ஒபதியா (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

விவிலியத்தின் |
பழைய ஏற்பாட்டு நூல்கள் |
---|
![]() |
![]() ![]() |
ஒபதியா (Obadiah) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.
பெயர்[தொகு]
ஒபதியா என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் עבדיה (Ovadyah) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் இந்நூல் Obdios என்றும் இலத்தீனில் Abdias என்றும் உள்ளது. இப்பெயரின் பொருள் "இறையடியான்" என்பதாகும்.
ஆசிரியர் மற்றும் பின்னணி[தொகு]
இறைவாக்கு நூல்களிலேயே மிகச் சிறிதான இந்நூல் கி.மு. 586இல் எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்ததற்குச் சற்றுப் பின்னர் தோன்றியதாகும்.
எருசலேமின் வீழ்ச்சியைக் கண்டு யூதாவின் பழம்பெரும் எதிரியான ஏதோம் நாடு அக்களித்தது. அத்தோடு நில்லாமல் அது யூதாவில் புகுந்து கொள்ளையடித்து, பிற எதிரிகளும் அதனுள் நுழையத் துணை நின்றது. எனவே இசுரயேலின் எதிரிகளான மற்றெல்லா இனத்தோடும் ஏதோம் நாடும் தண்டிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்படும் என்று ஒபதியா முன்னுரைக்கிறார்.
உட்கிடக்கை[தொகு]
இந்நூலில் ஓர் அதிகாரமும் அதில் 21 வசனங்கள் மட்டும் உள்ளன. நூல் சிறிதாயினும் அது வழங்குகின்ற செய்தி முக்கியமான அறிவுரையாக அமைந்துள்ளது.
வசனங்கள் 1 முதல் 9 வரை: ஏதோம் நாட்டை ஆண்டவர் தண்டிப்பார் என்னும் செய்தி வழங்கப்படுகிறது. திருடர்களும் கொள்ளைக்காரர்களும் தமக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆனால் ஏதோமின் அழிவின்போது ஒன்றுமே எஞ்சியிராது.
வசனங்கள் 10 முதல் 14 வரை: கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இசுரயேல் மக்கள் ஆபத்துக்கு உள்ளானபோது ஏதோம் ஒரு பகைவனைப் போல் நடந்துகொண்டது; இசுரயேலுக்கு உதவிசெய்ய முன்வரவில்லை. தன் சகோதரன் யாக்கோபின் மக்களாகிய இசுரயேலுக்கு ஏசாவின் வழித்தோன்றல்களாகிய ஏதோமியர் உதவி செய்யாதது கடவுள் முன்னிலையில் பெரும் குற்றமே.
வசனங்கள் 15 முதல் 21 வரை: ஏதோம் அழியும் என்றும் இசுரயேல் வெற்றி பெறும் என்றும் இறைவாக்கினர் அறிவிக்கிறார்.
இச்சிறுநூல் வழங்கும் செய்தியைப் பின்வருமாறு குறிப்பிடலாம்:
1) ஏசாவும் யாக்கோபும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்த போதிலும் ஏசா தன் சகோதரன் யாக்கோபுக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை. சகோதர அன்பு காட்டாதவருக்குக் கடவுளின் தண்டனை கிடைக்கும்.
2) ஏசாவும் யாக்கோபும் தம் தாய் வயிற்றில் இருக்கும்போதே போட்டியில் ஈடுபட்டதாக விவிலியம் கூறுகிறது (காண்க: தொடக்க நூல் 25:19-26). அவர்கள் வழிவந்தோரும் அவ்வாறே நடந்தனர். மனித வாழ்விலும் ஆவிக்கும் ஊனுடலுக்குமிடையே போராட்டம் தொடர்கிறது (காண்க: உரோமையர் 8:6-9; கொலோசையர் 3:5). இறுதியில் ஆவியே வெல்லும்.
நூலிலிருந்து ஒரு பகுதி[தொகு]
ஒபதியா 10-12
ஆண்டவர் கூறுகிறார்:
"உன் சகோதரன் யாக்கோபுக்கு எதிராக நீ செய்த கொடுமையை முன்னிட்டு,
நீ வெட்கி நாணுவாய்.
நீ என்றுமே இல்லாது ஒழிந்துபோவாய்.
அயல்நாட்டார் யாக்கோபின் செல்வத்தைக் கொள்ளையிட்ட அந்நாளில் -
வெளிநாட்டார் அவன் வாயில்களுக்குள் புகுந்து
எருசலேமுக்கு எதிராகத் தங்களுக்குள் சீட்டுப்போட்ட அந்நாளில் -
நீ விலகி நின்று அவர்களுள் ஒருவனாக இருந்தாயே!
நீ உன் சகோதரனுடைய நாளைக் கண்டு,
அவனுடைய வேதனை நாளைக் கண்டு
மகிழ்ச்சியடையாதிருந்திருக்க வேண்டும்;
யூதாவின் மக்களைப் பார்த்து
அவர்களின் அழிவு நாளில் களிப்படையாது
இருந்திருக்க வேண்டும்;
அவர்களின் துன்ப நாளில்
இறுமாப்படையாது இருந்திருக்க வேண்டும்."
உட்பிரிவுகள்[தொகு]
பொருளடக்கம் | நூல் அதிகாரத்தில் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. ஏதோமிற்கு வரும் தண்டனைத் தீர்ப்பு | 1 - 14 | 1352 - 1353 |
2. ஆண்டவரின் நாள் | 15 - 21 | 1353 - 1354 |