இணைத் திருமுறை நூல்கள்
விவிலியத்தின் |
பழைய ஏற்பாட்டு நூல்கள் |
---|
கிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல் |
இணைத் திருமுறை நூல்கள் (Deutero-Canonical Books) என்னும் பெயரில் அழைக்கப்படுகின்ற விவிலிய நூல்கள் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகக் கத்தோலிக்க திருச்சபையாலும், மரபுவழித் திருச்சபையாலும் கருதப்படுகின்றன.[1][2][3]
இணைத் திருமுறை நூல்கள் யாவை?
[தொகு]கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்ட பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில், பழைய ஏற்பாட்டின் 39 எபிரேய திருமுறை நூல்களோடு இணைக்கப்பட்டுள்ள தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1 மக்கபேயர், 2 மக்கபேயர் ஆகிய ஏழு நூல்களும், எஸ்தர், தானியேல் நூல்களில் காணப்படும் கிரேக்க இணைப்புகளான எஸ்தர் (கிரேக்கம்), தானியேல் (இணைப்புகள்) ஆகியவை இணைத் திருமுறை நூல்கள் என்று பெயர்பெறுகின்றன. இணைத் திருமுறை நூல்கள் என்று பெயர்பெறுகின்றன. இவை எபிரேய விவிலியத்தில் இடம் பெறவில்லை எனினும், செப்துவசிந்தா (Septuaginta) (எழுபதின்மர் மொழிபெயர்ப்பு) எனப்படும் கிரேக்க விவிலியத்தில் மேற்காணும் நூல்கள் இடம்பெற்றுள்ளன.
திரெந்து திருச்சங்கம் இணைத் திருமுறை நூல்களை ஏற்றல்
[தொகு]இந்நூல்களின் இறைஏவுதல் பற்றிக் கிறித்தவர்கள் நடுவில் கருத்து வேறுபாடு தொடக்கத்திலிருந்தே நிலவிவந்துள்ளது. திரெந்து (Trent) நகரில் கூடிய திருச்சங்கம் (Council of Trent) இவற்றை இறைஏவுதலால் எழுதப்பட்ட திருநூல்கள் என்று கி.பி. 1546இல் அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டது. இதனால் இவை இணைத் திருமுறை நூல்கள் (Deutero-canonical books) எனப் பெயர் பெறுகின்றன.
சீர்திருத்த சபையினர் திருமுறைப் புற நூல்கள் என்று அழைத்தல்
[தொகு]திருச்சபைச் சீர்திருத்தத்தில் ஈடுபட்ட மார்ட்டின் லூத்தர் இந்நூல்களை விவிலியத்தைச் சேர்ந்த நூல்களாக ஏற்றுக்கொள்ளவில்லை; எனினும் இவை பயனுள்ளவை, படிக்கத் தகுந்தவை என்று ஒப்புக்கொண்டார். 1534இல் தாம் வெளியிட்ட செருமானிய விவிலிய மொழிபெயர்ப்பில் இவற்றைப் பழைய ஏற்பாட்டின் இறுதியில் "திருமுறைப் புற நூல்கள்" (Apocrypha) என்னும் தலைப்பின்கீழ் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து வெளிவந்த பல மொழிபெயர்ப்புகளும் இம்முறையையே பின்பற்றின.
கிறித்தவ ஒன்றிப்பு முயற்சிகள்
[தொகு]சீர்திருத்தச் சபைகளின் அமைப்பான விவிலியச் சங்கங்களின் இணையமும் கத்தோலிக்கத் திருச்சபையின் கிறித்தவ ஒன்றிப்புச் செயலகமும் இணைந்து பொது விவிலிய மொழிபெயர்ப்புக்குரிய விதிமுறைகளை 1968இல் வெளியிட்டன. பின் அவ்விதிமுறைகளை 1987இல் திருத்தியமைத்தன. இப்பொழுது வெளிவந்துகொண்டிருக்கும் பொது விவிலிய மொழிபெயர்ப்புகள் எல்லாமே மேற்கண்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. அவற்றின்படி இணைத் திருமுறை நூல்களைப் புதிய ஏற்பாட்டு நூல்களுக்கு முன்னர் அச்சிடும் வழக்கம் 1995இல் வெளியிடப்பட்ட திருவிவிலியம் (இணைத் திருமுறையுடன்) (பொது மொழிபெயர்ப்பு) என்னும் தமிழ்ப் பெயர்ப்பில் பின்பற்றப்பட்டுள்ளது.
கிரேக்க மூல பாடம்
[தொகு]முனைவர் ஆல்பிரட் ரால்வ்ஸ் (Alfred Rahlfs) என்பவரால் பதிப்பிக்கப்பட்டு, 1935இல் செருமானிய விவிலியச் சங்கத்தால் ஸ்டுட்கார்ட் நகரில் வெளியிடப்பட்ட செப்துவசிந்தா கிரேக்கப் பதிப்பு இப்பகுதிக்கு மூலபாடமாய் அமைகிறது.
இணைத் திருமுறை நூல்களின் பயன்
[தொகு]கிறிஸ்து பெருமான் தோன்றுவதற்குச் சற்றே முற்பட்ட யூத வரலாறு, வாழ்க்கை முறை, சிந்தனை, சமயப் பழக்கவழக்கங்கள் முதலியன பற்றிப் பல செய்திகள் இந்நூல்களிலிருந்து கிடைப்பதால், வரலாற்று இயேசுவைப் புரிந்துகொள்ள இவை பெரிதும் துணைபுரிகின்றன. இதனால் பிரிவு மனப்பான்மையை விடுத்துத் திறந்த உள்ளத்தோடு இந்நூல்களைப் படிக்கும் நிலை இன்று உருவாகிவருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Livingstone, E. A. (2013). The Concise Oxford Dictionary of the Christian Church (in ஆங்கிலம்). OUP Oxford. pp. 28–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-107896-5. பார்க்கப்பட்ட நாள் 17 June 2020.
- ↑ "Apocrypha". International Standard Bible Encyclopedia Online. Wm. B. Eerdmans Publishing Co. பார்க்கப்பட்ட நாள் 7 October 2019.
- ↑ Gleason L., Archer Jr. (1974). A Survey of Old Testament Introduction. Chicago, IL: Moody Press. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780802484468. பார்க்கப்பட்ட நாள் 7 October 2019.