உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பாடல்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவிலியம்:எபிரேய மூல மொழியில் திருப்பாடல்கள் அடங்கிய ஏட்டுச்சுருள்.
எபிரேய மூல மொழியில் திருப்பாடல்:எண் 1, முதல் இரு வசனங்கள். ஸ்டுட்கார்ட் விவிலியம்.

திருப்பாடல்கள் அல்லது சங்கீதம் (Book of Psalms) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.

திருப்பாடல்கள் நூல் பெயர்[தொகு]

திருப்பாடல்கள் என்னும் நூல் விவிலியப் பக்திப் பாடல்கள், இறை மன்றாட்டுகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். எபிரேய மூல மொழியில் இந்நூல் Tehillim (תְהִלִּים), அதாவது "புகழுரைகள்" என அறியப்படுகிறது. இசுரயேலரின் சமய நம்பிக்கை இந்நூலிலுள்ள 150 பாடல்களில் துலங்கி மிளிர்கிறது எனலாம்.

திருப்பாடல்கள் நூலின் உள்ளடக்கம்[தொகு]

திருப்பாடல்கள் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு கவிஞர்களால் இயற்றப்பட்டவை ஆகும். இப்பாடல்களை இசுரயேல் மக்கள் தங்கள் வழிபாட்டில் பயன்படுத்தினர். காலப்போக்கில் இவற்றின் தொகுப்பு அவர்களது திருமறைநூலின் முக்கியப் பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

திருப்பாடல்கள் வகைகள்[தொகு]

திருப்பாடல்கள் நூலில் உள்ள 150 பக்திப் பாடல்களும் பல வகைகளைச் சார்ந்தவை. அவையாவன:

  1. கடவுளைப் புகழ்ந்து வழிபடுவதற்கானவை.
  2. கடவுளிடம் உதவி, பாதுகாப்பு, மீட்பு வேண்டிப் பாடியவை.
  3. மன்னிப்பு வேண்டும் மன்றாட்டுகள்.
  4. கடவுள் வழங்கிய ஆசிகளுக்கு நன்றி செலுத்தும் பாடல்கள்.
  5. அரசர் பற்றிய பாடல்கள்.
  6. அறிவுரை அளிக்கும் பாடல்கள்.

இப்பாடல்கள் தனி மனிதரின் வேண்டுதலாகவோ, நாட்டு மக்களின் மன்றாட்டாகவோ அமைந்துள்ளன. இவற்றுள் பல, தனிப்பட்ட இறையடியாரின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகின்றன; ஏனையவை இசுரயேல் இனத்தின் நாட்டங்களையும் உணர்ச்சிகளையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.

கிறிஸ்து இயேசுவின் திருவாழ்விலும் திருப்பணியிலும், திருப்பாடல்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன. புதிய ஏற்பாட்டிலும் இப்பாடல்கள் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இப்பாடல்கள் கிறித்தவத் திருமறையிலும் திருச்சபையின் இறைவழிபாட்டிலும் தொடக்கத்திலிருந்தே சிறப்பிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருப்பாடல்கள் நூல் தொகுக்கப்பட்ட காலம்[தொகு]

இந்நூல் கி.மு. 3ஆம் - 2ஆம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டது என அறிஞர் கருதுகின்றனர். ஆனால், தனித்தனிப் பாடல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் இயற்றப்பட்டன என்பது தெளிவு. ஒருசில பாடல்கள் தாவீது அரசரால் (கி.மு. சுமார் 1040 - 970) இயற்றப்பட்டிருக்கலாம், அல்லது அவரது ஆட்சியின்போது எழுந்திருக்கலாம். வேறு சில பாடல்கள் பின்னைய நூற்றாண்டுகளைச் சார்ந்தவை. ஆக, இப்பாடல்கள் இயற்றப்பட்ட காலம் கி.மு. 1000த்திலிருந்து 300 வரை இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.

திருப்பாடல்களின் வரிசை முறை[தொகு]

திருப்பாடல்கள் நூலில் அடங்கியுள்ள பாடல்களை வரிசைப்படுத்துவதில் சில வேறுபாடுகள் உள்ளன. மூல மொழியாகிய எபிரேய விவிலிய வரிசை முறையிலிருந்து கிரேக்க மொழிபெயர்ப்பு வரிசை முறை மாறுபடுகின்றது. கத்தோலிக்க திருச்சபை கிரேக்க வரிசைமுறையைக் கடைப்பிடித்தது; சீர்திருத்த சபைகள் பெரும்பாலும் எபிரேய வரிசைமுறையைக் கடைப்பிடித்தன. சில வேளைகளில் எபிரேய வரிசைமுறை அடைப்புக்குறிகளுக்குள் தரப்படுவதுண்டு.

1995இல் வெளியான தமிழ்த் திருவிவிலியம் எபிரேய வரிசைமுறையைக் கையாளுகிறது. இந்த வரிசைமுறையையும், எபிரேய - கிரேக்க விவிலியத் திருப்பாடல் வரிசை வேறுபாடுகளையும் கீழ்வரும் பட்டியலில் காண்க:

திருப்பாடல்களின் எண்ணிக்கை வரிசை - வேறுபாடுகள்
எபிரேய விவிலியம் கிரேக்க மொழிபெயர்ப்பு குறிப்புகள்
திபா 1–8 திபா 1–8 எண் வரிசை மாற்றம் இல்லை
திபா 9–10 திபா 9 கிரேக்க மொழிபெயர்ப்பில் திபா 9ம் 10ம் ஒரே பாடலாக இணைக்கப்பட்டுள்ளன (திபா 9)
திபா 11–113 திபா 10–112 எபிரேய விவிலியத்தில் ஒரு பாடல் எண் முன்செல்கிறது
திபா 114–115 திபா 113 கிரேக்க மொழிபெயர்ப்பில் திபா 114ம் 115ம் ஒரே பாடலாக இணைக்கப்பட்டுள்ளன (திபா 113)
திபா 116 திபா 114–115 இப்பாடலைக் கிரேக்க விவிலியம் இரு பாடல்களாக வரிசைப்படுத்துகிறது (திபா 115 பாடலின் 10ஆம் வசனத்திலிருந்து தொடங்குகிறது)
திபா 117–146 திபா 116–145 எபிரேய விவிலியத்தில் ஒரு பாடல் எண் முன்செல்கிறது
திபா 147 திபா 146–147 இப்பாடலைக் கிரேக்க விவிலியம் இரு பாடல்களாக வரிசைப்படுத்துகிறது (திபா 147 பாடலின் 12ஆம் வசனத்திலிருந்து தொடங்குகிறது)
திபா 148–150 திபா 148–150 எண் வரிசை மாற்றம் இல்லை

திருப்பாடல்கள் நூல் ஆன்ம வாழ்வை வளப்படுத்தும் கருவி[தொகு]

யூத சமயத்தவரும் கிறித்தவ சமயத்தவரும் திருப்பாடல்கள் நூலில் அடங்கியுள்ள பாடல்களைத் தங்கள் ஆன்ம வாழ்வை வளப்படுத்தும் விதத்தில் பயன்படுத்திவருகின்றனர். இக்கண்ணோட்டத்தில் திருப்பாடல்கள் ஆறு வகையாகப் பிரிக்கப்படுகின்றன:

1) இறைபுகழ் திருப்பாக்கள்[தொகு]

இவை இசுரயேலர் தங்கள் கடவுளைப் படைப்பின் தலைவராகவும் மீட்பளிக்கும் இறைவனாகவும் ஏத்திப் பாடிய பாடல்களாகும். அவை: இறைவனின் மாட்சியை அவரது படைப்பிலும் மீட்பிலும் கண்டு வாழ்த்தும் பாடல்கள் (திபா 8; 19; 29; 33; 100; 103; 104; 108; 111; 113; 114; 117; 135; 136; 145; 146; 147; 148; 149; 150); கடவுள் அரசராக இருந்து உலகை ஆளுகிறார் என்று வாழ்த்தும் பாடல்கள் (திபா 47; 93; 96; 97; 98; 99); ஆண்டவர் கோவில்கொண்டுள்ள சீயோன் மலையைப் புகழ்ந்து, மனிதரைப் படைத்தாளும் அவரைப் புகழ்ந்தேத்தும் பாடல்கள் (திபா 46; 48; 76; 84; 87; 122).

2) புலம்பல் பாடல்கள்[தொகு]

தனிநபர்களும் இசுரயேல் சமூகமும் தங்கள் துன்பதுயரங்களிலும், நோய்நொடிகளிலும் இன்னல் இக்கட்டுகளிலும், பழிபாவங்களிலும் இறைவனை நோக்கிக் கூவி அழைக்கும் பாடல்கள் இவை. தனியார் புலம்பல், சமூகப் புலம்பல் என இப்பாடல்கள் இரு பிரிவுகளிலே அமையும்.

தனியார் புலம்பல்: திருப்பாடல்களிலே மிக அதிக எண்ணிக்கையுடைஅ இப்பாடல்கள் தனி அடியார்களின் உள்ளக் குமுறல்களின் வெளிப்பாடுகளாக உள்ளன. காண்க: திபா 5; 6; 7; 10; 12; 13; 17; 22; 25; 26; 28; 31; 35; 36; 38; 39; 41; 42; 43; 51; 54; 55; 56; 57; 59; 61; 63; 64; 69;70; 71; 86; 88; 102; 109; 120; 130; 140;141; 142; 143.

சமூகப் புலம்பல்: மாற்றார் படையெடுப்பு, பஞ்சம், பிணி முதலியவற்றால் துன்புற்ற இசுரயேல் மக்கள் சமூகமாக ஒன்றுகூடிப் பெருமூச்சுவிட்டு அழும் பாடல்கள் இக்குழுவில் அடங்கும். காண்க: திபா 12; 44; 58; 60; 74; 79; 80; 83;85; 90; 94; 106; 123; 126; 137.

3) நம்பிக்கைப் பாடல்கள்[தொகு]

தனி மனிதராகவும் சமூகமாகவும் இசுரயேலர் கடவுள் மட்டில் தங்களுக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இந்நம்பிக்கை உருவகங்கள், அடையாளங்கள் வழியாக வெளிப்பட்டது. தனியார் நம்பிக்கையையும் சமூக நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் பாடல்கள் உள்ளன.

தனியார் நம்பிக்கைப் பாடல்கள்: தனியொருவர் இறைவன் மேல் கொண்டுள்ள ஆழ்ந்த பற்றுறுதியை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. காண்க: திபா 3; 4; 16; 23; 27; 62; 121; 131.

சமூக நம்பிக்கைப் பாடல்கள்: வழிபாட்டில் கூடியுள்ள இசுரயேல் மக்கள் தங்கள் குழு வெளிப்பாடாக இறைவன் மீதுள்ள ஆழ்ந்த பிடிப்பை வெளிப்படுத்தும் பாடல்கள் இவை. காண்க: திபா 116; 125; 129.

4) நன்றிப் பாடல்கள்[தொகு]

இறைவனிடமிருந்து பெற்ற கொடைகளை நினைந்து அவருக்கு நன்றி செலுத்தும் பாடல்கள் திருப்பாடல் நூலில் பல உண்டு. இவையும் தனியார் பாடல், சமூகப்பாடல் என இருவகைப்படும்.

தனியார் நன்றிப் பாடல்கள்: நோய்நொடி மற்றும் துன்பதுயரங்களினின்று, தம்மை இறைவன் பாதுகாத்ததற்காக, தனி நபர்கள் பாடிய நன்றிப் பாடல்கள் இவை. காண்க: திபா 9; 30; 32; 34; 40; 41; 92; 107; 115; 138.

சமூக நன்றிப் பாடல்கள்: நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட தீமைகளிலிருந்து பாதுகாத்த இறைவனுக்கு, இசுரயேல் மக்கள் சமூகமாகக் கூடி நன்றி செலுத்தியபோது பாடப்பட்ட பாடல்கள் இவை. காண்க: திபா 65; 66; 67; 68; 118; 124.

5) அரச திருப்பாடல்கள்[தொகு]

இசுரயேலர் தங்களை ஆண்ட அரசரையும் அவரது நேர்மையான ஆட்சியையும் தங்கள் வேண்டல்களில் இணைத்தனர். இப்பாடல்களில் அவர்கள் அரசருக்காக மன்றாடுகின்றனர்; அரசரைப் போற்றிப் பாடுகின்றனர்; அரசர் அரியணையேறும் விழா, அரசரின் திருமணவிழா போன்றவற்றைக் கொண்டாடுகின்றனர். காண்க: திபா 2; 18; 20; 21; 45; 72; 89; 101; 110; 132; 144.

6) அறிவுரை வழங்கும் திருப்பாடல்கள்[தொகு]

இத்தொகுதியில் வரும் திருப்பாடல்கள் அனைத்தும் மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுவனவாக அமைந்துள்ளன. கடவுளைப் பற்றிய அறிவை மக்களுக்குப் புகட்டும் பாடல்களில் இறையறிவின் பண்புகள், அதை அடையும் வழிகள் மற்றும் நன்மை தீமை பற்றிய நெறிகள் அறிவுரை முறையில் பல பாடல்களில் உள்ளன. காண்க: திபா 1; 37; 49; 73; 91; 112; 119; 127; 128; 133; 139.

கடவுள் மனிதருக்கு வழங்கும் செய்தியை எடுத்துரைக்கும் பாணியில் அமைந்த திருப்பாடல்கள் உண்டு. காண்க: திபா 14; 50; 52; 53;75;82; 95.

கடந்த கால வரலாற்றில் நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் மக்களுக்கு அறிவு புகட்டும் திருப்பாடல்கள் உண்டு. காண்க: திபா 78; 105; 68; 77; 85; 106; 129; 136; 144.

திருவழிபாட்டில் பங்குபெறுவது பற்றிய குறிப்புகளை உள்ளடக்கிய திருப்பாடல்களும் உள்ளன. காண்க: திபா 15; 24; 134.

திருப்பாடல்கள் நூலின் உட்பிரிவுகள்[தொகு]

பொருளடக்கம் அதிகாரங்கள்/திருப்பாடல்கள் எண்கள் 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முதல் பகுதி 1 முதல் 41 வரை 813 - 845
2. இரண்டாம் பகுதி 42 முதல் 72 வரை 845 - 872
3. மூன்றாம் பகுதி 73 முதல் 89 வரை 872 - 890
4. நான்காம் பகுதி 90 முதல் 106 வரை 890 - 906
5. ஐந்தாம் பகுதி 107 - 150 906 - 939

மேலும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Psalters
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பாடல்கள்_(நூல்)&oldid=3922405" இலிருந்து மீள்விக்கப்பட்டது