உள்ளடக்கத்துக்குச் செல்

அம்புரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித
அம்புரோசு
மிலன் நகரின் பேராயர்
அம்புரோசின் மோசேயிச் சித்திரம்.
அவரின் சொந்த உருவின் அடிப்படையில் இது வரையப்பட்டிருக்கலாம்.
ஆட்சி பீடம்மேதியோலானும், மிலன் மறைமாவட்டம்
நியமனம்374 கி.பி
ஆட்சி முடிவுஏப்ரல் 4, 397
முன்னிருந்தவர்அக்சென்துஸ்
பின்வந்தவர்சிம்பிலிசியன்
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவுடிசம்பர் 7, 374
பிற தகவல்கள்
பிறப்புசுமார். 340 கி.பி
ஆகஸ்ட்a Treverorum,
Gallia Belgica, உரோமைப் பேரரசு
(தற்கால செருமனி)
இறப்புஏப்ரல் 4, 397
Mediolanum,
Italia annonaria, உரோமைப் பேரரசு
(தற்கால இத்தாலி)
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாடிசம்பர் 7[1]
ஏற்கும் சபைகத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
லூதரனியம்
பகுப்புஆயர் மற்றும் திருச்சபையின் மறைவல்லுநர்
சித்தரிப்பு வகைதேன்னீக்கூடு, பிள்ளைகள், சாட்டை, எலும்புகள்
பாதுகாவல்தேனீ வளர்ப்பு; தேன்னீக்கள்; மெழுகுவர்த்தி செய்பவர்கள்; வீட்டு விலங்குகள்; கல்வி; மிலன்; மாணவர்கள்;
திருத்தலங்கள்Basilica of Sant'Ambrogio

ஆரேலியுஸ் அம்புரோசியுஸ் என்னும் பெயருடைய புனித அம்புரோசு (பழைய வழக்கு: புனித அமிர்தநாதர் c. 340 – 4 ஏப்ரல் 397), மிலன் நகரின் கத்தோலிக்க பேராயரும் 4ஆம் நூற்றாண்டின் குறிக்கத்தக்க திருச்சபை தலைவர்களுள் ஒருவரும் ஆவார். முதல் நான்கு திருச்சபையின் மறைவல்லுநர்களுள் இவரும் ஒருவர். இவர் மிலன் நகரின் பாதுகாவலர் ஆவார். அகுஸ்தீனுக்கு இவரால் ஏற்பட்ட தாக்கத்துக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.

இவர் பல விவிலிய விளக்க உரைகளை எழுதியுள்ளார். இவற்றில் இவரின் வாழ்வு குறித்த செய்திகள் பல காணக்கிடைக்கின்றன. இவரின் முன்னோர்கள் உரோமைக்குடிமக்களாகவும், துவக்கத்திலேயே கிறித்தவ மறையினை தழுவியவர்களாகவும், அரசின் உயர் அதிகாரிகளாகவும் கிறித்தவ மறைசாட்சிகளாகவும் இருந்துள்ளனர். இவரின் பிறப்பின் போது இவரின் தந்தை பிரான்சு, பிரித்தானியா, எசுப்பானியா, ஆப்பிரிக்காவின் டிங்கித்தான (Tingitana) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய காலியாவின் ஆளுநராக இருந்தார். இப்பதவி உரோமைக்குடிமக்கள் வகிக்கக்கூடிய மிக உயரிய பதவி ஆகும்.

மார்சிலினா என்ற ஒரு மூத்த சகோதரியும், சாடிருஸ் என்னும் மூத்த சகோதரரும் இவருக்கு உண்டு. 354இல் இவரின் தந்தையின் இறப்புக்கு பின்பு இவரின் குடும்பம் உரோமையில் குடியேறியது. கைம்பெணான இவரின் தாயும் மூத்த சகோதரியும் இவருக்கு சிறந்த எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தனர். திருத்தந்தை லிபேரியஸின் கைகளால் இவரின் சகோதரி துறவறத்துகிலினைப்பெற்று அக்கால வழக்கப்படி தன் வீட்டிலேயே துறவியாக வாழ்ந்துவந்தார்.

கல்வி கற்றப்பின்பு இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். இவரின் அறிவாற்றலால் இவர் லிகூரியா மற்றும் எமிலியாவின் ஆளுநரின் ஆலோசகராக மிலன் நகரில் பணியமர்த்தப்பட்டார். இப்பணியில் இவர் மக்களின் நன்மதிப்பை பெற்றார்.

374இல் மிலன் நகரின் அப்போதைய ஆயர் இறந்தார். அப்போது அடுத்து அப்பதிவியினை ஏற்கப்போவது யார் என்பது குறித்து ஆரியனிச கொள்கையுடையவர்களுக்கும் பிற கிறித்தவர்களுக்கும் இடையே பெரும் சிக்கல் உருவானது. அரச ஆலோசகராக அம்புரோசு கலகம் ஏற்படாதிருக்க இரு தரப்பினருக்கிடையே அமைதி ஏற்படுத்த முனைந்தார். ஆனால் இப்பேச்சுவார்த்தையின் போது அனைவராலும் அம்புரோசு ஆயராக தேர்வு செய்யப்பட்டார். ஆயராக விரும்பாததால் ஓடி ஒளிந்த அம்புரோசு அரச ஆணையினால் ஆயர்பதவியினை ஏற்றார். அப்போது அவர் திருமுழுக்குகூட பெற்றிருக்கவில்லை என்பதும் திருமுழுக்கு பெற ஆயத்த செய்துகொண்டிருந்தார் என்பது குறிக்கத்தக்கது. திருமுழுக்கு பெற்று எட்டு நாட்களுக்குப்பின் 7 டிசம்பர் 374இல் ஆயர்நிலை திருப்பொழிவு பெற்றார். இன்னாளிலேயே கிழக்கு மற்றும் மேற்கு கிறித்தவ பிரிவுகள் இவரின் விழா நாளை கொண்டாடுகின்றனர்.

இவர் ஆயராக அரும்பணிகள் பல செய்துள்ளார். இவரின் மறையுரைகள் மற்றும் விவிலிய விளகக்க உரைகள் இன்றளவும் பயன்படுகின்றன. இவர் புனித அகுஸ்தீனுக்கு திருமுழுக்கு அளித்தவர். இவரை அகுஸ்தீன் தன்வரலாற்று நூலில் போற்றி குறிப்பிட்டுள்ளார். ஆரியனிச பதித்தக்கொள்கையினை இவர் சீராக்க பாடுபட்டார். ஏப்ரல் 4, 397 இவர் இறந்தார். இவரின் மீப்பொருட்கள் அம்புரோசு பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Attwater & John 1993.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்புரோசு&oldid=2202517" இலிருந்து மீள்விக்கப்பட்டது