பழைய ஏற்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பழைய ஏற்பாடு (எபிரேய விவிலியம்). 11ஆம் நூற்றாண்டு கையெழுத்துப் படி. ஈராக்.

பழைய ஏற்பாடு(Old Testament) கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். பழைய ஏற்பாடு கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். இது எபிரேய விவிலியம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவிவிலியத்தின் இரண்டாம் பகுதி கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்ட புதிய ஏற்பாடு (New Testament) ஆகும்.

ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்னும் பொருள் தரும். கடவுள் பண்டைக் காலத்தில் இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சமய நூல்கள் யாவற்றையும் பழைய உடன்படிக்கை (ஏற்பாடு) என்று கிறித்தவர் அழைக்கின்றார்கள். இயேசு கிறிஸ்து மனிதரோடு கடவுள் செய்த புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியவர் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். எனவே, கிறிஸ்துவுக்கு முன்பு கடவுள் அளித்த வெளிப்பாட்டைப் பழைய ஏற்பாடு என்றும், கிறிஸ்து வழியாகவும் அவருக்குப் பின்பும் கடவுள் அளித்த வெளிப்பாட்டைப் புதிய ஏற்பாடு என்றும் பிரித்துக் காண்பது கிறித்தவரின் தொன்மையான வழக்கம் ஆகும்.

யூத சமயத்தவர்கள் இயேசு கிறிஸ்துவை மெசியா என்றோ உலக மீட்பர் என்றோ ஏற்பதில்லை. எனவே கிறித்தவர்கள் பழைய ஏற்பாடு என்று கருதுவதை யூதர்கள் விவிலியம் என்றே அழைக்கிறார்கள். பழைய ஏற்பாட்டை எபிரேய விவிலியம் (Hebrew Bible) எனவும் அவர்கள் கூறுவர்.

யூதர்கள் எபிரேய விவிலியத்தை பிரிக்கும் முறை[தொகு]

யூதர்கள் பழைய ஏற்பாட்டின் (எபிரேய விவிலியம்) 39 நூல்களையும் TaNaKh (தானாக்) என்னும் சுருக்கக் குறியீடு மூலம் கீழ்வருமாறு பிரிப்பர்:
1) தோரா (Torah) (Ta)
2) நெவீம் (Nevi'm) (Na)
3) கெதுவிம் (Ketuvim) (Kh)

தோரா[தொகு]

தோரா என்னும் எபிரேயச் சொல் படிப்பினை, போதனை, திருச்சட்டம், நெறிமுறை என்னும் பொருள்களைத் தரும். இப்பிரிவில் ஐந்து நூல்கள் அடங்கும். அவை மோசே எழுதிய நூல்கள் எனவும் ஐந்நூல்கள் (Pentateuch) எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வைந்து நூல்களும் சேர்ந்து ஒரு பெரும் தொகுதியாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் தொடக்கச் சொல்லே அவற்றின் பெயராக உள்ளன. கிறித்தவ வழக்கில் அந்நூல்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பெயர்கள் வழங்கப்படுகின்றன:

  1. தொடக்க நூல் (ஆங்.: Genesis; எபிரேயம்: Bereshith)
  2. விடுதலைப் பயணம் (ஆங்.: Exodus; எபிரேயம்: Shemot)
  3. லேவியர் (ஆங்.: Leviticus; எபிரேயம்: Vayikra)
  4. எண்ணிக்கை (ஆங்.: Numbers; எபிரேயம்: Bamidbar)
  5. இணைச் சட்டம் (ஆங்.: Deuteronomy; எபிரேயம்: Devarim)

நெவீம்[தொகு]

இச்சொல் நவி என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து பிறந்தது (נְבִיא - navi). அதன் பொருள் இறைவாக்கினர் (தீர்க்கதரிசி) என்பதாகும். கடவுள் வழங்கும் செய்தியை மக்களுக்கு அறிவிப்பது இறைவாக்கினரின் பணி. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர் நூல்கள் 21 உள்ளன. அவை முன்னைய இறைவாக்கினர் (6 நூல்கள்), பின்னைய இறைவாக்கினர் (15 நூல்கள்) கொண்டன.

முன்னைய இறைவாக்கினர்[தொகு]


1) யோசுவா (ஆங்.: Joshua; எபிரேயம்: Sefer Y'hoshua)
2) நீதித் தலைவர்கள் (ஆங்.: Judges; எபிரேயம்: Shoftim)
3) 1 சாமுவேல் (1 Samuel)
4) 2 சாமுவேல் (2 Samuel)
5) 1 அரசர்கள் (1 Kings)
6) 2 அரசர்கள் (2 Kings)

பின்னைய இறைவாக்கினர்[தொகு]

இப்பிரிவில் 3 பெரிய இறைவாக்கினர் நூல்களும் 12 சிறிய இறைவாக்கினர் நூல்களும் முறையே அடங்கும். அவை:
1) எசாயா (Isaiah)
2) எரேமியா (Jeremiah)
3) எசேக்கியேல் (Ezekiel)
4) ஓசேயா (Hosea)
5) யோவேல் (Joel)
6) ஆமோஸ் (Amos)
7) ஒபதியா (Obadiah)
8) யோனா (Jonah)
9) மீக்கா (Micah)
10) நாகூம் (Nahum)
11) அபக்கூக்கு (Habakkuk)
12) செப்பனியா (Zephaniah)
13) ஆகாய் (Haggai)
14) செக்கரியா (Zechariah)
15) மலாக்கி (Malachi)

கெதுவிம்[தொகு]

கெதுவிம் என்னும் எபிரேயச் சொல் எழுத்துப் படையல் நூல் தொகுப்பு என்னும் பொருள் தரும் (כְּתוּבִים, "Writings"). இத்தொகுப்பில் 13 நூல்கள் உள்ளன.


1) திருப்பாடல்கள் (Psalms)
2) நீதிமொழிகள் (Proverbs)
3) யோபு (Job)
4) இனிமைமிகு பாடல் (Song of Songs)
5) ரூத்து (Ruth)
6) புலம்பல் (Lamentations)
7) சபை உரையாளர் (Ecclesiastes)
8) எஸ்தர் (Esther)
9) தானியேல் (Daniel)
10) எஸ்ரா (Ezra)
12) நெகேமியா (Nehemiah)
13அ) 1 குறிப்பேடு (1 Chronicles)
13ஆ) 2 குறிப்பேடு (2 Chronicles)

இவ்வாறு, பழைய ஏற்பாட்டில் (எபிரேய விவிலியம்) 39 நூல்கள் உள்ளதாக யூதர் கணிக்கின்றனர். இவை பழைய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நூல்களில் சிலவற்றை இணைத்து எண்ணி, அவை 24 என்று கொள்வதும் உண்டு.

இந்நூல்கள் இயேசுவின் பிறப்புக்கு முன்னர் எழுதப்பட்டவையாகும். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி பழைய ஏற்பாட்டின் எபிரேய வடிவம் கி.மு. 12-ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடையே எழுதப்பட்டிருக்கக்கூடும்.[1]

கத்தோலிக்கர் பழைய ஏற்பாட்டைப் பிரிக்கும் முறை[தொகு]

எபிரேய மொழி தவிர கிரேக்க மொழியிலும் சில சமய நூல்கள் இஸ்ரயேலரிடையே கிறிஸ்து பிறப்புக்கு முன் தோன்றியிருந்தன. கத்தோலிக்க கிறித்தவர் அந்நூல்களையும் பழைய ஏற்பாட்டின் பகுதியாகக் கொள்வர். பிற கிறித்தவ சபையினர் அவற்றை விவிலியப் புற நூல்கள் (Apocrypha) என்றும் கத்தோலிக்கர் இணைத் திருமுறை நூல்கள் (Deutero-Canonical Books) எனவும் அழைப்பர்.

கத்தோலிக்க திருச்சபை ஏற்றுள்ள பழைய ஏற்பாட்டின் 46 நூல்கள் நான்கு பிரிவுகளில் அடங்கும். அவை,

1) திருச்சட்ட நூல்கள் (5):
தொடக்க நூல்; விடுதலைப் பயணம்; லேவியர்; எண்ணிக்கை; இணைச் சட்டம்.

2) வரலாற்று நூல்கள் (16):
யோசுவா; நீதித் தலைவர்கள்; ரூத்து; 1 சாமுவேல்; 2 சாமுவேல்; 1 அரசர்கள்; 2 அரசர்கள்; 1 குறிப்பேடு; 2 குறிப்பேடு; எஸ்ரா; நெகேமியா; தோபித்து; யூதித்து; எஸ்தர்; 1 மக்கபேயர்; 2 மக்கபேயர்.

3) ஞான நூல்கள் (7):
யோபு; திருப்பாடல்கள்; நீதிமொழிகள்; சபை உரையாளர்; இனிமைமிகு பாடல்; சாலமோனின் ஞானம்; சீராக்கின் ஞானம்.

4) இறைவாக்கு நூல்கள் (4[+2] பெரிய இறைவாக்கினர்; 12 சிறிய இறைவாக்கினர்):
பெரிய இறைவாக்கினர்: எசாயா; எரேமியா; [ பாரூக்கு; புலம்பல்; ] எசேக்கியேல்; தானியேல்.
சிறிய இறைவாக்கினர்: ஓசேயா; யோவேல்; ஆமோஸ்; ஒபதியா; யோனா; மீக்கா; நாகூம்; அபக்கூக்கு; செப்பனியா; ஆகாய்; செக்கரியா; மலாக்கி.

மரபு வழிக் கிறித்தவ சபைகள் (Orthodox Churches) பழைய ஏற்பாட்டில் 51 நூல்கள் உள்ளதாகக் கருதுகின்றன.

இதையும் பார்க்க[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Encyclopaedia Britannica: "Written almost entirely in the Hebrew language between 1200 and 100 BC"; Columbia Encyclopedia: "In the 10th century BC the first of a series of editors collected materials from earlier traditional folkloric and historical records (i.e., both oral and written sources) to compose a narrative of the history of the Israelites who now found themselves united under David and Solomon."

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_ஏற்பாடு&oldid=2299792" இருந்து மீள்விக்கப்பட்டது