உள்ளடக்கத்துக்குச் செல்

கிறித்தவத்தில் இயேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிஸ்தவர்களின் பார்வையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய புரிந்துகொள்ளுதலை விளக்குவதே கிறிஸ்தவத்தில் இயேசு என்ற இந்த கட்டுரையின் நோக்கமாகும். இயேசு கிறிஸ்தவர்களின் கடவுள் என்பதை மட்டுமே அறிந்திருக்கும் பிற சமய மக்கள், அவரைப் பற்றிய கிறிஸ்தவ கருத்தியலை அறிய இது உதவும். இயேசுவைப் பற்றிய பல்வேறு கிறிஸ்தவ சிந்தனைகள் இங்கு தொகுத்து தரப்படுகின்றன.

இறைமகன், மெசியா[தொகு]

பழங்கால யூத மரபில், கடவுளையே தங்கள் அரசராக கருதும் வழக்கம் இருந்தது. இஸ்ரயேல் மக்கள், தங்களை கடவுளின் மக்கள் என்று அழைத்துக்கொண்டனர். கடவுளே அவர்களைத் தம் சொந்த மக்களினமாக தேர்ந்துகொண்டதாக விவிலியம் கூறுகிறது.[1] எனவே, இஸ்ரயேலர் தங்கள் அரசரை கடவுளின் மகன் என்ற சிறப்பு பெயராலும் அழைத்தனர். மேலும், கடவுளால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் என்ற பொருளில் 'மெசியா' என்றும் அழைத்தனர். ஆனால் இத்தகைய சாதாரண மனித அரசர்களுக்கும், தெய்வீக அரசரான இயேசு கிறிஸ்துவுக்கும் இடையே அதிக வேறுபாடுகள் உள்ளன.

ரோம அடிமைத்தனத்தில் இருந்து, தங்களை மீட்க மெசியா வருவார் என்று யூதர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து உலகை மீட்க கிறிஸ்து வந்தார். யூதர்களின் அரசராக இருப்பவரை கடவுளின் மகன் என்று அழைத்த இஸ்ரயேலரிடையே, இறை மகனே ஆன்மீக அரசாட்சி செய்ய வந்தார்.[2] மகிமையின் அரசராக மெசியாவை எதிர்பார்த்த மக்களிடையே, இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்த துன்புறும் ஊழியராக இயேசு வந்தார்.[3]

இறைவனின் செம்மறி[தொகு]

பழங்காலத்தில் கடவுளை சமாதானப்படுத்த விலங்குகளைப் பலியிடும் வழக்கம் பெரும்பாலான மக்களிடையே இருந்தது. அவ்வாறே இஸ்ரயேல் மக்களும் பல காரணங்களுக்காக கடவுளுக்கு பலி செலுத்தி வந்தனர். செம்மறி ஆடுகளைப் பாவம் போக்கும் பலியாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தனர். எனவே, உலகத்தின் பாவங்களைப் போக்கத் தன்னையே பலியாகத் தந்த இயேசுவை கிறிஸ்தவர்களின் விவிலியம் ஆட்டுக்குட்டி அல்லது செம்மறி என்று அழைக்கிறது.

இயேசு கிறிஸ்துவை மக்களுக்கு அறிமுகம் செய்த திருமுழுக்கு யோவான், அவரை உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி என்று சுட்டிக்காட்டுகிறார்.[4] திருவெளிப்பாட்டை எழுதிய யோவானும், தனது விண்ணக காட்சியை விவரிக்கும்போது இயேசுவை ஆட்டுக்குட்டி என்றே அழைக்கிறார்.[5]

கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாஸ்கா கால நன்றியுரை, "உலகின் பாவங்களைப் போக்கிய மெய்யான செம்மறி அவரே. எங்கள் மரணத்தை தம் மரணத்தால் அழித்தவரும், தம் உயிர்ப்பினால் எங்களுக்கு மீண்டும் உயிர் அளித்தவரும் அவரே" என்று குறிப்பிடுகிறது.[6]

புதிய ஆதாம்[தொகு]

இயேசு கிறிஸ்து அருள் நிலையின் அடையாளமாக கருதப்படுகிறார். கடவுள் மனிதரைப் படைத்தப்பொழுது, பாவக்கறை எதுவும் இல்லாமல், புனிதத்திலும் அருள் நிலையிலும் படைத்தார். மனிதன் கடவுளின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதால் பாவம் செய்தான். அந்த பாவத்தில் இருந்து மனிதரை மீட்டு, மீண்டும் தொடக்கத்தில் இருந்த அருள் நிறைந்த புனித நிலைக்கு அழைத்துச் செல்லவே, இறை மகன் உலகிற்கு வந்தார். எனவே, அவர் புதிய ஆதாம் என்று அழைக்கப்படுகிறார்.

இயேசுவின் மீட்புச் செயலைக் குறித்து திருத்தூதர் பவுல் பின்வருமாறு கூறுகிறார்: 'ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது; அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி, நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது.'[7]

தலைமை குரு[தொகு]

கிறிஸ்து இயேசு, தன்னையே பலி செலுத்திய தலைமை குரு என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கல்வாரி மலையில் நிகழ்ந்த சிலுவைப் பலியில், உலக மக்களின் பாவங்களுக்கு பரிகாரமாக தன்னையே தந்தையாம் கடவுளுக்குரிய பலிப்பொருளாக்கி, பலியை ஒப்புக்கொடுக்கும் தலைமை குருவாகவும் இயேசுவே இருந்தார்.[8]

"தலைமை குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார்.[9] இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்"[10] என்று எபிரேயருக்கு எழுதிய திருமுகம் கூறுகிறது.

நல்ல ஆயர்[தொகு]

கடவுள் ஒரு நல்ல ஆயராக வந்து மக்களை வழிநடத்துவார் என்பது இஸ்ரயேலரின் நம்பிக்கை. "நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வது போல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்" என்று இறைவாக்கினர் எசேக்கியேல் முன்னறிவிக்கிறார்.[11]

இயேசு ஒரு நல்ல ஆயர் என்பதை, அவரது வார்த்தைகளிலேயே யோவான் நற்செய்தி பின்வருமாறு எடுத்துரைக்கிறது: "நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்."[12]

அனைத்துலக அரசர்[தொகு]

இயேசு கிறிஸ்து கடவுளின் மகனாக இருப்பதால், அவரை அனைத்துலக அரசர் என்று கிறிஸ்தவர்கள் குறிப்பிடுகின்றனர். "இயேசு கிறிஸ்து கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன" என்று திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகம் குறிப்பிடுகிறது.[13]

உலகம் முடியும் நாளில், இயேசு கிறிஸ்து மக்களுக்கு தீர்ப்பு வழங்க அரசராக வருவார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. 'வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்பார். பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள்; அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்" என்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்' என்று இயேசுவே கூறியதாக மத்தேயு நற்செய்தியில் எழுதப்பட்டுள்ளது.[14]

ஆதாரங்கள்[தொகு]

 1. இணைச் சட்டம் 14:2 '(இஸ்ரயேலே!) நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். மண்ணுலகின்மீது உள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் தனிச்சொத்தாக ஆண்டவர் தேர்ந்துகொண்டார்.'
 2. லூக்கா 14:31-33 "அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது."
 3. 1 பேதுரு 2:24 "சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்."
 4. யோவான் 1:29 'இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" என்றார்.'
 5. திருவெளிப்பாடு 5:11-12 "தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்; கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள்."
 6. திருவாழ்வு பக்கம் 68.
 7. உரோமையர் 5:12,18-19,21
 8. யோவான் 10:17-18 "தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்." - இயேசு
 9. எபிரேயர் 9:25
 10. எபிரேயர் 10:10
 11. எசேக்கியேல் 34:11-12
 12. யோவான் 10:14-16
 13. கொலோசையர் 1:15-16
 14. மத்தேயு 25:31-46
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தவத்தில்_இயேசு&oldid=1703600" இலிருந்து மீள்விக்கப்பட்டது