் அல்லவா!' என்றேன்."

குறிப்பிடத்தக்க சில பகுதிகள்[தொகு]

ஆமோஸ் 5:21-24
ஆண்டவர் கூறுகிறார்:
"உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்;
உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை.
எரிபலிகளையும் தானியப் படையல்களையும்
எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்;
கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும்போது
நான் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்.
என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப்
பாடும் பாடல்களை நிறுத்துங்கள்,
உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன்.
மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக!
நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!"

ஆமோஸ் 6:11-12
"ஆண்டவர்தாமே ஆணையிடுகின்றார்;
பெரிய மாளிகைகளைத் தரைமட்டமாக்குவார்;
சிறிய வீடுகளைத் தவிடுபொடியாக்குவார்.
பாறைகள்மேல் குதிரைகள் ஓடுமோ?
எருதுகளைக் கட்டிக் கடலை உழுவதுண்டோ?
நீங்கள் நீதியை நஞ்சாக மாற்றினீர்கள்,
நேர்மையின் கனியை எட்டிக்காயாய் ஆக்கினீர்கள்."

உட்பிரிவுகள்[தொகு]

பொருளடக்கம் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. வேற்றினத்தாரின்மீது இறைவனின் தீர்ப்பு 1:1 - 2:5 1340 - 1342
2. இசுரயேலின் மீது இறைவனின் தீர்ப்பு 2:6 - 6:14 1342 - 1348
3. ஐந்து காட்சிகள் 7:1 - 9:15 1348 - 1351
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமோஸ்_(நூல்)&oldid=3923730" இலிருந்து மீள்விக்கப்பட்டது