உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தேயு (திருத்தூதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தூதர் புனித மத்தேயு
Saint Matthew the Apostle
குய்டொ ரெனி வரைந்த
மத்தேயுவுடன் தேவதூதர்
திருத்தூதர், நற்செய்தியாளர்
பிறப்புகப்பர்நாகும், கலிலேயா, உரோமைப் பேரரசு
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை

அங்கிலிக்கன்
லூத்தரனியம்
முக்கிய திருத்தலங்கள்சலெர்னோ, இத்தாலி
திருவிழாசெப்டம்பர் 21 (மேலைத் திருச்சபை)
நவம்பர் 16 November (கீழைத் திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகைதேவதூதர், புத்தகம்

திருத்தூதர் புனித மத்தேயு (מתי/מתתיהו, எபிரேய மொழி: Mattay or Mattithyahu, பொருள்: "யாவேயின் பரிசு"; கிரேக்க மொழி: Ματθαῖος, Matthaios) இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். மேலும், இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர்.

அடையாளம்

[தொகு]
புனித மத்தேயுவின் கண்ணாடி கோப்போவியம்

இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர் (மத்தேயு 9:9). கப்பர்நாகுமில் வரி வசூலிப்பவராக பணியாற்றிய மத்தேயுவை, இயேசு அழைத்து அவரோடு விருந்துண்டு[2][3][4][5] தனது பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக்கினார் (மத்தேயு 10:3). மாற்கு (3:18), லூக்கா (6:15) நற்செய்திகளும், திருத்தூதர் பணிகள் (1:13) நூலும் மத்தேயுவைத் திருத்தூதர்களில் ஒருவராக அடையாளம் காட்டுகின்றன. மாற்கு (2:14), லூக்கா (5:27) நற்செய்திகளில் இவர் அல்பேயுவின் மகன் லேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இவர், ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது.[6][7][8] புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.

ஆரம்ப நாட்கள்

[தொகு]

அல்பேயுவின் மகனான மத்தேயு, ரோம ஆளுகையில் இருந்த யூதேயாவின் கலிலேயா பகுதியில் பிறந்தவர்.[2]மாற்கு 2:14</ref> ரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். வரி வசூலிக்கும் பணியாற்றியவர்களை யூத மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக கருதினர். கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார்.[6][9][10][11][12]

இத்தகைய சூழ்நிலையில்தான், இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இருக்க மத்தேயுவை அழைத்தார். தனது அழைப்பை ஏற்ற மத்தேயு, இயேசுவைத் தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார். இயேசு பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், "இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். (மாற்கு 2:16-17)

மத்தேயுவின் பணி

[தொகு]

புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில் திருத்தூதர் தோமாவோடு இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு துணை நின்ற திருத்தூதர்களுள் ஒருவராகவும், அவரது உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் ஒரு சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் விண்ணேற்றத்துக்கு பிறகு, திருத்தூதர்கள் அனைவரும் மேல்மாடி அறையில் தங்கியிருந்து செபித்தனர்.[13] பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியின் வருகைக்கு பின்பு, அவர்கள் அனைவரும் 'இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா' என்று எருசலேம் மக்களுக்கு பறைசாற்றினர்.[14][15]

சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்.[15] கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.[11][16]

புனித மத்தேயு நற்செய்தி எழுதுவதைக் காட்டும் ஓவியம்

கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்து கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக்கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண மத்தேயு நற்செய்தி நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது. யூதக் கிறிஸ்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறை கூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல் விடுக்கிறார் (மத்தேயு 28:20). இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நுhல் சுட்டிக்காட்டுகிறது. இந்நூலில் கிறிஸ்தியல், திருச்சபையி;ல், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.

ஆசிரியர்: இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருத்தூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக்கொள்வதே சிறப்பு.

சூழல்: எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலகட்டத்தில் இந்நூல் எழுதப்படடிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும் அறம் மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம்.

நினைவு

[தொகு]

மத்தேயு கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம்[17] மற்றும் அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்தவ பிரிவுகளில் புனிதராகப் போற்றப்படுகிறார். இவரது விழா, மேலைக் கிறிஸ்தவ நாடுகளில் செப்டம்பர் 21ந்தேதியும், மேலைக் கிறிஸ்தவ நாடுகளில் செப்டம்பர் 16ந்தேதியும் கொண்டாடப்படுகிறது. இவரது திருப்பண்டங்கள் இத்தாலியின் சலெர்னோ கதீட்ரலில் பாதுகாக்கப்படுகின்றன.

மற்ற நற்செய்தியாளர்களைப் போன்றே, கிறிஸ்தவ கலையில் திருவெளிப்பாட்டில் குறிப்பிடப்படும் நான்கு உயிர்களில் ஒன்றான சிறகுள்ள மனிதனோடு[18] சித்தரிக்கப்படுகிறார்.

பாதுகாவல்

[தொகு]

புனித மத்தேயு கணக்காளர்கள், வங்கிப் பணியாளர்கள், நூலகர்கள், பங்குத் தரகர்கள், சுங்க அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாவலராக இருக்கிறார்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "saintm13.htm". Archived from the original on 2011-09-07. பார்க்கப்பட்ட நாள் 2011-09-21.
  2. 2.0 2.1 மாற்கு 2:14
  3. மத்தேயு 9:9
  4. மாற்கு 2:15–17
  5. லூக்கா 5:29
  6. 6.0 6.1 Werner G. Marx, Money Matters in Matthew, Bibliotheca Sacra 136:542 (April–June 1979):148- 57
  7. பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்: புனித மத்தேயு நற்செய்தியாளர்
  8. பன்னாட்டு விவிலிய கலைக்களஞ்சியம்: மத்தேயு
  9. Catherine Hezser Jewish literacy in Roman Palestine p172 2001 "Even if they were pious and able to read the Hebrew Bible and/or literate in Greek poetry and prose, the writing they had to do in every day life ... 24 For the evidence of tax receipts amongst the Judaean Desert papyri see section II. "
  10. The Cambridge history of Judaism: 2 p192 ed. William David Davies, Louis Finkelstein "We are now touching upon that milieu in which Greek language and civilization were readily accepted in order to ... A great number of tax receipts on ostraca mainly from the second century BCE show how Jews, Egyptians and Greeks.. "
  11. 11.0 11.1 "The International Standard Bible Encyclopedia: Matthew". Studylight.org. பார்க்கப்பட்ட நாள் 2010-02-22.
  12. Encyclopædia Britannica. "Encyclopædia Britannica: Saint Matthew the Evangelist". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2010-02-22.
  13. திருத்தூதர் பணிகள் 1:10-14
  14. Anchor Bible Reference Library, Doubleday, 2001 pp. 130-133, 201
  15. 15.0 15.1   "St. Matthew". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  16. Eusebius, ''Church History'' 3.24.6. Books.google.ca. பார்க்கப்பட்ட நாள் 2010-02-22.
  17. Evangelical Lutheran Church in America: Lesser Festivals, Commemorations, and Occasions, Evangelical Lutheran Worship, page 57. Augsburg Fortress.
  18. திருவெளிப்பாடு 4:7 அவ்வுயிர்களுள் முதலாவது சிங்கம் போலும், இரண்டாவது இளங்காளை போலும் தோன்றின. மூன்றாவதற்கு மனித முகம் இருந்தது, நான்காவது பறக்கும் கழுகை ஒத்திருந்தது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தேயு_(திருத்தூதர்)&oldid=3767504" இலிருந்து மீள்விக்கப்பட்டது