தாவீது அரசர்
அரசர் தாவீது David דָּוִד | |
---|---|
ஒன்றிணைந்த இஸ்ரயேலின் அரசர் | |
ஒன்றிணைந்த இசுரயேல் அரசு | |
ஆட்சிக்காலம் | யூதா மீது c. கி.மு.1010–1003; யூதா & இஸ்ரேல் மீது c. கி.மு.1003–970 |
முன்னையவர் | சவுல் |
பின்னையவர் | சாலமோன் |
பிறப்பு | c. கி.மு.1040 பெத்லகேம் |
இறப்பு | c. கி.மு.970 எருசலேம் |
மரபு | தாவீது குலம் |
தந்தை | ஈசாய் |
தாய் | நிட்சவெத் |
தாவீது (எபிரேய மொழி: דָּוִד, דָּוִיד ; Dawid; Strong's Daveed; beloved; அரபு மொழி: داوود or داود[note A] Dāwūd) என்பவர், எபிரேய விவிலியத்தின்படி ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசின் இரண்டாவது அரசர் ஆவார். மத்தேயு, லூக்கா நற்செய்திகளின்படி, இவர் யோசேப்பு, மரியா ஆகியோர் வழியில் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களில் ஒருவர் ஆவார். இவர் கர்த்தருக்கு பிரியமானவராகவும், சிறந்த பாடகராகவும், இசைவல்லுநராகவும், போர் வீரராகவும் திகழ்ந்தார்.
விவிலியத்தில்
[தொகு]விவிலியத்தில் தாவீதைப் பற்றி அதிகமான தகவல்கள் உள்ளன. அவற்றில் சில கீழே தரப்படுகின்றன.
கடவுளின் தேர்வு
[தொகு]இஸ்ரவேலின் முதல் அரசர் சவுல் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர், அவர் தேவனுடைய ஆலோசனையை பின்பற்றாமல் தேவனை மறந்ததால் ஆண்டவர் அவரை புறக்கணித்தார்: "சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கவில்லை." (1 சாமுவேல் 15:11) என்று தேவன் கூறினார்.
ஆண்டவர் சாமுவேலிடம் ஈசாயின் மகனை தெரிந்துக் கொண்டேன் அவனை இராஜவாக அபிஷேகம் செய் என்று ஈசாயின் வீட்டிற்கு அனுப்புகின்றார். அப்பொழுது ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். "இவர்களை ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்றார் சாமுவேல். அங்கு ஈசாயின் இளைய மகன் அதுவரையில் அழைக்கப்படவில்லை. "உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா? என்று சாமுவேல் கேட்க, "இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்" என்று பதிலளித்தார் ஈசாய். தாவீதின் தந்தை ஈசாயின் பார்வையில், தாவீது அவருடைய சகோதரர் எல்லாரிலும் சிறியவராக காணப்பட்டார். ஆனால் பரம தந்தையாம் தேவனுடைய பார்வையில் தாவீது தன் சகோதரர் எல்லாரிலும் பெரியவராக காணப்பட்டார். சாமுவேல் அவரிடம், "ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்" என்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் "தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!" என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். (1 சாமுவேல் 16:10-13) [1]
சவுலின் அரசவையில் தாவீது
[தொகு]ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது. ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி, சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார்; தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார். (1 சாமுவேல் 16:14,23)
தாவீதும் கோலியாத்தும்
[தொகு]காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிராக நின்று உரத்த குரலில் நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும். அவன் என்னுடன் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்; நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிமைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றான். தாவீது சவுலை நோக்கி, இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வெண்டியதில்லை: உம் அடியானாகிய நானே அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன் என்றார். தாவீது தம் கோலை கையில் எடுத்துக் கொண்டார். நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார். பெலிஸ்தியன் தாவீதை கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம் நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய். நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன் இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார். நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன் பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர் என்றார். பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீது அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார் அதை கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது கையில் வாளேதும் இன்றிக் கர்த்தர் துணை கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார். உடனே தாவீது ஓடி அந்தப் பெலிஸ்த்தியனின்மேல் ஏறி நின்றார்; அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையை கொய்தார். (1 சாமுவேல் 17:4-51)
தாவீதும் யோனத்தானும்
[தொகு]தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார். அன்று சவுல் தாவீதை தம்முடன் அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை வீட்டுக்கு திரும்பிப் போக இசைவு அழிக்கவில்லை. பின்பு யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார். யோனத்தான் தான் அணிந்திருந்த மேலங்கியைச் கழற்றி தாவீதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி, வாள் வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார். தாவீது, சவுல் தம்மை அனுப்பிய இடமெல்லாம் சென்று வெற்றியைக் கொடுத்தார். அதனால் சவுல் அவரை படைத்தலைவராக்கினார். மக்கள் எல்லோரும் மற்றும் சவுலின் அலுவலர்களும் இதைப் பெரிதும் விரும்பினர். (1 சாமுவேல் 18:1-4)
தாவீது மேல் உள்ள பொறாமையால், தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தன் மகன் யோனத்தானிடம் தம் அலுவலர் எல்லோரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மீது அதிகமாக அன்புக் கொண்டிருந்தார். ஆதலால் தாவீதைப் பார்த்து யோனத்தான், என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார். ஆதலால் எச்சரிக்கையாய் இரு. காலையிலேயே புறப்பட்டு ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்துக் கொள். நீ வெளியில் இருக்கும் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்துக் கொண்டு, உன்னைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன் என்றார். (1 சாமுவேல் 19:1-3)
அரசர் சவுலும் தாவீதும்
[தொகு]மீண்டும் போர் மூண்டது; தாவீது புறப்பட்டு பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்கிளல் மிகுதியனோரை வெட்டி வீழ்த்தினார். அதனால் அவர்கள் சிதறி ஓடினர். பின்னர் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மேல் இறங்கியது. அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார். அப்போது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு குத்த முயன்றார். ஆனால் சவுலின் ஈட்டி குறியிலிருந்து விலகியதனால் சுவரில் பாய்ந்தது. அன்றிரவே தாவீது அங்கிருந்து தப்பி ஓடினார். (1 சாமுவேல் 19:8-10)
சிறிது காலத்திற்கு பின் சவுலைக் கொல்ல தாவீதுக்கு வாய்ப்பு கிடைத்தும், அவர் அவ்வாறு செய்யவில்லை; அதனால் இருவரும் சமாதானம் அடைந்தனர். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, என் மகன் தாவீதே! நீ ஆசி பெறுவாயாக! நீ பலக் காரியங்களை செய்வாய்: அவையனைத்திலும் வெற்றி பெறுவாய்! என்று வாழ்த்தினார். பின்னர் தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார். (1 சாமுவேல் 26:25)
இஸ்ரயேல் அரசர் தாவீது
[தொகு]பெலிஸ்தியரோடு நடைபெற்ற போரில் சவுலும் யோனத்தானும் இற்ந்ததும், தாவீது யூதாவின் அரசர் ஆனார். அதன் பிறகு, நடைபெற்ற அனைத்து போர்களிலும் தாவீது வெற்றி பெற்று ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசை உருவாக்கி, எருசலேமை அதன் தலைநகர் ஆக்கினார். தாவீது பாவங்களுக்காக இறைவாக்கினர் நாத்தான் அவரைக் கண்டித்தபோது, தாவீது மனம் வருந்தி தவம் இருந்து கடவுளிடம் மன்னிப்பு வேண்டினார். திருப்பாடல்கள் நூலின் பெரும்பாலான பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை. இவர் மகன் அப்சலோம் இவருக்கு எதிராக மேற்கொண்ட கிளர்ச்சியில் கொல்லப்பட்டார். தாவீது முதுமை அடைந்த வேளையில், மகன் சாலமோனைத் தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். தாவீது இறந்ததும் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.
இசைவல்லுநர் தாவீது
[தொகு]விவிலியத்தின் பல பகுதிகள் தாவீதின் இசைப் பாடல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன.[2] திருப்பாடல்கள் நூலின் பெரும்பாலான பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை. தாவீது யாழ் மீட்டுவதில் வல்லவராய் திகந்தார். இவர், இஸ்ரயேலின் பல்வேறு இறைப்புகழ்ச்சி பாடல்களை இயற்றியுள்ளார்.
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தாவீது பின்வருமாறு எடுத்துரைக்கிறார்:
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்: அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.
– திருப்பாடல்கள் 34:6-11
ஆண்டவரின் அடியாராகிய தாவீது, தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் ஆண்டவர் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப்பாடியது:
என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.
– திருப்பாடல்கள் 18:1-3
தாவீது ஆண்டவரில் மகிழ்ந்து பாடிய புகழ்ப்பாடல்:
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார். சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்.
– திருப்பாடல்கள் 40:1-3
தாவீதின் வரலாற்றுத்தன்மை
[தொகு]அகழ்வாய்வு சான்றுகள்:
- அர்மேனிய அரசன் ஒருவன் இஸ்ரயேல் அரசனை வெற்றிகொண்ட நிகழ்வை எடுத்துரைக்கும், கி.மு.850-835 காலத்தைச் சார்ந்த அர்மேனிய நினைவுச் சின்னம் ஒன்றில், இஸ்ரயேலைக் குறிக்க தாவீதின் இல்லம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
- கி.மு.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தாவீதின் நகரில், தாவீது அரசர் வாழ்ந்த அரண்மனையின் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[3]
விவிலிய பதிவுகள்:
- விவிலியத்தின் பல நூல்கள் தாவீதைப் பற்றி பேசுகின்றன. சிறப்பாக பழைய ஏற்பாட்டின் 1 சாமுவேல், 2 சாமுவேல், 1 அரசர்கள், 1 குறிப்பேடு, 2 குறிப்பேடு நூல்கள், புதிய ஏற்பாட்டின் மத்தேயு, லூக்கா நற்செய்திகள் ஆகியவை தாவீதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
இதனையும் காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ BibleGateway.com: Search for a Bible passage in over 35 languages and 50 versions
- ↑ 2 சாமுவேல் 23:1
- ↑ Finkelstein, Israel; Neil Asher SilbermanDavid and Solomon: In Search of the Bible's Sacred Kings and the Roots of the Western Tradition Simon & Schuster Ltd (16 October 2006) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0743243629 p20
- Kirsch, Jonathan (2000) King David: the real life of the man who ruled Israel. Ballantine. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-345-43275-4.
- See also the entry "David" in Easton's Bible Dictionary.
- Dever, William G. (2001) What did the Bible writers know and when did they know it? William B. Eerdmans Publ. Co., Cambridge UK.
மேலும் வாசிக்க
[தொகு]- Alexander, David; Alexander, Pat, eds. (1983). Eerdmans' handbook to the Bible ([New, rev.]. ed.). Grand Rapids, Mich.: Eerdmans. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0802834868.
- Bright, John (1981). A history of Israel (3rd ed.). Philadelphia: Westminster Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0664213812.
- Bruce, F. F. (1963). Israel and the Nations. Grand Rapids, MI: Eerdmans.
- Harrison, R.K. (1969). An Introduction to the Old Testament. Grand Rapids, MI: Eerdmans.
- Kidner, Derek (1973). The Psalms. Downers Grove, IL: Inter-Varsity Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0877848688.
- Noll, K. L. (1997). The faces of David. Sheffield: Sheffield Acad. Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1850756597.
- Thompson, J.A. (1986). Handbook of life in Bible times. Leicester, England: Inter-Varsity Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0877849498.
- For a more complete summary of all the episodes in the Saul/David story in Samuel (but excluding Chronicles), see synopsis பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- தாவீதின் குடும்பம் Complete Bible Genealogy
- விவிலிய அகழ்வாய்வு Double Identity: Orpheus as David. Orpheus as Christ?