முதலாம் தாமசுஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனித முதலாம் தாமசுஸ்
37ஆம் திருத்தந்தை
Saintdamasus.png
ஆட்சி துவக்கம்அக்டோபர் 1, 366
ஆட்சி முடிவுதிசம்பர் 11, 384
முன்னிருந்தவர்லிபேரியஸ்
பின்வந்தவர்சிரீசியஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்தாமசுஸ்
பிறப்புசுமார் 305
உரோமை? எஜித்தானியா - [முன்னாள்] எசுப்பானியா - [இன்று] போர்த்துகல்?
இறப்புதிசம்பர் 11, 384(384-12-11)
உரோமை நகரம், மேலை உரோமைப் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாதிசம்பர் 11
தாமசுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை முதலாம் தாமசுஸ் (Pope Damasus I) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் அக்டோபர் 1, 366 முதல் திசம்பர் 11, 384 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 37ஆம் திருத்தந்தை ஆவார்.

முதலாம் தாமசுஸ் ஆற்றிய முக்கிய பணிகள்[தொகு]

திருத்தந்தை முதலாம் தாமசுஸ், திருச்சபையின் தலைமைப் பதவியை வகிக்கின்ற திருத்தந்தையின் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தீவிரமாகச் செயல்பட்டவர் ஆவார். அவர், கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு இரத்தம் சிந்தி உயிர்நீத்த மறைச்சாட்சிகளின் கல்லறைகளை அழகுபடுத்தி, அங்குப் பளிங்குக் கற்கள் பதித்து, அவற்றில் மறைச்சாட்சிகளின் பெயர், பணி போன்ற தகவல்களைப் பொறிக்கச் செய்தார். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை மூலமொழியாகிய கிரேக்கத்திலிருந்து நேரடியாக இலத்தீனில் மொழிபெயர்த்து ஆக்கும் பணியைத் திருத்தந்தை தம் செயலாரகப் பணியாற்றிய புனித ஜெரோம் (இறப்பு: சுமார் 420) என்பவரிடம் ஒப்படைத்தார். அம்மொழிபெயர்ப்பு "மக்கள் பதிப்பு" என்னும் பொருள்தரும் விதத்தில் "Vulgate" (இலத்தீன்: [vulgata] error: {{lang}}: text has italic markup (உதவி)) என்னும் பெயர் பெற்றது. அதற்கு முன் வழக்கத்திலிருந்த பெயர்ப்பு "பழைய இலத்தீன் பெயர்ப்பு" (இலத்தீன்: [vetus latina] error: {{lang}}: text has italic markup (உதவி)) என்னும் பெயர் கொண்டது.

பிறப்பும் வளர்ப்பும்[தொகு]

தாமசுஸ் உரோமை நகரில் எசுப்பானிய-போர்த்துகீசிய பெற்றோருக்குப் பிறந்தவர் என்று கருதப்படுகிறது. சிலர் அவர் எசுப்பானிய-போர்த்துகீசிய பகுதியாக இருந்த எஜித்தானியாவில் பிறந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர். எவ்வாறாயினும், அவர் உரோமையில்தான் சிறுபருவத்திலிருந்தே வளர்ந்தார். அவர் திருத்தொண்டராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அவருக்கு முன் பதவியிலிருந்த திருத்தந்தை லிபேரியஸ் 355இல் நாடுகடத்தப்பட்ட வேளையில் தாமசசும் அவருடன் சென்றார். பின்னர் அவர் உரோமைக்குத் திரும்பிவந்து, லிபேரியசுக்குப் பதிலாக எதிர்-திருத்தந்தையாகச் செயல்பட்ட இரண்டாம் பெலிக்சு என்பவரின் கீழ் பணிபுரிந்தார்.

அச்சமயத்தில் நாடுகடத்தப்பட்ட லிபேரியசின் பதவியில் யார் நியமிக்கப்பட்டாலும் அவரைத் திருத்தந்தையாக ஏற்கப் போவதில்லை என்று உரோமை குருக்களும் மக்களும் உறுதிபூண்டிருந்த போதிலும் தாமசுஸ் எதிர்-திருத்தந்தையை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே தாமசுஸ் தாம் திருத்தந்தையாகப் பதவி ஏற்ற நாளிலிருந்து திருத்தந்தையின் பதவியோடு இணைந்த அதிகாரத்தை வலியுறுத்தினார் என்பது வரலாற்று உண்மை.

திருத்தந்தையாக நியமனம் பெறல்[தொகு]

நாடுகடத்தப்பட்டிருந்த திருத்தந்தை லிபேரியஸ் உரோமைக்குத் திரும்பிவந்து, மீண்டும் திருத்தந்தை பதவியில் அமர்ந்ததும், தாமசுஸ் அவரோடு இணக்கம் செய்துகொண்டு, அவரது அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு பணிபுரிந்தார்.

திருத்தந்தை லிபேரியஸ் 366இல் இறந்தார். அவருக்கு வாரிசாகப் புதிய திருத்தந்தையாக யாரை நியமிப்பது என்பது குறித்து பலத்த சர்ச்சை எழுந்தது. தாமசுஸ் திருத்தந்தை பதவிக்கு எவ்வாறு நியமனம் பெற்றார் என்பது குறித்து இரு வரலாற்று வரைவுகள் உள்ளன.

அதிக நம்பகமான வரைவு இது: திருத்தந்தை லிபேரியஸ் உயிரோடு இருக்கும்வரை அவரே திருச்சபையின் தலைவர் என்று ஏற்றுகொண்டவர்கள் அவருடைய இறப்புக்குப் பின் டைபர் நதிக்கரையில் அமைந்த மரியா கோவிலில் ஒன்றுகூடி உர்சீனுஸ் என்னும் திருத்தொண்டரைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். அவர் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் திருநிலை பெற்றார்.

மற்றொரு வரலாற்று வரைவுப்படி, லிபேரியசை எதிர்த்தவர்கள் ஒன்றுகூடி உர்சீனுஸ் என்பவரைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர்.

எவ்வாறாயினும், எதிர்-திருத்தந்தையாகச் செயல்பட்ட பெலிக்சு என்பவருக்கு விசுவாசமாக இருந்த ஒரு பெரிய குழுவினர் உரோமையில் உள்ள லுச்சீனா புனித லாரன்சு கோவிலில் கூடி, திருத்தொண்டர் தாமசுசைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர்.

குழப்பங்கள்[தொகு]

பதவி ஏற்றதும், திருத்தந்தை தாமசுஸ் தமது ஆதரவாளர்களை அனுப்பி, அவருக்கு எதிராக எழுந்த உர்சீனுஸ் என்பவரின் ஆதரவாளர்களை வன்முறையாக ஒடுக்க வழிகோலினார்.

366ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாளில், ஒஸ்தியா நகர் ஆயர் தாமசுசுக்குத் திருத்தந்தை நிலைப் பொழிவு வழங்கினார். அச்சடங்கு உரோமை புனித யோவான் பெருங்கோவிலில் நிகழ்ந்தது.

அதற்குப் பின்னரும் உரோமை நகரின் தெருக்களில் வன்முறை தொடர்ந்தது. தாமசுசின் ஆதரவாளர்களும் உர்சீனுசின் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர். கலவரத்தை அடக்குவதற்கு வழியறியாமல், திருத்தந்தை தாமசுஸ், உரோமை நகர் ஆளுநரின் உதவியை நாடினார். இவ்வாறு அரசியல் அதிகாரிகளின் உதவியைத் திருத்தந்தை நாடியது வழக்கத்துக்கு மாறானது.

எவ்வாறாயினும், உர்சீனுசும் அவரோடு வேறு இரு திருத்தொண்டர்களும் நாடுகடத்தப்பட்டார்கள். கலவரமோ நின்றபாடில்லை. எனவே, தாமசுஸ் தம்முடைய போர்வீரர்களை அனுப்பி, புனித மரியா பெருங்கோவிலில் அடைக்கலம் புகுந்திருந்த எதிர்க்கட்சியினரைத் தாக்க வழிசெய்தார். அத்தாக்குதலின்போது 137 பேர் உயிர் இழந்ததாக வரலாறு கூறுகிறது.

இந்த வன்முறை நிகழ்வுகளுக்கு இத்தாலி ஆயர்கள் இசைவு அளிக்கவில்லை. ஆயினும் தாமசுசின் ஆட்சிக்காலம் முழுவதுமே அவருக்கு எதிராகச் செயல்பட்ட உர்சீனுசின் ஆதரவாளர்கள் தொல்லை கொடுத்தனர்.

திருத்தந்தை தாமசுஸ் கிறித்தவக் கொள்கைகளை நிலைநாட்டுதல்[தொகு]

ஆட்சி அமைப்பைச் சார்ந்தவர்களும் உயர்குடியினரும் திருத்தந்தை தாமசுசுக்கு ஆதரவு அளித்தனர். அவரது அவையும் செல்வக் கொழிப்பில் திளைத்தது.

திருத்தந்தை தாமசுஸ் திருச்சபைக்கு எதிராக எழுந்த தப்பறைக் கொள்கைகளை எதிர்த்துப் போராடினார். அவர் கண்டனம் செய்த தப்பறைகளுள் சில:

  • ஆரியுசின் கொள்கை (இயேசு கிறித்து கடவுளின் படைப்பே, கடவுள் அல்ல என்னும் கொள்கை).
  • அப்போல்லினாரியுசு கொள்கை (இயேசு கடவுள் என்பதால் அவருக்கு மனித ஆன்மா கிடையாது என்னும் கொள்கை)
  • மாசெதோனியுசு கொள்கை (தூய ஆவி கடவுள் அல்ல என்னும் கொள்கை)

திருத்தந்தையின் அதிகாரம் வலியுறுத்தப்படல்[தொகு]

உரோமையின் ஆயரும் அனைத்துலகத் திருச்சபையின் தலைவருமாக இருக்கின்ற திருத்தந்தை, இயேசுவிடம் இருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தை இவர் மிகவும் வலியுறுத்தினார். புனித பேதுருவின் வழித்தோன்றலாக வருபவர் திருத்தந்தை என்பதால் அவருக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சபையின் கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக எடுத்து உரைக்கும் பொறுப்பு திருத்தந்தையைத் தனிப்பட்ட முறையில் சார்ந்தது என்று தாமசுஸ் அழுத்தம் திருத்தமாகப் பறைசாற்றினார்.

வரலாற்றுச் சிறப்பான பணிகள்[தொகு]

திருத்தந்தை ஆற்றிய சிறப்பான பணிகளுள் சில:

  • இவர் திருத்தந்தை மைய அலுவலகத்தின் ஆவணக் காப்பகத்தை ஏற்படுத்தி, வரலாற்று ஏடுகள் பாதுகாக்கப்பட வழிசெய்தார்.
  • உரோமை நகரிலும் மேற்கு உரோமைப் பேரரசிலும் கிறித்தவ வழிபாட்டு மொழியாக இலத்தீன் மொழியை அறிவித்தார்.
  • கி.பி. நான்காம் நூற்றாண்டுவரை புழக்கத்தில் இருந்த விவிலியத்தின் "பழைய" இலத்தீன் மொழிபெயர்ப்பை மறுபார்வையிட்டு, மூல மொழியாகிய கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டைப் புதிதாக மீண்டும் இலத்தீனில் பெயர்க்க ஏற்பாடு செய்தார். இப்பணியைத் திருத்தந்தை தாமசுஸ் தமது செயலராக இருந்த புனித ஜெரோம் என்பவரிடம் ஒப்படைத்தார். அவர் பல ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பின் (382-405) உருவாக்கிய இலத்தீன் மொழிபெயர்ப்பு "மக்கள் பதிப்பு"(இலத்தீன்: [vulgata] error: {{lang}}: text has italic markup (உதவி)) என்னும் பெயர் பெற்றது.
  • முதல் நூற்றாண்டுகளில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டுக் கொலைசெய்யப்பட்ட மறைச்சாட்சிகள் மற்றும் திருத்தந்தையர் ஆகியோரின் கல்லறைகளை இவர் அழகுபடுத்தினார். அக்கல்லறைகளில் பதித்த பளிங்குக் கற்களில் வரலாற்றுக் குறிப்புகளை எழுதிட இவர் வழிசெய்தார்.

இறப்பும் திருவிழாவும்[தொகு]

திருத்தந்தை தாமசுஸ் 384, திசம்பர் 11ஆம் நாள் இறந்தார். அவரது உடல் அவர் கட்டியிருந்த கோவிலில், ஆர்தெயாத்தீனா சாலை அருகே அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அது தாமசுஸ் புனித லாரன்சு கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு மீளடக்கம் செய்யப்பட்டது.

இவருடைய திருவிழா திசம்பர் 4ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
லிபேரியஸ்
உரோமை ஆயர்
திருத்தந்தை

366-384
பின்னர்
சிரீசியஸ்