போன்தியன் (திருத்தந்தை)
திருத்தந்தை போன்தியன் Pope Pontian | |
---|---|
18ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | சூலை 21, 230 |
ஆட்சி முடிவு | செப்டம்பர் 28, 235 |
முன்னிருந்தவர் | முதலாம் அர்பன் |
பின்வந்தவர் | அந்தேருஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | பொன்தியானுஸ் |
பிறப்பு | தெரியவில்லை; சார்தீனியா, உரோமைப் பேரரசு |
இறப்பு | 237 உரோமை, உரோமைப் பேரரசு |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | ஆகத்து 13 |
திருத்தந்தை போன்தியன் (Pope Pontian) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கி.பி. 230இலிருந்து 235 வரை ஆட்சி செய்தார்.[1] அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை முதலாம் அர்பன் ஆவார். திருத்தந்தை போன்தியன் கத்தோலிக்க திருச்சபையின் 18ஆம் திருத்தந்தை ஆவார்.
- போன்தியன் (இலத்தீன்: Pontianus; ஆங்கில மொழி: Pontian) என்னும் பெயர் "பாலம் கட்டுபவர்" என்று பொருள்படும்.
வரலாறு
[தொகு]இவருக்கு முந்திய திருத்தந்தையர்களை விடவும் இவரைப் பற்றி சிறிது அதிக தகவல்கள் கிடைத்துள்ளன. "லிபேரிய பட்டியல்" (Liberian Catalogue) என்னும் ஏட்டை நான்காம் நூற்றாண்டில் தொகுத்த ஆசிரியருக்கு அந்தக் கூடுதல் தகவல்கள் புதிதாக அப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு திருத்தந்தைக் குறிப்பேட்டிலிருந்து கிடைத்தன.
உரோமை நகர் இப்போலித்து (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார்[2] போன்தியனுக்கு முந்திய திருத்தந்தையர்கள் ஆட்சிக்காலத்தில் எதிர்-திருத்தந்தையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரும், போன்தியனும் வேறு திருச்சபைத் தலைவர்களும் திருச்சபைக்கு எதிராக இருந்த மாக்சிமினுஸ் த்ராக்ஸ் (Maximinus Thrax) என்ற உரோமைப் பேரரசனால் சார்தீனியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
எனவே, போன்தியன் 235 செப்டம்பர் 25 (அல்லது 28ஆம் நாள்) திருத்தந்தைப் பதவியைத் துறந்தார். இப்போலித்து என்ற எதிர்-திருத்தந்தையால் திருச்சபையில் ஏற்பட்ட பிளவும் ஏறக்குறைய அதே சமயத்தில் முடிவுக்கு வந்தது. இப்போலித்து திருச்சபையோடு சமாதானம் செய்துகொண்டார்.
போன்தியன் எவ்வளவு காலம் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis)[3] என்னும் ஏட்டின்படி, போன்தியன் சார்தீனியாவில் உலோகச் சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ததாலும், கொடூரமாக நடத்தப்பட்டதாலும் இறந்தார். அவர் தாவொலாரா என்னும் தீவில் இறந்ததாக ஒரு மரபு உள்ளது.
உடல் அடக்கம்
[தொகு]போன்தியனின் திருவிழா நவம்பர் 19ஆக இருந்தது. பின்னர் போன்தியனுக்கும் இப்போலித்துவுக்கும் ஒரே நாளில், ஆகத்து 13ஆம் நாள் விழாக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. அந்த நாளில்தான் அவருடைய உடலின் மீபொருள்கள் கலிஸ்டஸ் சுரங்கக் கல்லறையில் வைக்கப்பட்டன.
போன்தியனின் மீபொருள்களைத் திருத்தந்தை ஃபேபியன் (ஆட்சி: 236-250) என்பவர் உரோமைக்குக் கொண்டுவந்து, கலிஸ்டஸ் சுரங்கக் கல்லறையில் அடக்கம் செய்தார். அவரது கல்லறையில் வைக்கப்பட்ட கல்வெட்டு 1909இல் கண்டெடுக்கப்பட்டது. அதில் "PONTIANOS, EPISK." என்னும் சொற்கள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து, "MARTUR" என்னும் சொல் வேறு ஒருவரால் சேர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதற்கு, "ஆயரும் மறைச்சாட்சியுமான போன்தியன்" என்பது பொருள்.
ஆதாரங்கள்
[தொகு]வெளி இணைப்பு
[தொகு]- "Pope St. Pontian" in the 1913 Catholic Encyclopedia.