லிபேரியஸ் (திருத்தந்தை)
லிபேரியஸ் | |
---|---|
36ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | மே 17, 352 |
ஆட்சி முடிவு | செப்டம்பர் 24, 366 |
முன்னிருந்தவர் | முதலாம் ஜூலியுஸ் |
பின்வந்தவர் | முதலாம் தாமசுஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | லிபேரியஸ் |
பிறப்பு | தெரியவில்லை உரோமை நகரம், மேலை உரோமைப் பேரரசு |
இறப்பு | உரோமை நகரம், மேலை உரோமைப் பேரரசு | செப்டம்பர் 24, 366
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | ஆகத்து 27 (கீழைச் சபை மட்டும்) |
திருத்தந்தை லிபேரியஸ் (Pope Liberius) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் மே 17, 352 முதல் செப்டம்பர் 24, 366 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 36ஆம் திருத்தந்தை ஆவார்.
கிறிஸ்து பற்றிய கொள்கையை ஏற்பதில் பிளவு
[தொகு]திருத்தந்தை லிபேரியசுக்கு முன் பதவியில் இருந்தவர் முதலாம் ஜூலியுஸ். அவர், இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுத்த ஆரியுஸ் என்பவரின் நிலைப்பாட்டைக் கடுமையாக எதிர்த்து, திருச்சபையின் உண்மையான போதனைப்படி இயேசு கிறிஸ்து கடவுள்தன்மை கொண்டவரே என்பதை வலியுறுத்தினார். அந்த உண்மையை 325இல் நிசேயா சங்கம் தெளிவாக எடுத்துரைத்ததையும் சுட்டிக் காட்டினார். இயேசு கடவுள்தன்மை கொண்டவரே என்னும் கொள்கையை உறுதியோடு அறிவித்த ஆயர் அத்தனாசியுசு (அலெக்சாந்திரியா நகர் ஆயர்) தம் நம்பிக்கையின் பொருட்டு பல வகைகளில் துன்புறுத்தப்பட்டார். முதலாம் ஜூலியுஸ் அத்தனாசியுசுக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், முதலாம் ஜூலியுசைத் தொடர்ந்து திருத்தந்தையாகப் பதவி ஏற்ற லிபேரியஸ் சில வேளைகளில் உறுதிப்பாடு கொண்டவராகச் செயல்படவில்லை. இவரது பதவிக் காலத்தின்போதும், இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மை பற்றிய விவாதம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. அதாவது, இயேசு கிறிஸ்து இறைத்தன்மை கொண்டவர், கடவுளின் மகன் என்று நிசேயா சங்கம் (325) அறிவித்திருந்த உண்மையை ஆரியுஸ் (Arius) மறுத்ததோடு, இயேசு கடவுளின் படைப்புகளில் மிகச் சிறந்தவரே தவிர கடவுள்தன்மை கொண்டவரல்ல என்று போதித்தார். ஆரியுசின் நிலைப்பாடு ஆங்காங்கே பரவத்தொடங்கியிருந்தது. சில ஆயர்களும் (குறிப்பாக கீழைச் சபையில்) ஆரியுசின் ஆதரவாளர்களாக மாறினர்.
அச்சமயத்தில் உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதிக்கும் கிழக்குப் பகுதிக்கும் ஒரே ஆளுநராக இருந்த இரண்டாம் காண்ஸ்டன்ஸ் பேரரசனும் ஆரியுசின் கொள்கையை ஆதரித்தார். மேற்குப் பகுதியின் ஆயர்கள் ஆரியுசின் கொள்கையை ஏற்கும்படி பேரரசனால் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதோடு, ஆயர் அத்தனாசியுசைக் கண்டனம் செய்யவும் பேரரசன் ஆயர்களை வற்புறுத்தினார். இதற்காகவே தீர் நகரில் ஒரு சங்கம் 355இல் கூட்டப்பட்டு, பேரரசனின் நிலைப்பாட்டை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரியுசின் ஆதரவாளரான ஆயர்கள் லிபேரியசைத் தம் வசப்படுத்த முயன்றார்கள். அவர்களின் வற்புறுத்தலின் பேரில் லிபேரியஸ் பேரரசனிடம் ஒரு சங்கத்தைக் கூட்டக் கேட்டார். அத்தனாசியுசின் நிலைப்பாடு சரியா இல்லையா என்று விவாதித்து முடிவெடுப்பது அச்சங்கத்தின் நோக்கம். ஆக்குவிலா நகரிலும் பின்னர் ஆர்ல் நகரிலும் சங்கங்கள் கூட்டப்பட்டன. பேரரசனின் விருப்பத்துக்குப் பணிந்து அச்சங்கங்கள் அத்தனாசியுசைக் கண்டனம் செய்தது சரியே என்றன. அந்தத் தீர்மானத்தில் திருத்தந்தையின் தூதுவர்களும் கையெழுத்திட்டனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திருத்தந்தை, நிசேயா சங்கம் (325) இயேசு கிறிஸ்து கடவுள் தன்மை கொண்டவர் என்று அறிவித்த போதனை மறுக்கப்படும் ஆபத்து நேர்ந்ததை உணர்ந்தார். அச்சங்கத்தின் போதனையை மறுத்தல் தவறு என்று உணர்த்தவும், அப்போதனையை ஊக்கத்தோடு எடுத்துரைத்த அத்தனாசியுஸ் கண்டனம் செய்யப்படலாகாது என்றும் வலியுறுத்தும் வகையிலும் ஒரு சங்கம் கூட்ட வேண்டும் என்று லிபேரியஸ் உறுதிபூண்டார்.
355இல் மிலான் நகரில் சங்கம் கூடியது. ஆரியுசுக்கு ஆதரவளித்து, அத்தனாசியுசைக் கண்டனம் செய்திருந்த பேரரசனின் கருத்தே சங்கத்தில் மேலோங்கியது. எனவே, அத்தனாசியுஸ் கண்டனம் செய்யப்பட்டது சரியே என்று சங்கம் அறிவித்தது. பேரரசனின் கருத்தை எதிர்த்த ஆயர்கள் நாடுகடத்தப்பட்டார்கள்.
லிபேரியஸ் மிலான் சங்கத்தின் முடிவை ஏற்க மறுத்தார். எனவே, அவரையும் பேரரசன் நாடுகடத்தினான். அங்கே, லிபேரியசின் உறுதிப்பாடு படிப்படியாக ஆட்டம் கண்டது. பேரரசன் கொடுத்த நெருக்கடி தாங்கமுடியாமல், லிபேரியஸ், அத்தனாசியுஸ் கண்டனம் செய்யப்பட்டது சரியே என்று கூறத் தொடங்கினார். இயேசு கிறிஸ்து இறைத்தன்மை கொண்டவர் என்னும் கொள்கையை ஆணித்தரமாக எடுத்துரைக்காமல் மேலெழுந்தவாரியாக மட்டுமே குறிப்பிட்ட ஒரு வாசகத்தை ஏற்று அவர் கையெழுத்திட்டார். மேலும், பேரரசனின் அதிகாரத்துக்குத் தம்மைக் கீழ்ப்படுத்திக்கொண்டார்.
இரண்டாம் பெலிக்சு என்பவருக்கு எதிர்ப்பு
[தொகு]லிபேரியஸ் நாடுகடத்தப்பட்டிருந்த வேளையில் பேரரசனின் வற்புறுத்தலின் பேரில் இரண்டாம் பெலிக்சு என்பவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். விடுதலை பெற்ற லிபேரியஸ் உரோமைக்குத் திரும்பியதும், அவர் திருத்தந்தை பதவியை இரண்டாம் பெலிக்சோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பேரரசன் விரும்பினான். இந்த முறைகேட்டை உரோமை மக்களும் குருக்களும் தீவிரமாக எதிர்த்தனர். அவர்களது எதிர்ப்பின் விளைவாக இரண்டாம் பெலிக்சு உரோமையை விட்டு நாட்டுப் பகுதிக்குத் தப்பிச் சென்றார். கடவுள் ஒருவரே, கிறிஸ்துவும் ஒருவரே, ஆயரும் ஒருவரே என்று மக்கள் குரலெழுப்பினர். லிபேரியஸ் மீண்டும் உரோமையின் ஒரே ஆயராக, திருத்தந்தை பதவியை ஏற்றார்.
இரண்டாம் பெலிக்சு (355-365) திருச்சபை வரலாற்றில் எதிர்-திருத்தந்தை என அழைக்கப்படுகிறார்.
பதவியை மீண்டும் பெற்ற லிபேரியசால் திருச்சபையின் ஆட்சியை உறுதியாக நிலைநாட்ட இயலவில்லை. இதற்கிடையில் 359இல் ரீமினி நகரில் கூடிய சங்கம் ஆரியுசின் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தது.
பேரரசன் காண்ஸ்டன்ஸ் 361இல் இறந்த பிறகுதான், லிபேரியஸ் நிசேயா சங்கத்தின் (325) போதனையை, அதாவது இயேசு கிறிஸ்து இறைத்தன்மை கொண்டவர் என்னும் போதனையை, உறுதியாக எடுத்துரைத்தார். ரீமினி சங்கத்தின் தீர்மானங்கள் செல்லாது என்று அறிவித்தார்.
லிபேரியசின் மித அணுகுமுறை
[தொகு]ரீமினி சங்கத்தின் தீர்மானங்களை ஏற்ற ஆயர்கள் தங்கள் தவற்றினை ஏற்று, மீண்டும் நிசேயா சங்கப் படிப்பினையை ஒத்துக்கொண்டால் அவர்களை சபையில் சேர்த்துக்கொள்ளலாம் என்று வழிவகுத்தார். அதுபோலவே கீழைச் சபையிலும் ஆரியுசின் கொள்கை தவறு என்று ஏற்று, மீண்டும் நிசேயா சங்கப் படிப்பினையை ஏற்ற ஆயர்களைச் சபையில் சேர்த்திட லிபேரியஸ் ஏற்பாடு செய்தார். இவ்வாறு, திருச்சபை முழுவதிலும் ஒற்றுமை கொணர்வதற்கு உரோமை ஆயர் என்னும் தகுதியில் திருத்தந்தை லிபேரியுஸ் நடவடிக்கைகள் எடுத்தார்.
லிபேரியஸ் மரியாவுக்குப் பெருங்கோவில் எழுப்புதல்
[தொகு]திருத்தந்தை லிபேரியஸ் அன்னை மரியாவுக்கு உரோமை நகரில் ஓர் அழகிய கோவில் கட்டி எழுப்பினார் என்பது வரலாறு. அதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அதன்படி, உரோமையில் வாழ்ந்த பெருங்குடியைச் சார்ந்த யோவான் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் குழந்தைகள் இல்லை. தங்களது பெரும் செல்வத்தை யாருக்கு விட்டுச் செல்வது என்று அன்னை மரியா தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அத்தம்பதியர் வேண்டிக்கொண்டனர். அவர்களது வேண்டுதலுக்கு இணங்க, அன்னை மரியா அவர்களுக்கு 358ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 4ஆம் நாள் இரவில் கனவில் தோன்றி, தமக்கென்று ஒரு கோவில் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். அக்கோவில் அமையவேண்டிய இடம் "எசுக்குயிலின்" குன்றம் என்றும், அக்குன்றில் எங்கு உறைபனி பெய்துள்ளதோ அதுவே கோவில் எழுப்பப்பட வேண்டிய இடம் என்றும் அன்னை மரியா கனவின்வழி தெரிவித்தார்.
ஆனால், ஆகத்து மாதம் கோடைகாலத்தின் உச்சக்கட்டம் என்பதாலும், உறைபனி பெய்வதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்பதாலும் யோவானும் அவர்தம் மனைவியும் தங்கள் கனவின் பொருள் குறித்து வியந்துகொண்டிருந்தார்கள். எப்படியும் அன்னை மரியா கூறியது நடக்கும் என்னும் நம்பிக்கையில் எசுக்குயிலின் குன்றம் சென்று பார்த்தபோது அங்கே உண்மையாகவே உறைபனி பெய்திருப்பதையும் கோவில் கட்டடத்தின் எல்லை பனியில் வரையப்பட்டிருப்பதையும் கண்டு வியந்தார்கள்.
அதே இரவு, திருத்தந்தை லிபேரியஸ் என்பவருக்கும் அன்னை மரியா கனவில் தோன்றி, உறைபனி அடையாளம் கொடுக்கப்படுவதாகக் கூறினார். அவரும் பிற கிறித்தவர்களும் எசுக்குயிலின் குன்றுக்குச் சென்று, அன்னை மரியா கூறியதுபோலவே உறைபனி விழுந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார்கள். ஆகத்து கோடை வெயிலில் உறைபனி பெய்ததைக் கண்ட அனைவரும் கோவிலின் எல்லை பனியில் வரையப்பட்டதைக் கண்டனர். திருத்தந்தை லிபேரியஸ் அன்னை மரியாவுக்கு அங்கே ஒரு கோவில் கட்டி எழுப்பினார். 358இல் தொடங்கிய கட்டட வேலை 360இல் நிறைவுற்றது. சில வரலாற்றாசிரியர்கள் இக்கதையை ஒரு புனைவாகவே கருதுகின்றனர்.
இருப்பினும், திருத்தந்தை லிபேரியஸ் அக்கோவிலை அன்னை மரியாவுக்கு நேர்ந்தளித்தார் என்னும் வரலாற்றுச் செய்திப் பின்னணியில் அதற்கு "லிபேரியக் கோவில்" என்றொரு பெயரும் உண்டு.
லிபேரியஸ் பற்றிய சர்ச்சை
[தொகு]திருத்தந்தை உண்மையிலேயே நிசேயா சங்கம் இயேசுவின் இறைத்தன்மை குறித்து வழங்கிய போதனையை மறுத்தாரா என்பது பற்றி வரலாற்றுச் சர்ச்சை நிலவி வந்துள்ளது. சிலர் கருத்துப்படி, லிபேரியஸ் இறுதிவரை திருச்சபையின் உண்மையான போதனையை ஏற்று போதித்தார். அதன் அடிப்படையில் புனித ஜெரோம் தொகுத்த மறைச்சாட்சிகள் பட்டியலில் திருத்தந்தை லிபேரியசின் நினைவு செப்டம்பர் 23ஆம் நாள் கொண்டாடப்பட்டது. ஆனால், அதன் பின் தொகுக்கப்பட்ட வழிபாட்டு நாள்காட்டிகளில் லிபேரியசின் பெயர் சேர்க்கப்படவில்லை.
பிற்கால மரபுப்படி, லிபேரியஸ் திருச்சபையின் உண்மையான போதனையை மறுத்திருந்தார். எனவே, உரோமை ஆயராகிய திருத்தந்தை வழுவாவரம் கொண்டுள்ளாரா என்னும் பொருள் பற்றி முதலாம் வத்திக்கான் சங்கத்தில் (1870) விவாதிக்கப்பட்டபோது, அதற்கு எதிராகப் பேசியவர்கள் திருத்தந்தை லிபேரியசின் பெயரைக் குறிப்பிட்டார்கள் என்பது கருதத்தக்கது.
லிபேரியஸ் நாடுகடத்தப்பட்டிருந்த போது எதிர்-திருத்தந்தையாக (antipope) தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் பெலிக்சு என்பவரின் பெயர் முறையான திருத்தந்தையர் பட்டியலில் சில காலம் இடம்பெற்றிருந்தது. பெயர்களைச் சரியாக அடையாளம் காணமுடியாத குறை காரணமாக அந்த இரண்டாம் பெலிக்சு நிசேயா சங்கத்தின் போதனையைக் காப்பதற்காகத் தம் உயிரையே பலியாக்கினார் என்றொரு மரபு எழுந்தது. அது தவறு என்று பிற்காலத்தில் தெரிந்தது.
இறப்பும் அடக்கமும்
[தொகு]திருத்தந்தை லிபேரியஸ் 366ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் இறந்தார். அவருடைய உடல் உரோமையில் பிரிசில்லா சுரங்கக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]
- Duff, Eamon. Saints and Sinners: A History of the Popes, Yale University Press, 2001, pp. 30–32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-09165-6
- "Pope Liberius". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.