உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்-திருத்தந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதிர்-திருத்தந்தை (இலத்தீன்: antipapa) என்போர் சட்டபூர்வமாக தேர்வு செய்யப்பட்ட திருத்தந்தைக்கு எதிராக தம்மைத்தாமே திருத்தந்தையாக அறிவித்தும் அப்பதவியில் இருப்போரிடமிருந்து அதை பறிக்க முயன்று குறிக்கத்தக்க பொருளாதார வெற்றியடைந்தவர்களைக்குறிக்கும். இச்சொல்லானது கத்தோலிக்க உரோமைத் தலைமைக்குருவின் பதவிக்கு போட்டியிடுபவரை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. அலெக்சாந்திரியாவின் காப்டிக் மரபுவழித்திருச்சபையின் தலைவர் (Pope of the Coptic Orthodox Church of Alexandria) திருத்தந்தை என்னும் சொல்லாலே அழைக்கப்பட்டாலும் அவர் உரோமைத் தலைமைக்குருவின் பதவியினை தாம் வகிப்பதாக உரிமை கொன்டாடாததால் அவரை இப்பட்டியலில் சேர்ப்பதில்லை.

பெருவாரியான நேரங்களில் இத்தகைய எதிர்-திருத்தந்தையர்கள் கர்தினால் குழுக்களிடம் ஏற்பட்ட பிளவாலோ அரச வற்புருத்துதலாலோ தேர்வுசெய்யப்பட்டாலும், மேற்கு சமயப்பிளவின் போது ஒரே தேர்தல் அவை திருத்தந்தையை தேர்வு செய்து பின்னர் அவரை வெறுத்து மற்றுமொருவரை தேர்வு செய்துள்ளனர். திருத்தந்தை இருக்கும்போது மற்றுமொருவரை தேர்வு செய்ததால் அவர் எதிர்-திருத்தந்தை என கருதப்படுகின்றார். பின்னாட்களில் திருத்தந்தை இரண்டாம் பயஸ், ஒருவர் திருத்தந்தையாக தேர்வான பின்பு அவரின் தேர்தலைக்குறித்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என சட்டமியற்றினார். இதனால் இச்சிக்கல் இனிவரும் காலத்தில் எழாத வண்ணம் தடுக்கப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை வரலாற்று நூலில் திருத்தந்தை எட்டாம் லியோவின் (963–965) வரலாற்றுக்குறிப்பில் 11ஆம் நூற்றாண்டில் நிலவியக்குழப்பத்தால் இறையியல் மற்றும் திருச்சபைச் சட்டத் தொகுப்பினை மட்டும் வைத்து யார் உண்மையான புனித பேதுருவின் வழித்தோன்றல் என்பதை கணிக்க இயலாது என்றும் ஆயினும் திருத்தந்தை பணிப்பொருப்பு காலியாக இருந்ததில்லை என்பதை மட்டும் உறுதியுடன் கூறலாம் என்றும் குறிக்கின்றது.[1]

நவீன காலத்தில் திருச்சபையில் செய்யப்பட்ட மாற்றங்களிளை ஏற்காதோர், குறிப்பாக இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தால் ஏற்பட்ட மாற்றத்தை விரும்பாதோர் காலியான அறியணையின் காலத்தில் இருப்பதாகவோ அல்லது தம்மைதாமே திருத்தந்தையாக்கிக்கொண்டுள்ளனர். இவர்களும் எதிர்-திருத்தந்தை என அழைக்கப்படலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Annuario Pontificio 2012 (Libreria Editrice Vaticana 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-209-8722-0), p. 12*
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்-திருத்தந்தை&oldid=2696281" இலிருந்து மீள்விக்கப்பட்டது