உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை
புனித மூன்றாம் ஃபெலிக்ஸ்
48ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்மார்ச்சு 13, 483
ஆட்சி முடிவுமார்ச் 1, 492
முன்னிருந்தவர்சிம்ப்ளீசியுஸ்
பின்வந்தவர்முதலாம் ஜெலாசியுஸ்
பிற தகவல்கள்
பிறப்புஉரோமை, மேற்கு உரோமைப் பேரரசு
இறப்புமார்ச் 1, 492
உரோமை, ஒடோவாக்கரின் இராச்சியம்
ஃபெலிக்ஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை மூன்றாம் ஃபெலிக்ஸ் (Pope Felix III, இறப்பு: 1 மார்ச் 492) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் 48ஆம் திருத்தந்தையாக கிபி 483 மார்ச் 13 முதல் 492 இல் இறக்கும் வரை ஆட்சி செய்தார்.[1]

பெயரில் குழப்பம்

[தொகு]

திருச்சபை வரலாற்றில் முதலாம் ஃபெலிக்ஸ் என்ற பெயரில் ஒரு திருத்தந்தை 269-274 காலத்தில் ஆட்சி செய்தார். அதன் பிறகு "இரண்டாம் பெலிக்சு" என்ற பெயரில் ஆட்சி செய்தவர் பெயர் திருத்தந்தையர் ஏட்டில் இடம் பெற்றது. ஆனால் அவர் எதிர்-திருத்தந்தை என்று பின்னர்தான் அறிவிக்கப்பட்டது.

அதற்கிடையில் "மூன்றாம் ஃபெலிக்ஸ்" என்ற பெயரில் ஒரு திருத்தந்தை பதவி ஏற்றார். உண்மையில் அவர் பெயர் "இரண்டாம் ஃபெலிக்ஸ்" என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஆயினும் வரலாற்றில் அவருடைய பெயர் "மூன்றாம் ஃபெலிக்ஸ்" என்றே நிலைத்துவிட்டது.

வரலாறு

[தொகு]

மூன்றாம் ஃபெலிக்ஸ் உரோமை நகர உயர்குடியில் பிறந்தார். அவருடைய தந்தையும் குருவாக இருந்தவரே. ஃபெலிக்ஸ் திருமணமாகி, தம் மனைவியை இழந்த நிலையில் அவருக்கு இரு குழந்தைகள் இருந்தனர். அக்குழந்தைகளில் ஒருவரின் வாரிசாகப் பிறந்தவரே பிற்காலத்தில் முதலாம் கிரகோரி என்ற பெயரில் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாகப் பணியாற்றினார்.[1][2]

இயேசு கிறிஸ்து பற்றிய போதனை குறித்த சர்ச்சை

[தொகு]

திருத்தந்தை மூன்றாம் ஃபெலிக்ஸ் காலத்தில் பேரரசர் சேனோ என்பவர் திருச்சபையில் ஒற்றுமையைக் காக்கும் வண்ணம் "ஒற்றுமை உடன்பாடு" (Henoticon) என்ற பெயரில் காண்ஸ்டாண்டிநோபுள் ஆயரான அக்காசியுசு (Patriarch Acacius of Constantinople என்பவரோடு இணைந்து ஓர் அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையானது அப்போது திருச்சபையில் இயேசு கிறிஸ்து பற்றி நிலவிய இரு கோட்பாடுகளை இணைத்து சமாதானம் கொணரும் முயற்சியாக வெளியிடப்பட்டது. அதன் வரலாறு இது:

451இல் கால்செடோன் நகரில் கூடிய பொதுச்சங்கம் இயேசு கிறிஸ்து உண்மையிலேயே கடவுளாகவும் உண்மையிலேயே மனிதராகவும் இருக்கின்றார் என்று போதித்திருந்தது. அதை திருச்சபையின் அதிகாரப்பூர்வ போதனையாக பெரும்பாலான கிறித்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என்றாலும், சிலர் இயேசு கிறிஸ்துவில் மனிதத் தன்மை, இறைத்தன்மை என இரு தன்மைகள் இல்லை என்றுரைத்த தவறான கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்தனர். இதனால் இராச்சியத்தில் பலவித குழப்பங்கள் நிலவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்துடன் பேரரசர் சேனோ என்பவர் காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயராக இருந்த அக்காசியு என்பவரோடு இணைந்து "ஒற்றுமை உடன்பாடு" என்னும் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையானது திருச்சபையின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் வண்ணம் நல்ல எண்ணத்தோடு விடுக்கப்பட்டது என்றாலும், பேரரசன் அந்த அறிக்கை பற்றி திருத்தந்தை ஃபெலிக்சை கலந்தாலோசிக்கவில்லை.

திருத்தந்தையாகப் பதவி ஏற்றதும் ஃபெலிக்ஸ், கால்செடோன் திருச்சங்கத்தின் போதனையை ஏற்காமல் செயல்பட்ட அலெக்சாந்திரியா நகர் ஆயர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரினார். மேலும் அந்த ஆயருக்கு ஆதரவு தெரிவித்ததோடு, பேரரசன் சேனோ விடுத்த "ஒற்றுமை உடன்பாட்டுக்கும்" இசைவு தெரிவித்த காண்ஸ்டாண்டிநோபுள் ஆயரான அக்காசியுசையும் திருத்தந்தை ஃபெலிக்ஸ் கண்டித்தார். அக்காசியுசு உரோமைக்கு வந்து தம் செயல்பாடுகளுக்கு விளக்கம் தர வேண்டும் என்றும் பெலிக்சு கோரினார்.

திருத்தந்தையின் கோரிக்கைகள் அடங்கிய ஏட்டைக் கொண்டுசென்ற திருத்தந்தைத் தூதுவர்கள் சாமர்த்தியமாக செயல்படவில்லை. தவறான கொள்கைகளை போதித்த ஆயரின் பெயர் திருப்பலி வேண்டலில் இடம் பெற்றதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காததைத் தொடர்ந்து, திருத்தந்தை "ஒற்றுமை உடன்பாட்டை" ஆதரிப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. இதனால் திருத்தந்தைத் தூதுவர்கள் உரோமைக்குத் திரும்பியதும் அவர்களும் சபை நீக்கம் செய்யப்பட்டார்கள்.

காண்ஸ்டாண்டிநோபுள் ஆயரை சபைநீக்கம் செய்த செய்தி ஒரு சிறப்புத் தூதர் வழியாகக் கொடுத்து அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்வினையாக, காண்ஸ்டாண்டிநோபுளில் திருப்பலி வேண்டலிலிருந்து திருத்தந்தை ஃபெலிக்சின் பெயரை நீக்கிவிட்டார்கள்.

அக்காசியப் பிளவு

[தொகு]

மேற்கூறிய நிகழ்வுகளின் நீண்ட கால விளைவாக திருச்சபையில் ஒரு பிளவு ஏற்பட்டது. 484இலிந்து 519 வரை முப்பந்தைந்து ஆண்டுகள் நீடித்த அப்பிளவானது திருச்சபையின் மேற்குப் பகுதிக்கும் கிழக்குப் பகுதிக்கும் இடையே ஏற்பட்ட முதல் பெரும் பிளவாகக் கருதப்படுகிறது. இது "அக்காசியப் பிளவு" (en:Acacian schism) என்று அழைக்கப்படுகிறது.[1]

ஒற்றுமை முயற்சி தோல்வியுறுதல்

[தொகு]

காண்ஸ்டாண்டிநோபுள் ஆயர் அக்காசியுசு 489இல் இறந்தார். ஈராண்டுகளுக்குப் பிறகு புதிய பேரரசனும் பதவி ஏற்றார். இந்த மாற்றங்களின் விளைவாக திருச்சபையில் ஒற்றுமை ஏற்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அலெக்சாந்திரியா நகரின் ஆயராக இருந்தவர் இயேசு கிறிஸ்துவில் இறைத்தன்மை, மனிதத்தன்மை என்று இரு தன்மைகள் உண்டு என்னும் திருச்சபைக் கொள்கையை ஏற்காதவராதலால் அவருடைய பெயர் திருப்பலி வேண்டுதலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கப்படாதவரை ஒற்றுமை முயற்சி மேற்கொள்ளப்படமாட்டாது என்று ஃபெலிக்ஸ் கூறிவிட்டார். அந்தத் தவறான கொள்கையைப் போதித்த ஆயர் இறந்து அவருடைய இடத்தில் பதவி ஏற்றவர் திருச்சபையின் உண்மையான கொள்கையை ஏற்றுக்கொண்ட பிறகும் திருச்சபை ஒற்றுமைக்கான நடவடிக்கைகள் தொடரவில்லை.

மேலும், பேரரசனுக்கும் திருத்தந்தை ஃபெலிக்ஸ் ஒரு கடிதம் எழுதினார். அதில் "கடவுள் சம்பந்தமான காரியங்களில் பேரரசன் தலையிடலாகாது" என்று ஃபெலிக்ஸ் கண்டித்துக் கூறினார். இந்த நிகழ்வு பிற்காலத்தில் திருச்சபைத் தலைமைக்கும் நாட்டுத் தலைமைக்கும் இடையே ஏற்பட்ட இழுபறிக்கு ஓர் முன்குறியாக அமைந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருதுகின்றனர்.

இறப்பு

[தொகு]

திருத்தந்தை மூன்றாம் ஃபெலிக்ஸ் 492, மார்ச் 1 இல் இறந்தார். அவருடைய உடல் புனித பவுல் பெருங்கோவிலின் கீழ் ஆலயத்தில் அவருடைய தந்தை, மனைவி, பிள்ளைகளின் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.

திருவிழா

[தொகு]

திருத்தந்தை மூன்றாம் ஃபெலிக்சின் திருவிழா மார்ச்சு முதலாம் நாள் கொண்டாடப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Coleman, Ambrose. "Pope St. Felix III." The Catholic Encyclopedia. Vol. 6. New York: Robert Appleton Company, 1909. 6 Apr. 2013
  2. R.A. Markus, Gregory the Great and his world (Cambridge: University Press, 1997), p. 8
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
483–492
பின்னர்