உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ்தர் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்தர் அரசி. ஓவியர்: எட்வர்ட் லாங்க். ஆண்டு: 1878. காப்பிடம்: மெல்பேர்ன், அவுசுத்திரேலியா.

எஸ்தர் (Esther) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

இந்நூலில் வருகின்ற கதைத் தலைவியின் பெயர் எஸ்தர். அவருடைய இயற்பெயர் அதசா (Hadassah). எபிரேய மொழியில் எஸ்தர் பெயர் אֶסְתֵּר (Esther) என்றும், கிரேக்கத்தில் Εσθήρ (Esther) என்றும் இலத்தீனில் Esther என்றும் வழங்குகிறது. அவருடைய இயற்பெயர் அதசா (Hadassah). எஸ்தர் (எபிரேயம்: אֶסְתֵּר) எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் யூதப் பெண் (எஸ் 2:7). அவரை மையமாகக் கொண்டு அமைந்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் பாரசீகப் பேரரசர் அகஸ்வேரின் குளிர்கால அரண்மனையில் நடைபெற்றவை.

யூதப் பெண்ணாகிய எஸ்தர் தம் மக்கள்பால் பேரன்பு கொண்டிருந்தார். அம்மக்களை அழிக்க எதிரிகள் திட்டமிட்டபோது எஸ்தர் மிகுந்த துணிவுடன் செயல்பட்டதை இந்நூல் விளக்குகிறது.

பூரிம் என்ற யூதப் பெருவிழாவின் பொருளும் அதன் பின்னணியும் இந்நூலில் எடுத்துக் கூறப்படுகின்றன.

எஸ்தர் நூலில் வரலாற்று நிகழ்வுகள் பல குறிப்பிடப்பட்டாலும், அதை ஒரு வரலாற்றுப் புதினம் என்று கொள்வதே பொருத்தம் என்பது விவிலிய அறிஞர் கருத்து.

எபிரேய பாடத்தில் உள்ள பகுதிகள் 10 அதிகாரங்களுடன்:

 1. அரசி வஸ்தி மன்னர் அகஸ்வோரை அவமதித்தல்
 2. எஸ்தர் அரசி ஆதல்
 3. யூதரை அழிக்க ஆமானின் திட்டம்
 4. அரசி எஸ்தரின் உதவியை மொர்தக்காய் நாடல்
 5. மன்னரையும் ஆமானையும் எஸ்தர் விருந்துக்கு அழைத்தல்
 6. மொர்தக்காய்க்கு மன்னர் உயர்வு அளித்தல்
 7. ஆமான் கொல்லப்படல்
 8. தம்மைக் காத்துக் கொள்ளும்படி எஸ்தர் யூதரைத் தூண்டல்
 9. யூதர் தம் எதிரிகளை அழித்தல்
 10. நிறையுரை

எபிரேய வடிவத்திற்கும் கிரேக்க வடிவத்திற்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள்

[தொகு]

எஸ்தர் (கி) / எஸ்தர் (கிரேக்கம்) (Esther) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழாத் திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டதாக ஏற்கப்பட்டுள்ளது.

எபிரேய மொழியில் அமைந்த எஸ்தர் நூலே மூல பாடம் என்று அறிஞர் கருதுகின்றனர். கிரேக்க பாடம் இருவேறு வடிவங்களில் உள்ளது. கிரேக்க பாடம் எபிரேய பாடத்தின் மொழிபெயர்ப்பாக இருந்தாலும், எழுத்துக்கு எழுத்து என்று மொழிபெயர்ப்பு இல்லை. மேலும், கிரேக்க பாடம் 6 பெரும் பகுதிகளை அதிகமாகக் கொண்டுள்ளது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் செய்யப்பட்ட இலத்தீன் மொழிபெயர்ப்பில் கிரேக்க இணைப்புகள் எஸ்தர் நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டன.

இக்காலத்தில், கிரேக்க இணைப்புகள் தொடக்கத்தில் இருந்ததுபோல ஆங்காங்கே சேர்க்கப்படுவது வழக்கம்.

இவ்வாறு கிரேக்க எஸ்தர் நூலில் சில பகுதிகள் அதிகமாகச் சேர்க்கப்பட்டதால், எபிரேய மொழி எஸ்தர் நூலில் இருக்கும் மொத்தம் 167 வசனங்கள் கிரேக்க மொழி எஸ்தர் நூலில் 270 வசனங்களாக விரிந்தன.

கிரேக்க பாடத்தில் சேர்க்கப்பட்ட பகுதிகள் இவை:

 1. முதல் அதிகாரம்: 1a - 1r : மொர்தக்காயின் கனவு; மன்னருக்கு எதிரான சூழ்ச்சி வெளிப்படுதல்.
 2. மூன்றாம் அதிகாரம்: 13a - 13g : யூதர்களைக் கொன்றொழிப்பதற்கான அரசாணையின் பாடம் (மூல பாடம் கிரேக்கமாக இருக்கலாம்).
 3. நான்காம் அதிகாரம்: 17a - 17z : மொர்தக்காயின் மன்றாட்டு; எஸ்தரின் மன்றாட்டு.
 4. ஐந்தாம் அதிகாரம்: 1 - 2b : எஸ்தர் மன்னரிடம் சென்று வேண்டுகோள் விடுத்தல்.
 5. எட்டாம் அதிகாரம்: 12a - 12x : யூதர்களுக்குச் சலுகைகள் வழங்கும் அரசாணை (மூல பாடம் கிரேக்கமாக இருக்கலாம்).
 6. பத்தாம் அதிகாரம்: 3a - 3b : தாம் கண்ட கனவு நிறைவேறியது குறித்து மொர்தக்காய் விளக்குகிறார்.

இவ்வாறு சேர்க்கப்பட்ட பகுதிகளில் கடவுளின் பெயர் குறைந்தது ஐம்பது முறையாவது வருகிறது. எபிரேய மூல பாடத்தில் கடவுள் பெயர் நேரடியாக ஓரிடத்திலும் வரவில்லை. எனவே, கிரேக்க சேர்க்கைகள் எபிரேய பாடத்தையே பொதுவாகப் பின்பற்றினாலும், கதையின் பின்னணியை ஓரளவு மாற்றியமைக்கிறது. அதாவது, எஸ்தர் என்னும் பெண்மணி கடவுளின் கருவியாக இருந்து, கடவுளின் துணையோடு தன் இன மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுகிறார் என்னும் செய்தி கிரேக்க பாடத்தில் தெளிவாக வெளிப்படுகிறது.

கதைச் சுருக்கம்

[தொகு]
 • அகஸ்வேர் (கிரேக்கம்: அர்த்தக்சஸ்தா) என்னும் பாரசீக அரசரின் மனைவி வஸ்தி (கிரேக்கம்: ஆஸ்தின்) அரசி. ஒரு சமயம் அரசர் மாபெரும் விருந்தொன்று அளிக்கிறார். அரசி வஸ்தியும் உயர்குடிப் பெண்டிருக்கு விருந்தளிக்கிறார். ஏழு நாள்கள் தொடர்ந்த விருந்தின் இறுதி நாளில் அரசர் அதிகமாகக் குடித்துவிட்டு, தம் அரசியை விருந்தினர்முன் வரச்சொல்லி அவரது அழகைக் காட்டுவதற்குக் கேட்கிறார். ஆனால் அரசியோ அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்து, வரமுடியாது என்று சொல்லிவிடுகிறார்.
 • இதனால் அரசன் கடும் கோபமடைகிறார். தம் ஆணையை மீறிய வஸ்தி அரசியை என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறார். அரசியைத் தண்டிக்காமல் விட்டால் அரசு முழுவதிலுமுள்ள மனைவியர் தம் கணவர் சொல் கேட்டு நடக்க மறுப்பார்கள் என்றும், அதனால் அரசிக்குத் தண்டனை கொடுத்தால் நாடு முழுவதற்கும் அது ஒரு பாடமாக இருக்கும் என்றும் ஆலோசனை கூறுகிறார்கள். அரசி இனிமேல் தம் கண்முன் வரலாகாது என்று அரசர் அவரை ஒதுக்கிவிடுகிறார்.
 • ஒரு புதிய அரசியைத் தேடும் படலம் தொடங்குகிறது. நாடெங்கிலுமிருந்து அழகிய இளம் பெண்கள் அழைக்கப்படுகிறார்கள். அப்போது சூசா நகரைச் சார்ந்த யூத குலத்தவரான மொர்தக்காய் என்பவரின் வளர்ப்பு மகளாகிய எஸ்தர் என்னும் அழகிய பெண்ணும் வருகிறார். மொர்தக்காயும் எஸ்தரும் யூதர்கள் என்பது அரசனுக்கோ பிறருக்கோ தெரியாது.
 • அழகு மிகுந்த எஸ்தரை அரசன் தன் நாட்டுக்கு அரசியாக முடிசூட்டுகிறார். ஒருசிலர் அரசனைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டுவதை அறிந்த மொர்தக்காய் அதை எஸ்தர் வழியாக அரசனுக்குத் தெரிவித்து அரசனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார். அரசனும் மொர்தக்காயைப் பாராட்டுகிறார்.
 • ஆனால் அரசவையில் உயர்பதவி வகித்த ஆமான் என்பவன் மொர்தக்காய் தனக்கு மரியாதை செலுத்தவில்லை என்று சினம் கொண்டு அவரைக் கொல்ல வழிதேடுகிறான். அவர் ஒரு யூதர் என்றறிந்து, நாட்டில் உள்ள எல்ல யூதர்களையும் அடியோடு ஒழித்திட மன்னன் ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று அவரிடம் ஆமான் கேட்கிறான்.
 • அரசன் ஒப்புதல் தரவே, ஆமான் நாட்டிலுள்ள யூதர்களைக் கொல்லவும் அவர்களுடைய சொத்துக்களைச் சூறையாடவும் ஆணை பிறப்பிக்கிறான். இதை அறிந்த மொர்தக்காய் தம் இன மக்களுக்கு நேரவிருக்கின்ற கொடுமையைத் தவிர்க்கும் வண்ணம் அரசனின் மனத்தை மாற்றுவதற்காக எஸ்தர் வழி முயற்சி செய்கிறார். மொர்தக்காயும் எஸ்தரும் தம்மையும் தம் இன மக்களையும் காக்கும்படி கடவுளை மன்றாடுகின்றனர்.
 • ஒருநாள் எஸ்தர் அரசி அகஸ்வேர் அரசனுக்கும் அரசவை அதிகாரி ஆமானுக்கும் விருந்தளிக்கிறார். ஆமான் ஒரு தூக்குமரத்தை ஏற்பாடு செய்து, அதில் மொர்தக்காயை ஏற்றிக் கொல்வதற்குத் திட்டமிடுகிறான். அரசி மறுநாளும் அரசரும் ஆமானும் விருந்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்கிறார். ஆமான் பெருமகிழ்ச்சியுற்று, தன் திட்டம் நிறைவேறும் தருணம் வந்துவிட்டது என்று மனப்பால் குடிக்கின்றான்.
 • இதற்கிடையில் அரசர் தம் உயிரைக் காப்பாற்றிய மொர்தக்காயைப் பெருமைப்படுத்த எண்ணுகிறார். விருந்துக்கு வந்த ஆமானிடம் அவர், "நான் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு என்ன செய்யலாம்?" என்று ஆலோசனை கேட்கின்றார். தன்னைப் பெருமைப்படுத்த மன்னர் கேட்கிறார் என்று தப்புக் கணக்குப் போட்ட ஆமான், மிக்க மகிழ்ச்சியோடு, "மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு விலை உயர்ந்த ஆடைகள் அணிவித்து, அவரைக் குதிரையில் ஏற்றி எல்லாரும் பாராட்டும் விதத்தில் நகரின் தெருக்களில் வலம் வரச் செய்யலாம்" என்று ஆலோசனை கூறுகிறான். தான் பெருமைப்படுத்த விரும்பிய மனிதர் வேறு யாருமல்ல, மொர்தக்காய்தான் என்று அரசர் கூறியதும் ஆமான் அதிர்ச்சியடைகிறான்.
 • மொர்தக்காய் பெருமைப்படுத்தப்படுகிறார். ஆமான் தன் தலையை மூடிக்கொண்டு துயரத்தோடு வீடு சென்று, தன் மனையிடம் நடந்ததையெல்லாம் கூறுகிறான்.
 • அரசி எஸ்தர் அளித்த விருந்தில் கலந்துகொண்ட அரசன் அகஸ்வேர் மீண்டும் ஒருமுறை அரசியிடம், "உனக்கு என்ன வேண்டும், கேள்" என்று கூற அரசி, "என் உயிரையும் என் மக்களின் உயிரையும் காப்பாற்றும். ஆமான் எங்களைக் கொல்லத் தேடுகிறான்" என்கிறார். ஆமான் பெரிய இக்கட்டில் மாட்டிக் கொள்கிறான். அரசியின் மஞ்சத்தின்மீது விழுந்தபடி, தன் உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறான். இதைக் கண்ட அரசர், இந்த ஆமான் என் மனைவியையே கெடுக்க எண்ணிவிட்டானா என்று கூறி, மொர்தக்காயைத் தூக்கிலிட்டுக் கொல்வதற்காக ஆமான் ஏற்பாடு செய்திருந்த அதே தூக்குமரத்தில் ஆமானைத் தூக்கிலிடும்படி ஆணையிடுகிறார்.
 • ஆமான் தூக்கில் ஏற்றப்பட்டு சாகிறான். அரசன் அகஸ்வேர் புதிதாக ஓர் ஆணை பிறப்பித்து, யூதர்கள் தங்கள் சமயத்திற்கேற்ப சட்டங்களைக் கடைப்பிடிக்கலாம் என்றும், தங்கள் பகைவர்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அறிக்கையிடுகிறார். யூதர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்ட அதார் மாதம் பதினான்காம் நாளையும் பதினைந்தாம் நாளையும் திருவிழாவாகக் கொண்டாட வழிபிறக்கிறது. இதுவே பூரிம் திருவிழா.
 • கதையின் தொடக்கத்தில் மொர்தக்காய் ஒரு கனவு கண்டார். அக்கனவு நிறைவேறியதை எடுத்துரைத்து, எஸ்தர் (கி) நூல் முடிவடைகிறது.

நூல் வழங்கும் செய்தி

[தொகு]

பாரசீகர்களின் ஆட்சியில் (கி.மு. 538-333) யூதர்கள் ஓரளவு உரிமையுடன் வாழ்ந்து, சில சலுகைகள் பெற்றிருந்தார்கள். இதைப் பின்னணியாகக் கொண்டு இயற்றப்பட்டதே எஸ்தர் என்னும் நூல்.

இது எபிரேய மொழியில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். சிறு சிறு நீக்கங்கள், சுருக்கங்களைத் தவிர, இதன் கிரேக்க பாடம் ஆறு பெரும் இணைப்புகளைக் கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்ட அந்த இணைப்புகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எபிரேயப் பாடத்துடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

எஸ்தர் (கி) என்னும் நூலின் தமிழாக்கத்தில் சிறப்புப் பெயர்களும் வசன எண் வரிசையும் கிரேக்க பாடத்தையொட்டி அமைந்துள்ளன.

எபிரேய பாடம் விளக்கும் நிகழ்ச்சிகளின் போக்கில் எவ்வகை மாற்றத்தையும் கிரேக்க இணைப்புகள் தோற்றுவிக்கவில்லை. எனினும், கடவுளைப் பற்றிய வெளிப்படையான குறிப்புகளை நூல் முழுவதும் புகுத்துவதன்மூலம், கடவுளின் பாதுகாப்பு எப்போதும் அவருடைய மக்களான இசுரயேலருக்கு உண்டு என்னும் உண்மையைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

பாரசீகர்களிடமிருந்து யூதர் விடுதலை பெற்றதன் நினைவாகக் கொண்டாடப்பட்ட "பூரிம்" திருவிழாவின்போது இந்நூல் பொதுவில் படிக்கப்பட்டது.

நூலிலிருந்து ஒரு பகுதி

[தொகு]

எஸ்தர் (கி) 4:17r-17z
இசுரயேலின் கடவுளாகிய ஆண்டவரை எஸ்தர் பின்வருமாறு மன்றாடினார்:
ஆண்டவரே, எங்களை நினைவுகூரும்;
எங்கள் துன்ப வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும்;
தெய்வங்களுக்கெல்லாம் மன்னரே,
அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவரே,
எனக்குத் துணிவைத் தாரும்.
சிங்கத்துக்குமுன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்;
எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை மன்னர் வெறுக்கச் செய்யும்;
இதனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியச் செய்யும்...
அனைத்தின் மேலும் அதிகாரம் செலுத்தும் கடவுளே,
நம்பிக்கை இழந்த எங்களது குரலுக்குச் செவிசாயும்.
தீயோரின் கைகளினின்று எங்களைக் காப்பாற்றும்;
அச்சத்தினின்று என்னை விடுவியும்."

உட்பிரிவுகள்

[தொகு]
பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முகவுரை 1:1a - 1r 50 - 51
2. எஸ்தரின் உயர்வு 1:1s - 2:18 51 - 53
3. யூதர்களுக்கு எதிரான சூழ்ச்சி 2:19 - 5:14 53 - 60
4. யூதர்களின் வெற்றி 6:1 - 9:32 60 - 66
5. முடிவுரை 10:1-3l 66 - 67

மேலும் காண்க

[தொகு]

விக்கிமூலத்தில் எஸ்தர் நூல்

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்தர்_(நூல்)&oldid=3923721" இலிருந்து மீள்விக்கப்பட்டது