செஃபிரீனுஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித செஃபிரீனுஸ்
Zephyrinus
15ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்கிபி 199
ஆட்சி முடிவுகிபி 217, திசம்பர் 20
முன்னிருந்தவர்முதலாம் விக்டர்
பின்வந்தவர்முதலாம் கலிஸ்டஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்செஃபிரீனுஸ்
பிறப்புதெரியவில்லை;
உரோமை, உரோமைப் பேரரசு
இறப்புகிபி 217, திசம்பர் 20
உரோமை, உரோமைப் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாதிசம்பர் 20
ஏற்கும் சபைகத்தோலிக்க திருச்சபை

திருத்தந்தை புனித செஃபிரீனுஸ் (Pope Saint Zephyrinus) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கிபி 199இலிருந்து 217 வரை ஆட்சி செய்தார்[1]. அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை முதலாம் விக்டர் ஆவார். செஃபிரீனுசின் இறப்புக்குப் பின் (திசம்பர் 20, 217) முதலாம் கலிஸ்டஸ் திருத்தந்தையாகப் பதவி ஏற்றார். செஃபிரீனுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 15ஆம் திருத்தந்தை ஆவார்.

வரலாற்றுக் குறிப்புகள்[தொகு]

செஃபிரீனுஸ் பிறந்த ஆண்டு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அவருடைய தந்தை பெயர் அபோந்தியஸ் என்று "திருத்தந்தையர் நூல்" என்னும் பண்டைய வரலாற்று ஏடு கூறுகிறது. இவர் ஆட்சியிலிருந்த 17 ஆண்டுகளின் பெரும் பகுதியிலும் கிறித்தவ திருச்சபை பெரும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியது. செப்திமுஸ் செவேருஸ் மன்னனின் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் கிறித்தவத்துக்கு ஆதரவு இருந்தாலும் அதன் பின்னர் 202-211 கால கட்டத்தில் கிறித்தவர் துன்புறுத்தப்பட்டனர். 212இல் கரக்கால்லா என்னும் மன்னன் உரோமைப் பேரரசிலிருந்த எல்லா மக்களுக்கும் குடியுரிமை வழங்கினார்.

தப்பறைக் கொள்கைகள்[தொகு]

செஃபிரீனுஸ் ஆட்சிக் காலத்தில் திருச்சபையில் பல தப்பறைக் கொள்கைகள் எழுந்தன. அவை பற்றி யூசேபியஸ் மற்றும் இப்போலித்து ஆகிய பண்டைக் கிறித்தவ ஆசிரியர்கள் தகவல்கள் தருகின்றனர். செஃபிரீனுசுக்கு முன் ஆட்சி செய்த முதலாம் விக்டர் என்னும் திருத்தந்தை பிசான்சியத்தைச் சேர்ந்த "தோல் பதனிடும்" தெயோதாத்துஸ் என்பவரை சபைநீக்கம் செய்திருந்தார். இவர் "பண மாற்று" தெயோதாத்துஸ் என்னும் மற்றொருவரோடு சேர்ந்துகொண்டு உரோமையில் ஒரு பிரிவினை சபையை உருவாக்கினார். அவர்கள் நத்தாலியுஸ் என்னும் கிறித்தவரை அணுகி, அவரை ஆயராக ஏற்பதாகக் கூறி தம் வசப்படுத்த முயன்றனர். கொடிய துன்பங்களுக்கு ஆளான நத்தாலியுஸ் கிறித்தவக் கொள்கையிலிருந்து பிறழவில்லை என்றாலும், தம் நம்பிக்கையில் உறுதியாக இருக்கவில்லை.

ஆனால் சில கனவுகள் வழியாகக் கடவுள் தம்மை உறுதிப்படுத்தியதாக உணர்ந்த நத்தாலியுஸ் எழுந்து திருத்தந்தை செஃபிரீனுசிடம் சென்று, தம் தவற்றினை ஏற்று தவ முயற்சிகள் செய்து திருச்சபையோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டார்[2].

இதே கால கட்டத்தில் மொந்தானுஸ் என்பவரைப் பின்சென்றோர் உரோமையில் செயல்படலாயினர். மொந்தானியக் கொள்கையைப் பரப்புவதில் பலர் ஈடுபட்டிருந்தனர். அக்கொள்கையை எதிர்த்து காயுஸ் என்பவர் உரையாடல் வடிவத்தில் ஒரு மறுப்பு எழுதினார்[3].

செஃபிரீனுசின் துணையாளர் கலிஸ்டஸ்[தொகு]

திருத்தந்தை செஃபிரீனுசுக்கு வலது கையாக இருந்து, ஆலோசனை நல்கி, ஆட்சித் துணை வழங்கியவர் கலிஸ்டஸ் என்பவர் ஆவார். இவர் செஃபிரீனுசுக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே காலத்தில் இப்போலித்து[4] என்னும் இறையியல் வல்லுநர் ஒருவர் உரோமையில் சிறப்புடன் விளங்கினார். இவர் திருத்தந்தை செஃபிரீனுசுவைப் பற்றிக் குறைகூறினார். செஃபிரீனுசுக்குப் போதிய இறையியல் அறிவு இல்லை என்றும், அவர் கலிஸ்டசின் தவறான ஆலோசனைக்குச் செவிமடுத்து, முறையாக ஆட்சி செய்யவில்லை என்றும், திருச்சபையின் எதிரிகளை அடையாளம் கண்டு அவர்களைக் கண்டிக்கத் தவறிவிட்டார் என்றும் இப்போலித்து குற்றம் சாட்டினார்[5].

இயேசு கிறித்து கடவுளின் வார்த்தை (Divine Logos) என்றும், அவர் மனிதராகப் பிறந்து கடவுளுக்கும் பிற படைப்புகளுக்கும் இடையே இடைநிலையாளராக உள்ளார் என்றும் இப்போலித்து எடுத்துக் கூறினார். அதே நேரத்தில், வார்த்தையான இயேசு கிறித்து கடவுளிடமிருந்து மாறுபட்டவர் என்றும் அவர் கூறினார். ஒருசிலர் இக்கொள்கையில் குறைகண்டனர். அவர்கள், கடவுள் ஒருவரே என்றும், அக்கடவுள் மூன்று விதங்களில் (தந்தை, மகன், தூய ஆவி) என்று தோன்றுகிறார் (Modalism) என்றும் மறுத்துக் கூறினர். எனவே, சிலுவையில் அறையுண்டு இறந்தவர் "தந்தைக் கடவுள்" என்று இக்கொள்கை கூறியது.

இக்கொள்கையைக் கண்டிக்க வேண்டும் என்றும், இயேசு கிறித்து என்னும் இறை ஆள், தந்தை என்னும் இறை ஆளிலிருந்து மாறுபட்டவர் என்பதைப் பொது அரங்கத்தில் எடுத்துக் கூற வேண்டும் என்றும் இப்போலித்து திருத்தந்தை செஃபிரீனிசிடம் கேட்டார். ஆனால் செஃபிரீனிசு இப்போலித்துவின் கோரிக்கையை ஏற்கவில்லை. உடனே, இப்போலித்து செஃபிரீனிசும் தப்பறைக் கொள்கையை ஆதரிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

செஃபிரீனுஸ் "கடவுள் ஒருவரே. அவரே இயேசு கிறித்து ஆண்டவர். அவர் கடவுளின் மகன். அவர்தாம் சிலுவையில் உயிர்துறந்தாரே தவிர தந்தைக் கடவுள் சிலுவையில் இறக்கவில்லை" என்று உறுதியாக எடுத்துரைத்து, அதுவே திருச்சபையின் உண்மையான போதனை என்றும் கூறினார்.

இப்போலித்து முதலாம் எதிர்-திருத்தந்தை[தொகு]

இப்போலித்து திருத்தந்தை செஃபிரீனுசின் நிலைப்பாடு குறித்து அதிருப்தியடைந்து, மனக்கசப்புற்றார். செஃபிரீனுஸ் இறந்தபின் அவர்தம் துணையாளராகச் செயல்பட்ட கலிஸ்டஸ் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். இப்போலித்துவின் ஆதரவாளர்கள் அவரை எதிர்-திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். இப்போலித்து தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு நாடுகடத்தப்பட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். இறப்பதற்கு முன் அவர் திருச்சபையோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டார். அவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராகப் போற்றப்படுகிறார்.

செஃபிரீனுஸ் கொணர்ந்த சீர்திருத்தங்கள்[தொகு]

பதினான்கு வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே நற்கருணை அருந்தலாம் என்றும், திருப்பலியில் பயன்படுத்தும் கிண்ணம் மரத்தால் ஆனதாக இருத்தலாகாது என்றும், அக்கிண்ணத்தை மூடி வைக்க தட்டு பயன்படுத்த வேண்டும் என்றும் செஃபிரீனுஸ் சட்டம் இயற்றியதாகத் தெரிகிறது. அவர் தெர்த்தூல்லியன் என்னும் பண்டைக்கால இறையியல் ஆசிரியரைச் சபைநீக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

செஃபிரீனுசின் இறப்பு[தொகு]

திருத்தந்தை செஃபிரீனுஸ் 217ஆம் ஆண்டு திசம்பர் 20ஆம் நாள் இறந்தார். அவரது உடல் ஆப்பியா நெடுஞ்சாலையில் (Via Appia) புனித கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆதாரங்கள்[தொகு]

  1. புனித செஃபிரீனுஸ்
  2. Eusebius of Caesarea, Ecclesiastical History, V, xxxii
  3. Eusebius, Ecclesiastical History, III, XXVIII, VI, XX
  4. இப்போலித்து
  5. Hippolytus, Philosophymena IX, XI
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
முதலாம் விக்டர்
உரோமை ஆயர்
திருத்தந்தை

199–217
பின்னர்
கலிஸ்டஸ்