உள்ளடக்கத்துக்குச் செல்

நாகூம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகூம் இறைவாக்கினர். கலைஞர்: அலெயாதீக்ஞோ (பிறப்பு:1730 அல்லது 1738; இறப்பு 1814). காப்பிடம்: இயேசு பேராலயம், கொங்கோனாசு, பிரேசில்.

நாகூம் (Nahum) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

பெயர்[தொகு]

நாகூம் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் נַחוּם (Naḥūm‎) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் இந்நூல் Ναούμ (Naúm) என்றும் இலத்தீனில் Nahum என்றும் உள்ளது.

இப்பெயரின் பொருள் "ஆறுதலளிப்பவர்" என்பதாகும்.

பின்னணியும் பொருளடக்கமும்[தொகு]

இசுரயேலின் மிகப் பழைய, கொடிய எதிரியான அசீரியருடைய தலைநகராம் நினிவே பெருநகரின் வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ந்து பாடும் கவிதையாக "நாகூம்" என்னும் இந்நூல் அமைந்துள்ளது. கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நினிவே அழிவுற்றது. ஆணவம் கொண்டு மற்ற மக்களைக் கொடுமைப்படுத்தும் எந்த நாட்டையும் ஆண்டவர் தண்டிக்காமல் விட மாட்டார் என்பதை இந்நூல் விளக்குகிறது.

நினிவே நகரம் செல்வக் கொழிப்போடு அமைந்தது என்பது அகழாய்வுகள் வழி தெரிகிறது. எட்டு மைல் சுற்றளவுள்ள பெரும் சுவர்கள் அந்நகரைச் சூழ்ந்திருந்தன. நகருக்குத் தண்ணீர் கொண்டுவர கால்வாய் இருந்தது. அரண்மனைகளும் இருபதாயிரம் களிமண் எழுத்து ஓடுகளைக் கொண்ட நூலகமும் இருந்தன. ஆனால் புகழோடும் வலிமையோடும் வாழ்ந்த அந்நகரமும் அழிவுற்றது.

நாகூம் நூல் இந்த அழிவை முன்னறிவித்ததாகச் சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் கருத்துப்படி, இந்நூல் நினிவேயின் அழிவுக்குப் பிறகு எழுதப்பட்ட பாடல். எவ்வாறாயினும் இந்நூல் கி.மு. 663 - 612 ஆண்டளவில் எழுந்தது எனலாம். இந்நூலில் கவிதை நயம் சிறப்பாய் உள்ளது.

இந்நூலின் சில பகுதிகள் எதிரி அழிந்துபோவதைக் கண்டு இன்புறும் பாணியில் உள்ளன. பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பது போல் இருந்தாலும், யூதா மக்களை எதிர்த்தவர்கள் கடவுளையே எதிர்த்தார்கள் என்று கருதப்பட்டதால் இத்தகைய இலக்கியப் பாணி அக்காலத்தில் வழக்கிலிருந்தது.

நூலிலிருந்து சில பகுதிகள்[தொகு]

நாகூம் 1:1-3
"நினிவேயைக் குறித்த இறைவாக்கு;
எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நூல்.
ஆண்டவர் அநீதியைப் பொறாத இறைவன்;
பழிவாங்குபவர்;
ஆண்டவர் பழிவாங்குபவர்;
வெகுண்டெழுபவர்;
தம் எதிரிகளைப் பழிவாங்குபவர்;
தம் பகைவர்மீது சினம் கொள்பவர்.
ஆண்டவர் விரைவில் சினம் கொள்ளார்;
ஆனால் அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர்.
அவர் குற்றவாளிகளை எவ்வகையிலும்
பழிவாங்காமல் விடமாட்டார்.
சுழற்காற்றிலும் புயற்காற்றிலும்
அமைந்துள்ளது அவர் வழி;
மேகங்கள் அவர்தம் காலடியில்
எழுகின்ற புழுதிப் படலம்!"

நாகூம் 3:1-3
"இரத்தக்கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு!
அங்கு நிறைந்திருப்பதெல்லாம்
பொய்களும் கொள்ளைப் பொருளுமே!
சூறையாடலுக்கும் முடிவே இல்லை!
சாட்டையடிகளின் ஓசை!
சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி!
தாவிப் பாயும் புரவிகள்!
உருண்டோடும் தேர்கள்!
குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்;
வாள் மின்னுகின்றது;
ஈட்டி பளபளக்கின்றது;
வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்;
பிணங்கள் குவிந்து கிடக்கின்றன;
செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை;
அந்தப் பிணங்கள்மேல்
மனிதர் இடறி விழுகின்றனர்."

உட்பிரிவுகள்[தொகு]

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. நினிவேயின் மீது ஆண்டவரின் தீர்ப்பு 1:1-15 1373 - 1374
2. நினிவேயின் வீழ்ச்சி 2:1 - 3:19 1374 - 136
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகூம்_(நூல்)&oldid=1982734" இலிருந்து மீள்விக்கப்பட்டது