உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வணக்கத்துக்குரிய
பன்னிரண்டாம் பயஸ்
Pius XII
260ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்2 மார்ச் 1939
ஆட்சி முடிவு9 அக்டோபர் 1958
(19 ஆண்டுகள், 221 நாட்கள்)
முன்னிருந்தவர்திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
பின்வந்தவர்திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு2 ஏப்பிரல் 1899
ஆயர்நிலை திருப்பொழிவு13 மே 1917
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது16 டிசம்பர் 1929
பிற தகவல்கள்
இயற்பெயர்யூஜேனியோ மரியா ஜொசேப்பே ஜொவான்னி பச்சேல்லி
பிறப்பு(1876-03-02)2 மார்ச்சு 1876
உரோமை, இத்தாலியா
இறப்பு9 அக்டோபர் 1958(1958-10-09) (அகவை 82)
கண்டோல்ஃபோ கோட்டை, இத்தாலியா
குறிக்கோளுரை"அமைதியின் பிறப்பிடம் நீதி" Opus Justitiae Pax
கையொப்பம்பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)-இன் கையொப்பம்
பயஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

பன்னிரண்டாம் பயஸ் அல்லது பன்னிரண்டாம் பத்திநாதர் (Pope Pius XII) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் 260ஆம் திருத்தந்தையாக 1939-1958 காலகட்டத்தில் ஆட்சிசெய்தவர். திருமுழுக்கின்போது அவருக்கு இடப்பட்ட பெயர் "யூஜேனியோ மரியா ஜொசேப்பே ஜொவான்னி பச்சேல்லி" என்பதாகும்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

யூஜேனியோ பச்சேல்லி 1876ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் நாள் உரோமை நகரில் பிறந்தார். 1958, அக்டோபர் 9ஆம் நாள் கண்டோல்ஃபோ கோட்டை (Castel Gandolfo) என்னும் நகரில் இறந்தார்.

இவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் கொடுப்பதற்கான நடைமுறை தொடங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக "வணக்கத்துக்குரியவர்" என்னும் பட்டம் அவருக்கு 2009இல் கொடுக்கப்பட்டது.

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னால், பச்சேல்லி கீழ்வரும் பதவிகளை வகித்தார்:

  • திருச்சபைச் சிறப்பு விவகாரங்கள் துறைச் செயலர்;
  • திருத்தந்தையின் தூதுவர்;
  • திருச்சபை வெளியுறவுத் துறைத் தலைவர்-கர்தினால்.

திருச்சபை வெளியுறவுத் துறைத் தலைவராகப் பணியாற்றியபோது, கர்தினால் பச்சேல்லி பல அமெரிக்க நாடுகளோடும் ஐரோப்பிய நாடுகளோடும் வத்திக்கான் திருப்பீடம் அரசியல் ஒப்பந்தங்கள் (treaties) செய்துகொள்ள வழிவகுத்தார். குறிப்பாக, நாசி செருமனியோடு வத்திக்கான் "அரசு ஒப்பந்தம்" (Reichskonkordat) செய்துகொள்ள பச்சேல்லி ஆற்றிய பணி நினைவுகூரத்தக்கது.

குடும்பப் பின்னணியும் கல்வியும்

[தொகு]
ஆறு வயது நிரம்பிய யூஜேனியோ பச்சேல்லி. ஆண்டு: 1882

யூஜேனியோ மரியா ஜொசேப்பே ஜொவான்னி பச்சேல்லி உரோமையில் கிறித்தவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடுடைய மேல்குடிப் பெற்றோருக்கு 1876, மார்ச் 2ஆம் நாள் பிறந்தார். அவருடைய தந்தை ஃபிலிப்போ பச்சேல்லி, தாயார் விர்ஜீனியா பச்சேல்லி. அவரது குடும்பம் நீண்ட காலமாகத் திருத்தந்தை ஆட்சிப்பீடத்தோடு தொடர்புடையதாய் இருந்தது.

யூஜேனியோ பச்சேல்லியின் தந்தைவழிப் பாட்டனார் மாற்கந்தோனியோ பச்சேல்லி திருத்தந்தை ஆட்சியில் நிதித்துறைச் செயலராகவும், பின்னர் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் காலத்தில் 1851-1870 ஆண்டுகளில் உள்துறைச் செயலராகவும் பணியாற்றினார். அவர் வத்திக்கானின் .அதிகாரப்பூர்வ ஏடான "ஒஸ்ஸெர்வாத்தோரே ரொமானோ" (L'Osservatore Romano) என்னும் ஏட்டைத் தொடங்கினார்.

புதிதாகக் குருப்பட்டம் பெற்ற யூஜேனியோ பச்சேல்லி. குருப்பட்ட நாள்: ஏப்ரல் 2, 1899

யூஜேனியோ பச்சேல்லியின் தந்தையின் சகோதரருடைய மகன் எர்னேஸ்தோ பச்சேல்லி திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவுக்கு முக்கிய நிதி ஆலோசகராக இருந்தார்.

யூஜேனியோ பச்சேல்லியின் தந்தை பேர்போன வழக்கறிஞர். அவர் வத்திக்கான் ஆட்சிப் பீடத்தின் தலைமை நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார். அவர் பிரான்சிஸ்கு மூன்றாம் சபை உறுப்பினராகவும் இருந்தார்.

யூஜேனியோ பச்சேல்லியின் சகோதரர் பிரான்செஸ்கோ பச்சேல்லி திருச்சபைச் சட்டத்தில் தேர்ச்சிபெற்ற வழக்கறிஞராகவும் திருத்தந்தை பதினொன்றாம் பயசுக்கு சட்ட ஆலோசகராகவும் இருந்தார். அத்தகைமையில் பிரான்செஸ்கோ பச்சேல்லி 1929இல் இத்தாலிக்கும் வத்திக்கானுக்கும் இடையே இலாத்தரன் ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தார்.

யூஜேனியோ தம் சகோதரர் பிரான்செஸ்கோ, சகோதரிகள் ஜூசெப்பீனா மற்றும் எலிசபெத்தோடு உரோமை நகரின் மையப்பகுதியில் பிறந்து வளர்ந்தார். அவருக்குப் பன்னிரண்டு வயதே நிரம்பிய வேளையில் அவர் வழக்கறிஞராவதற்குப் பதிலாகக் கத்தோலிக்க குருவாவதற்கே தாம் விரும்புவதாகத் தம் பெற்றோரிடம் கூறினார்.

பச்சேல்லி கல்வி பயிலச் சென்ற உரோமைப் பள்ளிக்கூடத்தில் கத்தோலிக்க எதிர்ப்பு மனநிலை நிலவியது.[2][3]

தமது 18வது வயதில் (1894) பச்சேல்லி இறையியல் படிப்பைத் தொடங்கினார். கப்ரானிக்கா கல்லூரியிலும், இயேசு சபையினர் நடத்தும் கிரகோரியன் பல்கலைக் கழகத்திலும் இறையியல் பயின்றதோடு.உரோமைப் பல்கலைக் கழகமாகிய "லா சாப்பியேன்சா" (La Sapienza) என்னும் நிறுவனத்தில் பயின்றார்.[2] பச்சேல்லி இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும், சட்டவியலும் திருச்சபைச் சட்டவியலும் இணைந்த துறையிலும் முனைவர் பட்டம் பெற்றார்.[2]

இரண்டாம் உலகப் போரின் போது

[தொகு]

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் ஆற்றிய தலைமைப் பணி குறித்த வரலாற்றுச் சர்ச்சை இன்றும் தொடர்கிறது. போரின் காலகட்டத்தில் நடந்த யூதப் பெரும் இன அழிப்பு குறித்து பன்னிரண்டாம் பயசின் நிலைப்பாடு, யூதர்களை நாசி ஜெர்மனியின் படுகொலைத் திட்டங்களில் இருந்து காப்பாற்ற முனைந்தாரா அல்லது போர்க்காலத்தில் வத்திகானின் நடுநிலையைப் பேணவேண்டி அமைதி காத்தாரா ஆகிய விசயங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு புறம் பயஸ் வத்திக்கானின் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக நாசி ஜெர்மனியின் யூத ஒழிப்புக் கொள்கையை வெளிப்படையாகக் கண்டிக்காமல் இருந்து விட்டார் என்ற கருதுவோர் உள்ளனர். இன்னொரு புறம் பயசின் தலைமையில் கத்தோலிக்கத் திருச்சபை ஏழு லட்சம் யூதர்களின் உயிர்களைக் காப்பாற்றியது என்ற கருத்தும் நிலவுகிறது.

யூத ரபி டேவிட் டாலின் (David Dalin) என்பவர்,

என்று புகழ்ந்துரைக்கின்றார்.[4]

இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் ஐரோப்பா மீண்டும் வளர்ச்சியடைய பெரிதும் உதவினார். நாடுகளுக்கிடையே நல்லுறவும் அமைதியும் நிலவ ஒத்துழைத்தார். போரில் தோல்வியுற்ற நாடுகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒற்றுமை வளரக் கைகொடுத்தார்.

பொதுவுடைமைக் கட்சிக்கு எதிர்ப்பு

[தொகு]

கத்தோலிக்க திருச்சபை மேற்கு ஐரோப்பாவில் தழைத்தாலும், கிழக்கு ஐரோப்பாவில் கடும் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டது. குருக்கள் பலர் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். இக்கொடுமைகளை எதிர்த்து பன்னிரண்டாம் பயஸ் குரல் கொடுத்தார். 1948இல் இத்தாலியில் தேர்தல் நடந்தபோது மக்கள் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்துப் பேசினார். இவ்வாறு அவர் பொதுவுடைமைக் கட்சிக்கும் கொள்கைக்கும் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தார்.

அன்னை மரியா விண்ணேற்பு அடைந்த உண்மையை அறிவித்தல்

[தொகு]

1950இல் பன்னிரண்டாம் பயஸ் அன்னை மரியா விண்ணேற்பு அடைந்த உண்மையைக் கிறித்தவ விசுவாச உண்மையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.[5]

பன்னிரண்டாம் பயஸ் ஆட்சி செய்த 19 ஆண்டுகளில் ஏறத்தாழ 1000 உரைகள், வானொலி சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவர் வெளியிட்ட 41 சுற்றுமடல்களுள் கீழ்வருவனவும் அடங்கும்:

  • கிறித்துவின் மறையுடல் (திருச்சபை)
  • திருவழிபாட்டுச் சீர்திருத்தம்
  • பரிணாமக் கொள்கை பற்றி திருச்சபையின் நிலைப்பாடு

பல்லாண்டுகளாக இத்தாலி நாட்டைச் சார்ந்த கர்தினால்மார்களே பெரும்பான்மையராய் இருந்த நிலை 1946இல் பன்னிரண்டாம் பயசின் ஆட்சிக்காலத்தில் மாறத் தொடங்கியது.

ஆதாரங்கள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. பன்னிரண்டாம் பயஸ்
  2. 2.0 2.1 2.2 Marchione, 2005, p. 64.
  3. O'Brian 2
  4. "The Truth and Key Facts | The Truth about". Pope Pius XII. Archived from the original on 2012-11-20. பார்க்கப்பட்ட நாள் 2011-09-16.
  5. Encyclopedia of Catholicism by Frank K. Flinn, J. Gordon Melton 207 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-5455-X page 267

உசாத் துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pope Pius XII
என்பதில் ஊடகங்கள் உள்ளன.