தானியேல் (கி) (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தானியேல் (இ) (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சூசன்னாவும் காமுற்ற முதியோரும். ஓவியர்: பவுலோ வெரொனேசே (1528-1588). காப்பிடம்: லூவர், ஃபிரான்சு.

தானியேல் (இ) / தானியேல் (இணைப்புகள்) (Daniel) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழித் திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டதாக ஏற்கப்பட்டுள்ளது. தானியேல் நூலின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது [1].

தானியேல் நூலோடு சேர்க்கப்பட்ட இணைப்புகள் உட்பட முழுநூலும் இணைத் திருமுறை விவிலிய நூல்களைச் சேர்ந்தது ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும்[2], பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) [3] அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.

பெயர்[தொகு]

தானியேல் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் דָּנִיֵּאל, (Daniyyel, Dāniyyêl) என்னும் பெயர் கொண்டது. "கடவுள் என் நடுவர்" என்பது அதன் பொருள். தானியேல் என்பவர் இந்நூலின் மைய கதாபாத்திரம் ஆவார். கிரேக்க மொழியில் இது Δανιήλ, (Danièl) எனவும் இலத்தீனில் Daniel எனவும் உள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

தானியேல் நூல் விவிலியத்தின் கிரேக்கத் திருமுறையாகிய செப்துவசிந்தா[4] பதிப்பில் மூன்று பெரும் இணைப்புகளைக் கொண்டுள்ளது.

1.இளைஞர் மூவரின் பாடல்: பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் நிறுவிய பொற்சிலையை வணங்க மறுத்ததற்காக அன்னியா, மிசாவேல், அசரியா என்ற மூன்று இளைஞர்கள் சூளையில் எறியப்பட்டார்கள். இத்தகைய தீங்குகளினின்று தங்களையும் தங்கள் மக்கள் இசுரயேலரையும் விடுவிக்குமாறு ஆண்டவரிடம் அசரியா மன்றாட (1-22), அவரும் அவர்களைப் பாதுகாத்தார் (23-27). பின் அம்மூவரும் சேர்ந்து ஆண்டவருக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்தனர் (28-67).

2.சூசன்னா: யூத ஒழுக்கத்தின்படி அப்பழுக்கற்றவராய் வாழ்ந்துவந்த சூசன்னாவின் பேரழகில் மயங்கிய முதியோர் இருவர் காமுற்று அவரை அடைய முயன்றனர் (1-27). அது நிறைவேறாததால் அவர்மீது பொய்க் குற்றம் சுமத்தி, அவருக்குச் சாவுத் தண்டனை விதித்தனர் (28-41). ஆண்டவரோ தானியேல் வழியாக அவருக்கு முறையான தீர்ப்பு வழங்கி, அவரைச் சாவின் பிடியிலிருந்து விடுவித்தார் (42-64).

3.பேல் தெய்வமும் அரக்கப்பாம்பும்: இப்பகுதி எரேமியா இறைவாக்கினரின் சொற்களை (51:34,35,41) அடிப்படையாகக் கொண்டது. பேல் என்னும் தெய்வம் முழுமுதற் கடவுள் அல்ல என்பது இதன்மூலம் தெளிவாகிறது (1-22). இதே போன்று, பாபிலோனியர் வணங்கிவந்த அரக்கப்பாம்பும் கடவுள் அல்ல என்பது வெளிப்படுகிறது (23-30). இவற்றுடன் இறைவாக்கினர் அபக்கூக்குப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றும் இணைக்கப்படுகிறது (33-39). இறுதியில் ஆண்டவர் தானியேலைச் சிங்கக் குகையினின்று வியத்தகு முறையில் விடுவிப்பது விளக்கப்படுகிறது (31-32, 40-42).

இப்பகுதிகள் மூன்றும் கிரேக்க மொழியில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். செப்துவசிந்தா பாடத்தைவிடத் தெயொதோசியோன் மொழிபெயர்ப்பு தொன்மை வாய்ந்தது; ஆதலால் தமிழ்ப் பொதுமொழிபெயர்ப்பில் அதுவே மூலபாடமாக அமைகிறது.

மையக் கருத்து[தொகு]

"இசுரயேலின் கடவுள் அனைத்திற்கும் ஆண்டவர் ஆவார்; அவர் வரலாற்றில் குறுக்கிட்டுத் தம்மில் நம்பிக்கை கொள்வோரை எவ்வகைத் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுவார்" என்ற தானியேல் நூலினது எபிரேய மொழி வடிவத்தில் நாம் காணும் மையக் கருத்தையே இம்மூன்று பகுதிகளும் வலியுறுத்துகின்றன.

நூலிலிருந்து ஒரு பகுதி[தொகு]

தானியேல் (கி): இளைஞர் மூவரின் பாடல் 28,57-59


"அப்பொழுது இளைஞர் மூவரும் தீச்சூளையில்
ஒரே குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து மாட்சிப்படுத்தினர்:
வானத்துப் பறவைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்.
காட்டு விலங்குகளே, கால்நடைகளே,
நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
மண்ணுலக மாந்தர்களே,
ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,
ஏத்திப் போற்றுங்கள்."

உட்பிரிவுகள்[தொகு]

பொருளடக்கம் இணைப்பில் காணப்படும் பிரிவு மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இணைப்பு 1: இளைஞர் மூவரின் பாடல் 1:1-67 203 - 206
2. இணைப்பு 2: சூசன்னா 2:1-63 207 - 210
3. இணைப்பு 3: பேல் 3:1-40 211 - 213

ஆதாரங்கள்[தொகு]

  1. தானியேல் நூல் இணைப்புகள்
  2. கார்த்தேசு சங்கம்
  3. திரெந்து பொதுச் சங்கம்
  4. செப்துவசிந்தா
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானியேல்_(கி)_(நூல்)&oldid=1480700" இலிருந்து மீள்விக்கப்பட்டது