முதலாம் கிளமெண்ட் (திருத்தந்தை)
புனித முதலாம் கிளமெண்ட் Saint Clement I | |
---|---|
4ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | கிபி 92 |
ஆட்சி முடிவு | கிபி 99 |
முன்னிருந்தவர் | புனித அனகிலேத்துஸ் |
பின்வந்தவர் | எவரிஸ்துஸ் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | கிபி முதலாம் நூற்றாண்டு உரோமை, உரோமைப் பேரரசு |
இறப்பு | மரபுப்படி 99 அல்லது 101 இறப்பிடம்: கெர்சொனேசுஸ் டாவுரிக்கா (இன்றைய கிரிமேயா, உக்ரேய்ன்) |
கிளமெண்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
புனித முதலாம் கிளமெண்ட் (Saint Clement I) என்பவர் கத்தோலிக்க திருச்சபையால் நான்காம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இவரை "உரோமை நகர் புனித கிளமெண்ட்" என்று அழைப்பதும் உண்டு. இவர் தொடக்க காலத் திருச்சபையின் தலைசிறந்த இறையியல் வல்லுநராய் இருப்பதால் "முதல் திருத்தூதுத் தந்தை" (First Apostolic Father) என்றும் அறியப்படுகிறார்[1].
வாழ்க்கைக் குறிப்புகள்
[தொகு]முதலாம் கிளமெண்டின் வாழ்க்கை பற்றி அதிக விவரங்கள் தெரியவில்லை. தெர்த்துல்லியன் (சுமார் 166 - சுமார் 220)என்னும் பண்டைக்காலத் திருச்சபை எழுத்தாளர் கூற்றுப்படி, கிளமெண்டு புனித பேதுருவிடமிருந்து திருப்பொழிவு பெற்றார்; முதல் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் உரோமைத் திருச்சபையின் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
- கிளமெண்ட் (இலத்தீன்: Clementus) என்னும் பெயர் இலத்தீனில் "பரிவுள்ளவர்" என்று பொருள்படும். எனவே, கிறித்தவ வழக்கில் இவரை "சாந்தப்பர்" என்றும் கூறுவதுண்டு.
தொடக்க காலத் திருச்சபை எழுத்தாளர்கள் பொதுவாக கிளமெண்டைப் புனித பேதுருவுக்குப் பின் மூன்றாம் அல்லது நான்காம் திருத்தந்தையாக வரிசைப்படுத்துகின்றனர். தெர்த்துல்லியன் கருத்துப்படி, கிளமெண்டு புனித பேதுருவுக்குப் பின் திருத்தந்தையாகப் பொறுபேற்றார். இக்குழப்பநிலை நிலவுவதற்கு ஒரு முக்கிய காரணம் முதல் நூற்றாண்டில் ஆயர் பதவி துல்லியமாக வரையறுக்கப்பட்டு, ஒரு மறைமாவட்டத்துக்கு ஒருவரே ஆயராக இருக்க முடியும் என்ற கருத்து தெளிவாக எழாததுதான்.
கிளமெண்ட் கொரிந்தியருக்கு எழுதிய மடல்
[தொகு]திருத்தந்தை முதலாம் கிளமெண்டின் எழுத்துப் படைப்பாக இன்று உள்ளது அவர் கொரிந்தியருக்கு எழுதிய மடல் ஆகும். அது சுமார் 96இல் எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டைத் தவிர்த்து, தொடக்க காலத்தில் உருவான எழுத்துப் படையல்களுள் இதுவே மிக்க பழமையானது ஆகும். கொரிந்து திருச்சபைத் தலைவர்கள் சிலருக்கிடையே ஏற்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து அவர்களுள் சிலர் பதவிநீக்கப்பட்டனர். இச்சிக்கல் குறித்துத் தீர்ப்பு வழங்குவதாக கிளமெண்டின் மடல் உள்ளது. திருச்சபையில் "ஆயர்கள்" (கிரேக்கத்தில் episkopoi = கண்காணிப்பாளர்கள்), "மூப்பர்கள்" (Presbyteroi = குருக்கள்), "திருத்தொண்டர்கள்" (diakonoi = ஊழியர்கள்) என்னும் திருப்பணியாளர்கள் திருத்தூதர்களால் நியமிக்கப்பட்டவர்கள் ஆதலால் அதிகாரம் கொண்டிருக்கிறார்கள் என்று கிளமெண்ட் எடுத்துக் கூறினார். ஆயினும் அவர் episcopoi, presbyteroi என்னும் சொற்களை வேறுபடுத்தாமல் பயன்படுத்துவதும் உள்ளது.
கிளமெண்டின் கடிதம் திருச்சபைகளில் புதிய ஏற்பாட்டுக் கடிதங்கள் போலவே வாசிக்கப்பட்டது. ஆயர்கள் (மூப்பர்கள்) திருச்சபையில் திருத்தூதர்களிடமிருந்து வரும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர் என்று வலியுறுத்திய முதல் வல்லுநர் கிளமெண்ட் தான்.
கிளமெண்ட் இரண்டாம் கடிதம் ஒன்றினையும் எழுதினார் என்றொரு மரபு உண்டு. ஆயினும் அண்மைக்கால அறிஞர்கள், அக்கடிதத்தை எழுதியவர் வேறொருவர் என்று கருதுகின்றனர்.
இறப்பும் திருவிழாவும்
[தொகு]நான்காம் நூற்றாண்டின் அளவில் தொடங்கிய ஒரு மரபின்படி, கிளமெண்ட் ட்ரேஜன் மன்னன் காலத்தில் தம் கிறித்த நம்பிக்கையை முன்னிட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் அவர் பிற சிறைக்கைதிகளுக்குக் கிறித்துவின் செய்தியை அறிவித்தார். பின்னர் அவரை ஒரு நங்கூரத்தில் கட்டி கடலில் ஆழ்த்திக் கொன்றுவிட்டார்கள்.
பல கிறித்தவ சபைகள் கிளமெண்டைப் புனிதராகப் போற்றுகின்றன. உரோமன் கத்தோலிக்க திருச்சபை,லூதரன் சபை மற்றும் ஆங்கிலிக்கன் சபை அவரது விழாவை நவம்பர் 23ஆம் நாளும், கீழை மரபுவழாத் திருச்சபைகள் சில நவம்பர் 24, வேறு சில நவம்பர் 25 ஆகிய நாள்களில் கொண்டாடுகின்றன.
புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் "கிளமந்து" என்னும் ஓர் உடனுழைப்பாளர் பற்றிப் பேசுகிறார் (பிலிப்பியர் 4:3). அவர் திருத்தந்தை கிளமெண்டாக இருக்கலாம் என்று கி.பி. 3 மற்றும் நான்காம் நூற்றாண்டு ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அவர்களுள் ஒரிஜென், யூசேபியஸ், ஜெரோம் போன்றோர் அடங்குவர்.
"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைக்கால நூலின்படி, கிளமெண்ட் பேதுருவை அறிந்திருந்தார். கிரேக்க நாட்டில் ட்ரேஜன் மன்னனின் ஆட்சிக்கால மூன்றாம் ஆண்டில் (அதாவது கி.பி. 101இல்) இறந்தார்.