மறைசாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறைசாட்சி அல்லது இரத்தசாட்சி என்னும் சொல், இயேசு கிறிஸ்து மீது கொண்ட நம்பிக்கைக்காக, துன்புறுத்திக் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது. மேலும் எந்த ஒரு சமய (மறை) நம்பிக்கைக்காக இறந்த ஒரு நபரைக் குறிக்கும் சொல்லாகவும் இதைப் பயன்படுத்தலாம்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைக்காக அல்லது கொள்கைக்காக உயிர் தியாகம் செய்தவரை குறிக்கும் சொல்லாக விளங்கும் Martyr என்ற ஆங்கிலப் பதத்தின் தமிழ் வார்த்தை தியாகி என்பதாகும்.

சொல் பிறப்பு[தொகு]

மறை என்பது சமயத்தைக் குறிக்கிறது. அதைச் சார்ந்து தோன்றும் மறைசாட்சி என்னும் சொல், சமய நம்பிக்கைக்கு சாட்சியாக உயிரைக் கையளித்தவர் என்ற பொருளில் உருவானது.

இரத்தசாட்சி என்னும் வார்த்தை, தங்கள் நம்பிக்கைக்காக இரத்தம் சிந்தி உயிர் நீத்தவர்கள் என்ற பொருளைத் தரும். பலர் நெருப்பில் எரிக்கப்பட்டும், நீரில் மூழ்கடிக்கப்பட்டும், எண்ணெய் கொப்பரையில் போட்டு பொரிக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதால், இச்சொல்லைப் பொதுவானதாக பயன்படுத்த முடியாது.

யூத சமயத்தில்[தொகு]

யூத சமய மக்கள் கிரேக்க அடிமைத்தனத்தில் வாழ்ந்தபோது, கிரேக்க மயமாக்கல் மூலம் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாயினர். யூதர்கள், தாங்கள் வழிபட்டு வந்த யாவே கடவுளின் சட்டங்களுக்கு பதிலாக கிரேக்கர்களின் பண்பாட்டு வழக்கங்களைப் பின்பற்றுமாறு வற்புறுத்தப்பட்டனர். யூதர்கள் தங்கள் மூதாதையரின் சட்டங்களைக் கைவிடும்படியும்[1] கட்டாயப்படுத்தப்பட்டனர். யூதர்களின் திருக்கோவிலையும் அவர்கள் புனிதம் இழக்கச் செய்தனர்.[2]

யூத சமயத்துக்கு எதிரான பல்வேறு பழக்க வழக்கங்களைப் பின்பற்றக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவற்றை எதிர்த்த யூதர்கள் அதிகமான துன்புறுத்தல்களுக்கு ஆளாயினர். சிலர் கொலையும் செய்யப்பட்டனர். அவர்களில் தொண்ணூறு வயதான எலயாசர், "மதிப்புக்குரிய, தூய சட்டங்களுக்காக விருப்போடும் பெருந்தன்மையோடும் எவ்வாறு இறப்பது என்பதற்கு ஓர் உயரிய எடுத்துக்காட்டை விட்டுச்செல்வேன்"[3] என்று கூறி உயிர் துறந்தார்.

அக்காலத்தில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்பட்டார்கள்: சாட்டைகளாலும், வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், "எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதைவிட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்" என்றார். அவர்கள் அனைவரும் கொடிய சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு மறைசாட்சியாக இறந்தனர்.[4]

கிறிஸ்தவத்தில்[தொகு]

கிறிஸ்தவ சமயம் தோன்றிய கி.பி. முதல் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கிறிஸ்தவர்கள் ரோமப் பேரரசில் அதிகமான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதன் பின்னரும், உலகின் பல்வேறு இடங்களில் நற்செய்தி அறிவிக்க சென்ற கிறிஸ்தவர்களும், பிற சமய அடிப்படைவாத குழுக்கள் நடுவே வாழும் கிறிஸ்தவர்களும் மறைசாட்சியாக இறக்கும் சம்பவங்கள் இந்நாள் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சிலுவையில் அறைதல், கல்லால் எறிதல், எண்ணெயில் பொரித்தல், தலையை வெட்டுதல், உயிரோடு தோலுரித்தல், நெருப்பில் எரித்தல், குளிர்ந்த நீரில் உறைய வைத்தல், ஈட்டியால் குத்துதல், கொடிய மிருகங்களுக்கு இரையாக்குதல், நீரில் அமிழ்த்துதல், நஞ்சு கொடுத்தல், துப்பாக்கியால் சுடுதல் போன்ற பல்வேறு முறைகளில் கிறிஸ்தவர்கள் மறைசாட்சியாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவ திருச்சபையின் மறைசாட்சியாக இறந்தவர் திருத்தொண்டர் ஸ்தேவான் ஆவார். ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்.[5] இதனால் யூதர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். அவர் முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார்.[6]

கிறிஸ்துவுக்காக மறைசாட்சியாக உயிர் துறந்த முதல் திருத்தூதர், யோவானின் சகோதரரான யாக்கோபு ஆவார். அவர் வாளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்.[7] மேலும், திருத்தூதர் யோவானைத் தவிர மற்ற திருத்தூதர்கள் அனைவரும் மறைசாட்சியாக கொல்லப்பட்டே உயிர் துறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்கள்[தொகு]

  1. 2 மக்கபேயர் 6:1
  2. 2 மக்கபேயர் 6:4 'பிற இனத்தாரின் ஒழுக்கக்கேட்டாலும் களியாட்டத்தாலும் கோவில் நிறைந்திருந்தது.'
  3. 2 மக்கபேயர் 6:28
  4. 2 மக்கபேயர் 7:41 'இறுதியாக, தம் மக்களைத் தொடர்ந்து அந்தத் தாயும் இறந்தார்.'
  5. திருத்தூதர் பணிகள் 6:8
  6. திருத்தூதர் பணிகள் 7:58,60
  7. திருத்தூதர் பணிகள் 12:1-2 'அக்காலத்தில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான்.'

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைசாட்சி&oldid=1689792" இலிருந்து மீள்விக்கப்பட்டது