உள்ளடக்கத்துக்குச் செல்

பதுவை நகர அந்தோனியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதுவை நகர புனித அந்தோனியார்
குழந்தை இயேசுவுடன் பதுவை நகர அந்தோனியார்
(ஓவியர்: அந்தோனியோ தே பெரெதா)
மறைவல்லுநர், மறைப்பணியாளர்
அவிசுவாசிகளின் சம்மட்டி
கோடி அற்புதர்
பிறப்பு(1195-08-15)15 ஆகத்து 1195
லிஸ்பன், போர்த்துகல்
இறப்பு(1231-06-13)சூன் 13, 1231 (அகவை 36)
பதுவை
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
புனிதர் பட்டம்30 மே 1232, ஸ்போலேத்தோ, இத்தாலி by ஒன்பதாம் கிரகோரி
முக்கிய திருத்தலங்கள்புனித அந்தோனியார் பேராலயம், பதுவை, இத்தாலி
திருவிழா13 ஜூன்
சித்தரிக்கப்படும் வகைபுத்தகம்; அப்பம்; குழந்தை இயேசு; லீல்லி மலர்
பாதுகாவல்அமெரிக்க பழங்குடியினர்; பிரேசில்; முதியோர்; நற்கருணை பக்தி; மீனவர்; அறுவடை; குதிரைகள்; இழந்துபோன பொருட்களைக் கண்டெடுக்கச் செய்கிறவர்; தபால்; மாலுமிகள்; ஒடுக்கப்பட்டோர்; வறியவர்; போர்த்துகல்; கர்ப்பிணிகள்; பசியுறுவோர்; பயணம் செய்வோர்; பரிசல்காரர்;

பதுவை நகர அந்தோனியார் (Anthony of Padua) அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் (Anthony of Lisbon, 15 ஆகத்து 1195 – 13 சூன் 1231)[1] பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இளமை[தொகு]

ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரிலே 1195 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவருக்கு பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்து என்று பெயரிட்டனர். கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டிணாண்டு திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார்.

புனித அகுஸ்தீன் சபையில்[தொகு]

ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டு தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின் படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.

மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம், பெப்ரவரி 1220-இல் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த பெர்டிணாண்டு தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.

பிரான்சிஸ்கன் சபையில்[தொகு]

பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார். சிறிதுகாலம் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்றுமுதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் உரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார்.

தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் கோடி அற்புதர் புனித அந்தோனியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல நிகழ்வுகள் உள்ளன. ஒருமுறை இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனவாம். இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.

மற்றுமொறு புதுமை, இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்தவேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது பதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு.

புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் பல புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது.

இறப்பு[தொகு]

1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும் நோய்வாய்ப்பட்டார். அதே ஆண்டில் சூன் மாதம் 13 நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறந்தார். அப்போது அவருக்கு வயது 36. அதன் பின் 32 ஆண்டுகளுக்குப்பின் (1263) அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டு அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார்.

1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. Purcell, Mary (1960). Saint Anthony and His Times. Garden City, New York: Hanover House. pp. 19, 275–6.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Saint Anthony of Padua
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதுவை_நகர_அந்தோனியார்&oldid=3642828" இலிருந்து மீள்விக்கப்பட்டது