உள்ளடக்கத்துக்குச் செல்

1 மக்கபேயர் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூதா மக்கபேயுவின் வீர மரணம். ஓவியர்:ஹோசே தெயோஃபிலோ தெ ஹெசூஸ் (1758-1847). காப்பிடம்: சல்வதோர்.

1 மக்கபேயர் (1 Maccabees) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல்கள் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழித் திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.

பெயர்

[தொகு]

1 மக்கபேயர் என்னும் இந்நூல் கிரேக்க மூல மொழியில் A' Μακκαβαίων (1 Makkabáion) என்றும், இலத்தீனில் "1 Machabaeorum" என்றும் உள்ளது. "மக்கபே" என்னும் எபிரேய மொழிப் பெயரிலிருந்து "மக்கபேயர்" என்னும் சொல் பிறந்தது. மக்கபேயர் என்பது எபிரேயத்தில் Makabim, Maqabim என வரும் (מכבים‎ அல்லது מקבים). இது அரமேய மொழியில் maqqaba என்னும் சொல்லிலிருந்து பிறந்தது எனவும், அதன் பொருள் "சுத்தியல்/சம்மட்டி" என்பதாகும் எனவும் அறிஞர் கூறுவர்.

இந்நூலும் இதை அடுத்து வருகின்ற 2 மக்கபேயர் எனும் நூலும் இணைத் திருமுறை விவிலிய நூல்கள் ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன [1].

உள்ளடக்கமும் செய்தியும்

[தொகு]

மத்தத்தியாவின் மூன்றாம் மகன் யூதா. இவர் கிரேக்க கலாச்சாரத்தை யூத மக்கள்மீது திணித்து, அவர்களைப் பலவாறு துன்புறுத்திவந்த செலூக்கிய ஆட்சியை எதிர்த்து யூத மக்களை வழிநடத்தியதால், "மக்கபே" என்று அழைக்கப்பெற்றார். "மக்கபே" என்னும் சொல்லுக்குச் "சம்மட்டி" எனச் சிலர் பொருள் கொள்வர். காலப்போக்கில் யூதா மக்கபேயின் சகோதரர்கள், ஆதரவாளர்கள், பிற யூதத் தலைவர்கள் ஆகிய அனைவருமே "மக்கபேயர்" என்று குறிப்பிடப்பெற்றனர்.

அந்தியோக்கு எப்பிபானின் ஆட்சி தொடங்கி யோவான் இர்க்கான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதுவரை (கி.மு. 175-134) யூத வரலாற்றில் இடம் பெற்ற குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது. ஏறத்தாழ கி.மு. 100இல் பாலசுத்தீனதைச் சேர்ந்த யூதர் ஒருவரால் இந்நூல் எபிரேயத்தில் எழுதப்பெற்றிருக்க வேண்டும். அது தொலைந்துவிட, செப்துவசிந்தா (Septuaginta)[2] என்று அழைக்கப்படும் அதன் கிரேக்க மொழிபெயர்ப்பே இன்று நமக்கு மூலபாடமாக இருந்து வருகிறது.

இசுரயேலரைக் காப்பதற்காகக் கடவுள் மக்கபேயரைத் தேர்ந்தெடுத்து, வரலாற்றில் அவர்களோடு இருந்து செயல்படுகிறார், அவர்மீது பற்றுறுதி கொள்வோருக்கு வெற்றி அருள்கிறார் என்னும் செய்தியை இந்நூல் வலியுறுத்துகிறது.

நூலிலிருந்து சில பகுதிகள்

[தொகு]

1 மக்கபேயர் 1:20-24


"நூற்று நாற்பத்து மூன்றாம் ஆண்டில் அந்தியோக்கு எகிப்தை வென்று திரும்புகையில்
வலிமைமிக்க படையோடு இசுரயேலைத் தாக்கி எருசலேமை அடைந்தான்;
அகந்தையோடு திருஉறைவிடத்திற்குள் புகுந்து, பொற்பீடம், விளக்குத்தண்டு, அதோடு இணைந்தவை,
காணிக்கை அப்பமேசை, நீர்மப் படையலுக்கான குவளைகள், கிண்ணங்கள், திரை, பொன்முடிகள்,
கோவில் முகப்பிலிருந்த பொன் அணிகலன்கள் ஆகிய அனைத்தையும் சூறையாடினான்;
வெள்ளியையும் பொன்னையும் விலையுயர்ந்த கலன்களையும் கைப்பற்றினான்;
ஒளித்து வைத்திருந்த செல்வங்களையும் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டான்;
இசுரயேலில் பலரைக் கொன்று குவித்தபின், கொள்ளைப் பொருள்களோடு தன் நாடு திரும்பினான்;
தன் செயல்கள்பற்றிப் பெருமையாகப் பேசிவந்தான்."

1 மக்கபேயர் 2:49-51,61


"இறக்கும் காலம் நெருங்கிய போது மத்தத்தியா தம் மைந்தர்களை நோக்கி,
'என் மக்களே, இப்போது திருச்சட்டத்தின்பால் பற்றார்வம் கொண்டிருங்கள்;
நம் மூதாதையரின் உடன்படிக்கைக்காக உங்கள் உயிரைக் கொடுங்கள்.
நம் மூதாதையர் தங்கள் காலத்தில் செய்த செயல்களை நினைவுகூருங்கள்;
இதனால் பெரும் மாட்சியும் நிலைத்த பெயரும் பெறுவீர்கள்.
ஆபிரகாம் சோதிக்கப்பட்ட வேளையிலும் பற்றுறுதி உள்ளவராய்க் காணப்படவில்லையா?
அதனால் இறைவனுக்கு ஏற்புடையவர் என்று மதிக்கப்படவில்லையா?
யோசேப்பு தமக்கு இடர்பாடு நேரிட்ட காலத்தில் கட்டளைகளைக் கடைப்பிடித்தார்;
எகிப்தின் ஆளுநர் ஆனார்...
இவ்வாறே, கடவுளை நம்பினோர் ஆற்றலில் சிறந்தோங்குவர் என்பதை
ஒவ்வொரு தலைமுறையிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்' என்றார்."

உட்பிரிவுகள்

[தொகு]
பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முகவுரை 1:1-9 218
2. யூதர்களின் துன்பமும் மக்கபேயரின் கிளர்ச்சியும் 1:10 - 2:70 218 - 221
3. யூதா மக்கபேயின் தலைமை 3:1 - 9:22 221 - 241
4. யோனத்தானின் தலைமை 9:23 - 12:53 241 - 256
5. சீமோனின் தலைமை 13:1 - 16:24 256 - 266

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1 மக்கபேயர் நூல்
  2. செப்துவசிந்தா பெயர்ப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=1_மக்கபேயர்_(நூல்)&oldid=1480699" இலிருந்து மீள்விக்கப்பட்டது