அன்னா (புதிய ஏற்பாட்டு நபர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயேசு ஆலயத்தில் கானிக்கையாக்கப்பட்ட போது அன்னா.

அன்னா (எபிரேயம்: חַנָּה‎, பண்டைக் கிரேக்கம்Ἄννα) அல்லது இறைவாக்கினரான அன்னா என்பவர் விவிலியத்தின் லூக்கா நற்செய்தியில் மட்டும் வரும் நபர் ஆவார். அன்நற்செய்தியின் படி இவர் வயது முதிர்ந்த இறைவாக்கினர். யூத வழக்கப்படி குழந்தை இயேசு ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட போது இவர் அங்கு வந்து குழந்தையைப்பற்றிப் பேசினார். இந்நிகழ்வு லூக்கா 2:36-38இல் விவரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டில்[தொகு]

நற்செய்தியில் இவர் இடம்பெறும் நிகழ்வு பின்வருமாறு:

லூக்கா 2:36-38 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

-விவிலிய பொது மொழிபெயர்ப்பு

இப்பகுதியிலிருந்து அன்னாவைப்பற்றிய பின்வரும் தகவல்கள் கிடைக்கின்றன

  • இவர் ஒரு இறைவாக்கினர்.
  • இவர் ஆசேர் குலத்தைச் சேர்ந்தவர்.
  • இவரின் தந்தை பானுவேல்.
  • இவர் வயது முதிர்ந்தவர். இவரின் வயது எண்பத்து நான்கு.
  • இவர் மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்.
  • இவர் யூத பற்றுறுதியாளர். இவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.

திருச்சபை மரபு[தொகு]

கத்தோலிக்க திருச்சபையில் இவர் ஒரு புனிதராக ஏற்கப்படுகின்றார். இவரின் விழா நாள் ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழாவின் அடுத்த நாளான பெப்ருவரி 3 ஆகும்.