முதலாம் சில்வெஸ்தர் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முதலாம் சில்வெஸ்தர்
Sylvester I
33ஆம் திருத்தந்தை
Sylvester I and Constantine.jpg
உரோமைப் பேரரசன் காண்ஸ்டண்டைன் திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தரை சந்தித்தல்
ஆட்சி துவக்கம்சனவரி 31, 314
ஆட்சி முடிவுதிசம்பர் 31, 335
முன்னிருந்தவர்மில்த்தியாதேஸ்
பின்வந்தவர்மாற்கு
பிற தகவல்கள்
இயற்பெயர்சில்வெஸ்தர்
பிறப்புஉறுதியாகத் தெரியவில்லை
சாந்தாஞ்சலோ ஆ ஸ்காலா, அவெல்லீனோ
இறப்பு31 திசம்பர் 335(335-12-31)
உறுதியாகத் தெரியவில்லை
சில்வெஸ்தர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்
முதலாம் சில்வெஸ்தர்
Popesylvesterdragon.jpg
முதலாம் சில்வெஸ்தர் கொடிய பறவை நாகத்தைக் கொன்று, அப்பறவை நாகத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தோருக்கு மீண்டும் உயிரளிக்கிறார் (புனைவு)
திருத்தந்தை
இறப்புதிசம்பர் 31, 335
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கத்திய மரபுவழி சபைகள்
திருவிழாதிசம்பர் 31 (கத்தோலிக்கம்)
சனவரி 2 (கிழக்கத்திய மரபுவழி சபைகள்)
பாதுகாவல்ஃபெரொலேட்டோ அந்தீக்கோ நகர்; சில்வெஸ்திரிய சபையினர்; பெனடிக்ட் சபையினர்

திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர் (Pope Sylvester I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 314 சனவரி 31ஆம் நாளிலிருந்து 335 திசம்பர் 31ஆம் நாள் வரை ஆட்சி செய்தார். இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் மில்த்தியாதேஸ் என்பவர். திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர் கத்தோலிக்க திருச்சபையின் 33ஆம் திருத்தந்தை ஆவார்.

இத்திருத்தந்தையின் ஆட்சிக் காலத்தில் உரோமை நகரில் பேரரசன் காண்ஸ்டண்டைன் வலிமை மிக்கவராக விளங்கினார். அவர்களின் ஆட்சியின்போது உரோமை நகரில் தலைசிறந்த பெருங்கோவில்கள் பல கட்டப்பட்டன. அவற்றுள் சிறப்பாக, புனித பேதுரு பேராலயம், புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம், எருசலேம் திருச்சிலுவைக் கோவில், புனித பவுல் பெருங்கோவில் ஆகியவையும், பிற பல மறைச்சாட்சியரின் கல்லறைகள்மீது கட்டப்பட்ட கோவில்களும் உள்ளடங்கும்.

ஆட்சிக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்[தொகு]

முதலாம் சில்வெஸ்தரின் ஆட்சியின்போது, கி.பி. 325இல் நிசேயா பொதுச் சங்கம் நிகழ்ந்தது. அச்சங்கத்தைக் கூட்டியது சில்வெஸ்தர் அல்ல, மாறாக காண்ஸ்டண்டைன் மன்னன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சங்கத்தில் சில்வெஸ்தர் நேரடியாகப் பங்கேற்கவில்லை. ஆனால் அவருடைய பதில் ஆள்களாக வீத்துஸ், வின்சென்சியுஸ் என்னும் இரு மூப்பர்-குருக்கள் (presbyters) கலந்துகொண்டனர். சங்கத்துக்குத் தலைமை தாங்கியவர் கோர்தோபா ஆயர் ஓசியுஸ் என்பவர். சங்கம் நிறைவேற்றிய தீர்மானங்களை சில்வெஸ்தர் ஏற்று, ஒப்புதல் வழங்கினார்.

திருத்தந்தையின் வாழ்க்கை பற்றிய புனைவு நிகழ்ச்சிகள்[தொகு]

சில்வெஸ்தரின் வாழ்க்கையில் நடந்ததாக சில நிகழ்வுகள் பிற்காலத்தில் (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) புனையப்பட்டன. காண்ஸ்டண்டைன் மன்னன் தொழுநோயால் அவதிப்பட்டதாகவும், சில்வெஸ்தர் அவருக்குத் திருமுழுக்கு அளித்ததும் மன்னரின் நோய் நீங்கியதாகவும் புனைவுகள் உருவாகின. கொடிய நோயிலிருந்து விடுதலை பெற்ற மன்னர் சில்வெஸ்தருக்குத் தலைவணங்கினார். சில்வெஸ்தர் ஒரு மணிமுடியை எடுத்து காண்ஸ்டண்டைன் மன்னனின் தலையில் சூடினார். பிற்காலத்தில் எழுந்த இப்புனைவு வலியுறுத்திய கருத்து இது: மன்னருக்கு அதிகாரம் வழங்கியவர் திருத்தந்தையே. எனவே திருத்தந்தைக்கு ஆன்மிக அதிகாரமும் உலக ஆட்சி அதிகாரமும் உண்டு. இக்கருத்தின் அடிப்படையில் பிற்காலத்தில் திருத்தந்தையர் ஆன்மிகத் தலைவர்களாக மட்டுமன்றி, அரசியல் ஆட்சியாளர்களாகவும் தங்கள் பதவியை நியாயப்படுத்தினர். மேலும் ஆட்சியாளர்களை நியமிக்கவும் பதவிநீக்கம் செய்யவும் தமக்கு அதிகாரம் உண்டு என்றும் உரிமைகொண்டாடினர்.

மற்றொரு புனைவுப்படி, சில்வெஸ்தர் ஒரு பறவைநாகத்தைக் கொன்று, அந்த விலங்கின் தாக்குதலுக்குப் பலியாகி இறந்தவர்களுக்கு அற்புதமாக மீண்டும் உயிர்கொடுத்தார். சில்வெஸ்தரைச் சித்தரிக்கும் ஓவியங்களில் பறவைநாகம் இடம்பெறுவது இப்புனைவின் அடிப்படையில்தான்.

இறப்பும் அடக்கமும்[தொகு]

சில்வெஸ்தரின் ஆட்சிக்காலம் ஏறக்குறைய 22 ஆண்டுகள் நீடித்தது. அவர் 335, திசம்பர் 31ஆம் நாள் இறந்தார். அவரது உடல் உரோமை நகரை அடுத்த சலாரியா சாலையில் அமைந்த புனித பிரிசில்லா கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலில் மீபகுதிகளை 762ஆம் ஆண்டில் திருத்தந்தை முதலாம் பவுல் உரோமை நகருக்கு உள்ளே அமைந்த சில்வெஸ்தர் கோவிலில் மீள் அடக்கம் செய்தார்.

திருவிழா[தொகு]

கத்தோலிக்க திருச்சபை சில்வெஸ்தரின் திருவிழாவை திசம்பர் 31ஆம் நாள் கொண்டாடுகிறது. கிழக்கத்திய மரபுவழி சபைகளும் கீழ் மரபு கத்தோலிக்க சபைகளும் சனவரி 2ஆம் நாள் சிறப்பிக்கின்றன.


குறிப்புகள்[தொகு]

Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sylvester I
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
மில்த்தியாதேஸ்
உரோமை ஆயர்
திருத்தந்தை

314–335
பின்னர்
மாற்கு