உள்ளடக்கத்துக்குச் செல்

எசேக்கியேல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசேக்கியேல் கண்ட காட்சி (எசே 1:1-28). ஓவியர்: ரஃபயேல்லோ சான்சியோ (1483 - 1520). காப்பிடம்: ஃபுளோரன்சு, இத்தாலியா.

எசேக்கியேல் (Ezekiel) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

பெயர்[தொகு]

எசேக்கியேல் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் יְחֶזְקֵאל‎ (Y'ḥez'qel[jəħezˈqel])என்னும் பெயர் கொண்டுள்ளது. அதன் பொருள் "ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்" என்பதாகும். கிரேக்கத்தில் Iezekiel என்றும், இலத்தீனில் Ezechiel என்றும் இந்நூல் பெயர்கொண்டுள்ளது.

குருவும் இறைவாக்கினருமான எசேக்கியேல்[தொகு]

எசேக்கியேல் என்னும் பெயர் கொண்ட இறைவாக்கினர் எருசலேம் நகரின் வீழ்ச்சிக்கு முன்பும் பாபிலோனியச் சிறையிருப்பின் போதும் வாழ்ந்தவர். பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டோருக்கு மட்டுமன்றி, எருசலேமில் எஞ்சியிருந்தோருக்கும் அவர் இறைவாக்கு உரைத்தார். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சுமார் 22 ஆண்டுகள் அவர் பணியாற்றினார் (கி.மு. 595-573).

எசேக்கியேல் ஆழ்ந்த இறைப்பற்றும் கற்பனை வளமும் கொண்டிருந்தார். எழுச்சிமிகு தம் எண்ணங்கள் பலவற்றைக் காட்சிகளின் வடிவில் எடுத்துரைத்தார். இவர் தம் அறிக்கைகள் பலவற்றை அடையாளச் செயல்கள் வழியாக விளக்கினார். ஒவ்வொருவரும் தம் தீவினைகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், அவர்தம் நெஞ்சமும் எண்ணமும் உள்ளார்ந்த புதுப் பொலிவு பெறவேண்டும் என்றும் எசேக்கியேல் வலியுறுத்தினார்; நாடும் புதுப் பொலிவு பெற்று வாழ்ந்திட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். இவர் குருவாகவும் இறைவாக்கினராகவும் இருந்தமையால், கோவிலைக் குறித்தும் உள்ளத் தூய்மையைக் குறித்தும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்.

குறிப்பிடத்தக்க ஒரு சில பகுதிகள்[தொகு]

எசேக்கியேல் 34:11-14
"தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்.
ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல,
நானும் என் மந்தையைத் தேடிப் போவேன்.
மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன்.
மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து,
அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன்.
அவற்றை இசுரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும்
நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன்.
நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன்.

எசேக்கியேல் 37:4-6
"ஆண்டவர் என்னிடம் உரைத்தது:
நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை.
'உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்' என்று சொல்.
தலவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்:
நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்; உங்கள் மேல் சதையைப் பரப்புவேன்.
உங்களைத் தோலால் மூடுவேன்.
பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன்.
நீங்களும் உயிர்பெறுவீர்கள்.
அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்."

உட்பிரிவுகள்[தொகு]

பொருளடக்கம் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. எசேக்கியேலின் அழைப்பு 1:1 - 3:27 1208 - 1211
2. எருசலேம் பற்றிய அழிவுச் செய்திகள் 4:1 - 24:27 1211 - 1245
3. மக்களினங்களுக்கு எதிரான கடவுளின் நீதித் தீர்ப்புகள் 25:1 - 32:32 1245 - 1258
4. கடவுள் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி 33:1 - 37:28 1258 - 1267
5. கோகுக்கு எதிரான இறைவாக்கு 38:1 - 39:29 1267 - 1271
6. வருங்காலக் கோவில் மற்றும் நாடு பற்றிய காட்சிகள் 40:1 - 48:35 1271 - 1287
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசேக்கியேல்_(நூல்)&oldid=3923726" இலிருந்து மீள்விக்கப்பட்டது