முதலாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை புனித முதலாம் ஃபெலிக்ஸ்
Pope Saint Felix I
26ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்சனவரி 5, 269
ஆட்சி முடிவுதிசம்பர் 30, 274
முன்னிருந்தவர்தியோனீசியுஸ்
பின்வந்தவர்யுட்டீக்கியன்
பிற தகவல்கள்
இயற்பெயர்ஃபெலிக்ஸ்
பிறப்புதெரியவில்லை
உரோமை; உரோமைப் பேரரசு
இறப்பு(274-12-30)திசம்பர் 30, 274
உரோமை; உரோமைப் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாதிசம்பர் 30
ஃபெலிக்ஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை புனித முதலாம் ஃபெலிக்ஸ் (Pope Saint Felix I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 269 சனவரி 5ஆம் நாளிலிருந்து 274 திசம்பர் 30ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.[1] அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை தியோனீசியுஸ். திருத்தந்தை புனித முதலாம் ஃபெலிக்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் 26ஆம் திருத்தந்தை ஆவார்.

  • ஃபெலிக்ஸ் என்னும் பெயர் (இலத்தீன்: Felix) "மகிழ்ச்சி நிறைந்தவர்" ("பாக்கியநாதர்") என்னும் பொருள்தரும்.

பணிகள்[தொகு]

திருத்தந்தை முதலாம் ஃபெலிக்ஸ் பற்றிய வரலாற்றுச் செய்திகள் மிகக் குறைவே. அவரது ஆட்சிக் காலம் உறுதியாகத் தெரிகிறது. அவர் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள் பற்றியும் தெளிவாகத் தெரிகிறது.

"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைய ஏடு, திருத்தந்தை முதலாம் ஃபெலிக்ஸ் உரோமையைச் சார்ந்தவர் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அவர் மறைச்சாட்சியாக இறந்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை.

அந்தியோக்கியா நகரில் நிகழ்ந்த சங்கம் சாமொசாத்தா நகர் பவுல் (Paul of Samosata) என்னும் ஆயர் மூவொரு இறைவன் பற்றித் தவறாகப் போதித்தார் என்பதற்காக அவரைப் பதவியிறக்கம் செய்து, உரோமைத் திருத்தந்தைக்குத் தகவல் அனுப்பியது. அப்போது திருத்தந்தையாக இருந்த தியோனீசியுஸ் என்பவர் அக்கடிதம் வந்துசேர்வதற்கு முன்னால் இறந்துவிட்டதால் திருத்தந்தை ஃபெலிக்சிடம் அக்கடிதம் வந்து சேர்ந்தது. சங்கத்தின் முடிவையும் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயரையும் திருத்தந்தை ஃபெலிக்ஸ் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

ஆனால் பதவியிறக்கம் செய்யப்பட்ட ஆயர் பவுல் தம் இருப்பிடத்திலிருந்து போக மறுத்தார். எனவே, திருச்சபை அதிகாரிகள் பேரரசன் அவுரேலியனிடம் முறையிட்டனர். ஆயர் பவுல் தம் இருப்பிடத்தை விட்டுச் செல்லவேண்டும் என்றும், கோவிலுக்குச் சொந்தமான இடங்கள் "இத்தாலிய மற்றும் உரோமை நகர ஆயர்களோடு ஒன்றிப்பு உறவில் நிலைத்திருப்போரிடம்" ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அரசன் ஆணை பிறப்பித்தார்.[2]

மறைச்சாட்சிகளுக்கு வணக்கம்[தொகு]

கிபி மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மறைச்சாட்சிகள் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைப் பகுதியில் திருப்பலி நிறைவேற்றும் பழக்கம் இருந்தது. அப்பழக்கம் திருத்தந்தை ஃபெலிக்சின் காலத்திலும் தொடர்ந்தது.

இறப்பு[தொகு]

திருத்தந்தை முதலாம் ஃபெலிக்ஸ் 274ஆம் ஆண்டு, திசம்பர் 30ஆம் நாள் இறந்தார். அவர்தம் உடல் உரோமை நகரில் ஆப்பிய நெடுஞ்சாலையில் அமைந்த கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

திருவிழா[தொகு]

புனித முதலாம் ஃபெலிக்சின் திருவிழா அவர் இறந்த திசம்பர் 30ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. திருத்தந்தை முதலாம் ஃபெலிக்ஸ்
  2. Eusebius, Historia Ecclesiastica, vii. 30 - யூசேபியுஸ் தரும் குறிப்பு

வெளி இணைப்புகள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
தியோனீசியுஸ்
உரோமை ஆயர்
திருத்தந்தை

269–274
பின்னர்
யுட்டீக்கியன்